
நாளை க. நா. சு உரையாடல் அரங்கில் பங்கெடுக்கிறேன். க. நா. சு உரையாடல் அரங்கு என்பது கோவிட் பெருந்தொற்று முடியும் காலத்தில் உருவாக்கப்பட்ட உரையாடலுக்கான தளம். அமெரிக்காவில் வசிக்கும் நண்பர் ஆஸ்டின் சௌந்தரராஜன் அவர்களின் முன்னெடுப்பில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட ஆதரவுடன் கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளாக இயங்கிவருகிறது.
க.நா.சு உரையாடல் அரங்கின் முக்கியமான பணி எழுத்தாளர்களைப் பரந்த வாசிப்புக்கு எடுத்துச் செல்வது. அதன் வழியாக அவர்களின் படைப்புலகின் மேல் கவனத்தைப் பாய்ச்சுவது. இறுதியாக, அவர்களுடன் உரையாடல் ஒன்றை நிகழ்த்தி கௌரவிப்பது.
உண்மையில் ஓர் எழுத்தாளனை கௌரவப்படுத்துதல் என்பது அவன் படைப்புகளை வாசித்து அது குறித்து எழுதுவதும் உரையாடுவதும்தான். பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களுக்கு அப்படி ஒரு தருணம் தங்கள் வாழ்நாளில் நிகழ்வதேயில்லை.
என் சூழல் சற்று வித்தியாசமானது. நான் 2000 இல் மலேசியாவில் உள்ள வணிக இதழ்களில் எழுதியவன். அப்போதே ஏராளமான வாசகர்களைப் பெற்றிருந்தேன். அன்றைய தினங்களில் வாசகர்கள் கடிதங்களில் என் பெயர் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.. இதுதவிர இதழ்களின் முன்னெடுப்பில் வாசகர் மாநாடுகளும் நடப்பதுண்டு. அப்போது நான் ‘கவிதைகள்’ எழுதிக்கொண்டிருந்ததால் (ஆம்! அப்போது அவை கவிதைகள்தான்) அங்கும் ஏராளமான வாசகிகள் சூழ ஜெகஜோதியாக கறுப்பு வைரமாய் ஜொலிப்பேன். 2005இல் தீவிர வாசிப்பு அதன் தொடர்ச்சியாக 2006 இல் ‘காதல்’ இதழ் தொடங்கியபோது ஒரு பகுதி வாசகர்கள் எனக்கு இயல்பாகக் கையசைந்து வழியனுப்பி வைத்தனர். மிஞ்சியவர்கள் நான் தீவிரமாக எழுதத் தொடங்கியபது என்னைக் கழற்றி விட்டனர். எஞ்சியவர்களில் சிலர் மட்டும் என்னைப் பொறுத்துக்கொண்டு இன்றும் வாசிக்கின்றனர். எனவே, தொடக்கம் முதலே என் இலக்கிய உலகம் வாசகர்கள் கொண்ட குதூகலமான உலகம்தான். ஆனால் நான் எனது தீவிரமான வாசகர்களை அடையாளம் கண்டது முதல் நாவலான ‘பேய்ச்சி’யை எழுதியபோதுதான்.
ஒவ்வொரு முறையும் எனது நாவல்கள் வெளிவந்தபின்னர் அதிகமான விமர்சனக் கட்டுரைகளையும் கடிதங்களையும் பெறுவதுண்டு. அவற்றில் சரிபாதி மலேசியாவில் இருந்து எழுதப்பட்டிருப்பது நிறைவை அளிக்கும். எனக்குத் தெரிந்து மலேசிய எழுத்தாளன் ஒருவன் இத்தனை தீவிரமாக வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு விரிவான வாசகப் பகிர்வையும் பெற்றிருப்பது குறைவுதான். அவ்வகையில் என் எழுத்துலகம் என்பது இன்றும் உற்சாகம் குன்றாதது; தொடர் இயக்கத்துக்கான தூண்டுதல்களைக் கொண்டது. ஆனால், எனது படைப்புகள் குறித்த உரையாடலுக்கான அரங்கு மலேசியாவில் நடந்ததில்லை. அப்படி ஒன்றை நடத்த இங்கு யாருக்கும் தோன்றுவதும் இல்லை.

சொல்லப்போனால் சமகாலத்தில் மலேசிய எழுத்தாளர்களின் படைப்புகளை ஒட்டிய உரையாடல் அரங்குகள் மலேசியாவில் கிட்டத்தட்ட நிகழ்வதில்லை என்றே சொல்லலாம். வல்லினம் மூலமாக நான் சிலவற்றை ஒருங்கிணைத்துள்ளேன். அ. ரெங்கசாமி, மா. சண்முகசிவா, முத்தம்மாள் பழனிசாமி, அரு.சு.ஜீவானந்தன், கோ. புண்ணியவான், சை.பீர் முகம்மது போன்றவர்களின் குறிப்பிட்ட படைப்புகள் குறித்தும் சீ. முத்துசாமியின் ஒட்டுமொத்த படைப்புலகம் குறித்தும் வல்லினம் வழியாக அரங்குகள் நடந்துள்ளன. மேலும், யுவன் சந்திரசேகர், பாவண்ணன், போன்ற தமிழக எழுத்தாளர்களின் படைப்புலகம் குறித்த உரையாடல் அரங்குகளையும் வல்லினம் வழி நடத்தியுள்ளோம். இதுதவிர, சமகால மலேசிய நூல்கள் குறித்த உரையாடல்கள் அரங்குகளையும் வல்லினம் வழியாக நடத்தியுள்ளோம். அத்தகைய உரையாடல்களில் எனது நாவல்களும் பேசப்பட்டுள்ளன. மலாய் மொழிக்கு என் படைப்புகள் வழியாக நான் அறிமுகமான மூன்று வருடத்திற்குள்ளாகவே நான்கு உரையாடல்களில் கலந்துகொண்டு என் சிறுகதைகள் குறித்தும் நாவல்கள் குறித்தும் உரையாடிவிட்டேன். அவை எனக்கு நல்ல மலாய் வாசகர்களையும் எழுத்தாளர்களையும் அறிமுகம் செய்துவைத்தது. மற்றபடி, என் படைப்புலகை விரிவாக ஆராயும் அரங்குகளை மலேசியாவில் நானே உருவாக்கிக்கொள்வதென்பது கூச்சப்படக்கூடிய செயல்.
