பசுபதி சிதம்பரம்: நம் காலத்தின் மகத்தான மனிதர்

இன்று வழக்கறிஞர் பசுபதி அவர்களுக்குப் பிறந்தநாள். பொதுவாக என் ஆசிரியர்களாகக் கருதக்கூடியவர்களை நான் ஒவ்வொருநாளும் நினைப்பதுண்டு. என் பேச்சில் அவர்கள் பெயர் இயல்பாக வந்துவிழும். இலக்கியப் பேச்சுகளில் ஜெயமோகன் பெயரை உச்சரிக்காத ஒரு நாள் இருந்ததில்லை. இலக்கியம் குறித்து பேசாமல் ஒரு நாள் கடந்ததும் இல்லை.

யாராவது மனச்சோர்வில் என்னிடம் பேசும்போது, அவர்களை ஆற்றுப்படுத்த “இப்படித்தான் ஒரு தடவ சுவாமி பிரம்மானந்தா என்னா சொன்னாருனா…” என்றால் “அவர் சுவாமி… நான் சாதாரண ஆசாமி. எனக்கு ஏத்தத சொல்லு.” என என்னைத் திட்டியவர்கள் சிலர் உள்ளனர். நான் சுவாமியை ஓர் ஆன்மிகவாதியாக மட்டும் பார்க்கவில்லை. அவர் மகத்தான மனிதர். அவரிடம் இருந்து என் வாழ்க்கைக்குத் தேவையான சில அடிப்படைகளைப் பெற்றுள்ளேன். அதை மற்றவர்களுக்குப் பகிரவும் செய்கிறேன். அப்படிப் பகிரும்போது என் கீழ்மைகளில் இருந்து விடுபடவும் செய்கிறேன். என் தவறுகளை திருத்திக்கொள்ள முயல்கிறேன். ஓர் இலக்கியவாதியாக நான் பெற்றுள்ள மனதுக்கு அவருடனான உரையாடல்கள் முக்கியமானவை.

பசுபதி எனக்கு அவ்வாரானவர்.

பசுபதி அவர்களிடம் நான் பெற்றுக்கொண்டவை பல. அவற்றில் அடிப்படையாக மூன்றை சொல்லலாம்.

அ. யாருக்காவது உதவி செய்தால் அந்த உதவியை அவரிடம் நாம் திரும்பப் பெற வேண்டியதில்லை. உதவி தேவைப்படும் இன்னொருவருக்கு அவர் வழங்குவதை உறுதி செய்யலாம். அதுபோலவே நாம் பெற்றுக்கொண்ட உதவிக்கு நன்றிக்கடனாக அதை இன்னொருவருக்குச் செய்யலாம். உதவி என்பது ஒரு சங்கிலி தொடர்போல; வெவ்வேறு நபர்களுக்கு இடைவிடாமல் பரிமாறப்பட்டு வர வேண்டும். பெற்றதை திரும்ப கொடுப்பதும் கொடுத்தை திரும்ப கேட்டுப்பெறுவது கடன் கொடுத்து வழங்குவதைப் போன்றது.

நான் பசுபதி அவர்களிடம் நிறைய உதவிகளைப் பெற்றுள்ளேன். முதல் உதவி எனக்கு இன்னும் நினைவுண்டு. 2009 இல் நான் லண்டன் செல்ல வேண்டியிருந்தது. பயணம் செய்ய என்னிடம் பணமில்லை. டாக்டர் சண்முகசிவா ஓர் உணவகத்தில் பசுபதி அவர்களிடம் நான் லண்டன் செல்வதைச் சொல்லி எனக்கு பண உதவி தேவை என்றார். மறுநாள் அலுவலகத்திற்கு வரச்சொல்லிய பசுபதி எனக்கு குறிப்பிட்ட தொகை ஒன்றைக் கொடுத்ததுடன் மேலும் தேவைப்பட்டால் வந்து பார்க்கவும் சொன்னார். எனக்கு அவர் வழங்கியதே போதுமானதாக இருந்தது.

இலக்கியம் சார்ந்து வல்லினம் முன்னெடுக்கும் முயற்சிக்குப் பொருளாதாரம் தடையாக இருக்கும்போதெல்லாம் நான் பசுபதி அவர்களின் உதவியை நாடுவதுண்டு. நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை விரிவாக அவருக்கு விளக்கி கடிதம் ஒன்றை வழங்கியே நிதி உதவி கேட்பேன். திட்டம் முடிந்ததும் முழுமையான செலவு கணக்குகளைச் சமர்ப்பிப்பேன். பசுபதி அவர்கள் ஒருபோதும் அதை திறந்து பார்த்ததில்லை. என் கண்களைப் பார்த்துக்கொண்டே அந்தக் கோப்பை ஓரமாகத் தள்ளி வைப்பார். அவரால் மனிதர்களைப் பார்க்க முடியும். அவர்கள் ஆழம் சென்று அறிய முடியும்.

