இன்று (18.11.2021) வழக்கறிஞர் பசுபதி சிதம்பரம் அவர்களுக்குப் பிறந்தநாள். கடந்த வருடம் அக்டோபர் மாதம் அவர் எழுதத் தொடங்கிய ‘ஒளிர் நிழல்‘ எனும் தொடர் 30 ஆவது பாகத்தை அடைந்துள்ளது. இந்த முப்பது பாகங்களுக்கும் நானே முதல் வாசகன்.
ஆளுமைகள் எவ்வாறு உருபெற்று வருகிறார்கள், இயற்கை எவ்வாறு அவர்களை வடிவமைக்கிறது, காலம் உருவாக்கும் தடைகளும் சவால்களும் நேர்மறையான குணம் கொண்ட ஒருவருக்கு எப்படி வரமாக மாறுகின்றன, ஒருவர் தன் எண்ணத்தில் கொண்டுள்ள தீவிரம் அவரைச் சுற்றியுள்ள மனிதர்களையும் எவ்வகையில் மாற்றி அமைக்கிறது, குடும்பம் ஒருவரின் மன வளர்ச்சிக்கும் அறிவு முதிர்ச்சிக்கு எவ்வாறு பங்காற்றுகின்றன என்பன போன்ற பலவித புரிதல்கள், மீட்டெடுக்கப்படும் அவரது சிறுவயது அனுபவங்கள் மூலம் நுட்பமாக அறிமுகமாகின்றன.
நான் தொலைவில் நின்றபடி பார்த்து வியந்த பசுபதி அவர்களை இன்னும் அணுக்கமாக அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக இந்தத் தொடர் அமைகிறது. ஒருவகையில் இந்தத் தொடரைத் தொடங்கியதுகூட அவரை நெருக்கமாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற என் பேராசைதான் காரணம்.
பசுபதி அவர்களை நான் முதன்முறையாக அறிந்துகொண்டது செம்பருத்தி இதழ் வழியாகத்தான். மலேசியத் தமிழர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்பட வேண்டுமென்ற நோக்கில் அது மாத இதழாக வெளிவந்தது. அப்பாவுக்கு அனைத்து மாத வார இதழ்களையும் வாங்கும் பழக்கம் இருந்ததால் இடைநிலைப்பள்ளி படிக்கும்போதே எனக்கு செம்பருத்தி அறிமுகம். அதில் எழுதப்படும் கட்டுரைகளும் ஆய்வுகளும் அதன் வழி முன்வைக்கப்படும் மாற்றுபார்வைகளும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தின. மலேசியாவில் இவ்வளவு துணிச்சலாக எழுத முடியுமா? மொத்த அதிகார மையங்களையும் கேள்வி எழுப்ப முடியுமா? எந்தச் சார்பும் எடுக்காமல் யாரின் தயவுக்கும் ஏங்காமல் உண்மையை உரக்கச் சொல்ல முடியுமா? நான் தொலைவில் நின்றபடியே பசுபதி மற்றும் அவர் குழுவினரைப் பார்த்து வியந்தேன். எஸ்.பி.எம் முடிந்து கோலாலம்பூர் சுற்றுலா வந்தபோது செம்பருத்தி அலுவலகம் சென்று அவ்விதழின் பொறுப்பாசிரியராக இருந்த கணபதி கணேசன் மற்றும் ஓவியர் ரஜினியை அறிமுகம் செய்துக்கொண்டேன்.
நான் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இணைந்தபோது அங்கும் செம்பருத்தி, உங்கள் குரல் போன்ற இதழ்கள் பயிற்சி ஆசிரியர்களிடம் விற்பனைக்கு வந்தன. முதல் ஆளாக அவற்றை வாங்கி வாசித்துவிடுவேன். அப்படி ஒருமுறை செம்பருத்தி இதழ் கிடைக்கவில்லை என்றபோது கல்லூரி விரிவுரையாளர் திரு.சிவனேசனிடம் விசாரித்தேன். அவர் ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினார். அதன்வழி செம்பருத்தி இதழ் அரசு கல்வி கூடங்கள் எதிலும் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டிருந்ததை அறிய முடிந்தது. விரிவுரையாளர் சிவனேசனுக்கு செம்பருத்தி இதழின்மேல் பெரும் மதிப்பு இருந்தது. தனிப்பட்ட முறையில் என்னிடம் நெருக்கமான விரிவுரையாளர்களில் ஒருவர் அவர். சூழலைச் சொல்லி வருந்தினார்.
