யாக்கை

sea“ஏன் என்னைய எடுத்தீங்க சர்? வர்றவன் எல்லாம் பிலிப்பினோ, இந்தோ காரியதான் தேடுவானுங்க. இங்க கிராக்கியே இல்லாத சரக்கு நான்தான்” என்று அவள் இயல்பாகப் பேச்சைத் தொடங்கியது அவனுக்குப் பிடித்திருந்தது. முடியை இழுத்துவாரி குதிரைவால் கொண்டை கட்டியிருந்தாள். கொண்டைக்கு மட்டும் பழுப்பு நிற வண்ணம். சிலிவ்லெஸ் உடலோடு ஒட்டாதபடிக்கு மார்புகள் நிமிர்ந்திருந்தன. வெள்ளை லேகிங்ஸில்  பிட்டங்கள் ததும்பித்திமிரின. கருஞ்சிவப்பு உதட்டுச்சாயமும் நகப்பூச்சும் இல்லையென்றால் இன்னும் கொஞ்சம் அழகாக தெரியலாம் என நினைத்துக்கொண்டான். முயக்கத்தில் ஒத்த நிறம் கொண்ட ஜோடியுடன் இருக்கும்போது தனியாக இருப்பதுபோல பிரம்மை அவனுக்கு ஏற்படுவதுண்டு. ஓர் அறைக்குள் நிர்வாண தனியனாக இருப்பதென்பது அவனை அச்சமுற வைக்கும். அவன் அதிகம் பேசவில்லை. வழக்கம் போல சடங்காக “ஏன் இந்த வேலைக்கு வந்த?” என்றான். “அப்பா கடல்ல உழுந்து செத்துட்டாரு. அதான் சர்” என்றபடி உடையைக் களையத் தொடங்கியபோது அவன் பார்வையைத் திருப்பிக்கொண்டான்.

அவன் இந்த நடிப்பையெல்லாம் பல காலமாகவே பார்த்துப் பழகியிருந்தான். குடும்ப வறுமையைச் சொல்லியும் அப்பா அல்லது அண்ணன் இறந்த கதையைச் சொல்லியும் காதலனால் ஏமாற்றப்பட்டதாக மூக்கைச் சிந்தியும் பணம் பறிக்க முயல்வார்கள். சாதாரணமாக “ஓ” என்றான்.  மூன்று புறமும் கண்ணாடிகளால் சூழப்பட்ட அறையின் மங்கிய மஞ்சள் ஒளியில் அவளது தேகத்தின் வளைவுகளை  துல்லியமாகப் பார்க்க முடிந்தது. துண்டை எடுத்துச் சுற்றிக்கொண்டவள், “முதல்ல ஜகூசிக்கு குளிக்க போவமா சர்” என்றாள். ஒன்றும் பேசாமல் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். “உங்க பேக்கேஜுல ஜகூசி குளியல், சோனா, புஃபே எல்லாம் இருக்கு சார். கூட எழுபது வெள்ளி கவுண்டர்ல கட்டிட்டா எங்கூட இன்னொரு ரவுண்டும் போகலாம்” என காண்டமை காட்டினாள். ஏதோ நேரடி பொருள் விற்பனை முகவர்போல அவள் முகத்தை வைத்திருந்தாள்.

அவளைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. இதுவே சீனப் பெண்ணாக இருந்திருந்தால் முதல் புணர்ச்சியை முடித்துவிட்டு அதன் லயிப்பில் கிரங்கும் முன்  மற்றுமொரு கூடலும் உடனடியாக வேண்டுமென காம போதை கண்களில் கொப்பளிக்க இன்னொரு காண்டாமை வன்மமாகப் பொருத்தி ஆடாத நாகத்துக்கு மகுடி வாசித்திருப்பாள். பிழைக்கத் தெரியாதவள் என நினைத்துக்கொண்டு புகைவிட வசதியாக சன்னல் அருகில் போய் நின்று கொண்டான்.

கடல் தெரிந்தது. மீன் கவுச்சியும் டீசல் வாடையும் சன்னலைத் திறந்தவுடன் குப்பெனச் சூழ்ந்தன. அலையின் ஓசையோ காற்றோ இல்லாத செத்த கடல். செந்நிறத்து அந்தியை நோக்கி புகையை ஊதினான். அந்தத் தங்கும் விடுதியிலிருந்து கொஞ்சம் கரையின் மணல் பரப்பையும் அதிகமான தகரக் கூரைகளையும் பார்க்க முடிந்தது. அவள் அதுதான் தன் வீடு என ஒரு தகரக்கூரையைக் காட்டினாள். அவள் சுட்டுவதைச் சரியாக கவனித்துவிட்டதைப்போல தலையசைத்துக்கொண்டான். கொஞ்ச நேரத்திற்குப்பின் கையைக் கடலுக்குள் காட்டி அதுதான் அவள் அப்பா கடலில் இறந்தபோது பயணம் செய்த படகு என்றாள். இடவலமாக  தத்தளித்துக்கொண்டிருந்த ஒரு படகு செவ்வொளியில் பழுப்பு நிறமாகத் தெரிந்தது. பகலில் வேறு வண்ணமாக தெரியக்கூடும். கொஞ்ச நேரம் படகையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் பேக்கேஜ் ஐந்து மணி நேரம். ஏதாவது பேசி நேரத்தை ஓட்ட வேண்டி இருந்தது. அவனுக்கு அவசரமாக எதையும் செய்வதில் விருப்பம் இல்லை.
“எப்படி கடல்ல விழுந்தார்?” என்றான்.

***

இம்முறை கோபிதான் கப்பலை ஓட்டிக்கொண்டிருந்தான். கியாட்டும் கெப்பாலாவும் கஞ்சா போதையில் நண்டு வலைமேல் படுத்திருந்தனர். கடல் பயத்தைப்போக்க தொடங்கிய பழக்கம். இப்போது விடாமல் அவர்களைப் பிடித்துக்கொண்டது. போதை ஏறத்தொடங்கும்போதே “காத்து கடலுல படவு தாந்துருமாண்ணே?” என கெப்பாலா அழத்தொடங்கியிருந்தான். இன்னும் உளறல் இருந்தது. ஈத்தனுக்கு அந்தப் பழக்கம் இல்லை. அவர்களைப் போல பணம் பார்க்க கடலுக்குள் நுழையவில்லை என்பதில் அவருக்குப் பெருமை உண்டு. தனுஷ்கோடி புயலுக்குப்பின் மலேசியா வந்த அவரது அப்பா பினாங்கில் நண்டு பிடிப்பதில் பிழைப்பைத் தொடங்கி தொழில் வித்தைக்குக் கம்பத்தில் பலருக்கும் குருவாக இருந்தவர். அந்த மரியாதையில் மிச்ச சொச்சம் ஈத்தனுக்கும் கிடைத்தது. கடல் பயம் அவருக்குச் சிறுவயதிலேயே அந்நியம்.

அலைகளின் சீற்றம் அதிகம் என்பதால் மூன்று நாட்கள் கடலுக்குள் செல்லக்கூடாது என அரசாங்கம் அறிவித்திருந்தது. மூன்றாவது நாளும் கடலுக்குச் செல்லவில்லையென்றால் பிழைப்பு நாறிவிடுமென ஈத்தன்தான் அன்றைய பயணத்தை ஏற்பாடு செய்திருந்தார். கெத்தரினாவுக்கு இன்னும் ஒரு வாரத்தில் பணம் ஏற்பாடு செய்ய வேண்டும். செப்பிலி மீன்கள்  கிடைத்தால் ஒரு பருவத்துக்கான மொத்த தொகையையும் கட்டிவிடுவார்.

