சான் ஓசே நகருக்குள் அம்மா வலது காலை எடுத்து வைத்தது முதலே மாலதியின் முணுமுணுப்புத் தொடங்கிவிட்டது. மூன்றாவது நாள், அது முழு வாக்கியமாக உருகொண்டது.
“அவ்ளோ பாசம் இருந்தா ஒரு மாசம் லீவு போட்டுட்டு ஒங்க அம்மாவுக்கு பாதுகாப்பா சென்னைக்கே போக வேண்டியதுதான,” என்றாள். அவள் தொலைவாகச் சென்றபிறகு ‘லீவு கெடைச்சா போவ மாட்டனா’ என எனக்குள் கூறி ஆறுதல் தேடிக்கொண்டேன்.
மாலதியின் கோபத்திலும் நியாயம் உண்டு. கடந்த முறை அம்மா வந்தபோது தேவையில்லாத சில சிக்கல்களை உருவாக்கிச் சென்றுவிட்டாள். அதன் விளைவுகள் இன்று வரை தொடர்கின்றன.
சான் ஓசே ஒரு நவீனப் பெருநகரம். இரவிலும் உயிர்ப்புடன் குமிழ்விடும் ‘சிலிக்கான் வேலி’ ஒரு முனையில் என்றால் மறுமுனையில் அந்த மின்னொளியைச் சலனமில்லாமல் வேடிக்கை பார்த்தபடி சாண்டா க்ரூஸ் மலைத்தொடர்கள் மௌனத்தில் உரைந்திருக்கும்.
அடிவானத்தில் சூரியன் மறையும்போது பெரும்பாலும் நான் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டுவிடுவேன். மலை முகடுகளில் வழியும் செவ்வொளி அந்த நகரத்தின் கான்கிரீட் கட்டடங்களின் மேல் படிந்து தங்க முலாம் பூசப்பட்ட பழங்காலத்து தேவாலயம் போல காட்சியளிப்பதை ரசிப்பதற்காகவே நான் அந்த நேரத்தைத் தேர்வு செய்திருந்தேன்.
வேலை நேரம் என எனக்குத் திட்டவட்டமாக எதுவும் இல்லை. கூகுள், ஃபேஸ் புக் நிறுவனங்களில் பணிப்புரிவோருக்கு அத்தகைய சலுகை இருந்தது. கொடுக்கப்பட்ட செயல்திட்டங்களைக் குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க வேண்டும். அதை எப்போது எப்படிச் செய்கிறோம் என்பது அவரவர் பாடு.
கடந்த வருடம் அப்படி ஒரு மாலையில் வீட்டின் முன் சிறு கும்பல் கூடியிருந்தது. அம்மா அவர்களுக்கு மத்தியில் குற்றவாளிபோல தலைகுனிந்து நின்றுக்கொண்டிருந்தாள். பதற்றமாக காரைவிட்டு இறங்கியவுடனேயே வீசிய துர்வாடை ஸ்கங்க் விஜயத்தை உணர்த்திவிட்டது. அம்மாவைத் தவிர எல்லாருமே மூக்கை மூடியிருப்பதை அப்போதுதான் கவனித்தேன்.
ஸ்கங்க் தூவிச்செல்லும் திரவத்தின் காட்டத்தை நான் அறிவேன். காரின் டயர் சாலையில் உராயும்போது எழும் ஒருவித கசப்பான நெடி என என் மனத்தின் அது படிந்திருந்தது. மாலதி அதை பூண்டின் அழுகிய நெடி என்பாள். எப்படியோ அது உயிர்களின் நரம்பு மண்டலத்தை உலுக்கக் கூடிய வீச்சம். அன்று அது என் வீடு முழுவதும் நிறைந்திருந்தது.