என் கல்லூரி ஈப்போவில் இருந்தது. அந்த வாரமே நான் கோலாலம்பூர் புறப்பட்டேன். செம்பருத்தி அலுவலகம் கோலாலம்பூர் மையத்தில் இருந்தது. அப்பாவின் உதவியுடன் அந்த இடத்தைத் தேடி கண்டுப்பிடித்துச் செல்லவே பெரும்பாடானது. கீழ்த்தளத்தில் பசுபதி அவர்களின் வழக்கறிஞர் அலுவலகம் இயங்கியது. செம்பருத்தி இதழ் 20 வேண்டும் என்றதும் உள்ளே இருந்து ஒருவர் வந்தார். அவர் பசுபதி அவர்களின் தங்கை என அப்போது எனக்குத் தெரியாது. இதழ்களைப் பாதி விலைக்கு கொடுப்பதாகக் கூறினார். இருபது ரிங்கிட்டைக் கொடுத்து பெற்றுக்கொண்டேன். இப்படியே சிலமாதங்கள் கடந்தபோது ஒருமுறை அவர் என்னைப் பற்றி விசாரித்தார். எதற்காக இத்தனை இதழ்களை வாங்குகிறேன் எனக் கேட்டார். நான், ‘கல்லூரி மாணவர்களுக்காக’ என்றதும் “அதுதான் விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளதே!” என சந்தேகமாகப் பார்த்தார்.
நான் புதிதாகக் கடைப்பிடிக்கும் திட்டத்தைக் கூறியதும் அவர் பார்வையில் ஆச்சரியம். “கொஞ்சம் இருங்கள்” என்றவர் அவசரமாக உள்ளே ஓடினார். பின்னர் “நீங்கள் பசுபதியைச் சந்திக்க வேண்டும்” என அவர் முன் சென்று நிறுத்தினார். நான் அவரிடம் இருந்து தப்பித்து செல்லவே முயன்றேன். பசுபதி என்பவர் கூரிய நகங்களும் கோர பற்களுமாக யார் மீதாவது பாய காத்திருக்கும் ஒரு புலி எனும் சித்திரம்தான் என் மனதில் இருந்தது. எனவே மறுக்க முடியாத சூழலில் தயங்கியபடி அவர் அறைக்குள் சென்றேன்.
சிறிய அறிமுகத்துக்குப் பின்னர், செம்பருத்தி இதழை எவ்வாறு கல்லூரியில் விற்பனை செய்கிறேன் என அவருக்கும் விளக்க வேண்டி இருந்தது. இன்று யோசித்தால் அது சுவாரசியமான கதைதான்.
இதழைக் கல்லூரிக்குக் கொண்டுச் சென்ற மறுநாளே என்மீது புகார் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. அப்படி என் மீது புகார் கடிதங்கள் எழுதுவதை சிலர் முழுநேர பணியாகச் செய்துக்கொண்டிருந்தனர். அவர்களே என் கல்லூரி வாழ்வை சுவாரசியமாக்கினர். எதிரிகள் சூழ்ந்திருக்கும்போது மூளை கூர்மையாக இருக்கும். எனவே நான் கவனமாகவே செயல்பட்டேன். விஷயம் கல்லூரி முதல்வருக்குப்போனது. அவர் கொஞ்சம் முற்போக்கானவர். சபைக் கூடல்களில் அவர் ஆற்றும் உரைகளை ஆர்வமாகக் கேட்பேன்.
“ஏன் தடை செய்யப்பட்ட இதழை கல்லூரியில் விற்கிறாய்?” என்றார்.
“நான் விற்கவில்லை” என்றேன்.
“விற்பதாக புகார் வந்துள்ளதே. நீ கல்லூரிக்கு செம்பருத்தி இதழ்களை கொண்டு வருகிறாய் அல்லவா?” என்றார்.
