ஆகவே செயல் புரிக!

விஜயலட்சுமி

அண்ணே வணக்கம். சற்று முன்னர் முகநூலில் அண்ணன் எழுதிய பதிவை வாசித்தேன். எனக்கு ஒரு சந்தேகம். நீங்கள் கோபப்படமாட்டீர்கள் என நம்புகிறேன். நமது தாய்மொழியாம் தமிழ் மொழியைக் காப்பாற்ற போராடும் சிலரை மனமுவந்து பாராட்டும் தாங்கள், ஏன் __________ போன்ற சிலரை ஏசுகிறீர்கள்? அவர்களும் தமிழ் வளரவும் செழித்தோங்கவும்தானே பாடுபடுகிறார்கள். ஏன் இந்த பாராபட்சம்? உங்கள் விமர்சனத்தால் ____________ போல சில மனமுடைய வாய்ப்புண்டு. அவர்கள் செயல்படாவிட்டாலும் தமிழுக்கும் இலக்கியத்திற்கும் இழப்புதானே. நான் ஏற்கனவே கேட்ட கேள்விக்கு தாங்கள் பதில் சொல்லவில்லை. வாய்ப்பிருந்தால் சொல்லவும். என் புலன எண்ணுக்கும் __________ அனுப்பலாம்.

குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது)

நண்பரே, தாங்கள் தனிப்பட்ட முறையில் பதிலைக் கேட்டுள்ளதால் உங்கள் தகவலை வெளியிடவில்லை. மேலும் நீங்கள் குறிப்பிட்ட நபரின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது. இக்கேள்விக்கான பதில் சிலருக்கேனும் தெளிவை ஏற்படுத்தும் என்பதால் பொதுவில் பதிவிடுகிறேன். அதற்கு முன்னர், நான் மெசேஜரில் உள்ள தகவல்களைப் பார்ப்பது அரிது. எனவே உங்களின் முந்தைய கேள்விக்கு பதில் சொல்லவில்லை. இப்போது சொல்லப்போகும் பதிலில் அதற்கான தெளிவும் இருக்கலாம். மேலும் தங்களின் முகநூலின் வழியாக கல்லூரி மாணவன் என அறிந்தேன். எனவே எளிமையான முறையில் விளக்க முயல்கிறேன்.

அழகிய பாண்டியன்

முதலில், செயல் என நான் குறிப்பிடுவது எது? நாம் செயல்களால் நமது தினங்களை நிரப்பிக்கொண்டவர்கள்தான். இன்று முழுவதும் நீங்கள் என்னென்ன செய்தீர்கள் என யோசித்துப் பாருங்கள். காலையில் எழுந்து குளித்தது முதல் இந்தத் தகவலை எனக்கு அனுப்பியது வரை எல்லாமே செயல்கள்தானே. அப்படியானால் நான் சொல்வது இந்த அன்றாடங்களை அல்ல என்பது உங்களுக்குத் தெளிவாகியிருக்கும். அன்றாடச் செயல்கள் நமது வாழ்வில் முக்கியம் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. அவற்றையும் கருத்தூன்றியே செய்ய வேண்டும், ஆனால் அக்கட்டுரையில் விஜயலட்சுமி போன்ற லட்சிய மனிதர்களாக நான் குறிப்பிடுபவர்கள் அன்றாடங்களை மட்டுமே செய்பவர்கள் அல்ல என்பதை தெளிவுப்படுத்திக்கொள்கிறேன்.

