ஆண்கள் அழ வேண்டாம்

boysdontcryதான் ஓர் ஆண் என்று மனதார ஏற்றுக் கொண்ட ஒரு இளம் பெண் சமுதாயத்தின் மத்தியில் ஆணாக வாழ, ஆணாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள முனையும்போது ஏற்படும் சிக்கல்களையும் கொடூரங்களையும்  Boys Don’t Cry எனும் படக்  கதையின் வழி காட்டியுள்ளார் இயக்குனர் கிம்பர்லி பியர்ஸ்.( Kimberly Pierce).

அமெரிக்காவில் உள்ள நெப்ராஸ்கா( Nebraska) மாநிலத்தின் தலைநகரான லின்கோல்னில் (Lincoln), 1993-இல் தீனா பிரண்டன் எனும் பெண்ணுக்கு நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தை, அதன் அசல்தன்மைக் குறையாமல் நமக்கு வழங்கி இருக்கிறார் இயக்குனர். படத்தின் தொடக்கத்தை  லின்கோல்னில் ஆரம்பித்து, புறநகரமான ஃ பால் சிட்டியில் கதைக் களத்தை விரிவுபடுத்தி இருக்கிறார்.

1999 -இல் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் தீனா பிரண்டன் பாத்திரத்திற்குப் பொருந்தும் நடிகையைத் தேடி ஏறக்குறைய 3 ஆண்டுகள் அலைந்திருக்கிறார் கிம்பர்லி. ஒரு சமயத்தில் நடிகை கிடைக்காமல் படத்தைக் கைவிடலாம் என்று நினைத்ததும் உண்டு என்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கிம்பர்லி தெரிவித்துள்ளார்.

உண்மையான தீனா பிரண்டன் வாழ்ந்த லின்கொல்ன் நகரத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டவள்தான்  ஹிலரி ஸ்வான்க் ( Hilary Swank ).

கதையின் உயிரோட்டமே  பிரண்டன் தீனா  பாத்திரமும் நகரத்திலிருந்து அவளுக்குக் காதலியாக வரும் லானா (Chloë Sevigny) என்பவளும்தான். பிரண்டன் தீனா பாத்திரத்தில் நடித்திருக்கும் ஹிலரி ஸ்வான்க் தன்னுடைய பெண் அடையாளத்தை மறந்து, ஆணாக வாழும் பெண்ணின் கதாப்பாத்திரதில் வாழ்ந்து காட்டியுள்ளார்.

\பிரண்டன் கதாபாத்திரம் உயிரோட்டமாக இருப்பதற்கு கடுமையாக உழைத்துள்ளார் என்பதை தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் ஹிலரி தெரிவித்துள்ளார். தன்னுடைய கணவனின் ஆடைகளை அணிந்து கொண்டு ஆண் தன்மையை உள்வாங்கி ஏறக்குறைய ஒரு மாத  காலம் அவள் தன்னுடைய வீட்டில் கதாப்பாத்திரப் பயிற்சியை மேற்கொண்டுள்ளார். வெளி சமூகத்திடமும் ஆணாக மாறி வாழ்ந்த தருணங்களில் அவள் சேகரித்துக் கொண்ட அனுபவங்கள் படத்தின் கதாபாத்திரத்திற்கு உயிர் சேர்த்திருந்தது. அவளுடைய உழைப்பு அவளுக்கு Academy Award for Best Actress மற்றும் the Golden Globe Award for Best Actress in a Motion Picture – Drama எனும் இரு விருதுகளை வழங்கியது.

