வல்லினம் விருது: சில தெளிவுகள் சில விளக்கங்கள்

டிசம்பர் 21 வல்லினம் விருது விழா. இம்முறை பி. எம். மூர்த்தி அவர்களுக்கு வல்லினம் விருது வழங்கப்படுவதை பலரும் அறிந்திருக்கலாம். இதுவரை அ. ரெங்கசாமி, சை. பீர்முகம்மது, மா. ஜானகிராமன் எனச் சிலர் இவ்விருதினைப் பெற்றுள்ளனர். விருது தொகையாக ஐயாயிரம் ரிங்கிட் வழங்கப்படுகிறது. ஆனால் இவ்விருது, அதன் விருது தொகையால் முக்கியத்துவம் பெறவில்லை. நாளையே யாராவது ஒருவர் புதிய விருது ஒன்றை உருவாக்கி, இதைவிட பெருந்தொகையை வழங்கினால் அதனால் மட்டுமே அவ்விருது சிறப்பு அடைந்துவிடப்போவதில்லை.

ஏன் அப்படி?

என் அவதானிப்பில் மலேசியாவில் கலை, இலக்கிய, பண்பாட்டுத் துறையில் பங்களித்தவர்களுக்கு வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதில் வல்லினம் விருதே முதன்மையானது; தனித்துவமானது. பொதுவாக இப்படிச் சொல்லும்போது தற்புகழ்ச்சி என பலரும் எண்ணிவிடக்கூடும். இல்லை; இதை மிகப் பணிவாகவே சொல்கிறேன். ஒருவேளை மலேசியாவில் வேறொரு முதன்மையான விருது உருவாகும் பட்சத்தில் அது குறித்து எழுதக்கூடியவனும் நானாகவே இருப்பேன். எனவே, இன்று – இக்காலக்கட்டத்தில் வல்லினம் விருதே முதன்மையானது எனக்கூற காரணங்கள் உள்ளன.

அ. ரெங்கசாமிக்கு வல்லினம் விருது (2014)


அ. விருது வழங்குபவர் குறித்த விரிவான அறிமுகம்

மலேசியத் தமிழ்ச் சூழலில் விருது வழங்கும் அங்கம் என்பது ஒரு நிகழ்ச்சியின் சிறு பகுதியாக நடத்தப்படுவதுண்டு. அது நிகழ்ச்சியை மெருகேற்றிக்கொள்ள ஓர் அங்கம் மட்டுமே. பல இயக்கங்கள் தங்கள் வருடாந்திர ஒன்றுக்கூடலில் விருது வழங்குவதை சடங்காக நடத்தி முடித்துவிடுகின்றன. பல நிகழ்ச்சிகளில் விருதைப் பெறுபவர் யார்? அவரது சாதனைகள் என்ன என்றுக்கூட விரிவாகக் குறிப்பிடப்படுவதில்லை. பலி கொடுக்கப்போகும் ஆட்டுக்கு மாலை இடுவதுபோல விருது பெறும் பத்திருபது பேரை வரிசையாக நிற்க வைத்து கழுத்தில் மாலையும் பொன்னாடையும் அவசர அவசரமாக அணிவித்து, கூடுதலாகப் படம் பதிக்கப்பட்ட சான்றிதழ் ஒன்றையும் கொடுத்துவிடுவதுண்டு. விருது வழங்கும் அமைப்பில் பணம் கொஞ்சம் அதிகம் இருந்தால் அச்சான்றிதல் படச்சட்டகத்தினுள் இருக்கும். விருது பெற்றவர்களை நிற்கவோ அமர வைத்தோ விழா குழுவினர் புகைப்படம் எடுத்துவிட்டால் விருது வழங்கும் அங்கம் நடந்து முடிந்துவிட்டதென பொருள்.

விருது விழா என்பது விருது வழங்கப்படும் தினத்தை மட்டும் ஒட்டியதல்ல; அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களிடம் விருது பெறுபவரின் சாதனையைச் சொல்வதில் பெரிய நன்மைகள் விளைந்துவிடப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அதை அறிந்தவர்கள்தானே நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.  எனவே அங்கு நிகழ்வது ஒரு கூட்டுக்கொண்டாட்டம். விருதின் தேவை அதுமட்டுமல்ல.

