குருதிவழி நாவல்: என் உரை

எனது பத்தாவது வயது வரை நான் லூனாஸில் உள்ள கம்போங் லாமா எனும் பகுதியில் வசித்து வந்தேன். அங்கு எப்போதாவது ஒருதடவை மனப்பிறழ்வால் பாதிக்கப்பட்ட சீனக் கிழவி ஒருத்தியின் வருகை நிகழ்வதுண்டு. அவளை நாங்கள் கீலா கிழவி எனக்கிண்டல் செய்வோம். அவளால்தான் முன்னர் லூனாஸ் தோட்டத்தில் சாராயம் காய்ச்சியவள் என. என் பாட்டி சொல்வார். 1981ஆம் ஆண்டு பலரும் இறக்கக் காரணமாக இருந்த விஷச்சாராயம் அவளால் காய்ச்சப்பட்டதுதான் என்பாள் ஆங்காரமாக. அந்த மரணச் சம்பவங்களுக்கு பின், ஊரைவிட்டு ஓடிப்போன அவள் பைத்தியக்கார கிழவியாகத்தான் திரும்பி வந்து சேர்ந்திருந்தாள். அரைநிர்வாணமாகத் திரியும் அவளை எங்கள் கம்பத்து பெரியவர்கள் கல்லால் அடித்து விரட்டுவார்கள். ஒவ்வொருமுறையும் அவள் அடிபடுவதற்கென்றே வந்து போவதுபோல இருக்கும்.

எனக்கு ஓரளவு விபரம் தெரியத் தொடங்கியப்பின்னர் இந்த மரணம் குறித்து வேறு சில தரவுகளும் கிடைக்கத் தொடங்கின. பட்டர்வர்த்திலிருந்து அவளுக்குப் போட்டியாக பாக்கெட்டுகளில் சாராயம் விற்க வந்த மற்றுமொரு சீனன்தான் அவள் காய்ச்சிய சாராயத்தில் விஷம் கலந்துவிட்டான். இது தொழில் போட்டியால் நிகழ்ந்தது எனக் கூறினர். இன்னும் சிலர் இது ஒரு விபத்து, சாராயம் காய்ச்சும்போது இப்படி சில சமயம் நிகழ்ந்துவிடும். அவள் திட்டுமிட்டு அதை நிகழ்த்தவில்லை என்றனர்.

அந்தக் காலக்கட்டத்தில்தான் பினாங்கு பயனிட்டாளர் குரல் ‘மதுவை ஒழிப்போம் மதியை வளர்ப்போம்’ எனும் சிறிய கையேட்டை வெளியிட்டது. அதில் இந்தச் சாராயச் சாவால் எத்தனை பேர் மாண்டனர் என்ற துல்லியமான புள்ளி விபரங்கள் இடம்பெற்றிருந்தன. நிறைய அட்டவணைகளும் புள்ளிவிபரங்களும் அதில் இருந்தன. எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் என் கண்முன் சுற்றிய அந்தப் பைத்தியக்கார கிழவி குறித்தோ அவளுக்குப் போட்டியாக சாராயம் காய்ச்சிய சீனன் குறித்தோ ஒரு குறிப்பும் அந்நூலில் இல்லை. அதுநாள்வரை நான் கேட்ட கதைகள் ஏற்படுத்திய எந்தத் தாக்கத்தையும் அந்த கையேடு கொடுக்கவில்லை.

இந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் லூனாஸில் நடந்த சாராயச் சாவு என்பது ஒற்றை வரி குறிப்பாகவே பலர் மனதில் எஞ்சியுள்ளது. வரிசையாக பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரண வீடுகள் இன்று மாரியம்மன் கோயில் வளாகமாக மாறிவிட்டது. அத்தனை மரணத்துக்காக பொறுப்பேற்று தன்னையே அழித்துக்கொண்டு திரிந்த அந்தக் கிழவியை இப்போது அனைவரும் மறந்துவிட்டனர். அவள் பெயர்கூட யாருக்கும் தெரியாது,

தனி மனிதனின் உணர்ச்சிகளையும் கொந்தளிப்புகளையும் மனஅலைச்சல்களையும் தணிக்கை செய்துவிட்டு வெளிவரும் வரண்ட செய்திதான் வரலாறு என்றால், விவரிக்கப்படாத அந்தச் சீனக்கிழவியின் வாழ்வை எதற்குள் அடக்குவது? வரலாற்றில் அவள் அழுகைக்கு இடமே இல்லையா? அப்படி அவள் வாழ்வை விரிவாக்கி எழுதப்படுவது வரலாறு ஆகாது என்றால், வரலாறு என எழுதி வைத்தவைகளை ஏன் நாம் கதைகளாக நெருங்கக்கூடாது? அப்படிப்பார்த்தால் இந்த உலகைச் சூழ்ந்துள்ளவை கதைகள் மட்டும்தானா? அந்தக் கதைகளின் மீதா நாம் நமது பெருமிதங்களையும் துன்பங்களையும் ஏற்றி வைத்துள்ளோம்?