“ஆம். செம்பருத்தி இதழ்களை விற்பனை செய்யக்கூடாது என்றே தடை உள்ளது; வாசிக்கக் கூடாது என்று இல்லை. நான் இதழ்களை எடுத்து வருகிறேன். அதை வகுப்பு மேசையில் வைத்துவிடுவேன். யாரையும் வாங்கச் சொல்வதில்லை. அவர்களாக ஒரு ரிங்கிட் கொடுத்து எடுத்துக்கொள்கிறார்கள். விற்பதுதானே தவறு: வாங்குவதல்லவே” என்றேன்.
முதல்வர் சிரித்தார். “போ” என்றார். அதன்பின்னர் இதழை விற்பதில் எந்தத் தடையும் ஏற்படவில்லை.
பசுபதி இந்தக் கதையைக் கேட்டவுடன் சிரித்தார். அவர் சிரிப்பதை அன்றுதான் பார்த்தேன். சிரிக்கும்போது விசித்திரமான ஒலி எழுப்பினார்.
“வருங்கால தமிழ்ப்பள்ளி ஆசிரியராகப் போறிங்க. சமுதாயத்துல என்ன நடக்குதுன்னு உங்களுக்குத் தெரியணும். நீங்க புரட்சிகரமா எழுதணுமுன்னு சொல்லமாட்டேன். ஆனால் எல்லாவற்றையும் பற்றிய விழிப்புணர்வு இருக்கணும்…” எனக்கூறி சில துண்டுப்பிரசுரங்களைக் கொடுத்தார். அதில் உள்ள கருத்துகள் குறித்து சக நண்பர்களிடம் விவாதிக்கச் சொன்னார். என்னிடம் இலக்கியம் தவிர அப்போது அரசியல் விழிப்புணர்வு குறித்து யாரும் பேசியதில்லை. எழுத்தாளனுக்கு அரசியல் விழிப்புணர்வு வேண்டும் எனக்கூட அப்போது எனக்குத் தெரியாது. நான் அந்தப் பிரசுரங்களைப் பெற்றுக்கொண்டேன். மலேசிய இந்தியர்களின் அவலங்கள் அதில் கார்ட்டூன்களாக வரையப்பட்டிருந்தன.
பசுபதி அவர்களை இரண்டாவது முறை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு டாக்டர் சண்முகசிவா மூலம் அமைந்தது. 2009இல் நான் லண்டன் போக வேண்டியிருந்தது. மலேசியத் தமிழ் இலக்கியம் குறித்து லண்டனில் பேச அழைத்திருந்தனர். டத்தோ சகாதேவன் எனக்கான விமான செலவின் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டார். ஆனால் எனக்குப் பணப்பற்றாகுறை இருந்தது. அப்போதுதான் சண்முகசிவா பசுபதியிடம் அழைத்துச் சென்று அவர் வழி உதவி கிடைக்குமா என வினவினார். அதுவரை ஏழு வல்லினம் அச்சு இதழ்கள் வெளிவந்திருந்ததால் பசுபதிக்கு என் மீது நல்லபிப்பிராயம் இருந்தது. நிச்சயம் உதவுவதாகச் சொன்னார். அந்த உரையாடலில் இருவருமே சமுதாய நலனுக்காக செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்தே பேசிக்கொண்டிருந்தனர். நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். டத்தோ சகாதேவன் மற்றும் பசுபதியின் உதவியால் என் லண்டன் – ஃபிரான்ஸ் பயணம் சாத்தியமானது. பலவகையிலும் எனக்கு அது முக்கியமான பயணமாக அது அமைந்தது.
