கண்டநற் சக்திக் கணமெலாம் நான்

01இதுவும் மற்றுமொரு நாள்தான் எனும் தத்துவத்தையெல்லாம் நான் புதிய ஆண்டின் தொடக்கத்தில் சட்டை செய்வதே இல்லை. நான் இந்து புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு என எதையும் கொண்டாடுபவன் அல்ல. எந்த மத, இன பண்டிகைகளையும் விரும்புவதும் இல்லை. ஆனால் வருடத்தின் முதல் திகதியை ஒரு பண்டிகையைப்போல அவ்வளவு மெல்ல ரசித்து நகர்த்துவேன். எல்லாவற்றையும் முதலில் இருந்து தொடங்கலாம் என்றும் எல்லா கவலைகளும் தீர்ந்துவிட்டது என்றும் இனி எல்லாம் நலமாக நடக்கும் என்றும் நானே எனக்குள் சொல்லிக்கொள்வேன். புதிய சட்டை போட்டுக்கொள்வேன். அது தோலை நீக்கி புதுத்தோலை போர்த்திக்கொண்டதுபோல தோன்றும். புதிய வருடத்தின் மற்றுமொரு உற்சாகம் கடந்து சென்ற வருடத்தை முழுக்க அலசிப்பார்ப்பதில் தொடங்கும். அநேகமாக அந்த நாள் முழுவதும் அவ்வாறு கடந்தவற்றை எண்ணி அவற்றை ஒரு கனவுபோல கடப்பதிலேயே முடியும். அக்கனவு புதிய வருடத்தை கொஞ்சம் கவனமாக நகர்த்திச் செல்ல உதவக்கூடியதாக மாறும்.

எழுத்தாளர்களிடமிருந்து தொடங்குதல்

Jeyamohan2018இன் முதல் திகதியே எனக்கு உற்சாகமாகத்தான் தொடங்கியது. ‘பிறிதொரு வாழ்த்து‘ எனும் தலைப்பில் ஜெயமோகன் எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார். அதில் ‘உங்களிடம் குறைவது ஒன்றுண்டு, புனைவிலக்கியம் சார்ந்த கவனம். மொழி என்பது எழுதியெழுதி அடையப்படுவது. ஒருமுனையில் எளிமையும் கூர்மையும். மறுமுனையில் செறிவும் அழகும். இரண்டும் அமைகையிலேயே அது புனைவுமொழியாகிறது. நிரந்தரமாக அச்சவாலில் இருந்துகொண்டிருப்பவனே புனைவிலக்கியவாதி.’ என தனது விமர்சனத்தை உள்ளடக்கி வாழ்த்தாகச் சொல்லியிருந்தார். 2006இல் அவரைச் சந்தித்தது முதல் சுருக்கமாகவும் கூர்மையாகவும் அவர் வைக்கின்ற விமர்சனங்கள்தான் என்னைப் பல சமயங்களில் செதுக்கியுள்ளன.

குரு என்பவர் கற்றுத்தருபவர் அல்ல; செய்து காட்டுபவர். செயல்களைப் பார்த்து உனக்கான லாவகத்தை உருவாக்கிக்கொள் என்பவர். தேவைப்படும் இடங்களில் மிக மிக குறைவான சமிக்ஞை மொழிகளின்வழி திருத்த முயல்பவர். கீழ்ப்படிதலை எதிர்பார்க்காமல் தன்னுடன் முரண்பட்ட கருத்துகளைக் கொண்டிருந்தாலும் நட்பு பாராட்டுபவர். இந்தக் குணங்கள்தான் பல இளம் படைப்பாளிகள் ஜெயமோகனைச் சென்று சேர காரணங்களாக உள்ளன. ஜெயமோகனின் அந்த வாசகத்தை நான் திரும்பத் திரும்ப வாசித்தேன். விளைவாக என்னையே நான் சோதித்துக்கொள்ள  ஜனவரி – போயாக், பிப்ரவரி – யாக்கை, மார்ச் – பேச்சி, ஏப்ரல் – வெள்ளை பாப்பாத்தி என ஒவ்வொரு மாதமும் சிறுகதைகள் எழுதினேன். அதில் ‘யாக்கை‘ சிறுகதை குறித்து ஜெயமோகனிடமிருந்து பாராட்டு வந்து வருடத் தொடக்கத்தையே கொண்டாட்டமாக்கியது.

