அனைவருக்கும் வணக்கம்,
2025ஆம் ஆண்டின் சிங்கப்பூர் எழுத்தாளர் விழாவில், சமகால கவிதை குறித்த இந்த அமர்வில் பேச வாய்ப்பளித்தமைக்கு நன்றி. இதன் ஏற்பாட்டாளர் ஆயிலிஷா, கடந்த 25 ஆண்டு காலமாக மலேசியத் தமிழ்க் கவிதை சூழலில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து பேசும்படி கேட்டுக்கொண்டார். மலேசிய நவீன கவிதை வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த மாற்றம் 2006இல் நடைபெற்றது. இந்த மாற்றத்தை அறிய, அதற்கு முன்னர் மலேசியக் கவிதை உலகில் என்ன நிகழ்ந்தது என்பதை ஒரு குறுக்குவெட்டாகவேணும் அறியத்தருவது அவசியம் எனக் கருதுகிறேன். அது பலருக்கும் சில தெளிவுகளை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
மலேசியாவில் நவீன கவிதை உருவாகி வளர்ந்த காலகட்டம் மிகச்சரியாக அறுபது ஆண்டுகள் எனலாம். 1965ஆம் ஆண்டு தமிழ்மலர் எனும் மலேசிய நாளிதழில் சி. கமலநாதன் எழுதிய ‘கள்ளப்பார்ட்டுகள்’ எனும் கவிதையே மலேசியாவில் முதல் தமிழ் நவீன கவிதையென்று கருதப்படுகிறது. ஆனால் அந்தக் கவிதையின் தலைப்பை ‘காலப்படகுகள்’ என ஆய்வுக்கட்டுரைகளில் பரவலாக விளிக்கும் அளவுக்கு மலேசியாவில் புதுக்கவிதை ஆய்வுலகம் ‘வளமாகவும் நலமாகவும்’ உள்ளதை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
‘கழைக்கூத்தாடிக் கள்ளபார்ட்தாரமாகிப்
புதுப்பாட்டுக்கே பின்பாட்டுப் பீப்பியூதி’ எனும் வரியை வாசித்தாலே அதன் தலைப்பை உறுதிப்படுத்திவிடலாம். ஆனால் ந. பாலபாஸ்கரன் போன்று மூலத்தைத் தேடி தரவுகளைச் சேகரிக்கும் ஆய்வாளர்கள் அரிதாகக் காணப்படும் மலேசிய இலக்கியச் சூழலில் இப்படியான குழப்படிகள் இன்னும் அறுபது ஆண்டுகள் ஆனாலும் தொடரும் என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை.
தமிழ் மலரில் நவீன கவிதைகள் வெளிவரக் காரணமாக இருந்தவர் ஆதி.குமணன். மலேசியாவில் பிரபலமான பத்திரிகையாளர். அவருடன் இணைந்து அதைச் சாத்தியப்படுத்தியவர் கவிஞர் அக்கினி. அக்கினி அவர்களை 2018ஆம் ஆண்டு நான் நேர்காணல் செய்தபோது, அன்றைய தமிழகச் சிற்றிதழ்களை வாசித்து, அதன் வழியாக ஊக்கம் பெற்றே புதுக்கவிதைகளை எழுதத் தொடங்கியதாகவும், அவ்வார்வத்தை வளர்த்தெடுக்க தமிழ் மலரில் புதன்கிழமை தோறும் புதுக்கவிதைகளை ஆதி. குமணன் பிரசுரிக்க நிர்வாகத்திடம் அனுமதி பெற்றார் என்றும் அறிந்துகொள்ள முடிகிறது.
அன்றைய காலகட்டத்தில் மலேசியாவில் கவிதை என்றால் அது மரபுக்கவிதை மட்டும்தான். எனவே புதுக்கவிதைகளின் பிரசுரம் அக்காலகட்டத்தில் சர்ச்சையை உண்டாக்கியது. தமிழ் மலர் நிர்வாகத்தைப் புகார் கடிதங்கள் சங்கடப்படுத்தியுள்ளன. மலேசிய இலக்கிய உலகில் மரபுக்கவிஞர்களின் ஆதிக்கம் அப்போது அத்தனை தீவிரமாக இருந்தது.
