தமிழ்ச்சீலர் மா.செ.மாயதேவன் அவர்களுக்கு அஞ்சலி

‘தமிழ்ச்சீலர்’ மா.செ.மாயதேவன் அவர்களை நான் முதன்முறையாக 2004இல் சந்தித்தேன். அப்போது நான் ஈப்போ ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பயின்று கொண்டிருந்தேன். மூன்று மாத பயிற்றுப்பணிக்காகப் பள்ளிகளைத் தேர்வு செய்யச் சொன்னபோது கல்லூரியைவிட்டு மிக அதிக தொலைவுள்ள மாவட்டமாக விண்ணப்பித்தேன். பொதுவாக விடுதிக்கு எளிதாகத் திரும்பக்கூடிய தொலைவுகளில் உள்ள பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதையே பயிற்சி ஆசிரியர்கள் விரும்புவர். எனக்கு புதிய சூழல் தேவையாக இருந்தது. அதன்படி எனக்கு தைப்பிங் மாநிலத்தில் பயிற்றுப்பணிக்கான இடம் வழங்கப்பட்டது.

நானும் எனது சக பயிற்சி ஆசிரியர் மதிவாணனும் எவ்வித முன் ஏற்பாடுகள் செய்யாமல்தான் தைப்பிங் சென்றிருந்தோம். எனவே எங்களுக்கு முதல்நாள் இரவு தங்குவதற்கு இடமென எதுவும் இல்லை. எடுத்துச் சென்ற பெட்டிப் படுக்கைகளோடு உதவி வேண்டி நின்ற இடம்தான் மா.செ.மாயதேவன் அவர்களின் இல்லம். மறுநாள் எங்களுக்கு பள்ளி தொடங்குவதால் தைப்பிங் தமிழர் மண்டபத்தில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது மா.செ.மாயதேவன் அவர்கள் தைப்பிங் தமிழர் சங்கத்தின் தலைவராக இருந்தார். மறுநாள் அவரது மகன் மணிவண்ணன் அவர்கள் மூலம் தங்குவதற்கு வசதியான வீடு ஒன்று மலிவான வாடகைக்குக் கிடைத்தது.

தைப்பிங்கில் இருந்தவரை இலக்கியம் பேச எனக்கிருந்த ஒரே துணை மா.செ.மாயதேவன் அவர்கள் மட்டும்தான். அவரது மருமகள் திருமதி இந்திரா, எங்களுக்குப் பயிற்றுப்பணி வழிகாட்டி ஆசிரியராக நியமிக்கப்பட்டிருந்ததால் அடிக்கடி அவரது வீட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்படிச் சிலமுறை மாயதேவன் அவர்களைச் சந்தித்துள்ளேன். அவரிடம் கேட்டறிய ஏராளமான கதைகள் இருந்தன. குறிப்பாக 50களின் இலக்கியச் சூழலை அவர் அனுபவம் வழி காட்சியாகக் காணும் வாய்ப்புகள் அரிதானவை.

1933இல் பிறந்த அவர், 1950இல் சுப.நாராயணன் மற்றும் பைரோஜி நாராயணன் இணைவில் தமிழ் நேசன் பத்திரிகையில் நடத்தப்பட்ட ‘கதை வகுப்பு’, 1952இல் கு.அழகிரிசாமி அவர்களால் நடத்தப்பட்ட ‘இலக்கிய வட்டம்’, கோ.சாரங்கபாணி அவர்கள் முன்னெடுத்த ‘தமிழர் திருநாள்’ என அவர் பலவற்றிலும் ஈடுபட்டு தன்னைத் தானே மெல்ல மெல்ல செதுக்கிக்கொண்டதாகவே என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. எங்கெல்லாம் புத்திலக்கியத்தின் வாசல் திறக்கிறதோ அங்கெல்லாம் முதல் ஆளாகச் சென்று நின்றுக்கொண்டிருந்தார். அப்படி நின்ற மற்றொருவர் மா.இராமையா. எனவே இருவரும் அணுக்கமான நண்பர்கள் ஆகினர்.

ஐம்பதுகளில் இலக்கிய இரட்டையர்களாகவே இருவரும் அறியப்பட்டனர். 1953இல் இவர்கள் இருவரின் கதைகளும் தொகுக்கப்பட்டு ‘இரத்ததானம்’ என்ற நூலாக வெளிவந்தது. மலேசியாவிலேயே பிறந்து இம்மண்ணிலேயே தமிழ்க்கற்றவர்களால் வெளியிடப்பட்ட முதல் நூல் அது.