13ஜூன் மாதத்தில் ‘போயாக்’ எனும் தலைப்பிலேயே புதிய எட்டுக் கதைகளைத் தொகுத்து எழுத்தாளர் சு.வேணுகோபால் அவர்களிடம் தயங்கித் தயங்கி முன்னுரை கேட்டுப் பெற்றபோது மேலும் உற்சாகம். நாம் நேசிக்கும், நாம் பிரமிக்கும் ஒரு எழுத்தாளரிடமிருந்து கிடைக்கும் பாசாங்கற்ற விமர்சனம்  இலக்கியத்தின் இன்னும் பெரிய சவால்களை எதிக்கொள்ளும் வல்லமையைக் கொடுக்கிறது. நான் எழுதிய சிறுகதைகளில் என்னை அதிகம் கவர்ந்த ‘வண்டி’ குறித்து அவரிடம் ஆக்ககரமான விமர்சனம் வந்தது. கூடவே ‘போயாக்’ சிறுகதை தொகுப்பு தமிழ் இலக்கியச் சூழலில் ஓரளவு நல்ல கவனத்தைப் பெற்றதும் கடந்த வருடத்தை குதூகலப்படுத்தியது.

எழுத்தாளர் கோணங்கியை சென்னை மற்றும் மதுரையில் சந்தித்தேன். இருமுறையும் நான் தங்கியிருந்த அறைக்கு வந்து அவரது கட்டற்ற அன்பால் நனைத்தார். எழுத்தாளர் இமையத்தை இவ்வருடமும் மதுரையில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தது.

09வேறெந்த அடையாளங்களையும்விட தன்னை ஒரு படைப்பாளியாக மட்டுமே நிறுவிக்கொள்பவர்கள், அதற்காக உழைப்பவர்கள், அவ்வாறு பிறரை உழைக்கத் தூண்டுபவர்கள், எழுத்து எனும் இயக்கத்தில் தொடர்ந்து செயல்படுபவர்கள் என் மனதுக்கு எப்போதும் நெருக்கமானவர்கள். இவர்களைச் சந்திப்பதும், கவனிப்பதும், உரையாடுவதும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும் அனுபவங்கள். தமிழ்ச் சூழலில் கசிந்துள்ள எல்லா கீழ்மைகளையும் அலட்சியம் செய்துவிட்டு அவர்கள் தொட்டிருக்கும் உயரமும் தொடர்ந்து மேற்கொள்ளும் உழைப்பும்தான் இளம் எழுத்தாளர்கள் கற்க வேண்டிய பாடம்.

ஆவணச் சேகரிப்பு முயற்சி

வல்லினம் இலக்கிய நண்பர்களுடன் இணைந்து தொடர்ச்சியாக மலேசிய நவீன தமிழ் இலக்கியத்துக்கான சில பணிகளைச் செய்யும் அதே சமயம் சில தனிப்பட்ட முயற்சிகளிலும் ஈடுபடுவதுண்டு.

08அவ்வகையில் இம்முறை மா.செ.மாயதேவன், மா.இராமையா, கோ.முனியாண்டி, அக்கினி ஆகியோரின் ஆவணப்படங்களை இவ்வாண்டு இயக்கினேன். நண்பர் செல்வம் ஒளிப்பதிவாளராக உடனிருந்து செயல்பட்டார். அவரின்றி இம்முயற்சி அசைவது சிரமமாகவே இருந்திருக்கும். இதுவரை பதின்மூன்று ஆவணப்படங்களை இயக்கிவிட்டேன். ஒரு தொகுப்பாக அதை சடக்கு தளத்தில் காணலாம். மலேசிய, சிங்கப்பூர்த் தமிழ்ச் சமூகத்தின் சொல்லப்படாத பல வரலாற்றுத் தகவல்கள் அந்த ஆவணப்படங்கள் வழி பெற முடியும்.