நண்பர்களே, சுனில் கிருஷ்ணனின் ‘குருதிவழி’ நாவல் இப்படியான எண்ணங்களை கிளர்த்தக் கூடியது. வரலாறு குறித்த பல்வேறு கேள்விகளை உருவாக்கக் கூடியது.  இந்தக் கேள்விகள் மீது ஏறி நின்றே நீண்டதொரு கதையைச் சொல்லக்கூடியது.

***

1920களில் தொடங்கும் இந்நாவல் 1970களில் நிறைவை அடைகிறது. நிறைவு என்பது நாவல் மையமாகக் கொண்டுள்ள சிக்கலுக்கான நிறைவு மட்டும்தான். நாவலின் சிக்கல் மிக எளிதானது. பெருமாளுக்குப் பிள்ளை இல்லை. தனக்குக் குழந்தை இல்லாத காரணத்தை கனவுகளின் தூண்டுதலால் ஆராயும்போதுதான் தன் தாத்தா சுடலை செய்துள்ள கொலை குறித்து பெருமாளுக்குத் தெரியவருகிறது. எனவே குழந்தைவேலின் பரம்பரையினர் யாராவது இருந்தால், அவர்கள் வழங்கும் மன்னிப்பே தன் குடும்பத்தை இறுக்கிப் பிடித்துள்ள சாபத்திலிருந்து மீட்கும் என ஜோதிடர் வழி அறிந்துகொள்கிறான். ஆனால் மன்னிப்பதை போல மன்னிப்புக் கேட்பதும் அவ்வளவு எளிதாக நிகழ முடியாதது என்பதை அவர் தாமதமாகவே அறிகிறார்.  நாவலின் முதல் சரடு என்பது இதுதான்.  ஆனால் அதன் பின்னரும் 280 ஆண்டுகள் கழித்த ஒரு கதை இதில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த அனைத்துக் கதைகளையும் இணைப்பது சாதாரணம் இரும்பு வேல். தன் இன மக்களைக் கொல்லும் ஆங்கிலேயனை வெல்ல முடியாத சாதாரண இரும்பு வேல் அது, அப்படி தன்னைவிட பலமான எதிரியைக் கொல்ல முடியாதபோது கெட்டிப்பட்டுக்கிடக்கும் கோபத்தை யார் மீதாவது திணித்தே ஆக வேண்டும் எனும் நிலையில்தான் குழந்தை வேல், ஆங்கிலேயன் நிகழ்த்தும் கொடுமைகளை வேடிக்கைப் பார்த்த சுடலையை வேலேந்தித் துரத்திச் செல்கிறான்.

சுடலை யார்? சாதியால் தாழ்த்தப்பட்டவன். எவ்வித அதிகாரமும் இல்லாதவன். அதிகாரம் படைத்த ஆங்கிலேயனிடம் பட்டாளத்தானாகப் பணியாற்றும் அடிமை அவன். ஆம்! சுடலையை அடிமை என்றுதான் சொல்ல வேண்டும். ஒருவகையில் மனம் மரத்துக்கொண்டிருந்த அடிமை. மரணத்தைப் பார்த்துப் பார்த்து அவன் மனம் அப்படி மரத்துப்போயிருக்கலாம்.

நாவலில் சுடலையின் அறிமுகம் அபாரமானது. சாதிய ஒடுக்குமுறையை எதிர்த்து போராடும் பூச்சி மாமாவின் மரணத்தில் இருந்தே சுடலையின் கதை தொடங்குகிறது. சட்டையணிந்த காரணத்தால் கொல்லப்படும் பூச்சி மாமாவின் மரணத்தில் இருந்தே சுடலையின் வாழ்வு நிலை மாறி பட்டாளத்தானாக ஆகிறான். பெண்களை நிர்வாணப்படுத்தி, சிறுமிகளை பாலியல் சித்திரவதை செய்து, இளைஞர்களை கொடூரமாகக் கொன்று குவிக்கும் ‘லவெட்’ எனும் ஆங்கில அதிகாரியின் கட்டளைக்கெல்லாம் அடிபணிய கடமைப்பட்டவனாகிறான்.   