மா.செ.மாயதேவன் அவர்களின் இயற்பெயர் முனியாண்டி. அவருடன் உரையாடும் போதெல்லாம் 1955இல் அவர் வெளியிட்ட ‘திருமுகம்’ என்ற கையெழுத்துப் பிரதி குறித்த பேச்சு நிச்சயம் இடம்பெறும். முதுமையில் ஒவ்வொரு சொல்லாக எண்ணியெண்ணி என் முன் பேசிக்கொண்டிருப்பவர், இலக்கியத்தின் மீதிருக்கும் தீராத ஆர்வத்தில் எத்தனை ஊக்கத்துடனும் வீரியத்துடனும் தன் இளமைக்காலத்தில் உழைத்துள்ளதை எண்ணிக்கொள்வேன். ஓராண்டுகள் வந்த அந்தக் கையெழுத்துப் பிரதி அவரிடமும் இல்லை. (அல்லது என் கண்ணில் படவில்லை) ஆனால் அதற்கு மறுவருடமே மாத இதழாக வெளிவந்த அச்சுப்பிரதியை நான் பார்த்திருக்கிறேன். கோ.சாரங்கபாணி, துங்கு அப்துல் ரஹ்மான், துன் சம்பந்தன் போன்றோரின் படங்களை அட்டையில் தாங்கி வந்த அந்த இதழ்களை பெரும் கிளர்ச்சியுடன் திறந்து வாசித்திருக்கிறேன். முன்னூறு பிரதிகளில் தொடங்கி ஐந்நூறு பிரதிகள் வரை அச்சிட்டு விற்பனை செய்ததெல்லாம் ஐம்பதுகளில் ஒரு சாதனை என்றே சொல்லலாம்.

உண்மையில் மா.செ.மாயதேவன் அவர்களுக்குள் ஆக்கப்பூர்வமாகச் செயலாற்றும் அசாத்திய ஆற்றல் எல்லா காலத்திலும் இருந்தது. தைப்பிங் நகரில் தமிழர்களுக்காக ஒரு மண்டபம் வேண்டுமென 1999இல் அவர் எடுத்த முயற்சி 22.7.2005இல் மூன்று மாடிக்கட்டிடமாக உருபெற்றது. தன்னுடைய உலகியல் வாழ்விலும் சீனர்களின் வசமிருந்த அச்சுத்தொழிலை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். ‘திருமுகம்’ என்ற பெயரில் தொடங்கிய அவ்வச்சகத்தை காலத்திற்கேற்ப நவீனப்படுத்தினார்.

மாயதேவன் அவர்கள் என்னைப் போன்ற இன்னொரு தலைமுறை எழுத்தாளனிடம் உரையாட விருப்பம் காட்டுபர். புதிய எழுத்தாளர்கள் உருவாக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இளமை காலம் முதலே இருந்தது. அந்த வேட்கையால்தான் ‘திருமுகம்’ இதழ் வழி சிறுகதைக்குப் பரிசாக ஐம்பது வெள்ளி என அந்தக் காலத்திலேயே அறிவிப்பு வெளியிட்டார். முதுமையில் அது இன்னும் கனிந்திருந்தது. நம்பிக்கை தரும் திசைகளிலெல்லாம் தன் கரங்களால் அணைக்கத் தயாராக இருந்தார்.

தைப்பிங்கில் இருந்த மூன்று மாதங்களில் மா.செ.மாயதேவன் அவர்களின் மேல் அங்குள்ள தமிழர்களுக்கு இருந்த மரியாதையை நன்கு உணர முடிந்தது. தைப்பிங்கில் சமூக செயல்பாட்டாளராக முக்கியப் பங்காற்றினார். கோ.சாரங்கபாணி தொடக்கி வைத்த தமிழர் திருநாளை ஒரு சமுதாய விழாவாக தை முதல் நாளில் கொண்டாடுவது, தமிழ்த் திருமணங்களை நடத்தி வைப்பது, சிறைச்சாலையில் உள்ள இந்து கைதிகளிடம் சமய தெளிவுகளை வழங்குவது, குழந்தைகளுக்கு திருக்குறள் வகுப்பு எடுப்பது என ஓயாது இயங்கிக்கொண்டே இருந்தார். வெள்ளை வேட்டியும் சட்டையுமே அவரது நிரந்தர அடையாளமாக இருந்தது.

பயிற்சி காலம் முடித்து கோலாலம்பூரில் பணி செய்த காலத்திலும் அவருடன் தொடர்பில் இருந்தேன். அவர் கைப்பேசி வைத்துக்கொள்வதில்லை என்பதால் ‘திருமுகம்’ அச்சகத்துக்கு அழைப்பேன். அப்போது அவர் அந்த பகுதியில் இருந்தால் மட்டுமே பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் இலக்கியத்தில் இருந்து விடுபட்டு முழுக்க சமூகப் பணிகளுக்காக மட்டுமே தன்னை அர்ப்பணித்துள்ளார் என்பது என் புரிதலாக இருந்தது. ஆனாலும் 2006இல் ‘காதல்’ இதழைத் தொடங்கியபோது மாதம் தவறாமல் அவருக்கு அனுப்பி விடுவேன். தைப்பிங்கில் உள்ள ரயில் நிலைய புத்தகக் கடையில் சில பிரதிகளை விற்பனைக்கு வைக்க அவர் உதவினார்.