வெளியே நடை சென்ற அம்மா வீட்டின் கதவைச் சாற்ற மறந்திருக்கிறாள். அவ்வழியாக வந்த ஸ்கங்கைப் பார்த்து டோனி குரைக்கவே எதிரியைத் தாக்கும் தீவிரத்தில் ஸ்கங்க் வீட்டிற்குள் நுழைந்துவிட்டதாம். மகள் பயத்தில் அலறவும் திரவத்தை தாராளமாக வீட்டில் பாய்ச்சிவிட்டு சென்றிருந்தது. இப்படித்தான் மாலதி பல்லைக் கடித்துக்கொண்டு சொன்னாள். அவளிடம் அம்மா சொன்ன கதையிது. சொல்லும்போதே கண்கலங்கினாளாம்.
அதைக் கற்பனையில் நிகழ்த்திப் பார்க்கவே அச்சமாக இருந்தது. ஸ்கங்க் இந்த வட்டாரத்தில் அவ்வப்போது தட்டுப்படும் விலங்குதான். அதன் கருநிற உடலை இரண்டாகப் பிளக்கும் வெண்கோட்டை ஓர் எச்சரிக்கையின் குறியீடாகவே நான் கருதிவந்தேன். குறுகுறுவென மின்னும் அதன் கண்கள் எதையும் பொருட்படுத்தாத ஒரு தீர்க்கத்தைக் கொண்டிருப்பதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். பூனையின் மென்மையும், எலியின் சுறுசுறுப்பும், கரடியின் நிதானமும் ஒருங்கே வாய்க்கப் பெற்ற அந்தச் சிறு உயிர் தன் கூர்மையான நகங்களால் மண்ணைத் தோண்டும் போது கொண்டிருக்கும் தீவிரம் வம்பு பண்ணாமல் விலகிச் செல்ல வைக்கும்.
டோனிக்கு அதெல்லாம் தெரியாது. அபோதம் நிறம்பிய உயிர். அதன் கண்ணிலோ வாயிலோ அந்தத் திரவம் படவில்லை என்பது மட்டுமே அப்போதைக்கு ஆறுதலாக இருந்தது. டோனி, கோல்டன் ரெட்ரீவர் இனம் என்பதால் கழுத்து உரோமங்கள் திரவத்தால் சடைபோல பிணைந்துகொண்டு பிசுபிசுத்தது. தக்காளி சாறு கொண்டு கழுவியும் வாடை போகாததால் மேல் புற ரோமங்களை கத்தரிக்க பெரும்பாடு பட்டேன். டோனி வாடை தாங்காமல் அழுதுகொண்டே இருந்தான்.
அன்று இரவு எங்களால் வீட்டில் தங்க முடியவில்லை. வாடை அருவக் கசப்பாக நாவில் வந்து அமர்ந்தது. என் பத்து வயது மகள் வாந்தி எடுத்துக்கொண்டே இருந்தாள். டோனிக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி அவ்வப்போது அழவும் செய்தாள். மாலதி மகளுக்கு ஆறுதல் சொல்லும்போதெல்லாம் அம்மாவைத் திட்டியும் வைத்தாள். அம்மாவுக்கு ஆங்கிலம் புரியாது என்பதே நிம்மதியாக இருந்தது. எவ்வளவு விலை உயர்ந்த வாசனைத் திரவியத்தின் மணத்தையும் ஒரே நொடியில் அழித்துவிட்டு, ஒரு சாவு மணியின் ஒலிபோல போல வாடை என் வீட்டை ஆக்கிரமித்திருந்தது. பாலாஜிதான் அன்று இரவு எனக்கு அடைக்கலம் கொடுத்தான். என்னோடு கூகுளில் வேலை செய்பவன். ஒரே குடியிருப்பில் வசிப்பவன்.
அம்மா தன் மூக்கில் எந்த வாடையும் ஏறவில்லை என்பதுபோலவே தலை குனிந்து நின்றுக்கொண்டிருந்தாள். அந்த வாடையை முகர்வதை ஒரு தண்டனைபோல ஏற்பவளாகத் தெரிந்தாள். இரவில் அறையிலிருந்து வெளியேறி டோனியுடன் படுத்திருந்தவளைப் பார்த்தபோது கலங்கிவிட்டேன். அம்மாவின் அரவணைப்பில் டோனி பயம் தெளிந்து சமாதானமாகியிருந்தது.
