இன்பத்திரள்கள் அனைத்துமே நான்

நண்பர்கள் அறிந்ததுதான், புத்தாண்டுதான் நான் கொண்டாடும் முதன்மையான தினம். எனக்குத் தமிழ்ப் புத்தாண்டு இந்துப் புத்தாண்டு என எதுவும் இல்லை. அதனால் அது குறித்த குழப்பங்களும் இல்லை. பிற பண்டிகைகளும் அப்படித்தான். தீபாவளி, பொங்கலுக்கு விடுப்புக் கிடைப்பதால் அந்நாட்களைக் குடும்பத்துடன் கழிக்கிறேன். சுவையாகச் சமைத்து வைத்தால் சாப்பிடுகிறேன். என்னைச் சுற்றி உள்ளவர்களின் மகிழ்ச்சிக்காக என்னை அச்சூழலுக்கு ஏற்ப ஓரிரு நாட்கள் மாற்றி வைத்துக்கொள்கிறேன். மற்றபடி ஒரு வருடத்தில் நாள் முழுவதும் பண்டிகை எனும் குதூகலத்தில் இருப்பது வருடத்தின் முதல் தினத்தில் மட்டும்தான்.

அந்நாளில் நான் எனக்குள் அதிகம் உரையாடிக்கொள்கிறேன். என் தவறுகளைத் திருத்திக்கொள்ள எனக்கே வாய்ப்புக் கொடுத்துக்கொள்கிறேன். தோல்விகளைப் பார்த்து ஒன்றும் தாமதமாகிவிடவில்லை மீண்டும் முயலலாம் என எனக்கே நான் சொல்லிக்கொள்கிறேன். அவமானங்களை வாழ்வில் இயல்பென எடுத்துக்கொள்ள முயல்கிறேன்; முடிந்தால் அதை நகைச்சுவையாக்கி விடுகிறேன். தீங்கிழைத்தவர்களை மன்னித்துவிட்டதாக எனக்குள் உறுதி செய்துக்கொள்கிறேன். சில செயல்களுக்காக என்னை நானே பாராட்டியும் கொள்கிறேன். அதற்கு அடையாளமாக புதிய உடைகளை வாங்கி அணிந்துகொள்கிறேன்.

புதிய ஆண்டு எனக்கு அவ்வளவு முக்கியமானது. அது என்னைப் புதுப்பிக்கிறது. எதிர்மறையால் என்னைச் சூழ்ந்துள்ள நசநசப்புகளை பாம்பின் சட்டைப்போல சத்தமில்லாமல் கழற்றிபோட்டுவிட்டு நகர எனக்கு புதிய ஆண்டு அவசியமாக உள்ளது.

யோசித்துப் பார்த்தால் புத்தாண்டு பிறக்கும் முன் நான் எண்ணி மனதில் தொகுத்துக்கொள்ளும்  விசயங்கள் பெரும்பாலும் இலக்கியம் சார்ந்தவையாகவே உள்ளா. நான் என் மனதில் எழுத்தாளனாக மட்டுமே இருக்கிறேன். எனவே அதில் நிகழ்த்தியவைகளை நிகழ்ந்தவைகளை எண்ணிப்பார்ப்பது மட்டுமே என்னை அந்நாளில் உற்சாகமடையச் செய்யும். மேலும் அதுவே அடுத்த ஆண்டில் செயல்படுவதற்கான தீவிரத்தையும் கொடுக்கும்.

வல்லினம் இதழ்கள்

நான் ஒவ்வோர் ஆண்டும் நினைத்து மகிழ்ச்சியடைவது வல்லினம் இதழ்கள் குறித்துதான். முதல் காரணம் இதுவரையிலும் அதன் பணி எவ்வளவு சவாலானதாக இருந்தாலும் சோர்வளித்ததில்லை. 2007இல் முதல் இதழை உருவாக்கியபோது எத்தனை உற்சாகமாகச் செயல்பட்டோமோ அதற்குச் சற்றும் குறைவில்லாமல் இன்றும் வல்லினம் வெளிவருகிறது. எனவே அதன் படைப்புகளின் தரத்தில் முழுமையான கவனம் வைத்து தேர்வு செய்கிறோம். சடங்காகவோ, சலிப்பாகவோ ஒரு படைப்பையும் அணுகியதில்லை. எனவே, தொடர்ந்து இளைஞர்கள் அதில் எழுத ஆர்வம் காட்டுகின்றனர். அவர்கள் படைப்புகள் ஆசிரியர் குழுவால் வாசிக்கப்படுகின்றன என்பதும் அக்கதைகளை மேம்படுத்த சில பரிந்துரைகள் செய்யப்படுகின்றன என்பதும் தேர்வு பெறாதபோதும் முறையான காரணம் சொல்லப்படுகிறது என்பதும் அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதாக உள்ளது.