எதிர்பார்த்ததுபோல மலாக்கா நீரிணையில்  அலைகள் சீற்றம் அதிகமாக இல்லாதது ஈத்தனுக்கு ஆறுதலாக இருந்தது. கப்பலை ஒருவர் ஓட்டும்போது யாராவது ஒருவர் பாதுகாப்புக்கு விழித்திருக்க வேண்டும் என்பதால் அவரே அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கோபியிடம் அவர் பேசுவதில்லை. இருப்பதிலேயே அவன்தான் இளையவன். காசு சேர்ப்பதில் கெட்டிக்காரன். மிடுக்காக ஆங்கிலம் பேசத்தெரிந்ததால் நேரடியாகவே அவன் பங்கு மீன்களை நட்சத்திர விடுதிகளில் விற்றுவிடுவான்.

கெத்தரினாவை தன் முன்னாலேயே அவன் வம்புக்கு இழுப்பது ஏதோ விளையாட்டு என்றே முதலில் நினைத்திருந்தார். தனியாக வீட்டில் இருந்தவளிடம் கைலியைத் தூக்கிக் காட்டி “இந்த மீன சாப்பிடு, நானே காலேஜுக்குக் காசு தரேன்?”  என்றவனை கம்பத்துக்காரர்கள் தடுக்காவிட்டால் கொன்றே போட்டிருப்பார். அதன் பிறகு இருவருக்கும் பேச்சு இல்லை. இருவருமாக கையொப்பம் வைத்து மீன்பிடி படகை இரண்டு வருடம் காண்ட்ரேக்ட் எடுத்துள்ளதால் சேர்ந்து வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம். திருக்கை வலையை தவிர மற்ற வலைகளுக்கெல்லாம் அவன்தான் முதல் போட்டிருந்தான். பேசிக்கொள்ளாவிட்டாலும் அவரவருக்கு அவரவர் வேலைகள் தெரியும். கச்சிதமாகக் காரியத்தைச் செய்து முடித்துவிடுவர்.

கப்பலில் பயணிக்கும்போதெல்லாம் ஈத்தன் அவர் அப்பாவைப் போலவே அணியத்தின் நுனிபார்த்து அமர்ந்துகொள்வார். அவர் அப்பா  நட்சத்திரங்களை அடையாளம் வைத்து இரவுக்கடலில் திசை காட்டுவதைச் சிறுவனாக இருக்கும்போது கண்டுள்ளார்.  அப்பா கருவிகளை நம்பியதில்லை. இயற்கைதான் அவருக்கு எல்லாமுமாக இருந்தது. கோபி இருக்கும் பக்கம் திரும்பாமல் கடலையே பார்த்துக்கொண்டிருந்தார். ஆழ்கடலுக்குள் உண்டாகிய அலைகளால் நீர் செம்மண் நிறத்தில் இருந்தது. நல்ல வேட்டை என உற்சாகமானார். சிறுநீர் முட்டிக்கொண்டு வந்தது. கப்பலின் பின்புறம் நோக்கி நடந்தபோது அறையில் படகை இயக்கிக்கொண்டிருந்த கோபியைப் பார்த்து முறைத்தார். பணத்திமிர் அவன் உடல் முழுதும் திணறியது. “ஒனக்கெல்லாம் கடலு பெக்டரி, எனக்கு ஊடுடா.” என உமிழ்ந்துவிட்டு அகன்றார்.

பின்புறம் பொருள் வைக்கும் பலகைத் தடுப்பு இருந்தது. அதில் ஏறி குறியைக் கடல் நோக்கி நீட்டினார். ஒரு சிறிய அலை படகை மேலே தூக்கி கீழே அமர்த்தியபோது உற்சாகம் பிடித்துக்கொண்டது. இது நகர்ந்து சென்று கரையில் எவ்வளவு விளையாட்டு காட்டும் என நினைத்துக்கொண்டிருக்கும்போதே பெரிய அலையின் சுழிப்பில் கடலில் விழுந்தார். அவ்வாறு விழுவது இயல்பென்பதால் மூழ்கியபோது வாயில் சேமித்த நீரை உற்சாகமாக வானைப்பார்த்து ஊதி வெளிபட்டார். எதையும் அறியாமல் கப்பல் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தபோதுதான் மெல்லிய பதற்றம் தொற்றியது. எவ்வளவு கைகளை நீட்டி கத்தியும் கப்பல் நிற்கவில்லை. எப்படியும் நிற்கும் என மிதந்தபடி பார்த்துக்கொண்டிருந்தவரின் நம்பிக்கை பொய்க்கத் தொடங்கியபோது நீந்தி கப்பலைத் துரத்திச் சென்றார். அவரால் சில கிலோ மீட்டர்கள் நீந்த முடியும். எப்படியும் தான் கப்பலில் இல்லாததை உணர்ந்து தன்னைத் தேடினால் கப்பலை நிறுத்துவார்கள் என நம்பினார். விடாமல் உடலை இயக்கிக்கொண்டிருந்தார். அலைகள் அவர் வேகத்தை மட்டுப்படுத்தியபடியே கப்பலை தொலைவாக்கின. கைகள் அலுத்தபோது இனி நீந்தமுடியாதென முடிவு செய்தார். உடல் மூழ்கத்தொடங்கியது.

***

சுற்றியிருந்த துண்டை இடதுகையால் இறுக்கப்பிடித்தபடி வலதுகையை ஆட்டியே அவளால் பேச முடிந்தது. அக்குள் மயிர்கள் செழித்திருந்தன. தசைத் திரட்சியின் உறுதியைப் புஜத்தில் பார்க்க முடிந்தது. வலுவான தோள்கள். மோட்டார் கப்பல்களின் எண்ணெய் நீரை கழிவாக்குவதற்கு முன், தான் அங்குதான் குளிப்பேன் என கடலின் ஒரு பகுதியை அவனுக்குக் காட்டினாள். பின்னர் ஏதோ நினைத்துக்கொண்டவள் “குளிக்கலாமா?” என்றுக்கேட்டு ஜகூசிக்கு அழைத்துச் சென்றுவிட்டாள்.

அவன் எடுத்த பேக்கேஜ்ஜில்  ஒரு முறை புணரும் வாய்ப்பைத் தவிர வேறு எதையும் ஐந்து மணி நேரத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். கோலாலம்பூரில் இதுபோன்ற பேக்கேஜ் விலை மலிவுதான் என்றாலும் தமிழ்ப் பெண்களின் சேவை பினாங்கு தீவில்தான் கிடைத்தது.