உண்மையில் அம்மாவை எங்கள் குடியிருப்பில் எல்லாருக்குமே பிடித்திருந்தது. “சாப்பிட்டுவிட்டீர்களா?” என்பதை மட்டுமே ஆங்கிலத்தில் கேட்கப் பழகியிருந்தாள். அதையே எல்லாரிடமும் கேட்டும் வைத்தாள். அனைவரும் அவளுக்கு இன்முகத்துடன் பதில் கூறினர். வாரத்திற்கு இரண்டு முறையாவது தன் கைப்பட சமைத்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு பிளாஸ்டிக் கிண்ணத்தில் போட்டு வழங்கினாள்.
“உங்க அம்மா ரொம்ப செய்யுறாங்க… அவ்வளோ ஒரப்ப வெள்ளக்காரன் சாப்புடுவானா… வேஸ்ட்டா கீழதான் கொட்டுவான்,” என்பாள் மாலதி.
“ஏதோ அவங்க மனத்திருப்திக்கு விடேன்,” என்பேன்.
“மனத்திருப்திக்கு வாங்கி வக்கிற மீனு கோழியெல்லாம் சாக்கடைக்கு போனா பரவால்லையா?” என என் வாயை மூடுவாள். கொஞ்ச நாட்களில் அம்மா சமைப்பதை நிறுத்தியிருந்தாள். என்ன நடந்தது என நான் கேட்டுக்கொள்ளவில்லை. காரணம் தெரிந்தாலும் என்னால் மாலதியை மீறி எதையும் மாற்றிவிட முடியாது. அவ்வப்போது நான் சாப்பிட ஆசைப்படுவதை மட்டும் அம்மாவிடம் கேட்டுவைப்பேன். மறுநாளே உற்சாகமாக சமைத்துக்கொடுப்பாள்.
மற்றவர்களிடம் மட்டுமல்லாமல் அம்மா என்னிடம் அதிகம் பேசும் வார்த்தையும் “சாப்புட்டியாப்பா?” என்பதுதான்.
அம்மாவின் மீது எனக்கு எந்தக் கோபமும் இருக்கவில்லை. சென்னை வெயிலில் வாழ்ந்தவள். கதவைச் சாற்றாமல் விடுவது அவளது கைப்பழக்கம். அடுத்த இரண்டு நாட்கள் மாலதியும் நானும் வீட்டை ஹைட்ரஜன் பெராக்சைட், பேக்கிங் சோடா என எதையெதையோ ஊற்றி கழுவி ஓரளவுக்கு வாழத்தயாரானபோது “பத்மா… நா ஊருக்கே போயிடுறம்பா,” என்றாள். நான் அம்மாவின் கைகளை இறுக்கப்பிடித்துக்கொண்டு, “ஒன்னைய இப்ப யாராச்சும் ஏதும் சொன்னாங்களா?” என்றேன் கனிவுடன். அம்மா என்னை ஏக்கம் தோய்ந்த கண்களுடன் பார்த்தாள். அவளை எதிர்கொள்ளத் தயங்கி நகரந்துவிட்டேன். ஆனால் இந்தக் கனிவெல்லாம் கரைந்துபோக அம்மாவின் அடுத்தடுத்த செயல்களே காரணமாக இருந்தன.
குப்பைகளைப் போட்டுவிட்டு தொட்டியை மூடாமல் விடுவதன் வழி ரக்கூன்களின் அட்டகாசத்தை அதிகரிக்கச் செய்ததில் அம்மாவுக்குப் பெரும் பங்குண்டு. மாலதி எவ்வளவு சொன்னாலும் அம்மா முந்திக்கொண்டு செய்யும் செயலது. பக்கத்து வீட்டுக்காரர்கள் சலித்துக்கொண்டனர். அதுவரை குடியிருப்பில் நான் சேர்த்து வைத்திருந்த நற்பெயருக்குக் கலங்கம் வந்தபோது கடும் எரிச்சல் உண்டானது.
