மாச்சாய் – ஒரு பார்வை

‘ஜகாட்’ வெளிவந்து பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் இயக்குநர் சஞ்சை படைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாச்சாய்’. ‘ஜகாட்’ திரைப்படத்தில் வரும் சிறுவன், இளைஞனானப்பின் தேர்வு செய்யும் பாதை இருள் நிரம்பியதாக இருந்தால் அந்தப் பயணம் எவ்வாறு அமையும் எனும் அடிப்படையில் ‘மாச்சாய்’ இயக்கப்பட்டதாகப் படக்குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால், அதற்கான முகாந்திரம் இப்படத்தில் இல்லை என்றே நினைக்கிறேன். எனவே, இப்படத்தில் வரும் சியாம் தனி கதாபாத்திரம். அவன் வாழ்க்கையின் சிக்கல்களும் முற்றிலும் வேறானவை.

மூன்று நாட்களில் முப்பதாயிரம் ரிங்கிட்டை ‘ஈபு’விடம் திரும்ப கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள சியாம் எனும் இளைஞனின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேலும் மேலும் சிக்கலாகிச்செல்வதை ஒட்டி ‘மாச்சாய்’ திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ஈபு’ போதை பொருட்களை விநியோகம் செய்பவள். அவளிடமிருந்து போதை வஸ்துக்களை வாங்கி – விற்று வாழ்க்கை நடத்தும் ஏராளமான இளைஞர்களில் ஒருவன்தான் சியாம். அவன் அத்தொழிலைத் தேர்வு செய்ய அவன் குடும்பச் சூழலே காரணம். புற்றுநோயால் அவதிப்பட்ட தன் தந்தையைக் காப்பாற்ற அம்மா வாங்கிய கடனை அடைக்கவே அவன் இருள் உலகில் நுழைகிறான். மிகச்சிறந்த மாணவனான அவனது வாழ்க்கை அப்பாவின் மரணத்துக்குப்பின் பிடி இல்லாமல் அலைகிறது. இறுக்கமும் மூர்க்கமும் நிரம்பிய இளைஞனாக வடிவமைகிறான்.

சியாமின் நண்பன் ஊசி. அன்றாடங்களில் வாழ்பவன். மகிழ்ச்சியை போதையால் அர்த்தப்படுத்திக்கொள்பவன். எந்தத் திட்டமும் இல்லாத அவனுக்கு எல்லாமே உற்சாகம் தரும் செயல்களாக உள்ளன. எனவே, அவனுக்குச் சாகசங்கள் அவசியமாக உள்ளன. ஒரே மாதிரியான வேலைச் சூழலில் இருந்து தப்பிக்க அவன் அசாதாரண தருணங்களைத் தேடிச் செல்பவனாக இருக்கிறான். அதன் வழியாகவே உற்சாகம் அடைகிறான்.

இவர்கள் இருவரையும் கையாள்பவன்தான் ஜேக். இவர்கள் இருவரையும் மாச்சாய் ஆக்குபவனும் அவன்தான். கண்மூடித்தனமாக ஒருவருக்கு விசுவாசமாக இருப்பவரை அல்லது கைக்கூலியாகச் செயல்படுபவரை பேச்சு வழக்கில் ‘மாச்சாய்’ என்பார்கள். சியாமும் ஊசியும் சூழலில் சிக்கிக்கொண்டு ஜேக்குக்கு கைக்கூலியாக மாறுகின்றனர். அது அவர்கள் வாழ்வை எவ்வாறு சுழற்றி அடிக்கிறது என்பதை இயக்குநர் சஞ்சை சுவாரசியாகச் சொல்லிச் சென்றுள்ளார்.