ஜகூசியில் மல்லாக்க மிதந்து கொண்டிருந்தவளின் கண்களைப் பார்த்தான். திறப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. இறந்துவிட்டவள் போல சலனமில்லாமல் இருந்தாள். ஜகூசியின் நான்கு புறங்களிலும் பீச்சிடும் வெந்நீர் அலையினால் அவள் உடல் இடவலமாகச் சுழன்றபடி இருந்தது.  கூந்தல் விரிந்து நீர் மடிப்புகளுக்கு ஒத்திசைத்து மிதந்தது. அவன் இதுவரை நீரில் மூழ்கி இறந்து மிதந்தவர்களைக் கண்டதில்லை என்பதால் இப்படித்தான் இருக்கக்கூடும் என நினைத்துக்கொண்டான். அவள் அப்பாவின் நினைவு வந்தது.  கடலில் அருகருகே இருக்கும் சிறு மிதவைத் தீவுகள் போல மார்புகள் அவள் இருப்பை அடையாளப்படுத்தின. ஜகூசியின் பீலி பீய்ச்சும் வெந்நீரின் வேகம் அவன் விரைகளின் பின்புறம் தீண்டி அந்நேரத்து சூழலுக்கு உந்துதலைக் கொடுத்ததால் இறங்கி குளிக்காமல் வாகாக அதற்கு வழிவிட்டபடி ஓரமாகச் சாய்ந்தே இருந்தான்.

நல்ல கருமை அவள்.  கருமை என்று ஒருமையில் சொல்லமுடியாதபடிக்குத் தொடைகளில், வயிற்றில், முகத்தில் என வெவ்வேறு தொனியிலான கருமைகளால் நிறைந்திருந்தாள். கச்சையைக் கழட்டினால் வெண் சாம்பல் நிறம் வெளிப்படக்கூடும்.

வெதுவெதுப்பான ஜகூசி குளத்துக்கு மத்தியில் வந்து அவள் முகத்தில் செல்லமாக நீர் அள்ளி அடித்தான். உதடுகளை அசைத்து சிரிப்பதை உறுதிப்படுத்தினாள். மீண்டும் அடித்தபோது ஓர் ஓங்கில் உடலைத் திருப்பி தலையைத் தூக்குவதுபோல நீரில் பெரிய அலைகளை எழுப்பாமல் ஜக்கூசியின் எதிர்புறம் சென்று அவனைப்பார்த்துச் சிரித்தாள். “ரூம்புக்கு போவனுமா சர்?” என்றாள். அவள் எவ்வாறு அப்படி நீரில் மிதக்க முடிகிறது எனக்கேட்டான். அது மிகச்சுலபம் என்றவள் மீண்டும் அவ்வாறு செய்துகாட்டினாள். மூச்சை உள்ளே இழுந்து தம்கட்டச்சொல்லி அவனையும் நீரில் படுக்க வைத்தாள். அதிகநேரம் அவ்வாறு தம்கட்ட முடியாமல் மீண்டும் மீண்டும் நீரில் மூழ்கிப் போனான். ஒவ்வொருமுறை அவன் மூழ்கி மூக்கில் புகுந்த நீரால் திணறும்போது “சாரி சர்” என பதறினாள். தன்னால் முடியாது என ஒப்புக்கொண்டு அவள் திறனைப் பாராட்டினான். ” ஃபிஷர்மேன் பொண்ணு சர்.” எனக்கூறி நீரை மேல் நோக்கி அள்ளி வீசி மழையாக்கி சிரித்தாள். “பழகினா இதெல்லாம் யாரும் செய்யலாம். ஒடம்ப பலூனாக்கனும். என் அப்பா நடுக்கடலில் விழுந்தாரில்ல. இப்படித்தான் மிதந்துட்டே இருந்தாரு” என்றவளை அவன் வியப்புடன் பார்த்தான்.

***

எந்த திசையில் நீந்தினால் கரை தட்டுப்படும் என உறுதியில்லாத ஆழ்கடல். காடு போலவே கடலும் இரவானால் வேறு. அதிக அசைவிருந்தால் ஏதாவது பெரிய மீன்கள் வந்து தாக்கலாம். இனி நீந்தவும் தெம்பில்லாததால் மிதப்பதுதான் ஒரே வழி எனப்பட்டது. அது எல்லா மீனவர்களும் கற்றிருக்கும் பாடம். போன கப்பல் தன்னைக் காணாததால் இதே வழியாகத்தான்  ஜி.பி.எஸ் துணையுடன் திரும்ப வரும். அதற்கு தான் அங்கிருந்தாக வேண்டும். ஒரே நாளில் நீரோட்டம் அதிக தொலைவு தள்ளிக்கொண்டுபோக வாய்ப்பில்லை. எப்படியும்  கண்டுபிடித்து விடுவார்கள் என உடலை மல்லாக்க திருப்பி மிதக்கத் தொடங்கினார். அப்போது மாலை அகன்று கொண்டிருந்தது. வானத்தைப் பார்ப்பது ஒருவித நம்பிக்கையைக் கொடுத்தது. மேலே தேவன் தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பான் என்றும் தனது மனவலிமையைச் சோதிக்கிறான் என்றும் நினைத்துக்கொள்வது அவ்வேளையில் அவசியமாக இருந்தது. அவ்வெண்ணமே அவருக்குப் புதிய உத்வேகத்தைக் கொடுத்தது. வானிலிருந்து தன்னைக் காணும் இரக்கம் தோய்ந்த கண்களை ஈத்தன் தேடிக்கொண்டே இருந்தார். தான் உறங்கக்கூடாது என நினைத்தபோதே இமைகள் வலித்தன. உறங்கினால் மூச்சை தம்பிடிக்க முடியாமல் மூழ்கக்கூடும். இரவு முழுவது கர்த்தரின் கண்களைத் தேடிவதில் செலவிட்டபடி இருந்தார். சில சமயம் அதை நட்சத்திரங்களாகவும் சில சமயம் அதை மேகங்களின் திரட்சியாகவும் உருவகித்தார். ஒருசில வினாடிகள் மேகங்கள் சிலுவை வடிவில் உருவாகிக் கலைந்தன. சின்னவயதில் அவர் சுறாமீனிடம் மாட்டிக்கொண்டபோதும் அவ்வாறு மேகச்சிலுவையைப் பார்த்துள்ளார். அப்போது அப்பா தன்னைப்பிடித்துக்கொண்டு நீந்திய பதற்றமான நிமிடங்களிலும் மேகச்சிலுவையைப் பார்த்தபோது இதேபோல ஈத்தனுக்கு பயம் அற்றுப்போயிருந்தது. கப்பலில் இருந்தவர்கள் நீட்டிய கையைப் பிடித்து ஏறி மீண்டும் வானத்தைப் பார்த்தபோது சிலுவை கரைந்திருந்தது. கடலில் செந்நிற வட்டம் வரையப்பட்டிருந்தது.

நிமிடத்துக்கு ஒருதரம் மூச்சை வெளியேற்றி மீண்டும் சேகரித்து உடலை மிதக்கவிட்டார். மூச்சை இழுத்தால் உயிருடன் இருக்க முடிவதும் விட்டால் இறந்துபோவதற்குமான நியதி கடலில் இன்னும் அர்த்தம் உள்ளதாக இருப்பதை நினைத்துக்கொண்டார். அவருக்கு கெத்தரினா நினைவு வந்தது. அவர் புறப்படும்போதுதான் கெத்தரினா கல்லூரி முடிந்து வந்திருந்தாள். கரைக்கு வேகமாக ஓடிவந்து கையசைத்தாள். அவரும் பதிலுக்குக் கையசைத்தார். அவளால் அதை பார்த்திருக்க முடியுமா என்ற குழப்பம் அப்போது வந்தது. கல்லூரிக்குச் சேர்ந்து ஒரு மாதம்தான். அவள் கேட்ட பொருள்களையெல்லாம் வாங்கிக்கொடுத்துவிட்டார். கடல்தாய் மனது வைத்தாள் அவள் கேட்டிருந்த பணத்தையும் இரண்டு மூன்று நாட்களில் கட்டிவிடுவார். அவள் பெயரைச் சொல்லி கத்த வேண்டும் என ஆசை எழுந்தது. கோபி கப்பலில் இருப்பது அவ்வாறு செய்ய மனத்தடையைக் கொடுத்திருந்தது. அப்படிக் கத்தினாலும் அவரது குரல் கரை வரை வரப்போவதில்லை.