இந்த முன்னெடுப்பின் ஒரு கிளை முயற்சியாக ‘மீண்டு நிலைத்த நிழல்கள்’ நூலை இவ்வருடம் தொகுத்தேன். 450 பக்கங்கள் கொண்ட பெருந்தொகுப்பு. 25 ஆளுமைகளின் விரிவான நேர்காணல்கள் அடங்கிய இத்தொகுப்பின் துணையுடன் மலேசிய நவீன இலக்கிய வரலாற்று நூல் ஒன்றை புதிதாகவே எழுதலாம். ஆவணப்படம் மற்றும் நேர்காணல்களைத் தொகுக்கும் முயற்சிகள் அனைத்துமே வாய்மொழி வரலாற்றின் வழி ஆவணங்களைச் சேமித்து வைக்கும் முயற்சிதான். இதுபோன்ற முயற்சிகள் வெகுமக்களைப் பெரிதாகச் சென்று சேர்வதில்லை. அது அவர்களுக்கானதும் அல்ல. ஒருசில கட்டுரையாளர்களுக்கு இது உதவலாம். அவர்களால் இம்முயற்சியைப் புதுமை செய்ய முடியாது. அவர்கள் எளிய பயனீட்டாளர்கள் மட்டுமே.

17கடும் உழைப்பைக் கோரும் இந்த முயற்சியை நான் வருங்காலத்தை நோக்கி மட்டுமே செய்துகொண்டிருக்கிறேன்.   வருங்காலத்தில் வரக்கூடிய ஒரு ஆய்வாளனுக்கு நிகழ்காலத்தில் உள்ள ஒரு வரலாற்று ஆர்வலன் விட்டுச்செல்லும் மூலங்கள்தான் இவை. அஞ்சல் ஓட்ட வீரன் தனது கையில் உள்ள பேட்டனை இன்னொரு காலத்தில் இருக்கின்ற ஒரே ஒரு அஞ்சல் ஓட்டக்காரரிடம்தானே கொடுக்க முடியும். இதுபோன்ற முயற்சிகள் அவ்வாறானவைதான். இன்னொரு காலத்தில் வரலாற்றின் பெரும் தாகத்துடன் வரக்கூடிய ஒருவருக்கு இவையனைத்தும் பெரும் கொடைகளாக மாறும். அவர் இதை மீளாய்வு செய்வார். இதிலிருந்து இன்னொரு வரலாற்று உண்மைகளைக் கண்டடைந்து புதுமை செய்வார். பின்னர் தனக்குப் பிறகு வரக்கூடிய மற்றொரு அஞ்சல் ஓட்ட வீரருக்காக அதைப் பத்திரமாகக் கடத்துவார். இந்த நம்பிக்கைதான் என்னைப்போன்ற பலரையும் உற்சாகமாக இயங்க வைக்கிறது.

கடந்த வருடம் மூன்றாவது நூலாக எனது பத்திகளைத் தொகுத்தேன். ‘நாரின் மணம்’ எனும் தலைப்பில் அது சிறிய நூலாக வந்துள்ளது. இவ்வாறு மூன்று நூல்களும் நான்கு ஆவணப்படங்களும் என இவ்வருட இலக்கிய முயற்சிகள் மகிழ்ச்சியாகவே நகர்ந்தன.

