அஞ்சலி: சீ. முத்துசாமி வேண்டிய தனிமை

சீ. முத்துசாமி எனும் எழுத்தாளரை நான் முதன்முறையாக சந்தித்தது 2005இல் நடைபெற்ற ஆஸ்ட்ரோ நாவல் போட்டியின் பரிசளிப்பு விழாவில்தான். அவர் எழுதிய ‘மண்புழுக்கள்’ நாவலுக்கு முதல் பரிசும் நான் எழுதிய ‘ஞானத்தின் வாசலிலே’ எனும் நாவலுக்கு இரண்டாவது பரிசும் கிடைத்தது அந்தப் போட்டியில்தான். பரிசளிப்புக்கு முன்பே தனியாக நின்றுக்கொண்டிருந்த அவரிடம் சென்று என்னை அறிமுகம் செய்துக்கொண்டேன். எவ்வித ஆர்வமும் இல்லாமல் பேசினார். பதில்கள் எல்லாம் ஏசுவதுபோலவே வெடுக்கென இருந்தன. அப்போது என்னை இலக்கியச் சூழலில் பலருக்கும் தெரியாது. நான் ‘நயனம்’, ‘மன்னன்’ போன்ற வெகுசன இதழ்களில் எழுதிக்கொண்டிருந்தேன். எனக்கென தனி வாசகர் பட்டாளம் இருந்தது. முத்துசாமி அந்த வெகுசன இலக்கியச் சூழலுக்கு அந்நியமானவர். வெகுசன இதழ்களில் எழுதுவோரைப் பொருட்டாகக் கருதாதவர்.

முத்துசாமியிடம் பேச வேண்டும் எனும் ஆர்வம் சு.யுவராஜன் வழியாகவே எனக்கு ஏற்பட்டிருந்தது. எங்கள் உரையாடல்களில் மலேசியாவில் முதன்மையான தமிழ் எழுத்தாளர் சீ. முத்துசாமிதான் என யுவராஜன் குறிப்பிட்டபோது அவரைச் சந்திக்கும் ஆவல் எழுந்தது. எனக்கு யுவராஜனின் இலக்கிய மதிப்பீடுகளின் மீது ஏற்புண்டு என்பதால் சீ. முத்துசாமியின் புனைவுலகம் குறித்து அவர் சிலாகிப்பதை ஆர்வமாகவே கேட்டுக்கொண்டிருப்பேன். உண்மையில் நவீன இலக்கிய வாசகர்கள் மத்தியில் சீ. முத்துசாமியை அறிமுகப்படுத்தியதில் யுவராஜனின் பங்கு அதிகம். அவர்கள் இருவருக்கும் நல்லத் தொடர்பு இருந்தது. 2006ஆம் ஆண்டு ‘காதல்’ இதழ் உருவானபோது சீ.முத்துசாமியை அவ்விதழுக்காக நேர்காணல் செய்து அவர் தொடர்ந்து காதல் இதழுக்கு படைப்புகளை வழங்க வழியமைத்தவரும் யுவராஜன்தான்.


காதல் இதழுக்கு சீ. முத்துசாமி எழுதத் தொடங்கியப்பின்னர்தான் அவருடன் உரையாடுவதற்கான வாய்ப்பு அமைந்தது. ஒவ்வொரு இதழையும் முழுமையாக வாசித்துப் பாராட்டுவார். சில சமயம் உணர்ச்சி பொங்க பேசுவார். அப்போது அவர் கெடா மாநில எழுத்தாளர் சங்கத் தலைவர் போட்டிக்கு நின்றதால் அதை ஒட்டிய சர்ச்சைகளின் சாரலும் காதல் இதழில் இடம்பெற்றிருந்தன. எனவே வழக்கமான பூசல்களும் கொதிப்புகளும் அவ்வப்போது எட்டிப்பார்க்கவே செய்தன. எல்லாவற்றையும் கடந்து அவர் ‘காதல்’ இதழுக்கு ‘செம்புழுதி மழைச்சாரலில் கரைந்துருகும் காலம்’ எனும் தொடர் எழுதத் தொடங்கியது அவ்விதழின் தரத்தை அதிகரித்தது. அவர் அவ்வப்போது கொடுக்கும் நெருக்கடிகளின் கசகசப்புகள் எல்லாம் அவர் எழுத்தை வாசிக்கும்போது காணாமல் போயின. காதல் இதழுக்கு சீ. முத்துசாமியின் படைப்புகள் மலேசியாவில் உருவாகும் இலக்கிய இதழுக்கான தனித்த அடையாளத்தை வழங்கின.