மிகச்சரியாக மாதம் பிறந்தவுடன் வல்லினம் பதிவேற்றம் கண்டுவிடும். இன்னும் சரியாகச் சொல்வதென்றால் மலேசிய நேரப்படி 12.01க்கு வாசிக்கத் தொடங்கிவிடலாம். அத்தனை லட்சம் பேர் அதை வாசிக்கக் காத்திருக்கவில்லை என அறிவோம். ஆனால் எங்கள் இதழை மிகுந்த நம்பிக்கையுடன் நாங்கள் நடத்துகிறோம், அதன் மீது நாங்கள் பெருமதிப்பை வைத்துள்ளோம் என்பதற்கு அதன் பதிவேற்றத்தில் நாங்கள் கொண்டுள்ள அக்கறையே சான்று. ஜெயமோகன், பாவண்ணன், பெருந்தேவி, சு. வேணுகோபால், பெருமாள்முருகன் என தமிழின் முக்கிய எழுத்தாளர்களின் சிறுகதைகளும் நம்பிக்கைத்தரக்கூடிய பல இளம் எழுத்தாளர்களின் சிறுகதை, கட்டுரைகளும் 2025 வல்லினம் இதழ்களில் இடம்பெற்றன. வல்லினம் இன்று மலேசியத் தமிழ் நவீன இலக்கியத்தின் முகம் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது என்றே நம்புகிறேன். தமிழ் இலக்கியத்தில் வல்லினம் தனித்த இடத்தை அடைய இப்படி பல எழுத்தாளர்களின் பங்களிப்பே காரணம். நல்ல படைப்புகள் வல்லினத்தில் இருக்கும் எனும் நம்பிக்கை பரவலாகி உள்ளது.

வல்லினம் செயல்பாடுகள்

வல்லினம் இலக்கியக் குழு வழியாக இம்முறை மூன்று முக்கிய நிகழ்ச்சிகளை நடத்தினோம்.

முதலாவது,  ஜூன் 1ஆம் திகதி நடந்த முக்கோணக் கதைகள் எனும் நிகழ்ச்சி. வல்லினம், ‘பென் மலேசியா’ இணைவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ், சீனம், மலாய் ஆகிய மும்மொழி இலக்கியங்களுக்கு இடையிலான உரையாடலாகவும் எழுத்தாளர்களின் ஒன்றுகூடலாகவும் இவ்விழா வடிவமைக்கப்பட்டது. மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடு செய்யப்பட்டதுடன், அதனையொட்டி கலந்துரையாடல் அமர்வும் நடைபெற்றது.

கடும் உழைப்பைக் கோரிய நிகழ்ச்சி இது. மூன்று நூல்கள் இந்த நிகழ்ச்சியில் வெளியீடு கண்டன. மலாய் எழுத்தாளர் எஸ்.எம். ஷாகீரினின் 10 கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு ‘விண்ணிலிருந்து விழுந்த பெண்’ எனும் தலைப்பில் தமிழில் எழுத்தாளர் அ.பாண்டியன் மூலம் மொழிபெயர்க்கப்பட்டது. அதோடு, சீன மொழியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ‘செல்சி நீலம்’ எனும் சிறுகதைத் தொகுப்பும் இந்நிகழ்ச்சியில் வெளியீடு கண்டது. மேலும், மலேசியத் தமிழர்களின் வாழ்வியலைச் சித்தரிக்கும் பத்துக் கதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு ஒன்று மலாய் மொழியில் ச.சரவணன் மூலம் மொழிபெயர்க்கப்பட்டு வெளியீடு கண்டது.