யாவரும் பதிப்பகமும் 10 நூல்களும்

15சிங்கை நண்பர் பாண்டிதுரை மூலமாகவே ஜீவகரிகாலன் அறிமுகம். பெரும்பாலும் யாருடனாவது இணைந்து பணியாற்றும்போது என் வேகத்துக்கு ஓடி வராவிட்டால் எரிச்சலாகிவிடும். ஜீவகரிகாலனின் யாவரும் பதிப்பகத்துடன் இணைந்து 10 நூல்களைப் பதிப்பிக்கலாம் என முடிவெடுத்த தினத்திலிருந்தே எனக்கு அவரது வேகம் ஆச்சரியப்படுத்தியது. பதிப்பக வேலை என மட்டும் இல்லாமல் இவ்வருடம் கிடைத்த நல்ல நட்பு அவருடையது. தொடர்ந்து இணைந்து இயங்குவதற்கான நம்பிக்கை இந்த ஆண்டில் அவருடன் பணியாற்றிய அனுபவங்கள் வழங்கியுள்ளன.

எப்போதும் வல்லினம் முயற்சிகளில் சிலர் திரைமறைவில் பெரும் உதவிகள் செய்வதுண்டு. 2017இல் வல்லினம் 100 களஞ்சியம் உருவாகும் தருணத்தில் விஜயலட்சுமி ஒரு வாரம் விடுப்பு எடுத்து தன்னை முழுக்கவே அப்பணியில் பிணைத்துக்கொண்டார். 2018இல் கங்காதுரையின் அருகாமை பெரும் பலமாக இருந்தது. கடந்த ஆண்டு வெளிவந்த ஒவ்வொரு நூலிலும் அவரது எண்ணற்ற மணித்துளிகள் படிந்துள்ளன.

மா.சண்முகசிவா சிறுகதைகள், போயாக் சிறுகதைத் தொகுப்பு, மீண்டு நிலைத்த நிழல்கள், நாரின் மணம், ஊதா நிற தேவதைகள், கே.எஸ்.மணியம் சிறுகதைகள், அவரவர் வெளி ஆகிய ஏழு நூல்களுடன் மூன்று நாவல்கள் இம்முறை வல்லினம் – யாவரும் கூட்டணியில் நூலுரு கண்டன. தனிப்பட்ட முறையில் ஒரு வாசகனாக ரிங்கிட், மிச்சமிருப்பவர்கள், கே.எஸ்.மணியம் சிறுகதை தொகுப்பு, மீண்டு நிலைத்த நிழல்கள் ஆகிய நூல்கள் வல்லினம் பதிப்பகத்திற்குப் பெருமை சேர்த்த நூல்கள் என்பேன். நாளை வல்லினம் பதிப்பகம் இயங்காது போய்விட்டாலும் உருப்படியான சிலவற்றை நூலாகப் பதிப்பித்துள்ளேன் எனும் திருப்தி எனக்கு உண்டு.

வல்லினம் குழு

19வல்லினம் குழு மூலம் இவ்வருடம் சில முயற்சிகளை மேற்கொண்டோம். அதில் பிரதானமானது ‘சடக்கு‘ இணையத்தளம். இப்படியொரு திட்டத்தைக் கூறி நான் முதல் அடி எடுத்து வைத்தபின் அதைச் சுமந்துகொண்டு பல கிலோ மீட்டர்கள் ஓடியவர் எழுத்தாளர் விஜயலட்சுமி. அதன் அகப்பக்க உருவாக்கம் தொடங்கி, புகைப்படங்களை நேர்த்தியாகத் தொகுக்கும் பணி வரை அனைத்தையும் அவரே திட்டமிட்டு முன்னெடுத்தார். எழுத்தாளர் சை.பீர்.முகம்மது புகைப்படங்களை மூத்த படைப்பாளிகள் வீட்டில் சென்று சேகரிக்க உதவினார். சடக்கு தனது சேகரிப்புப் பணியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அடுத்ததாக 2017இல் விஷ்ணுபுரம் விருது பெற்ற எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியை மார்ச் 13இல் வல்லினம் கோலாலம்பூரில் ஏற்பாடு செய்தது. சீ.முத்துசாமியின் சிறுகதைகள், குறுநாவல், நாவல் என விரிவாக இவ்வமர்வில் பேசப்பட்டன.

