சிறுகதை: அற்புதம்

மூன்றாவது அடுக்குமாடி குடியிருப்பில் ஏறி கெய்லா குறித்து விசாரித்தபோது கால்களில் தளர்விருந்தது. அவள் ஐந்தாவது மாடியில்தான் வசிக்கிறாள் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். காற்றில் குளிர் அதிகரித்திருந்ததால் கைகளை குளிராடை பாக்கெட்டில் விட்டுக்கொண்டேன். நெடுநேரமாக நான் அவளைத் தேடி வந்த காரணத்தை ஒரு வயதான மூதாட்டியிடம் விளக்க முயன்றுக்கொண்டிருந்தேன். அவளுக்குக் காது மந்தம் என அறிந்தபோது கொஞ்சம் சத்தமாகப் பேச வேண்டியிருந்தது. என் குரல் கேட்டு உள்ளே இருந்து என்னை வினோதமாகப் பார்த்த கண்களுக்குரியவன் வாட்டச்சாட்டமான இளைஞன் எனத் தெரிந்தபோது அங்கிருந்து நகர்ந்து செல்ல முயன்றேன். சொல்லப்போனால் முயற்சியிலிருந்து விடுபட்டு ஆஸ்டினை விட்டே புறப்பட்டுவிட தீர்மானித்தேன்.

ஆஸ்டின் நகரில் இருக்கும் என் வீட்டுக்கு இனி செல்லவே கூடாது என முடிவெடுத்து ஏழரை மாதங்கள் ஆகின்றன. விமான நிலையத்தில் இறங்கி கால் வைத்ததும் ஒவ்வாமையின் தசைநார்கள் இழுத்துப் பிடித்து இனி ஒரு அடி எடுத்து வைக்காதே  என அச்சுறுத்தின.

கவிதா ஊரில் இருந்திருந்தால் இந்த அவஸ்த்தை இருந்திருக்காது. அவளே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வாள். எந்தச் சிக்கலான பேர்வழிகளையும் அவளால் சிரித்தபடியே சமாளிக்க முடியும். அப்படி ஓர் இனிய முகம் அவளுக்கு. கடந்த வாரம் அவள் அம்மாவுக்கு உடல் சுகமில்லை என மகனைக்கூட்டிக்கொண்டு ஊருக்குச் சென்றபோது விமானநிலையத்தில் யாரோ போல தெரிந்தாள். 

ச்சூவியும் நானும் மட்டுமே கடந்த இரண்டு வாரங்களாக வீட்டைச் சுற்றிச் சுற்றி வருகிறோம். யாரும் வீட்டில் இல்லாத வெறுமையில் இயல்பாக நிகழும் என் உடலின் வேடிக்கையான அசைவுகள் ச்சூவிக்கு வினோதமாக இருந்திருக்க வேண்டும். அவ்வப்போது என்னைச் சந்தேகத்துடன் உற்றுப்பார்த்தபடி இருந்தான். ஆஸ்டின் வீட்டை வாடகைக்குக் கேட்டு வந்திருந்த மின்னஞ்சலைப் பார்த்து நான் நான்கைந்து  முறை தலையில் அடித்துக்கொண்டபோது குரைக்கவும் செய்தான். பூடில் இனம் அவன். சுருள் முடிக்காரன். என் கொஞ்சலை  மட்டுமே வேண்டி நிற்பவன்.

முதலில் அந்த மின்னஞ்சலுக்கு நான் பதிலேதும் அனுப்பவில்லை. அம்மா தேறிவிட்ட நிம்மதியில் கவிதாவின் குரலில் இருந்த இயல்பைப் புரிந்துகொண்டு விசயத்தைச் சொன்னேன். “இன்னுமா அத நெனச்சி பயந்துட்டு இருக்கீங்க… இவங்களயும் விட்டா இனிமே அந்த வீட்டுல பேயிதான் வந்து குடியிருக்கும்” என்றாள். 