எங்கள் குப்பைத்தொட்டியைத் கவிழ்த்து அதில் உள்ள குப்பைப் பைகளை பக்கத்து வீட்டுக்காரரின் வீடுவரை இழுத்துச்சென்று பந்தி சோறு சாப்பிட்டன ரக்கூன்கள். மறுநாள் பாதுகாப்பு காமிராவில் அந்தக் காட்சியைப் பார்த்தபோது சாம்பல் நிற புகைப்போல புசுபுசுவென அவை உலாத்துவது தெரிந்தது. என்னால் அவை ஏற்படுத்திய அசுத்தங்களை நேர் செய்ய முடிந்தாலும் பக்கத்து வீட்டின் பின்னால் வளர்க்கப்பட்ட செடிகளில் இருந்த தக்காளிப்பழங்களைக் கடித்து வைத்ததற்கு நான் எப்படிப் பொறுப்பேற்பது எனப் புரியவில்லை. இத்தனை காலம் அந்தத் தெருவழியாக வராத ரக்கூன்களை வாசத்தைக் காட்டி வரவழைத்தது அம்மாதான் எனக் குற்றம் சாட்டப்பட்டபோது வாயடைத்து நின்றேன்.
அம்மாவிடம் எவ்வளவு சொன்னாலும் “மறந்துட்டேம்பா!” எனச் சொல்லிவிட்டு தலையைக் கவிழ்த்துக்கொண்டாள்.
“மறக்குறன்னா எதுக்கு அந்த வேலய செய்யுற? உன்னிய யாரு குப்பைய தொட்டியில போடச்சொல்லி அடிச்சா….” என ஒருமுறை கத்திவிட்டேன். அம்மா என்னை யாரோ போல பார்த்தாள். நான் அவளிடம் அப்படிக் கத்துபவன் அல்ல. கீழ்ப்பற்களால் மேலுதட்டைக் கடித்துக்கொண்டேன்.
“வீட்டுல சும்மா இருக்க முடியலப்பா… அதான்… தப்புதான்” என்றாள் பரிதாபமாக. குரலில் உடைவிருந்தது. நான் அதை எதிர்கொள்ள விரும்பாமல் எழுந்து போய்விட்டேன். அம்மாதான் எவ்வளவு உன்னதமானவள். ஒருவார்த்தைகூட அவள் யாரையும் குறை ஒன்றும் சொல்லவே இல்லை என அதன் பின்னர் எண்ணிக்கொண்டேன்.
அந்தச் சம்பவத்திற்குப் பின் அம்மா அதிகமே ஒடுங்கிப் போய்விட்டாள். தான் சென்னைக்கே திரும்புவதாக நாளில் இருமுறையாவது சொல்லி வைத்தாள். அப்போதே அவளை ஊருக்கு அனுப்பியிருக்க வேண்டும். மகள் பாட்டியுடன் இருந்தால் முற்றிலும் அமெரிக்க கலாச்சாரத்துக்கு உட்படுவதை வடிகட்ட முடியும் என நான் எண்ணியிருந்தேன். மேலும் அம்மாவைத் தனியாக விமானத்தில் அனுப்புவதில் எனக்குச் சங்கடம் இருந்தது. இங்கிருந்து ஹாங்காங் சென்று இன்னொரு விமானம் மாறி எப்படித் தனியே சென்னை சென்று சேர்வாள் என பயந்தேன். எனவே எனக்கு இருவாரம் விடுப்பு எடுக்கும் வாய்ப்பு வரும்போது அழைத்துச் சென்று விடுவதாகச் சமாதானம் கூறி வைத்தேன். ‘ஏஐ’ வருகையால் வேலையிடத்தில் அனைவரின் தலையும் சுழன்றுக்கொண்டிருந்தது. அதற்கிடையிலும் அம்மாவை ஆற்றுப்படுத்தும் வகையில் நான் வேலை பார்க்கும் கூகுள் நிறுவனத்திற்கு அழைத்துச் சென்று வந்தேன்.