தீனா பிரண்டன் பிரண்டன் தீனா

20 வயது தீனா பிரண்டன், பிரண்டன் தீனாவாக தன் பெயர்  அடையாளத்தை மாற்றிக் கொள்கிறாள். தலை மயிரைக் குட்டையாக வெட்டுகிறாள். மார்பகங்களை நீண்ட துணியால் சுற்றி அதன் புடைப்பை மறைக்கிறாள். ஆணுறுப்பு வடிவம் தெரிய வேண்டும் என்பதற்காக  அவ்விடத்தை உருண்டை வடிவமாக்கிய காலுறைகளால் நிரப்புகிறாள். கட்டம் போட்ட சட்டை, ஜீன்ஸ் பேண்ட், தொப்பி ஆகியவைகளை அணிந்து கொண்டு வாயில் பற்ற வைத்த சிகரெட்டுடன் கண்ணாடி முன் அவள் தன்னை பார்த்துக்கொண்டு ஆனந்தம் அடைகிறாள்.  இதற்குப் பிறகு தன்னை ஆணாக சமுதாயம் ஏற்றுக்கொள்ள தன்னை அவர்கள் மத்தியில் உலவ விட்டுச்  சோதிக்கிறாள். பெண்களின் முத்தங்களும், செக்ஸ் உறவுகளும் தீணாவுக்கு உற்சாகம் கொடுக்கின்றன. தன்னுடைய ஆண் அடையாளத்தை எந்தவொரு சந்தேகமும் இல்லாமல் பெண்கள் ஏற்றுக் கொண்டிருந்தது தீனாவுக்குத் துணிச்சலைக் கூட்டுகிறது.

தீனாவின் தேடல் நீண்டது. வாழ்க்கை குறித்தான அவளுடைய கனவு விரிந்தது. ஃபால் சிட்டி ( Fall City) எனும் சிறிய புறநகரில் அவள் தேடிக்கொண்டிருந்த  காதல், குடும்பம் என்ற கட்டமைப்பு கிடைக்கிறது.  அவள் கனவு கண்ட காதலி (லானா) வாழ்க்கையில் கிடைத்துவிட்ட ஆனந்தம் அக்காதலியை மணந்து கொள்ளும் எண்ணம் வரை அவளைக் கூட்டிச் சென்றது. இந்த ஆனந்தம் எல்லாம் பிரண்டன் ஆண் அல்ல பெண் என்று தெரியவரும் பொழுது அனைத்தும் அவள் வாழ்க்கையில் எதிரிகளாக மாறி விடுகின்றன. அவளுடைய காதலி லானாவைத்  தவிர.

எதிரி 1: லோனி 

ஒரு பெண்ணுடன் வெளியே செல்வதற்கு( Dating)முன் ,கண்ணாடியின் முன் நின்று  தன்னைboys 2 ஆணாக அலங்கரித்துக் கொள்கிறாள் பிரண்டன் தீனா. அவளுடைய உறவினன் லோனி (Matt McGrath) அவளின் செய்கையை அருவருப்பாகப்  பார்க்கிறான். நையாண்டி வார்த்தைகளில்  பேசுகிறான். “என் வாழ்க்கையில் இது போன்ற மிக  அச்சுறுத்தும் காட்சியை நான் பார்த்ததில்லை நீ ஆணாக இருந்திருந்தால் உன்னுடன் உடலுறவு வைத்துக் கொண்டிருப்பேன்” என வார்த்தைகளால் லோனி பிரண்டனின் உருதிரிபை ஏளனப்படுத்துகிறான். மற்றுமொரு காட்சியில் தன்னுடைய காதலி லானாவை திருமணம் செய்து கொள்ளப்போவதாக தன்னுடைய எண்ணத்தை லோனியிடம் தெரிவிக்கிறாள் பிரண்டன். ” உன் பாலியல் மாற்றத்திற்கு முன்பா அல்லது பின்பா?  நீ ஒரு பெண் என்று சொல்வதற்கு முன்பா அல்லது பின்பா? போன்ற கேள்விகளால் பிரண்டனின் இருப்பை நிராகரிக்கிறான் பிரண்டனின் உறவினன் லோனி.