நடுகடலில் நிசப்தம் கோரமாக இருந்தது. கடல் கரைக்கு அனுப்புவது அதன் குழந்தைகளை மட்டுமே என அப்போதுதான் அவருக்குப் புரிந்தது. நடுக்கடல் ஒரு வயதான கிழவி. கிழவிகளின் கண்களில் அன்பிருப்பதில்லை. கிழவிகள் அழுவதில்லை. எந்த இழப்பும் எந்த வருகையும் அவர்களை ஒன்றுமே செய்வதில்லை. சமநிலையோடு உணர்ச்சியற்ற அவர்களது பார்வை அச்சம் கொள்ள வைக்கிறது. அதில் ஏதோ ரகசியம் இருப்பதுபோல தடுமாற வைக்கிறது. தான் ஒரு கிழவியின் அருகில் இருப்பதாக உணர்ந்துகொண்ட தருணம் அச்சம் பீடித்தது. அது மௌனமாகத் தன்னைச் சூழ்ந்துள்ளதாகவும் தனது எந்த நிலைக்கும் அது பொறுப்பெடுத்துக்கொள்ளாது என்றும் நினைத்துக்கொண்டார்.  அன்பில்லாத ஒரு கிழவியின் மடியில் படுத்திருக்கும் அவமான உணர்வு ஏற்பட்டது. உறக்கம் நெருக்கியபோது அவர் உடல் மூழ்கத்தொடங்கியது.

***

“ஏதும் சாப்பிட கொண்டுவரவா சர்” என்றவளின்  தேகத்தைப் பார்த்தான். சற்றுமுன்பு அறையில் பார்த்த உடல்போலவே இல்லை. வெண்ணிற ஆடையின் ஈரத்தில் அவள் கச்சை அணிந்திருக்கவில்லை என்பது தெரிந்தது. தொப்புளுக்கு மேலும் கீழும் நீள் கோடாக உரோமங்கள். நீரினால் அவை நீவி விடப்பட்டதுபோல அவள் வயிற்றில் கோடு போட்டிருந்தது. தொடையில் தேமல் அவள் கருமைக்கு நல்ல எடுப்பாய் இருந்தது. கால்களிலும் உரோமங்கள் சுருண்டிருந்தன. கறுமை நிற பெண்டிஸ் அவளை யோனியற்றவளாகக் காட்டியது.

அவன் பசிக்கவில்லை என்றதும் சோனாவுக்கு அழைத்துச்சென்றாள். “ரொம்ப நல்லது சர். கோத்துருக்கிற நீரெல்லாம் வெளியாயி உடம்பு காத்தாயிரும்”. உள்ளே நுழைந்ததும் உஷ்ணம் காதுகளின் மடல்களை முதலில் சுட்டது. ‘ப’ வடிவில் போடப்பட்டிருந்த பலகை நாற்காலியில் அமர்ந்துகொண்டார்கள். அவள் மெல்லிய உடை விரைவாகவே காய்ந்து மார்பின் வடிவை தெளிவாகவே காட்டியது. காம்புகள் விரைத்திருந்தன. மார்பை பிடிக்கச் சென்ற அவன் கைகளை தடுத்து “காமிரா இருக்கு சர் இங்க. ரூம்புக்குப் போவமா?” என்றாள். கைகளை விடுவித்துக்கொண்டபோது அவனுக்கு மணிக்கட்டு வலித்தது. உறுதியான கரங்களால் அவன் தோள்களைப் பிடித்துவிட்டாள். கொஞ்ச நேரத்தில் உடம்பிலிருந்து குபுகுபுவென வியர்வை வெளியேறியது. அவனால் உஷ்ணத்தைத் தாங்க முடியவில்லை. வெளியேறப்போவதாகக் கூறினான்.

“என்ன சர். இந்த சூட்டுக்கே இப்படி சொல்லுறீங்க. எங்க அப்பா ரெண்டு நாள் சூரியனை ஓய்வே இல்லாம பார்த்தாரு” என்றாள்.

***

மறுநாள் சூரியன் உதயத்தைப் பார்த்தபோது ஈத்தனுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.sea 02 இரவிலேயே கியாட்டுக்கும் கெப்பாலாவுக்கும் போதை தெளிந்திருக்கும். கோபி தான் இல்லாததை அவர்கள் சொன்ன பிறகே உணர்வான். எப்படியும்  வலையைப் படுக்கப்போடும் முன் இதெல்லாம் நடந்திருக்கும் என நம்பினார். மழைபெய்த கடலடியிலிருந்து மண் கிளம்பி கண்ணாடி போன்ற வலையில் படிந்துவிட்டால் மீன்கள் உஷாராகிவிடும். அந்தப்பக்கமே அவை வராது. ஈத்தன் கடலின் பரப்பை ஆராய்ந்து வலையைப் படுக்க வைப்பதில் தேர்ந்தவர். தான் இல்லாமல் அவர்களால் வலையைப் படுக்கப்போட முடியாது என நினைத்துக்கொண்டார்.  அதிகாலையில் புறப்பட்டிருந்தாலும்  சூரியன் உச்சியை அடைவதற்குள் வந்துவிடுவார்கள் எனும் நம்பிக்கை அவருக்கு தீர்க்கமாக இருந்தது. கடந்து செல்லும் கடல் பறவைகள் அவ்வேளையில் காரணமின்றி நம்பிக்கையை விதைத்தது. பசி வயிற்றைக்கிள்ளியது. மெல்ல திரும்பி கடலைப்பார்த்தார். காலை கதிரில் பச்சை நிறத்தில் கடல் ஒளிர்ந்தது. தூரத்தில் கடல் பாசிகள் மிதப்பது தெரிந்தது. மெல்ல கைகளை அசைத்து அவை அருகில் சென்றார். அள்ளித்தின்றார். உப்புச்சுவை கரைந்ததும் துவர்த்தது. கடல் கிழவியின் மேல் இப்போது ஒரு மரியாதை வளர்ந்திருந்தது. கிழவி கெத்தரினாவுக்கு தாயில்லை என்பதை அறிவாள். எப்படியும் அவளை இந்தக் கம்பத்திலிருந்து தூரமாக அனுப்பிவைக்க ஈத்தன் படும்பாட்டை உணர்வாள். கடலுக்குச் செல்லும்போதெல்லாம் கழுகுகண்களில் இருந்தும் கஞ்சாவெறியர்களிடம் இருந்தும் கடலன்னையைத்தான் பாதுகாப்புக்கு விட்டுச்செல்வார்.  கிழவியானாலும் அவள் அன்னை. எல்லா உணர்வுகள் இத்துப்போனாலும் தாய்மை இருக்கத்தானே செய்யும். பால் இத்துப்போன காம்பில் வாய்வைத்தால் கிழவி குழந்தையைத் தட்டியாவிடுவாள்  என சமாதானம் கூறிக்கொண்டார். மழைவரும் அறிகுறி இல்லை.  தொண்டை காய்ந்து வரட்டியது. கண்களை இறுக்க மூடி கடல் நீரில் நனைந்த இரண்டு விரல்களை தொண்டைக்குள் விட்டபோது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