உண்மையில் இது ஒரு வரலாறு. நூல்களின் அடிப்படையில் மலேசியாவில் மூவின எழுத்தாளர்களின் ஒன்றுக்கூடல் இதுவரை நடந்ததில்லை. கிட்டத்தட்ட அனைவருமே மன எழுச்சியில் இருந்தனர். அந்நிகழ்ச்சியின் தேவையை பலரும் அறிந்து உரையாற்றினர்.

ஒரு முயற்சி ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறதா இல்லையா என்பதை அது உருவாக்கும் தொடர் அலைகளின் வழியாக அறியலாம். அப்படி இந்த நிகழ்ச்சியில் வெளியீடு கண்ட தமிழ்ச் சிறுகதைகளின் மலாய் மொழியாக்கம் குறித்து ஜூன் 21ஆம் திகதி ‘இல்ஹாம் கெலரியில் உரையாடப்பட்டது. பிற இன எழுத்தாளர்கள் ஐவர் அந்தத் தொகுப்பிலுள்ள கதைகளை வாசித்து தங்கள் பார்வைகளை முன்வைத்தனர். அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மரினா மஹாதீர் பரிந்துரைக்க, காயத்திரி அவர்கள் செப்டம்பர் மாதம் நடைபெற்ற ‘Made in KL’ எனும் நிகழ்ச்சியில் அத்தொகுப்பில் உள்ள சிறுகதையை பொதுமக்கள் மத்தியில் வாசித்தார். இவ்வாறு ஒரு முயற்சி பல தரப்புகளைச் சேர அம்முயற்சியின் தரம் மட்டும் காரணமாக இருப்பதில்லை; செயலின் தூய நோக்கம் தன் இலக்கைச் சென்று சேரத் துணை நிற்கிறது என்பதே என் அனுபவம்.

காயத்திரி

டிசம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற வல்லினம் விருது விழா எங்களின் இரண்டாவது நிகழ்ச்சி. இலக்கியம், கலை, பண்பாட்டுக்கு பெரும் பங்காற்றிய ஆளுமைகளுக்கு வழங்கப்படும் வல்லினம் விருது இவ்வாண்டு மேனாள் தேர்வு வாரிய அதிகாரியும் கல்வியாளருமான பி.எம்.மூர்த்திக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டிலிருந்து எழுத்தாளர் பெருமாள் முருகன் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்திருந்தார்.

மலேசியப் பொதுத்தேர்வுகளில் படைப்பிலக்கியத்தை அறிமுகம் செய்தது தொடங்கி எஸ்.பி.எம் தமிழ் இலக்கியப் பாடம் எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க பெரும் பங்காற்றிய பி.எம் மூர்த்தியைச் சிறப்பு செய்யும் வகையில் வல்லினம் விருது வழங்கப்பட்டது. விருது தொகையான 5,000 ரிங்கிட்டை சுவாமி பிரம்மானந்தாவும் நினைவு கேடயத்தை எழுத்தாளர் பெருமாள் முருகனும் எடுத்து வழங்கினர். வருடத்தின் இறுதியில் உற்சாகம் தரும் நிகழ்ச்சியாக வல்லினம் விருது விழா அமைந்தது.

மூன்றாவது, வல்லினம் ஏற்பாடு செய்திருந்த ‘இளையோர் குறுநாவல் போட்டி’. இப்படி ஒரு போட்டி நடைபெறுவது மலேசியாவில் இதுவே முதன்முறை. பதினாறு குறுநாவல்கள் போட்டிக்கு வந்துள்ளன. அத்தனையும் இளைஞர்களால் எழுதப்பட்டவை. பரிசளிப்பு விழா 2026இல் நடைபெறும். இதில் தரமான குறுநாவல் கிடைத்தால் அதை நூலாக்கவும் திட்டமுண்டு.

நூல் பதிப்பும் பயிலரங்கும்

வல்லினம் விருது விழாவை ஒட்டி பி.எம்.மூர்த்தி வாழ்வைச் சொல்லும் ‘கனவுகளைத் துரத்திச் சென்றவனின் கதை’ நூலையும் வல்லினம் வழி பதிப்பித்து வெளியீடும் செய்தோம். அத்துடன், நிகழ்ச்சிக்காக சிறப்பு வருகை புரிந்திருந்த எழுத்தாளர் பெருமாள் முருகனின் புனைவு – அ-புனைவு தொடர்பான இரண்டு நாள் பயிலரங்குகளையும் வல்லினம் வழியாக ஏற்பாடு செய்திருந்தோம்.

