நூறு சிறுகதைகளின் வாசலில்…

நேற்று (15.1.2025) தமிழாசியா சந்திப்பில் நூறாவது சிறுகதை குறித்து பேசி முடித்தோம். தமிழாசியா சந்திப்பு என்பது மாதத்தில் ஒருமுறை நடைபெறும் இலக்கியச் சந்திப்பு. ஒவ்வொரு சந்திப்பிற்கு முன்னும் நான்கு சிறுகதைகள் வழங்கப்படும். அந்தக் கதைகளை ஒட்டி நால்வர் தயார் செய்து வந்த உரையைப் பேசுவார்கள். அவர்கள் உரையை ஒட்டி உரையாடல் இடம்பெறும். இவ்வாறு 2023 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்ட சந்திப்பு 2025 ஆண்டு நவம்பர் மாதம் நூறு சிறுகதைகளை எட்டியுள்ளது.

***

ரேவின்

2021 ஆம் ஆண்டு தமிழாசியாவைத் தொடங்கினேன். தமிழாசியா என்பது நூல் விற்பனைக்கான தளம்; இணைய நூல் அங்காடி எனலாம். அப்போது அந்தத்தளத்தை உருவாக்க மட்டும் 8000 ரிங்கிட் தேவையாக இருந்தது. ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் வாயிலாகத் தளத்தை உருவாக்கியப்பின், மேம்பாட்டு பணிகளை நண்பர் தர்மாவே கவனித்துக்கொண்டார்; கவனித்துக்கொள்கிறார். தமிழாசியா தளத்தை மார்ச் 27 ஆம் திகதி எழுத்தாளர் ஜெயமோகன் துவக்கி வைத்தார்.

கௌசல்யா

தமிழாசியா தளத்தை உருவாக்க எனக்குச் சில அடிப்படை காரணங்கள் இருந்தன. அதில் முதன்மையானது சிறந்த நூல்களை மலிவாக விற்பனை செய்வதுதான். அதன்வழியாக மலேசியாவில் சிறந்த வாசகர்களை உருவாக்குவது. மலேசியாவில் எந்தப் புத்தகக்கடைக்குச் சென்றாலும் நூல்களின் விற்பனை என்பது சற்று கலவையாகவே இருக்கும். ராஜேஷ்குமாரும் ராமகிருஷ்ணனும் ஒரே அடுக்கில் இருப்பர், மேத்தாவும் ஆத்மநாமும் அருகருகே அமர்ந்திருப்பர். சுகி சிவம், கோபிநாத் எல்லாம் இப்போது ஓஷோ வரிசைக்கே வந்துவிட்டனர். நூல் விற்பனையாளர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு இலக்கிய இரசனையும் நூலின் தரமும் இரண்டாம் பட்சம்தான். ஒரு படைப்பு எந்த வகை என்பதே அவர்களின் முதன்மையான நோக்கு. அவை முன்வரிசைக்கு வருவது விற்பனையின் வேகத்தைப் பொறுத்தது.

அரவின் குமார்

இன்னொரு பக்கம் ஒரு நூலை அதிக விலைக்கு விற்க அவர்களிடம் காரணங்களும் இருந்தன. கடைக்கான செலவு, ஊழியர்களுக்கான ஊதியம், போக்குவரத்துச் செலவு என காலகாலமாகச் சொல்லப்படும் காரணங்கள்தான். ஆனால் இத்தனை செலவு செய்து ஒரு புத்தகக்கடையை நடத்தினாலும் வாசிப்பு இரசனை மிக்க ஊழியர் ஒருவரைக்கூட நான் மலேசியாவில் உள்ள புத்தகக்கடைகளில் பார்த்ததில்லை. ”தோ அங்க இருக்கும் பாருங்க….” என காற்றில் கைகளை அலையவிடுபவர்களே இங்கு நூல் விற்பனையாளர்கள்.