அதேபோல நவம்பர் 18 – வல்லினத்தின் பத்தாவது கலை இலக்கிய விழா கோலாலம்பூரில் கொண்டாடப்பட்டது. 10 நூல்கள், 4 ஆவணப் படங்கள் வெளியீட்டுடன் எழுத்தாளர் சு.வேணுகோபால் மற்றும் பவா செல்லதுரையின் உரைகளும்  இடம்பெற்றன. எனக்குத் தெரிந்து 2018இல் மலேசியாவில் நடந்த மாபெரும் இலக்கிய விழா இதுவாகத்தான் இருக்கும்.

பயணங்கள்

1218.3.2018 முதல் 24.3.2018 வரை இலங்கைக்கு வல்லினம் குழுவுடன் பயணம் செய்தேன். மட்டக்களப்பு, யாழ்பாணம், கொழும்பு ஆகிய பகுதிகளில் மலேசிய – சிங்கை இலக்கியத்தின் சமகால முகமாக வெளிவந்திருக்கும் ‘வல்லினம் 100’ களஞ்சியம் அறிமுகம் செய்யப்பட்டது. மலேசியாவின் தரமான இலக்கிய முயற்சிகளைப் பரவலாக அறிமுகப்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட இப்பயணம் மலேசியாவில் சமகால இலக்கிய முயற்சிகளை ஓரளவு கவனப்படுத்தியது. கவிஞர் கருணாகரனுடனான உரையாடல்களும் பயணமும் மீண்டும் மீண்டும் நினைக்கத்தக்கது.

இதேபோல 16.9.2018 அன்று சென்னையிலும் 21.10.2018 அன்று மதுரையிலும் என தமிழகத்தில் கடந்த ஆண்டு வல்லினம் வெளியிட்ட பத்து நூல்களில் ஐந்து நூல்களின் அறிமுகக்கூட்டங்கள் நடந்தன. நண்பர் ஜீவ கரிகாலன் துணையுடன் தொடங்கப்பட்ட இம்முயற்சியில் ஜெயமோகன், சு.வேணுகோபால், இமையம், பவா செல்லதுரை, சுனில் கிருஷ்ணன், கவிதைக்காரன் இளங்கோ ஆகியோர் வழி நூல்கள் தமிழக வாசகர்கள் மத்தியில் பரந்த கவனத்தைப் பெற்றன. இந்தப் பயணத்தினூடே சென்னையிலும் மதுரையிலும் சில இடங்களைச் சென்று காண முடிந்தது. நண்பர்கள் சீனுவை இன்னொரு முறை அணைக்க முடிந்தது. தமிழச்சி தங்கப்பாண்டியன், ராஜகோபால், கிறிஸ்டி போன்ற தோழமைகளுடன் கொஞ்ச நேரம் உரையாட முடிந்தது.  மதுரையில் ‘கலகலப்பு வகுப்பறை சிவா’வின் தோழமை கிடைத்தது.

இவை தவிர ஜூன் மாதம் நண்பர்களுடன் ஒருநாள் சிங்கப்பூர் பயணம், பள்ளி மாணவர்களுடன் பூஜாங் பள்ளத்தாக்கிற்கும் பினாங்கில் அமைந்துள்ள மலேசிய இந்திய மரபியல் அருங்காட்சியகத்திற்கும் சென்று வந்தேன். மாணவர்களுக்கு ஓரளவு வரலாற்றுத் தெளிவை ஏற்படுத்த இப்பயணம் உதவியது. இதை பின்பற்றி வேறு சில பள்ளியைச் சேர்ந்த நண்பர்களும் வரலாற்றின் தெளிவை மையப்படுத்தி பயணத்தை வடிவமைத்தனர்.