விருதுக்கு முன்னரே விருதைப் பெறுபவர் யார்? அவர் ஆளுமை என்ன என்பதை பரவலாகச் சொல்வதே விருது வழங்குவதன் நோக்கம். குறிப்பாக மொழி, இலக்கியம் சார்ந்து பங்களித்தவர்கள் குறித்து எழுத்தின் வழி பதிவு செய்வதுதான் அவர்களுக்கு வழங்கப்படும் விருதை நியாயப்படுத்துகிறது. 2014இல் அ. ரெங்கசாமிக்கு வல்லினம் விருது வழங்கத் தொடங்கியது முதல்  விரிவாகவே விருது பெறுவோர் ஆக்கங்கள் குறித்தும் ஆளுமை குறித்தும் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. சுமார் இரண்டு மாதங்கள் விருது பெறக்கூடியவர் குறித்த உரையாடலை இந்தக் கட்டுரைகள் உருவாக்குகின்றன. விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு முன்னரே ஒருவரை சமூகம் கொண்டாட வைக்கும் பணியை வல்லினம் செய்கிறது. அவ்வாளுமையை பல்வேறு கோணங்களின் அணுக வைக்கிறது. அவர்களின் பலத்துடன் பலவீனத்தையும் அறிந்துகொள்ளச் செய்கிறது. அதன் வழியாகவே ஒருவர் தனித்துவமான ஆளுமையாக எப்படிக் கட்டி எழுப்பப்படுகிறார் என உணர வைக்கிறது. ஆக, விருது என்பது ஓர் ஆளுமையை பரவலான கவனத்திற்குக் கொண்டுச் செல்லும் பணி என்றால் அது விருது வழங்கும் முன்னரே தொடங்கப்பட வேண்டும் என்பதில் வல்லினம் கவனம் கொண்டுள்ளது.

சை.பீர்முகம்மதுவுக்கு வல்லினம் விருது (2019)

விருது விழா

விருது விழா என்பது எவ்வாறு நடக்க வேண்டும் என்பதிலும் வல்லினமே முன்னுதாரணமாக இருக்கிறது என்பேன். விருது மேடையை அலங்கரிக்கக்கூடியவர்கள் விருது பெறுபவரின் ஆற்றலை அறிந்தவர்களாக இருப்பதை ஒவ்வொரு முறையும் உறுதி செய்தபடி இருக்கிறோம். அ. ரெங்கசாமிக்கு வழக்கறிஞர் பசுபதி, சை.பீர்முகம்மதுவுக்கு எழுத்தாளர் ஜெயமோகன்,  மா. ஜானகிராமனுக்கு சண்முகசிவா மற்றும் பிரம்மானந்த சரஸ்வதி என விருது வழங்குபவரை கவனமாகத் தேர்வு செய்கிறோம். ஓர் இலக்கிய மேடையில் யார் முன்னிலைப் படுத்தப்படுகிறார்கள் என்பது அத்தனை முக்கியமானது.

மலேசியாவில் சமீப காலமாக நூல் வெளியீட்டுக்கும் விருது விழாவுக்கு அரசியல்தலைவர்களை அழைத்து முதன்மைப் படுத்தும் பண்பு மீண்டும் தலைதூக்கியுள்ளது. அது அவரவர் விருப்பம்தான். ஆனால், அரசியல் தலைவர்களை கலை, இலக்கியப் பண்பாட்டு மேடையில் முதன்மைப் படுத்தும்போது கவனத்தில் வைத்திருக்க வேண்டிய விசயம் ஒன்றுண்டு. அச்செயல் வழியாக நமது இளம் தலைமுறைக்கு மறைமுகமாக சிலவற்றை போதிக்கிறோம். நீ எவ்வளவு ஆற்றல் மிக்கவனாக இருந்தாலும் அரசியல் பலமும் அதிகார பலமும் உள்ள ஒருவனிடம் பணிந்துபோ என்கிறோம். ஒருவன் அரசியலுக்கு வந்த சில ஆண்டுகளில் சம்பாதித்துள்ள தொகை சில பில்லியன்கள் இருந்தாலும் அவன் நேர்மை குறித்தெல்லாம் ஒருபோதும் கேள்வி எழுப்பாமல் அவன் காட்டும் பகட்டுக்கு அடிமையாக இரு என்கிறோம். பணமும் அதிகாரமும் உள்ள ஒருவனின் கடந்தகால வரலாற்றை கடுகளவும் ஆராயாமல் காலில் விழு என்கிறோம். தனது அத்தனை கசடுகளையும் மறைக்க மொழியை ஒரு தங்க முலாமாக பயன்படுத்தும் கள்வர்களை நத்தி பிழைப்பதில் தவறில்லை என்கிறோம். இத்தனை இழிவுகளைக் கற்பித்துதான் ஒரு விருது விழாவை நடத்த வேண்டியதில்லை என்பதில் வல்லினம் கவனமாக இருக்கிறது.