ஆசையாக வாங்கிய வீட்டில் பேய்கள் வந்து குடியிருக்கும் எனும் கற்பனையைவிட நான் பயந்திருக்கிறேன் என கவிதா சொன்னது அதிகம்தான் உசுப்பிவிட்டது. நான் பயந்ததை கவிதா அறிந்து வைத்திருக்கிறாள் என்பதே ஒருவித எரிச்சலை உருவாக்கியது. மீண்டும் அழைத்து ‘எல்லாம் உன்னால்தான்’ எனச்  சொல்லத் தோன்றி அடக்கிக்கொண்டேன்.  அவளை என்னால் வாதத்தில் வெள்ள முடியாது.

ஒருவகையில் பார்த்தால் மொத்தச்சிக்கலுக்கும் கவிதாவைத்தான் காரணம் சொல்வேன். பாத்திரங்களைக் கழுவும் பேசினில் அவள் ச்சூவி கடித்துத் துண்டாக்கிய துணித்துண்டுகளை வைத்திருக்க வேண்டாம். அதை கவனிக்காமல் நான் கை கழுவ போக, துணி சிக்கி நீரோட்டம் அடைத்துக்கொண்டது. மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி பழக்கமான என் விரல்களுக்கு அந்தச் சிக்கலை கையாளத் தெரியாததால் பழுது பார்ப்பவரை அழைத்தேன். 

இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என்றவன் மறுநாள்தான் வந்தான். அதுவரை உலகத்தின் அத்தனை துன்பங்களுக்கும் ஆட்பட்டதைப் போல நான் துடித்துக்கொண்டிருந்தேன். கவிதா எதையும் கண்டுக்கொள்ளாமல் அவள் புதிதாக இணைந்துள்ள விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் பரிந்துரைத்த நாவலொன்றைப் படித்துக்கொண்டிருந்தாள். எனக்கு அதிலெல்லாம் எந்தப் பிடிப்பும் இல்லை. “விஷ்ணுபுரமுன்னா நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஏதும் படிப்பிங்களா?” என ஒருமுறை கேட்டதற்கு முறைத்து வைத்தாள். அதன் பின் அவள் பாடென விட்டுவிட்டேன்.

என் பதைபதைப்பைப் பொருட்படுத்தாத அவளது இயல்புதான் என்னை மறுநாள் உசுப்பியிருக்க வேண்டும். குழாய் அடைப்பைப் பழுதுப்பார்க்க வந்த ஆங்கிலேயனிடம் கொஞ்சம் அதட்டலாகப் பேசிவிட்டேன். அமெரிக்கா வந்ததுமுதல் என்னுள் அடக்கி வைத்திருந்த மதுரைக்காரன் எப்படியோ வெளிப்பட்டுவிட்டான். 

வேலை செய்வதை நிறுத்திய அந்த ஆங்கிலேயன் “உனக்கு என்ன பிரச்சினை?” எனக்கேட்டான். 

“நீதான் பிரச்சினை. ஒழுங்காக நேற்றே வந்திருந்தால் கைக்கழுவும் தொட்டி இப்படி மீன் தொட்டி ஆகியிருக்காது” என்றேன். 

“அது ஒன்றும் பெரிய சிக்கல் இல்லை” என்றான் அலட்சியமாக.

“உன் வீட்டில் நிகழ்ந்தாலும் இப்படிச் சொல்வாயா?” என்றேன். 

நிதானமாக தன் தோல்பையில் கைவிட்டவன் ஒரு துப்பாக்கியை எடுத்தான். நான் உண்மையில் அதை எதிர்ப்பார்க்கவில்லை. கறுநிற பிடியும் சாம்பல் உடலும் கொண்ட லட்சணமான துப்பாக்கி அது.

அமெரிக்கா முழுவதும் துப்பாக்கியை வைத்திருக்கும் உரிமை இருந்தாலும் டெக்சஸ் மாநிலத்தில் மட்டும் அதை வெளியே காட்டியபடி பொது இடங்களில் அலைய அனுமதி உண்டு. கவிதாவோடு நான் வெளியே செல்லும்போது சகஜமாக துப்பாகியுடன் நடமாடுபவர்களைப் பார்த்து “ஒலகம் எவ்வளோ கெட்டுக்கெடக்கு பாத்தியா” என்பேன்.