1977ஆம் ஆண்டுதான் மலேசியாவில் நவீன கவிதை தனக்கான வலுவான இடத்தை உருவாக்கிக்கொண்டது. அப்படி புதிய வீச்சுடன் இயங்க ‘வானம்பாடி’ நாளிதழ் காரணமாக இருந்தது. இது தமிழகத்து வானம்பாடியல்ல; மலேசியாவில் உதயமான வானம்பாடி. ஆதி. குமணனே அதன் தோற்றுநர். வானம்பாடி எனும் பெயரை வைத்தவர் கவிஞர் அக்கினிதான். தமிழகத்து வானம்பாடி கவிஞர்களின் தாக்கத்தால் இவ்விதழுக்கு அப்பெயர் இடப்பட்டது. சுமார் பத்து ஆண்டுகள் வானம்பாடி நாளிதழே மலேசியப் புதுக்கவிதையின் முகமாக இருந்தது. இதற்கிடையில் எம்.ஏ.இளஞ்செல்வன் அவர்கள் ‘நவீன இலக்கியச் சிந்தனை’ எனும் அமைப்பை உருவாக்கி 1979லும் 1988லும் புதுக்கவிதை கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து நடத்தினாலும் அதில் வெளியிடப்பட்ட நூல்களில் உள்ள கவிதைகள் வானம்பாடி கவிஞர்கள் பாணியில் இருந்தன. 1979இல் வெளியீடு கண்ட ‘புள்ளிகளைப் புறக்கணிக்கும் புதுக்கோலங்கள்’, 1988இல் வெளியீடு கண்ட ‘இமைக்காத சூரியன்கள்’ ஆகிய இரண்டு கவிதை தொகுப்புகளையும் வாசித்துவிட்டே இக்கருத்தை முன்வைக்கிறேன். ஒரு பக்கம் கோலாலம்பூரைத் தளமாகக் கொண்டு செயல்பட்ட வானம்பாடி மறுபக்கம் கெடாவை மையமாகக்கொண்டு இயங்கி நவீன இலக்கியச் சிந்தனை அமைப்பு ஆகிய இரண்டுமே வானம்பாடி ரக கவிதைகளையே முன்னிறுத்தின.
உண்மையில் இப்படியான நாளிதழ் உதயமானதும் அதன் வழியாகத் திரண்ட இளைஞர்கள் வழி புதுக்கவிதை மலேசியாவில் ஓர் இயக்கமாக முன்னெடுக்கப்பட்டதும் முக்கியமான நகர்வுதான். ஒருவேளை இப்படி ஓர் இயக்கம் தோன்றாமல் இருந்திருந்தால் பெரும் திரள் கொண்ட இளம் கவிஞர்கள் அக்காலகட்டத்தில் உருவாகாமலேயே இருந்திருப்பர். பழமையில் இருந்த கவிதை நுகர்ச்சியை புது வெளிக்கு நகர்த்த இக்காலகட்ட முயற்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையே. ஆனால் அதன் அடுத்த கட்ட நகர்ச்சி இல்லாமல் மலேசியத் தமிழ்க் கவிதைகள் தேங்கின. அதாவது, தமிழகத்தில் வானம்பாடி 1971இல்தான் உதயமானது. அதற்கு முன்னரே 1959 தொடங்கி ‘எழுத்து’, ‘இலக்கிய வட்டம்’, ‘நடை’ போன்ற சிற்றிதழ்கள் உருவாக்கிய நவீன கவிதைகளின் தாக்கம் மலேசியாவில் முற்றிலும் இல்லாமல் போனது. அதன் விளைவாக கோஷமிடும் வானம்பாடி கவிதைகளே மலேசியக் கவிதைகளின் முகங்களாக வளர்ந்து வந்தன. தப்பித் தவறிக்கூட மலேசியக் கவிஞர்களுக்கு தமிழ்க்கவிதைகளின் இன்னொரு முகம் உள்ளது என்பது தெரிந்து விடக்கூடாது என்பதில் இயக்கங்கள் உறுதியாக இருந்தன. குறிப்பாக மலேசிய எழுத்தாளர் சங்கம்.
