
வல்லினம் இன்று மூன்று மொழி இலக்கியங்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன் வழியாக மூன்று மொழி எழுத்தாளர்களுடனான உரையாடலையும் சாத்தியப்படுத்த முனைகிறது. இது ஒரு தொடக்கம்தான். முழுமையான திட்டம் எனக் கூறிவிட முடியாது. மலேசியாவில் ஆங்கில இலக்கியச் சூழலில் மட்டுமே இயங்கும் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் உள்ளனர். சபா, சரவாக்கில் எழுதப்படும் இலக்கியங்கள் குறித்து தமிழில் நம்மிடையே எந்த அறிமுகமும் இல்லை. இந்த இடைவெளிகளை மெல்ல மெல்ல குறைக்க வேண்டியுள்ளது. ஆர்வமான இளம் எழுத்தாளர்களின் இணைவின் மூலமாகவே அந்த இலக்கை அடையும் கால அவகாசத்தைக் குறைக்க முடியும். ஆனால், இது இன்று தொடங்கப்பட்ட முயற்சியல்ல. இப்படி மூன்று மொழி இலக்கியங்களின் ஒன்றிணைவுக்கு உழைத்த நல்ல முன்னோடிகள் மலேசிய இலக்கியச் சூழலில் இருக்கவே செய்கின்றனர். 1964 இல் வெளிவந்த ‘புங்கா எமாஸ்’ (தங்க மலர்) எனும் நூல் அதற்கு மிகச்சிறந்த சான்று.
விக்னேசன் என்பவர் இந்நூலுக்குத் தொகுப்பாசிரியராக இருந்துள்ளார். சீனம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு ஆங்கிலப்படைப்புகளும் அந்நூலில் இணைக்கப்பட்டு 1964 லேயே நூலாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்மொழியில் எழுதப்பட்ட 6 படைப்புகளை இருவர் மொழிபெயர்த்துள்ளனர். ஒருவர் தமிழ்ச் சூழலில் நன்கு அறிமுகமான எஸ். சிங்காரவேலு. இவர், நா. பழனிவேலுவின் கவிதை ஒன்றை மொழியாக்கம் செய்துள்ளார். மற்றவர் எஸ். ராமச்சந்திரன். இவர் க. பெருமாள், தி.எஸ். சண்முகம், ரெ. கார்த்திகேசு, பி.எஸ். நாராயணன் என ஐந்து எழுத்தாளர்களின் ஆறு புனைவுகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். அப்போது சிங்கையும் இணைந்து மலாயாவாக இருந்த காரணத்தால் சிங்கை எழுத்தாளர்களின் படைப்புகளும் இணைந்துள்ளதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்நூலின் தொகுப்பாசிரியரான விக்னேசன் (T. Wignesan) குறித்து அறிந்துகொள்வது முக்கியம். விக்னேசன் மலேசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் கல்வியைத் தொடர்ந்து இலக்கியத்திலும் தத்துவத்திலும் தனித்த சிறப்பைப் பெற்றவர். Bunga Emas: An Anthology of Contemporary Malaysian Literature (1930–1963) எனும் நூலை இவர் தொகுத்து வழங்கியது மலேசிய இலக்கியத்திற்கு இவர் வழங்கிய பெரும் பங்களிப்பு. ஆனால் இத்தொகுப்பில் மலாய் படைப்புகளை இணைக்க முயன்றபோது பதிப்புரிமை சிக்கல்களால் அம்முயற்சியைக் கைவிட்டதாகக் கூறுகிறார்.
விக்னேசன் விக்டோரியா இன்ஸ்டிடியூஷனில் (Victoria Institution) 1947–1950 ஆண்டுகளில் பயின்றவர். மலேசியாவிலும் ஐரோப்பிய நாடுகளில் பத்திரிகையாளராகவும் ஆசிரியராகவும் பல்வேறு தொழில்கள் செய்தவர். பாரிஸில் உள்ள பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பிரான்ஸில் உள்ள CNRS (Centre national de la recherche scientifique) நிறுவனத்தில் 1973–1998 ஆண்டு வரை கலை மற்றும் இலக்கிய ஆராய்ச்சி துறையில் பணியாற்றினார்.
விக்னேசன் மலேசியா நாட்டில் பிறந்தவராக இருந்தாலும் அவரிடம் மலேசியக் குடியுரிமை இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். அவர் தனது வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தை ஐரோப்பாவில் – குறிப்பாக பிரான்ஸ் நாட்டில் கழித்தார். பிரான்சில் கல்வி, ஆராய்ச்சி, மற்றும் பணியாற்றியதாலும், அவர் பிரெஞ்சு குடியுரிமை பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறதே தவிர உறுதியான தகவல்கள் இல்லை.
‘பூங்கா எமாஸ்’ நூல் நான்கு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட படைப்புகளும் இரண்டாம் பகுதியில் சீனப் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பும் மூன்றாம் பகுதியில் தமிழ் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பும் இடம்பெற்றுள்ளன. நான்காவது பகுதியில் இடம்பெற்றுள்ள மூன்று கட்டுரைகள் அன்றைய கால ஆங்கில, சீன, தமிழ் இலக்கியங்கள் குறித்து பேசுகின்றன.