“உன் பாக்கெட்டுலயா வச்சான்… அவன் காசு அவன் கையி… பேசாம இரு பால்கி” என்பாள் சகஜமாக. பாலகிருஷ்ணன் எனும் பெயரை அவள் அவ்வாறு செல்லமாக அழைக்கப் பழகியிருந்தாள். எனக்கென்னவோ இதெல்லாம் சாதாரண விசயமாகப் படுவதில்லை. கார் ஓட்டும் உரிமம் இருந்தாலே துப்பாக்கி வைத்திருக்கும் உரிமம் உண்டு எனும் சட்டமெல்லாம் என் மூளைக்கு நியாயமாகப் படவில்லை. மகன்கூட இதையெல்லாம் சாதாரணமாகவே அணுகினான். தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த ஓராண்டுக்குள் அவன் முழுமையான அமெரிக்கனாகவே மாறிவிட்டான். “என் பள்ளியில்கூட ஒருவன் அவன் அப்பாவுக்குத் தெரியாமல் துப்பாக்கியை எடுத்து வந்து மாட்டிக்கொண்டான்” என அமெரிக்க ஆங்கிலத்தில் சொன்னான். அவன் பேசுவதைப் புரிந்துகொள்ளவே இப்போதெல்லாம் நான் அதிகமாக ஹாலிவுட் படங்களைப் பார்க்க வேண்டியதாய் உள்ளது. என் நெற்றிக்கு நேராக விரைத்து நிற்கும் துப்பாக்கியைக் கண்டு முதலில் அவன்தான்  அலறினான். அப்போதும் மறக்காமல் அமெரிக்கனைப் போல அலற, கவிதா ஓடி வந்தாள்.

“மிஸ்டர் ஜோன்… என்ன ஆனது… எதுவாக இருந்தாலும் பேசிக்கொள்ளலாம்” என பீலிக்காரன் அருகில் சென்றவள் இரைஞ்சும் குரலில் “ப்ளீஸ்” என்றாள்.

“உன் கணவனை கொஞ்சம் கவனமாக இருக்கச் சொல். என்னிடம் மிரட்டிப் பேசுவது உங்களுக்கு நல்லதல்ல,” என சாதாரணமாகச் சொல்லிவிட்டு துப்பாக்கியை இறக்கவும்தான் மூச்சடைப்பால்  நெஞ்சு புஸ்ஸென கீழே இறங்கியது.

நான் எதுவும் பேசவில்லை. கவிதா மன்னிப்பு கேட்கச் சொல்லியும் மௌனமாகச் சென்று அமர்ந்தேன். அதன் பின்னர் அவள்தான் அவனிடம் பேசிக்கொண்டிருந்தாள். தான் அமெரிக்கா வந்ததை பெருமையாக நினைப்பதாகவும் அமெரிக்கர்கள் சிறந்த பண்பினைக் கொண்டவர்கள் என்றும் ஏதேதோ சொல்லி சூழலைச் சமன் படுத்த முயன்றாள். அந்த அமெரிக்கன் எதுவும் பேசாமல் வந்த வேலையை முடித்துவிட்டு கூலியை வாங்கிக்கொண்டுச் சென்றான். ச்சூவி மட்டும் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை எனும் குற்ற உணர்ச்சியில் சோஃபாவின் மூலையில் முடங்கிக்கொண்டு பொம்மையைப் போல தோற்றத்தை மாற்றிக்கொண்டது.