உச்சியில் சூரியன் வந்தபிறகும் கப்பலைக் காணவில்லை. கண்களைத் திறக்க முடியாமல் எவ்வளவு இறுக்கினாலும் அதன் கதிர்களை பிரக்ஞைக்குள் நுழைந்துகொண்டே இருந்தது.  கடல் கொதித்தது. கடலுக்கு ஈடாக உடலில் இருந்து உப்புநீர் வெளியேறத்தொடங்கியது. ஒரு மாபெரும் எண்ணெய்க் கொப்பரையில் கொதித்துக்கொண்டிருக்கும் சிறு தவளையாகத் தன்னைக் கற்பனை செய்துகொண்டார். கப்பல் எப்படியும் வந்து தன்னை மீட்கும் என்ற நம்பிக்கை முதுகில் ஏதோ சுருக்கென கடித்தபோது கொஞ்சம் நழுவத்தொடங்கியது. நீரில் உலர்ந்து பிளவுபடத்தொடங்கியிருந்த முதுகுத்தோலை மீன்கள் கடித்துத் தின்பதை உணர்ந்தார். அவை சடையன் மீன்களென கடியில் தெரிந்தது. அவைதான் முந்திவந்து பிணம் தின்னும். மீன்கள் தின்னும் பிணங்களை அவர் பார்த்துள்ளார். தங்கள் சிறிய வாயால் அவை தங்களுக்கான கொஞ்ச மாமிசத்தை எடுத்துக்கொள்ளும். மீனவர்கள் அதை சாப்பிடுவதில்லை. பெரும் திரளான சிறிய மீன்களின் எளிய பசி அவரை எலும்புகளாக்கிவிடும் என அறிந்தே வைத்திருந்தார். உடலில் எஞ்சி இருக்கின்ற சக்தியை விரையம் செய்யாமல் கைகளை மெல்ல அசைத்து அவற்றை அச்சுறுத்தினார். அவை களைந்து மீண்டும் விட்ட இடத்தில் தொடங்கின. முதலில் சிறு சிறு ஊசிகள் அங்கும் இங்குமாக ஓர் ஒழுங்கு இல்லாமல் குத்துவதுபோல தொடங்கி மாலையானபோது ஒரே சீராக முதுகு முழுவதும் மொய்த்தன.  முதுகில் காயங்கள் உண்டாகி உப்பு நீர் பட்டு எரிந்தது. கைகளை அசைக்க முடியும்வரை தன்னால் உடலை பாதுகாக்க முடியும் என முனைப்பாகச் செயல்பட்டார். அதிக காயம் ஏற்பட்டு ரத்தம் கசியத்தொடங்கினால் சுறா மீன்கள் தேடிவரக்கூடும்.  கால் மைல் தொலைவில் இருந்தாலும் அவற்றால் ரத்தத்தை நுகர முடியும். சிதைந்த அப்பாவின் உடல் கடலில் மிதந்த காட்சி ஈத்தன் மனதில் தோன்றி பயமுறுத்தியது.

***

அவர்கள் இப்போது மீண்டும் அறைக்குத் திரும்பினர். அவன் வியர்த்த உடலுடன் மீண்டும் கடலைப் பார்த்தான். “அதோ அந்தப் படகுதான்” என்றாள் அவள். இருட்டிவிட்டதால் கடல் கருப்புத்திடல்போல காட்சியளித்தது. இப்போது படகு நிழலாக மட்டுமே ஆடியது.  “இதுல போயிருக்கியா?” என்றான். “ஆள் குறைஞ்சா போவேன். எல்லா வேலையும் தெரியும்” என்றாள். உழைப்பின் சுவடுகள் அவள் உடலில் இப்போது நன்றாகத் தெரிந்தது.

“காண்டம் எடுக்கவா சர்?” அவள் கையில் எடுத்துத் தயாராக வைத்திருந்தாள்.

“மீன்கள் கடிச்ச அப்பாவோட பிணம் கிடைச்சதா?” என்றான்.

அவள் திகைப்புடன் பார்த்து. “அப்பா மீன் கடிச்சி சாகலயே சார்” என்றாள்.

***

இரண்டாவது நாள் புலரியைப் பார்த்தபோது அவர் கடலில் ஓர் அலையாக மாறியிருந்தார். மீன்கள் தன்னைத் திண்பதை முழுமையாக அனுமதித்திருந்தார். சாவாழை, பன்னா, களவா என அவர் உடலின் சுவையை ஒருதரம் சோதிக்கும் மீன்களின் ரகத்தை வலியை உள்வாங்கி அனுமானித்துக்கொள்வது ஒரு விளையாட்டுபோல ஆனது. உச்சிவெயில் நெருங்கியபோது கழுத்து, முதுகு, கால்கள் என படிப்படியாக உப்பு நீர் கொடுக்கும் எரிச்சலும் சூரியன் உச்சிவெயிலில் கொடுக்கும் எரிச்சலும் ஒன்றுபோலவே இருந்தன. எரிச்சல்கள் சூழ்ந்து அவர் தான் ஒரு அக்னி உருண்டையாக மாறிவிட்டதாக எண்ணினார். அந்த அக்னி பிரகாசம் கடலில் போகும் ஏதோ ஒரு கப்பலை தன் பக்கம் திருப்பலாம் என இறுதி நம்பிக்கை இருந்தது. ஒரு வினாடி சுவாசித்து மூன்று வினாடிகள் மூச்சைப்பிடித்து மிதந்துகொண்டிருந்தார். கண்களை மூடியே இருந்ததால் நெடுதூரம் மிதந்து சென்றுவிட்டதுபோலவும் சுமாத்திரா தீவுகளில் ஏதோ ஒன்றில் கரை தட்டுப்பட்டுவிடும் என்றும் கற்பனைகள் தோன்றின. எண்ணங்கள் ஒன்றின் மேல் ஒன்று படிந்து எல்லாமும் கனவு என்றும் கற்பனையென்றும் மாயம் காட்டின. அவர் இறந்துவிட்டதாக எண்ணம் தோன்றும்போதுமட்டும் மூச்சை ஒருவினாடி விட்டு மீண்டும் இழுத்து, தம்பிடித்து இல்லை என்பதை உறுதி செய்துக்கொண்டார்.

அவர் தலைமுடியைப் பற்றி கியாட்டும் கெப்பாலாவும்  தூக்கியபோதுதான் மயக்கம் அடைய மூளைக்குச் சம்மதம் கொடுத்தார். ஒரு சூட மீன் விடாமல் கடித்துக்கொண்டே துடித்து கப்பலுக்குள் உடல் செல்லும்முன் கடலுக்குள் சிறு தோல் துண்டுடன் தாவியது. இரண்டுவார தீவிர சிகிச்சையும் இரு மாத கோமாவுக்கும் பின் நினைவு திரும்பினார். மருத்துவர்களின் பேச்சொலி கடல் அலைகளின் இரைச்சல்போல வதைத்தது. அவற்றில் துள்ளலுக்கு ஏற்ப உடல் அலைவதாகத் தோன்றியது. கண்களைத் திறக்க பயந்து கட்டிலைத் தொட்டு  திரவ நிலையில் இல்லை என உறுதியானபின் நிம்மதி அடைந்தார். ஆயாசத்துடன் கண்களை அலையவிட்டார். தட்டுப்பட்டவுடன் கெத்தரினாவின் முகத்தையே அதிக நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். முன்பிலும் ஜொலிப்பாக இருந்தாள். “ரெண்டு மாசத்துக்கப்புறம் பாக்குறாருல்ல” என யாரோ சொல்வதை உள்வாங்கிக்கொண்டப்பின் விழிகள் விரிந்து இயல்புநிலைக்குத் திரும்பி ஓரமாகக் கடல் நீரை வழியவிட்டது. உதடுகள் ஏதோ சொல்ல நடுங்கின. பின்னர்  வாய்க்குள்ளாகவே அரற்றத்தொடங்கினார்.