எதிரி 2 : காதலியின் அம்மா

பிரண்டன் ஒரு பெண் என்று லானாவின் அம்மாவுக்குத் தெரியவருகிறது. “என் மகளை உன் வியாதிக்கு ஆளாக்கிவிட்டாய் என்று லானாவின் தாய் பிராண்டனின் நிலையை நோயாகக் கருதி சிறுமைப்படுத்தும் சொல்லை உபயோகப்படுத்துகிறாள். நிதமும் போதையில் உறங்கி எழும் லானாவின் தாய், லானாவின் எதிர்காலம் குறித்து சிந்திக்காதவள். ஒரு தாயின் கடமையைச் செய்யத் தவறிய லானாவின் தாயின் செய்கையைக் கண்டு எரிச்சல் அடைந்து வந்திருந்த லானாவுக்கு பிராண்டனின் நெருக்கம் அவளுக்கு ஒரு கனவைக் கொடுத்தது. இலக்கு இல்லாமல் போதையில் வாழ்ந்து கொண்டிருந்த லானாவின் உள்ளத்தில் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் பிறக்க பிரண்டன் காரணமாகிறாள்.

எதிரி 3 : ஆண்கள்

பிரண்டனை ஆணாக பார்த்திருந்தபோது அனைவரும் நன்றாகப் பழகி வந்தனர். பிரண்டன் மேல் அனைவரும் கொண்டிருக்கும் நட்பு ஜோனுக்குப் பொறாமையைக் கொடுத்திருக்கலாம். அவனிடம் நீ எதைக் கண்டாய் என்று ஜான் லானாவிடம் எரிச்சலோடு கேட்கிறான். சின்ன உருவம், மென்மையான உடம்பு, ஆணுக்கு இல்லாத ஸ்திரமற்ற உடல் என்ற தோற்றத்தில் பிரண்டன் இருந்தாலும் ஜோனிடம் லானா நெருங்கிப் பழகாதது அவன் ஆண்மைத் தன்மைக்கு ஒரு சவாலாகவே ஜோன் கருதினான். பிரண்டன் ஆணல்ல ஒரு பெண் என்பதை அறிந்தவுடன் அவளை வலுக்கட்டாயமாக அறையில் தள்ளி, ஆடைகளை அகற்றி அவளது குறியில் விரலை விட்டு பரிசோதிக்கும் காட்சி கொடுமையானது.

ஜான், டோம் இருவரும் பிரண்டனை அடித்து துன்புறுத்துகிறார்கள். அவள் அணிந்திருந்த உள்ளாடையைக் கழற்றி பெண் குறியை லானாவிடம் வலுக்கட்டாயமாகக் காட்டுகிறார்கள். லானாவின் குடும்பமே அந்தரங்கத்தைப் பார்த்து விடுகிறது. இது நாள் வரை ஆணாக அவர்கள் முன் வாழ்ந்து கொண்டிருந்த பிராண்டனின் உணர்வுகளை லானாவின் குடும்பத்தின் மத்தியில் ஊனமாக்கிவிட்டார்கள். ஆனால் பிரண்டா அத்தருணத்திலும் தன்னை ஆணாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை அவளுக்கு எதிராக இருந்த கண்ணாடியில் அவள் தன்னை ஆண்  உடையுடன் பார்க்கும்  காட்சி  பேசுகின்றது.