ஆசிரியர் பத்மநாதன்

அன்றாடங்களைக் கடந்த ஒருவரது செயல்பாடுகளை நான் எவ்வாறு மதிப்பிடுகிறேன் என்பது உங்கள் கேள்வியிலுள்ள இரண்டாம் சாரம். உதாரணமாக ஒன்றைச் சொல்கிறேன். நான் ஓர் ஆசிரியர். என் தொழில் பள்ளிக்குச் சென்று போதிப்பது. அத்தொழிலை முறையாகவே செய்கிறேன். இப்படி ஒவ்வொரு தொழில் செய்பவர்களும் தங்கள் தொழிலை முறையாகச் செய்வதும் பாராட்டத்தக்கதே. ஆனால் மிகச்சிலரால் அத்தொழில் மேன்மை அடைகிறது. உதாரணமாக, பந்திங் நகரில் உள்ள சுங்கை மங்கிஸ் தமிழ்ப்பள்ளியில் பத்மநாதன் என்ற ஓர் ஆசிரியர் இருக்கிறார். அவ்வாசிரியர் பணியாற்றும் பள்ளிக்கு நான் இரண்டு முறை சென்றுள்ளேன். பாடத்திட்டத்தைத் தாண்டி அவர் இயற்கை விவசாயம், மறுசுழற்சி, மழைநீர் சேகரிப்புத் திட்டம், இயற்கை உரம் தயாரிப்பு என தன் மாணவர்களைப் பயிற்றுவிக்கிறார். அம்மாணவர்கள் அதில் தீவிரமாக ஈடுபடுவதையும் பார்க்கிறேன். அந்த ஆசிரியர் இவற்றை ஏதோ விருதுக்காகவோ போட்டிக்காகவோ செய்யவில்லை. அவரிடம் உரையாடும்போது உண்மையாகவே அவர் இந்தப் பூமியை நேசிப்பது புரிந்தது. அந்த உணர்வை மாணவர்களுக்குக் கடத்துகிறார். அவ்வுணர்வை செயலாக மாற்றுகிறார்.

இப்போது பாடத்திட்டத்தின்படி போதிக்கும் சிறந்த ஆசிரியர்களோடு பத்மநாதனை நான் ஒப்பிட்டால் அவர் ஒரு படி மேலானவர் என்றே சொல்வேன். முதல் காரணம், அவர் மாணவர்களின் ஆளுமையை வடிவமைக்கிறார்; அவர்களை சிந்திக்க வைக்கிறார்; செயல்பட தூண்டுகிறார்; அதற்காக பல ஆண்டுகளாக தன் சக்தி, நேரம், ஆற்றல் என அனைத்தையும் வழங்குகிறார். இப்படி ஒவ்வொரு துறையையும் சொல்லலாம். இவ்வாண்டு வல்லினம் விருது பெறும் பி.எம்.மூர்த்தி அவர்களையே எடுத்துக்கொள்வோம். தேர்வு வாரியத்தால் அவர் பலனடைந்தாரா? அல்லது அவரால் தேர்வு வாரியம் பலனடைந்ததா? அவர் குறித்து வல்லினத்தில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை வாசித்தாலே உங்களுக்கு பதில் தெரிந்துவிடும். ஒரு துறையில் ஒருவர் பணியாற்றுவதாலேயே அவர் சிறந்தவராகிவிடுவதில்லை. அரசாங்கத்தின் உயர் பதவிகளில் அமர்ந்திருப்பதாலேயே ஒருவர் ஆளுமையாகிவிடுவதில்லை. அவர் அப்பணியின் வழியாக வரலாற்றில் நிலைக்கக்கூடிய எத்தகைய செயலைச் செய்துள்ளார் என்பதே முக்கியம். அவர்களே போற்றத்தக்கவர்கள்.

சை.பீர்முகம்மது

இதை ஒட்டி இன்னொரு கேள்வி வரும், அப்படியானால் நாம் செய்யும் தொழிலில் தனித்துவமான முன்னெடுப்புகளை செய்தே ஆக வேண்டுமா? எழுத்தாளர் சை. பீர்முகம்மது ஓர் குத்தகையாளார். அந்த குத்தகை தொழிலில் அவர் பொருளாதார வெற்றிகளை அடைந்திருக்கலாம். ஆனால் அதனால் அவர் வெற்றியாளரல்ல. 90களில் சோர்ந்துகிடந்த மலேசியச் சிறுகதை உலகு புத்தெழுச்சி பெற அவராற்றிய பங்கு முக்கியமானது. ‘வேரும் வாழ்வும்’ எனும் பெருந்தொகுப்பைப் பதிப்பித்து அதை ஜெயகாந்தன் வழியாக நாடெங்கிலும் அறிமுகப்படுத்தாமல் இருந்திருந்தால் அந்நிலை ஏற்பட்டிருக்காது. இன்றுமே அத்தொகுப்பு மலேசிய இலக்கிய உலகில் போற்றத்தக்க மகத்தான முயற்சிதான். அதை கையில் ஏந்தும்போதெல்லாம் அவர் அத்தொகுப்பை உருவாக்க பட்ட பாடுகள் காட்சிகளாக நகரும். அவர் காலத்தில் இன்னும் ஏராளமான எழுத்தாளர்கள் உருவாகியிருக்கலாம். ஆனால் மலேசிய இலக்கியம் உள்ளளவும் சை. பீர்முகம்மது நிலைப்பார். இந்த உதாரணத்தை நான் முன்வைக்கக் காரணம் தொழிலால் பொருளாதார வெற்றி அடைபவர்கள் இன்று சமூக ஊடகங்களில் தங்களை வெற்றியாளர்களாக பிரகடனப்படுத்திக்கொள்ளும் போக்கு உண்டு; அதல்ல நான் சொல்லும் செயல். என் மனதில் அந்த பொருளாதார வெற்றிக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

