நவீனத்துவம், பின் நவீனத்துவம்: எளிய அறிமுகம்

சீகன் பால்க்

(இக்கட்டுரை மலேசிய ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களின் புரிதலுக்காக எளிமையான வடிவில் எழுதப்பட்டது)

நவீனத்துவம் (Modernism)

1890 முதல் 1930 வரையிலான கால கட்டத்தை நவீனத்துவ காலகட்டமாக மால்கம் பிராட்பரி, ஜேம்ஸ் மக்ஃபர்லேன் போன்ற கலை இலக்கிய ஆய்வாளர்கள் வரையறுக்கிறார்கள். நவீனத்துவம் என்றால் புதுமை ஒன்று உருவாவது அல்ல. அதை ‘நவீனத்தன்மை’ என்று சொல்லலாம். அது எப்போதுமே நடப்பதுதான். மனிதனுக்கு சக்கரம் அறிமுகமான காலத்தில் இருந்து இன்றைக்குத் திறன்பேசி பயன்பாடு வரை இவ்வாறு புதுமைகள் (நவீனத்தன்மை) அறிமுகமாகி வருகின்றன. ‘நவீனத்துவம்’ என்பது 19ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் வளர்ச்சி காரணமாக மனிதர்களின் சிந்தனைகளிலும், சமூக அமைப்புகளிலும், பண்பாட்டிலும் ஏற்பட்ட மாற்றங்களைக் குறிக்கிறது. இது ஒரு சிந்தனை முறை அல்ல. ஒரு கால கட்ட மனநிலை. அகில உலகத்தையும் ஆக்கிரமித்த மனநிலை.

நவீனத்துவம் உருவான காரணிகள்


1. அச்சு இயந்திரங்களின் வருகை – தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் 19-ஆம் நூற்றாண்டு வரை ஓலைச்சுவடிகளில்தான் எழுதப்பட்டன. அவை, மடங்கள், அரசவைகள், வசதிமிக்க பிரபுக்களின் இல்லங்கள் முதலிய இடங்களிலேயே சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. தனியார் உடைமைகளான இவைகளை அணுகி வாசிக்கும் வாய்ப்பு சாதாரண மக்களுக்கு இருந்ததில்லை. 1712-இல் தரங்கம்பாடியில் சீகன் பால்கு (Bartholomäus Ziegenbalg) என்பவர் அச்சு இயந்திரத்தை நிறுவினார். அச்சு இயந்திரங்களின் வருகையால் தமிழகத்தில் நூலகங்கள் உருவாக்கம் கண்டன. அறிவு ஆர்வமுள்ள யாரும் அணுகிப் பயன்படுத்தத்தக்க சூழலை இது உருவாக்கியது. இதனால் வாசிக்கும் நடுத்தர வர்க்கம் உருவானது.

2. தரப்படுத்தப்பட்ட கல்வி – குலக்கல்வி முறையே தமிழ்ச் சூழலில் இருந்தது. அவரவர் குலத்தொழிலுக்கு ஏற்புடைய கல்வியே தங்கள் பிள்ளைகளுக்கு வழங்கினர். 1835-இல் மெக்காலே (Thomas Babington Macaulay) வெளியிட்ட தரப்படுத்தப்பட்ட கல்வி கொள்கை இந்தியத் துணைக்கண்டத்தின் சமுதாய, இலக்கியக் கோட்பாடுகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. இந்த முறையில் புதிய கல்வி பெற்ற உயர் மக்கள் பிரிவு ஒன்று இந்தியாவில் உருவானது. பொதுக்கல்வி அனைவரையும் ஒத்த இயல்புள்ளவர்கள் ஆக்கியது.

3. அரசியலில் ஜனநாயகத்தன்மை – நிலவுடைமைச் சமூக அமைப்பு இல்லாமலாகி முதலாளித்துவச் சமூக அமைப்பு உருவானது. மன்னராட்சி காலத்தில் தங்களை ஆள்பவரைத் தீர்மானிக்கும்  உரிமைகள் மக்களுக்கு இல்லை. மக்களாட்சி உருவான சில நாடுகளில் கூட பெண்களுக்கான ஓட்டுரிமை இல்லாமல் இருந்தது. இவை படிப்படியாக மாறி  அரசை/ தங்களை ஆட்சி செய்பவரை தீர்மானிக்கும் உரிமை, அனைத்துப் பிரஜைக்கும் பாகுபாடு இல்லாமல் வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றங்களை வரையறுப்பதில் மக்களின் பங்களிப்பு இருந்தது.  

4. சமூகச் சூழல் – மேலைநாட்டில் இரண்டாம் உலகப் போரை (1915-1940) ஒட்டிச் சமூக மாறுதல்கள் ஏற்பட்டன. இந்தக் காலகட்டத்தில்தான் நீராவி இயந்திரம், டீசல் இயந்திரம், பெட்ரோல், தொலைபேசி, பிளாஸ்டிக் முதலிய நவீனப் பொருட்கள் நடைமுறைக்கு வந்தன. இத்தகைய சூழலில் பல புதிய சிந்தனைகள் உருவாயின.

நவீனத்துவத்தின் விளைவுகள்

1. மத மூடத்தனத்துக்கு எதிரான விஞ்ஞான மனப்பாங்கு – அறிவியல், உளவியல் போன்ற துறைகளில் பெற்ற வளர்ச்சியால் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான குரல் வலுவாக ஒலித்தது.

2. தனிமனித சுதந்திரம் – தன் வாழ்வை தான் தீர்மானித்துக்கொள்ள சமூகத்தை விட ஒரு தனிமனிதனுக்கே முழு உரிமையும் உண்டு என்ற எண்ணம் வலுபெற்றது.