பகாங்கில் உள்ள சுங்கை லெம்பிங் சென்று வந்தது அற்புதமான அனுபவம். மனம் கொந்தளிப்பாக07 உள்ள சமயங்களில் பூலாவ் பெசார் அல்லது பிரேசர் மட்டுமே செல்வதுண்டு. வாசிக்கும் ஒன்றும் நினைவில் தங்காதபோது மனதின் கொந்தளிப்பை ஓரளவு நானே அறிந்துகொள்வேன். இயக்குநர் சஞ்சையின் பரிந்துரையில்தான் சுங்கை லெம்பிங் சென்றேன். சட்டென 30 ஆண்டுகள் பின் சென்றுவிட்டது போன்ற ஒரு சிற்றூர். மாலையானால் சிறுவர்கள் பட்டம் விடுவதும் மீன் பிடிப்பதுமாக இருக்கின்றனர். நிதானமான மனிதர்கள், வணிகர்கள். தினமும் வானவில் தோன்றும் அருவி அங்கு பிரபலம். நான் வெளியில் எங்கும் செல்லாமல் மேகிமீ துணையுடன் துரதிஷ்டம் பிடித்த கப்பலின் கதையை வாசித்தேன். முழுக்க கண்ணாடியால் ஆன அறையில் தங்கினேன். குளிக்க ஜகூசி இருந்தது. அறைகள் தனித்தனியாக காடுகளில் உள்ளன. காட்டின் நடுவே இருப்பது போன்ற அற்புதம். சிக்கலான கிளைகள் அடர்ந்த வனத்தைப் பார்ப்பது எனக்குள் நுழைந்து சிக்கலான மனதை பார்ப்பது போன்று இருந்தது.

வருட இறுதியில் கேரளா சென்றேன். மீண்டும் ஜெயமோகனுடன் அவர் வீட்டில் சந்திப்பு. அது மின்கலத்தை சார்ஜ் செய்வதுபோல. கழுத்து நரம்பு பாதிப்பால் மூன்று வார சிகிச்சைக்குச் சென்று அதை இரண்டு வாரத்தில் முடித்து மூன்றாவது வாரம் கேராளவைச் சுற்றினேன். அங்கிருந்த ஒவ்வொரு நாளும் பயண அனுபவங்களை ‘மனசலாயோ’ எனும் தலைப்பில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தேன். அது அனுபவங்களைச் சொல்லும் நோக்கமல்ல. கலை இலக்கிய விழா ஏற்பாடு, யாழ் பதிப்பக நூல் தயாரிப்பு, மேற்கல்வி பணிகள், பள்ளிப்பணிகள் என சூடாகியிருந்த மூளையை குளிர்விக்க. எழுத்தும் வாசிப்பும் மட்டுமே மனதின் உஷ்ணத்தைத் தணிக்கும் மருந்து என எழுதி எழுதி நானே கண்டுப்பிடித்தது. அதன் வழியாகவே என்னை நான் மீட்டு புதுப்பிக்கிறேன்.

மாணவர்களுக்கான பட்டறைகள்

0124.2.2018 – மலாயாப் பல்கலைக்கழகத்தில் 500 மாணவர்களுடன் பிரமாண்டமாகத் தொடங்கியது இவ்வருடம் மாணவர்களுக்கான பட்டறை. தொடர்ந்து கேமரன் மலையில் உள்ள 8 பள்ளிகளின் யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்கும் அங்குள்ள மூன்று இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் சிறுகதைப் பட்டறையை அடுத்தடுத்து வழிநடத்தினேன். சுங்கை திங்கி, புக்கிட் பெருந்தோங், வாவாசான் துன் சம்பந்தன் , கிளேங் மேரி  (சிலாங்கூர்), லாடாங் மெந்தெரி, ஜெராந்துட் (பகாங்), கோத்தாபாரு, பெர்மாஸ் ஜெயா,  மவுண்ட் ஆஸ்தின், செகாமாட்  (ஜொகூர்) என வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் பட்டறைகளை பள்ளி நிர்வாகம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் நடத்திக் கொடுத்தேன். பெரும்பாலான பள்ளிகளுக்கு ஆசிரியர் சரவணனும் மலாய் மொழி பட்டறைக்காக உடன் வந்தது பட்டறைக்கான பயணத்தை மேலும் உற்சாகப்படுத்தியது.