1999 முதல் 2002வரை மலேசிய எழுத்தாளர் சங்கம் முன்னெடுத்த புதுக்கவிதை கருத்தரங்குகளால் மலேசியக் கவிதைத் துறைக்கு ஏற்பட்ட எதிர்மறை விளைவுகளை தனிக்கட்டுரையாகவே எழுதியுள்ளேன். சுருக்கமாகச் சொல்வதென்றால், இதனை முன்னெடுத்த பெ.இராஜேந்திரன். ஆதி.குமணன் பாசறையில் வளர்ந்தவர். வைரமுத்து அவருக்குத் தமிழில் முதன்மையான கவிஞர். கவிதைகள் குறித்த புரிதல் இல்லாத சூழலில் பல்கலைக்கழக விரிவுரையாளர்களைக்கொண்டே புதுக்கவிதை பயிற்சிகளை நடத்தினார். அந்தப் புதுக்கவிதை பட்டறையில் வெளியிடப்பட்ட நூல்களில் உள்ள கவிதைகளை ஆராயும்போது அவை வானம்பாடி கவிதை முறைகளையே வலியுறுத்துவனாக இருந்தன. மேலும் பழனிபாரதி, சினேகன் போன்றவர்களே அவர்களின் சிறப்பு விருந்தினர்கள். எனவே, தொடர்ந்து நான்கு ஆண்டுகள் மலேசியாவில் நவீன கவிதை இறங்கு முகத்தை நோக்கிச் செல்ல எழுத்தாளர் சங்கம் கடுமையாகவே உழைத்தது.
இங்கு ஒரு கேள்வி எழலாம். வானம்பாடி கவிதைகள் அத்தனை மலினமானதா? எழுபதுகளில் வெளிவந்த வானம்பாடி கவிதைகள் அடிப்படையாக இரண்டு தன்மைகள் கொண்டவை. முதலாவது அதன் வடிவம் கவியரங்களுக்கு ஏற்ப அமைக்கப்பட்டவை. இரண்டு அதன் உள்ளடக்கம் பெரும்பாலும் முற்போக்குக் கருத்துகளை ஏற்றவை. அரசியல் சூழலால் தமிழகத்தில் எழுந்த அதிதீவிர இடதுசாரிகளின் அலையால் இக்கவிதைகள் செல்வாக்குப் பெற்றன. நேரடியான பார்வையாளரின் எதிர்வினைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு கவியரங்கங்களில் கைதட்டல் பெற்றன. கேட்பவனை கிளர்ச்சியுற வைக்கும் வரிகள், வீழ்த்தவல்ல கோஷங்கள், சாதுர்யமான துணுக்குகள், முற்போக்கான கூற்றுகள் என சொல் செட்டுகள் அடுக்கப்பட்டன.
ஆனால் வாய்மொழி மரபில் இருந்து அந்தரங்கமான வாசிப்பைக் கோருவது நவீன கவிதை. எனவே நவீன இலக்கியத்தின் அலகுகளில் முதன்மையானதான மௌன வாசிப்பிற்கு பதில் ஓங்கியொலிக்கும் தன்மைகொண்ட வானம்பாடி கவிதைகள் முரண் செயல்பாடாகவே கருதப்பட்டது. நவீன கவிதைகளின் அளவுகோள்கள் உலக இலக்கியச் சூழலில் இருந்து தன்னை கட்டமைத்துக்கொண்ட முற்றிலும் புதிய இலக்கிய வகை என அறிந்துகொண்ட கவிஞர்களால் மட்டுமே அது மேலும் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது.