ஆனால் அவன் அறிந்து செய்வது ஒரே ஒரு கொலையை.

நண்பர்களே! ஒரு நல்ல நாவல் தன்னியல்பாக தன்னை அமைத்துக்கொள்கிறது. தனக்கான நியாயங்களை தானே வகுத்துக்கொள்கிறது. இந்தக் கொலைத்தருணத்தை வாசிக்கும்போது சுனில் கிருஷ்ணனின் படைப்பாற்றலின் ஆளுமை துல்லியமாக வெளிபட்டது.

யோசித்துப்பார்த்தால் அந்தக் கொலைக்கு வரலாற்றில் அர்த்தமென்ன? ஆங்கிலேய அதிகாரி தன் கண்ணெதிரே இருந்தும் தன் மக்களை அழித்தும் எதிர்க்க முடியாத அவஸ்தையோடு எஞ்சியிருக்கும் மனிதத்தைப் பாதுகாத்துக்கொள்ள தப்பியொடும் ஒருவனும் – நிர்வாணப்படுத்தப்பட்டு முட்டிக்கால் இடவைக்கப்பட்ட தன் கர்ப்பினி மனைவியை மாடுபோல யாரோ ஒருவனை சுமக்க வைக்கும் ஆங்கிலேயனை எதிர்க்க முடியாத எதிர்த்தாலும் வெகு எளிதில் கொல்லப்படப்போகும் ஒருவனும் நிகழ்த்திக்கொண்ட மோதலின் முடிவு அது. ஒருவகையில் விபத்து. ஒருவகையில் தற்செயல்.

ஆம்! சரியாகச் சொல்வதானால் அது ஒரு தற்செயலேதான். ஏன் சுனில் அதை தற்செயலாக நிகழ்த்துகிறார்.

இப்படி வரலாற்றில் அர்த்தமில்லாத தற்செயல்கள் எப்போது அர்த்தப்படுகின்றன என்பதைப் புரியவைக்க. ன்அவை மர்மமாக்கப்படும்போது, அந்த மர்மம் அச்சத்தை உருவாக்கும்போது. சுடலையால் கொல்லப்பட்ட குழந்தைவேல் பிணம் புதைத்து மறைக்கப்பட, அவன் உடல் கிடைக்காமல் இருப்பதிலிருந்து அந்த மர்மம் ஊடுருவி அச்சம் உருவாகிறது. இந்த அச்சமே கதைகளைக் கட்டமைக்கின்றன. இருபதே ஆண்டுகளில் குழந்தைவேல் குறித்தும் அவரது வேல் குறித்த கதைகளும் பிரமாண்டமாக உருவாகின்றன. அச்சமும் மர்மமுமே அதை உருவாக்குகின்றது. அந்த வாய்மொழிக்கதைகளில் குழந்தைவேல் ஆங்கிலேயனே அஞ்சும் வீரனாக பரிணாமம் எடுக்கிறான். மந்திர மாயங்கள் தெரிந்தவனாகிறான். கருப்பசாமியாகவே அவர்கள் சொல்களில் நிமிர்கிறான். அவன் ஒருவனைச் சுற்றி அத்தனைக் கதைகள் கட்டமைகின்றன. இப்போது இந்தக் கதைகள் காலத்தால் காணாமல் போகக்கூடாது. அவை என்னென்றும் மக்களின் பேசுபொருளாக இருக்க வேண்டுமென்றால், காற்றில் அலைந்துகொண்டிருக்கும் அந்த விழுதுகள் பூமியில் வேரூன்ற வேண்டும். அப்படி அந்தக் கதைகளை வேருன்ற வைக்க உருவாக்கப்பட்டவைகள்தான் சாமிகள். தற்செயல்களினால் நிகழ்ந்த மரணத்தால் கொலை செய்த அந்த வேல் ‘வேலுடையார்’ எனும் கடவுளாகிறார். சாமிகள் மனிதனிடம் விளையாடுவதுபோல மனிதர்களும் சாமிகளை வைத்து ஆடும்  ஆட்டம்தான் இந்த நாவல்.

