மனசலாயோ : கடிதங்கள் 4

indexகேரளாவிற்கு மூன்று முறை பயணம் செய்திருக்கிறேன். நீண்ட கால இடைவெளிகளில். சட்டென்று பார்ப்பதற்கு மாற்றம் இல்லாததுபோலிருக்கும். ஆனால் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் நான் பார்த்த கேரளாவிற்கும் சில மாதங்களுக்கு முன்னர் நான் பார்த்த கேரளாவிற்கும் பெரும் மாற்றம். நவீனின் மனசிலாயோ தொடரைப் படித்த பின்னர் நான் அறிந்த சில விவரங்களைப் பகிர்ந்துகொள்ளலாம் எனத் தோன்றியது.

முதலாவது, பூமி முழுக்க பருவநிலை மாறிவிட்டது. குளிர்காலத்து காலை நேரக் குளிர்ச்சியை கேரளாவில் இப்போது எல்லா இடங்களிலும் அனுபவிக்க முடியவில்லை. மலைப் பகுதிகளில்தான் நடுங்க வைக்கும் காலைக் குளிரை உணரமுடிகிறது. மற்றது வேகமாக நடைபெற்று வரும் நகரமயமாக்கலில் கேரளத்தின் பசுமைச் சூழல் மெல்ல மெல்ல கண்ணுக்குச் சட்டென்று தெரியாமல் குறைந்து வருகிறது.

உலகில் அதிவேக பொருளாதார வளர்ச்சி கண்டுவரும் இந்தியாவினால், பெரு நகரங்களின் வளர்ச்சி அபரிமிதமானது. கேரள மாநிலத்தின் புராதனமான நகரமான கொச்சி, கடந்த 10-15 ஆண்டுகளில்  இந்நகர் பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இடம்பெற்றுள்ள கொச்சியில் விரைவு ரயில், பெரும் பேரங்காடிகள், வணிக வளாகங்கள், ஆடம்பர தனியார் குடியிருப்புகள் என நவீன வசதிகள் நிறைந்துள்ளன.  வெளிநாட்டு முதலீடும் தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களும் அதிகரித்துவருகின்றன.

அதேநேரத்தில், இந்தத் தீவின் ஒவ்வொரு முனையிலும் பொதிந்துள்ள வரலாறு, இந்தியாவில் வெள்ளையர் ஆட்சியின் தொடக்கத்தை எடுத்துக்கூறும். புதிய நிலங்களைக் கண்டுபிடிக்கும் நோக்கில் கிளம்பிய போர்த்துக்கீசிய கடலோடியான வாஸ்கோ ட காமா  1498ஆம் ஆண்டு மே மாதம் கேரளாவின் கோழிக்கூடு என்ற இடத்தில் தரையிறங்கினார்.  இந்தியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கடல்வழியைக் கண்டுபிடித்து, ஐரோப்பாவுக்கும் தூரகிழக்கு நாடுகளுக்குமிடையே வணிகம் பெருக இவர் வழியமைத்தார். வியாபாரம் செய்ய வந்தவர்கள் நாடு பிடித்தது ஒரு பெரும் வரலாறு. வாஸ்கோ ட காமா  வருகை குறித்த பல ஆவணங்களை கொச்சியில் காண முடியும். ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்னர் நான் பார்த்த பராமரிப்பை இராண்டு முன் காணமுடியவில்லை. முன்பு செயின்ட் பிரான்ஸ் தேவாலயத்திலுள்ள அவரது கல்லறை முன்னர் பளிச்சிடும் பித்தளைக் கம்பித் தடுப்புடன், விளக்கக் குறிப்போடு பார்த்ததும் கண்ணுக்கும் தெரியும்.

சுற்றுப் பயணத்துறையில் கேரள அரசின் ஆர்வம் அண்மைக்காலமாகக் குறைந்துவிட்டது போலத் தோன்றுகிறது.

நவீன் குறிப்பிடும் சீன வலை இப்போது இந்தியாவின் கொச்சி நகரத்தில் மட்டுமே0015 பயன்படுத்தப்படுகிறது. சீன கடலோடியான செங் கீ (Zheng He, இவரது கதை மிக சுவாரஸ்யமானது) 14ஆம் நூற்றாண்டில் , நிலையான ஓரிடத்திலிருந்து கிட்டத்தட்ட 20 மீட்டர் அகலமான வலையைப் பரப்பி மீன்பிடிக்கும் இந்த முறையைக் கேரளாவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகிறது. வலை கட்டப்பட்ட, ஏறக்குறைய 10 உயர மரத் துலாவை மேலே தூக்கும்போது மீனவர்கள் பாடும் பாட்டுகள் தாளம் போடவைக்கும்.

கேரளாவில் எரிச்சலூட்டும் செடி என்று நீர் பதுமராகம் (water hyacinth) குறித்து நவீன் குறிப்பிட்டிருப்பது மிகச் சரியானது.