நண்பர்களே, நான் மலேசிய நவீன கவிதையின் வரலாற்றைச் சொல்லித் தொடங்கிய காரணம் உங்களுக்குப் புரிந்திருக்கலாம். அது மலேசியாவில் உருவான 1965 தொடங்கி 2002வரை சுமார் 25 ஆண்டுகள் ஒட்டுமொத்த மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் முன்னிறுத்தக்கூடிய முதன்மையாக நவீன கவிஞர்கள் என யாரும் எழுந்து வரவில்லை. பணபலம் கொண்ட நாளிதழ்களும் தேசிய ரீதியிலான இயக்கங்களும் அப்படி யாரும் உருவாகிவிடாமல் கடுமையாக உழைத்தன. அதற்குக் காரணம் அதை முன்னெடுத்த யாருக்கும் உலகக் கவிதை போக்குக் குறித்த எவ்விதப் புரிதலும் இல்லை.
ஆனால் மலேசியாவில் இலக்கியத்திற்கான மாற்றுக்குரல்கள் எப்போதுமே இருந்து வந்துள்ளன. கோ.முனியாண்டி, அரு.சு.ஜீவானந்தன், ஆதி.இராஜகுமாரன், அக்கினி, சை.பீர்முகம்மது, சீ.அருண் போன்றவர்கள் தமிழகச் சிற்றிதழ் மரபில் உருவான கவிதைகளை அறிந்தவர்களாக இருந்தனர். ஆனால் அவர்கள் வாசிப்பதுடன் அதை நிறுத்திக்கொண்டனர். இவர்களின் மா.சண்முகசிவாவும் சை.பீர்முகம்மதுவுமே தங்கள் எழுத்தின் மூலமாகவும் உரையாடல்கள் மூலமாகவும் சிறந்த கவிதைகளை அறிமுகம் செய்தனர். சை.பீர்முகம்மது, ‘விருட்சம் மாலை’ எனும் மாதாந்திரச் சந்திப்பின் வழியாக சமகாலத் தமிழ் நவீன கவிதை உலகை அறிமுகம் செய்து வைத்தார். மா.சண்முகசிவா ‘கவிதை நதிக்கரையில்’ எனும் கட்டுரைத் தொடர் வாயிலாக மலேசிய நண்பன் நாளிதழில் சிறந்த கவிதைகளை அறிமுகம் செய்பவராக இருந்தார்.
தமிழின் முதன்மையான கவிதை முகங்களை இளைஞர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தவர்கள் அவர்கள்தான். மா.சண்முகசிவா வழியாக உருவான அகிலன் லெட்சுமணன் கவிதை தொகுப்பான ‘மீட்பு’ 2006ஆம் ஆண்டு வெளிவந்தது. மலேசியாவின் உண்மையான கவிதைக்கான முகங்கள் என்பது 2006இல்தான் தோன்றியது.
நான் தொடக்கத்தில் 2006 எனும் ஆண்டை முன்வைக்கும் காரணம் இப்போது புரிந்திருக்கலாம். அவ்வாண்டில்தான் ‘காதல்’ எனும் இலக்கிய இதழ் மலேசியாவில் உருவானது. ‘காதல்’ இதழ் முதன்மையாக முன்னெடுத்தது நவீன கவிதைகளை. அதன் தொடர்ச்சியாக கவிஞர் மனுஷ்ய புத்திரன் மலேசியாவுக்கு அழைத்துவரப்பட்டு நாடு முழுவதும் நவீன கவிதை குறித்த அறிமுகங்கள் தொடங்கின. தொடர்ந்து கவிஞர் சேரன், லீனா மணிமேகலை, ஜெயமோகன், லதா போன்றவர்களின் வருகை வழியாக கவிதை குறித்த புரிதல் புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு ஆழமானது. ‘காதல்’ இதழின் விளைவாக, வலுவான நவீன கவிஞர்களின் தலைமுறை ஒன்று ஒன்றிணைய முடிந்தது. பா.அ.சிவம், பூங்குழலி, தோழி, அகிலன் லெட்சுமணன், யோகி, சந்துரு, மஹாத்மன், மணிமொழி, சிவா பெரியண்ணன், கி.இ.உதயகுமார் என பலரும் தத்தம் கவிதைகள் குறித்த புரிதலை உரையாடுவதற்கு ‘காதல்’ இதழ் வழியமைத்தது. இவர்களைக் காதல் இதழ் உருவாக்கவில்லை; ஒன்றிணைய வழியமைத்தது.