அதே ஆண்டில் தொடங்கப்பட்ட வல்லினம் இணைய இதழைத் தொடங்கி வைக்க பசுபதி அவர்களை அழைத்திருந்தேன். வேறு யாரை விடவும் அவரே அதற்குப் பொருத்தமானவர் என எனக்குத் தோன்றியது. அதன்பின்னர், தொடர்ந்து வல்லினம் செயல் திட்டங்களை நிறைவேற்ற அவர் செய்த உதவிகள் ஏராளம். எடுத்துச்செல்லும் எந்தத் திட்டமும் அதன் தேவைகளும் அவருக்கு எளிதாகப் புரிந்துவிடும். திட்டங்களைவிட அதை முன்னெடுத்துச் செல்லும் மனிதர்களைத்தான் அவர் நம்புகிறார் என நினைக்கிறேன். அவர் பேசுபவரின் கண்களில் கண்டறிவது அதில் உள்ள உண்மையை. அதை அவரால் எளிதில் அடையாளம் காண முடியும். உண்மையானவர்களுக்கு மட்டுமே உள்ள நுண்ணுணர்வு அது.
பசுபதி மற்றும் செம்பருத்தியுடன் இணைந்து வல்லினம் வகுப்புகள், வீதி நாடகம், கலை இலக்கிய விழா 3, என அடுக்கடுக்கான நிகழ்ச்சிகளை முன்னெடுத்தபோது அவர் குறித்த அவதூறுகளைத் தாங்கி வந்த அழைப்புகள் ஏராளம். எனக்கு மிக அணுக்கமாக இருந்த நண்பர்கள் உட்பட பலரும் அவரது நேர்மை குறித்தும் அவர் முன்னெடுப்புகள் குறித்தும் சந்தேகங்களை எழுப்பியபடியே இருந்தனர். இதேபோன்ற அழைப்புகளும் மின்னஞ்சல்களும் ஜெயமோகனை மலேசியாவுக்கு அழைக்கும்போதெல்லாம் வருவதுண்டு. சிலர் என்னை முகநூலில் நட்பு நீக்கம் செய்வதும் உண்டு.
நான் இயல்பாகவே விமர்சன மனம் கொண்டவன். இலக்கியச் சூழலில் எனக்கு நண்பர்களாக இருந்த பலர் விமர்சனத்தின் பொருட்டே விலகிச் சென்றுள்ளனர். எவ்வளவு நட்பாகப் பழகினாலும் மொழி, இலக்கியம் எனும் பெயரில் செய்யப்படுகின்ற மோசடிகளை என்னால் மௌனமாகக் கடக்க முடிவதில்லை. அதுபோல படைப்பிலக்கியம் குறித்த கறாரான கருத்துகள் மட்டுமே இக்காலத்தில் மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலுக்குத் தேவை எனக் கருதுவதால் அதிலும் சமரசம் இல்லை. அப்படி இருக்கும்போது நான் முன்னுதாரணமாகக் கொள்ளும் ஆதர்சங்களை கண்மூடித்தனமான வழிபாட்டு மனநிலையில் பின்பற்றுபவனல்ல.
ஓர் ஆளுமையை புரிந்துகொள்ள அவர்களது அவ்வப்போதைய சிறிய பிழைகளை, சருக்கல்களை, உணர்ச்சிக்கொந்தளிப்புகளை மட்டுமே வைத்து எடைபோட்டுவிடுதல் கூடாது. அவதூறு செய்ய நினைப்பவர்களுக்கான கச்சா பொருள்கள் இவை. அவற்றைக் கடந்து அவர்கள் ஆழ் மனதை நாம் அறிய வேண்டும். அதற்கு அதிக காலம் ஆகாது. நமது மனது தூயத் தேடலில் இருக்கும்போது அதுவே ஒரு வினாடியில் நமக்கான ஆசிரியர்களை அடையாளம் காட்டிவிடும். உதாரணமாக, ஜெயமோகனை பார்த்த அன்றே அவர் எனக்கான இலக்கிய ஆசிரியர் எனப் புரிந்துவிட்டது. ஆனால் நான் எனக்குள் அவர்மீது கடுமையான விமர்சனங்களை உருவாக்கிக்கொண்டே இருந்தேன். அத்தகைய விமர்சனங்கள் புறத்திலிருந்து உருவாகும்போது என் முடிவின்மீது நான் பெருமை அடைந்தேன். ஆனால் நானாக கட்டியெழுப்பிக்கொண்ட சுவர் நொறுங்கிச் சரிய அதிக காலம் பிடிக்கவில்லை. அது அப்படித்தான். இந்த மொத்த பிரபஞ்சத்திடமும் நம்மை இணைத்துக்கொள்ள நாம் கையில் எடுக்க வேண்டிய ஒரே சக்தி உண்மை மட்டும்தான். அது நமக்கான மனிதர்களைக் காட்டிக்கொடுத்துவிடும்.