3. அரசியலில் ஜனநாயகக் கோட்பாடு – அதிகாரம் மக்களிடம் உள்ளது. அவர்களே தங்களை ஆளும் தரப்பைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்ற எண்ணம் உருவானது. எனவே ஒரு நாட்டில் மக்களே அதிகாரம் உள்ளவர்களாகக் கருதப்பட்டனர்.

4. மக்களிடையே சமத்துவம் – சமமான கல்வி மக்களிடம் சமத்துவத்தை ஏற்படுத்தியது. இதனால் அடிமை முறையை ஒழிக்கும் போராட்டங்கள் தொடங்கின.

5. பெண்களுக்குச் சம உரிமை – அதற்கு முன் பெண்களை இரண்டாம் நிலையாக பார்த்த சூழல் மாறி பெண்களுக்கும் சமுதாயத்தில் சம உரிமை உள்ளது எனும் சிந்தனைகள் உருவாகின. பெண்களுக்கான ஓட்டுரிமையும் பரவலானது.

6. கலை இலக்கியங்களில் சமயச் சார்பின்மை – கலை இலக்கியம் என்பது மதத்தைப் பரப்புவதும் சமய போதனைகள் செய்வதும் என்பது மாறி விழுமியங்களைக் கேள்வி எழுப்பும் படைப்புகள் உருவாகின.

7. புதிய கலை இலக்கிய வடிவங்களின் தோற்றம் – தமிழுக்கு கதை கூறும் மரபு புதிதல்ல. ஆனால் அது வாய்மொழி மரபாக இருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடையைக் கதை இலக்கியத்திற்குப் பயன்படுத்தியவர் வீரமாமுனிவர் (Constantine Joseph Beschi) எனலாம். அவரின் பரமார்த்த குரு கதைகள் (1728) பிற்கால நாவல், சிறுகதை வளர்ச்சிக்கு உதவின.

பாரதியார்

நவீன இலக்கியத்தின் பண்புகள்

நவீனமயமாதலின் முழுமைக்கட்டத்தில் உருவான கலை மற்றும் சிந்தனை போக்கு நவீன இலக்கியம் ஆகும். நவீனமயமாதலின் எதிர்மறை இயல்புகளை அதிகம் கவனிக்கக் கூடியதாக இது உள்ளது.

1. ஜனநாயகப் பண்பு – அதிகாரம் மக்களை நோக்கி உள்ளது என அறிந்த படைப்பாளிகளாக நவீன இலக்கியவாதிகள் இருந்தனர். எனவே அவர்கள் படைப்பு மக்களை நோக்கி இருந்தது. பிரபுகளையும் அதிகாரம் படைத்தவர்களையும் நம்பி அவர்கள் வாழவில்லை.  தமிழில் அதன் தொடக்கம் பாரதி. நவீன புனைவுகள் பண்டிதர்களால் சான்றோர்களுக்காக எழுதப்படாமல் மக்களால் நேரடியாக எழுதப்பட்டது.

2. பலதுறைகளின் செல்வாக்கு – அறிவியல், அரசியல், மருத்துவம், தொழில்நுட்பம், வரலாறு, உளவியல், போன்ற பிற துறைகளினுடான ஆக்கபூர்வமான உரையாடல்கள் நவீனஇலக்கியத்தில் நடந்தது. நவீன காலகட்டத்தில் உருவான பிற துறைகளின் வளர்ச்சியை நவீன இலக்கியவாதிகள் அறிந்திருந்தனர். எனவே அவற்றின்  செல்வாக்கு நேரடியாகவே நவீன இலக்கியத்தில் புகுந்தது. பாரதியாரின் பாடல்களில் பல உலக அரசியல் சூழலை ஒட்டி இருப்பதை நாம் வாசிக்கலாம்.

3. சர்வதேச தன்மை – 17 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் காலனி ஆதிக்க காலத்தில் உலகம் திறந்துவிடப்பட்டது. உலகம் முழுவதும் பயணம் செய்த ஐரோப்பியர்களால் பல்வேறு பண்பாடுகள் ஒரு மொழியில் கிடைக்கப்பெற்றது. உலகையே ஒன்றாக்க முயன்ற காலனியாதிக்கமும் அந்த மனநிலைக்கு உதவியது. கதே (Johann Wolfgang von Goethe) அதை உலக இலக்கியம் என்கிறார். எனவே எழுதப்படும் ஒன்று ஒரு குறிப்பிட்ட மொழியோடு முடங்கிவிடாமல் அதன் தரமும் வீச்சும் உலக இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் சூழல் ஏற்பட்டது.

4. கலையில் புதிய சிந்தனை – நவீன காலக்கட்டத்தில் உருவான மனநிலையை இக்கால கலை இலக்கியங்கள் பிரதிபலித்தன. கட்டடக்கலை, ஓவியங்கள், வடிவமைப்புகள் என எல்லாவற்றிலும் நவீனத்துவ சிந்தனைகள் பரவின. ஆண்டன் செகாவ், காப்கா, ஸ்ட்ரின்பெர்க், பிக்காஸோ என பல கலைஞர்கள் ஐரோப்பாவில் தோன்றினர். அவர்கள் வழி நவீன கலைகளில் புதிய கோட்பாடுகள் உருவாகின.

இறுதியாக

நவீனத்துவத் தன்மை கொண்ட இலக்கியம் வலுவான மையக்கரு கொண்டதாக இருக்கும். அக்கருவைத் தர்க்கப்பூர்வமாக நிறுவ முயலும். ஆகவே தெளிவான, செறிவான, ஒருங்கிணைவுள்ள வடிவம் கொண்டதாக இருக்கும். அதற்கேற்ற நுண்மையும், கவனமும் கொண்ட மொழி கொண்டிருக்கும். சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஞானக்கூத்தன், நகுலன், மௌனி தமிழில் சிறந்த உதாரணங்கள்.