மொழியால் சொல்லித் தீர்க்க முடியாத ஒன்றை மொழியில் முன்வைக்க முயலும் வடிவமாகக் கவிதையை கண்டடைந்ததெல்லாம் இந்த தலைமுறையில்தான் நடந்தது. கவிதை சொல்ல வருவது அனுபவத்தையல்ல; அதன் சாரத்தை என்பது குறித்த புரிதல் இந்தத் தலைமுறை கவிஞர்களிடம்தான் உருவானது.
இதே காலகட்டத்தில் தமிழகத்தில் பெண் கவிஞர்கள் தங்கள் உடலைக் கொண்டாடி பேசும் கவிதைகள் எழுதப்பட்டதால் நவீன கவிதை என்பது புதிய வடிவம் என்றும், அது ஆபாசமான எழுத்துக்குச் சொந்தமானது எனவும் புரிதல் மலேசியாவில் உள்ள பலருக்கும் ஏற்பட்டது. உலக இலக்கியத்தின் போக்கையும் தமிழ் இலக்கியத்தின் வரலாற்றையும் அறியாதவர்கள் மலிந்துகிடந்த மலேசிய இலக்கிய உலகில் அவர்கள் அத்தனை காலம் சொல்லி வந்த புதுக்கவிதைதான் இந்த நவீன கவிதை என்பதை விளக்கவே படாதபாடு பட வேண்டியிருந்தது.
இங்கு கொஞ்சம் நவீன கவிதை எனும் பெயர் உருவாகி வந்த காரணத்தை பார்த்துவிடுவது நல்லது. வால்ட் விட்மன் பாரதியின் முன்னோடி என்பது நாம் அறிந்தது. அவர் பாதிப்பால் யாப்பற்ற ‘காட்சி’ கவிதையை பாரதி எழுதினார். பாரதியார் அவற்றை வசன கவிதை என்றோ புதுக்கவிதை என்றோ எங்கும் குறிப்பிடவில்லை என்பது கவனிக்கத் தக்கது. 1930இல் பதிப்பிக்கப்பட்ட பாரதியார் கவிதைகளின் இரண்டாம் பதிப்பில்தான் ‘காட்சி’ கவிதைகள் இடம்பெற்றன. அதற்கு வசனகவிதை என்ற பெயரை வழங்கியது பதிப்பாசிரியராக இருக்கலாம் என நம்பப்படுகிறது. பாரதியார் விட்மன் பற்றி எழுதிய கட்டுரையில் ‘வசனமாகவே எழுதப்பட்ட கவிதை’ என்பதில் இருந்து அதை பெற்றிருக்கலாம். ஆனால் இதற்கு தகுந்த தரவுகள் இல்லை. தொடர்ந்து எழுத்து இதழ் 1959இல் சி.சு.செல்லப்பா அவர்களால் தொடங்கப்பட்டது. வசன கவிதை போக்கு தொடர இவ்விதழ் வழிவகுத்தது. 1958இல் வசன கவிதை என்ற சொல்லுக்கு பதிலாக புதுக்கவிதை என்ற சொல்லை க. நா. சுப்ரமணியம் உருவாக்குகிறார். க.நா.சு வால்ட் விட்மனை முன் உதாரணமாகக் கொள்ளாமல் டி.எஸ்.எலியட், எஸ்ரா பவுண்ட் ஆகியோரை முன்னுதாரணமாகக் கொண்டார். இதற்குப் பிறகுதான் 1971இல் வானம்பாடி சிற்றிதழ் உருவானது. இந்தக் கவிதை இதழ் பின்னர் அது சார்ந்த கருத்துகளைக் முன்னிறுத்தி கவிதைக்கான இயக்கமாக விரிவுகண்டது. புதுக்கவிதை என்ற சொல் வானம்பாடிகளால் மலினமாக்கப்பட்டதைத் தொடர்ந்து நவீன கவிதை என்ற பதம் பயன்படுத்தப்பட்டது. 1980களின் இறுதியில் இச்சொல் தனக்கான தன்மையைத் தேடி அடைந்தது. இன்றுவரை இச்சொல்லை உருவாக்கியது யார் எனத் திட்டவட்டமான தகவல் இல்லை. ஆனால், கவிஞர் சுகுமாறன் காலகட்டத்தில் இச்சொல் பிரபலமடைந்ததாகக் கருதப்படுகிறது. ‘கண் சுழற்றும் பறவை’, ‘படகின் அடியில் கொஞ்சம் வெப்பம்’ போன்ற கவிதை நூல்களுக்கு எழுதிய முன்னுரையில் கவிஞர் சுகுமாறன் ‘நவீன கவிதை’ எனும் பதத்தைப் பயன்படுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு முன்னர் அச்சொல் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்த ஆய்வுகள் இல்லை.
