விருது; அரசியல்வாதிகள்; நூல் வெளியீடுகள்; சில சர்ச்சைகள்

ஆர். எச். நாதன்

‘வல்லினம் விருது: சில தெளிவுகள் சில விளக்கங்கள்’ கட்டுரைக்கு எதிர்வினைகள் வரும் என நான் எதிர்ப்பார்த்ததுதான். மின்னஞ்சலிலும் புலனத்திலும் சிலர் கேள்விகளைக் கருத்துகளாக முன்வைத்தனர். சிலர் கேள்விகளில் கருத்துகள் மட்டுமே இருந்தன. சிலர் தான் கூறுவது எதிர்வினை இல்லை என்றும் அது தனது தனிப்பட்ட கருத்து என்றும் குறிப்பிட்டிருந்தனர். ஓர் உரையாடலில் தனிப்பட்ட கருத்தென ஒன்றில்லை. அது ஒரு கூட்டுமனதின் வெளிபாடுதான். சில வழக்கமான வசைகள். அதிக பட்சமாக தங்களுக்குத் தெரிந்த கொச்சை சொற்களைப் பயன்படுத்தியிருந்தனர். அவர்கள் கொஞ்சம் முதிர்ச்சி அடையும்போது நான் சொல்லும் கருத்தின் பொருளை உணரக்கூடும். இல்லாதுபோனாலும் ஒன்றும் குறைவில்லை. நான் உருவாக்க விரும்புவது உரையாடல்களை, அதன் வழியாக சிந்திக்கும் மனிதர்களை.

நியாயமாக எழுப்பப்பட்ட கேள்விகள் சிலவற்றுக்கு நான் பதில் வழங்கவேண்டுமென முடிவெடுத்தேன். ஆனால் தனிப்பட்ட முறையில் புலனத்தில் கேள்வி எழுப்பியவர்களின் பெயர்களை அவர்கள் அனுமதியின்றி வெளியிடுவது முறையல்ல. எனவே, எனக்கு வந்த கேள்விகளை பின்வருமாறு தொகுத்துக்கொள்கிறேன். அவற்றை என் வசதிக்கு ஏற்ற மொழியில் பொருள் மாறாமல் அமைத்துக்கொள்கிறேன். என் நோக்கம் கேள்வி எழுப்பியவரை அவமதிப்பதல்ல; ஒருவேளை உண்மையில் அவருக்கு நான் சொல்வது புரியாமல் இருந்தால் ஒரு தெளிவு கிடைக்கலாம். அல்லது அவரது எதிர்வினை வழியாக வருங்காலத்தில் நானாவது திருந்தலாம்.

எஸ். சிங்காரவேலு

கேள்வி 1: இங்கு நூல் வெளியிட பலரும் சிரமப்படுகிறார்கள். அப்படியிருக்க அரசியல்வாதிகளின் உதவியை நாடுவது எவ்வாறு தவறாகும்?

பதில்: இந்தக் கேள்வியைக் கேட்கும் நீங்கள் ஓர் அரசு ஊழியர். நீங்களும் உங்கள் நூல் வெளியீட்டை அரசியல்வாதியைக் கொண்டே வெளியிட்டுள்ளீர்கள். உயரிய பதவியில் உள்ள தங்களுக்கு ஒரு நூலை வெளியிட என்ன பொருளியல் சிரமம் வந்தது? நேருக்கு நேராக, ரத்தமும் சதையுமாக இருக்கும் இந்த உண்மையை உங்களால் எதிர்க்கொள்ள முடியவில்லை என்பதால் ‘நூல் வெளியிட சிரமப்படுகிறார்கள்’ என கற்பனையாக ஒருவரை முன்வைக்கிறீர்கள். அப்படி சிரமப்படும் மனிதர் யார் என்பதும் உங்களுக்குத் தெரியாது. ஆனால் எங்கோ யாருக்காகவோ கருணையின் குரலுடன் கற்பனையாகப் பேசிப்பேசி அது ஏற்படுத்தும் மாயத்திரைக்குப் பின்னால் ஒளிந்துகொள்கிறீர்கள். சரி! சொல்லுங்கள் பார்ப்போம், அப்படி சிரமப்படும் எழுத்தாளர்கள் யார்? அவர்களின் வாழ்வியல் சூழல் எப்படிப் பட்டது? அதுகுறித்து உங்களிடம் ஏதாவது முறையான தரவுகள் உண்டா? பொத்தாம் பொதுவான அபிப்பிராயங்களை யார் வேண்டுமானாலும் உதிர்த்துவிட்டுச் செல்லலாம். ‘மலேசியாவில் எல்லா எழுத்தாளர்களும் சுயமாக நூல் வெளியிட்டுக்கொள்ளும் பொருளாதார பின்புலம் கொண்டவர்கள்’ என நான் கூறினாலுமே அதைச் சொல்வதற்கான தரவுகள் என்னிடம் இல்லை என்றே பொருள். ஆக, இங்கு நான் பேசுவது இந்தக் கட்டுரையைப் படிக்கும் உங்களிடம்; உங்கள் கற்பனையில் யாசகம் கேட்கும் ஏழை எழுத்தாளனிடமல்ல.