நவீன காலக்கட்டத்தில் உருவாகி கலையில் செல்வாக்கை செலுத்திய கோட்பாடுகள்

1. இம்ப்ரெஷனிஸம் (Impressionism) – பாவ இயல் கலைத்திறம் (1880)

2. எக்ஸ்பிரஷனிஸம் (Expressionism) – அகத்திற பாங்கியல் (1900)

3. க்யூபிஸம் (Cubism) – கனசதுர ஓவிய பாணி (1914)

4. டாடாயிஸம் (Dadaism) – எதிர் கலை மரபு இயக்கம் (1916)

5. சர்ரியலிஸம் (Surrealism) –  கனவு நனவு ஆகியவற்றின் கலப்பு இயம் (1919)

6.எக்ஸிஸ்டென்ஷியலிசம் (Existentialism) – இருத்தலியல்

மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியம்

மலேசியாவில் நவீன இலக்கிய வரலாற்றைக் கூறுமிடங்களில் ந.பாலபாஸ்கரன் ஆய்வுகள் முன்னோடியாகப் பயன்படுத்தப்படுவது வழக்கம். மலேசியத் தமிழ் சிறுகதை வரலாற்றினை 1930 முதல் 1979 வரையிலான நாற்பத்து ஒன்பது ஆண்டுகளுக்கு உட்பட்டு அவர் ஆறு பிரிவுகளில் பகுத்துள்ளார்.

மா.இராமையா

அதன் அடிப்படையில்:

தொடக்க காலம் (1930 – 1941) – இந்தக் காலக்கட்டத்தில் மலேசியாவில் முதல் சிறுகதைகள் எழுதப்பட்டுவிட்டாலும் அவை அனைத்தும் மலேசியாவிற்கு பொருள் ஈட்ட வந்தவர்களால் எழுதப்பட்டதால் மலேசியத் தன்மையுடன் உருவாகவில்லை. அவை அவரவர் நாட்டு சூழலையே பேசின. குறிப்பாக இந்திய போராட்டங்களை அவை அடக்கியிருந்தன.

ஜப்பானியர் காலம் (1942 – 1945) – இக்காலக்கட்டம் இரண்டாம் உலகப்போர் காலம் ஆனதால் இதை இருண்ட காலம் என்றே கூறுகின்றனர். வலுவான புனைவுகள் இந்தக் காலத்தில் உருவாகவில்லை.

கதை வகுப்பு முடியும் காலம் (1946 – 1952) – இந்தக் காலக்கட்டத்தில்தான் சில முக்கியமான சிறுகதை தொகுப்புகள் வெளிவந்தன. சுப.நாராயணன் பைரோஜி நாராயணன் ஆகியோரால் இந்தக் காலக்கட்டத்தில் கதை வகுப்புகள் நடத்தப்பட்டன. அதில் மலேசிய வாழ்க்கை இலக்கியத்தில் வர வேண்டிய அவசியம் விவாதிக்கப்பட்டது. எனவே இந்தக் காலக்கட்டமே மலேசியாவில் நவீன இலக்கியம் உருவான காலமாகக் கருதப்படுகிறது. இக்காலக்கட்டத்தில் முக்கிய நவீன எழுத்தாளர்கள் மா.செ.மாயதேவன் மற்றும் மா.இராமையா.

முற்சுதந்திர காலம் (1953 – 1957) – தமிழகத்தில் மிக முக்கியமான நவீன எழுத்தாளர் கு,அழகிரிசாமி மலேசியாவின் தமிழ் நேசனில் இக்காலக்கட்டத்தில் பணியாற்ற வந்தார். அவர் வருகையால் மலேசிய நவீன இலக்கியம் மேலும் செழித்தது. இந்தக் காலக்கட்டத்தில்தான் மணிமன்றம் உருவானது. இக்காலக்கட்டத்தில் முக்கியமான  மலேசிய நவீன எழுத்தாளர்கள். செ. ஆலிவர் குணசேகர், சி. வேலுஸ்வாமி, சி. வடிவேல், பொ. சா. பரிதிதாசன், சி. கமலநாதன்.

பிற்சுதந்திர காலம் (1958 – 1969) – இக்காலக்கட்டத்தில் மலாயா தமிழ் எழுத்தாளர் சங்க அமைப்பு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழர் திருநாள் உருவாக்கம், உலகத் தமிழாராய்ச்சி மாநாடு என இயக்கங்களின் செயல்பாடுகள் அதிகம் இருந்தன.

மறுமலர்ச்சிக் காலம் (1970 – 1979) – மலேசியாவில் நவீன தமிழ் இலக்கியம் செழித்தோங்கிய காலம் இது. 1970இல் முனைவர் இரா. தண்டாயுதம் மலாயா பல்கலைக்கழகத்தில் நவீன இலக்கிய போதகராக இணைந்தது, 1972 தமிழ் நேசன் தொடங்கிய பவுன் பரிசு திட்டம், 1973இல் ரெ.கார்த்திகேசு, அரு.சு.ஜீவானந்தன் ஆகியோரால் தொடங்கப்பட்ட ‘இலக்கிய வட்டம்’ எனும் சிற்றிதழ், கெடா மாநிலத்தில் எம்.ஏ.இளஞ்செல்வன், சீமுத்துசாமி, கனலன் ஆகியோர் கூட்டணியில் உருவான  நவீன இலக்கியச் சிந்தனை’எனும் இயக்கத்தின் தோற்றம், முதல் புதுக்கவிதை நூல் வெளியீடு என இந்தக் காலக்கட்டத்தில் மலேசியாவில் நவீனத் தமிழ் இலக்கியம் செழித்து வளர்ந்தது. இக்காலக்கட்டத்தில் முக்கிய நவீன படைப்பாளிகள்: சீ.முத்துசாமி, அரு.சு.ஜீவானந்தன், ரெ.கார்த்திகேசு, எம்.ஏ.இளஞ்செல்வன், சை.பீர்முகம்மது, எம்.குமாரன், சாமி மூர்த்தி