அன்று முழுவதும் நான் யாரிடமும் ஒன்றும் பேசவில்லை. துப்பாக்கி என் நெற்றிக்கு நேராக நின்ற தருணம் மீண்டும் மீண்டும் கற்பனையில் நிகழ்ந்து அடிவயிற்றில் நெருடலை உருவாக்கியது. பின்னர் அந்தத் தருணத்தில் கூடுதலாகக் கற்பனையில் புகுத்தி அவன் அதை அழுத்தினால் என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை நிகழ்த்திப்பார்த்தேன். தோட்டாவினால் நெற்றி துளையிடப்படும் காட்சி சலித்தவுடன் நான் அவனைத் தாக்கும் கற்பனைகள் வளர்ந்தன. சில யூடியூப் காணொளிகளில் நீட்டப்படும் துப்பாக்கிகளை எப்படிப் பிடித்து இழுத்து மடக்கித் திருப்பி எதிராளியை நோக்கி நீட்டுவது என விளக்கப்பட்டிருந்தது. அதை நானும் அடுத்து வந்த நாட்களில் தனியாகச் செய்துப்பார்த்தேன். அப்போதுதான் ஒன்றை உணர்ந்தேன். என் துரிதமான எதிர்த்தாக்குதலால் கைகளுக்குத் துப்பாக்கி கிடைத்தாலும் எப்படிச் சுடுவது என எனக்குத் தெரியாது. அது தமிழ்ப்படங்களில் காட்டுவதைப் போல அத்தனைச் சுலபமாகவும் இராது எனத் தோன்றியது. நான் துப்பாக்கி சுடும் பயிற்சிக்குச் சென்றதெல்லாம் அதன் பின்னர்தான்.

ஆஸ்டினில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி நிலையங்களுக்குச் செல்வது அமெரிக்கர்களுக்கு இயல்பான நடவடிக்கை. ‘தி ரேஞ்ச் அட் ஆஸ்டின்’ மையத்தில் நுழைந்தபோது முகப்பில் இருந்த இரு ஆங்கிலேயர்களைப் பார்க்க முரட்டுதனமாகத் தெரிந்தார்கள். கை கால்களில் பச்சைக் குத்தியிருந்தார்கள். சுடும் பயிற்சிக்காக வந்திருக்கிறேன் என்றபோது “வரவேற்கிறோம்” என்ற ஒருவன் என்னை எதிரில் உள்ள கணினியில் விவரங்களைப் பதிவு செய்யச்சொன்னான். அந்தப் பாரத்தில் என் விபரங்களைப் பதிவிடும்போதே தைரியமாக உணர்ந்தேன். இனி எந்தக் கவலையும் இல்லை எனச்சொல்லிக்கொண்டேன். எண்பது டாலர் செலுத்தியப்பின்னர் எனக்கான பயிற்சியாளர் வரும்வரை காத்திருக்கச் சொன்னான். நான் அதுவரை அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளை பார்வையிட்டேன். 

கைத்துப்பாக்கிகளைவிட ஸ்னிப்பர் ரைபிள், ஷாட்கன் போன்றவை விலை மலிவாக இருந்தன. அறுநூறு டாலருக்கு வெண்சாம்பல் நிறத்தில் அரைத்தானியங்கி ரைபிள்  வாங்கிக்கொள்ளலாம். கூடுதலாக நானூறு டாலர் கொடுத்தால் கைக்கு அடக்கமாக ‘க்ளோக் 19 ஜென் 5’ வாங்கலாம்.  இப்படி ஒவ்வொரு துப்பாக்கிக்கும் ஒவ்வொரு பெயர் இருந்தது. நல்லப் பயிற்சிக்குப் பின்னர் எனக்கும் ஒரு துப்பாக்கி வாங்கி வைத்துக்கொள்ளத் தோன்றியது. ஆனால் அதற்கு நானே ஒரு பெயர் வைத்துக்கொள்ள நினைத்தேன். நான் அதி வேகமாகச் சுடக்கூடியவனாக வாய்ப்பு உள்ளது என்பதால் ‘மின்னல்’ என வைக்க திட்டமிட்டேன். ‘மின்னல் பால்கி’ எனச் சொல்லிப்பார்த்தேன். சிலிர்ப்பாக இருந்தது.