அப்படி ஒரு விளையாட்டில்தான் நாவல் தொடங்குகிறது.

***

இந்த நாவலின் கதையைச் சொல்வது என் நோக்கமல்ல. அப்படி இந்த நாவலை ஒரு கதையாக சொல்லவும் முடியாது. பல அடுக்குகளைக் கொண்ட இந்த நாவலில் ஒரு வாசகனாக நான் எதிர்க்கொண்ட திறப்புகளை மட்டுமே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். அந்தத் திறப்புகள் உங்களுக்கு இன்னும் இந்நாவலை விசாலமாக்கும் என்று நம்புகிறேன்.

சுனில் கிருஷ்ணன்

இந்த நாவலில் 280 ஆண்டுகளுக்குப் பிந்தைய காட்சி ஒரு பகுதியாக வருகிறது என்றேன். எனக்கு அந்தப் பகுதியில் சில விமர்சனங்கள் உண்டு. ஆனால், இந்த ஒட்டுமொத்த நாவலையும் இன்னும் கூர்மையாக அறிந்துகொள்ள அந்தப் பகுதியே உதவக்கூடியது. அதில் வரக்கூடிய ஹவாஸ்கா சொல்கிறாள், கதை என்பது ஈரக்களிமண். அது வரலாறாக இறுகினால் கெட்டிப்பட்டு உடையும். ஈரக்களிமண்ணாக நெகிழ்ந்திருக்கும்போது நீடித்து வாழும். எனவே கதைகளை கதைகளால் எதிர்க்கொள்ள வேண்டும்.

நண்பர்களே, கிட்டத்தட்ட இந்த வரியை நான் எழுத்தாளர் கோணங்கியிடம் கேட்டிருக்கிறேன். ஏடகநாதர் கோயிலுக்கு அவருடன் சென்றபோது ஞானசம்பந்தரின் ஓலை வைகையாற்றை எதிர்த்து கரையை அடைந்த தலம் அது என அவர் விளக்கினார். பின்னர் அவரே சொன்னார், ”இந்தக் கற்பனையை அறிவியலால புரிஞ்சிக்க முடியாது. ஆனால் இந்தக் கற்பனையை எதிர்க்கொள்ள கற்பனைதான் தேவை. நாளையே நீ இந்த ஏடகநாதர் கோயில் வரலாற்றை ஒட்டி ஒரு புனைவு எழுதுவதுதான் அதை எதிர்க்கொள்ளும் வழி” என்றார்.

நாவலில் ஹவாஸ்கா சொன்னதையும் என்னிடம் கோணங்கி சொன்னதையுமே இந்த நாவலில் சுனில் வேறு மாதிரி நிகழ்த்திக்காட்டுகிறார்.

தன் பாட்டன் கொலை செய்ததற்காக மன்னிப்புக் கேட்க காத்திருந்து அதை நிகழ்த்த முடியாமல் போகும் பெருமாளுக்கும் பாட்டனின் வரலாற்றை கதையாக மாற்றி எழுதும் அவர் தம்பி சோலைக்குமான பேதத்தை எழுதி வாசகனுக்கு அதை உணர்த்துகிறார். பெருமாள் கதைகளுடன் போராடக்கூடியவர். சோலை கதைகளை கதைகளால் எதிர்க்கொள்பவன். எனவே, அவனுக்கு எவ்வித மன அழுத்தங்களும் இல்லை. மன்னிப்புக் கேட்பதன் வழியாக தன் குடும்பத்துக்கு விடுதலையைப் பெற்றுத்தர முடியும் என காத்திருக்கும் பெருமாளுக்கு கிடைக்காத வெள்ளி வேல் சோலைக்குக் கிடைக்கிறது. சோலைக்கு அந்த வேல் பெரிய அர்த்தம் கொடுக்கவில்லை; ஆனால் அதை கொடுத்ததன் வழியாக வேலுசாமி தன்னை மீட்டுக்கொள்கிறார். மன்னிப்புக் கேட்பதால் பாவம் தீரும் என அனுப்பி வைக்கப்பட்டவர் வேலுசாமிக்கு விடுதலையை வழங்குகிறார்.