பசுபதி அவர்களை நான் புரிந்துகொண்டது அவ்வாறுதான். அவருடன் உரையாடும்போதெல்லாம் மிக எளிதாக அவரின் ஆழமான சிந்தனைக்குள் நான் இணைவதை உணரமுடிகிறது. அவர் செயல்கள் குறித்து பேசுவதில்லை. செயல்களுக்கு அடியில் உள்ள தேவை, தேவைக்கு அடியில் உள்ள மனிதம், அதனை இணைக்கும் பிரபஞ்சம், அதன் விசாலத்தின் முன் மனிதர்கள், புல், பூண்டு, செடி, விலங்குகள் என அனைத்தும் ஒன்றென கருதும் நிலை என அடுக்கடுக்கடுக்காக நகர்த்திச்செல்கிறார். இவ்வாறானவர்களை எளிய உலகியல் சிந்தனை கொண்டவர்களால் புரிந்துகொள்ள முடியாது. புரிந்துகொள்ள முடியாததால் அவதூறுகளை பரப்புகின்றனர். அவர்களது இயலாமையை தாழ்வுணர்ச்சியை எண்ணி பரிதாபம் கொள்வதை தவிர வேறுவழியில்லை.
சமுதாயத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் முன்னெடுப்புகள் பசுபதி அவர்களால் தொடங்கப்பட்டுள்ளன. பெற்றோர்களுக்காக நடத்தப்பட்ட (PASS) அவர் தமிழ் அறவாரியத்தின் தலைவரானபின் விரிவாக அறிமுகம் கண்டு பரவலானது. திறன்பெற்ற மாணவர்களுக்காக என்றே நடத்தப்பட்ட 21 நாள் ஆங்கில முகாம் திட்டத்தை பின் தங்கிய மாணவர்களுக்கானதாகவும் அவர் தலைமையில் மாற்றியமைத்தார். ‘மை ஸ்கில்ஸ்’ தோன்றுவதற்கு முன்பே EWRF அமைப்பின் செயல்பாட்டை மெதுநிலை மாணவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் நகர்த்தினார். இறுதியில் ‘மை ஸ்கில்ஸ்’ அறவாரியத்தை முழுமையான சமூக மாற்றத்துக்கான ஓர் அமைப்பாகக் கட்டமைத்தும் வருகிறார். குடும்பத்தால் கல்விக்கூடங்களால் சமுதாயத்தால் கைவிடப்பட்ட மாணவர்களுக்கு தொழில்திறன் பயிற்சிகளைக் கொடுத்து அவர்களை நேர்வழியில் வாழ்வைத் தொடர வழியமைத்துக் கொடுக்கிறார். இப்படி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மிக கவனமாகத் திட்டமிட்டு சமூகத்தில் நலிந்த ஒரு பகுதியை நோக்கியே தன் கவனத்தைச் செலுத்தி வருகிறார். அவர் முன்னெடுக்கும் முயற்சிகளையும் அதற்காக அவர் செலுத்தும் உழைப்பையும் நான் ஆச்சரியத்தோடு பார்ப்பதுண்டு. நாம் நம்பும் ஒரு பணிக்கு முழுமையாக ஒப்புக்கொடுப்பதை முதலில் அறிந்தது அவரிடம்தான்.