யாழ் பதிப்பகம் தொடங்கிய போதும், வல்லினம் பட்டறைகளை முன்னெடுத்தபோதும், அச்சு இதழ் நடத்தியபோதும் நான் தயங்காமல் அணுகிய மனிதர் பசுபதி அவர்கள். அதில் எனக்கு சில சங்கடங்களும் நிகழ்ந்துள்ளன.

2014 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக வல்லினம் பட்டறைகளை முன்னெடுத்தோம். மொழியியல், அமைப்பியல், பின் நவீனத்துவம், தலித்தியம் ஆகிய நான்கு தலைப்புகளில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை என முன்னெடுக்கப்பட்ட பட்டறை அது. தங்கும் விடுதியில் ஒருநாள் தங்க வைத்து பல்வேறு அறிவுத்துறைகள் குறித்து பயிற்சிகள் வழங்கினோம். அதில் ஓர் ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர் குழு ஆர்வமாகக் கேட்டு பங்கெடுத்தனர். ஆனால் பட்டறையில் கலந்துகொள்ள அவர்களிடம் பணமில்லை. பசுபதி அவர்களே அத்தனைபேருக்கும் பணம் செலுத்தினார். நான்கு பட்டறைக்கும் அவர் செலுத்திய தொகை இன்று யோசித்தாலும் மிகப்பெரிது. அந்த மாணவர்களிடம் அவர் கேட்டுக்கொண்டது ஒன்றுதான், “மை ஸ்கில்ஸ் மாணவர்களுக்கு நீங்கள் வாய்ப்பு கிடைக்கும்போது ஆங்கிலம் சொல்லித்தர வேண்டும். வாரத்தில் ஒருமுறை வந்தால் கூட போதுமானது.”

கல்லூரி மாணவர்கள் கூட்டாகச் சம்மதித்தனர். ஆனால், எல்லா நன்மையையும் பெற்றுக்கொண்ட அம்மாணவர்கள் அதன் பின்னர் எட்டிக்கூட பார்க்கவில்லை. என் அழைப்புக்கும் பதில் இல்லை. பசுபதி அவர்களை எதிர்கொள்ளவே சங்கடமாக இருந்தது. இப்போது நினைத்தாலும் அந்த நிகழ்வு கசப்பானது. ஆனால், அவர் அது குறித்து என்னிடம் அதன் பிறகு ஒன்றுமே கேட்கவில்லை. ஆனால் தேசிய அளவில் நடந்த நாடகப்போட்டியில் மை ஸ்கில்ஸ் கல்லூரி மாணவர்கள் முதல் நிலையிலும் ஆங்கிலம் போதிப்பதாகச் சொல்லி பின்வாங்கிய கல்லூரி மாணவர்கள் இரண்டாம் நிலையிலும் வென்றனர்.

பசுபதி சொன்னார், “அவர்கள் நம் மாணவர்கள் பலவீனமானவர்கள் என எடைப்போட்டனர். அவர்களுக்கு ஆங்கிலம் வராது. ஆனால் பல்வேறு துறைகளில் ஆற்றல் உண்டு”

பசுபதி அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது அதுதான். அவர் நேர்மறை செயல்கள் நேர்மறை விளைவுகளை மட்டுமே கொடுக்கும் என நம்புகிறார். எனவே இயற்கையின் பதிலுக்காக பொறுமையாகக் காத்திருக்கிறார்.

ஆ. பிரபஞ்சத்தை நண்பனாக்கிக் கொள்ளுதல்

பசுபதி அவர்கள் எப்போதும் சொல்லும் வாசகம் இது. நீங்கள் ஒரு திட்டத்தை முன்னெடுக்கும்போது உங்கள் நண்பனாக, சக பயணியாக இயற்கையை அழைத்துக்கொள்ளுங்கள். அது சரியான மனிதர்களை உங்களுக்கு அடையாளம் காட்டும். அது உங்களை வழிநடத்தும்.

நான் பிரபஞ்சத்தை எப்படி நண்பனாக்கிக் கொள்வதென அவரிடம் கேட்டதில்லை. அதை நான் உள்ளூர உணர்ந்துள்ளதால் அவர் சொல்வது என்னவென நான் அறிவேன். பசுபதி சொல்வார், “இயற்கை எப்படி சரியானவர்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறதோ அதுபோல தவறான எண்ணம் கொண்டவர்களை உங்களிடம் இருந்து விலக்கி வைக்கும்”

அது உண்மைதான். நமது செயல் ஒரு தவம்போல அமைந்தால் அதன் அதிர்வலையே வேண்டாத பலரையும் விலகச் செய்துவிடும்; அதுபோல சரியானவர்களை அடையாளம் காட்டும். நாம் நமது கடமையை முழுமையாகச் செய்கிறோமா என்பதுதான் முக்கியம். அதற்கு நாம் பிறந்த காரணத்தை அறிய வேண்டும். எந்தச் செயல் நம் ஆன்மாவை மகிழ்ச்சிப்படுத்துகிறதோ அதுவே நமக்கான செயல்; அதுவே பிறவியின் ரகசியம். பசுபதி அவர்களுக்கு சமூக சேவையே அவர் ஆன்மாவை மகிழ்ச்சிப்படுத்துகிறது. எளியவர்களுக்கு உதவுவது மட்டுமே அவரை ஒளிகொள்ளச் செய்கிறது.

