
இன்னும் ஏழு நாட்களில் ‘முக்கோணக் கதைகள்’ நிகழ்ச்சி. வல்லினத்தின் மற்றுமொரு பெருமுயற்சி. ‘மலேசிய இலக்கியச் சூழலில் புதிய, வரலாற்றில் நிலைகொள்ளும் முயற்சிகளை வல்லினம் முன்னெடுக்கிறது’ எனும் வாசகம் கிட்டத்தட்ட தேய்வழக்காகிவிட்டது. மூத்தப் படைப்பாளிகளின் ஆவணப்பட இயக்கம், எழுத்தாளர்களின் நிழல்படத் தொகுப்பு, எழுத்தாளர்களுக்கு உரிய உரிமத்தொகை வழங்குதல், மூத்தப்படைப்பாளிகளின் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தல், நவீன இலக்கியம் சார்ந்த முகாம்கள், விருதுகள் – நூல் பதிப்புகள் வழி மலேசியாவின் சமகால இலக்கியத்தை உலகத் தமிழ் வாசகர்களிடையே கொண்டு செல்லும் முயற்சி என வல்லினத்தின் முன்னெடுப்புகள் அனைத்தும் மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் வலுவான தாக்கத்தை உருவாக்கியுள்ளன.
கூட்டு முயற்சியும் நண்பர்களிடையே அர்ப்பணிப்பும் இல்லாமல் இந்த முன்னெடுப்புகள் சாத்தியம் இல்லை. மலேசிய நவீனத் தமிழ் இலக்கியத்திற்கான வலுவான இருப்பை உருவாக்க வேண்டும் எனும் ஒத்தச் சிந்தனையின் வழியாகவே இந்த அர்ப்பணிப்புச் சாத்தியமாகிறது. சொல்லப்போனால், வல்லினத்திற்குத் தொழில்நுட்பம் சார்ந்த பங்களிப்பு வழங்கக்கூடிய நண்பர்கள் கூட ஒப்புக்காக சிறு தொகையைப் பெற்றுக்கொள்கின்றனரே தவிர யாருமே வழங்கும் உழைப்புக்கு உரிய தொகையைக் கேட்டது கூட இல்லை. எல்லாருமே தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்குவதால் மட்டுமே வல்லினத்தின் முயற்சிகள் தடையின்றி தொடர்கின்றன. சொல்லப்போனால் கற்பனை செய்தாலே கண்ணைக்கட்டும் முயற்சிகள் எல்லாம் இந்த நட்பார்ந்த ஒத்துழைப்பின் வழியாகவே சாத்தியமாகி உள்ளன. ‘முக்கோண கதைகள்’ முயற்சியும் அப்படியான ஒரு பிரமிப்புடன் தொடங்கியதுதான்.
நான் கோலாலம்பூர் வந்த புதிதில் இலக்கிய நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் கட்டாயம் சென்று விடுவேன். ஒவ்வொரு நாளும் நாளிதழைப் பார்த்து, எங்கு எந்த நிகழ்ச்சி எனக் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டு அங்கு எந்தப் பேருந்தில் எப்படிச் செல்வது எனத் தேடி வைத்துக்கொள்வேன். அதில் சிக்கல் ஏற்பட்டால் ஓவியர் ராஜாவின் உதவியை நாடுவேன். டிஜிட்டல் முறை அமுலுக்கு வராத காலகட்டம் அது. பேனர்களை வரைய ஓவியர்களின் உதவி வேண்டும். இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு பேனர் வரைய அப்போதெல்லாம் பெரும்பாலும் ஓவியர் ராஜாவையே இலக்கிய நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் நாடினர். நிகழ்ச்சி தொடங்கும் முன்னரே ஓவியர் ராஜா மண்டபத்தில் இருக்க வேண்டும். அவருடன் நானும் இருப்பேன்.
அப்படி ஒருமுறை மலாயா பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டேன். ஆச்சரியமாக அதில் மலாய் எழுத்தாளர்களும் இருந்தனர். மலாய் – தமிழ் எழுத்தாளர்களுடனான உரையாடல் நிகழ்ச்சி அது. தமிழ் – மலாய் என இருமொழிகளிலும் நடந்தது. அதன் பின்னர் அப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக நினைவில் இல்லை. ஆனால் மொழிபெயர்ப்பின் தேவை குறித்து மிகத் தீவிரமாகவே பேசப்பட்டது. பேசுவதில் அனைவருமே கிளர்ச்சியடைந்தனர். எனவே தொடர்ந்து பேசியும் வந்தனர்.