1990களில் தமிழ் இலக்கியச் சூழலில் மிகப்பரவலாகவே அறிமுகமாகிவிட்ட நவீன கவிதை எனும் சொல்லையே மலேசியாவில் 2006இல்தான் கண்டுபிடிக்கிறார்கள். அப்போது நவீன கவிதை எனும் சொற்றொடரே மலேசிய இலக்கியச் சூழலில் ஒருவித ஒவ்வாமையை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் ‘காதல்’ இதழைத் தொடர்ந்து கவிதை குறித்த தொடர் உரையாடல்களை ‘வல்லினம் இதழ்’ வழியாக நிகழ்த்தினோம். யுவன் சந்திரசேகர், யூமா வாசுகி, யவனிகா ஶ்ரீராம் போன்ற தமிழின் குறிப்பிடத்தக்க கவிஞர்களுடனான உரையாடல்கள் கவித்துவதைகளை நுட்பமாகப் புரிந்துகொள்ள பயிற்சிகளை வழங்கின. ஆனால் அதிலும் தேக்கம் இருப்பதை நான் உணர்ந்தே இருக்கிறேன். அதற்கு முதன்மையான காரணம், இக்காலத்தில் உருவான கவிஞர்கள் பலர் வேறு இலக்கிய வடிவங்களுக்குள் தங்களைப் பொருத்திக்கொண்டதும் தங்கள் அசலான மொழியில் இருந்து தமிழகத்துக் கவிதை பாணியைப் பின்பற்றியதும் ஆகும். மேலும் இக்காலத்தில் முதன்மையாக நவீன கவிதைகளை மட்டுமே முன்னெடுத்த பா.அ.சிவம் போன்றவர்கள் விபத்தில் அகால மரணமடைந்தது கவிதைத் துறைக்குப் பேரிழப்பானது. இந்த இடைவெளி வேறுவிதமான விளைவுகளை உருவாக்கியது.
இரண்டாயிரத்துக்குப் பின்னர் ஆனந்தவிகடன், குமுதம் போன்ற இதழ்களில் நவீன கவிதைகளில் உடல்களைத் தாங்கிக்கொண்ட விசித்திரமான எழுத்துபாணி பிரசுரமாகத் தொடங்கின. வணிக இதழ்களின் நிலைப்பாடு அது. எது பிரபலமாக உள்ளதோ அதன் வடிவங்களைத் தனக்குள் புகுத்திக்கொள்ளும். பொதுப்புத்தியில் சொல்லப்படும் ஒன்றை சுவாரசியப்படுத்துவது, ஜனரஞ்சக மெல்லுணர்வை ஏற்கெனவே எழுதிப் பிரபலமான நவீன கவிதை பாணியில் சொல்வது, புத்திசாலித்தனமான பொன்மொழிகளை தங்கள் உவமைகளுடன் ஒப்புவிப்பது போன்றவைதான் இவற்றின் கச்சாப்பொருள். இந்தக் கச்சாப்பொருளை ஏந்திக்கொண்டு ஒரு பட்டாளம் புறப்பட்டு வந்தது. ந.பச்சைபாலன், ஏ.தேவராஜன், கருணாகரன், ஜமுனா வேலாயுதம் போன்றவர்கள் இதில் பிரதானமானவர்கள்.