இராமச்சந்திர ஐயர்

கேள்வி 2: ஓர் அரசியல்வாதி எழுத்தாளனின் நண்பனாக இருக்கும்பட்சத்தில் அவருக்கு தன் நூல் வெளியீட்டில் முன்னுரிமை கொடுப்பதில் என்ன தவறு உண்டு?

பதில்: ஓர் எழுத்தாளனுக்கு அரசியல்வாதிமட்டுமல்ல திருடன், மருத்துவன், ரௌடி, காவல்துறை அதிகாரி என யார் வேண்டுமானாலும் நண்பர்களாக இருக்கலாம். அப்படி இருக்கும்போது ஏன் அரசியல்வாதியை மட்டும் முன்னிறுத்துகிறான் என்பதுதான் கேள்வி. பதில் மிக எளிது. நாம் சமூகத்தின் முன், முன்மாதிரிகளை காட்ட விரும்புகிறோம். இவர்தான் இந்தச் சமுதாயத்தின் அடையாளம் எனச் சொல்ல விரும்புகிறோம். அவர் கருத்துகளை பரப்ப கலை, இலக்கிய, பண்பாட்டு மேடைகளை வழங்குகிறோம். அப்படியாயின் அரசியல்வாதிகள் மட்டும்தான் நமது அடையாளமா? அவர்களின் கருத்துகளுக்கு உண்மையில் அறிவுச்சூழலில் ஏதேனும் மதிப்புண்டா? அரசியல்வாதியாக இருப்பதாலேயே ஒருவர் எந்த அறிவுத்துறை சார்ந்தும் பேச தகுதி பெற்று விடுகிறாரா?

நன்றாக யோசித்துப் பாருங்கள்… நம் மத்தியில் பல்வேறு துறைகளில் சாதித்த கலைஞர்கள் ஆளுமைகள் உள்ளனர். இந்த வரியை இப்போது எழுதிக்கொண்டிருக்கும்போதே இயக்குனர் சஞ்சை, பேராசிரியர் என்.எஸ்.ராஜேந்திரன், முத்து நெடுமாறன், இர. திருச்செல்வம், திருமாவளவன், பி. எம். மூர்த்தி, முனைவர் முரசு நெடுமாறன் என பெரும் பட்டியல் ஒன்று என் மனதில் உருவாகிறது. நாம் இவர்களை நமது அறிவார்ந்த செயல்பாடுகளுக்கு முழுமையாகப் பயன்படுத்தியுள்ளோமா? நமது அடையாளங்களாக நாம் இவர்களை முன்வைத்துள்ளோமா? வாழ்ந்த காலத்தில் டாக்டர் ஜெயபாரதி, காத்தையா, பேரா. லோகநாதன், அதிகைமணி, முனைவர் சிங்காரவேலு என யாராவது ஒருவரை நமது முன்னோடிகள் முன்னிறுத்தியதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இரண்டு அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் நடந்த சண்டையைப் பயன்படுத்திக்கொண்டு நூல் வெளியீட்டில் லாபம் ஈட்டியவர்கள்தானே நமது முன்னோடிகள். இதில் அறிவுத்தரப்பை எங்கே போய் தேடுவார்கள்?

ஜீவி காத்தையா

இன்றும் இதை நாம் செய்யாமல், இவர்கள் ஒரு துறைக்கு வழங்கியுள்ள அர்ப்பணிப்பை இளைஞர்கள் முன்வைக்காமல் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும்? அறிவார்ந்த செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் தகுந்த ஆளுமைகளை முன்னிறுத்தி ‘இவர்தான் நம் அடையாளம்’ எனச் சொல்லாமல் இளைஞர்கள் மனதில் எந்தத் தீயை ஏற்றிவிட முடியும்? அப்படிச் செய்யாமல்தான் ஆர்.எச்.நாதனையும் மலாயா கணபதியையும் இராமச்சந்திர ஐயரையும் மறந்தவர்களாக இருக்கிறோம்.

