
தமிழ் எழுத்துகளைக் கணினியில் உபயோகிக்கும் அனைவருமே அறிந்த சொல் ‘முரசு’. முரசு அஞ்சல் மென்பொருள் பல்வேறு புதிய கூறுகளுடன் மேம்படுத்தப்பட்டு ஜூன் 27 ஆம் திகதி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிஏசி (Brickfields Asia College) மண்டபத்தில் மதியம் 3 மணிக்கு வெளியீடு காண்கிறது. இந்நிகழ்ச்சியில் என்னைக் கவர்ந்த அம்சம் ‘உரு’ எனும் நூலின் வெளியீடு. முத்து நெடுமாறனின் வாழ்வைச் சொல்லும் நூல். கோகிலாவின் எழுத்தில் வெளிவருகிறது.
இப்படி ஒரு நூல் மலேசியாவில் வரவேண்டும் எனும் ஆசை எனக்கு நெடுங்காலமாக உண்டு. அதற்கான முன்னெடுப்புகளை முன்னமே செய்திருக்கிறோம். அதுபற்றி பின்னர் சொல்கிறேன். இப்போது முத்து நெடுமாறன் கதைக்கு வருவோம்.
கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன், முத்து நெடுமாறன் அவர்களிடமிருந்து ‘மெசேஞ்ஜரில்’ ஓர் அழைப்பு. ‘வல்லினமும் செல்லினமும் சந்திக்கலாமா?’
உண்மையில் அப்படி ஓர் அழைப்பை நான் எதிர்பார்க்கவில்லை. வல்லினம் இணைய இதழை அவர் பார்த்திருக்கிறார் என்பதே ஆச்சரியமாக இருந்தது. அவரை அதற்குமுன் எழுத்தாளர் சங்க நிகழ்ச்சி ஒன்றில் தூரத்தில் இருந்து பார்த்திருக்கிறேன். முரசு மென்பொருளின் பயன்பாடு குறித்து விளக்கமளித்துக்கொண்டிருந்தார் என நினைவு. ஆறடி உயரத்திற்குக் குறையாமல் இருந்தார், நிகழ்ச்சி முடிந்தபிறகு அனைவரிடமும் அவ்வளவு பூரிப்புடன் பேசிக்கொண்டிருந்தார். அது எப்படி ஒரு கணினியல் நிபுணரால் இவ்வளவு இயல்பாகச் சிரிக்க முடியும் எனக் குழம்பிப் போனேன். கணினியியலாளர், கணக்கு டீச்சர், கணக்காளர், கந்துவட்டிக்காரர்கள் என எல்லாருமே ஒரே ரகம் என்றே என் மனதில் பதிந்திருந்தது. அவர்கள் ‘உம்’ எனும் முகத்துடன் எண்களுடன் முயங்கிக்கிடப்பவர்கள் என்பதே என் எண்ணம். முத்து நெடுமாறன் அப்படியில்லாதது ஆச்சரியமாக இருந்தது. அதைவிட ஆச்சரியம் அவையிலும் அரங்கிலும் அவர் அழுத்தமான குரலில் தெளிவாகத் தமிழ் பேசியது.

முத்து நெடுமாறன் அவர்களைச் சந்திப்பதில் எனக்குத் தயக்கம் இருந்தது. கணினியல் குறித்து எனக்குப் போதுமான அறிவு இல்லை. எனவே நண்பர் சிவா பெரியண்ணனை உடன் அழைத்தேன். வல்லினம் இணைய இதழ் 2012 வரை HTML முறையிலேயே வெளிவந்தது. அதை வடிவமைத்தவர் சிவாதான். அதன் பின்னர் wordpress முறைக்கு மாறியபோது சிவாதான் அதனை நிர்வகித்துக்கொண்டிருந்தார். எனவே சிவா உடன் வந்தால் முத்து நெடுமாறன் கேட்கப்போகும் கஷ்டமான கேள்விகளுக்கு பதில் கொடுத்துவிடலாம் என எண்ணியிருந்தேன்.