பாலபாஸ்கரனின் ஆய்வுக்குப் பிறகு, இவ்வாறு இலக்கியத்தில் காலக்கட்டங்கள் வகுக்கப்படவில்லை. எழுத்தாளர் ம.நவீன் இலக்கியச் சூழலை மேலும் நான்காக வகுத்துள்ளார். தனது முதுகலை ஆய்வில் இந்தக் காலக்கட்டத்தை அவர் பகுத்துள்ளார். இவ்வாய்வின் ஒரு பகுதி மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராய்வு இதழில் இடம்பெற்றுள்ளது. புனைவுநிலை உரைத்தல் (2016) எனும் நூலில் இவ்வாய்வின் தரவுகள் விரிவாக இடம்பெற்றுள்ளன. அவை பின் வருமாறு: 

இயக்கங்களின் காலம் (1980 – 1997) – இக்காலக்கட்டத்தில் பேரவைக் கதைகள், தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம், எழுத்தாளர் சங்கம், பாரதிதாசன் இயக்கம், ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகள், அகம் இயக்கம் போன்ற இயக்கங்களை இலக்கியத்தை வளர்க்க முனைப்புக் காட்டின. ஆனால் வலுவான இலக்கியங்கள் உருவாகவில்லை. இக்காலக்கட்டத்தின் நவீனத்துவ எழுத்தாளர்களில் முக்கியமானவர்கள் : மா.சண்முகசிவா, கோ.புண்ணியவான்

தனிநபர் காலக்கட்டம் (1998 – 2005) – இந்தக் காலக்கட்டத்தில் தனிநபர்களே நவீன இலக்கியங்களை முன்னெடுத்தனர். சை.பீர்முகம்மது கொண்டு வந்த ‘வேரும் வாழ்வும்’ என்ற பெருந்தொகுப்பு, மா.சண்முகசிவா முன்னெடுத்த ‘அகம்’ எனும் இலக்கிய அமைப்பு அதில் முக்கியமானது.

(காலப்பகுப்பு குறித்து மேலும் விரிவாக அறிய)

ரொலான் பார்த்

பின் நவீனத்துவம் (Post Modernism)

நவீனத்துவம் தொழில் நுட்பத்தால் உலகை ஒன்றாக்க முயன்றது எனப் பார்த்தோம். பொதுக்கல்விமுறை, நவீன போக்குவரத்து, தொழிற்சாலை சார்ந்த உற்பத்திமுறை, உலகளாவிய ஊடகம் ஆகியவற்றால் பொதுவான மனநிலைகள் உருவாவதாக நவீனத்துவம் சொல்வதை அறிந்தோம். எல்லா கருத்துக்களையும் ஒட்டுமொத்த உலகவரலாற்று பின்னணியில் வைத்துப்பார்ப்பது, எல்லாவற்றுக்கும் சாராம்சம் தேடுவது, எல்லாவற்றையும் தர்க்கபூர்வமாக புரிந்துகொள்ள முயல்வது என நவீனத்துவத்தைப் பற்றி புறிந்துகொண்டோம்.

இந்தப் போக்குகளைக் கொண்ட நவீனத்துவம் மீது ஆழமான அவநம்பிக்கை இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் உருவானது. நவீனத்துவத்தின் குறைபாடுகளும், போதாமைகளும் கண்டடையப் பட்டன. உறுதியான அமைப்புகள் மீது சந்தேகம் உருவானது. திட்டவட்டமான மையம் கொண்ட அமைப்புகள் நிராகரிக்கப் பட்டன. விளிம்புகள் மற்றும் புறக்கணிக்கப் பட்டவை மீது கவனம் விழுந்தது. அவையனைத்துக்கும் இடமுள்ள ஒரு சமூகக் கட்டுமானம், ஒரு சிந்தனைமுறை தேவை என்ற எண்ணம் எழுந்தது.

ரொலான் பார்த் (1915-1980), ழாக் லக்கான் (1901-1981), லியோதர்த் (1924-1998), ழாக் டெரிடா (1930-2004), மிகைல் பூக்கோ (1926-1984) போன்ற மேற்கத்தியச் சிந்தனையாளர்கள் – மையத்தைக் கலைத்தெறியும் புதிய சிந்தனை முறைகளுக்கு வித்திட்டனர்.  அவர்களைத்தொடந்ர்து லியத்தார்ட், பௌதலியார்ட், டெலூஸ் ஆகியோர், இன்னும் சமீபத்தில் அறிமுகமாகிவரும் புதிய தத்துவவியலாளர்கள் போன்றோர் பின் நவீனத் தத்துவத்தின் தத்துவவியலாளர்களாகக் கருதப்படுகின்றனர்.

பின்நவீனத்துவத்தின் காலத்தை 1950 – களில் இருந்து இன்றளவும் நீளும் காலக்கட்டமாக வரையறுக்கலாம்.

நவீனத்துவத்தில் இருந்து பின் நவீனத்துவம் முரண்படும் இடங்கள்

1. வரலாற்றுவாதம் –  உலகை ஒரேவெளியாக நோக்கலாம் என்பது நவீனத்துவ சிந்தனை. பின் நவீனத்துவ சிந்தனையாளர்கள் பன்முகத்தன்மையை நோக்க வேண்டுமென்ற எண்ணத்தை கொண்டுள்ளனர். ஆகவே எந்தக் கருத்தையும் வரலாறு முழுக்க உலகம் முழுக்க உள்ளதாக காட்டுவது தேவை இல்லை என இன்று பெரும்பாலான சிந்தனையாளர்கள் எண்ணுகிறார்கள். அப்படிச் செய்யும் வரலாற்றுவாதமானது பெரிய அதிகார மையங்களை உருவாக்கவே உதவுகிறது என்கிறார்கள்.