இவ்விடத்தில் “அப்படியானால் இலக்கிய நிகழ்ச்சியில் அரசியல்வாதிகள் கலந்துகொள்ளக்கூடாதா?” என அரைவேக்காட்டு கேள்விகள் வரக்கூடும். அப்படியல்ல; ஓர் இலக்கிய நிகழ்ச்சிக்கு யாரும் வரலாம். ஆனால், இலக்கிய மேடையில் இலக்கியவாதியும் பண்பாட்டு வளர்ச்சிக்காகப் பங்காற்றியவர்களுமே முதன்மையானவர்கள். ஓர் அரசியல்மேடையில் எப்படி இலக்கியவாதிக்கு இடமில்லையோ அப்படியே இலக்கிய மேடையிலும் அரசியல்வாதியின் நிலையாக இருக்கவேண்டும்.

விருது பெறுபவரை கௌரவிப்பதாகச் சொல்லி அவர் அர்ப்பணிப்புக்கு முற்றும் முரணாக இயங்கும் ஒருவரைக் கொண்டு அதனை நிகழ்த்துவது பந்தியில் பழையதை திண்ணக்கொடுப்பதைவிட அருவருப்பானது என்பதை இளம் தலைமுறைக்குச் சொல்லிக் கொடுக்கிறோம். முக்கியமாக, விருது விழாவுக்கு அழைக்கப்படும் எழுத்தாளரையும் விரிவான கட்டுரைகள் வழி அறிமுகம் செய்து வைக்கிறோம்.

மா. ஜானகிராமனுக்கு வல்லினம் விருது (2022)

விருது பெறுவோர் வரிசை

ஒரு விருது அந்த விருது பெறும் வரிசையைக் கொண்டு முதன்மை நிலை அடைகிறது. அமெரிக்காவில் வழங்கப்படும் ‘விளக்கு’ விருது, கனடாவில் வழங்கப்படும் ‘இயல்’ விருது, தமிழகத்தில் வழங்கப்படும் ‘விஷ்ணுபுரம்’, ‘தன்னறம்’ விருதுகள் போன்றவை ஏன் கவனம் பெறுகின்றன என அதன் விருது பெற்றோர் பட்டியலைப் பார்த்தால் புரியும். மலேசியாவில் அப்படி மிகுந்த கவனத்துடன் வழங்கப்படுவது சுவாமி பிரம்மானந்தா அவர்களால் வழங்கப்படும் ‘அருளாளர் விருது’.

அ. ரெங்கசாமிக்கு அருளாளர் விருது

கலை இலக்கியச் சூழலில் முதன்மையாகப் பங்கு வகிப்போர் பெயர்கள் விருதாளர் பட்டியலில் இணையும்போது அவ்விருதுக்கு மேலும் மேலும் பலம் சேர்கிறது. அப்பட்டியலில் எக்காலமும் இணையமுடியாது என அறிவோர் அவ்விருது குறித்து தொடக்கம் முதலே அவதூறு பரப்பத் தொடங்கிவிடுகின்றனர். வல்லினம் விருது அப்படியானவர்கள் வழியாக வசைபாடப்படும்போதுதான் மேலும் பெருமை அடைவதாக நான் கருதிக்கொள்வேன்.

வல்லினம் விருதுக்கு அவ்வாறு வரலாற்றில் நிலைக்கும் மனிதர்களையே தேர்வு செய்கிறோம். வல்லினம் விருதால் அவர்களுக்குப் பெருமை என்பதைவிட, அவர்களாலேயே வல்லினம் விருது ஒவ்வொருமுறையும் பெருமை அடைவதை உறுதி செய்கிறோம். மலேசியாவில் முதன்மையான நாவல்களில் ஒன்றாக நான் கருதும் ‘இமயத் தியாகம்’ எழுதிய அ. ரெங்கசாமிக்கு முதல் விருது கிடைத்தபோதே வல்லினம் விருது தன் இடத்தை திடப்படுத்திக்கொண்டது. இன்று உலகம் முழுவதும் நவீன இலக்கியச் சூழலில் இயங்கும் பலரும் அறிந்த விருதாக வல்லினம் வளர்ந்துவிட்டது இந்தத் தேர்வு முறையால்தான்.