ஆச்சரியமாக ஒரு மணி நேரம் முத்து நெடுமாறனிடம் பேசியதில் அனைத்துமே புரிந்தது. முதலில் நானொரு கணினியியல் மேதையாகிவிட்டேன் என்றே நினைத்தேன். பின்னர்தான் அவர் எனக்குப் புரியும் வகையில் பேசினார் என்பதே புரிந்தது. இந்தப் பண்பை நான் ஆளுமைகள் என மதிக்கும் பலரிடமும் கவனித்துள்ளேன். குறிப்பாகச் சொல்வதென்றால் ஜெயமோகனிடம். ஊட்டி முகாமில் மண்டபத்தில் கேட்கப்பட்ட சிக்கலான கேள்விகளுக்கு பல்வேறு இலக்கியப் பிரதிகளில் இருந்து விவாதத்தைத் தொடர்ந்த அவர்தான், உணவு வேளையின்போது பதினாறு வயது சிறுமிக்கு எளிமையான முறையில் சில விளக்கங்களைப் பகிர்ந்துகொண்டிருந்தார். ஒரு துறையில் ஆழமான அறிவுள்ளவர்களால் மட்டுமே அதுகுறித்து எளிமையாகவும் வெளிப்படுத்த முடிகிறது.
‘செல்லினம்’ குறித்துதான் அன்று பெரும்பாலும் பேசினோம். செல்லினத்தை நான் அறிந்து வைத்திருந்தேன். புலனம் வருவதற்கு முன்பே குறுஞ்செய்திகள்தான் பெரும் ஆதிக்கம் செலுத்தியதை இன்றுள்ள தலைமுறை பலரும் அறிந்திருந்தாலும் அது எவ்வளவு ‘பெரிய’ தாக்கமாக இருந்தது என்பதை அறிந்திருக்கமாட்டார்கள். எளிமையாகச் சொல்வதென்றால் மலேசியாவை ஸ்தம்பிக்க வைத்த ‘ஹிண்ட்ராப்’ போராட்டத்தின் முக்கியமான தொடர்பு ஊடகமே குறுஞ்செய்திகள்தான். அந்தக் குறுஞ்செய்தியில் தமிழை எடுத்து வந்தவர் முத்து நெடுமாறன் என்பதுவரை தெரிந்து வைத்திருந்தேன். திறன்பேசி வருகைக்குப் பின்னர் 2009இல் ஐ-ஃபோனிலும் 2012-ம் ஆண்டு முதல் கூகுள் பிளே வழி எல்லா ஆண்டிராய்டு கருவிகளிலும் செல்லினத்தை இணைத்து தமிழ் எழுத்துகள் வழியான தொடர்பாடலை உருவாக்கினார் முத்து நெடுமாறன். அப்போது நான் Sumsung Galaxy SII பயன்படுத்திக்கொண்டிருந்தேன். செல்லியல் பயன்பாட்டை அறிந்து வைத்திருந்தேன்.
முத்து நெடுமாறன் அவர்களிடம் அன்றைய உரையாடலில் என்னை உற்சாகப்படுத்தியது அவர் ஸ்டீப் ஜாப்ஸை நேரில் சந்தித்த கதைதான். தொடக்கத்தில் நான் சொன்னதுபோல நானும் சிவாவும் ஸ்டீப் ஜாப்ஸ் வாழ்வை நூறு பக்கத்தில் அடங்கும் நூலாக வெளியிட விரும்பினோம்.