கி. இளம்பூரணன்

மதுக்கடைகளில் அழகுசாதனகடைகளில் வாசனைத்திரவியம் விற்கும் நுகர்பொருள் கடைகளில் பார்வைக்காக நுழைந்தவுடன் ஓடிவரும் விற்பனை முகவர்கள், ”இதன் சிறப்பு என்ன தெரியுமா? இதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமென விளக்குகிறேன்,” என விற்பனைக்காகச் செலவிடும் நேரத்தை புத்தகக்கடைகள் வாசகனுக்கு ஒருபோதும் வழங்குவதில்லை. புத்தகக் கடைகள் என்பது நூல்களை விற்பனை செய்யும் தளம் மட்டுமல்ல, எந்நிலையில் உள்ள வாசகனுக்கு எது சிறந்த நூல் என்றும், வாசிக்கும் ஆர்வம் கொண்ட ஒருவன் எங்கிருந்து யாரை வாசிக்கத் தொடங்கலாம் என்றும் வழிகாட்டும் அறிவு நிலையமாகவும் இருக்கவேண்டும். மலேசியாவில் அப்படி ஒரு புத்தகக்கடை தற்செயலாகக்கூட என் கண்ணில் பட்டதில்லை.

விஜயலட்சுமி

இந்நிலையில்தான் தமிழாசியா வழி அப்படி ஒரு சூழலை உருவாக்க எண்ணினேன். முதலில் தமிழாசியாவில் விற்பனையாகும் நூல்கள் இலக்கியச் சூழலில் ஏற்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அடுத்து, அதை ரூபாய்க்கு பத்து சென் எனும் விலையில் விற்பனை செய்ய வேண்டுமென நினைத்தேன். மூன்றாவது தரமான நூல்களை நோக்கிச் செல்ல வாசகர்களைப் பயிற்றுவிக்க வேண்டியிருந்தது. அது சவாலானது.

சல்மா

எழுத்தாளர்கள் இமையம், கோ. புண்ணியவான், சு. வேணுகோபால், நரேன், பாலாஜி பிருத்விராஜ், லதா, ரெ. விஜயலட்சுமி, அ. பாண்டியன், அரவின் குமார், செல்வேந்திரன், ஜி.எஸ்.எஸ்.வி நவின், அனோஜன், ஹேமா என பலரும் அதில் உரையாற்ற அழைக்கப்பட்டனர். கையறு, ஶ்ரீகாந்தன் சிறுகதைகள், சு. வேணுகோபால் படைப்புலகம், நாஞ்சில் நாடன், பனி உருகுவதில்லை, சீன லட்சுமி என பல்வேறு படைப்புகள் குறித்தும் உரையாடப்பட்டன. இணையம் வழி தொடரப்பட்ட இம்முயற்சிகள் 2023 உடன் நிறுத்தப்பட்டது. அதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, இணையம் உரையாடலுக்கான தீவிரத்தை வழங்கவில்லை என கருதினேன். இரண்டாவது, தமிழகத்தில் இருந்து பங்குபெறும் வாசகர்கள் ஓர் இலக்கியப்பிரதி குறித்து முன்வைக்கும் கருத்துகளோடு ஒப்பிடுகையில் மலேசிய வாசகர்களின் பார்வை பலசமயங்களில் பலவீனமாகவும் மேலோட்டமாகவும் இருந்தது.

புஷ்பவள்ளி

இந்த வித்தியாசத்திற்குக் காரணமும் உண்டு. விஷ்ணுபுரம் அதன் வழியாக உருவான வாசகர்களின் சிறிய குழுக்கள் தொடர்ச்சியாக இலக்கிய உரையாடல்களில் ஈடுபடுகின்றனர். இது அவர்களுக்கு ஒரு கருத்தை முன்வைப்பதற்கான பயிற்சியை வழங்குகிறது. ஓர் இலக்கியப் பிரதியை எவ்வாறு அணுக வேண்டும் என்ற பார்வையைக் கொடுக்கிறது. மலேசியாவில் அதற்கான வாய்ப்பு குறைவு. எனவே அதற்கான தளம் ஒன்றை அமைக்க விரும்பியே தமிழாசியா சந்திப்பை உருவாக்கினேன்.