நிறைய வண்ணங்களில் வரைந்து வைக்கப்பட்டிருந்த மனித வடிவங்களில் நான் நீலவண்ண அட்டையைத் தேர்வு செய்தேன். எனக்கு அதிஷ்டமான நிறம். சுடுவதற்கு முன் பயிற்சியாளர் என்னைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று மூன்று விதிகளைக் கூறினார். முதலாவது ட்ரிகரை அழுத்தும் விரல் சுடும் நேரத்தைத் தவிர மற்ற சமையங்களில் துப்பாக்கிக்கு வெளியே அதன் உடலோடு ஒட்டி இருக்க வேண்டும். இரண்டாவது, ஒருபோதும் துப்பாக்கியுடன் இரு பக்கமும் இருக்கும் தடுப்பு அரண்களையும் கீழே சிவப்பு நிறத்தில் உள்ள கோட்டையும் தாண்டி வெளியேறக்கூடாது. மூன்றாவது  ஒருவேளை கை வலித்தால் துப்பாக்கியை முறையாக வைத்துவிட்டு ஓய்வெடுத்துக்கொள்ளலாம். அவர் இந்த விதிமுறைகளைச் சொன்னவிதமே ஒரு விதமாக எச்சரித்தது. சுடும் மைதானத்தில் நுழையும் முன் “துப்பாக்கியை வைத்துக்கொண்டு சிறிய அச்சுறுத்தும் செயல்கூட உனக்கும் எனக்கும் சங்கடமான விளைவுகளை உண்டாக்கும். எனவே நான் அச்சப்படும் வகையில் ஏதும் செய்துவிடாதே” என அவன் சொன்னபோது நான் மெல்லிய நடுக்கம் அடைந்தேன். எனக்கு இதெல்லாம் தேவையா எனக்கூட தோன்றியது. 

நான் எடுத்துச் சென்ற நீல நிறத்தாள் ஒரு கொக்கியில் மாட்டப்பட்டு இயந்திரத்தால் தூர எடுத்துச்செல்லப்பட்டது. என் காதில் சத்தத்தைத் தடுக்கும் கவசம் ஒன்றும் பொருத்தப்பட்டது. கண்களில் கண்ணாடி. கவிந்திருந்த பொசுங்கிய நெடி கிறுகிறுக்க வைத்தது.

பயிற்சியாளன் இரண்டு விரல்களால் கண்களைக் காட்டி என்னை கவனிக்கச் சொன்னான். துப்பாக்கியை இயக்க மூன்று விசைகளை அறிவது அவசியம். முதலாவது தோட்டக்கள் அடுக்கப்பட்டிருக்கும் மேகசினை வெளியேற்றும் விசை. இரண்டாவது சுடுவதற்கு கீழே இறக்க வேண்டிய பாதுக்காப்பு விசை. மூன்றாவது சுட வேண்டிய திரிகர். இரண்டு கைகளால் பிடித்தே திரிகரை அழுத்த வேண்டும்.

எல்லாம் புரிந்துகொண்ட பின் சைகையால் எப்படி குறி வைக்க வேண்டுமென என்னிடம் காட்டிய பயிற்சியாளன் என்னைச் சுடச் சொன்னார். நான் அன்று என்னை மிரட்டிய பீலிக்காரனை நினைத்துக்கொண்டே மேகசினை உள்ளே திணித்தேன். பாதுகாப்பு விசையை கீழே இறக்கி ட்ரிகரை அழுத்தினேன். ‘டமார்’ என ஒரு சத்தம் கேட்டது. எங்கே துளைத்துள்ளது எனப் பார்த்தபோது தாளில் எங்கும் தடயத்தைக் காணோம். எனக்குப் பயிற்சியாளரைப் பார்க்க கூச்சமாக இருந்ததால் மீண்டும் துப்பாக்கியை இறுக்கப் பிடித்துச் சுட்டேன். தாள் புனிதம் கெடாமல் இருந்தது. பயிற்சியாளன் என்னிடம் ஏதோ சொல்ல முயல்வது புரிந்ததால் காதில் அணிந்திருந்த கவசத்தை நீக்கியபோது கேட்ட வெடிச்சத்தம் உடலை நடுங்க வைத்தது. அவசரமாகக் கவசத்தை அணிந்துகொண்டு அவனைப் பரிதாபமாகப் பார்த்தேன். அவன் உதட்டில் கொஞ்சமாய் கேலி நெழிந்தது. துப்பாக்கியின் மேல்புறம் உள்ள சைக்ட்ஸ் வழியாகக் குறி வைத்து அழுத்த வேண்டுமென அவன் சொல்வது புரிந்தது. சில முறை முயன்றும் தாளில் உள்ள மனிதன் புத்தம் புதிதாகவே என்னிடம் வந்து மீண்டும் சேர்ந்தான்.