வானம்பாடிக் கவிதைகளில் இருந்த மனஎழுச்சியை எடுத்துக்கொள்ளாமல் எப்படி அதன் சத்தத்தை மட்டும் ஒரு தரப்பினர் எடுத்துக்கொண்டனரோ அதுபோல நவீன கவிதையின் மௌனத்தை எடுத்துக்கொள்ளாமல் அதன் சொற்செட்டுகளை மட்டும் வைத்துக்கொண்டு, இவர்கள் நூல்கள் எழுதிக் குவித்தனர், விளைவாக 2015க்குப் பிறகு மலேசியாவில் மீண்டும் கவிதைக்கான முகம் தேக்கம் கண்டது.
இன்னொரு குழு நெருப்புக்கோழி பூமிக்குள் தலையைப் புதைத்துக்கொண்டதுபோல, ”நாங்கள் எழுதுவது புதுக்கவிதை; நவீன கவிதையல்ல… எனவே எங்களை விமர்சிக்காதீர்கள்” என அறிவித்துக்கொண்டனர். முன்பே நான் சொன்னதுபோல, உலக நவீன கவிதையின் சாரத்தை உள்வாங்கி, பிச்சமூர்த்தி, சி.மணி, பிரமிள், பசுவையா என 1950களில் இருந்து உருவான கவிஞர்கள் வழியாக வடிவமைந்த தமிழ்க் கவிதையின் போக்கை அறியாத தங்கள் பலவீனத்தை எண்ணி வருந்தாமல், 1990களில் நவீன கவிதை என்ற சொல் புதுக்கவிதைக்கு வழங்கப்பட்டு அதன் நுட்பங்கள் மேலும் கூர்மை கொண்டதை அறியாத தங்கள் மெதுநிலை எண்ணிக் கூசாமல், வானம்பாடிகள் கையாண்ட முரண் உத்திகளை இன்னும் மலினமாகத் தங்கள் வரிகளில் திணித்து அதைக் கவிதை எனப் பரவச்செய்தனர். பொதுவாகவே வாசிப்பற்ற, சிந்தனையற்ற பெருங்கூட்டத்தின் தவளை கோஷம் ஒன்றுபோலவே ஒலிக்கும் என்பதால் இதுபோன்ற வெற்று வரிகளுக்கும் வாசகர்கள் கோஷங்கள் அருவருப்பாக ஒலித்ததிலோ அதை அவர்கள் இசையென எடுத்துக்கொண்டதிலோ ஆச்சரியமில்லை.
2020க்குப் பின்னர் மீண்டும் மலேசியாவில் கவிதைகள் இறங்கு முகத்தை நோக்கி நகர்வதை என்னால் தெளிவாகவே காண முடிகிறது. எப்படி மலேசிய எழுத்தாளர் சங்கம் நான்கு ஆண்டுகள் கடுமையாக உழைத்து அப்படி ஒரு சாதனை செய்ததோ, அதைவிட மேலாக இப்போது ‘இயல்’ போன்ற அமைப்புகள் அப்பணியைச் செய்து வருகிறது. வானம்பாடிகளிடம் இருந்த கொஞ்ச நஞ்சக் கவிதை சாத்தியங்களையும் தணிக்கை செய்து கவிதை நூல் வெளியிடுவதுதான் இவர்கள் இலட்சியம் என அண்மையில் வெளிவந்த ‘அன்பின் ஊற்று’, ‘முதலும் நீ முடிவும் நீ’, ‘மௌனத்தின் மாய மொழிகள்’, ‘நகரத்தில் வாழும் சிட்டுக்குருவிகள்’, ‘அவன் நானே’, ‘நீங்காத கணத்தின் கனங்கள்’, ‘கரம் சேர்வாயோ’, ‘செவுட்டு முண்டமே’ ஆகிய எட்டு கவிதைத் தொகுப்புகளின் வழி அறியமுடிகிறது. கவித்துவம் என்பது துளியளவும் நிகழாமல் இருக்க இத்தனை உழைப்பை ஓர் அமைப்பு வழங்க முடியுமா என்பது ஆச்சரியமான உண்மை. அதற்காகவேணும் அவர்களைப் பாராட்ட வேண்டும். மேலும் யார் என்ன சொன்னாலும் அதன் உண்மையை காதில் போட்டுக்கொள்ளாமல் இருக்கும் இவர்கள், தங்களைத் தாங்களே சுயவிமர்சனம் செய்துக்கொள்ளும் வகையில் ஒரு நூலுக்குத் தலைப்பிட்டுள்ளதையும் இவ்வேளையில் வாழ்த்தலாம்.