‘கனவுகளைத் துரத்திச் சென்றவனின் கதை’ நூல் தயாரிப்பு அதிக உழைப்பைக் கோரியது. ஆனாலும் இளம் படைப்பாளிகளின் ஒத்துழைப்பு இருந்ததால் அச்சவாலை எளிதாகக் கடக்க முடிந்தது. நூல் தரமாகவே வந்திருந்தது. வருடத்தில் வல்லினம் ஒரு நூலைப் பதிப்பித்தாலும் அது காலம் கடந்து நிற்கும் முயற்சியாக இருப்பதில் சோர்வெல்லாம் பறந்துவிடுகிறது.

இவ்வாறு மூத்த ஆளுமைகளை கௌரவிப்பது சமகால எழுத்தாளர்களின் ஆளுமை வளர பட்டறைகள் நடத்துவது புதிய எழுத்தாளர்களை உருவாக்கவும் அடையாளம் காணவும் போட்டிகள் நடத்துவது என வல்லினம் இலக்கியத்திற்கான தனது பங்களிப்பை எல்லா நிலைகளிலும் செய்தது.

தமிழாசியா

தமிழாசியாவின் சாதனை ஆண்டாக 2025ஐ சொல்லலாம். தமிழாசியா உருவானபோது அது ஒரு வணிக நிறுவனம் என கேலி செய்தவர்கள் பலர் உள்ளனர். ரூபாய்க்கு 10 காசில் ஆக மலிவாக மலேசியாவில் நூல்களை விற்பனைச் செய்தபோது பல வணிகர்களின் சாபங்களை வாங்கிக்கட்டிக்கொண்டேன். ஆனால் என் நோக்கம் மிகத் தெளிவானது. தமிழாசியா வழியாக நல்ல இலக்கிய வாசகர்களை உருவாக்க நான் விரும்பினேன். அதற்கு அவர்கள் வாசிக்கும் விலையில் நல்ல நூல்கள் ஓரிடத்தில் கிடைக்க வேண்டும். மேலும் அந்த நூல்களைக் குறித்து ஆழமான உரையாடல்கள் அவசியம்.

அவ்வகையில் இவ்வாண்டு வண்ணதாசன், ந.பிச்சமூர்த்தி, வண்ணநிலவன், நாஞ்சில் நாடன், எம்.எஸ்.கல்யாணசுந்தரம், சி.சு.செல்லப்பா, க.நா.சுப்ரமணியம், அ. மாதவன், ந.முத்துசாமி, பெருமாள் முருகன் என பலரையும் வாசித்து விவாதித்தோம். அவ்வகையில் இவ்வாண்டு நூறு சிறுகதைகள் பூர்த்தியாகியிருந்தன. தொடர்ந்து இதில் கலந்துகொள்பவர்களின் சிந்தனையும் கருத்துகளை முன்வைப்பதில் உள்ள தோரணையும்  மாறியுள்ளதே இந்த முயற்சிக்கான பலனென கருதுகிறேன்.

வல்லினம் எழுதுவதற்கான பயிற்சியை வழங்குகிறது என்றால் தமிழாசியா வாசிப்புக்கான பயிற்சியை வழங்கும் இயக்கம். நூல் விற்பனை அதில் ஒரு பகுதியே. இன்னும் அதன் செயல்பாட்டை தீவிரமாக்க வேண்டியுள்ளது என்பதை மட்டும் 2025ஆம் ஆண்டு எனக்கு உணர்த்தியது.