யாழ் பதிப்பகம்

யாழ் பதிப்பகத்தைத் தொடங்கியபோது சில அடிப்படையான திட்டங்களை வைத்திருந்தேன். 14அவற்றில் பிரதானமானது மாணவர்களுக்கான புத்தகம் என்பது ஆசிரியர்கள் துணையில்லாமல் அதுவே ஒரு கற்பிக்கும் துணைவனாக இருக்க வேண்டும். யாழின் அனைத்து நூல்களையும் அப்படித்தான் உருவாக்க முயன்றேன். ‘Aspirasi Cemerlang Bahasa Melayu’ என்ற நூல் மூலம் அந்த நோக்கம் முழு வடிவத்தை அடைந்தது. ஆரம்பப் பள்ளி மாணவர்கள் மலாய் மொழி இலக்கணத்தை தமிழ்மொழி விளக்கங்களுடன் எளிதாகக் கற்கும் வகையில் உருவான முதல் நூல்.  224 பக்கங்களுடன் வெளிவந்து மலேசிய பள்ளிகள் முழுவதும் பெருத்த ஆதரவைப் பெற்றது.

அதேபோல யாழ் பதிப்பகம் தொடங்கியது முதலே மலிவுப் பதிப்புத் திட்டம் முயற்சி தொடங்கும் ஆவல் இருந்தது. அதுவும் 2018இல் நிறைவேறியது. யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களின் ஐந்து பாடங்களுக்கான மாதிரி வினா தாள் தொகுப்பை ஒரே நூலில் பதிப்பித்தேன். அதிக லாபம் தேவையென்றால் இந்நூலைத் தனித்தனியாகவும் பதிப்பிக்கலாம். அதாவது ஒரு நூல் 6 ரிங்கிட் என கணக்கிட்டு 30.00 ரிங்கிட் வரை விற்பனை செய்ய முடியும். (பொதுவாகச் சந்தையில் அவ்வாறுதான் விற்பனையில் உள்ளன) யாழ் நிறுவனம் முன்னெடுத்துள்ள மலிவு பதிப்புத் திட்டம், இத்தொகையைப் பாதியாகக் குறைத்துள்ளது. மலேசிய கல்விச் சூழலில் இதுவும் புதிய நகர்வுதான்.

அடுத்ததாக தரமான பதிப்பு என ஒரு நூல் அங்கீகாரம் பெறுவது, அது ஒவ்வொரு பதிப்பிலும் தனது தவற்றை திருத்தி வெளியிடுவதையும் பொருத்ததே. நூலைத் திருத்தாமல் அப்படியே அச்சிடுவதில் லாபம் அதிகம். அச்சகத்தில் புதிய ‘பிளேட்’ செய்ய வேண்டிய அவசியமில்லை. (பொதுவாக அதுவே பெரும் செலவுகளை குறைக்கும்) ஜானகிராமன் போன்ற வரலாற்றுத் தொகுப்பாளர்கள் தமது நூலை ஒவ்வொரு முறையும் இத்தகைய குறையை நீக்கியும் தகவல்களை மேம்படுத்தியுமே அச்சேற்றுகின்றனர். ‘யாழ்’ தன்னளவில் ஒரு தரமான மாணவர் பதிப்பகமாக இருக்கவே முயல்கிறது. 200 பக்க அறிவியல் நூலையும் 64 பக்க இலக்கிய விளக்க நூலையும் 2018இல் மேம்படுத்தி மீள்பதிப்பு செய்தேன்.

மாணவர்கள் அழைத்து யாழினால் பலனடைந்தோம் எனச் சொல்லும்போது களைப்புகள் மறந்து மகிழ்ச்சி தொற்றிக்கொள்கிறது.

