ஆசிரியர் மாணவன் மற்றும் பலன்கள்

மகனும் மாணவர்களும் – ஜெயமோகன்

https://www.jeyamohan.in/226215

நவீன் அவர்களே, பலே! ஜெயமோகனால் நீங்கள் நிறைய பலன் அடைகிறீர்கள் போலவே. உங்கள் முயற்சிகளெல்லாம் அவரை ஆசிரியராக கொண்டதால் அடையும் பலன்களாகிவிட்டன. இன்னும் நீங்கள் புகழை அடைவீர்கள். வாழ்த்துகள்.

கர்ணா

கிட்டத்தட்ட இந்த ரக கேள்விகளை ஏந்தி இரண்டு மின்னஞ்சல்கள் ஒரு புலனச்செய்தி வந்தது. அவை வெகுளித்தனமாகக் கேட்கப் படுவதுபோலவும் என்னை ஏதோ தீமையிலிருந்து பாதுகாப்பது போலவும் நடக்கக்கூடாத ஒன்று நடந்துவிட்டது போலவும் பாவனைகளைப் பூண்டிருந்தன. உண்மையில் இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. ஜெயமோகன் இங்கு ‘பலன்’ எனச்சொல்வது நான் பெறும் வசைகளையும் இலக்கியக்கசப்புகளையும். இந்த எளிய வரியைப் புரிந்துகொள்ள முடியாதவர்களிடம் மேற்கொண்டு பேசுவது வீண். ஆனால் இந்தத் தருணத்தை வேறுவிதமாக அணுகிப்பார்க்க விரும்புகிறேன். ‘பலன்’ எனும் சொல்லை அதன் நேரடி பொருளில் அணுகினால் என்ன தவறு என்றே தோன்றியது. அப்படி அணுகினால் என் பதில் இவ்வாறு இருக்கும். 

”ஆம்! எழுத்தாளர் ஜெயமோகன் என் ஆசிரியர். அவரை ஆசிரியராகக் கொண்டுள்ள நான் அதற்கான பலன்களையும் பெறுகிறேன்,”

இப்படிச் சொல்வதில் எனக்கு எந்தக் குழப்பமோ தயக்கமோ இல்லை. உண்மை என்பது ஒளிபோன்றது. அதைக் கலப்படமாகச் சொல்வதில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. எனவே அதை மிகத்தெளிவாக வெளிப்படையாக உரைக்கவே நான் எப்போதும் விரும்புகிறேன்.

***

2006இல் ‘காதல்’ இதழ் வந்துகொண்டிருந்த காலம். அப்போது நவீனத்துவம் பின்நவீனத்துவம் எனும் சொற்களே கிளர்ச்சியைக் கொடுப்பவையாக இருந்தன. எல்லாவித புனிதங்களையும் கேள்வி எழுப்பும் சுதந்திரத்தை அவை வழங்கின. மரபான எதையும் களைத்துப்போடும் உத்வேகம் எழுந்தது. கலகம் செய்யும் எழுத்துகளை உற்பத்தி செய்தோம். எவ்வளவு துடுக்காக சிலவற்றை எழுதினாலும் என் இயல்பு என ஒன்று என்னை இழுத்துப்பிடித்து வைத்திருந்தது. அது ஆசிரியர்களை வணங்கும் குணம். இக்குணம் எப்படி என்னிடம் வந்ததெனத்தெரியவில்லை. ஆனால் எனக்குக் கற்றுக்கொடுத்தவர்கள் யாரையும் நான் ஒருபோதும் மறந்ததில்லை. அறிவும் ஆளுமையும் வளர துணைநின்றவர்கள் பெயரை நான் தருணம் வரும்போதெல்லாம் உச்சரிக்காமல் இருந்ததில்லை.

வாசுகி டீச்சர்

இடைநிலைப்பள்ளியில் என்னை முதன்முறையாக எழுத்தாளன் என அடையாளம் காண்ட வாசுகி டீச்சரை இப்போதுவரை வணங்கும் பழக்கம் உள்ளவன் நான். அவர் வீட்டுக்குச் சென்றால் காலில் விழுந்து வணங்கிவிட்டே திரும்புவேன். எனது ‘தாரா’ நாவலை அவரே வெளியீடு செய்து வைத்தார். அதுபோல ஒவ்வொரு காலத்திலும் என்னை இலக்கியத்தில் மேம்படுத்தியவர்கள் இருக்கிறார்கள். எம். ஏ. இளஞ்செல்வன், மா. சண்முகசிவா குறித்து அவ்வாறு பலமுறை எழுதியுள்ளேன். அவர்கள் படைப்புகளை நான் விமர்சனம் செய்தாலும் அவர்கள் என் ஆசிரியர்கள் என்பதை எப்போதுமே குறிப்பிட்டு வருகிறேன்.