2. ‘மங்கல் பகுதிகள்’ [கிரே ஸ்பாட்] – நவீனத்துவம் சரி X தவறு என ஒன்றை வகுக்க முயல்கிறது [binary opposition]. இப்படி நிறுவப்பட்ட கருத்தை ஒரு மையக்கருத்தாக நினைக்கும் நவீனத்துவர்கள் தங்கள் சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் அம்மையத்தின் அடிப்படையில் அமைக்கிறார்கள். அதாவது மிகச் சிறந்தது, சரியானது என ஒன்றை கண்டு பிடித்து அதை நிரூபித்து அதை மட்டும் வைத்துக் கொண்டு பிறவற்றை நிராகரிக்கும் போக்குதான் நவீனத்துவம். அப்படி ஏதாவது ஒன்றை மட்டும் சரியென வலியுறுத்துபவர்களை ‘மையவாதிகள்’ என்கிறார்கள். அப்படி ஒன்றை வலியுறுத்தும்போது மற்றவை புறக்கணிக்கப்படுகிறது. அப்படி புறக்கணிக்கப்படுவதை ‘விளிம்புநிலை’ என்கிறார்கள்.  புறக்கணிக்கும்போது பெரும்பாலானவர்கள் ஒடுக்கப்படுவார்கள் என உணர்வதே பின்நவீனத்துவம். இது ஒற்றைத் தன்மைக்கு எதிராக பன்மையை முன்வைக்கிறது. எல்லாவற்றுக்கும் அவற்றுக்கான இடம் அளிக்கப்பட வேண்டும் என்கிறது பின்நவீனத்துவம். மையங்களை சார்ந்து அதிகாரமும் வன்முறையும் உருவாகிறது. மையங்களுக்கு வெளியே விளிம்புகளை எப்போதும் கணக்கில் கொள்ள வேண்டும். விடுபடும் விஷயங்கள், மறைக்கப்படும் விஷயங்கள், தோற்கடிக்கப்பட்ட விஷயங்கள் முக்கியமானவை பின் நவீனத்துவம் நவீனத்துவத்திடம் இருந்து முரண் படுகிறது.

3. இருத்தலியம் – இருத்தலியல் கோட்பாடு இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கோட்பாடாகத் திகழ்ந்தது. நவீனத்துவ சிந்தனைகளின் முற்றிய நிலை இருத்தலியல். நவீனத்துவ சிந்தனைகள் மனிதனை மட்டுமே அலகாகக் கொண்டு அனைத்தையும் நோக்கியபோது மனித வாழ்க்கையின் பொருள்/மையம் என்ன என்ற வினா எழுந்து வந்தது. தர்க்கப்பூர்வமாக நோக்கினால் அப்படி ஏதும் பொருளோ மையமோ இல்லை என்றுதானே சொல்ல வேண்டியிருக்கும்? அவ்வெறுமையை உணர்ந்தவன் தன் செயல்களில் இருந்தும் சமூகத்தில் இருந்தும் தனிமைப்படுகிறான். அதுவே ‘அன்னியமாதல்’ எனக் கூறப்பட்டது. வாழ்க்கை என்பது அபத்தமானது. நான் என்பது எனது பிரக்ஞை. பிரபஞ்சம் என்பது என்னைச் சுற்றி இருக்கும் வெளி. எனக்கும் பிரபஞ்சத்துக்கும் இடையே இந்த மொழிதான் இடையூறாக இருக்கிறது என இருத்தலியல்வாதிகளின் கூற்றாக இருந்தது. பின் நவீனத்துவவாதிகள் மொழி என்பது வேறு; பிரக்ஞை என்பது வேறு இல்லை. நமது பிரக்ஞை என்பதே மொழியால் கட்டமைக்கப்பட்டதுதான் என புதிய கோட்பாடுகளை உருவாக்கி இருத்தலியல் கோட்பாட்டின் எழுச்சியை முடிவுக்குக்கொண்டு வந்தனர்.

பின் நவீனத்துவத்தின் கூறுகள்

1. பின் நவீனத்துவம் எதையும் உலகளாவியதாகப் பார்ப்பதில்லை. – ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆராய்கிறது. வட்டாரப்படுத்துகிறது – உதாரணமாக கோவிட் பெருந்தொற்றில் இணையம் வழி கல்வியே சிறந்தது என நவீனத்துவம் கூறினால், அதை அடைய முடியாத இணைய வசதியற்ற ஊர்களில் வாழும் மாணவர்களை நோக்கி பின் நவீனத்தும் பேசும். எல்லா திட்டங்களும் எல்லாருக்கும் பொருந்துவதில்லை எனச் சொல்லும்.

2. பின் நவீனத்துவம் வரலாற்றை ஒரு அர்த்தபூர்வமான ஓட்டமாக பார்ப்பதில்லை. – ஆகவே வரலாற்றை தர்க்கபூர்வமாக அலசும் வரலாற்றுவாதத்தை நிராகரிக்கிறது – உதாரணமாக, மலேசியா சுதந்திரம் பெற்ற வரலாற்றை நாம் அறிவோம். அதற்காகப் பாடு பட்டவர்களை நாம் அறிகிறோம். ஆனால், அதே காலக்கட்டத்தில் சுதந்திரத்திற்காக ஒரு சிறிய தோட்டத்தில் ஒருவன் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடி இருக்கலாம். ஆனால் எளிய மக்களின் வரலாறுகள் பதிவாவதில்லை. எனவே எழுதப்பட்ட வரலாறு மட்டுமே முதன்மையானது அல்ல எனும் போக்கு பின் நவீனத்துவத்தில் உண்டு.