***

அவனுக்குக் குழப்பமாக இருந்தது. அவள் உடைகளை களைத்துவிட்டு போர்வைக்குள் புகுந்திருந்தாள். வெள்ளை விரிப்பில் நிழல்போல படிந்திருந்தாள்.

“பின்ன ஏன் உன் அப்பா கடல்ல விழுந்து செத்துட்டதா பொய் சொன்ன?” என்றான்.

“கோமாவிலிருந்து கண்விழிச்சப்பெறகு எத்தினி நாள் ஆச்சின்னு கேட்டார். சொன்னேன். அதுக்கப்புறம் ஒன்னுமே பேசல. அப்பப்ப ரெண்டு மாசமாவா கெடந்தேன்னு கேட்டுக்குவார். தேறி சரியானப்பெறகும் ரொம்ப நாள் ஒன்னும் பேசாம இருந்தார். என்னைய பத்தி எதுவுமே கேட்கல சர். காலேஜ் பத்தி, படிப்பு பத்தி எதுவும் கேக்கல. ஒருநா ராத்திரி தூக்கத்துல சூட்டுக்காத்து கன்னத்துல பட்டு முழிச்சி பாத்தப்ப பக்கத்துல அப்பா. ரெண்டு மாசமாவா கெடந்தேன்னு  ரொம்ப ரகசியமா கேட்டாரு.  வயசான அப்பாவ அப்பதான் முதன்முதலா பாத்தேன். அவர் ஒடம்புல தெம்பே இல்ல. சுருங்கி கிடந்தாரு. முதுகுல சல நாத்தம். நான் ஒன்னும் பேசல. என்னையே பாத்துக்கிட்டு இருந்தாரு. எவ்வளவு நேரம் அப்படி இருந்தாருன்னு தெரியல. மறுநா பிடிவாதமா மீன் பிடிக்கப் போனாரு. கடல் காத்து பட்டா எல்லாம் சரியாயிடுமுன்னு கம்பத்துல பேசிக்கிட்டாங்க. எனக்கும் சந்தோஷமா இருந்துச்சி. வழியனுப்பிட்டுதான் நான் காலேஜிக்குப் போனேன். அவரு தடுமாறி விழுந்த அதே இடத்தல மீண்டும் குதிச்சி இறந்துட்டாருன்னு ராத்திரி சேதி வந்திச்சி. எல்லோரும் காப்பாத்த போராடுனாங்கலாம். அப்பா எதையுமே பிடிச்சுக்கலயாம்.” ஓர் அசரீரியின் குரலில் சொல்வதுபோல சொன்னாள்.

அவனுக்கு உடல் அதிரத்தொடங்கியது. சன்னலின் அருகில் சென்று இன்னொரு சிகரெட்டைப் பற்றவைக்க குச்சியை உரசியபோது கடலில் காற்று எழுந்து தீ முனையை அணைத்தது.

அவள் காண்டமை நீட்டிவிடுவாளோ என்று பயம் எழுந்தபோது அவன் காற்சட்டையை வேகமாக அணியத்தொடங்கினான்.

14 கருத்துகள் for “யாக்கை

 1. Dhandapani Murugesan
  February 3, 2018 at 10:57 pm

  தாம் கூறும் கதைகளை மனதால் கேட்கும் ஆண்களை பெண்கள் எளிதில் கண்டுபிடித்து விடுகிறார்கள். இந்தக் கதையின் ஆணும் தனிமை விரும்பியாகவும் பய உணர்ச்சி கொண்டவனாகவும் இருக்கிறான். கதையின் தொடக்கத்திலயே கேத்ரினாவின் தந்தை இறந்ததை கூறிவிட்டு பய உணர்ச்சியை தூண்டும் வகையிலேயே தொடர்ந்து வர்ணனைகள் மூலம் அவனை ஈடுபடுத்துகிறாள். அவளின் அழகை வெளிப்படுத்தி அவனை அலைகழிக்க வைக்கிறாள். சானாவில் தொட முயற்சிக்கும்போது முரட்டு கைகளால் தடுக்கிறாள். அவளுக்கு ஆண்களின் மீது உள்ளார்ந்த வெறுப்பு இருந்திருக்குமோ என நினைக்கிறேன். முகத்திலோ உடல் மொழியிலோ வெளிப்படுத்தாமல் அவனின் அலைக்கழிப்பை குருரமாக ரசிக்கிறாள் என நினைக்கிறேன். அவள் தந்தையின் மீதுமே அவளுக்கு கோபம் இருந்திருக்கலாம். நன்றிகள் நவீன்

 2. பூவிதழ் உமேஷ்
  February 6, 2018 at 11:14 am

  தன் தந்தையின் சாவைப் பற்றி அவன் சம்பிரதாயமாகத்தான் கேட்கத் தொடங்கினான் ஆனால் அவள் சொல்லத்தொடங்கியதுமே சூழல் மெல்ல மெல்ல இறுகத்தொடங்கியது .

  அவள் அடிக்கடி காண்டத்தை எடுப்பது அவனை இடம் மாற்றி அழைத்து செல்வதும் அவன் மரணத்தின் வாடையில் பதற்றமாக இருக்கிறான் என்பதை ஆசுவாசப்படுத்தவேதான்
  படிப்பதற்கு கதையின் போக்கு கடல் அலையின் போக்குபோ உயர்வதும் தாழ்வதுமாக இருக்கிறது அவளைப் பற்றிய விவரணைகள் உயரமாகவும்
  ஈத்தனுடைய நினைவு இறங்கு முகமாகவும் இருப்பது கதையின் முக்கியமான போக்கு .

  வாழ்த்துக்கள் நவீன்

 3. Pingback: யாக்கை
 4. krishnan
  February 7, 2018 at 10:30 pm

  நவீன் ,

  இந்த சிறுகதை மிகச்சிறப்பாக இருந்தது ,

  உங்களது போன சிறுகதை போயாக் கில் வரும் கனவு மிக செயற்கையாக இருந்தது. உண்மையில் உள்ள அச்சம் அவ்வாறே கனவுருக்கொள்ளாது , உருமாறித் தான் தெரியும். மேலும் ஒரு ஆங்கில ஆசிரியரின் தர்க்கம் மீறிய அச்சம் ஏற்புடையதாக இல்லை. கதை சற்று மார்கோஸ் சாயலில் இருந்தது.

  இந்தக் கதை கூட்டு வாசிப்பில் சில அனுகூலங்கள் உள்ளது போலவே சில பின்னடைவுகளும் உள்ளது, இக்கடிதங்களில் கூறப்படும் incest உறவுக்கு வாசிப்பு சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை. முதலில் விழுந்த சுரேஷ் பிரதீப்பின் கடிதத்தில் இது கூறப்பட்டிருப்பதால் பின்னர் அனைவரும் அதே வரிசையில் நிற்பது போல தோன்றுகிறது. பிறரும் இவ்வகை வாசிப்பை மறுக்காதது ஆச்ரமளிக்கிறது.