ஒருவர் நமக்கு கற்றுக்கொடுப்பதால் மட்டுமே அவர் ஆசிரியராகிவிடுவதில்லை. பதினெட்டு வயதுவரை பல தமிழ் ஆசிரியர்களைக் கண்டிருந்தாலும் ஏன் வாசுகி டீச்சரை மட்டும் என் ஆசிரியர் என்கிறேன்? அவர் என் ஆற்றலை எனக்கு அறிமுகம் செய்தவர். என் திறனறிந்து தன் போதனையை வடிவமைத்தவர். எல்லா நிலைகளிலும் துணையிருந்தவர். மாணவன்தான் இவர் தன் ஆசிரியர் எனச் சொல்லத் தகுதியுள்ளவன். மற்றபடி போதனை எனும் செயலை நிகழ்த்துவதால் மட்டுமே ஒருவர் ஆசிரியராகிவிடுவதில்லை.

மா. சண்முகசிவா

இப்போது யோசித்துப் பார்த்தால், நான் ஆசிரியராக ஏற்றுக்கொண்டவர்களுக்கு என் தனிப்பட்ட வாழ்க்கையும் நன்றாகவே தெரியும். அது அவ்வாறுதான் அமைகிறது. அப்படி அமைவதுதான் இயல்பென நினைக்கிறேன். தனிப்பட்ட வாழ்க்கையை அறிந்துள்ளதால் அதனூடே இயந்துள்ள சிக்கல்களையும் அறிந்தே வைத்துள்ளனர். சண்முகசிவாவை நான் முதன்முறையாகச் சந்தித்தபோது என் காதல் தோல்வியின் வலியைத்தான் நாளெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன். அவரும் அதற்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார். நம் ஆசிரியர்கள் நம்மை கூடுதலாக அறிவது சரியென்றே நினைக்கிறேன். பல தருணங்களில் நான் எடுக்கும் முடிவுகளுக்கு அவ்வறிதல் வழியாகவே நமக்கு தகுந்த ஆலோசனைகள் கிடைக்கின்றன.  

உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். பலரும் என் மணமுறிவு குறித்து அறிவீர்கள். அதன் பின்னர் ஆறு ஆண்டுகள் கழித்து மறுமணம் செய்ய தூண்டியவர்கள் சண்முகசிவா, பி. எம். மூர்த்தி போன்றவர்கள். சுவாமி பிரம்மானந்தாவிடம் என் மறுமண முடிவை எடுத்துச்சென்றபோது ஜாதகப்படி சில குறிப்புகளைக் கூறிவிட்டு ‘செய்யலாம்’ என்றார். அப்போதும் எனக்கு மனம் ஏற்கவில்லை. திருமண வாழ்வில் கிட்டத்தட்ட நம்பிக்கை இழந்திருந்தேன். பயம் இருந்தது. ஓர் இரவு ஜெயமோகனை அழைத்தேன். என் தயக்கத்தைக் கூறினேன். பெண் யார் என்பதைக் கூறினேன். ”நீங்கள் சொன்னவுடன் அடுத்த கணமே அவரை நீங்கள் திருமணம் செய்யலாம் என்றே என் மனம் சொல்கிறது,” என்றார்.

அவ்வளவுதான். அதற்குப்பின் எந்த ஆய்வும் இல்லை. எந்தக் கேள்வியும் இல்லை. அது என் ஆசிரியரின் சொல். அது தவறாகாது. உடனே சுவாமிக்கு அழைத்து ஜெயமோகன் கூறியதைக் குறிப்பிட்டு என உறுதியான முடிவையும் கூறினேன்.

இலக்கியச் சூழலில் ஆசிரியர் மாணவர் உறவில் நிகழும் நெருக்கம் இலக்கியப் படைப்பிலோ விமர்சனத்திலோ எவ்வகையான சமசரங்களையும் செய்துக்கொண்டதில்லை. எம். ஏ. இளஞ்செல்வனின் குறுநாவல்கள் அனைத்தையும் கிட்டத்தட்ட நிராகரிக்கவே செய்துள்ளேன். சண்முகசிவாவின் ஆரம்பகால சிறுகதைகளை கடுமையாகவே விமர்சித்துள்ளேன். ஆனால் இளஞ்செல்வன் இன்று உயிருடன் இருந்தால் புதுக்கவிதையை மலேசியாவில் பேரியக்கமாக மாற்றியதற்காக வல்லினம் விருது கொடுப்பவனும் நானாகவே இருந்திருப்பேன். இன்னொரு உதாரணம் ஒன்றைச் சொல்லலாம்.