பசுபதி அவர்கள் மலேசியாவில் புகழ்பெற்ற வழக்கறிஞர். மலேசியாவில் பல பிரபலமான வழக்குகளை வெற்றிகரமாக நடத்தியவர். 150க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளை இலவசமாக நடத்திக்கொடுத்தவர். ஆனால் தன்னிடம் உள்ள ஆயுதத்தை அவர் பயன்படுத்துவதில் காட்டும் கவனம் என்னை ஆச்சரியப்படுத்துவதுண்டு. தன்னை எந்நேரமும் வசை பாடிக்கொண்டிருக்கும் எதிரிகள் குறித்து பேசும்போதெல்லாம் “பாவம்… அவர்களும் சமுதாயத்துக்கு ஏதோ செய்ய வேண்டும் என்றே தொடங்கியிருப்பார்கள். தவறான புரிதலால் திட்டுகிறார்கள். அவர்களும் நல்லவர்கள்தான்” என்பார். என்னிடம் அவர் கூறும் ஆலோசனையும் பலசமயம் அதுவாகவே இருக்கும். “நவீன்! நீங்க நண்பர தேர்ந்தெடுப்பது எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் எதிரியைத் தேர்ந்தெடுப்பது. உங்களை நோக்கி வரும் அவதூறுகளுக்கும் வசைகளுக்கும் பதில் சொன்னால் அவர்களுக்கு நீங்கள் எதிரி என்ற கௌரவத்தைக் கொடுத்துவிடுவீர்கள். உங்களுக்கு எதிரியாக இருப்பதே அவர்களுக்கு மிகப்பெரிய அங்கீகாரம்” என்பார்.
நானறிந்து பசுபதி அவர்களிடம் சட்ட அறிவு நியாயமானவர்களை மீட்பதிலும் அவர்களுக்கான வருங்காலத்தை உருவாக்குவதிலுமே உள்ளது. அழிப்பதையும் ஒடுக்குவதையும் அவர் விரும்புவதில்லை. எல்லா எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இடைவிடாது காரியமாற்றுதலே இயற்கையுடன் இணைந்திருப்பதன் வழியாக அவர் நகர்கிறார். ஆனால் இந்த மனநிலையே அவரது பரிணாம வளர்ச்சிதான். செம்பருத்தி இதழை நடத்திய பசுபதியல்ல இவர். அதிகம் கனிந்திருக்கிறார்.
தன் வாழ்வை மாற்றியமைத்தவர்கள் குறித்து அடிக்கடி பிறரிடம் பகிர்ந்துகொள்ளும் குணம் அவரிடம் உண்டு. அப்படி ஒருமுறை ஒரு சீன நண்பர் குறித்து சொல்லப்போக அதை சிறு கட்டுரையாக எழுதி அவருக்கு அனுப்பினேன். இவை காற்றோடு மறையக்கூடாது பதிவுகளாக இருக்க வேண்டுமென ஒரு வலைத்தளத்தை அவருக்காகத் தொடங்கினேன். (https://pathipakkam.wordpress.com/) வாரம் ஒருமுறை தன் வாழ்வில் வந்துபோன நண்பர்கள் குறித்து குரல் பதிவு செய்து அனுப்புவது அவர் பணி. நான் அதனைக் கட்டுரையாக மாற்றி வலைத்தளத்தில் பதிவிடுவேன். பத்து பதினைந்து கட்டுரைகள் கடந்தபிறகு பசுபதிக்கு என் எழுத்தின் வடிவம் பிடிபட்டது. அவர் அனுப்பும் குரல் பதிவுகளே பெரும்பாலும் எழுத்துப் படிவங்களாக மாற்றம் இன்றி வந்தன. அந்தக் குரல் பதிவுகளைப் பத்திரப்படுத்தியுள்ளேன். அது எனக்கானது. வரலாற்றுக்கானதும் கூட.
இன்று அவருக்கு 64ஆவது வயது. அது அவருக்கு ஒரு எண் மட்டுமே. இன்னும் ஐம்பது வருடங்களுக்கு இந்தச் சமுதாய நலனுக்கு என்னத் திட்டமெல்லாம் அமுல்படுத்த வேண்டுமென இப்போதே அவர் திட்டமிட்டுக்கொண்டிருப்பார். அந்த உற்சாகம் அவருள் நிலைக்கட்டும். பசுபதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த நாளை கொண்டாட்டமாக மட்டுமல்லாமல் மேலும் அர்த்தமுடையதாக மாற்ற தகுந்த திட்டங்களை வகுக்க வேண்டிய தேவை உண்டு. அதை அடுத்த வருடம் தொடங்கலாம்.