  கேத்ரீன் அருகே உணரும் தந்தையின் மூச்சு காற்று இதற்கு இடம் கொடுத்திருக்கலாம்.

  இதில் உள்ள கடல் வாழ்வு அசலானது ஒரு கடலோடி மட்டுமே இப்படி உணரமுடியும். ‘கடலும் கிழவனும்’ அந்த விடாபிடியும் கடலோடிகளுக்கே உண்டானது. முதலில் அன்பற்று விரியும் கடல் பின் கருணையுடன் தோன்றுவது ஒரு தரிசனம், அபூர்வமாக சில சிறுகதைகளில் மட்டுமே இது காணக் கிடைக்கும்.

  இது ஒரு விலைமாது சொல்வதால் வழக்கமாக வாடிக்கையாளர்களுக்கு சொல்லும் கற்பனை கதை அதை சொல்லி சொல்லி தேர்ந்துள்ளாள் என்பதற்கான சத்தியத்தையும் தன்னுள் தக்கவைத்துள்ளது.

  வதையும் தத்தளிப்புமாய் ஒரு யாக்கை, போகமும் இன்பமுமாய் ஒரு யாக்கை.

  ஒரு அற்புத கதா வாசிப்பு அனுபவம்.

  கிருஷ்ணன் ,
  ஈரோடு .

 5. Lankesha
  February 8, 2018 at 7:03 pm

  Good One Navin! I loved reading it

 6. February 8, 2018 at 7:50 pm

  Great story by a Great writer!

 7. M. Sunthari
  February 9, 2018 at 8:33 pm

  Best of luck and be the best

 8. Ganesh Babu
  February 10, 2018 at 7:27 pm

  யாக்கை சிறுகதை மேலோட்டமாகப் பார்க்கையில் மரணத்திற்கெதிரான ஒருவரின் போராட்டமாகத் தென்பட்டாலும் உண்மையில் அது இருவருடைய யாக்கைப் போராட்டமாகத்தான் விரிகிறது. ஈத்தனின் யாக்கைப் போராட்டத்தை அவரது மகள் சொல்லச் சொல்லக் கேட்டுக்கொண்டே வரும் கதைசொல்லி ஒரு கட்டத்தில் ஈத்தனுடன் தன்னைத் தொடர்புபடுத்திக் கொள்கிறான். தன்னை அண்டவந்த மரணத்தில் இருந்து தப்பிக்க முடிந்த ஈத்தன் தானே மரணத்தைச் சென்றுதொடும் புள்ளியில் உறைந்து போகும் கதைசொல்லி ஈத்தனாகத் தன்னையும், கடலாக அந்தப் பெண்ணையும் பாவித்துக்கொள்ளும் தருணத்தில் கதை நிறைவுறுகிறது.

  கதை இரண்டு வலுவான படிமங்களை முன்வைக்கிறது. கடல் மற்றும் பெண்.
  அதனூடாக யாக்கை என்பதன் பொருளை அல்லது பொருளின்மையை வாசகனுக்கு கடத்துகிறது.

  தாயில்லாத தனது மகளுக்காக கடலில் இரண்டு நாட்கள் உயிரைக் கெட்டியாகப் பிடித்துவைத்திருந்த ஈத்தன் மீண்டும் தான் உயிருக்குப் போராடிய அதே கடலில் விழுந்து இறக்கிறான். மகளுக்காக தனது யாக்கையில் சுமந்திருந்த அன்பு யாவும் வற்றிப்போய், அன்பேயில்லாத கிழவியான ஆழ்கடலில் தஞ்சமடைவதன் பின்னணியில் உள்ள மர்மமே கதைக்கு கூடுதல் அழுத்தத்தை அளிக்கிறது. யாக்கை என்பது உடலில் அல்ல மனதில்தான் இருக்கிறது என்ற கோணத்திலும் கதையை அணுகலாம்.
  “யாக்கை அகத்ததா புறத்ததா அறியேன்” என்ற வில்லிப்பாரத வரிகள் நினைவுக்கு வருகிறது. நவீனுக்கு வாழ்த்துகள்.

  மிக்க அன்புடன்,
  கணேஷ் பாபு
  சிங்கப்பூர்

  • March 8, 2019 at 2:09 pm

   அருமை, புதிய வாசகனான எனக்கு இன்மும் இந்த கதை புரியவில்லை. உங்களின் விமர்சனம் சற்று உதவியது. நன்றி.

 9. MK KUMAR
  February 14, 2018 at 3:59 pm

  நவீனின் எழுத்தையறிந்தவன் என்ற வகையில் இது வாசகனின் மனத்தைத் தைப்பதற்கென அளவெடுத்து நச்சென்ற தைத்த சட்டையென சிறப்பான வாசிப்பனுபவம் தருகிறது இக்கதை.
  எனினும் இந்த அளவெடுப்பே இக்கதையை ஒருபடி கீழிறக்குகிறதோ?. அண்மையில் எழுதிய நாகம் என்ற கதை (கிளைமேக்ஸ் தவிர) இன்னும் நல்ல அனுபவமாய் விரிந்தது.

  நீர்ப்பாத்திரங்களாக கடலும்- ஜாக்குஸியும், வதையும் ருசியும் தரும் பெண்களாக கடற்கிழவியும்-கேத்றினும், ருசிப்பவர்களாக கிழவனும்- கதைசொல்லியும், காட்சிகள் இன்பமும்-துன்பமும். என்று புனையப்பட்ட கதையில் கடலில் மனதைச்சுமந்து உயிரோடு மிதக்கும் கிழவனும் காமத்தைச்சுமந்து அலையும் மனிதனும் யாக்கையின் (பழைய) பாடுபொருள்கள். வடிவமும் நேர்க்கோட்டில் நிகழும்காலமும் கடந்தகாலமுமாய் மாறிமாறி வரும் சீன்களாய் மிக எளிய வடிவம் எனினும்,

  கதையின் உச்சம் நிகழ்வது அக்கிழவன் மீண்டும் கடலுக்குள் சென்று குதிப்பதே. உடல் கப்பலுக்குள் வந்தாலும் கடித்திழுத்துத்திரும்பும் மீன் முக்கிய காட்சி. இந்த இரண்டுக்காகவேனும் இந்த எழுத்தாளனைப் பாராட்டுகிறேன்.

  எனக்கு ஒதுக்கப்பட்ட ஜக்கூஸியில் இன்னும் எவ்வளவு நேரமோ தெரியவில்லை. ஜக்கூஸி மீன்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.

  எம்.கே.குமார்.

 10. Satheesh
  February 15, 2018 at 1:39 am

  நல்ல வாசிப்பு அனுபவம் அளித்த கதை. ஈத்தன் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார் ? அவர் கோமாவில் இருந்த இரண்டு மாதங்கள் மகளின் வாழ்க்கையில் என்ன நடந்திருக்கும் என்று அவர் புரிந்து கொண்டதே காரணம் .அவளின தற்போதய தொழிலும், அதையே உணர்த்துகிறது. ஆகவே தான் ஈத்தன் திரும்ப திரும்ப ”ரெண்டு மாசமாவா கெடந்தேன் ” என்று கேட்டதும்.