***

அபிராமி

தமிழாசியா சந்திப்பில் கலந்துகொள்வோர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மூன்று. முதலாவது வழங்கப்படும் அத்தனை சிறுகதைகளையும் கலந்துகொள்ளும் அனைவரும் வாசித்திருக்க வேண்டும். இரண்டாவது குறிப்பிட்ட நேரத்தில் கதைகள் குறித்த சாரத்தை ஒட்டி பேச வேண்டும். மூன்றாவது மூன்று முறைக்கு மேல் கலந்துகொள்ளாதவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

குறைந்தபட்சம் ஐந்து பேர் இருந்தால் இம்முயற்சியைத் தொடரலாம் என்றே திட்டமிட்டிருந்தேன். கறாரான இலக்கியச் சூழல் இங்குப் பலருக்கும் பிடிப்பதில்லை. நான் இலக்கியச் சூழலில் இயங்கத் தொடங்கிய புதிதில் ”இலக்கியவாதினா கொஞ்சம் அப்படி இப்படிதான் இருப்பான். அவன் நேர ஒழுங்கையெல்லாம் பின்பற்ற மாட்டான். அவன் தெனாவட்டாதான் எல்லாவற்றையும் அணுகுவான்” என்பதாக நம்பிக்கைகள் இருந்தன. அவை வெறும் மூட நம்பிக்கை. அப்போது தமிழகத்து இலக்கியவாதிகள் சிலருடைய வாழ்க்கையைப் பார்த்து அவ்வாறான கற்பிதங்கள் உருவாகியிருந்தன. இவர்களுக்கு மத்தியில் நேர ஒழுங்கையும் திட்டவட்டமான நிரல்களையும் பின்பற்றும் நான் கோமாளியாகவே தெரிந்தேன். ஒருமுறை ஓர் இலக்கிய நண்பர் சொன்னார், ”நவீன் நீங்க பிடல் காஸ்ட்ரோ மாதிரி… கூட்டங்களை ஏற்பாடு செய்யுறது உங்க வேலை. அதனால நீங்க டிசிபிளினா இருங்க… நான் சே குவேரா. என்னால் கட்டுப்பட்டெல்லாம் இயங்க முடியாது. நான் காற்று மாதிரி. நான் படைப்பாளி…”

இப்படி காற்று போன்ற மனிதர்கள் எல்லாம் காலத்தால் காணாமல் போய்விட்டனர் என்பதுதான் வரலாறு.

சாலினி

ஓர் இலக்கியச் சூழலில் மாற்றம் நிகழ்த்த அர்ப்பணிப்பு அவசியமாகிறது. அதற்கு நாம் எடுத்துக்கொண்ட பணியை மாசில்லாமல் முழுமை செய்ய வேண்டும். அதற்கு நேர ஒழுங்கும் கடும் உழைப்பும் அவசியம். நான் இந்நாட்டின் இலக்கியப் போக்கை முன்னகர்த்திச் செல்ல வந்தவன். இப்பிறவி அதற்கானது மட்டுமே. அதில் நான் நிறைவு கண்டவுடன் புறப்பட்டுவிடுவேன். கடமையைச் செய்யாதுபோனால் கடன் பட்டவனாக தேய்ந்து அழிவேன். எனவே எங்கெல்லாம் பலவீனம் உள்ளதோ அதை என்னால் முடிந்த அளவு சமன்செய்ய முயன்றுகொண்டே இருக்கிறேன்.

சிவரஞ்சனி

தமிழாசியா சந்திப்பு திட்டத்திற்கு நல்ல ஒத்துழைப்பும் கிடைத்தது. கூட்டு வாசிப்பால் சிறுகதையில் புதிய திறப்புகளை அறிய முடியும் என அறிந்தவர்கள், அதன் கலை நுட்பத்தை கற்க வேண்டும் எனும் நோக்கில் இடைவிடாது இணைந்தார்கள். தலையில் மாய கிரீடம் வைத்திருந்தவர்கள் விரைவிலேயே நீங்கினார்கள். ஒவ்வொரு சந்திப்பிலும் குறைந்தது 15 பேராவது இணைவதுடன் உற்சாகமான உரையாடல் தருணமாகவும் அந்நாள் மலர்ந்தது. நான் இதற்கு முன் வாசித்த கதைகளை புதியவர்கள் வழியாக புதிய கோணத்தில் பார்க்கும் அனுபவமெல்லாம் வாய்த்தது. என்னால் மிக உறுதியாகச் சொல்ல முடியும் இதுவரை நாங்கள் விவாதித்த 100 சிறுகதைகளில் ஐம்பது சதவிகிதத்துக்கு மேல் நாங்கள் எங்கள் வாசிப்பால் தனித்துவமான இடத்தைச் சென்று தொட்டுள்ளோம். கூட்டு வாசிப்பு வழங்கும் சாத்தியம் அதுதான்.