ஆண் எனும் நோய்

சராசரி ஆண்களின் தொடுதலைக் காட்டிலும் பிராண்டனின் தொடுதல்களும் அணுகுமுறையும்  பெண்களைக் கவருவதாக காட்சிகளில் காண முடிகிறது. பிரண்டன் பெண்களைப் பார்க்கும் விதம்,பேசும் விதம், முத்தங்கள் பரிமாறும் விதங்கள் அனைத்தும் பெண்கள் இதுநாள் வரை எந்த ஆணிடத்திலும் கண்டிராத ஸ்பரிசங்களாக இருக்கலாம் என்பதை கூடல் காட்சிகளில் இயக்குநர் நுட்பமாகச் சித்தரிக்கிறார். பிரண்டன்-லானா இருவருக்கிடையே நடக்கும் கூடல் காட்சியில் லானா உச்ச முனகல்கள், முக பாவங்கள்  திருப்திகளின் பாசைகளாக மொழிப்பெயர்க்கிறது. உடற்கூறுவகையில்  பிரண்டன் ஒரு பெண்ணாக இருந்தாலும் லானாவை அவளால் திருப்தி படுத்த முடிகிறது. ஒரு பெண்ணின்  உடலுறவு திருப்தி  தனது குறியின் அளவிலும் திடத்திலும் இருப்பதாக நம்பியிருக்கும் ஆண்களின் செக்ஸ் புரிதலை கிம்பர்லி  இக்காட்சிகள் வழி முறியடித்திருக்கிறார்.  ஆண்மையை குறிகளுக்குள் மட்டும் அடக்கிப்பார்க்கும் செக்ஸ் புரிதல் பெண்களின் உள்ளுணர்வுத் தேவைகளை இன்னும் புரிந்து கொள்ளவில்லை.

செக்ஸ் உறவு என்பது அந்தரங்க உறுப்புகளுக்கிடையில் ஏற்படும் நுகர்ச்சி மட்டும் அல்ல. அது உணர்வுகளுடன் பேசும் ஆன்மிக மொழி. பெண்கள் அன்பான அரவணைப்பையும் கவனிப்பையும் விரும்புகிறவர்கள். அது ஆணிடமிருந்துதான் கிடைக்கக் கூடியது அல்ல; பெண்ணிடமிருந்து கிடைக்கும் என்பதை இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் களவியல் காட்சிகளில் புரிந்து கொள்ள முடியும். பிரண்டன் பெண் என்று  லானாவுக்குத் தெரிந்த பிறகும்  லானா மறுபடியும் பிரண்டனுடன் களவி வைத்துக் கொள்கிறாள். பிராண்டனின் பிரமாதமான முத்தங்களில் விழுந்துவிட்டவளாகவும், அவளின் அரவணைப்புக்காகக் காத்திருப்பவளாகவும் லானா மாறுகிறாள். லானாவு நினைவுகளில்  வந்து போவது பிராண்டாவின் உருவமல்ல. பிராண்டாவினால்  கிடைக்கும் விடுதலை உணர்வு என்பதை காட்சிகள் விவரிக்கின்றன. ஆண்மை பலத்தை முறுக்கேற்றிய தசைகளிலும், வீரிய வேகத்திலும் காட்ட  நினைத்துக் கொண்டிருக்கும் ஆண்கள், பெண்களின் உண்மையான அகத்தேவையைக் கண்டு அழவேண்டாம் என்று படத்தின் தலைப்பு சொல்லவருவதாகவும் பொருள் படுத்திக் கொள்ளலாம்.

அதேபோல, பிரண்டா பெண் என்று தெரிந்தவுடன் அவள் மீது வக்கிரம் கொண்ட ஜான் மற்றும் டோம் அவளைக் காரில் ஏற்றிக் கொண்டுச் சென்று ஒரு ஒதுக்குப்புறத்தில் வைத்து மாறி மாறி  வன்புணர்ச்சி செய்கின்றனர். அடி உதைகள் கொடுத்து பிரண்டனைத் துன்புறுத்துகின்றனர். சுழன்று விழுந்த பிரண்டனை மறுபடியும் காரில் ஏற்றிக் கொண்டு செல்லும் போது அமைதியாக இருந்தால் உயிர் பிழைப்பாய் என்று மிரட்டுகின்றனர். இது நாள் வரை ஆணாக இருந்த பிரண்டனை ஒன்றும் செய்யாத அவர்கள் பெண் என்றதும் ஆணாதிக்கத்தைக் காட்டுகின்றனர். பெண்களுக்கு எதிராக இயங்கும் ஆண்கள் அவர்களை அவமானப்படுத்தும் செயலாக வன்புணர்ச்சியைக் கையில் எடுக்கின்றனர்.