காயலும் அதில் மிதக்கும் படகுவீடுகளும் நீரெங்கும் ஊதாநிறப் பூவால் நிறைத்திருக்கும் ஆப்பிரிக்கப் பாயல்களும் பார்ப்பதற்கு அழகாகத் தோன்றலாம். ஆனால், இவற்றால் ஏற்பட்டுவரும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் அளப்பரியன. அதிகரித்து வரும் டீசல் மோட்டார் படகுகளால் ஒரு காலத்தில் குடிநீராக இருந்த இந்த காயல் நீரை  இப்போது குளிப்பதற்கு பயன்படுத்தவும் மக்கள் தயங்குகிறார்கள்.

அதேபோல் உலகில் வேகமாக வளரும் செடிகளில் ஒன்றான நீர் பதுமராகம் மிக மோசமான ஒரு களை. கேரள மக்களுக்கு இது தரும் தொல்லை கொஞ்சநஞ்சமல்ல. ஒவ்வொரு செடியிலும் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான விதைகள் உருவாகும். இரண்டே வாரங்களில் இரண்டு மடங்கு வளர்ந்துவிடும். அரசாங்கமும் மக்களும் எப்போது இச்செடிகளை அகற்றியபடியே இருக்கின்றன. கூடுதலாக ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் படகுப் போக்குவரத்தை மட்டுப்படுத்தி, இந்தச் செடிகளை களையெடுக்கிறார்கள்.

மேற்கு பிரேசிலில் உள்ள அமேசான் நீர் படுகையிலும் நீர்ப் பாதைகளையும் பூர்வீகமாகக் கொண்ட இச்செடி ஆப்ரிக்கா, ஆசியா, வடஅமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளுக்கு அறிமுகமானது. இன்று கிட்டத்தட்ட 50 நாடுகளில் காணப்படுகிறது. வேகமான நீரோட்டம் இல்லாத உப்பங்கழிகள், ஏரிகள், கழிமுகங்கள், நீரோடைகளில் இது அதிகம் வளர்கிறது.

0016இது வளரும் இடங்களில் எல்லாம் பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. நீர்பரப்பு முழுவதையும் இச்செடி ஆக்கிரமித்துக்கொண்டு, அந்த நீரில் வாழும் மீன்கள், மற்ற உயிரினங்களுக்கு உயிர்வளியே கிடைக்காமல் அடைத்துவிடும். அதன் வேர்கள் பெரிதாகவும் தடிமனாகவும் இருப்பதால், படகுகளின் பாதையையும் அடைத்து, விபத்துகளை ஏற்படுத்துகிறது.  ஸ்பெயின், போர்த்துகள் நீர்நிலைகளில் இச்செடிய உண்டாக்கிய பிரச்சினைகளால், ஐரோப்பிய ஒன்றியம் அந்நிய தாவர இனமாக வகைப்படுத்தியுள்ளது. அதனால் அங்கு இந்தச் செடியை வாங்கவோ விற்கவோ கூடாது.

கொச்சியின் சீன வலைகளில் மீன்களைவிட இந்தச் செடிகள்தான் அதிகம் சிக்கி, சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

தொல்லை ஏற்படுத்தினாலும் இந்த ஆப்பிரிக்க பாயல், கேரள மக்களுக்கு வருவாயையும் தேடித் தரவே செய்கிறது.

உதாரணமாக, கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கோட்டாபுரம் என்ற ஊரில், ஏழைப் பெண்களுக்கு வாழ்வாதாரமாக இந்தச் செடி திகழ்கிறது.  இச்செடியின் நீளமான தண்டுகளை வெய்யிலில் காய வைத்து, வண்ணங்கள் தீட்டி, பின் மெல்லிய இழைகளாக வெட்டி தரைவிரிப்புகளைப் பின்னுகிறார்கள். பைகள், கூடைகள் என பல பொருட்களைத் தயாரிக்கிறார்கள். பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை ஏற்பட்டு வருவதால், இந்த பாயல் பொருள் தயாரிப்பு ஒரு பெரும் தொழிலாக வளர்ந்து வருகிறது.

கைத்தொழிலுக்கு கேரளாவில் இன்னமும் வாய்ப்பும் வரவேற்பும் உள்ளது. பெரும்பாலும் காயல்களில் மிதக்கும் படகு வீடுகளின் கூரைகளையும் சுவர்களையும் ஒருவகை கோரைப் புல், பனையோலை, மூங்கில்களைக் கொண்டு கட்டுகிறார்கள். தென்னோலை, பனையோலைகள் இங்கு கூரையாகவும் வேலியாகவும் கைவினைப் பொருட்களாக உருவாகின்றன.

திலிப்

வாய்ப்பிருப்பின் மேலும் நீர் பதுமராகம் குறித்து தாங்கள் எழுதினால் மகிழ்ச்சி. நன்றி

நவீன்

(Visited 164 times, 1 visits today)