சிற்றிதழ் குறித்த எனது ஒரு கட்டுரையை ஜெயமோகன் கடுமையாகவே விமர்சித்திருந்தார். அக்கட்டுரையில் அவர் குறிப்பிட்ட சிற்றிதழுக்கான வரையறையில் எனக்கு சில மாறுபட்ட கருத்துகள் இருந்தன.   அதற்கு மறுப்பை எழுதும் முன்னர் நான் ஜெயமோகனை அழைத்தேன். ”சார், நான் உங்கள் கருத்துக்கு மறுப்பு எழுதப்போகிறேன்.” என்றேன் பணிவாக. ”எழுதுங்கள்” என்றார் அன்பாக.

அக்கட்டுரை வெளிவந்தபின்னர் பலரும் வழக்கம்போல தங்கள் வன்மங்களைக் கொட்டி கடிதம் எழுதினர். பெரும்பாலும் ஜெயமோகன் மீதான சாடல்கள். நான் எதையும் பிரசுரிக்கவில்லை. நான் என் ஆசிரியரிடம் உரையாடுகிறேன். அதில் சில்லரைகளுக்கு இடமில்லை. ஜெயமோகன் அக்கட்டுரையை தன் தளத்தில் பகிர்ந்துகொண்டார். அதன் பின்னர்தான் விஷ்ணுபுரம் விழாவில் எனக்குப் பேச வாய்ப்பளித்தார். நான் ஏராளமான வாசகர்களைப் பெற்றது அந்த விழாவிற்குப் பின்னர்தான். இதைச் சொல்ல காரணம், ஆசிரியர் மாணவர் உறவு என்பது அதுதான். அங்கு முரண்பட்ட கருத்துகள் இருக்குமே தவிர பகைமை இருக்காது. ஆசிரியர் எப்போதுமே தன் மாணவனை அனைத்துக்கொள்ளக்கூடியவர்தான். அவர் தன் மாணவன் யார் என்பதையும் உள்ளூர அறிந்திருப்பார்.  

ஆம்! ஆசிரியர் மாணவர் உறவு என்பது நுண்ணுணர்வுகளால் பிணைக்கப்பட்டது என்பதே என் எண்ணம். மேலே நான் சொன்ன கட்டுரை (சிற்றிதழ் குறித்து) எழுத மூன்று வாரங்கள் எடுத்துக்கொண்டேன். பல நூல்களை நண்பர்கள் உதவியுடன் ஆராய்ந்தே எழுதினேன். உண்மையில் அது என் மணமுறிவுக்கான சட்ட நடவடிக்கைகள் நடந்துகொண்டிருந்த அழுத்தமான காலம். அந்தக் காலத்தை நான் எப்படிக் கடந்தேன் என்பதே இன்று வரை ஆச்சரியம். சுவாமி பிரம்மானந்தா சொன்னார், ”ஆசிரியர்கள் என்பவர்கள் போதனைகள் வழியாக மட்டுமே ஒருவரை மீட்பதில்லை; சில சமயம் சிக்கலான தருணங்களை உருவாக்கியும் உங்களை மீட்கக்கூடியவர். இப்படி ஒரு கட்டுரை எழுதும் நிர்பந்தம் வராமல் இருந்திருந்தால் நீங்கள் உலகியல் அழுத்தங்களால் சிரமப்பட்டிருப்பீர்கள். அதில் மூழ்கியிருப்பீர்கள். சுற்றி எழும் வசை சொற்களுக்கு எதிர்வினையாற்றி களைத்திருப்பீர்கள். முழுக்க இதில் பிணைத்துக்கொண்டதால் அந்தக் காலத்தின் தீவிரத்தைக் கடந்துவிட்டீர்கள்,”

அது உண்மை. ஆசிரியர்கள் என்பவர்கள் நம்மை மீட்கக்கூடியவர்கள். சில சமயம் அதை அவர்கள் திட்டமிட்டிருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் வழியாகவே அது நிகழும். அதை நிகழ்த்துவது அந்த அரூபமான பிணைப்பு.

***

நான் என் ஆசிரியர்களாகக் கருதுபவர்களை எப்போதும் தற்காப்பவனாகவே இருக்கிறேன். ஈராயிரத்தின் தொடக்கத்தில் சண்முகசிவா மலேசிய நண்பனில் ‘நாம் இன்னமும் மு.வாவைவிட்டு ‘மூவ்’ ஆகவே இல்லை.’ என எழுதியதால் சீனி நைனா முகம்மது அவர்கள் உட்பட பலர் அவர்மீது கடுமையான விமர்சனங்களை வைத்தனர். அப்போது சண்முகசிவாவின் கருத்துக்கு ஆதரவாக எழுதியவன் நான் மட்டும்தான். அதுபோல 2016 ஆம் ஆண்டு பசுபதி தொடர்பான அவதூறுகள் மலேசிய நண்பனில் கடுமையாக முன்வைக்கப்பட்டபோது நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பலை கிழம்பியது. அப்போது, அவர் தரப்பு நியாயத்தை எழுதியவன் நான் மட்டுமே. பசுபதி சொன்னார், ”நீங்கள் எழுதிய கட்டுரை குறைந்தது இருநூறு பேரிடம் இருந்தாவது எனக்கு மீண்டும் மீண்டும் வாட்சப்பில் வந்திருக்கும். இத்தனை ஆண்டுகால பொதுவாழ்க்கையில் என் தரப்பைக் கூறி ஒரே ஒரு கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது,” என வழக்கம்போல சிரித்தார்.