3. பின் நவீனத்துவம் எதையும் இரட்டைப்படுத்துதலை ஏற்பதில்லை. – முதலாளி x தொழிலாளி, இயற்கை x மனிதன், நல்லவன் x கெட்டவன் போன்ற முரண் இருமைகளை அது மறுக்கிறது – உதாரணமாக பின் நவீன இலக்கியங்களில் வரும் ஒருவன் திட்டவட்டமான நல்லவனாகவோ அல்லது கெட்டவனாகவோ வருவதில்லை. ஒருவனின் பண்புகளை அப்படி மையப்படுத்த முடியாது என்பதில் பின் நவீனத்துவம் தெளிவாக உள்ளது.

4. பின் நவீனத்துவம் எல்லாவற்றையும் முழுமையாகத் தர்க்கப்படுத்த முடியாது என்கிறது. – மன எழுச்சிகள் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவை. அவையே இலக்கியம் போன்ற கலைகளை உருவாக்குகின்றன. இதை உன்னதமாக்கல் [சப்ளிமேஷன்] என்று சொல்கிறார்கள். உதாரணமாக, கணிதம் செய்ய நமக்கு சிந்தனையும் அறிவும் தேவைப்படுகிறது. ஆனால் ராமனுஜர் போன்றவர்கள் கணித சூத்திரங்களை தாங்கள் உணராத நிலையில் உருவாக்கியதை வரலாற்றில் படிக்கிறோம். தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட நிலையே உன்னதமாக்கல்.

நவீன இலக்கியம் மற்றும் பின் நவீனத்துவ இலக்கியத்துக்கான வித்தியாசங்கள்

நவீன இலக்கியம் பின் நவீனத்துவ இலக்கியம்
உலகைப் புரிந்துகொள்ள உதவக்கூடிய கருத்துக்களை உருவாக்கியது அக்கருத்துகளையும் படைப்புகளையும் கூர்ந்து ஆராயும் கருத்துக்களையும் படைப்புகளையும் உருவாக்கிவருகிறது


உலகை பார்த்தது

உலகை நாம் எப்படி பார்க்கிறோம், எப்படி நம் பார்வை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று பார்க்கிறது

ஒருங்கிணைவுள்ள இலக்கியவடிவத்தை உருவாக்கியது

பிரித்து பகுத்து ஆராயும் இலக்கியங்களை உருவாக்கியது

‘வலியுறுத்தும்’ ஆக்கங்களை உருவாக்கியது

‘விவாதிக்கும்’ படைப்புகளை உருவாக்கியது

மையம் உண்டு

தெளிவான மையம், முடிவு ஏதும் இருக்காது

ஒருமையுள்ள வடிவம்

சிதறிய வடிவம்

1990 -களில் பின்நவீனத்துவம் தமிழுக்கு அறிமுகமானது. அப்படி அறிமுகம் ஆனபோது பின் நவீனத்துவ கூறுகளைக் கொண்ட புனைவுகளை பலரும் எழுதிப்பார்க்க முயன்றனர்.

  1. மையம் நீக்கிய, நேரற்ற எழுத்தில் பின்நவீன சிறுகதைகளை எழுதி ஒரு தொடக்கத்தை நிகழ்த்தியவர்கள் –  பிரேம் – ரமேஷ், சாருநிவேதிதா, கோணங்கி
  • பின்நவீனத்துவம் பழைய ஆக்கங்களை மீண்டும் எழுதும் வகையையும் உருவாக்கியது. அவ்வகையில் வந்த புனைவுகளின் எழுத்தாளர்கள் – ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பா.வெங்கடேசன்.
  • பின்நவீனத்துவம் மீபுனைவு [மெடபிக்‌ஷன்] களை உருவாக்கியது. கதைசொல்லுவதையும் கதைக்குள் சேர்த்துக்கொண்டு எழுதுவதைப்பற்றியே எழுதக்கூடிய புனைவுகள் இவை. .- பிரேம் – ரமேஷ், சாருநிவேதிதா,  
  • பெண்ணியம், தலித்தியம் சார்ந்த பல படைப்புகளும் பின்நவீனத்துவ வாசிப்புக்கு உட்படுவனவே.
  • தமிழில் பின்நவீனத்துவத்தை அறிமுகம் செய்தவர்கள் தமிழவன், எம்.ஜி.சுரேஷ், கார்ஜுனன், பிரேம், ரமேஷ் பிரேதன், க பூரணசந்திரன், நோயல் இருதயராஜ், எம். டி. முத்துக்குமாராசாமி, கோணங்கி, ச. ராஜநாயகம்,  அ.மார்க்ஸ், எஸ்.ரவிக்குமார், ந.முத்துமோகன், ராஜ்கௌதமன், பாரதிநிவேதன், பிரம்மராஜன், கோவை.ஞானி போன்றவர்கள் ஆவர்.

பின்நவீனத்துவ எழுத்துகளில் இதுவரையில் கற்பிக்கப்பட்டு வந்த மதிப்பீடுகள் தகர்கின்றன. புனிதம், உன்னதம் என்றெல்லாம் சொல்லப்பட்டவை உடைபடுகின்றன. பகுத்தறிவுக்கு உட்படுகின்ற இவற்றின் மூலம் மதம், சாதி, பண்பாடு, விழுமியங்கள் தகர்க்கப் படுகின்றன. உலகளாவிய நோக்கில் மனித இருத்தலையும், ஒட்டு மொத்த அடிமைத்தனத்தையும் பற்றிச் சிந்திக்கப் பின்நவீனத்துவ எழுத்துகள் பயன்படுகின்றன.

பின்நவீனத்துவ இலக்கியம் என்பது ஒரு உத்தியோ, ஒரு இலக்கிய வகைமையோ அல்லது ஏதோ ஒரு இஸமோ அல்ல. அது ஒரு இலக்கியப் போக்கு.