மலாய் இலக்கியங்கள் தமிழில் வரவேண்டும் எனும் எண்ணம் எனக்கு இருந்ததே தவிர அதைச் சாத்தியப்படுத்தும் மொழியாளுமை என்னிடம் இல்லாமல் இருந்தது. எனவே, நண்பர் சிவத்திடம் மலாய் கவிதைகளை மொழிபெயர்க்கும்படி கேட்டுக்கொண்டே இருந்தேன். அவரும் ‘காதல்’ இதழில் தொடர்ச்சியாக சில மலாய் கவிதைகளை மொழியாக்கம் செய்தார். 2009இல் நடந்த முதல் கலை இலக்கிய விழாவில் அக்கவிதைகளைத் தொகுத்து நூலாகப் பதிப்பிக்கும் முயற்சியில் இறங்கினேன். முயற்சி இறுதிக்கட்டத்தை எட்டும்போது பா.அ.சிவம் குறிப்பு ஒன்றை அனுப்பியிருந்தார், ‘இக்கவிதைகளையும் இதற்கான முயற்சிகளையும் ம. நவீனுக்குச் சமர்பிக்கிறேன்’ எனும் வரியை நூலில் இணைக்கும்படி எழுதப்பட்டிருந்தது. சிவத்தை அழைத்து, ”ஏன் இதெல்லாம்” என்றேன். ”நீங்க வற்புறுத்தாம இருந்திருந்தா இந்த முயற்சியில நான் இறங்கியிருக்கவே மாட்டேன்” என்றார். உண்மையில் நெகிழ்ச்சியாகவே இருந்தது.

அதன் பின்னர் மலேசியப் படைப்புகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பதன் தேவைகளை என்னிடம் வலியுறுத்திக்கொண்டே இருந்தவர் சிங்கை இளங்கோவன். தமிழில் வர இருந்த என் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து இருமொழி நூலாக வெளிவர அவரே காரணியாக இருந்தார். வல்லினம் பதிப்பகம் தொடங்கப்பட்ட ஆண்டிலேயே இரு மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்தன. இலக்கியத்தை இயக்கமாக முன்னெடுத்த எங்களுக்கு முந்தைய தலைமுறையினருக்கு அன்றைய காலத்தில் வைரமுத்துவின் கவனமும் அவர் வழியாக கலைஞர் கருணாநிதியின் ஆசியும் அவசியமாக இருந்தது. எனவே மலேசியாவில் வாழும் பிற மொழி இலக்கியவாதிகளுடனான உரையாடல்கள் தீவிரமாகத் தொடங்கப்படாமலேயே இருந்தன. ஆனால் எப்போதும்போல இதிலும் எங்களுக்கு முன்னோடிகள் இருக்கவே செய்தனர். அவர்களில் முதன்மையானவர் இராம. சுப்பையா.