பயிற்சியாளன் எனக்குக் கைக்கொடுத்தபோது எரிச்சலும் அவமானமும் மனதிலிருந்து முகத்துக்குச் சுர்ரென சீறியபடி எழுந்தது.  புத்தம் புதிதாக வந்த நீல நிற மனிதனை வீட்டில் வைத்துக்கொள்ளலாம் எனக் கொடுத்தபோது அதை குப்பைத்தொட்டியில் கிழித்தெறிந்தேன். ஆஸ்ட்டினும் அந்நகரம் உள்ள டெக்சஸ் மாநிலமும் இனி எனக்கு ஒத்துவராது என முடிவெடுத்ததெல்லாம் அதற்குப் பிறகுதான். 

கவிதா முதலில் ஒத்துக்கொள்ளவே இல்லை.  பையனின் படிப்பு, வேலைக்கான வசதி என என்னென்னவோ காரணம் சொன்னாள். புதிய இடத்திற்கு மாறுவது ச்சூவியைக் கஷ்டப்படுத்தும் என்றாள். நான் வீடு மாறியே தீர்வதென பிடிவாதமாக இருந்தேன். என் குடும்பத்துக்கு முழு பாதுகாப்பு கொடுப்பது என் கடமையென வாதாடினேன். அவள் ஒப்புதலுக்குக் காத்திருக்காமல் நியூஜெர்சியில் இருக்கும் என் நிறுவனத்தின் மற்றுமொரு கிளைக்கு வேலை மாறியதுடன் வாடகைக்கு வீடும் ஒன்று பிடித்திருந்தேன். 

வீடு மாறியது முதலே கவிதா சில ஏஜண்டுகளிடம் சொல்லி ஆஸ்டின் வீட்டில் தங்க வாடகைக்கு ஆள் தேடத் தொடங்கியிருந்தாள். ஆசை ஆசையாகக் கட்டிய வீடு. ஆள் இல்லாமல் பாழடைந்துவிடும் என பயந்தாள். அவள் விண்ணப்பித்த ஏஜண்டுகளில் ஒருவன் அழைக்கவும்தான் இந்தப் பயணம் நிகழ்ந்தது. இரண்டு நாட்களில் ஒருவர் வீடு பார்க்க வருவதாகவும் வீட்டுச்சாவியில் ஏதோ கோளாறு என்பதால் திறக்க முடியவில்லை என்றும் கூறியிருந்தான். உடனே தனக்கு மாற்று சாவியை ஏற்பாடு செய்யச்சொல்லி அவசரப்படுத்தினான். இரண்டு நாட்களில் சாவியை கொண்டு சேர்ப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பது ஒருபக்கம் இருக்க நான் நேரடியாகச் சென்று சாவியைக் கொடுப்பதால் வீட்டையும் ஒரு எட்டுப் பார்ப்பது நலமென கவிதா வலியுறுத்தியபடி இருந்தாள். அவளிடம் கடுமையாகப் பேசிவிட்டு ஃபோனை வைத்தவன் அடுத்து வந்த அழைப்புகள் எதையும் எடுக்கவில்லை.