கேள்வி 3: நீங்கள் இலக்கியத்தில் தூய்மைவாதம் பேசுகிறீர்களா? இவர்கள் இருக்கலாம் இவர்கள் இருக்கக்கூடாது எனச் சொல்ல நீங்கள் யார்?

பதில்: இல்லை. மேலே நான் சொன்ன பட்டியலைப் பார்த்தாலே நான் தூய்மைவாதம் பேசவில்லை என்பது புரியும். அந்தப் பட்டியலில் உள்ள பலரும் நான் செயல்படும் துறையுடன் முழுமுற்றாக முரண்பாடு கொண்டவர்கள். ஆனால் அவர்கள் துறையில் அர்ப்பணிப்புடன் பங்களிப்பவர்கள். நன்றாக புரிந்துகொள்ளுங்கள், நான் அரசியல்வாதியாக ஒருவர் இருப்பதை குற்றமென சொல்ல விளையவில்லை. அவரிடமிருந்து அரசியல்தலைவர் எனும் அடையாளத்தை எடுத்துவிட்டால் அவர் யார் என்ற கேள்வியையே முன்வைக்கிறேன். உதாரணமாக, மருத்துவர் மைக்கல் ஜெயகுமார் (பி.எஸ்.எம்) அவர்களை எடுத்துக்கொள்வோம். அவரிடமிருந்து அரசியல்வாதி எனும் அடையாளத்தை நீக்கிவிட்டால் அதனால் ஒன்றும் பாதிப்பில்லை. அவர் வாழ்க்கை முழுக்கவே சமூகத்துக்கானது. அவரால் அரசியல் எனும் அடையாளம் உயர்வடைகிறது. நாம் என்றாவது அவரை இந்தச் சமூகத்தின் முன் நிறுத்தியுள்ளோமா? அவர் நம்பும் கருத்துகளை இளையோர் மத்தியில் பேச வாய்ப்பளித்துள்ளோமா? கல்லா கட்டாது அதுதானே. இங்கு ஒருவர் யாராக இருக்கிறார்கள் என்பதை ஒட்டி என் விவாதமல்ல; அவர்கள் இச்சமூகத்திற்கு என்ன செய்துள்ளார்கள் என்பதை ஒட்டியே பேச வருகிறேன். அந்தச் செயலுக்குப் பின்னால் இருக்கின்ற சிந்தனையைப் பேச வருகிறேன். அவர்கள் சினிமா துறையைச் சேர்ந்தவர்களாகக் கூட இருக்கலாம். ஆனால் அவர்களிடம் அசலான சிந்தனையும் அதன் வழியான செயல்பாடுகளும் இருக்க வேண்டும். அந்தச் சிந்தனை இந்தச் சமூகத்துக்குச் சென்று சேர வேண்டும். அவர்களால் வைரமுத்துவைபோல அடுக்குமொழியில் பேச முடியாமல் இருக்கலாம்; மனனம் செய்த பழந்தமிழ் இலக்கியங்களை ஒப்புவிக்க முடியாமல் போகலாம். ஆனால் அவர்கள் ஆழுள்ளத்தில் இருந்து பேசுவார்கள். அச்சொல் சரியான மனதில் விதைந்தால் மட்டுமே அடுத்தத் தலைமுறை ஆரோக்கியமாக உருவாகும்.

மைக்கல் ஜெயகுமார்

கேள்வி 4: இந்நாட்டில் புத்தக விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த விருது விழாக்களை நீங்கள் சொல்வதுபோல விருது விழாவுக்கு முன் – பின் என நடத்தமுடியாதுதானே. அப்படியிருக்க நீங்கள் சொல்லும் முறை எல்லா நிலைகளிலும் எப்படிச் சாத்தியமாகும்?

பதில்: ஒரு நிகழ்வு இப்படித்தான் நடக்க வேண்டுமெனச் சொல்ல நான் யார்? நான் சொல்ல வருவது ஒரு விழா என்பது ஆழமான பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதே. அதற்கு அந்த விழா ஒரு கொண்டாட்டமாக மட்டுமல்லாமல் அதை ஒட்டி கூடுதலான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்கிறேன்.