பின் நவீனத்துவம் பற்றி அறிஞர்கள் கூறுவது:

ஹேர்பர்ட் மார்க்யூஸ்: சமூகத்தில் அதிகார மையத்தில் உள்ளவர்களை மட்டும் முன்னிலைப்படுத்தாமல் மற்றமைகளையும் அதாவது விளிம்பு நிலையினரான பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், தலித்துக்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், ஏழ்நிலையினர், பழங்குடியினர், அகதிகள் போன்று ஏதேனும் காரணம் கருதி புறக்கணிக்கப்பட்டவர்களையும் முன்னிலைப் படுத்திப் பேசுவது பின்நவீனத்துவம் ஆகும்.

மிகைல் பூக்கோ: இது வரையிலான உலக வரலாறு என்பது தனிமனித மையம் தோன்றி வளர்ந்த வரலாறாகவே இருந்துவந்துள்ளது. இன்று அந்த தனிமனித மையத்தை தகர்த்துக் கொண்டிருப்பதே பின்நவீனத்துவம் ஆகும். ஏனெனில் சுயம் என்பது சுயாதினமானது அல்ல அது மொழி, காலம், சமூகம், வரலாறு, பண்பாடு ஆகியவற்றையும் உள்ளடக்கியதே’ எனவே அனைத்து அதிகார மையங்களும் கட்டுடைப்புக்கு உள்ளாவதே. பின்நவீனத்துவம் அதை இலக்கியத்தில் செய்கிறது.

காரத்திகேசு சிவத்தம்பி: பின்நவீனத்துவம் என்பது கலையின் செல்நெறிகள் பற்றியது. நவீனத்துவக் கலைக்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்டது. அது ஒரு கலைப்பாணியாக (Artistic style) அமையும்.

அ. மார்க்ஸ்: பன்மைத் தன்மைக்கு (plurality) அழுத்தமளித்தல், எல்லாவிதமான அதிகார ஆதாரங்களையும் (Authority) கேள்விக்குள்ளாக்குதல், எல்லாவிதமான மொத்த தத்துவ முயற்சிகளையும் (Totality) மறுத்தல் – ஆகியவற்றை பின்னை நவீனத்துவக் கூறுகள் எனலாம்.

பின் நவீனத்துவ காலக்கட்டத்தில் செல்வாக்கை செலுத்தும் கோட்பாடுகள்

1.அமைப்பியல் – Structurelisme

2. பின் அமைப்பியல் – Post Structurelisme

மலேசியாவின் பின் நவீனத்துவ காலக்கட்டம்

மாற்று ஊடக காலம் (2006 – 2012) – மலேசியாவில் இலக்கியப் போக்கு நாளிதழ்களை நம்பியே இருந்தது. எனவே பின் நவீனம் சொல்லக்கூடிய கட்டுடைத்தால், அல்லது புனிதங்களைக் கேள்வி எழுப்புதல் போன்றவற்றின் அம்சங்களை நாளிதழ்கள் அனுமதிக்கவில்லை. சிற்றிதழ், இணைய இதழ்கள், வலைப்பூக்கள் வருகையால் மலேசியாவில் பின் நவீனத்துவ இலக்கியம் அறிமுகமானது. 2007இல் வெளியீடு கண்ட வல்லினம் அச்சு இதழ் அதற்கு வித்திட்டது. 2009இல் ம.நவீன் வெளியிட்ட ‘சர்வம் பிரமாஸ்மி’ என்ற கவிதை நூல் பின் நவீனத்துவ மன நிலைக்கு ஒரு சான்று. மதம், கடவுள் என அனைத்தையும் அக்கவிதை தொகுப்பு கேலி செய்தது. தொடர்ந்து வல்லினம் இணைய இதழ் அவ்வாறான புனைவுகளை வெளியிட்டு வந்தது. இக்காலக்கட்ட எழுத்தாளர்கள்: ம.நவீன், மஹாத்மன், கே.பாலமுருகன்

புதுமைப்பித்தன்

தற்கால இலக்கியம்

நீண்ட பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ் இலக்கியம் செய்யுள், மரபுக்கவிதை, பாவினங்களைக் கடந்து சிறுகதை, நாவல், கட்டுரைகள், புதுக்கவிதை என புதிய வடிவம் எடுத்தக் காலமாக இதை வரையறுக்கலாம். இதனால் இலக்கியம் பன் முகம் கொண்டது.

18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அரசியல், மதம், கல்வி போன்ற தளங்களில் பல விதமான மாற்றங்கள் இடம்பெற்றன. ஓலைச்சுவடியில் இருந்த சங்க இலக்கியங்கள் மீளக் கண்டுபிடிக்கப்பட்டு அச்சேற்றியது. தமிழ் மொழியும், இலக்கியமும் இக்காலகட்டத்தில் பெரிதும் வளர்ச்சியுற்றன. இக்காலக்கட்டத்தில் தமிழில் உருவாகி இன்று வரை எழுதப்படும்  இலக்கிய வகைகளே தற்கால இலக்கியங்கள் எனப்படுகின்றது. அந்நிய ஆட்சியாலும், ஆங்கில மொழியின் செல்வாக்காலும் கல்வி முறையில் ஏற்பட்ட தோற்ற வளர்ச்சியாலும் தமிழில் உரைநடை இலக்கியங்கள் தோன்றின.  தற்காலத்தில் தமிழ் மொழியில் பல புது இலக்கிய வகைகள் உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியம் விரிந்து செல்கின்றது.