ஏஜண்டிடம் மாற்றுச் சாவியைக் கொடுத்துவிட்டு வீடு திருப்தியான நிலையில் இருப்பதை உறுதி செய்துக்கொண்டப்பின்  தபால் பெட்டியைத் திறந்து பார்த்தேன். வழக்கமான சில வங்கி அறிக்கைகளோடு இரண்டு கடிதங்கள் இருந்தன. இரண்டுமே Kayla எனும் பெயருக்கு எழுதப்பட்டிருந்தன. கவிதாவின் பெயர்தான் அப்படித் தவறாக எழுதப்பட்டதாக நினைத்துக்கொண்டு காரில் அமர்ந்தேன். தனக்குக் கடிதங்கள் வந்தால் அதைப் பிரித்துப்படிக்கும் அனுமதியை கவிதா எனக்குக் கொடுத்திருந்ததால் சாவகாசமாகப் பிரித்தேன். நான் செய்த சாதனையுடன் கடித்தத்தின் சாரத்தையும் அவளுக்கு அழைத்துச் சொல்ல ஆர்வமாக இருந்தது. அதன் வழியாக அவளைச் சமாதானம் செய்யவும் முடியும்.

கடிதத்தைப் பிரித்தபோது அது அவளுக்கானதல்ல எனப் புரிந்தது. அதை கெய்லா என உச்சரிக்க வேண்டுமென உணர்ந்தேன். உள்ளே ஒரு கடிதமும் நூறு டாலரும் இருந்தது. கடிதத்தில் சுருக்கமாக ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். உனக்குப் பிடித்ததை வாங்கிக்கொள். – பாட்டி’ என ஆங்கிலத்தில் முத்து முத்தான கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. கொஞ்சம் பரபரப்படைந்து இன்னொரு கடித்தத்தையும் பிரித்தேன். ‘இனிய கிறித்துமஸ் வாழ்த்துகள். உனக்குப் பிடித்ததை வாங்கிக்கொள் – பாட்டி’ என்ற கடித்தத்துடன் இன்னொரு நூறு டாலர் இருந்தது. இரண்டு கைகளிலும் நூறு நூறு டாலர்களை வைத்துக்கொண்டு கொஞ்ச நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன். 

மீண்டும் கடித முகவரியைப் பார்த்தபோது சட்டென ஒன்று புரிந்தது. கதவு எண்ணும் வீதியும் சரியானதுதான். ஆனால் தபால்காரன் அப்பார்ட்மெண்ட் எண்ணை கவனிக்கவில்லை. எனவே அருகில் உள்ள அப்பார்ட்மெண்டு வாசிக்கு வந்தக் கடித்தத்தை என் வீட்டில் நுழைத்துவிட்டான்.

முதலில் நான் அந்தப் பணத்தை ஏதாவது சமூக உதவி இயக்கத்துக்கு நன்கொடையாக வழங்கிவிடலாம் என்றே நினைத்தேன். ஆனால் கெய்லா எனும் பெண்ணுக்கு அந்தப் பணம் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனும் குழப்பம் வந்ததால் அந்த வீட்டைத் தேடிச் செல்ல முடிவெடுத்தேன்.

முதலில் அது எளிது என நினைத்திருந்த எனக்கு முதல் வீட்டுக்குச் சென்றபோதே தடுமாற்றம் ஏற்பட்டது. வீடு ஐந்தாவது மாடியில் என கண்டுப்பிடிக்க முடிந்த அளவுக்கு அது எந்த கட்டடத்தில் உள்ளது என்பதை அறிவதில் தடுமாற்றம் ஏற்பட்டது. முதல் கட்டடத்தில் கெய்லா எனும் பெயரைச் சொல்லி விசாரித்தபோது விசித்திரமாகப் பார்த்தனர். நான் கடிதங்களைக் காட்டி நிலையை விளக்கியப்பின்னர் அப்படி ஒரு பெயரில் அங்கு யாருமில்லை எனக் கூறி வழியனுப்பி வைத்தனர். முதல் வீட்டில்  என் நிலையை விளக்கிய அனுபவத்தை உள்வாங்கிக்கொண்டு அடுத்தக் கட்டடத்தில் உள்ளவர்களைப் பதற்றப்படுத்தாமல் முன்னமே நான் கொண்டு வந்திருந்த விபரங்களைக் கூறினேன். அப்படி யாரும் இல்லை என்றே பதில் வந்தது. கடிதத்தை வாங்கிப்பார்த்த இளம் பெண் ஒருத்தி இதில் தெளிவான விபரம் இல்லை என்றும் தபால் நிலையத்திலேயே கொடுப்பது சிறந்ததென்றும் கூறினாள். 