இவ்வமைப்பு இளைஞர்கள் வழியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முயற்சியில் அவர்களின் ஆரம்பகால முயற்சியை அவசர அவசரமாக நூலாக்கி வெளியீடும் செய்து வருகிறது. இதன்வழியாக இயல்பாக உருவாக வேண்டிய கவிதை மனம் பரபரப்பான அரசியல் தேவைக்காகப் பாழ்படுவதை இளம் கவிதை ஆர்வலர்கள் காலம் கடந்தேனும் உணரக்கூடும். ஆனால் அப்போது அவர்களின் முதல் கவிதை தொகுதி கொடுக்கும் அவமானத்தைக் கடந்துவருவதே பெரும் சவாலாக இருக்கும்.
ஒரு கதை நினைவுக்கு வருகிறது. கால்களைத் தாங்கி தாங்கி நடக்கும் நாட்டின் ராணி ஒருத்தி தனது பலவீனத்தை மறைக்க நினைத்தாளாம். எனவே புதிதாக பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு கால்களைத் தாங்கி நடப்பதுதான் நளினம் எனப் போதித்தாளாம். பலரும் அவளைவிடச் சிறப்பாகவே கால்களைத் தாங்கி நடக்க மெல்ல மெல்ல அவளது பலவீனத்தை அவள் உருவாக்கிய அந்த ஒட்டுமொத்த பிரமாண்ட பலவீனத்தின் வழியாக சமன் செய்துக்கொண்டாளாம். ராணி கதை உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் மலேசிய இலக்கியச் சூழலில் இதுவெல்லாம் சாத்தியம்தான்.
ஓர் இயக்கம் ஒரு நாட்டின் கவிதைச் சூழலை மாசடைய வைக்க முடியுமா எனும் கேள்விக்கு என்னிடம் திட்டவட்டமான பதில் இல்லை. ஆனால், இயக்கங்கள் சுயலாபத்துக்கான முயற்சிகளை இடைவிடாது பொதுவெளியில் வைப்பதன் மூலம் வளரும் வாசகர்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்க வாய்ப்புண்டு. எது கவிதை எது கவிதையல்ல எனும் ஆழமான உரையாடலை இளைஞர்களிடம் உருவாக்காமல், அவர்களிடம் உள்ள கவித்துவ மனத்தை இடைவிடாது தட்டியெழுப்பாமல் அவர்கள் அறிந்த வரிகளை கவிதை எனும் பெயரில் எழுத வைத்தல் என்பது தனிப்பட்ட வணிக, அரசியல் நோக்கங்களுக்காகவே இருக்கும்.
ஆனாலும், இத்தனை அலுப்பான சூழல்களுக்கு மத்தியிலும் இயல்பாக சில நல்ல கவிஞர்கள் உருவாகவே செய்கின்றனர். 2020க்குப் பின் அப்படிக் கவித்துவத் தன்மையுடன் அமைந்த வரிகளை எழுதும் கவிஞர்களையும் நான் அடையாளம் கண்டே வைத்துள்ளேன். உதாரணமாக கௌசல்யா என்பவரைச் சொல்லலாம். இன்றை சூழலில் எனக்கு நம்பிக்கைத் தரக்கூடிய இளம் கவிஞராக அவரையே குறிப்பிடுவேன். ஆனால் அதுவும் திட்டவட்டமான முடிவல்ல. எழுதி எழுதியே ஒருவர் தன்னை இலக்கியச் சூழலில் நிரூபிக்க வேண்டும்.
அவ்வாறான நம்பிக்கையால் மட்டுமே மலேசியக் கவிதை உலகம் இன்னும் இங்கு உயிர்த்துள்ளது. நன்றி.
குறிப்பு: 13.11.2025 இல் இணையம் வழி ஆற்றிய உரை மேம்படுத்தப்பட்டுள்ளது.