இ. செயல் புரியுங்கள்; வாய் சாகசம் பலனளிக்காது. செயலை மேற்கொள்ளும்போது இயல்பாக வரும் பாராட்டுகளைக் கொண்டு விளம்பரம் தேடாதீர்கள்.

செயலூக்கம் மட்டுமே பசுபதி. இல்லாவிட்டால் மை ஸ்கில் போன்ற ஒரு கல்லூரி சாத்தியமில்லை. அத்தனை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க சாத்தியமில்லை. பசுபதி அவர்கள் செய்யும் சேவையை இந்நாட்டில் எத்தனை பேர் அறிந்துள்ளனர். என்பது தெரியவில்லை ஆனால் உலகம் முழுக்க மகத்தான மனிதர்கள் அவரை அறிந்து வைத்துள்ளனர்.

உதாரணமாக, 2025 ஆம் ஆண்டுக்கான ‘One world one Family Humaniray Award’ விருது அவருக்குக் கிடைத்ததைக் கூறலாம். ‘Sri Madhusudan Sai Global Humanitarian Mission’ எனும் அமைப்பு பெங்களூரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் சில நூறு ஏக்கர் நிலபரப்பில் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து, பாலர் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை இலவச கல்வி வழங்கி வருகின்றது. இவ்வமைப்பை நடத்துபவர் சாய் மதுசூதன். வரும் 23 ஆம் திகதி இலவச நவீன மருத்துவமனை ஒன்றையும் அமைக்கிறார். சாய்பாபாவின் நூறாவது பிறந்தநாளை ஒட்டி நூறு நாட்கள் தொடர்ச்சியாக One world one Family எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வெவ்வேறு நாடுகளில் உள்ள முதன்மையான சமூக சேவகர்களை அங்கீகரித்துள்ளனர். அப்படி மலேசியாவில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் பசுபதி அவர்கள்.

இதில் இரண்டு விசயம் அடங்கியுள்ளது. முதலாவது, பசுபதி அவர்கள் மலேசிய மாணவர்களுக்குச் செய்துக்கொண்டிருக்கும் சேவை இந்நிலத்தை தாண்டி பலரையும் சென்று அடைந்துள்ளது. அது எப்படி அடைகிறது? இவ்வுலகில் நன்மைக்கான கண்ணுக்குத் தெரியாத தனிப்பாதை ஒன்று உண்டு. நமது நம்பிக்கைகள் வேறாக இருக்கலாம், நமது கொள்கைகள் வேறாக இருக்கலாம், நாம் பின்பற்றும் சித்தாந்தம் கூட வேறாக இருக்கலாம் ஆனால் நாம் பின்பற்றும் வாழ்க்கை முறை சமுதாயத்தின் நன்மைக்கு என்றால் அது சரியான இடத்தில் பொருத்தமானவர்களைச் சேர்க்கும். அந்த மாய பின்னலின் இயல்பு அது.

இரண்டாவது, இப்படி ஒரு விருது கிடைத்ததை பசுபதி யாருக்கும் சொல்லவில்லை. எந்த நாளிதழுக்கும் அனுப்பவில்லை. நான் பலமுறை கேட்டும் எந்தப் படத்தையும் கொடுக்கவில்லை. ஆனால் அங்குச் சென்று வந்த அவருக்குப் புதிய திட்டங்கள் தோன்றியுள்ளன. மை ஸ்கில்ஸ் கல்லூரியை இன்னும் எப்படி மேம்படுத்தலாம் எனச் சிந்தனையில் புதிய திட்டங்கள் பிறந்துள்ளன. இதுதான் அவர் பாணி. அவர் பணியை அவர் செய்துக்கொண்டே இருக்கிறார். அதனால் வரும் பாராட்டுகளை இயற்கைக்கே கொடுக்கிறார். தன் மகிழ்ச்சியை செயலில் மட்டும் அடைகிறார். அதன் வழியாகவே முழுமை அடைகிறார்.

அவரது பிறந்தநாளில் அவர் அனுமதியில்லாமல் இந்த விருது குறித்து எழுதினாலும் இதை சொல்வது எழுத்தாளனின் கடமை. ஒரு சூழலில் மேன்மையானது எதுவோ அதை உலகுக்குச் சொல்ல வேண்டியவன் எழுத்தாளன். பசுபதி மேன்மையானவர். இந்தப் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்.

(Visited 135 times, 8 visits today)