பறந்து போகலாம்

பெற்றோரின் வேலைச் சூழலால், வீட்டில் நாள் முழுவதும் பூட்டி வைக்கப்படும் அன்பு எனும் சிறுவன், தன்னைச் சாமர்த்தியமாக வீட்டிலிருந்து விடுவித்துக்கொண்டதோடு தன் பெற்றோருக்கும் இறக்கைகள் உள்ளன என நினைவுறுத்தி அவர்களையும் பறக்க வைக்கும் படம் ‘பறந்து போ’.

வெளி உலகம் ஆபத்தானது என, வீட்டிலேயே குழந்தைக்காகத் தனி உலகம் ஒன்றை உருவாக்க முயலும் நடுத்தரவர்க்க பெற்றோர்கள் அடையும் நிறைவு என்பது, தங்கள் குழந்தைகளுக்காக அவர்கள் செலவிடும் பணம்தான். இணைய வகுப்புகளாலும் விரைவுணவுகளாலும் விளையாட்டுப் பொருட்களாலும் அவ்வுலகை இடைவிடாது நிறைத்து மூச்சு முட்டச் செய்கின்றனர். அதற்காகச் செலவிடும் பண மதிப்பின் மூலமாக அசட்டுத்தனமான நிறைவை அடைகின்றனர். ஆனால் இவற்றையெல்லாம் ஒரு குழந்தை உண்மையில் விரும்புகிறதா என அவர்கள் கேட்பதே இல்லை.

இப்படி அடைந்துகிடக்கும் ஆயிரக்கணக்கான சிறுவர்களில் ஒருவன், தனக்கு இறக்கை உள்ளதை மறவாத ஜீவனாக இருந்தால், அவனுக்கு அந்த வீடு எத்தனை அருவருப்பானதாக மாறும் என்பதில் படம் தொடங்கி விரிகிறது.

***

தான் உருவாக்கிக்கொண்ட சந்தர்ப்பத்தினால் அப்பா கோகுலுடன் (மிர்ச்சி சிவா)  மோட்டார் சைக்கிளில் நீண்ட நாட்களுக்குப்பின் பயணம் செய்யும் வாய்ப்பு அன்புவுக்கு அமைகிறது. அது அவன், தன் அப்பாவுக்கும் அமைத்துக்கொடுத்த வாய்ப்புதான். அப்பயணங்களில் சந்திக்கும் மனிதர்களால் இருவரும் அடையும் மன மாற்றங்களே திரைக்கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இப்பயணத்தில் இரண்டு வெவ்வேறு பின்னணி கொண்ட வீடுகளுக்குச் செல்லும் வாய்ப்பு இருவருக்கும் வாய்க்கிறது. முதலாவது, சிறிய அளவில் உணவகம் நடத்தும் கோகுல் பள்ளித்தோழியின் (அஞ்சலி) குடும்பம். ஒருநாளைக்கு இவ்வளவு சம்பாதித்தால் போதுமானது எனும் மனநிலையில் அமைத்துக்கொண்ட வாழ்க்கை அவர்களது. அஞ்சலியின் கணவனும் அவ்வாறான மனநிலையில் இயங்குகிறார். அவர்கள் மகன், அன்புவுக்கு மலையையும் காட்டையும் அறிமுகம் செய்கிறான். அவ்வூர் குளத்தில் குளித்து மகிழ்கிறான் அன்பு. அதுபோலவே அன்புவின் பள்ளி தோழி ஜென்னா வீட்டுக்கும் இருவரும் செல்கிறார்கள். அன்பு படிக்கும் பள்ளி பணக்கார சிறுவர்கள் பயில்வது. எனவே ஜென்னாவின் வீடு ஆடம்பரமாக உள்ளது. அவள் அப்பா (விஜய் யேசுதாஸ்) ‘சூப்பர் பைக்’கை ஒன்றுக்கு மேல் வைத்துள்ளார். தோழி தன் அறைக்குள் படுத்தபடி அண்டவெளியை திரையில் பார்த்துக்கொண்டிருக்கிறாள். தன் வீட்டினுள் இருக்கும் நீச்சல் குளத்தில் அன்பை குளிக்க அனுமதிக்கிறாள்.