யாழ் பதிப்பகம்

யாழ் பதிப்பகத்தில் நான் இவ்வாண்டு அதிக அக்கறை காட்டவில்லை. 2024இல் அறிவியல் நூல் ஒன்றை வெளியிட்டதோடு சரி. அநேகமாக 2026இல் அச்சடித்த அனைத்து நூல்களையும் விற்பனை செய்து முடித்த பின்னர் யாழுக்கு சில ஆண்டுகள் ஓய்வுகொடுக்க வேண்டி வரலாம். ஆறுதலாக இம்முறை நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள 23 தமிழ்ப்பள்ளிகளுக்கு மார்ச் 8ஆம் திகதி யாழ் பதிப்பகத்தின் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. மொத்தம் 185 செட் நூல்களுக்கு சிலர் நிதி வழங்கியிருந்தனர். அதைக்கொண்டு அறிவியல் நூல் அச்சுச் செலவை ஈடுகட்டினேன். நான் செல்ல வேண்டிய பயணம் தெளிவாக உள்ளதால் யாழின் மேல் உள்ள கவனம் குறைந்தபடியே செல்கிறது.

உரைகள் – உரையாடல்கள்

இவ்வாண்டு எப்போதையும்விட அதிகமாகவே பேசிவிட்டேன் எனத் தோன்றுகிறது. ஆனால் அத்தனையும் நினைவில் நிற்கக் கூடியவை. முதலாவது ஆகஸ்டு மாதம் அமெரிக்காவில் இயங்கும் விஷ்ணுபுரம் அமைப்பு நடத்திய ‘க.நா.சு உரையாடல் அரங்கில்’ பங்கேற்றது. மலேசியாவில் மலாய் இலக்கிய அமைப்புகள்தான் இதுவரை என் படைப்புலகம் குறித்த உரையாடல்களை ஏற்படுத்தியுள்ளன. முதன்முறையாக தமிழில் அவ்வாறு விரிவாகப் பேசும் வாய்ப்பு அமைந்தது உற்சாகத்தைக் கொடுத்தது. கலந்துகொண்டவர்களின் பெரும்பாலோர் என்னை வாசித்து வந்திருந்தது நிறைவாக இருந்தது. ‘சிகண்டி’ குறித்து மலர்விழி மணியம் பேசிய உரை ஆகச்சிறந்தது. நூல் விமர்சனம் செய்பவர்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டியது.

நவம்பர் 13ஆம் தேதி சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில் சமகால தமிழ்க் கவிதைகள் குறித்த உரையாடலில் கவிஞர்கள் சுகுமாறன், சேரன் ஆகியோருடன் கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசினேன். மலேசியாவில் கவிதைப்போக்கு எவ்வளவு பின்தங்கியுள்ளது, அதன் வரலாற்றுக் காரணங்கள் என்ன என்பதை விளக்க நானுமே ஒரு தனி ஆய்வு செய்ய வேண்டியிருந்தது. இந்த உரையாடலில் நவீன கவிதைகள் குறித்த சில அடிப்படை புரிதல்களை உருவாக்க முடிந்ததில் நிறைவு ஏற்பட்டது. தனிப்பட்ட முறையில் கவிஞர் சுகுமாறனிடம் உரையாட முடிந்தது கூடுதல் மகிழ்ச்சி.

அக்டோபர் 30ஆம் திகதி நடந்த மூன்று நாள் யோக முகாமில் முழுமையாகக் கலந்துகொள்ள முடியாவிட்டாலும் சுனில் கிருஷ்ணனின் ‘குருதிவழி’ நாவல் குறித்து உரை ஒன்றை வழங்க முடிந்தது. உண்மையில் என் கவனம் முழுக்கவே அந்த நாவல் வெளியீட்டில் மட்டுமே இருந்தது. சுனில் கிருஷ்ணன் உழைப்பை சரியாக வாசிப்பின் வழியாகவே அங்கீகரிக்க முடியும் என்பதால் அதற்கான அவகாசத்தை எடுத்துக்கொண்டேன். உரை பேச்சிலும் எழுத்திலும் செரிவாகவே வெளிபட்டது. யோக முகாமில் என் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்ததை எண்ணி எனக்கே வருத்தமாக இருந்தாலும் நான் சென்ற நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றி திரும்பினேன்.