சிலிக்கான் வேலியின் இதயம் போன்றது கூகுள். ஊழியர்களுக்கு நல்ல சம்பளமும் சலுகைகளும் கொடுக்கும் நிறுவனங்களில் ஒன்று. ஃபேஸ் புக் நிறுவனம் போல வார இறுதியில் இலவசமாகக் கட்டற்ற மது அருந்தும் சலுகை இல்லாவிட்டாலும் வளர்ப்பு மிருகங்களை அலுவலகத்திற்கு நம்மோடு கூட்டி வந்து வேலைப்பார்க்கும் சுதந்திரத்தை வழங்கும் விசால மனம் படைத்தது. உறவினர்களை அழைத்து வந்து அங்குள்ள உணவகத்தில் விருந்து தரலாம். ஓய்வு தேவையென்றால் மசாஜ் போகலாம். துணி துவைத்துக்கொள்ளும் டோபி வசதி உட்பட உடற்பயிற்சி கூடமெல்லாம் கூட உண்டு. அம்மாவை நான் அங்கு அழைத்துச்சென்றுதான் மதிய உணவு கொடுத்தேன்.
உணவு என்றால் ஐந்து நட்சத்திர அந்தஸ்தில் உள்ள உணவுகள். புகழ்பெற்ற சமையல் நிபுணர்களால் தயார் செய்யப்பட்டிருக்கும் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். எல்லாமே இலவசம். அம்மாவுக்கு எதுவும் பிடிக்கவில்லை. “இதென்னப்பா எல்லாமே உப்பு ஒரப்பு இல்லாம இருக்கு,” என புலம்பினாள். சோறும் சாம்பாரும் மட்டும் வைத்துக்கொண்டுச் சாப்பிட்டாள். குளிராடையும் கையுரையும் அணிந்துகொண்டு அலுவலக வளாகத்தைச் சுற்றிச் சுற்றி வந்தாள். திரும்பிச் செல்லும்போது “நா இனிமே ஒழுங்கா வீட்டுலயே இருக்கேம்பா… நீ லீவு கெடைக்கும்போது கொண்டு போய் விடு போதும்…” என்றாள்.
அம்மாவைப் பார்க்க எனக்கே கஷ்டமாக இருந்தது. என் தேவைக்காக அவளை வருத்துகிறேனோ எனத் தோன்றியது. எங்குச்சென்றாலும் நீரைக்கொண்டு கழுவும் வசதியில்லாத கழிப்பறைகள், ஆங்கில பாணி காப்பி, காற்றில் நிறைந்துள்ள குளிர், அடித்தொண்டையில் பேசும் ஆங்கிலம் என எல்லாமே அவளுக்கு அந்நியமானது. அதற்குப்பின் அம்மா மிகவும் மாறியிருந்தாள். எல்லாவற்றையும் கவனமாகவே செய்தால். மாலதி சொல்வதைக் கேட்டுக்கொண்டாள். ஸ்கங்க் கொடுத்துச்சென்ற நெடியின் மிச்சமும் பெரும்பாலும் குறைந்து நல்ல தூக்கம் வந்தது.
இப்படி எல்லாமே ஒருவகையில் இயல்பாகிக் கொண்டிருந்தபோதுதான் வேலை முடிந்து திரும்பிய என்னிடம் பொங்கி வந்த பெருங்கோபத்தோடு மாலதி கத்தினாள். அவள் அப்படி ஒருபோதும் செய்பவள் அல்ல. இயலாமையும் அச்சமும் கலந்த முகத்துடன் அவள் கோபம் வெளிபட்டது. “ஒன்னு ஒங்க அம்மா இருக்கணும்; இல்ல நா இருக்கணும்” எனச் சொல்லும்பொதே அழுதவளை அணைத்துக்கொண்டேன். எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. என் மூளையில் செயற்கை நுண்ணறிவு முறையில் புதிதாக உருவாகியுள்ள சவால் குறித்து என் மேலதிகாரி எச்சரித்ததே ஓடிக்கொண்டிருந்தது.