ஸ்டீவ் ஜாப்ஸைத் தேர்வு செய்ய மூன்று முக்கியக் காரணங்கள் இருந்தன. முதலாவது, இளம் தலைமுறைக்கு உலகை மாற்றிய ஆளுமைகளை வரலாற்றில் இருந்து தோண்டி எடுக்காமல் சமகாலத்து மனிதனாக அறிமுகம் செய்ய வேண்டும். இரண்டாவது, அப்படி தேர்ந்தெடுக்கும் மனிதர்களின் வெற்றி என்பது வணிகம், அரசியல் சார்ந்ததாக மட்டுமல்லாமல் புத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். மூன்றாவது அவர்களின் வாழ்வை எளிமையான சுவாரசியமான மொழியினால் இளம் தலைமுறையை வாசிக்க வைத்து அவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குவதுடன் பெரும் வெற்றிக்குப் பின் உள்ள ஆளுமைகளின் மன ஆழங்களை அறியவைக்க வேண்டும். இது இளம் தலைமுறையினரிடையே வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குவதுடன் அவர்களின் மன அமைப்பிலும் நேர்நிலை மாற்றத்தை விதைக்கும் என நம்பினோம்.
இத்தகைய ஒரு நூலை எழுத பொருத்தமானவர் எழுத்தாளர் அக்கினி மட்டுமே என்பதால் அவர் உதவியை நாடினோம். அவரும் விரைவாக அப்படி ஒரு தொடரை எழுதத் தொடங்கினார். ஆனால், தொழில்நுட்பம் சார்ந்த நுணுக்கமான பகுதிகள் வந்தபோது அவரால் அக்கட்டுரையைத் தொடரமுடியவில்லை. ஆனால் அதுவரை அக்கினி எழுதிய தொடரால் நானும் ஸ்டீவ் ஜாப்ஸால் கவரப்பட்டிருந்தேன். அவரைச் சந்தித்து வந்த முத்து நெடுமாறனையும் பிரமிப்புடனேயே பார்த்தேன்.
***

1961இல் பிறந்த முத்து நெடுமாறன் அவர்களின் இயற்பெயர் முத்தெழிலன். தொழில்நுட்ப மாற்றங்களை மிகத் தாமதமாக சுவீகரிக்கும் தமிழ்ச் சூழலில் முத்து நெடுமாறனுக்கான வாசல்கள் திறக்க அவர் தந்தை முரசு நெடுமாறனின் இருப்பு முக்கியக் காரணமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. முரசு நெடுமாறன் மலேசிய இலக்கியச் சூழலில் தவிர்க்க முடியாத ஆளுமை. கெடாவில் லூனாஸ் எனும் சிற்றூரில் இருந்த எனக்கே அவரது பாப்பா பாடல்கள் அறிமுகமாகியிருந்தன. அவர் தொகுத்த மலேசியத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் தமிழ் அறிவுலகத்திற்கு மாபெரும் கொடை. முத்து நெடுமாறன் இவரது மூத்த மகன். முத்து நெடுமாறனின் வாழ்க்கையின் சுவடுகள் அவரது தந்தையின் வாழ்விலிருந்தே ‘உரு’ கட்டுரைத் தொடரில் ஆரம்பமானது மிகச்சிறந்த தொடக்கம்.
‘உரு’ தொடர் மெட்ராஸ் பேப்பரில் முப்பது பாகங்களாக வெளிவந்தது. தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் கோகிலா இத்தொடரை எழுதினார். முத்து நெடுமாறனிடம் தொடர்ச்சியாக உரையாடல் நிகழ்த்தி, அவரது நினைவுகளின் ஆழம் சென்று தான் பெற்றுக்கொண்டதை சுவாரசியமான எழுத்தாக மாற்றினார். ‘ஒரு மனிதன் ஒரு நகரம்’, ‘உலரா உதிரம்’, ‘பழி பகை பஞ்சம் பங்களாதேஷ்’ என பத்துக்கும் மேற்பட்ட அ-புனைவு நூல்களை எழுதியுள்ள கோகிலாவின் எழுத்தனுபவம் ‘உரு’ தொடரை சுவாரசியமானதாக மாற்றியது.