புனைவு முயற்சிகள்

மலாய் நூல் வெளியீட்டில்

இவ்வாண்டு என் புனைவுலகைப் பொருத்தவரை இறங்கு முகம் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். என் சிறுகதையோ நாவலோ வெளிவரவில்லை. ஆனால் நான் தொடர்ந்து புனைவில் ஈடுபட்டுக்கொண்டுதான் இருந்தேன். எழுதிக்கொண்டிருக்கும் ‘லீகாட்’ நாவலை இன்னும் முழுமை செய்யவில்லை. பல காரணங்கள். ஆனால் இலக்கியத்தைப் பொறுத்தவரை எந்தக் காரணத்தையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. அத்தனை சிக்கலுடனும் நான் எழுதி முடித்திருக்க வேண்டும். என் தவறுதான். 2026இல் கட்டாயம் முடிந்துவிடும். ஆனால் மொழிபெயர்க்கப்பட்ட என் சிறுகதைகள் தொடர்ந்து பிரசுரமாகிக்கொண்டிருந்தன. பிப்ரவரி 2ல் என் மலாய்ச் சிறுகதை தொகுப்பு வெளியீடு கண்டதுடன் நல்ல கவனமும் பெற்றது. தொடர்ந்து, ‘வேப்டியான்’ சிறுகதை மார்ச் மாத டேவான் சாஸ்திராவில் மலாய் மொழியில் வந்தது, அதே சிறுகதை ஆர்.எஸ்.சஹா மூலம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் கண்டு பிரசுரமானது.  அதுபோல ஆகஸ்டு ‘ஸ்வாரா’ இதழில் ‘மிருகம்’ சிறுகதை வந்தது, மலேசியாவில் டேவான் சாஸ்திரா, ‘ஸ்வாரா’ ஆகிய இதழ்கள் முதன்மையான இலக்கிய ஏடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றோடு நானும் ஒரு சீனச் சிறுகதையை மலாயில் இருந்து தமிழுக்கு மொழியாக்கமும் செய்திருந்தேன்.

பள்ளியில்

பொதுவாக நான் வேலை செய்யும் பள்ளி சார்ந்த நடவடிக்கைகள் எதையும் நான் பதிவிடுவதில்லை. ஆனால் இம்முறை அப்படி இரண்டு உள்ளன. முதலாவது,  ஜூன் 25ல் நடைபெற்ற ‘கதை கேட்கலாம்’ எனும் நிகழ்ச்சி. நான் இந்த நிகழ்ச்சியை மிகுந்த நம்பிக்கையுடன் நடத்துகிறேன். கதை கேட்கும் – சொல்லும் மரபு நம்மிடையே குறைந்துவிட்டது. ஆனால் கதை கேட்பதாலேயே குழந்தைகளுக்கு கற்பனை வளர்கிறது. அதை உருவாக்கும் ஒரு திட்டம் இது. கடந்த ஈராண்டுகளாக எழுத்தாளர்களை அழைத்து வந்து இந்த அங்கத்தை நிகழ்த்தி வருகிறோம்.

கதை கேட்கலாம்

இரண்டாவது, மாணவர்களைக் கொண்டு நான் இயக்கிய மேடை நாடகம். மேடை நாடகம் இயக்குவதில் எனக்கு ஆர்வம் உண்டு. ஆனால் அதை முதன்மையான பணியாகக் கருதாததால் வளர்த்தெடுக்கவில்லை. இம்முறை நான் இயக்கிய நாடகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முக்கியமாக இந்த நாடகத்தின் வழியாக ஆர்.எச்.நாதனை மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கவனப்படுத்த முடிந்தது. மாணவர்கள் திறன் வெளிப்பட்டதில் மகிழ்ச்சியாக இருந்தது.