2007இல் வல்லினம் அச்சு இதழை நான் சுயமாகத் தொடங்கியபோது முதல் இதழை அவருக்கு அனுப்பி வைத்தேன். வல்லினம் இதழ் குறித்து அப்போது நாடு முழுவதும் மரபான இலக்கியவாதிகளிடையே ஒவ்வாமை இருந்தது. அது தமிழை அழிக்க தொடங்கப்பட்ட முயற்சியாகவே வர்ணித்தனர். இதழ் கிடைத்த இரண்டு வாரங்களில் அவரிடமிருந்து ஒரு கடிதம். இம்முயற்சி தடைபடாமல் தொடர வேண்டுமென கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடிதத்துடன் எண்ணூறு ரிங்கிட் இணைக்கப்பட்டிருந்தது. அது நெகிழ்ச்சியான நிமிடம். அவரிடம் உள்ள இலக்கியவாதி இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறார் என அறிந்துகொண்ட தருணம். எங்கோ யார் மூலமாகவோ இந்நாட்டின் சிற்றிதழ் முயற்சிகள் தொடர வேண்டும் என்ற முன்னோடி ஒருவரின் அக்கறை அது. (இது குறித்து வல்லினம் 100 களஞ்சியத்தில் குறிப்பிட்டுள்ளேன்)

2010இல் தைப்பிங்கில் இலக்கியச் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தேன். கோலாலம்பூரில் இருந்து வல்லினம் குழுவும் கெடாவில் இருந்து நவீன இலக்கியக் களத்தினரும் அதில் கலந்துகொண்டனர். அதில் ஒரு அங்கமாக மாயதேவன் அவர்களுடன் உரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உரையாடல் அருவி ஓரம் இருந்த முருகன் கோயிலில் நடந்தது. என்னிடம் அவர் பகிர்ந்துகொண்ட ஆரம்பகால நினைவுகளை பொதுவில் பகிர அழைத்திருந்தேன். சுருக்கமான உரை அது. செறிவாகப் பேசினார். ஐந்து ஆண்டுகளில் பல விடயங்களை மறந்திருந்தார். முதுமையின் மாய அடையாளங்கள் அவரை மிக விரைவாகவே அணுகி வந்தன.

மா.செ.மாயதேவன் அவர்களை நான் இறுதியாகச் சந்தித்தது 2017இல். ‘மீண்டு நிலைத்த நிழல்கள்’ தொகுப்புக்காக அவரை நேர்காணல் செய்யவும் ஆவணப்படம் ஒன்று இயக்கவும் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. ‘திருமுகம்’ அச்சகத்தின் மேல் இருந்த அறையிலேயே நான், தயாஜி, செல்வம் ஆகியோர் தங்கிக்கொண்டோம். இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. நிறைய விசயங்களை மறந்திருந்தார். மெல்ல மெல்ல உரையாடியே அவரிடம் நினைவுகளை மீட்க வேண்டியிருந்தது. அது ஒரு சிறந்த ஆவணம் என்ற திருப்தி எனக்கு உண்டு.

இன்று அவர் காலையில் மரணமடைந்ததாகச் செய்தி வந்தவுடன் அவரது நிறைவான வாழ்வை ஒரு நிமிடம் எண்ணிக்கொண்டேன். மலேசியாவின் முதல் தலைமுறை புத்திலக்கியவாதி. அதை சிற்றிதழ் வழி இயக்கமாக்க முயன்றவர். இளமை காலத்தில் தன்னாளான பங்களிப்பைத் தொடர்ந்து இலக்கியத்துக்கு வழங்கியவர். எழுத்தாளராக இயங்க முடியாதபோது அப்பணிக்குத் துணை இருந்தவர். கோ.சாரங்கபாணி மூலம் தான் உருவாக்கிக்கொண்ட கொள்கைகளில் கடைசிவரை உறுதியாக இருந்து இயங்கியவர். தைப்பிங் தமிழர்களுக்காக மூன்று மாடி கட்டிடம் ஒன்றை விட்டுச்சென்றுள்ளார். அவரது பெயர் அவர் பங்களிப்புகளால் இந்நாட்டில் நிலைபெறும்.

அவருக்கு அஞ்சலி. அவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

மா.செ.மாயதேவன் அவர்களின் ஆவணப்படம்: https://youtu.be/QdXH48IZMFw

மா.செ.மாயதேவன் அவர்களின் நேர்காணல்: https://vallinam.com.my/version2/?p=5423

(Visited 273 times, 1 visits today)