இதனால்தான் ஒவ்வோர் ஆண்டும் வல்லினம் விருதைக் கட்டாயம் யாருக்கோ கொடுத்தே தீர வேண்டும் எனச் சடங்காக இயங்குவதில்லை. மூன்று ஆண்டுக்கு ஒருமுறை என பொருமையாக ஒருவரைத் தேர்வு செய்கிறோம். அவர் வரலாற்று நாயகர் என்பதை எங்களுக்கு நாங்களே உறுதி செய்துக்கொள்கிறோம்.

விருது பெறுபவர் நூல்

வல்லினம் விருது பெரும் ஆளுமையின் நூலும் இவ்விருது விழாவில் வெளியிடப்படுகிறது. அ. ரெங்கசாமியின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் ‘சிவகங்கை முதல் சிசங்காங் வரை’ எனும் நூல், சை.பீர்முகம்மதுவின் ‘அக்கினி வளையங்கள்’ நாவல், ஜானகிராமன் அவர்களின் ஆய்வு நூல் என விருது விழாவை ஒட்டியே புதிய வெளியிடப்படுகின்றன. இந்த நூலை விருது பெற்ற நாளின் கொண்டாட்டத்தை நீட்டிக்கிறது.

ஒரு விருது வழங்குதல் என்பதை ஒரு பெரும் ஆளுமையை கௌரவிப்பது. அவர் பங்களிப்பை விரிவான தளத்துக்கு எடுத்துச் செல்வது. அதன் வழியாக அவரை வரலாற்றில் நிலைக்க வைப்பது. நூல்களே ஓர் ஆளுமையைக் காலம் கடந்து அழைத்துச் செல்கிறது. அதன் வழியாக அவர்கள் வழி பயணிக்கும் புதிய தலைமுறையை உருவாக்குகிறது.

விருது விழாக்கள், விருது வழங்கும் அமைப்பின் புகழைப் பாடவும் வருடாந்திர திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளவும் நடத்தப்படும்போது அவை சடங்கு நிலையில் நடந்து முடிகின்றன. உண்மையில் எவ்வித முயற்சியும் உள்ளார்ந்த அக்கறையில் இருந்து உருவாக வேண்டும். ஒரு கொண்டாட்டம் என்பது கூட்டாக மகிழ்ந்திருக்கும் தருணம் மட்டுமல்ல; ‘நான் உன்னை கௌரவிக்கிறேன் பார்’ என ஆணவத்தை நிறைவு செய்துக்கொள்ளும் இடமல்ல. அந்த விழாவுக்குப்பின்னால் அக்கறை மிகுந்த நோக்கம் இருக்கும்போதே அது எல்லா நிலைகளிலும் முழுமையடைகிறது. விதை வளமாக இருக்கும்போது நிலம் அதில் இனிய கனியைக் கொடுப்பதுபோல அது நிகழ்கிறது. அப்படி உருவாகும் கனியின் விதை தனது அடுத்த சந்ததியை உருவாக்கிச் செல்கிறது.

மலேசியத் தமிழ்ச் சூழலில் பங்களித்த ஒருவரை வரலாற்றில் அழுத்தமாக பதிவு செய்து, இளம் தலைமுறைக்கு அவர்களைக் கடத்தி அதன் வழியாக அவரைப் போன்ற ஆற்றல்மிக்க இளம் தலைமுறையை உருவாக்க வேண்டும் என்பதே வல்லினம் கொண்டுள்ள நோக்கம். இந்த நோக்கம் முழுமை அடைய விருது பெறும் ஆளுமையின் கலையை அல்லது வாழ்வை நூலின் வழியாகப் பதிவு செய்கிறோம். எனவே விருது எனும் கொண்டாட்டம் அடங்கியப் பின்னர்தான் உண்மையில் ஓர் ஆளுமை இன்னும் ஆழமாக உணரப்படுகிறார்; போற்றப்படுகிறார்.

உண்மையில் இது ஓர் அழுத்தமான எதிர்வினை. அரசியல்வாதிகளையும் அவர்களை அண்டிவாழும் ஜனரஞ்சக கலைஞர்களையும் இந்நாட்டின் முதன்மை முகங்களாக முன்னிலைப்படுத்தும்போது அதற்கு எதிராக உண்மையான முகங்களை சமூகத்தின் முன் வைப்பது. அப்படி வைப்பது பெரிய பொருளாதார, அதிகார பலமற்ற சிறிய குழுவாக இருந்தாலும் இப்படியான குழுக்கள் வழியாகவே இன்றளவும் கா,நா.சு, சி.சு.செல்லப்பா, புதுமைப்பித்தன், பெரியசாமித்தூரன், உ. வே. சா என அறிவார்ந்த நீண்ட பட்டியல் நிலைக்கிறது.