பசுபதி சிதம்பரம்

இதுபோல எனக்கு இக்கட்டான நிலை வந்தபோதெல்லாம் என் ஆசிரியர்கள் என் அருகில் முதன்மையாக இருந்திருக்கிறார்கள். 2014இல் நாளிதழ் ஒன்று இடைவிடாமல் வல்லினத்தில் வந்த சிறுகதையைத் தாக்கி இதனால் மதத்துக்கு இழிவு என வழக்குகள் போட முயன்றபோது அதை தடுத்து வல்லினத்துடன் இருந்தவர் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி. இதனால் அவர் பெயருக்குக் கலங்கம் ஏற்படலாம் எனத் தெரிந்தாலும் அவர் தன்னை வல்லினத்துடன் நெருக்கமாகப் பிணைத்துக்கொண்டது  அக்காலத்தில்தான். சர்ச்சை செய்தவர்களிடம் ”உங்களுக்கு மதமும் புரியாது; இலக்கியமும் புரியாது,” என வாதிட்டார். அதுபோலவே கல்வி அமைச்சில் என் குறித்து புகார்கள் செல்லும்போதெல்லாம் மா. சண்முகசிவா பக்கத்துணையாக இருந்துள்ளார்.

சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

யோசித்துப் பார்த்தால் நமது முன்னோடிகளாகவும் ஆசிரியராகவும் நாம் கருதும் ஒருவருடன் கொண்டுள்ள நட்பென்பது எத்தனை ஆச்சரியமான தருணங்களை உருவாக்கிக்கொடுக்கிறது என இப்போது இதை எழுதும்போது தோன்றுகிறது.

ஆசிரியர்களைக் கண்மூடித்தனமாக தற்காக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அவர்கள் கருத்துடன் உடன்படும்போது அவர்கள் தரப்பு உண்மையை அறிந்திருக்கும்போது அதை உரக்கக்கூற எழுத்தாளன் ஒருபோதும் தயங்கக்கூடாது என்றே நினைக்கிறேன்.

ஆசிரியர் மாணவர் உறவு நுணுக்கமான உணர்வுச்சரடுகளைக் கொண்டது எனச் சொன்னேன் அல்லவா? அப்படியானால் ஜெயமோகன் வழியாக நான் அடைந்துள்ள பலன் என்ன? முதலில் அது உலகியல் பலன்கள் அல்ல. அது அறிவும் ஞானமும் சார்ந்தது. இன்று இலக்கியத்தில் நான் என்னை உருவாக்கிக்கொண்டதெல்லாம் அவரது சொற்களின் செயல்களின் வழியாகத்தான். வல்லினம் விருது வழங்கும் செயல்முறை தொடங்கி பல்வேறு திட்டங்கள் ஜெயமோகன் (விஷ்ணுபுரம் விருதுவிழா) வழிவந்தவைதான். மலேசிய இலக்கியச் சூழலில் நிகழும் நன்மைகளில் பலவும் ஜெயமோகன் எங்கோ ஓரிடத்தில் தொடக்கி வைத்தவைதான். எஸ்.எம்.சாகிரை ஜெயமோகன் தமிழகத்துக்கு அழைத்தபோது அங்கிருந்து உருவான மொழிபெயர்ப்பு முயற்சிகள் குறித்து முன்னர் விரிவாகவே கட்டுரை எழுதியுள்ளேன்.

இன்னும் ஏராளம் உண்டு. அது குறித்தெல்லாம் உங்களுக்கு எழுதினாலும் புரியாது. நீங்கள் உருவாக்க விரும்புவது ஒருவித மனக்கசப்பை. ஆனால் அது நோயாளியின் கோழைபோல உங்களுக்குள்ளேயே இருந்து உங்களையே அழிக்கக்கூடியது. உண்மையில் நீங்களெல்லாம் பரிதாபத்திற்குறிய ஒரு வாழ்வையே வாழ்கிறீர்கள். இவ்வளவு கசப்பை எப்படி உங்கள் உடலும் ஆன்மாவும் தாங்கிக்கொண்டிருக்கிறது என்பதை என்னும்போதுதான் வியப்பாக உள்ளது.

(Visited 221 times, 1 visits today)