பயந்த உண்மைகள்

boys1அவமானத்திலிருந்து, நிராகரிப்பிலிருந்து தன்னை காப்பாற்றிக்  கொள்ள பிரண்டன் போன்ற திருநம்பிகள் தங்களுடைய அடையாளத்தை மறைத்து வாழ பொய்களைக் கையாளுகின்றனர்.

பிரண்டன் பெண்களுக்காகப் பேசும் ஆணாக தன்னைக் காட்டிக் கொண்டாள். பெண்களுக்கு முன் ஆண்களிடம் சண்டை போடுதல், ஆபத்தான விளையாட்டுகளை விளையாடுதல், சிகரெட், மது அருந்துதல் போன்ற நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள் பிரண்டன். அது படிப்படியாக குற்றங்களாக வளர்கிறது. சில குற்றங்களுக்காக சிறையில் அடைப்பட்ட பிரண்டனை லானா வந்து சந்திக்கிறாள். “ஏன் உன்னை பெண் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள்” என்று அவள் கேள்வி எழுப்புகிறாள். அங்கேயும் அவள் தன்னை இருபாலுயிரி (hermaphordite) என்றும் தமக்கு ஆண் குறியும் பெண் குறியும் உண்டு என்றும் இது பிறவியின் குறைபாடு என்றும்  சொல்கிறாள்.

ஜான், டோம் ஆகியோரால் பிரண்டனுக்கு நடந்த கொடூரம் போலீசில் புகார் செய்யப்படுகிறது. உருக்குலைந்து இருக்கும் பிராண்டனிடம் போலீஸ் அதிகாரி ஒரு குற்றவாளியிடம்  விசாரணை செய்வதைப்போல விசாரிக்கிறார். அவர்கள் பிரண்டனை எப்படி வன்புணர்ச்சி செய்தார்கள்? மறைவிடத்தில் கையை வைத்தார்களா? எங்கே குத்தினார்கள்? காருக்குள் நீ எப்படி படுத்திருந்தாய் போன்ற கேள்விகளைக் கேட்டு  விசாரித்தபோது பிராண்டனின் கண்களிலிருந்து வழியும் கண்ணீரும் அவளது மௌனமும் சமுதாயத்தின் மேல் ஒரு கோபத்தை மூட்டுவதாக இருந்தது.

” நீ பெண்ணாக இருந்து ஏன் ஆண்களோடு சேர்ந்து சுற்றுகிறாய்? பார்க்கும் பெண்களையெல்லாம் முத்தம் கொடுக்கிறாய்” போன்ற கேள்விகள் பாதிக்கப்பட்டவளின் மனோ நிலையை அறியாது அல்லது அவளது நிலையை ஏற்றுக் கொள்ள மறுக்கும் அதிகாரத் திமிரைக் காட்டுவதாக கிம்பர்லி அக்காட்சியை காட்டுகிறார். பிராண்டாவின் செய்கையை குற்றமாகப்பார்த்த அதிகார வர்க்கம் அவளுக்கு நடந்த அநீதியை மெத்தனப் போக்கில் கடக்கிறது .

இறுதியில் பாலியல் வல்லுறவு செய்தவர்களாலேயே துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்படும் காட்சியில் ஒரு குற்றமும் செய்யாத பிரண்டன் சரிந்து கீழே விழுகிறாள். மீண்டும் கத்தியால் அவள் வயிற்றுப் பகுதியில் குத்தப்படுகிறாள். அது பிரண்டன் காவல் நிலையத்தில் புகார் செய்ததால் உண்டான கோபம் மட்டுமல்ல ஆணாக உணரும் பெண் அடையும் காமத்தின் நிறைவு கொடுக்கும் அச்சத்தின் வெளிபாடு என திரைப்படம் பார்ப்பவர்களுக்கு வேறொரு உண்மை அறைகிறது.

 

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...