உதாரணமாக மாணிக்கவாசக புத்தகப் பரிசை எடுத்துக்கொள்வோம். சை. பீர்முகம்மது பலமுறை சாகித்திய அகாதமி விருதை விட மாணிக்கவாசக புத்தகப் பரிசு மேம்பட்டது என்று பேசியுள்ளார். காரணம் மாணிக்கவாசக புத்தகப் பரிசு 7000 ரிங்கிட். தமிழக கணக்கில் 140,000 வரலாம். (சாகித்திய அகாதமி விருது தொகை ஒரு லட்சம் ரூபாய்.) நான் ஒருமுறை அவரிடம் கேட்டேன், ஒரு விருதின் தொகை அதிகமாக இருப்பதாலேயே அதன் மதிப்பு கூடிவிடுமா? சாகித்திய அகாதமியில் விருது பெறும் நாவல்கள் 24 இந்திய மொழிகளில் மொழியாக்கம் காணும் வாய்ப்புண்டு. அதன் வழியாக ஒரு மொழியில் உருவாகும் புனைவு பிற மொழிகளுக்கும் செல்கின்றன. இன்று நாம் வாசிக்கும் இந்திய மொழிகளின் மிகச்சிறந்த நாவல்கள் சாகித்திய அகாதமியால் மொழியாக்கம் கண்டவைதான். அவ்வகையில் சாகித்திய அகாதமி வரையறைகள் மேம்பட்டவை என்றேன்.

எஸ்.ஏ. கணபதி

யோசித்துப் பாருங்கள்! விருது விழா என்பது கிடைக்கப்பெற்ற நாவலில் சிறந்ததை நடுவர் குழுவால் வாசிக்கப்பட்டு தேர்வு செய்து ஓர் அறவாரியம் வழங்கும் பணத்தை கைமாற்றி விடுவதில் மட்டும் இருப்பதில்லை. இதை செய்ய அமைப்பும் தேவையில்லை. தொடர்புகள் கொண்ட தனிநபர்கூட செய்யலாம். அப்படைப்பு பிற இனமும் வாசிக்க வழிவகை செய்யும் முயற்சியும் நிகழ்ந்தால் மட்டுமே ஏற்பாட்டுக்குழு அதற்கான உழைப்பை பூரணமாக வழங்கியுள்ளது எனப்பொருள். நான் ஒவ்வொரு முன்னெடுப்பிலும் அத்தகைய ஆழமான பங்களிப்பை எதிர்ப்பார்க்கிறேன். அப்படி இருந்தால் கலை இலக்கியச் சூழலில் பெருமாற்றம் நிகழும் என்கிறேன். அவ்வளவுதான்.

கேள்வி 5: ஒருவர் தன் தலைவராக, தனது முன்னோடியாக ஓர் அரசியல்வாதியை மனதில் ஏந்தியுள்ளார். அவரைத் தான் ஏற்பாடு செய்துள்ள விழாவுக்குத் தலைமை தாங்கச் சொல்வதில் என்ன பிழை?

பதில்: அதில் என்ன பிழை இருக்க முடியும்? ஓர் அரசியல்வாதியைத் தனது தலைவராக ஒருவர் ஏற்பதில் நிச்சயம் பிழை இருக்காது. ஆனால் அந்த அரசியல்வாதி யார் என்பதில்தான் என் கவனம் செல்லும். பினாமிகள் வழியாக சொத்து சேர்த்து, அடியாட்கள் வழியாக அரசியல் செய்து, பெண்களின் நடத்தையைக் கொச்சையாக வர்ணித்து, நுகர்பொருள் கலாச்சாரத்தில் ஊறி கிடக்கும் யாராவது ஓர் அரசியல் தலைவர்தான் தனது முன்னோடி என்றால் அதை கேள்வி எழுப்ப நான் யார்? ஆனால் அப்படியான எழுத்தாளர் ஒருவர் தனக்கு முன்னோடி எழுத்தாளராக புதுமைப்பித்தனையோ பாரதியையோ சொல்லும்போது நான் சிரிக்காமல் எப்படி இருக்க முடியும்? இந்த உலகின் முரண்களைப் பார்த்து ஒருவன் மனம்விட்டு சிரிக்கக்கூட அனுமதியில்லையா?

முரசு நெடுமாறன்

இறுதியாக, நான் எழுத்தாளன். எச்சூழலிலும் என் கருத்தை வைப்பதில் தயக்கம் காட்டாதவன். அக்கருத்துகளை முழு முற்றாக ஒருவர் புறக்கணிக்க எல்லா உரிமையும் உண்டு. ஆனால் இப்படி எழுதும்போது நான் என்னுடனேயே கொஞ்சம் உரையாடிக்கொள்கிறேன். அது இன்னும் என்னைக் கொஞ்சம் தீவிரமாக்குகிறது. வேறு யார் நான் சொல்வதை கேட்காவிட்டாலும் நானாவது கொஞ்சம் கேட்பேன் அல்லவா. அதற்காகவேணும் இதை இங்கே எழுதி வைக்கிறேன். வேறொன்றுமில்லை.

(Visited 60 times, 1 visits today)