அ. ரெங்கசாமி

அப்படியானால் ஒருவர் தான் ஈடுபடும் துறைக்குப் பங்களிக்கும் வகையில் கூடுதலாக ஏதேனும் செய்தே ஆக வேண்டுமா? அ. ரெங்கசாமி இலக்கியத்திற்கு எழுதுவதன்றி வேறென்ன செய்தார் எனும் கேள்வியைக் கேட்டுக்கொண்டால் இதற்கான பதில் கிடைக்கலாம். அவர் ஓர் ஆசிரியர். ஆசிரியர் தொழிலிலில் ஈடுபட்டிருக்கும்போது மாணவர்களை வைத்து நாடகங்கள் போட்டுள்ளார், தன் வட்டார பிள்ளைகள் தமிழ் இலக்கியப்பாடம் எடுக்க வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்துள்ளார். ஆனால் இவையல்ல அ. ரெங்கசாமி. அவர் இடைவிடாது எழுதினார். ஒரு நேர்காணலில் சொன்னார், ”நான் தன்னந்தனியாக இந்த புறநகரில் அமர்ந்துகொண்டு நாவல்களை எழுதிக்கொண்டிருந்தேன். என்னை யாருமே கண்டுக்கொண்டதில்லை. பெயர் பெற்ற பல எழுத்தாளர்கள் என் பெயரைக்கூட சொன்னதில்லை. இந்த வல்லினம் குழு என்னை எப்படிக் கண்டுப்பிடித்தனர் என்பது எனக்கே தெரியவில்லை.”

சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

அ. ரெங்கசாமி தன் பணியை ஒரு தவம்போல செய்துக்கொண்டிருந்தார். அவர் தன்னை யார் அங்கீகரிப்பார்கள் என காத்திருக்கவில்லை. அதற்காக அவர் ஏங்கியிருக்கவில்லை; அதன் பொருட்டு அவர் நாவல்களை எழுதவும் இல்லை. மலேசியத் தமிழர்களின் வாழ்வை புனைவுகளாகப் பதிவு செய்ய நினைத்தார், அதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தார். தன் கருமமே கண்ணாயினார். ஓர் ஆன்மிகவாதிக்கும் ரெங்கசாமிக்கும் நீங்கள் என்ன பேதத்தைப் பார்த்துவிட முடியும்? சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி ஒருமுறை சொன்னார், அவரது தொடக்கக்காலத்தில் வேதாந்தத்தை மலேசியாவில் உள்ள நகரங்கள் தோறும் பகிர்வதே அவரது பணி. அதற்காக அவர் ஊர் ஊராகச் சென்றார். மலேசியாவில் உள்ள சிறிய தோட்டங்களிலெல்லாம் நுழைந்தார். தன்னை யார் பின் தொடர்கின்றனர் என்பது குறித்து அவரது முதன்மை கவனம் இல்லை; தன் வாழ்நாளில் தனக்கிட்டுகொண்ட கடமையை 12 ஆண்டுகள் செய்தார்; செய்துக்கொண்டிருக்கிறார். இந்த கர்ம சிரத்தைதானே ரெங்கசாமியிடமும் இருந்தது.