வரலாற்றில் மாற்றங்களை நிகழ்த்தியவர்களின் வாழ்வை முழுமையாக எழுதுவது அத்தனை எளிதானதல்ல. உதாரணமான ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்வை சொல்லும் ஆங்கில நூல்கள் ஐந்நூறு பக்கங்களிலும் கிடைக்கின்றன; நூறு பக்கங்களிலும் கிடைக்கின்றன. இமைய மலைத்தொடரை வானில் பறந்தபடி பார்வையிடுவது ஓர் அனுபவம் என்றால் அம்மலைத் தொடரில் உள்ள குறிப்பிடத்தக்க சிகரங்களின் உச்சங்களை மட்டுமே பார்ப்பது மற்றுமோர் அனுபவம். அந்த உச்சமான சிகரங்களே இமையத்தின் திரண்ட ஆற்றல். கோகிலா இந்நூலில் அதைதான் பதிவு செய்திருக்கிறார்.
1985-ல் முரசு நிறுவனத்தின் வழி ‘முரசு அஞ்சல்’ என்ற மென்பொருளை அறிமுகப்படுத்தியவர் முத்து நெடுமாறன் என்பது மட்டுமே பலரும் அறிந்த செய்தி. எழுத்துருவியல் வல்லுனராக அவர் உருவாகும் முன், எந்தப் புள்ளியில் இருந்து அவருக்கு எழுத்துகளின் மேல் ஆர்வம் தொடங்கியது என்பது சுவாரசியமான கதை.
எழுத்துகளை அடுக்கி, அவற்றைச் சொற்களாக்கி, ரப்பர் பேண்ட் மூலம் இணைத்து மைய்யில் தொட்டு ஸ்டாம்ப் மாதிரி அச்சடிக்கும் விளையாட்டுப்பொருளில் இருந்தே அந்த ஆர்வம் துளிர்விடுகிறது. எங்குப் பார்த்தாலும் தன் பெயரை அச்சடிக்கிறார். தொடர்ந்து பள்ளியில் ஓவிய வகுப்பில் எழுத்துருவை உருவாக்கும் திறன் போதிக்கப்படுகிறது. ஐந்துக்கு மூன்று கட்டத்தில் எழுத்துகளை எழுதும்போது ‘W’.’M’ ஆகிய எழுத்துகள் மட்டும் சற்று பெரியவை என்பதால் அந்த அளவுக்கட்டத்தில் அடங்க மறுக்கின்றன. சிறுவனாக இருந்த முத்தெழிலன் அதை அடக்குகிறார். தொடர்ந்து காலிகிராஃபியில் ஆர்வம் ஏற்பட்டு மை பேனா முனையை உடைத்து பட்டையாக எழுத்துகளை எழுதத் தொடங்குகிறார்.
இப்படித் தொடங்கும் அவரது பால்ய காலம் எவ்வாறு படிப்படியாக வளர்ந்து, மெல்ல அவருக்குத் தக்கச் சூழலை உருவாக்கிக் கொடுக்கிறது என விரிகிறது. கவனமாக வாசித்தால் வழங்கப்பட்ட சூழல்களில் அவர் தனது ஆற்றலை செலுத்தி தனக்கான உலகை வடிவமைத்துக்கொண்டுள்ளாரோ என்றும் தோன்றுகிறது.
இதுபோன்ற நூல்களை இளைஞர்கள் அவசியம் வாசிக்க வேண்டும் என நான் எண்ண சில காரணங்கள் உள்ளன. தோல்விகளில் எளிதாகத் துவண்டுவிடுதல், விரக்தியால் ஒன்றிலிருந்து முற்றிலுமாக விடுபடுதல், நீண்ட காலம் ஒரு துறையில் நிலையாதிருத்தல் எனும் மனப்போக்கு மலிந்துகிடக்கும் காலம் இது. முத்து நெடுமாறான் கடந்து வந்த ஏமாற்றங்களும் அதிலிருந்து மீண்டு, மேலும் சில உச்சங்களைத் தொட்ட கதைகளும் இத்தொடரில் சுவாரசியமாகப் பதிவாகியுள்ளன.
உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம்;
முத்து நெடுமாறன் பங்களிப்புடன் சிங்கப்பூரில் உருவான விசைப்பலகையை முறையான எழுத்துபூர்வ ஒப்பந்தம் இல்லாததால் அவராலேயே பயன்படுத்த முடியாத நிலை உருவாகிறது. செயலில் மட்டும் ஆர்வமாக இருந்த அவருக்கு காப்புரிமை குறித்த கவனம் இல்லாத காலமது. பெருத்த ஏமாற்றம்தான். ஆனால் உடனடியாக அந்த ஏமாற்றத்தை நேர்நிலையை நோக்கியே நகர்த்துகிறார். அதன் விளைவுதான் முரசு அஞ்சல் விசைப்பலகை – ரோமனைஸ்ட் (Romanized) முறை விசைப்பலகை. அதாவது, தமிழ் எழுத்துகளை உருவாக்க ஆங்கில எழுத்துகளையே பயன்படுத்தும் முறை இது.
நான் தமிழில் முதலில் தட்டச்சு செய்தது ‘முரசு அஞ்சல்’ இலவசமாக வெளியிட்ட ‘இணைமதி’, ‘இணைகதிர்’ ஆகிய இரு எழுத்துருக்களைக்கொண்டு, அஞ்சல் கீபோர்டு வழியாகத்தான். எழுத்துகளை மனனம் செய்யும் பிரச்சினை இல்லையென்பதால் இன்று பலரும் தமிழில் தட்டச்சு செய்யும் பயன்படுத்தும் விசைப்பலகை இதுதான். சொல்லப்போனால், இன்று தமிழ் இலக்கிய உலகம் இந்த அஞ்சல் கீபோர்ட்டை நம்பியே இயங்குகிறது.
***
பெருஞ்செயல்கள் தொடங்கும்போதே பெரிய செயல்களாக இருப்பதில்லை. மெல்ல அவை தங்களை சக்தி மிக்கவையாக வளர்த்துக்கொள்கின்றன. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் செத்து மடிந்த கடல் உயிர்கள், தாவரங்களின் எச்சங்கள்தானே இன்று எரிபொருளாகப் பரிணாமம் எடுத்துள்ளன. இயற்கை நமக்குக் கற்றுத்தருவது அந்தப் பொறுமையைத்தான்.

இந்நூல் ஒரு செயலில் தீவிரமாக இருப்பவர்கள் தன்னிலையில் இருந்து விலகாது பயணம் செய்யும்போது சூழல் எச்சத்தில் இருந்து எரிபொருளாகும் சாத்தியங்களை எவ்வாறு வடிவமைக்கிறது என்பதை விளக்குகிறது.
‘தமிழ் டாட் நெட்’ எனும் இணையம் வழி உரையாடக்கூடிய குழுவை உருவாக்கியதை அப்படி வகைப்படுத்தலாம். உலக அளவில் தமிழில் இணையம் வழி உரையாடுபவர்களை ஒன்றிணைத்ததுடன் தமிழ்க் கணினியல் தொடர்பான விவாதங்கள், தொழில்நுட்ப சவால்களைப் பற்றிப் பேசும் தளமாக அது செயல்பட்டது. சங்க இலக்கியங்களையும் பழங்கால நூல்களையும் மின்பதிப்பாக மாற்றும் மதுரைத் திட்டத்திற்கான முதல் சிந்தனை அக்குழுவில்தான் உருவானது. அதுபோல, எழுத்தாளர் இராஜகுமாரன் வழியாக ‘இணையம்’ எனும் சொல்லும் அக்குழுவில் பகிரப்பட்டே பயன்பாட்டுக்கு வந்தது. பின்னாளில் ‘தமிழ் டாட் நெட்’ பதிவு செய்த அமைப்பாகச் செயல்பட வேண்டும் என்கிற எண்ணம் உருபெற்று ‘உத்தமம்’ எனும் அமைப்பாக உருவானது. (உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் – INFITT International Forum for Information Technology in Tamil). அவ்வமைப்பு தமிழ்க்கணினி உலகிற்கு வழங்கிய பங்களிப்பு இந்நூலில் விரிவாகவே எழுதப்பட்டுள்ளது.