ஆங்கில கவிதை உலகில் இராம. சுப்பையா அவர்களுக்கு இருந்த பயிற்சியால் பல தமிழ் கவிதைகளையும் பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தொடங்கினார். பாரதியாரின் குயில் பாட்டு, மலேசியக் கவிஞர் ஐ. உலகநாதனின் கவிதைகள், குறுந்தொகை பாடல்கள், பல சமயப் பாடல்கள் இவரின் மொழிபெயர்ப்பு வாயிலாக ஆங்கில உலகிற்கு அறிமுகமாகியுள்ளன. 1968-ல் ‘செஜாரா மலாயு’ எனும் வரலாற்று நூலை மலாக்கா மன்னர்கள் வரலாறு எனும் பெயரில் வெளியிட்டுள்ளது மலேசிய இலக்கியத்திற்கு அவர் செய்த பெருங்கொடை.
‘வரலாறு’ எனக் குறிப்பிடப்பட்டாலும் இந்நூலை இலக்கியப் பிரதியாகவே அடையாளப்படுத்த முடியும். 15 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்நூல் மலாக்கா சுல்தான்களின் ஆட்சி காலம் பற்றிய வரலாற்றை இதிகாச கதைகளாக அறிமுகப்படுத்துகின்றது. அவ்வகையில் 1968இல் இராம. சுப்பையா அவர்கள் செய்த மொழிபெயர்ப்பு மலாய் இலக்கியங்களை தமிழுக்கு அறிமுகம் செய்யும் முதன்மையான முயற்சி எனலாம்.

அவரைத் தொடர்ந்து மொழிபெயர்ப்புக்காக அதிகம் குறிப்பிடப்படும் பெயர் ஜி. சூசை. 70களில் தீவிரமாக மொழிபெயர்ப்பில் இயங்கியவர். அபிராமி அந்தாதி, திருக்குறள், பாரதியின் பாஞ்சாலி சபதம் போன்ற மரபிலக்கிய கவிதைகளையும் பாடல்களையும் மலாயில் மொழியாக்கம் செய்தவராக இவர் கவனப்படுத்தப்பட்டாலும், மலேசிய எழுத்தாளர்களான சங்கு சண்முகம், நா. மகேஸ்வரி, ரெ. கார்த்திகேசு, சா. ஆ. அன்பானந்தனின் கவிதைகள் என பலரது சிறுகதைகளை மலாயில் மொழிபெயர்த்தவர் என்ற முறையில் ஜி. சூசை ஒரு முன்னோடி எனலாம்.

அவருக்குப் பின்னர் மா. இராமையா, சி. வடிவேல் போன்றவர்கள் தங்கள் சிறுகதைகளை நண்பர்கள் மூலம் மலாய்க்கு மொழியாக்கம் செய்து நூலாகத் தொகுத்துள்ளனர். சி. வடிவேல் சிறுகதைகளை மலாயில் மொழியாக்கம் செய்தவர் எழுத்தாளர் ஆறு. நாகப்பன் என்பது குறிப்பிடத்தக்கது. அவை தமிழ்ச் சூழலுக்குள்ளேயே முடங்கியும்போனது. மலாய் இலக்கியங்களை தமிழுக்கு அறிமுகம் செய்யும் முனைப்பு எம். ஏ. நுஃமான் அவர்களுக்கு அதிகமே இருந்தது. இலங்கையில் இருந்து மலேசியா வந்து, ஈராண்டுகள் வருகைதரு பேரசியராக மலாயா பல்கலைக்கழகத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் மொழிபெயர்ப்பின் தேவை குறித்து சொல்லிக்கொண்டே இருந்தார். ”இங்கு எல்லாரும் நல்லா மலாய் பேசுறீங்க… ஆனா ஒருத்தரும் மலாய் கவிதைகளை மொழிபெயர்க்க மாட்டுறீங்க” எனத் திட்டவும் செய்வார். இறுதியில் மலாய் மொழிக்கவிதைகளை ‘காற்றில் மிதக்கும் சொற்கள்’ எனும் தலைப்பில் தானே மொழியாக்கம் செய்து நூலாகவும் வெளியிட்டார்.
இப்படி அரசிடமும் வணிகர்களிடமும் நிதி வாங்கும் பெரிய இயக்கங்கள் முன்னெடுக்காத மொழிபெயர்ப்பு முயற்சிகளைத் தனி நபர்களே காலகாலமாக முன்னெடுத்து வந்தனர். அவர்களே அறிவார்ந்த தரப்பின் பிரதிநிதிகளாக இருந்தனர். அவர்கள் உருவாக்கிய மொழியாக்கங்கள் தரமான இலக்கிய வாசகர்களின் கைப்பட்டு கைப்பட்டே அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டது.
- தொடரும்