***

‘மாச்சாய்’ திரைப்படத்தின் கதைக்களம் ‘லிங்காபூரா’ எனும் கற்பனை தேசம். அந்த தேசத்தில் போலிஸ்காரர்கள் லஞ்சத்துக்கு மாற்றாக பிரியாணி கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள், எல்லா அபத்த நிலைகளிலும் மத ஒழுக்கங்களைப் பின்பற்றுகிறார்கள், மெத்தனமாக கடமைகளைச் செய்கிறார்கள். எனவே, பெரிய பெரிய சிக்கலைக் கூட பணம் கொடுத்து அவ்வூர் குற்றவாளிகளால் தீர்த்துக்கொள்ள முடிகிறது. ”குடிப்பது தவறென்றால் ஏன் இந்நாட்டில் மதுவை அனுமதிக்கிறீர்கள்?” என தைரியமாகவே போலிஸ்காரர்களிடம் கேட்க முடிகிறது. அந்நாட்டின் அடையாள அட்டையின் சின்னமாக எருமையின் தலையைப் பொருத்திப்பார்க்க முடிகிறது.

இயக்குநர் தான் சொல்ல வேண்டிய கதைக்குத் தேவையான சுதந்திரத்தை எடுத்துகொள்ள இப்படி ஒரு புனைவின் சாத்தியத்தைப் பயன்படுத்திக்கொண்டிருப்பது சிறப்பானதே. அதை பார்வையாளன் மனதில் பதிய வைத்துக்கொள்ளும்போது அந்தக் களத்தின் தன்மைகளையும் இயல்பாக்கிக்கொள்ள முடிகிறது. குறிப்பாகக் காலம், அதை ஒட்டிய கருவிகள், சூழலின் பொருத்தப்பாடு என எல்லாமே அந்தப் புனைவின் தன்மைக்குள் அடங்கிவிடுகின்றன. எனவே குழப்பமில்லாமல்  கதையின் போக்கை மட்டும் பின்தொடர முடிகிறது.

நாம் தற்செயலாக சந்திக்கும் மனிதர்கள், நம் வாழ்க்கையில் நிகழ்த்தும் மாற்றங்களை திரைக்கதை முழுவதும் பின்னிச் சென்றுள்ளார் இயக்குனர். முதலில் தற்செயலாகப் பேருந்தில் சந்திக்கும் பெண்ணிடம் நிகழும் முயக்கத்தினால் சியாம் விற்க வேண்டிய போதை வஸ்துவை இழக்கிறான். பின்னர் தற்செயலாக உணவகத்தில் சந்திக்கும் ஜேக் அவனை கொள்ளையடிக்கும் மனநிலைக்குக் கொண்டுவருகிறான். கொள்ளையடிக்கும் பயணத்தில் தற்செயலாக சந்திக்கும் கோடிஸ்வரனின் மகனால் கடத்தல்காரனாகி கொலைப்பழிக்கும் உள்ளாகிறான். இறுதியாக தற்செயலாக தேர்வு செய்யும் பாலியல் தொழிலாளியிடம் உடைந்து அழுது தன் குற்ற உணர்ச்சியைக் கழுவியும் கொள்கிறான்.

தற்செயல்கள் எல்லாம் தற்செயல்கள் மட்டும்தானா? அவை மனிதனை வழிநடத்த யாரோ ஒருவரால் நிகழ்த்தப்படும் சீண்டல்களா? எனும் கேள்வியை மைய கதாபாத்திரம் மூலம் வைத்துள்ளார் இயக்குனர். ஆனால் அதற்கான விடையை ரசிகன் சென்றடைய வராகி அம்மனை ஒரு சங்கிலியாக இணைத்துள்ளது இத்திரைப்படத்துக்கு அவசியம் இல்லாதது.