இந்நிலையில்தான் மலேசியாவுக்கு வெளியில் சில அமைப்புகள் தொடர்ச்சியாக என்னைப் போன்ற எழுத்தாளர்களை கவனப்படுத்துவது உற்சாகம் தரக்கூடியது. சிங்கப்பூர் ‘வாசகர் வட்டம்’ இரண்டு முறை என் நாவல்களுக்கான வெளியீட்டு நிகழ்ச்சியையும் அதை ஒட்டி ஒருமுறை என் படைப்புகள் குறித்த உரையாடலையும் ஏற்பாடு செய்துள்ளது. தமிழகத்தில் ‘மரப்பாச்சி’, ‘துருவம்’ போன்ற அமைப்புகள் என் படைப்புகளை ஒட்டி நிகழ்த்திய உரையாடலில் கலந்துகொண்டுள்ளேன். விஷ்ணுபுரம் அரங்கில் பெரும்பாலும் மலேசிய இலக்கியச் சூழலுடன் என் புனைவுகள் குறித்தும் உரையாடப்பட்டுள்ளன. நான் மிக உற்சாகமாக இருந்த தருணங்கள் அவை. நமது படைப்பு மிகச்சரியான வாசகர்கள் வழியாக நம் கண்முன்னே ஒவ்வொரு இதழாக விரித்து நம் நாசியருகே மணம் பரப்புவது ஒரு சிறந்த அனுபவம்.
க.நா.சு அரங்கு அத்தகையது.
இந்த அரங்கின் முக்கியத்துவங்களில் ஒன்று இதுவரை அவர்கள் அழைத்துள்ள எழுத்தாளர்களின் வரிசை. யுவன் சந்திரசேகர், சுனில் கிருஷ்ணன், தேவதேவன், பாவண்ணன், சுரேஷ்குமார இந்திரஜித், எம். கோபலகிருஷ்ணன், பெருந்தேவி என தமிழின் முக்கியமான படைப்பாளிகளை மட்டுமே இதுவரை உரையாடப்பட்டுள்ளனர். அப்படி ஓர் எழுத்தாளருடன் உரையாடும் முன்னர் அவர் மூன்று மாதங்கள் வாசக குழுமத்தால் தீவிரமாக வாசிக்கப்படுகிறார்; அறிந்துகொள்ளப்படுகிறார். அதன் உச்சமாகவே உரையாடல் நிகழ்கிறது. இதன் இயங்குவிசையாக ஆஸ்டின் சௌந்தரராஜன் செயல்படுகிறார்.
நான் எட்டாவது எழுத்தாளராக அழைக்கப்பட்டுள்ளேன்.
இதை ஆஸ்டின் சௌந்தரராஜன் அவர்கள் என்னிடம் அறிவித்த நாளில் இருந்து அமெரிக்காவில் உள்ள பல வாசகர்களும் என் நாவல்களை வாசிப்பதையும் அது குறித்தக் கட்டுரை எழுதுவதையும் வாசிக்க முடிந்தது. கிண்டிலில் கணிசமான நூல்கள் வாங்கப்பட்டன. ஜமிலா அவர்கள் தாராவில் வரும் நாட்டுப்புற பாடலை அதன் உருக்கம் உணர்ந்து பாடி பதிவிட்டிருந்தது நெகிழ்ச்சியாக இருந்தது. எல்லாமே உற்சாகம் படுத்தும்படியாக நகர்ச்சிகள். ஓர் எழுத்தாளனுக்கு வேறென்ன வேண்டும்?
நாளை மலேசிய நேரம் இரவு 9.30க்கு இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது. இந்திய நேரம் இரவு 7.00. அமெரிக்காவில் அப்போது காலை 8.30. என் சிறுகதைகள் குறித்து ஜெகதீஷ் குமாரும் சிகண்டி நாவல் குறித்து மலர்விழி மணியம் அவர்களும் பேசுகின்றனர். அதை கேட்க நான் ஆவலாகவே இருக்கிறேன்.
நாளை சந்திப்போம்.
Zoom Link : https://us02web.zoom.us/j/87051345476?pwd=bVRubGlqNFZZZFk3L0pySWJ3M2dHZz09 (allowed first 100)
YouTube : https://www.youtube.com/@vishnupuramusa