முத்து நெடுமாறன் இன்றைய இளைஞர்களுக்கு மிகச்சிறந்த முன்மாதிரி என நான் எண்ணக் காரணம் புத்தாக்கச் சிந்தனையில் தான் உருவாக்கிய ஒன்றை வணிக ரீதியாக வெற்றிபெற வைக்கும் அவரது திறன்தான். எங்கே எவ்வளவு பேச வேண்டும் என்பதுடன் எப்படிப் பேச வேண்டும் என அவர் அறிந்து வைத்துள்ளார். அப்படி நடந்த சில சுவாரசியமான சம்பவங்களை கோகிலா இந்நூலில் பதிவு செய்துள்ளதும் சுவாரசியம் குன்றாமல் உள்ளது. அதுபோலவே வணிகம் மட்டுமே அவரது முதன்மைக் குறிக்கோளாக இல்லை. தமிழ் எழுத்துகள் கணினியில் தோன்ற வேண்டும் என்ற எண்ணமே எல்லா இடத்திலும் முன்வந்து நிற்கிறது. எம்டிசி நிறுவனம் இந்தி எழுத்துகளை உருவாக்கித்தர கேட்க ‘ஏன் தமிழ் இல்லை’ என்கிறார் முத்து. அந்நிறுவனத்திற்கு அதில் விருப்பம் இல்லை.
“நான் இந்தியுடன் தமிழையும் சேர்த்தேசெய்து தருகிறேன். இந்திக்கு மட்டும் பணம் கொடுங்கள். தமிழைப் பணமின்றிக் கொடுக்கிறேன்.” என்று கூறுகிறார். முத்து நெடுமாறனிடம் இருப்பவை இளமையில் தமிழ் எழுத்துகளை ஆர்வம் பொங்க கண்ட அதே சிறுவனின் கண்கள்தான். அதுதான் அவரை இன்னமும் ஆர்வம் குன்றாமல் இயக்குகிறது. இன்னமும் முத்து நெடுமாறன் தமிழ் எழுத்துகளை கணினியில் கண்டு குதூகளிப்பதாகவே என்னால் இந்நூலை வாசிக்கும்போது கற்பனை செய்ய முடிகிறது. அதனால்தான் மிகச் சிக்கலான முடிவுகளைக்கூட மிக இனிமையான தருணத்தில் உருவாக்குகிறார் முத்து நெடுமாறன். உதாரணமாக, புதிதாக உருவாக்கிய மென்பொருளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என யோசித்துக்கொண்டிருக்கும்போது ‘மெல்லினமே’ பாடலைக் கேட்க ‘செல்லினம்’ எனப் பெயர் வைக்கிறார்.
நான் இந்தத் தொடரை வாசிக்கும்போது உணரும் தருணம் ஒன்றுண்டு. இறுக்கமும் அழுத்தமும் ஒரு மனிதனை எதையும் சிந்திக்கவிடுவதில்லை. கண்முன் கொட்டிக்கிடக்கும் எந்த வாய்ப்பும் புலப்படுவதில்லை. முத்து நெடுமாறன் நெகிழ்வானவர். நான் அவரிடம் அதிகம் பழகியிருக்காவிட்டாலும் இந்நூலில் அவர் வெளிப்பாடு அப்படித்தான் அமைகிறது. அந்த இளகிய தன்மையும் நெகிழ்ந்த மனநிலையும் அவருக்கு புதிய கதவுகளைத் திறந்துகொண்டே இருக்கின்றன.