இந்த நாவலில் மற்றுமொரு சரடு வேலுசாமி. அவரே இந்த நாவலின் வலுவான பாத்திரம் எனலாம். இரண்டு வெவ்வேறு தலைமுறைக்கும் நடுவில் ஊசலாடும் மனிதன் அவர். மகளைப் பறிகொடுத்தவர். மகள் மரணத்துக்குக் காரணம் தான் சாமியாடும்போது செய்யும் பாவச்செயல் என நம்புபவர். அந்தக் குற்ற உணர்ச்சியில் உழன்று துடிப்பவர்.

தொடக்கத்தில் வேலுசாமி திருவிழாவில் சந்நதம் வந்தே வெள்ளி வேலை அதைப்பெறத் தகுதியானவருக்கு வழங்குகிறார். பின்னர் அவர் சித்தப்பா மகனான குமார் கைக்காட்டியவனுக்கு வெள்ளி வேல் செல்கிறது. அப்படி வெள்ளி வேலைப் பெறுபவர்கள் அரசியவாதிகள் என்பதால் குமார் அவர்களால் பலனடைகிறான். ஆனால் கடவுளை வைத்து ஆடும் இந்தச் சூதாட்டத்தில் இருந்து வேலுசாமி தப்பவே நினைக்கிறார். அதற்கான வாய்ப்பு அவரே அறியாத அவரது எதிரி வழியாக நிகழ்கிறது.

இதுதான் வாழ்வின் புதிர். இந்தப் புதிர்கள் நிறைந்ததுதான் இந்த நாவல்.

***

குருதிவழி நாவல் ஏன் அதன் புனைவு முறையால் சிறந்தது என்பதற்குச் சில உதாரணங்களை முன் வைத்து இந்த உரையை முடிக்கிறேன்.

இந்நாவலின் பலங்களில் ஒன்று அதன் மொழி. எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனிடம் இவ்வாறான ஒரு மொழி திரண்டு வந்துள்ளதை மிகவும் ஆச்சரியத்துடன் பார்க்கிறேன். அவரை கைவிட்டு நாவல் தன்னை தானே எழுதிக்கொண்ட பகுதிகளை என்னால் மிக நெருக்கமாக உணரமுடிந்தது. ஆங்கிலேயன் செய்யும் கொடுமைகளை எழுதிக்கொண்டிருக்கும்போது அதைப்பார்க்க பிடிக்காமல் திரும்பிக்கொள்பவன் உண்மையில் சுடலையல்ல சுனில் என்பது வரை நாவல் நமக்கு வெளிப்படுத்துகிறது.

அடுத்து, ஒரு சிறந்த நாவலாசிரியர் ஒரு கருத்தின் தரப்பாக மட்டும் இருந்து கதாபாத்திரங்களை தன் கருத்தின் பிரதிநிதியாக பேசவைப்பதில்லை. அதன் எதிர்கருத்து தரப்புக்கான அத்தனை நியாயங்களையும் முன்வைத்து விவாதிப்பார். இந்நாவலில் அப்படியான விவாதங்கள் பல இடங்களில் நிகழ்கின்றன. மார்க்ஸியம் குறித்தும், கலைகள் குறித்தும், மூட நம்பிக்கைகள் குறித்தும், வரலாற்றின் நம்பகத்தன்மை குறித்தும் தர்க்கங்களை சுனில் வெவ்வேறு பாத்திரங்கள் வழியாக தன்னை உடைத்து நிகழ்த்துகிறார். எழுத்தாளானுக்கு இந்த தன்னுடைப்பு முக்கியமானது. அதன் வழியாக அவன் இன்னொரு வாழ்வை வாழ்ந்து பார்க்க முடியும்.

மூன்றாவதாக, மனிதனின் நுட்பமான உணர்ச்சிகளை வெளிக்காட்டும் தன்மை இந்நாவலை கூடுதலான கவனத்திற்குள்ளாக்குகிறது. உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்லலாம். குழந்தைவேல் வேலை எடுத்து வரும்போது பட்டாளத்தில் வேலை செய்த சுடலைக்கு ஏன் அச்சம் எழுகிறது. அது ஆயுதத்தைப் பார்த்த அச்சமல்ல. சாதியால் ஏற்பட்ட அச்சம். சாதியை எதிர்த்து, தன் முன் கதாநாயகனாக இருந்த பூச்சி மாமாவின் மரணத்தில் தொடங்கிய பயம் அது. தன் நண்பனாக இருந்தாலும் சாதியால் உயர்ந்த குழந்தைவேலை கண்டவுடன் அவன் மீண்டும் சிறுவனாக ஓடி ஒளியும் தருணத்தைதான் சுனில் அங்கு பதிவு செய்துள்ளார்.