 11. Manivannan S
  February 24, 2018 at 4:21 pm

  மனித மனங்களின். ஆழங்காண முடியாத நுட்பத்தை , அடுக்கடுக்காக உள்ளே சென்றாலும் , கண்டுகொள்ள முடியாத ஒன்று. என்பதை மிக அழகாக , சற்றே கிளுகிளுப்பு தரும் முறையில் , விவரித்துள்ளது நன்று.
  கொண்டு கூட்டுப் பொருள் கொள்ளும் வகையில் நடை. . வாசகனின் அனுமானத்தை சோதிக்கும் வகையில். ….. வாழ்த்துகள்.

 12. April 11, 2018 at 5:32 am

  யாக்கை உடலின் உணர்வுகளை பேசுகிறதா. கதையின் நாயகனின் உடலின் உணர்வுகளையா இல்லை அந்த உடல் தோன்றிவந்த ஆன்மீக காரணத்தையா. எனக்கு இதில் யாக்கை என்பது மனிதனின் உடலை குறிக்கவில்லை. அது எல்லையற்ற கடலை, அதன் வழி எல்லையற்ற காலத்தை குறிப்பதாக தோன்றியது.

  ஜன்னலின் வழி அவன் பார்க்கும் கடலை செத்த கடல் என குறிப்பிடுகிறார் நவீன். எனக்கு அந்த ஜன்னல் வழி தோன்றும் கடல் கால கடலை உணர்த்தியது. ஆம் காலத்தை கடல் என்று கொண்டால் நாம் இப்போது நிற்கும் புள்ளி அதன் கரை. அந்த கரைதானே நமது யாக்கை. நாம் கால்களில் வளியும் நுரைதானே நம் மனம்.

  ஜன்னலின் புள்ளியிளிருந்தான் கெத்தரீனா தான் வாழ்ந்த வீட்டை காட்டுகிறாள், ஈத்தன் விழுந்து இறந்த இடத்தை காட்டுகிறாள். தன் இறந்த காலத்தை அவள் அந்த கடலில் காட்டும் போதும் அது நிகழ்காலமாக அவள் காட்டுகிற இடத்திலெல்லாம் ஒரு குமிழி போல தோன்றி மறைகிறதல்லவா. நம் என்னனகள் நம் இறந்தகாலத்தில் பாயும் போது அது நிகழ்காலமாகதானே நிகழ்கிறது.

  கதை கடலையும், கடலுடன் வாழும் மனிதர்களையும் அழகாக கண் முன்னே நிறுத்துகிறது. கடலின் இயல்புகள், கடலில் நிகழும் மாற்றங்கள் எல்லாம் வியப்பாக உள்ளது. கோபி ஈத்தன் கடலில் விழுந்தது தெரிந்தும் தெரியாதது போல சென்று விட்டானா? அவர்களுக்குள் முன் விரோதம் இருந்தாலும் தொழில் அதை காட்டி கொள்ள முடியுமா ? அப்படித்தானே ஈத்தனும் நம்பியிருப்பார்.

  கடலில் விழுந்து ஒரு பகல் ஒரு இரவு முழுதும் அவதி படும் ஈத்தனின் நிலையில் நம்மை பொருத்தி கொண்டால் மனம் அஞ்சுகிறது. அடுத்த நொடி இருப்போமா இல்லையா என்னும் திகில் எத்தகையது. மனித முயற்சிகள் அனைத்தையும் ஈத்தன் முயல முயல, ஒவ்வொன்றாய் இழந்துகொண்டே இருப்பது காலத்தை கடவுளை ஒரே சமயத்தில் கருணையோடும் கருனையற்றதாகவும் காட்டுகிறது. மனித வாடை நுகர்ந்து உண்ண வரும் திமிங்கலங்கள், செயல் இழக்கும் மனித உறுப்புகள், உப்பின் அரிப்பில் ஏற்படும் காயத்தை மொய்த்தது உண்ணும் மீன்கள்.

  ஈத்தன் நம்பிக்கை இழந்து கடவுளை அழைக்கும் சமயத்தில் வானில் தோன்றும் சிலுவை எத்தனை ஆன்மீகமானது. நாம் பெரும் துயரில் தவிக்கும் பொழுது, இல்லை ஆன்மீகமாக நமது குருவை நினைக்கும் போது திடிரென நம்மை கடக்கும் வண்டிகளில் குருவின் புகைப்படமோ வாசகமோ இருந்தால் எத்தகைய ஆன்மீக திருப்தியை அது தரும். நான் உன்னோடு இருக்கிறேன் என்று கடவுள் நம்மிடம் சொல்லும்போது ஏற்படும் நம்பிக்கை அபாரமானது. கருங் கடல், இருப்பின் போராட்டம் , வானில் தோன்றும் சிலுவை கடவுளின் துணை அல்லவா. அந்த நம்பிக்கை ஈத்தனை காப்பாற்றியது. அந்த நிலையில் இறந்தாலும் இருந்தாலும் கவலை இல்லை என்ற முடிவுக்கு அவர் வந்திருக்க வேண்டும். அந்த ஒரு பகல் ஒரு இரவு அவர் அடைந்த அலகளிப்பு எல்லையற்ற பிரபஞ்சத்தின் முன்னால் தவம்.

  இத்தகைய ஆன்மீக நிகழ்விற்கு பின் ஒரு மூன்று மாத கால கோமா எத்தகையது. முடிவற்ற ஒன்றில் நீடித்த தவம் அல்லவா ? அதில் திளைத்த ஒரு மனித மனதால் மீண்டும் எப்படி ஒன்றுமற்ற இந்த மனித யாக்கைக்கு திரும்ப முடியும் ? அந்த ஆன்மீக குழப்பம் இல்லை ஆன்மீக தெளிவுதான் அவரை தற்கொலை செய்ய அழைத்திருக்கிறது. உறங்கிய குழந்தை கண்கள் திறந்து பார்த்துவிட்டு மீண்டும் உறங்குவது போல அவர் கடலில் கலக்கிறார்.

  கதை ஒரு அழகிய திரை கதை போல சொல்லபட்டிருக்கிறது. இதனை அப்படியே ஒரு திரைப்படமாய் எடுக்கலாம். கதையில் எந்த பிசிறும் அற்று தெளிந்த நீரோடை போல மொழி நடை அமைந்திருக்கிறது. அண்மையில் மிகவும் இரசித்து படித்த கதை.

 13. Santhan Ayathurai
  June 1, 2018 at 3:27 pm

  அற்புதமாக எழுதுகிறீர்கள், நவீன். உங்கள் பார்வை, அனுபவம், மொழி ஆற்றல் பாராட்டிற்குரியவை. இலங்கைத் தமிழ் எழுத்துக்கள் அதிகம் கையாள முன்வராத வாழ்வுக்கூறுகளை நான் படித்த உங்கள் சில கதைகளினூடு உணர முடிகிறது. உண்மையில் மனித வாழ்வின் எந்த அம்சமுமே இலக்கியத்திற்குப் புறம்பானதோ விலக்கானதோ அல்ல. மலேசியத் தமிழ் இலக்கியத்தைத் தேடிப்படிக்கும் ஆவலை நீங்களும் வல்லினமும் உருவாக்கியுள்ளீர்கள்.
  சில மாதங்களுக்கு முந்திய உங்கள் யாழ்ப்பாண வருகை மிகவும் குறுகியதாக அமைந்ததில் பெரும் பயன் கிட்டவில்லையெனினும் அது ஒரு தொடக்கமாக அமைந்தது மகிழ்ச்சியே.
  – சாந்தன்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...