முத்துசாமியை நான் நெருக்கமாக அறிந்துகொண்டது 2007இல் வல்லினம் உருவானபோதுதான். முதல் வல்லினம் அறிமுகக் கூட்டம் கெடா மாநில எழுத்தாளர் சங்க ஏற்பாட்டில் முத்துசாமி தலைமையில்தான் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்தபின்னர் அவர் வீட்டில்தான் தங்கினோம்; பேசினோம்; விவாதித்துக்கொண்டோம்.

சீ. முத்துசாமி கோபக்காரர் என பலரும் அறிந்ததுதான். அந்தக் கோபங்களெல்லாம் மனிதர்கள் மீது நம்பிக்கை இல்லாததால் உருவானவை. சக மனிதர்கள் எப்போது வேண்டுமானாலும் ஏமாற்றக்கூடியவர்கள் என அவர் ஆழமாகவே நம்பினார். அவர் ஆரம்பத்தில் பணியாற்றிய காப்புறுதி நிறுவனம் வழங்கிய கசப்பான அனுபவங்கள் அவர் மனதில் அத்தகைய என்ணத்தை ஏற்றியிருந்தது. ஆனால் அவருக்கு தன் வற்றாத அன்பைச் செலுத்த வேறு உயிர்கள் தேவையாக இருந்தன. அவர் நாய்களை அனைத்துக்கொண்டார். நாய்கள் மட்டுமே அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாக அமைந்தன. வீட்டில் வளர்க்கும் நாய்களன்றி தெரு நாய்களுக்கும் தேடிச் தேடி உணவிட்டார்.

முதலில் நான் அவரது மனநிலையை அறியாததால் கொதிக்கும் அவர் சொற்களைப் பார்த்துக்குழம்பியிருக்கின்றேன். இரண்டு சம்பவங்களை நினைவுக்கூறலாம்.

முதலாவது, கே. பாலமுருகன் வல்லினத்துக்கு எழுதிய ‘வலியுறுத்தல் கடவுள்களின் படுக்கையில் நான் சேசவன் குன்மா பாதுகாவலர்’ சிறுகதை 2007 ஆண்டு சீ. முத்துசாமியின் மேற்பார்வையில் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நான் அக்கதையை வாசித்துவிட்டு கடைசி பத்தியை நீக்கினேன். நீக்கியதற்கான காரணத்தையும் பாலமுருகனிடம் சொல்லியிருந்தேன். அன்று இரவு முத்துசாமி என்னை அழைத்தார். தான் அனுப்பிய கதையை எப்படி மாற்றியமைக்கலாம் என்பதாக அவர் கேள்வி இருந்தது. முத்துசாமியின் கோபத்தை நான் முதன்முறையாக எதிர்க்கொண்டது அப்போதுதான். கொஞ்சம் பதற்றமடைந்தாலும் மிகவும் பொறுமையாக அந்தக் கதை முடிவுக்குப் பிறகும் தொடரும் வாக்கியங்களால் புனைவில் என்ன சிக்கல் ஏற்பட்டுள்ளது என விளக்கியப்பின் “ஆமாப்பா… சரிதான்” என அமைதியடைந்தார். ஆனால் அடுத்த சில மாதங்களில் ஒரு தவறு செய்து அவரிடம் மாட்டிக்கொண்டேன்.