அம்மா தலை குனிந்தபடி இருக்க மகள் ஓடி வந்து “அப்பா நான் இன்று கோயோட்டி ஒன்றை பார்த்தேன்,” என்றபோது நான் உண்மையில் அதிர்ந்துபோனேன்.
சான் ஓசேவுக்கு வந்த ஈராண்டுகளில் நானே ஓரிரு முறைதான் அவற்றை தூரத்தில் பார்த்துள்ளேன். நரியை விட பெரியவை. ஓநாயை விடச் சிறியவை. சமவெளி மற்றும் மலைப் பகுதிகள் என அனைத்து இடங்களிலும் காணப்படுபவை. நாளிதழ்களில் கோயோட்டி தாக்கியதால் காயமடைந்தவர்கள் குறித்த செய்தியைப் பார்த்துள்ளேன். ஒருமுறை குழுவாகச் சேர்ந்து குழந்தை ஒன்றை காட்டுக்குள் இழுத்துச்சென்ற கதையும் நகரைப் பரபரக்க வைத்திருந்தது. இருப்பிடங்களில் அவற்றைப் பார்ப்பது அத்தனை நல்லதல்ல. அது எங்கள் பகுதிக்குள் நுழைந்துள்ளது உண்மையில் அச்சமுற வைத்தது.
“எங்கு பார்த்தாய்?” என ஆங்கிலத்தில் பதற்றமாகக் கேட்டேன்.
“பாட்டி என்னை வெளி நடைக்கு அழைத்துச் சென்றபோது ஒதுக்குப்புறமான ஓரிடத்தில் காத்திருந்து காட்டினார்”
“காத்திருந்தாரா யாருக்கு?”
“கோயோட்டிக்கு” மகள் சிரித்தாள்.
நான் கோபம் தாங்காமல் அம்மாவைப் பார்த்து முறைத்தேன்.
“இன்னிக்கு கோயோட்டிய காட்டுனாங்க, நாளைக்கு மலை சிங்கத்த காட்டுவாங்க… அது என்னோட புள்ளைங்கள தூக்கிட்டு போவும். நீங்க அப்பவும் இப்படியே குத்துக்கல்லாட்டம் முழிச்சிட்டு நில்லுங்க!” என மீண்டும் கத்தினாள் மாலதி. அவள் கத்துவதைப் பார்த்து மகள் சிரித்தாள். அவளுக்கு தமிழில் கோபமாகப்பேசுவது அப்படி சிரிப்பை வர வழைக்கும்.
நான் அம்மா திரும்பிச்செல்ல விமானம் பதிவு செய்தது அப்போதுதான். டெல்லியின் வழியாகச் செல்லும் ‘ஏர் இண்டியா’ விமானத்தை வேறு வழியில்லாமல் பதிவு செய்தேன். டெல்லியில் அவர் இறங்கியவுடன் சென்னைக்கு அனுப்பி வைக்க நண்பர் ஒருவரிடம் மன்றாடி அனுமதி பெற்றேன்.
கொயோட்டி பற்றிய பேச்சு வீட்டில் அடுத்த சில நாட்கள் அடிபட்டபடியே இருந்தது. மகள் அதன் அடர்ந்த வால் அழகை யும் மஞ்சள் நிற கண்களையும் வர்ணித்தபோது இணையத்தைத் திறந்து அதன் கோர முகத்தை விவரித்தேன். அதைப் பார்த்த கனம் ஓடி வந்துவிட வேண்டும் என்றும் தனியாக உலாவுவதைத் தவிர்க்க வேண்டுமென்றும் கூறிக்கொண்டே இருந்தேன்.
அதன் பின்னர் கொயோட்டியை ஓரிரு முறை தாங்களும் எதிர்க்கொண்டதாக வசிப்பிடத்தில் உள்ளவர்கள் பேசிக்கொண்டார்கள். அது கூட்டத்தில் இருந்து தவறுதலாகப் பிரிந்திருக்கக் கூடும் என்றும் உணவின்றி உடல் மெலிந்து காணப்படுவதாகவும் கூறினர். பசியுடன் திரியும் அது எப்போது எதைத் தாக்கிக் கொள்ளும் எனும் அச்சம் எனக்குள் பரவியிருந்தது.இந்நிலையில்தான். சென்னையில் பேரழிவை தரக்கூடிய வெள்ளம் வரலாம் எனும் எச்சரிக்கை வரவும் மீண்டும் டெல்லி நண்பனின் காலில் தொலைப்பேசி வழியாகவே பலமுறை விழ வேண்டியதாகப் போனது.