அ. ரெங்கசாமி செய்தது பெரும் பணி. ஆனால் அவர் கூடுதலாகப் பங்களித்து இலக்கியச் சூழலை நகர்த்து இயக்கமாகச் செயல்படவில்லை. அவர் எழுத்தே அவர் ஆற்றிய பணி. ரெங்கசாமி காலத்தில் பிற எழுத்தாளர்கள் இருந்திருந்தாலும் அவரே முதன்மையானவர். அதற்கு அவர் ஆக்கங்களே ஆதாரனமானவை.

ஜெயமோகன்

சிலர் இதில் இரு நிலைகளிலும் பங்களிப்பார்கள். அவர்களே ஒரு காலத்தின் மகத்தான ஆளுமையாக மாறுகிறார்கள். நிச்சயமாக இங்கு ஜெயமோகனன்றி நான் வேறு யாரை உதாரணம் சொல்ல முடியும். அவர் இடைவிடாது உருவாக்கியுள்ள அசாதாரண படைப்புக்கு ஈடானவை அவர் இலக்கிய முன்னெடுப்புகள். கொஞ்சம் தேடி வாசித்தால் அதன் மகத்துவங்களை அறியலாம்.

இவ்வளவு சொல்வதற்கு காரணம் உண்டு. நீங்கள் குறிப்பிடும் ஒருவர் செய்துள்ள பணியோடு இவ்வளவு நேரம் நான் சொன்னவற்றை ஒப்பிட்டுப்பாருங்கள். அச்செயலுக்குப் பின்னால் உள்ள அவசரம், வணிக நோக்கம், அரசியல் நோக்கம் என எல்லாமே புலப்படும். இதை கவனித்து அறியும் ஆழ்ந்த பார்வை ஒருவருக்கு இல்லை என்றால் முதலில் அவரை நான் எழுத்தாளராகவே மதிப்பதில்லை; அவருமே சந்தர்ப்பவாதி. இதுபோன்ற அட்டைகளிடம் ஒட்டிக்கொண்டிருந்தால் தனக்கும் ஏதும் எஞ்சியது மிஞ்சியது கிடைக்கும் என உடன் செல்பவர் என்பதே என் மதிப்பீடு.  

நான் சொல்வது கடுமையாக இருக்கலாம். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். ஒருவருக்கு அரசியல் தலைவர்களோடு நெருக்கம் கொள்ள வாய்ப்பு வேண்டும். அதன் வழியாக சில நன்மைகளை அடைய வேண்டும். அப்படி எண்ணுபவரின் கையில் இருக்கும் கச்சா பொருள் மொழி. மொழியை நேரடியாக விற்பனை செய்ய முடியாது, எனவே அதை இலக்கியமாக்க வேண்டும். தனக்கு இலக்கியம் வராது. எனவே இலக்கியவாதிகளை அழைத்துவந்து அதை நிகழ்த்துவதாக பாவனை காட்ட வேண்டும். அப்படி அழைத்துவரும் இலக்கியவாதிகளால் தன்னிடமே மாற்றம் நிகழாதபோது இளம் இலக்கிய ஆர்வளர்களிடமும் எவ்வித மாற்றமும் நிகழ வாய்ப்பில்லை என அறிந்திருந்தாலும் உடனடியாக தன் முயற்சி பலன் கிடைத்ததாகக் காட்ட வேண்டும், அப்படி காட்டுவதற்குப் பின்னால் பொருளாதார அடைவுகள் உண்டு. இப்போது தன்னை நம்பி இருக்கும் சிலரை தூண்டில் புழுக்களாகப் பயன்படுத்தி தூண்டிக்காரன் நன்மை அடைந்துகொள்ளலாம். மீனிடம் மெல்லிய கடிபடும் புழுக்கள் அதை ‘கிச்சு கிச்சு’ என நினைப்பதில் வியப்பில்லை. அதை உணரும் ஆற்றல் இருந்தால் ஏன் அவர்கள் அங்கே சென்று சிக்குகிறார்கள்; பாவம்.