இலக்கியம் எழுத உரைநடையை முதன் முதலில் பயன்படுத்தியவர் வீரமா முனிவர் என்பதை அறிவோம். இவர் எழுதிய பரமார்த்த குரு கதைக்கு அடுத்து இம்முயற்சி தொடரவில்லை. 1887இல் தமிழின் முதல் புதினமான ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ வெளிவந்தது. இதைத் தொடர்ந்து புதினங்கள் பல எழுதப் பெற்றன. இலக்கியம் எழுதும் முயற்சிக்குப் பெருமளவில் உரைநடையைப் பயன்படுத்தும் முறை வழக்குப் பெற்றது.

அவரைத்தொடர்ந்து 1921வரை வாழ்ந்த பாரதியார் உரைநடை எழுத்துக்குப் பங்களிப்பு செய்தார். பாரதிக்குப் பின்னர் உரைநடை வளர்ச்சியில் குறிப்பிடத் தக்கவர்கள் பலர் உள்ளனர். புதுமைப்பித்தன், திரு.வி.க, மறைமலை அடிகள் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அதுபோல புதுக்கவிதையின் தொடக்கமும் பாரதியாக இருப்பதால் தற்கால இலக்கியத்தின் காலத்தை 1887 முதல் இன்று வரை என வரையறுக்கலாம்.

தற்காலத்தில் உரைநடையில் தனி நூல்கள் எழுதும் நிலை உருவாயிற்று. சொல் பயன்பாடு, தொடர்ப் பயன்பாடு ஆகியவற்றில் எளிமை பின்பற்றப்பெற்றது. இம்மாற்றங்கள் எல்லாம் இலக்கியத்தை பொதுமக்களுக்கு உரியதாக்கியது.

இக்காலகட்டத்தில் இடம்பெற்ற முக்கிய மாற்றமாகக் குறிப்பிடத்தக்க விடயங்களாவன:

  • சங்க இலக்கியங்கள் மீளக் கண்டுபிடிக்கப்பட்டதும் அச்சேற்றியதும்.
  • உரைநடையில் எழுதுவது அறிமுகமானது. (19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதி)
  • புதுக்கவிதை எனும் புதுப்பாணி தோற்றம் பெற்றது. (20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி)
  • மணிப்பிரவாள நடை ஒழிந்தது. (20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி)

இருபதாம் நூற்றாண்டில் இயற்றமிழ்ப் பிரிவிலடங்கும் உரைநடை இலக்கியத்தில் சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை என்பன தனித்தனியே பல பிரிவுகளாக வளர்ச்சி பெற்றுள்ளன. நாவல் பல வகைகளுடன் கிளைத்துள்ளது. கட்டுரை, சிறுகதை, நாவல், நாடகம், கவிதை எனப் பல்துறை நூல்கள் பிற மொழிகளில் இருந்து தமிழுக்கு வந்தாலும் பல மொழிகளில் இருந்து அறிவியல் இலக்கியப் படைப்புகள் வந்துள்ளது அறிவியல் தமிழின் முன்னேற்றத்தைக் காட்டுகிறது. தமிழின் பக்தி இலக்கியம் அதிக அளவில் பிறமொழிகளுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய வரலாறு அறிஞர்க்கு, மாணவர்க்கு, ஆய்வாளர்க்கு எனப் பல்வகைத் தரம் உடையதாகத் தோன்றியுள்ளது. இலக்கியத்தின் மூலம் சமுதாய வரலாற்றை அறியும் முயற்சிகளும் ஆங்காங்கே தோன்றியுள்ளன. நாட்டுப்புறவியல், இதழியல், ஒப்பியல், கோயில் ஆய்வு எனப் பல துறைகள் புதிதாகத் தமிழில் வளர்ந்து வருகின்றன.

தமிழ் மொழியும், அறிவியல் தமிழ், மருத்துவம், கணினியியல், நாட்டுப்புறவியல், இதழியல் எனப் பன்முகம் கொண்டுள்ளது. அரசியல் தமிழ், பொருளியல் தமிழ், சட்டத் தமிழ், நூலகத்தமிழ், வேளாண் தமிழ், சுவடித் தமிழ், திரைத்தமிழ், தொலைக்காட்சித் தமிழ் எனத் தமிழ் வழங்கும் துறைகளும் தற்காலத்திற்கேற்ப வளர்ந்துள்ளன.

நிறைவாக

குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் ஒரு வகை சிந்தனையும் அதற்கேற்ற படைப்புகளும் இருப்பதாக கூறுவது ஒரு பொதுவான பார்வைதான். அது அவ்வாறே தொடரும் என்று சொல்ல முடியாது. உதாரணமாக  2000க்கு பிறகு நவீனத்துவ சிந்தனை போக்கு முடிந்துவிட்டது என்று சொல்ல முடியாது. இன்றும் ஒருவர் நவீனத்துவ எழுத்து கூறுகளுடன் சிறப்பான படைப்பை கொடுக்க முடியும். அதில் சிக்கலோ குறையோ. இவ்வாறான பகுப்புகள் ஆய்வுலகத்துக்கு அவசியமாக உள்ளதே அன்றி படைப்பாளிக்கல்ல. படைப்பாளி கோட்பாடுகளையும் வகைமைகளையும் கடந்தே ஒரு புனைவை உருவாக்குகிறார்.

துணை நூல்கள்:

  • நவீனத் தமிழிலக்கிய அறிமுகம், ஜெயமோகன், கிழக்கு பதிப்பகம்
  • பின் நவீனத்துவம் என்றால் என்ன?, எம்.ஜி.சுரேஷ், அடையாளம் பதிப்பகம்
  • மொழியும் இலக்கியமும், எம்.ஏ.நுஃமான், காலச்சுவடு பதிப்பகம்
  • தமிழ் இணையக் கல்விக்கழகம்
  • புனைவுநிலை உரைத்தல், வல்லினம் பதிப்பகம்
  • மீண்டு நிலைத்த நிழல்கள், வல்லினம் பதிப்பகம்

(Visited 11,557 times, 10 visits today)