பொது உரையாடல்

04மூன்று உரையாடல்கள் இவ்வருடம் எனக்கு முக்கியமானவை. முதலாவது, 13.5.2018இல் நடந்த ‘மலேசிய சிறுகதைகளின் போக்கு மற்றும் வளர்ச்சி’ குறித்து மலாயா பல்கலைக்கழத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்குபெற்றது. அதில் பல்கலைக்கழக மாணவர்களிடம் நவீன இலக்கியம் குறித்து சிலவற்றை பகிர்ந்துகொள்ள முடிந்தது. இரண்டாவது வசந்தம் நிகழ்ச்சியில் நடந்த ஒரு மணி நேர உரையாடல். தனியார் தொலைக்காட்சி கொடுக்காத சுதந்திரத்தை அரசு தொலைக்காட்டி வழங்கி ஆச்சரியம் ஊட்டியது. மூன்றாவதாக ‘எதிர் முகம்‘ எனும் நிகழ்ச்சிக்காக தமிழ் மலேசியா இணையத் தொலைக்காட்சி சர்ச்சையான கேள்விகளுடன் என்னை அணுகியது. அதன் வழி வாசகர்களுக்கு என் மீது இருந்த பல எதிர்மறையான எண்ணங்களைத் தெளிவுபடுத்த முடிந்ததுடன் புதிய நட்புகளும் சாத்தியப்பட்டது.

மற்றவை

வருடத் தொடக்கத்திலேயே வல்லினம் பதிப்பகத்தின் 10 நூல்கள், யாழ் பதிப்பகத்தில் 4 நூல்கள் என இரண்டு தளங்களில் செயல்பட்டதால் இவ்வருடம் குறைவாகவே எழுத முடிந்துள்ளது. ஒப்பீட்டளவில் வாசிப்பும் குறைந்துள்ளது. கலை இலக்கிய விழாவை பத்தாவது ஆண்டுடன் நிறுத்தியதும் வல்லினம் அகப்பக்கத்தை இருமாத இதழாகக் கொண்டு வருவதும் எனக்கான எழுதும் வாசிக்கும் நேரத்தையும் சேமிக்கத்தான்.

இந்த வருடம் நிச்சயம் என் நாவலை முடித்துவிடுவேன். மேலும் இருநூல்கள் பதிப்பிக்கத் தயாராக உள்ளன. எதுவாக இருந்தாலும் நாவலை முடித்த பின்தான் என எனக்குள் சொல்லிக்கொள்கிறேன். வேறு எந்தப் பணியும் நாவல் எழுதுவதற்கான மனநிலையைக் கெடுத்துவிடக்கூடும்.

2018இல் எழுத்தாளர் இராஜகுமாரன் மரணம் பேரிழப்பு. வல்லினம் அச்சு இதழ் தொடங்க உடன் இருந்தவர். கடைசியாக அவர் முகம் பார்த்து வந்தேன். அவருக்கு மட்டும் கேட்கும்படி நன்றி சொன்னேன். மாமாவுக்கு மூளையில் புற்றுநோய் கண்டுள்ளது குடும்ப சூழலில் பெரும் கவலையை படர வைத்துள்ளது. குடும்பத்தில் எனக்கு நெருக்கமானவர். நான் குழந்தையாக இருக்கும் போதிருந்தே உடன் இருக்கிறார். அவர் அண்ணனை (பெரிய மாமா) சித்தரித்து எழுதிய கதைதான் மண்டை ஓடி.

எப்படியிருந்தாலும் மனதில் குடிகொண்டுள்ள உற்சாகத்தின் துள்ளல் துளியளவும் குறைவில்லை. எப்போதுமே அது புனைவுக்கான ரசவாதத்தை தக்க வைத்துள்ளது.

மற்றபடி இந்த வருடம் நான் திட்டமிடாத எதை எனக்குக் கொடுக்கும் என்றும் எதை அகற்றும் என்றும் அறிய ஆவலாக இருக்கிறேன். அவ்வாறு திட்டமிடாததை திணிப்பதுதானே வாழ்க்கை.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

(Visited 451 times, 1 visits today)