அவரை அறிந்துகொள்ள கோகிலாவின் எழுத்து முறையும் காரணமாக உள்ளது. எளிமையான மொழியில் சுவாரசியமான தருணங்களை உருவாக்குகிறார். கணினி உலகம் குறித்து தீவிரமாகச் செல்லும் பகுதிகளில் சட்டென அவரது இயல்பான வாழ்க்கைக்குள் நுழைந்து சமன் செய்கிறார். ‘யூனிகோட்’ உருவாக்கம் தொடர்பாக பேசிக்கொண்டிருக்கும்போது கோவிலில் முத்து நெடுமாறன் செருப்பை மூலைக்கொரு பக்கமாக வைத்து காணாமல் போகாமல் பாதுகாப்பார் என்கிறார், புதிய கார் வாங்க போன இடத்தில், காரின் திரையில் கைப்பேசியின் வழி இணைக்கப்பட்ட தமிழ் எழுத்து வராததால் காரையே வாங்காமல் வந்த தருணத்தைச் சொல்லிவிட்டு எழுத்தமைதியைக் குலைக்காத எழுத்துரு வடிவமைப்பது குறித்துத் தொடர்கிறார், இவ்வாறு வாசிப்போர் மிக இயல்பாக ‘முரசு’ வின் பரிணாமத்தையும் முத்துவின் ஆற்றலையும் ஊடே தொழில்நுட்ப வளர்ச்சியையும் அறிந்துகொள்ளும்படி சுவாரசியம் குன்றாமல் எழுதிச் சென்றுள்ளார்.
***
சில ஆண்டுகளுக்கு முன் நானும் சிவா பெரியண்ணனும் இளைஞர்களுக்காக எவ்வகையான நூல் வெளிவர வேண்டும் என விரும்பினோமா அவ்வகையான நூல் ‘உரு’. முத்து நெடுமாறன் தமிழ் உலகத்தால் கொண்டாடப்பட வேண்டிய ஆளுமை. மலேசியாவில் இன்னும் விரிவாக அறியப்பட வேண்டியவர். அவரது பங்களிப்புகள் இன்னும் 50 ஆண்டுகள் கழித்து ஆச்சரியத்துடன் போற்றப்படும். ஆனால் அவர் வாழும் காலத்தில் கொண்டாடப்பட வேண்டியவர். இந்நூல் அதற்கு உதவக்கூடும்.

கணினி தொழில்நுட்பம் சார்ந்த அவரது திறன் தமிழுக்கான மட்டுமல்ல; அதை கொண்டு ஏதோ பெருநிறுவனம் ஒன்றில் அவர் மிக உயர்ந்த இடத்தில் சொகுசாகவே பதவி வகிக்கலாம். அவரால் அது முடியாது. அதற்குக் காரணம் அவரது தமிழ்ப்பற்றெனக் கூற மாட்டேன். அவர் எல்லா மொழிகளையும் சமமாகவே மதிக்கக் கூடியவர், பின் எது?
இத்தொடரின் இறுதி அத்தியாயத்தில் அவரது அடுத்த தேடல் சொல்லப்பட்டுள்ளது. அதை வாசித்தபோது நிச்சயம் இவர் உள்ளத்தை இருப்பது ஒரு சிறுவன்தான் என எண்ணிக்கொண்டேன். சிறுவனின் கண்கள் இல்லாமல் அப்படி ஒரு ஆர்வம் எழாது. ஆரம்பப்பள்ளியில் ரப்பர் பேண்ட் மூலம் எழுத்துகளை இணைத்து மைய்யில் தொட்டு ஸ்டாம்ப் மாதிரி அச்சடித்த அதே முத்தெழிலன்தான் இன்று அவ்விளையாட்டை கணினியில் நீட்டித்துள்ளார். அந்தத் தீராத விளையாட்டு அவரை மகிழ்ச்சியாக வைத்துள்ளது. அந்த மகிழ்ச்சியே அவருக்குள் இருக்கும் சிறுவனை உயிர்ப்பாக வைத்துள்ளது.
சரி, இறுதி பாகத்தில் அப்படி என்ன சொல்லப்பட்டுள்ளது?
ஜூன் 27 கோலாலம்பூரிலும் ஜூலை 5 சிங்கையிலும் ஜூலை 12 சென்னையிலும் காலச்சுவடு பதிப்பகம் வெளியீட்டில் அறிமுகம் காணும் ‘உரு’ நூலில் அதை நீங்கள் வாசிக்கலாம்.