இந்த நூல் குறித்த ஆய்வுக்கட்டுரை ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. Andrew Ng எழுதியுள்ள இக்கட்டுரையில் ஆங்கிலம், சீன இலக்கியங்களைவிட தமிழ் இலக்கியம் தரத்தில் குறைந்துள்ளதாகக் கூறுகிறார். இந்திய மனநிலையில் எழுதப்பட்டிருத்தலும் இந்திய மெல்லுணர்ச்சி சினிமாவின் தாக்கத்தில் எழுதப்படுதலும் மலேசியத் தமிழ் இலக்கியத்தின் போதாமையைக் காட்டுகிறது என்கிறார். அதற்கு அப்போது இலக்கியத்தில் ஈடுபட்டவர்களின் கல்வி நிலையும் காரணமாக இருக்கலாம் என அவரே குறிப்பிடவும் செய்கிறார். அதே சமயம் ‘குற்றச்சாட்டு’ என்ற கா. பெருமாளின் கவிதையும் நாடகமும் கலந்த படைப்பு அசாதாரணாமானது என்றும் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து ரெ. கார்த்திகேசு, டி.எஸ். சண்முகம், பெருமாள் போன்றவர்களின் சிறுகதைகள் வாசிக்கத் தக்க அளவில் உள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.

முன்னமே சொன்னதுபோல எஸ். சிங்காரவேலு இந்த நூலில் ஒரு கவிதையை மொழிபெயர்த்துள்ளார். சிங்காரவேலும் மலேசியாவில் குறிப்பிடத்தக்க கல்வியாளர். மலாயா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றியவர். தமிழ்ச் இலக்கியத்தின் தென்கிழக்காசிய கலாச்சாரங்களுடன் கொண்டுள்ள பிணைப்புகளை ஆழமாக ஆராய்ந்தவர். திருக்குறளை மலாய், ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்ததுடன் திருமுருகாற்றுப்படையையும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். ஆனால் எஸ். ராமச்சந்திரன் குறித்து சிறிய குறிப்பு மட்டுமே இந்நூலில் உள்ளது. வேறு எங்குமே அவர் குறித்தத் தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

எஸ். ராமச்சந்திரன் 1909-இல் இந்தியாவில் பிறந்தவர். 1936-இல் மலாயாவுக்கு வந்தார். 1946 முதல் 1951 வரை பினாங்கில் உள்ள இந்திய வர்த்தகக் கூடத்தின் (Indian Chamber of Commerce) செயலாளராக இருந்தார். 1951-இலிருந்து ஒலிபரப்பு துறையில் பணியாற்றினார். 1958 முதல் 1961 வரை ரேடியோ மலாயாவின் (Radio Malaya) தமிழ் பகுதிக்கு தலைமை பொறுப்பாளராக இருந்தார். சமஸ்கிருதம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர் எனும் குறிப்பு மட்டுமே இருந்தது. இந்தக் குறிப்பைக் கொண்டு மேலதிகமாகத் தேடிச்செல்ல இருந்த ஒரே வாய்ப்பு அவர் ரேடியோ மலாயாவில் தமிழ் பகுதிக்கு தலைமை பொறுப்பாளராக இருந்தார் என்பதுதான். இந்தக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு வானொலியின் வரலாற்றைச் சொல்லும் ‘ஒலிச்சிற்பிகள்’ நூலை ஆராய்ந்தபோது நூலில் குறிப்பிட்ட அதே காலக்கட்டத்தில் இராமச்சந்திர ஐயர் என்பவர் வானொலியில் தலைமை பொறுப்பு ஏற்றுள்ளார். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் திறன் பெற்றிருந்த இராமச்சந்திர ஐயர் கடுமையான மொழியாக்க பணிகளையும் எளிமையாகச் செய்வார் எனும் குறிப்பும் நூலில் உள்ளது. எனவே இராமச்சந்திர ஐயர்தான் எஸ். ராமச்சந்திரனாக இருக்கும் வாய்ப்பு அதிகம். மேலும் அக்காலக்கட்டத்தில் வானொலியில் பணியாற்றுபவர்களுக்கு கெடுபிடிகள் அதிகம் இருந்ததால் இவ்வாறு புனைப்பெயரில் எழுதியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.
எது எப்படியாயினும் மூவின எழுத்தாளர்களிடையே உரையாடல் உருவாக 60களிலேயே சிலர் உழைத்துள்ளர் என்பது தெளிவு. அவர்கள் வரலாற்றில் நினைவு கொள்ளத் தக்கவர்கள். ஆனால், இப்படிக் கடும் உழைப்பைச் செலுத்தி வெளியிடப்படும் மொழிபெயர்ப்பு நூல்கள் ஏன் தமிழ் இலக்கியத்தின் மீதான கவனத்தை பிற இன வாசகர்களிடம் அதிகரிக்கவில்லை என்பதையும் நாம் ஆராய வேண்டியுள்ளது.
- தொடரும்
அறிந்த நிலமும் அறியப்படாத மொழிவெளியும் – 1