இந்த நாவலின் வடிவமும் அதன் பலம்தான். நாவலின் நேர்கோடற்ற வடிவம் அது உணர்த்த விரும்பும் அனுபவத்திற்கு நெருக்கமானது. வாய்மொழி வரலாற்றின் சாத்தியங்களைச் சொல்லும் இந்நாவல் அது எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பதிலிருந்தே தொடங்குகிறது, சுப்பையன்தான் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு குளியைத் தோண்டும்போது மண்ணில் புதையுண்ட வேலை முதலில் காண்பவன். உடனே அவனுக்கு மரணமும் நிகழ்கிறது. அது ஓர் ஆடி மாதம். உடனே அவ்வூர் மக்களின் மனம் ஆடி மாதங்களில் இறந்தவர்களின் பட்டியலைச் சேகரிக்கிறது. அசலூர்காரர்கள் ஆடி மாதம் இறப்பதாய் ஒரு கணக்குப் போடப்படுகிறது. உதிரியாகக் கிடக்கும் எதையும் மக்களின் மனம் ஒரு புதிரைக் கொண்டே ஒன்றாகத் தொகுத்துக்கொள்கிறது. சுனில் இந்நாவலை வாசிக்கும் வாசகனுக்கும் அவ்வாறான அனுபவத்தைக் கொடுக்கிறார்.

இறுதியாக, வாசக இடைவெளியே ஒரு நாவலுக்கு வெவ்வேறு வண்ணங்களை வழங்குகின்றன. உதாரணமாக, ஒரு மரணம் நிகழ்ந்த முப்பது ஆண்டுகளில் அதன் மர்மத்தால் இறந்தவனை கடவுளாக்கும் கதை ஒருபுறம் இருக்க, திட்டமிட்டே ஒருவனைக் கடவுளாக்கும் சாத்தியங்களையும் சுனில் சுட்டிக்காட்டிச் செல்கிறார். அதற்குக் காரணமாக இருப்பது சாதி. தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவன் தங்கள் சாதி இளைஞனைக் கொன்றுவிட்டான் எனும் சாத்தியத்தை திட்டமிட்டே ஊரார் மறைக்கின்றனர். அப்படி ஒரு வரலாறு தங்கள் சமூகத்தில் எழுதப்படக்கூடாது என அவன் மரணத்தை வீரமரணமாக மாற்றுகின்றனர். அதனாலேயே இறந்துபோன குழந்தைவேல் குறித்து அதிகமாகத் தெரிந்த குருந்தப்பனை பேச விடாமல் தடுக்கின்றனர்.

***

ஒட்டுமொத்தமாக இந்த நாவலை வாசித்து முடித்தபோது மனதில் எழும் கேள்வி ஒன்றுதான். ‘இந்த வாழ்க்கைக்கு ஏதேனும் அர்த்தம் உள்ளதா?’

வரலாறு முழுக்கக் கொத்துக்கொத்தாக மரணங்கள் நிகழ்ந்தாலும், அதை பக்கத்தில் இருந்து மனிதர்கள் பார்த்து மிரண்டாலும், அந்த மரணங்களுக்கு காலத்தின் முன் எந்த பொருளும் இல்லாமல் போவதை உள்ளூர உணர்ந்தாலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ளவே முயல்கின்றனர். அப்படி அர்த்தப்படுத்திக்கொள்ள அவர்களுக்கு இந்தக் கதைகள் அவசியமாக உள்ளது. கதைகள் வழியாக அவர்கள் இன்னும் கொஞ்சம் வாழ்வதற்கான அர்த்தங்களைச் சேமிக்கிறார்கள். அப்படி உருவாக்கப்படும் கதைகளின் நங்கூரமாக கடவுள்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அது கலையாகவும் இருக்கலாம். நாட்டார் பாடல்களாக, கூத்துகளாக, சிற்பங்களாகஊ இருக்கலாம். அல்லது நாவலில் சோலை எழுதிய கதையைப் போலவே அந்த பைத்தியக்கார சீனக்கிழவிக்காக நான் எழுதிய பேய்ச்சி நாவலாகவோ இருக்கலாம்.  

நன்றி.

1.11.2025 (சனிக்கிழமை) பிரம்மவித்யாரண்யத்தில் ஆற்றப்பட்ட உரை. எழுத்து மொழியில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

(Visited 382 times, 1 visits today)