உயிர்பூத்த மலையில் வெற்றுக்கால்களில் ஏறும் சிறுவனும் குளிரூட்டிய இருண்ட அறையின் திரையில் விண்வெளியைப் பார்க்கும் சிறுமியும் அன்புக்கு புரிய வைப்பது ஒன்றுதான், இருவருமே அவரவர் பெற்றோருடன் நேரத்தைச் செலவிடுகிறார்கள். ஒருநாளைக்கு இவ்வளவு போதும் என உணவகம் நடத்துபவரும் தேவைக்கு மேல் அதிகமாக ‘சூப்பர் பைக்’ வைத்திருப்பவரும் கோகுலுக்கு உணர்த்துவது ஒன்றுதான், அவர்கள் மகிழ்ச்சியைத் தேடி ஓடவில்லை நிறைவு கொடுக்கும் நிம்மதியை அனுபவிக்கிறார்கள்.

மூன்று ஆண்களின் மனநிலைக்கும் மோட்டார் வண்டி ஒரு குறியீடாகவே வருகிறது. அஞ்சலியின் கணவர் சைக்கிள் போல பெடலை சுழற்றி உயிர்ப்பிக்கும் மோட்டார் வண்டியையும் விஜய் யேசுதாஸ் ஒன்றுக்கும் மேற்பட்ட சூப்பர் பைக்கையும் பயன்படுத்த கோகுல் வாங்கிய மோட்டார் வண்டிக்கு கடன் செலுத்த முடியாமல் வட்டிக்காரனிடம் ஓடி ஒளிகிறார். மூவரும் மோட்டார் வண்டியைப் பயன்படுத்தும் நோக்கமும் பயணத்திற்கும் பிழைப்புக்கும் கேளிக்கைக்கும் என அது மாறுபடுகிறது.

இயக்குனர் ராம், பணக்காரனாக இருப்பது சமூகக் குற்றமென்றோ அவர்கள் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக வேண்டியவர்கள் என்றோ அதுபோல, எளிமையாக வாழ்வை வடிவமைத்துக்கொள்வதே சிறந்த முறையென்றும் அப்படி வாழ்பவர்களே உயர் ஆன்மாக்கள் என்றும் இரட்டை நிலைகளில் வாழ்வை அணுகவில்லை. நாம் இருக்கும் நிலையில் நிறைவை எவ்வாறு சின்னச் சின்னத் தருணங்கள் வழியாக உருவாக்குவது என்றே படம் முழுவதும் காட்டிச் செல்கிறார். மகிழ்ச்சி என நம்பி, நாம் பாவனையாக உருவாக்கிக்கொள்ளும் வசதிகள் எவ்வாறு நகைமுரணாக நமது நிம்மதியைத் தின்று செழிக்கும் கோர விலங்காகிறது என்பதை விவாதிக்கிறார்.

***

படத்தில் இரண்டு தந்தை மகன் உறவு வருகிறது. கோகுலின் தந்தையாக வரும் பாலாஜி சக்தி வேல், அவர் மகனை என்றுமே அறிந்துகொள்ள முயலாதவர். இளமையில் அவன் விரும்பியவைகள் எல்லாம் வீணானவை என நினைப்பவர். சிறுவர்களுக்கென ஓர் உலகம் உள்ளது என்பதை உணராதவர். அவர் உலகம் தகவல்கள் நிரம்பியவை. அவர் கண்ணசராமல் பார்த்துக்கொண்டிருக்கும் செய்தித் தொகுப்பால் அவர் வாழ்வில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. மேலும் இறுக்கமானவராகவும் மனிதர்கள் மீது நம்பிக்கையற்றவராகவுமே அவர் இடைவிடாது பார்க்கும் போர்க்காட்சிகள் அவரை மாற்றக்கூடியது.