சீ. முத்துசாமியின் ‘மண்புழுக்கள்’ நாவல் குறித்து ரெ. கார்த்திகேசு எழுதியக் கட்டுரை வல்லினத்தில் இடம்பெற்றிருந்தது. சந்துரு வடிவமைப்பாளர். அப்போது Pagemaker எனும் மென்பொருள் வழியாகவே பக்கங்களை வடிவமைப்போம். அதில் கட்டுரையின் கடைசி பகுதி விடுபட்டுவிட்டது. இதழ் வந்த பிறகும் நான் அதை கவனிக்கவில்லை. அவருக்கே வந்ததே ஒரு கோபம். “எப்படி அந்தக் கடைசி பத்தி காணாமல் போனது?” எனக் குடைந்தெடுத்தபோதுதான் நான் அதை கவனித்தேன். பக்க வடிவமைப்பில் நிகழ்ந்த தவறை விளக்கினேன். மீண்டும் மாலையில் அழைத்து, “அதெப்படி நீ கவனிக்காமல் இருக்கலாம்?” என்றார். நான் பக்க வடிவமைப்புக்குக் கட்டுரையை முழுமையாக வழங்கியதையும் வடிவமைப்பாளர் விடுபடலால் நிகழ்ந்த தவற்றையும் கூறி, எப்படி இருந்தாலும் தவறுக்கு நான் பொறுப்பேற்பதாக மன்னிப்பும் கேட்டேன். சமாதானம் ஆனவர் மீண்டும் இரவில் அழைத்தார். பக்க வடிவமைப்பில் எப்படி சிக்கல் ஏற்படும் என தன்னிடம் விளக்கச் சொன்னார். நான் என் சொற்களால் பக்க வடிவமைப்பை விளக்கிச் சொன்னதுடன் அந்த விடுபட்ட பத்தியை அடுத்தமாதம் பிரசுரிப்பதாக வாக்களித்து ஒருவாரு சமாதானம் செய்தேன்.

உண்மையில் முத்துசாமியைச் சமாளிப்பது எனக்கு பெரும் சவாலாகவே இருந்தது. 2009இல் முதல் கலை இலக்கிய விழாவை ஏற்பாடு செய்துக்கொண்டிருந்த தருணத்தில் நிகழ்ச்சிக்கு முதல் நாள் இரவு அழைத்தவர் நிகழ்ச்சியில் தனக்கு உவப்பில்லாதவற்றைக் கூறியவர், அவற்றைச் சரிசெய்யவில்லையென்றால் தான் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாட்டேன் என்றார். முதல் கலை இலக்கிய விழாவைச் செய்யும்போது நான் கிட்டத்தட்ட பைத்தியமாகியிருந்தேன். உடல் உழைப்பு ரீதியாக நான் கேட்டவுடன் உதவக்கூடியவராக மஹாத்மன் மட்டுமே இருந்தார். ஓவியக் கண்காட்சி, நிழல்பட கண்காட்சி, மூன்று நூல்களின் பதிப்பு – வெளியீடு, மேடை நாடக ஒளிபரப்பு எனப் பல்வேறு அங்கங்களுடன் ஏற்பாடாகியிருந்த நிகழ்ச்சியில் இப்படி ஒரு நெருக்கடி வந்தபோது அடுத்து என்ன செய்ய வேண்டும் எனப் புரியவில்லை. நான் என்னைக் கைவிடப்பட்டவனாக உணர்ந்தேன். மறுநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோ. முனியாண்டியுடன் கோலாலம்பூரில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்துத் தங்கியியிருந்த முத்துசாமியின் காட்டமான பேச்சு நிலைகுழையச் செய்தது. எந்த முடிவும் எடுக்க முடியாமல் அவர் கேட்டுக்கொண்டதைச் செய்தேன். 

ஆனால் அது என் நிலைப்பாட்டின் மீதும் செயல்திடத்தின் மீதும் எனக்கே அவமதிப்பை உண்டாக்கியது. இனி வாழ்நாளில் அப்படி ஒரு தவறை செய்வதில்லை என்பதில் உறுதியாக முடிவெடுத்தது அப்போதுதான்.

முத்துசாமியுடன் நட்பு தொடர்ந்தது. தொடர்ந்து வல்லினத்திற்கு சில சிறுகதைகளை வழங்கினார். நீண்ட இடைவெளிக்குப் பின் இலக்கிய உலகில் நுழைந்த அவருக்கு வல்லினம் பெரும் பாட்டையை அமைத்துக்கொடுத்தது. அவரை நாங்கள் கொண்டாடி மகிழ்ந்தோம். ஆனால் மீண்டும் எங்களுக்குள் சிக்கல் உண்டானது.