பசுபதி

நண்பரே, உங்களுக்கு இன்னும் புரியாமல் இருக்கலாம். சிக்கல் இல்லை. ஆனால் நீங்கள் செய்யக்கூடாதது சில உள்ளன. அதில் முதன்மையான அவசியமற்ற வேலைகளால் உங்களை நிரப்பிக்கொள்வது. நான் ஆசிரியர் துறையில் அப்படி சிலரைப் பார்த்துள்ளேன். பரபரப்பாக இருப்பார்கள். அதிகாரிகளிடம் நற்பெயரைப் பெற என்னென்னவோ செய்வார்கள். ஆனால் அவர்களிடம் நீங்கள் பேசினால் எல்லார் மீதும் புகார்கள் இருக்கும். தான் செய்யும் செயலின் மீது பெரும் சலிப்பு இருக்கும். இந்தச் சலிப்புடன் இடைவிடாது காரியம் ஆற்றுபவர்களால் எதையும் மாற்ற முடியாது. அவர்கள் பெரும் இயந்திரத்தின் பல்சக்கரம் மட்டுமே. எனவே ஒரு செயலை செய்யும்போது அது உங்களை நிறைவு படுத்துகிறதா என்பதா முக்கியம். நிறைவடைய செய்வது எதுவோ அதுவே நீங்கள் ஆற்றும் செயல்.

நான் என் வாழ்நாளில் கடைபிடிக்கும் பண்பு ஒன்று உண்டு. நான் ஒரு சமூகத்தில் முதன்மையானவர்கள் என நினைப்பவர்களின் பெயரை ஒருபோதும் உச்சரிக்காமல் இருந்ததில்லை. எந்த பொது உரையாடலிலும் ஜெயமோகன், பசுபதி எனும் பெயரை நான் குறிப்பிடாமல் விட்டதில்லை. இந்தக் கட்டுரையில் கூட சுவாமி பிரம்மானந்தா, பி. எம். மூர்த்தி, அ. ரெங்கசாமி, சை. பீர்முகம்மது என சிலர் பெயர்கள் தன்னிச்சையாகவே வந்து விழுகின்றன. அதுபோல எவ்வூர் சென்றாலும் பெரும் செயலாற்றிவர்களைச் சென்று காண்பதைக் கடமையாகவே கொண்டுள்ளேன். உதாரணமாக, சிங்கைக்குச் சென்றால் ஐயா அருண் மகிழ்நன், பி. கிருஷ்ணன் போன்றவர்களை சந்திப்பதன் வழியாகவே என் சக்தியைத் திரட்டிக்கொள்கிறேன்.

அருண் மகிழ்நன்

ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? நீங்கள் ஏன் கோயிலுக்குச் செல்கிறீர்கள்? ஒரு உன்னதான வடிவத்தின் வழியாக அரூபமான ஆற்றலை உங்களுக்குள் உருவாக்கிக்கொள்ள அல்லவா? இலக்கியவாதிக்கும் அதுதான். நான் என் சக்தியை பெரும் செயல்கள் செய்த ஆளுமைகளைச் சந்திப்பதன் வழியாக அவர்கள் குறித்து எழுதுவதன் வழியாக அவர்களை சமூகத்தின் முன் வைத்து மீண்டும் மீண்டும் பேசுவதன் வழியாக அந்த ஆற்றலை அடைகிறேன். இதனால் அவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. அவர்கள் பாராட்டுகளைக் கடந்தவர்கள். நானே இதனால் பலனடைகிறேன். அவர்களின் நேர்மறை ஆற்றலை எனக்குள் பெருக்கிக்கொள்கிறேன்.

பி. கிருஷ்ணன்

நீங்களும் அதுபோன்றவர்களைச் சென்று பாருங்கள். தன் வாழ்நாளை ஒரு நோக்கத்துக்காக அர்ப்பணித்து அதன் பொருட்டு உண்மையாக உழைக்கும் ஆளுமைகளைத் தேடிச் செல்லுங்கள். அவர்களின் கரங்களைப் பற்றிக்கொள்ளுங்கள். செயல் புரியும் ஆற்றலை அவர்களின் ஆசி வழியாகவே அடைவீர்கள். எனவே நீங்களும் செயல் புரிபவராக மாறுவீர்கள். அப்போது இந்த கசடுகளின் மலினச் செயல்களுக்குப் பின் உள்ள நோக்கம் உங்களுக்குப் புரியவரும்.

(Visited 192 times, 44 visits today)