ஒருமாதம் முடிவதற்குள்ளாகவே அம்மா வீட்டுக்கு வந்தபோது “வாங்க அத்த” என மாலதி சொன்னதோடு சரி. அதன் பின் அம்மாவின் பக்கமே செல்லவில்லை. மகளை அவளிடம் அனுப்பாமல் தவிர்த்தபோது சூழலை எதிர்க்கொள்ள முடியாமல் மௌனமாகிக் கிடந்தேன்.
வந்த மூன்று நாட்கள் அம்மா பெரும்பாலும் அமைதியாக இருந்தாள். கடந்த கால தவறுகளை நினைவில் வைத்துக்கொண்டு வீட்டின் கதவுகளை மூடி வைத்தாள். குப்பைத்தொட்டி பக்கம் செல்வதைத் தவிர்த்தாள். அந்நியர்களிடம் அதிகம் பேசுவதில்லை. யாரிடமும் சாப்பிட்டுவிட்டீர்களா எனக் கேட்பதில்லை. உண்மையில் அம்மாவின் வருகை மனதுக்கு நிறைவாக இருந்தது. மாலதியும் மகளை அம்மாவிடம் சேர அனுமதித்தாள். எல்லாமே இயல்பாகியிருந்த நாளில்தான் அம்மாவையும் மகளையும் காணவில்லை என மாலதி என்னை அடித்து எழுப்பினாள்.
நான் பதறிக்கொண்டு எழுந்தபோது தலையைச் சுற்றி கோடிங் சூத்திரங்கள் சுற்றிக்கொண்டிருந்தன. ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணி என்பது அதிகாலை என நான் பொருள்கொண்டிருந்தேன். “வெளியதான் இருப்பாங்க” என்றேன்.
“நல்லா பாத்துட்டேன் காணோம்” என்றாள். குரலில் பதற்றம் இருந்தது. அவள் எனக்கு எதையோ உணர்த்த முயல்வது புரிந்தது. விரைவாக மெத்தையை விட்டு இறங்கி வாசல் கதவைத் திறந்தவுடன் ‘அம்மா’ என அழைத்துப்பார்த்தேன். பனிப்புகையில் அது கரைந்து மறைந்தது.
“அன்னிக்கு அவங்க எங்க கூட்டி போனாங்க?” நான் என்ன ஊகிக்கிறேன் என்பதை மாலதி அறிந்தவளாகக் கைக்காட்டினாள். அவளால் பேச முடியவில்லை. “கொளம் இருக்குல்ல… அதுக்குப் பின்னாடி பொதர் இருக்குல்ல….” எனச்சொல்லி முடிப்பதற்குள் ஓடினேன்.
அந்நேரத்தில் அப்படி ஓடுவது எனக்கே சூழலைப் பதற்றமாக்கிக் காட்டியது. என் ஊகம் உண்மையென இடத்தை நெருங்கியபோதே அறிந்துகொண்டேன். கொயோட்டி அம்மாவுக்கு மிக அருகில்தான் இருந்தது.
மகள் அம்மாவுக்குப் பின்னால் அனைத்தபடி அதை ஆர்வமுடன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கொயோட்டி அம்மா பிசைந்து வைத்த சோற்றை நிதானமாக தின்றுக்கொண்டிருந்தது. தன் அடர்ந்த வாலால் தரையைக் கூட்டிக்கொண்டிருந்தது. எனக்குப் பின்னால் ஓடிவந்த மாலதி “ஐயோ” என முன் செல்ல அவள் கையைப் பற்றி என்னருகில் இழுத்தேன்.