மரணங்கள்

அ. ரெங்கசாமி

இவ்வருடம் எனக்கு மிக நெருக்கமானவர்கள் இருவரின் மரணம் நிகழ்ந்து கொஞ்சம் அசைத்துப்பார்த்துவிட்டது. முதலாவது ஜனவரி 13ஆம் திகதி அ. ரெங்கசாமி அவர்களின் மரணம். ஏற்கெனவே மனத்தில் எங்கோ ஒரு மூலையில் சீண்டிக்கொண்டே இருந்ததுதான். அதற்கு முக்கியக் காரணம் தன் மரணத்திற்கு முன் என்னைச் சந்திக்க வேண்டுமென விரும்பினார் ரெங்கசாமி. தன் மனத்தில் உள்ள மூன்று கதைகளை என்னிடம் கூறியவர் அதை நான் எழுத வேண்டும் என்றார். தொண்ணூறு வயது கடந்த ஒருவரின் மனத்தில் நான் நம்பிக்கைக்குரிய எழுத்தாளனாக அமர்ந்துள்ளது எவ்வளவு பெரிய ஆசி. செய்தியைக் கேள்விப்பட்டு அன்று இரவே சென்றேன். ஒருமுறை அவர் நேர்காணலில் சொன்னார், ”நான் ஒரு மூலையில் அமர்ந்து யாருக்கும் தெரியாமல் எழுதிக்கொண்டிருந்தேன். இந்த வல்லினம்காரங்க என்னை எப்படிப்தான் கண்டுப்பிடிச்சாங்களோ தெரியல.” இந்த வரியை நினைத்துப்பார்க்கும் போதெல்லாம் இன்னும் அப்படி நான் கண்டுபிடிக்காத எழுத்தாளர்கள் யாரேனும் இருப்பார்களா, அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படாமல் உள்ளதா என்றே தோன்றும். அதை நினைக்கும்போது அச்சமாகத்தான் உள்ளது.

மஹாத்மன்

அடுத்தவர் மஹாத்மன். அவர் இறந்து இரண்டு வாரங்கள் கழித்தே எனக்குத் தெரிய வந்தது. எனக்கு மட்டுமல்ல, அவர் மனைவி, அண்ணன் என அனைவருக்குமே அப்போதுதான் தெரிந்தது. மூளையில் ஏற்பட்ட கட்டியால் மஹாத்மன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரது அறுவை சிகிச்சைக்காக வல்லினம் வழியாக பத்தாயிரம் ரிங்கிட் சேகரித்து வழங்கினோம். அவரது உயிரை மீட்க முடிந்ததே தவிர நினைவுகளை மீட்க முடியவில்லை. எஞ்சிய காலத்தை நினைவுகள் இல்லாமல் ஓர் அரசு பராமரிப்பு இல்லத்தில் கழித்தார். அவர் மரணத்துக்குப் பின் அவர்களே அவருக்கான இறுதி காரியங்களைச் செய்துள்ளனர்.

பயணங்கள்

கடந்த ஆண்டே சொன்னதுதான். இவ்வாண்டு பயணங்கள் என எதையும் திட்டமிடவில்லை. ஆனால் உள்ளூரிலேயே கேமரன் மலைக்கும் லங்காவித் தீவுக்கும் சென்று வந்தேன். வழக்கமான உல்லாசப் பயணங்கள். நண்பர்களுடனும் குடும்பத்துடனும் கழிந்தன.

2026

அடுத்தடுத்துச் செய்வதற்கான ஏராளமான திட்டங்கள் இருந்தாலும் முதன்மையானது என் நாவல். அதை எழுதி முடிக்க வேண்டும். வேறு எதையும்விட அது முக்கியம். என்னை நான் மீட்டுக்கொள்ள, உலகியல் சங்கடங்களில் இருந்து ஒளிந்துகொள்ள, இன்னும் கொஞ்சம் மேன்மையுள்ளவனாக மாற நான் நாவல் எழுதி முடிக்கவேண்டும். மனதில் இருக்கும் இருளில் வெளிச்சங்களைப் பாய்ச்சி மீள வேண்டும். இந்த வாழ்க்கை இன்பமாக வாழ வழங்கப்பட்டது. இன்பம் என்பது புறத்தில் உள்ளவற்றை என் மீது வாரிப் போட்டுக்கொண்டு உடலையும் மனதையும் நிரப்பிக்கொள்வதில் இல்லை. அது விடுதலை அடைதல். பிறருக்கு நம்மால் இயன்றதை அறிவாகவும் கலையாகவும் செயலாகவும் சேவையாகவும் வழங்கிக்கொண்டே இருப்பதில் அந்த விடுதலை கிடைக்கும் என நம்புகிறேன். அதுவே இன்பமாக வாழ வழி.

பிற:

2017: நானெனும் பொய்யை நடத்துவோன் நான்

2018: கண்டநற் சக்திக் கணமெலாம் நான்

2019: இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்!

2020: அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்

2021: ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்

2022: வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்

2023: மண்ணில் திரியும் மரமெல்லாம் நான்

2024: காற்றும் புனலும் கடலுமே நான்

(Visited 380 times, 3 visits today)