விருதுக்கு முன்னர் ஒருவர் கொண்டாடப் படுவதுபோல விருதுக்குப் பின்னரும் அவர் நூலின் வழியாக தன் வாழ்வை நீட்டிக்கிறார்; போதிக்கிறார்; தன் அனுபவத்தைப் பிறருக்குக் கடத்தி அதன் வழியாக வாழ்வையும் நீட்டித்துக்கொள்கிறார்.

ஆவணப்படம்

வல்லினம் விருது பெரும் ஆளுமையின் ஆவணப்படம் இயக்கும் முயற்சியும் தொடர்ந்து நடைபெற்றே வருகிறது. மலேசியாவில் இம்முயற்சியை வல்லினம் மட்டுமே முன்னெடுக்கிறது. அதன் வழியாக விருது பெறுபவரின் வாழ்வை காணொளியாகவும் பதிவு செய்து வந்துள்ளோம். காலமாகிவிட்ட அ. ரெங்கசாமி, சை. பீர்முகம்மது போன்றவர்களின் ஆவணப்படம் இன்று எத்தனை அர்த்தபூர்வமாக இருக்கிறது என்று அதனைப் பார்க்கும்போது புரியும். அவர்களின் மகிழ்ச்சி, கண்ணீர், வாழ்வின் தீராத சலிப்பு என எல்லாமே பேச்சு மொழியின் சாட்சியாக எஞ்சியுள்ளது.

வல்லினம் விருது 2025

பி. எம். மூர்த்தி

பி. எம். மூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படும் விருதால் வல்லினம் மேலும் தன் நிலையை உயர்த்திக்கொண்டுள்ளது. இந்த விருது அறிவிக்கப்பட்டது முதல் அவரை அறிந்துகொள்ள முன்னெடுக்கும் முயற்சிகள் எல்லாம் அவர் மீதான மதிப்பை பலமடங்கு உயர்த்துகின்றன.

அவரது வாழ்வை பேசும் நூல் ஒன்றும் வல்லினம் நண்பர்கள் வழியாக உருவாகிவிட்டது. இதுவரை வல்லினம் விருது கோப்பையை இத்தனை தரமாக தயார் செய்யப்பட்டதில்லை. மரத்தால் தயாரான அவ்விருதை அவர் வீட்டின் கலைப்பொருளாக நானே பலமுறை கற்பனை செய்துப் பார்த்து மகிழ்ந்துகொண்டிருக்கிறேன்.

பெருமாள் முருகன்

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும் எழுத்தாளர் பெருமாள் முருகனின் ஆக்கங்கள் விரிவாக வாசிக்கப்பட அவர் நூல்களை முன்னமே தருவித்து வாசகர்களுக்கு வழங்கியதுடன் அவை குறித்த விரிவான கட்டுரைகளும் எழுதப்பட்டு நவம்பர் வல்லினத்தில் இடம்பெறுகிறது. அவரது விரிவான நேர்காணலும் இடம்பெறுகிறது. மேலும் பி.எம்.மூர்த்தியின் ஆளுமை குறித்த பல்வேறு கட்டுரைகளும் இடம்பெறுகின்றன.

நவம்பர் மாத வல்லினம் விருது விழாவுக்கான பிரமாண்ட நுழைவாயில்.

***

ஒரு விருது விழா என்பது எவ்வாறு இருக்க வேண்டும் என மலேசியாவில் ஒரு முன்னோடியாகவே வல்லினம் செயல்படுகிறது. ஒரு கொண்டாட்டத்திற்கு முன்பும் பிறகும் இருக்க வேண்டிய கடப்பாடுகளை அறிந்து செயல்படுகிறது. வல்லினம் பொருளாதார பலம் கொண்ட அமைப்பல்ல. ஆனால் அதை காரணமாக வைத்து ஒருபோதும் தனது தரத்திலும் நிலைபாட்டிலும் சமசரத்தை ஏற்படுத்திக்கொள்ளாது. மிகச்சிறப்பாகவே விழா ஏற்பாடாகிக் கொண்டிருக்கிறது.

டிசம்பர் 21 எங்களுடன் நண்பர்கள் இணைய கீழே உள்ள இணைப்பிப் பதியலாம்.

பதிவு செய்யும் இணைப்பு

(Visited 52 times, 1 visits today)