எனக்கு அதில் அவ்வளவு உடன்பாடில்லை. கடிதத்தில் இருந்த பாட்டியின் அன்பு கனத்துக்கிடந்தது. இதெல்லாம் ஏதோ என்னால் நிகழ்ந்த தவறுபோல எண்ணுவதை நிறுத்த முடியவில்லை. கவிதாவிடம் அழைத்துச்சொன்னால் ‘லூசா நீ’ என்பாள்.

மூன்றாவது வீட்டைத் தேடிச்சென்ற ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து நேராக நியூ ஜெர்ஸிக்Kஏ சென்றுவிடலாம் என நழுவியபோதுதான் அந்த ஆங்கிலேயனின் கைகள் என் தோள்களைத் தொட்டன.

“என்ன வேண்டும்?” என்றான்.

விவரத்தைச் சொன்னேன். அவன் கண்களைப் பார்க்கத் தயக்கமாக இருந்தது. அந்தச் சம்பவத்திற்குப்பின் பொதுவாக அப்படி ஒரு இயல்பு தொற்றிக்கொண்டிருந்தது. கடித உரையை வாங்கிப் படித்தவன்“என்னுடன் வா” என அழைத்தான். எனக்கு அவனிடம் எதுவும் கேட்கத்தோன்றாததால் பின் தொடர்ந்தேன். இரண்டு கட்டடங்கள் தள்ளி இருந்த மற்றுமொரு கட்டடத்தில் அவன் பின்னால் ஏறினேன். ஐந்தாவது மாடியை அடைந்தவுடன் ஒரு வீட்டின் முன் நின்றான். அந்த வீடு அடைத்துக்கிடந்தது. பக்கத்து வீட்டில் இருந்த ஒரு முதியவரிடம் “இந்த வீட்டில் கெய்லா எனும் பெண் இருக்கிறாளா?” என்றான். 

“ஒரு சிறுமி இருக்கிறால். ஐந்து வயது இருக்கலாம். அவள் பெயர் கெய்லா என ” என கிழவர் பதில் கூறவும் இளைஞன் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே “இந்த வீடுதான்…. நாம் காத்திருக்க வேண்டாம். கீழே கதவின் அடியில் நுழைத்துவிடு,” என்றான்.

நான் ஒரு மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவனைப் போல இரு கடித உரைகளையும் அடுத்தடுத்தாக உள்ளே நுழைத்தேன். அதன் பின்னர்தான் எனக்கொன்று தோன்றியது.

“ஐந்து வயது பிள்ளைக்கு நூறு டாலரை அனுப்பி யாராவது விரும்பிய பொருள் வாங்கச் சொல்வார்களா? ஒருவேளை இது அவளது பணமில்லாமல் இருந்தால்,” என்றேன்.

என் தோளில் கை வைத்த அவன் “பல மைல்களுக்கு அப்பால் இருந்து வந்த ஒருவன், வீடு வீடாக அலைந்து உரியவரிடம் பணத்தைச் சேர்க்க முயலும் அற்புதம் இந்த உலகில் நடக்கும்போது ஏன் இந்த வீடு கெய்லாவுடையதாக இருக்கும் அற்புதம் நிகழக்கூடாது.” என்றான்.

நான் நிதானமாக மூச்சுவிடுவதை உணர்ந்தேன். கவிதாவுக்கு அழைத்து “உனக்குத் தெரியுமா … இது ஓர் அற்புதமான நாள்” என்றேன். 

(Visited 243 times, 23 visits today)