நேபாள இளைஞன் வழியாக, சமைக்கப்பட்ட பன்றி வழியாக, வேட்டையின் வழியாக, காரில் இருக்கும் வராகி அம்மன் ஸ்டிக்கர் வழியாக, சியாம் கண்ணாடியில் வரையும் பன்றியின் உருவம் வழியாக, இறுதியில் தோன்றும் வராகி உருவம் வழியாக இயக்குனர் அதை ஒரு குறியீடாக மாற்ற முயன்றுள்ளது புரிகிறது. ஆனால் குறியீடு என்பது சட்டென மொத்த படைப்பிலும் புதிய ஒளியைப் பாய்ச்சக் கூடியது. வராகி அம்மனால் எவ்வகையிலும் இப்படத்துக்கு கூடுதல் பொருளோ கவனமோ கிடைக்கவில்லை என்பதுதான் என் அவதானம். அக்காட்சிகள் இல்லாமலேயே ஓர் எதார்த்த சினிமாவாக மாச்சாய் மனித உணர்வுகள் குறித்து விவாதம் எழுப்பக் கூடிய சாத்தியங்களைக் கொண்டதுதான்.

***

திரைப்படத்தில் பல்வேறு காட்சிகள் கூடுதலான பொருள் கொடுக்கக்கூடியவை. பேச்சுகளை நீக்கி இரைச்சலை கவனமாகக் கேட்டுக்கொண்டு செல்லும் மனம் பிறழ்ந்தவனை சியாம் அவதானிக்கும் தருணம், முற்றிலும் இருண்ட நிலையில் ஒளியை நோக்கிச் செல்வதாக அவனுக்கு வரும் கனவு, போதை எப்போதும் அவனை வீழ்த்தாத தன்னுணர்வின் ஆதிக்கம் என சியாம் பாத்திரத்தை சஞ்சை மிக கவனமாகவே வடிவமைத்துள்ளார். அந்தப் பாத்திரத்தில் நடித்த கர்ணனும் தன் கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடித்துள்ளார். முகத்தில் இறுக்கமும் வெறுப்பும் பிற அத்தனை உணர்ச்சிகளையும் அழுத்தித் துடைத்துள்ளன. அச்சத்தைக்கூட வெளிப்படுத்தாத வரண்ட உள்ளம் அவனது.

புணர்ச்சிக்கு வந்த பெண்ணிடம் இழந்த ஒன்றை நாளெல்லாம் தேடி அலைந்தவன் இன்னொரு பெண்ணிடம் புணர்ச்சி நிமித்தமாகச் செல்லும்போது தேவையான ஒன்றைப் பெருகிறான். அது தாய்மையின் அரவணைப்பு. அது கிடைத்தவுடன் அவன் மனிதனாகிறான். மனிதனாகும்போதே விடுதலையும் அடைகிறான். அவன் உணர்ச்சிகள் அவனுக்கு மீண்டும் கிடைக்கின்றன.

இர்பான், குபேன் இருவரும் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளர். குபேன் நடிப்பு ஒரு சாதாரண காட்சியைக் கூட சுவாரசியப்படுத்தக் கூடியது. ஆனால் அவரது உச்சரிப்பு சில சமயம் விளங்கவில்லை. நான் கீழே மலாயில் இருந்த வசனங்களைப் படித்தே புரிந்துகொண்டேன். இர்பான் உச்சரிப்பு அழுத்தமானது.  

***

மாச்சாய் திரைப்படம் ஜகாட் திரைப்படத்தின் தொடர்ச்சி எனப் பார்க்க வருபவர்கள் ஏமாற்றமடைய வாய்ப்புகள் அதிகம். ‘ஜகாட்’ ஒரு சிறுவன் வழியாக சமூகத்தின் கதையை பேசக்கூடியது. மாச்சாய் இருளில் புழங்கும் சமூகத்தின் வழியாக தனி மனிதனின் அகத்தில் நுழைந்து உரையாடக்கூடியது. அந்த உரையாடலுக்கான களம், மொழி, மனம் என அனைத்துமே செறிவாக சேர்க்கப்பட்ட திரைப்படம் மாச்சாய். அத்தன்மை பொதுபரப்பில் அந்நியமாக இருக்கலாம். ஆனால் அப்படியான ஓர் உலகம் இருப்பதையும் காட்டிச்செல்வதுதான் கலையின் பணி.

(Visited 190 times, 2 visits today)