கோகுலின் வாழ்க்கைச் சூழல் அவனைத் துரத்தினாலும் மகனின் உலகை உணர்ந்தவனாகவே வருகிறான். உண்மையில் அன்பு ஒவ்வொரு முறையும் கோகுலிடம் தப்பி ஓடவில்லை. கோகுலே தன் மகனை ஓட அனுமதிக்கிறான். ஒவ்வொரு முறையும் அவன் மகன் தன்னிலிருந்து விலகி ஓடி உலகில் புதிதாக ஒன்றை அறிவதை அனுமதிக்கிறான்; பூரிப்படைகிறான். மனிதர்களிடம் பழக விடுகிறான். சக மனிதர்கள் நல்லவர்கள் என்பதை மனதில் பதிய வைக்கிறான்.

உண்மையில் இந்தப் படத்தில் வரும் அனைவருமே நல்லவர்கள். அல்லது மனிதர்களின் நல்ல குணங்கள் வெளிபடும் தருணங்களை மட்டும் இயக்குனர் தொகுத்தளித்துள்ளார். தந்தை மகனின் கதை ஒரு பக்கம் நகரும்போது அவன் மனைவி குளோரி (கிரேஸி ஆண்டனி) கோவையில் தற்காலிகமாகப் புடவை கடை நடத்தும் சூழலும் இன்னொரு இணை கதையாக வருகிறது. கணவனுக்காக மதம் மாறியதுடன் அவன் சுமையைக் குறைக்க பாடுபடும் பெண். பார்த்துப் பார்த்து செலவு செய்யும் அவள்தான் தன் கடையில் பணியாற்றும் பெண்ணுக்கு அவசரம் எனும்போது பணத்தைத் தூக்கியும் கொடுக்கிறாள்.

***

கோகுலின் பள்ளித்தோழியான அஞ்சலி ஒரு சமயம் கேட்கிறாள், ”ஏன் உன்னிடம் பழைய கலகலப்பில்லை?”

கோகுல் அதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் அந்நிலத்தில் தொலைத்த சிரிப்பைதான் மகனுக்காகத் தேடி வந்திருக்கிறான். பந்துவிளையாட அவன் வாங்கிய சட்டையை அவன் மகனுக்குப் போட்டு அழகு பார்க்கிறான். அவன் விளையாடவே முடியாத காற்பந்தை மகன் விளையாடுவதைப் பார்த்து நெகிழ்ந்துபோகிறான். தனக்குக் கிடைக்காத தந்தை ஒருவரை தன்னிலிருந்து உருவாக்கி எடுக்கிறான், தன் மகனை பறந்துப்போகச்சொல்லி மௌனமாகத் துரத்திக்கொண்டே இருக்கிறான்.

வழக்கமான திரைப்படத்தில் வரும் தீர்க்க முடியாத சிக்கலோ அதை தீர்க்கும் நாயகன் அழுத்தமே இப்படத்தில் இல்லை. எனவே அடுத்து அடுத்து எனும் பதற்றமான மனநிலையை இப்படம் உருவாக்காது. ஆனால் இப்படம் முன்வைக்கும் உரையாடல் அழுத்தமானது. நாம் நமது குழந்தைகளின் பெயரைச் சொல்லி எதையெல்லாம் இழக்கிறோம்? அப்படி இழக்கும் ஒன்றுக்காக குழந்தைகளின் உலகையும் சேர்த்து எவ்வாறு அழிக்கிறோம்? அப்படி இரகசியமாக ஓர் அழிவை நிகழ்த்தியப் பிறகு அதைத் தியாகம் எனப் பீற்றிக்கொள்ளும் நாம் எவ்வளவு பெரிய மூடர்கள்.

(Visited 69 times, 84 visits today)