தயாஜி

ஆனால் எங்களால் தொடர்ந்து நிலையாக ஓரிடத்தில் சந்திப்பை நடத்த முடியாமல் இருந்தது. உணவகம், பள்ளிக்கூடம் என கிடைக்கும் இடங்களில் சந்திப்புகளை மேற்கொண்டோம். சில இடங்களில் மணிக்கு 60 ரிங்கிட் எனும் கட்டணம் செலுத்தியே இடத்தைப் பயன்படுத்த முடிந்தது. இந்தச் சிக்கலுக்கு விஜயலட்சுமியால் தீர்வு கிடைத்தது. மலாயா பல்கலைக்கழகத் தமிழ் நூலகத்தில் எங்கள் சந்திப்பு அத்தனை வசதிகளோடும் நடந்தது.

***

ஒரு சூழலில் வளமான இலக்கியம் உருவாக வேண்டுமென்றால் அதற்கு தொடர்ச்சியான பயிற்சி முக்கியம். அந்தப் பயிற்சி ஒருவரிடம் ஏற்படுத்தும் மாற்றமே காலத்தால் நிலைகொள்கிறது. அவர் தன் இலக்கிய அறிவால் உலகை மாற்ற வேண்டியதில்லை; தன்னையும் சக மனிதர்களையும் அது கொடுக்கும் கூடுதல் கண்கொண்டு பார்த்தாலே இம்முயற்சி தன் முழுமையை அடைந்ததாகும்.

சண்முகா

அவ்வாறே எங்கள் முயற்சி தொடர்ந்தது. சிலர் இடையில் வந்து இணைந்துகொண்டனர். சிலர் அழைப்பில்லாமல் வருவதில்லை என்பதில் தீர்மானமாக இருக்கின்றனர். உண்மையில் நான் யாரையும் அழைப்பதில்லை. நாளை, இதன் நடைமுறையோடு ஒருவரால் இயந்து செல்ல முடியவில்லை என்றால் நான் ஒருவரை அழைத்து தண்டித்துள்ளதாகப் பொருள்கொள்ளப்படும். எனவே இதில் யாரும் இணையலாம். தங்களுக்கு இத்தளமும் இதன் விதிமுறைகளும் ஒத்துவரவில்லையென்றால் விலகிக்கொள்ளலாம் எனும் தளர்வு நிலையிலேயே வைத்துள்ளேன். இலக்கிய வாசிப்பு ஒருவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும். தன்னை எனக்காக வருத்திக்கொண்டு யாரும் உடன்வர வேண்டாம் என்பதில் தெளிவாகவே இருக்கிறேன்.

சர்வின் செல்வா

நூறு கதைகளை வாசித்து, தீவிரமாக உரையாடி முடித்த களிப்பில் நின்று பார்க்கும்போது அவை அத்தனையும் ஓர் பிரமாண்டமான மாளிகைக்குள் நுழையும் வாசலாகவே தோன்றுகிறது. அந்த வாசலில் நின்றுகொண்டே நான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். இந்தச் சந்திப்பில் அவ்வப்போது பல்வேறு துறை சார்ந்த இளைஞர்களுடன் நடத்திய சந்திப்புகளெல்லாம் உற்சாகத்தையே கொடுத்துள்ளன. ஒருபோதும் ஒரு கணமும் எங்கள் உரையாடல்களில் இன்னொரு இலக்கியக் குழு குறித்த வன்மமோ இன்னொருவர் நம்பிக்கை சார்ந்த எள்ளலோ எட்டிப்பார்க்காதது இதன் நேர்மறைத் தன்மையை எனக்கு உறுதி செய்கின்றது.

மோகனா

அடுத்த ஆண்டு தொடங்கி வழக்கம்போல நான்கு சிறுகதைகளோடு மாதம் ஒரு நாவலையும் வாசித்து விவாதிக்கத் திட்டமிட்டுள்ளோம். தமிழில் தவறவிடக்கூடாத நாவல்கள் இனி இந்த உரையாடலில் இடம்பெறும். மேலும் ஒரு நீண்ட பயணம். ஆனால் அர்த்தமுள்ள பயணம்.

(Visited 119 times, 1 visits today)