முதலில் நான் ஒரு விசயத்தில் தெளிவாக இருந்தேன். வல்லினம் இதழைத் தொடங்கியபோது எனக்கு 25 வயது. எனவே ஆலோசனைகளைக் கேட்டு நடப்பதில் நான் எவ்வித தயக்கமும் காட்டவில்லை. ஆனால் அவரவரின் தனிப்பட்ட இலக்கிய விரோதங்களை இதழில் பிரதிபளிக்க நான் தயாராக இல்லை. எனவே ஒருமுறை சீ. முத்துசாமி அனுப்பிய குறுந்தகவலுக்குக் காட்டமான ஒரு பதிலை அனுப்பினேன். இப்போது அதை மனதில் சொல்லிப்பார்த்தாலும் அச்சொல்லின் காத்திரம் குறைவதாகத் தெரியவில்லை. ஆனால் அந்த வயதில் கிட்டத்தட்ட அனைவரிடமும் அப்படிப் பேசக்கூடியவனாகவே இருந்தேன். இதழ் தயாரிக்கப் பணம் தேடி, படைப்புத் தேடி, அச்சகம் அலைந்து, நூல்களைத் தபாலில் சேர்த்து, தூக்கம், பணம், உடல்நலமென எல்லாவற்றையும் மெல்ல மெல்ல இழந்துகொண்டிருந்த ஒருவனின் குரல் அது.

முத்துசாமி நான் திட்டி அனுப்பிய அந்தக் குறுந்தகவலை எல்லாருக்கும் அனுப்பினார். நான் இப்படி ஒரு வார்த்தை பேசிவிட்டேன் என இலக்கியச் சூழலில் அறிவிக்க முயன்றார். நான் ‘அப்படித்தான் பேசுவேன்’ என எல்லாருக்கும் பதிலளித்தேன். எனக்கு முத்துசாமிக்கும் இடையில் நீண்ட இடைவெளி விழுந்தது.

***

முத்துசாமியுடன் உரையாடல் நின்றுபோனாலும் அவரது இலக்கிய ஆக்கங்கள் குறித்தும் ஓர் இலக்கியவாதியாக அவர் தன்னை முன்வைக்கும் விதம் குறித்தும் எனக்கு நேர்மறையான எண்ணங்களே இருந்தன.

முத்துசாமி தொடக்கம் முதலே ஓர் இயக்கவாதியாகச் செயல்பட்டு வந்துள்ளார். எம்.ஏ.இளஞ்செல்வனுடன் இணைந்து, ‘நவீன இலக்கியச் சிந்தனை’ எனும் அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் புதுக்கவிதை, சிறுகதை என படைப்பிலக்கியம் எழுதவும் அதன் புதியப்போக்குகளை அறிந்து பயிலவும் தீவிரமாகச் செயல்பட்டார். அதன் உச்சமாக முதல் புதுக்கவிதை மாநாடு ஒன்றை 1970களில் ஏற்பாடு செய்த குழுவில் இவரும் இடம்பெற்றார். பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதத் தொடங்கியபோதும் கெடா மாநில எழுத்தாளர் சங்கத் தலைவராகப் பொறுப்பேற்று இலக்கியம் சார்ந்த முன்னெடுப்புகளைச் செய்தார். முத்துசாமிக்கு இலக்கியச் சூழல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனும் எண்ணம் தொடக்கம் முதலே இருந்தது. சூழல் ஆரோக்கியமாக இருந்தால் படைப்புகள் தரமாக வரும் எனும் அவரது நம்பிக்கையை என்னிடம் பலமுறை பகிர்ந்துள்ளார். ஆனால், இயக்கத்தில் பலருடன் இணைந்து இயங்கும் மனநிலை அவரிடம் இல்லை. எனவே ஒரு காலக்கட்டத்திற்குப் பின் படைப்பாளியாக மட்டுமே தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். அதுவே அவரை முன்னோடியாக மாற்றியது.

முன்னோடி என்பதற்கும் மூத்த எழுத்தாளர் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. எனவே சீ. முத்துசாமியை மலேசிய நவீன இலக்கியத்தின் முன்னோடி என கவனமாகவே சொற்களைப் பயன்படுத்துகிறேன். திட்டவட்டமான தீர்வுகள், சமூக அவலங்களை முன்வைக்கும் கதைக் கரு, முடிவுகளில் திருப்பம் வைக்கும் உத்தி, கருத்துகளைப் பிரதிநிதிக்கும் கதாபாத்திரங்கள் எனும் சட்டகங்களில் மாட்டிக்கொண்டிருந்த மலேசிய சிறுகதைகளுக்கு மத்தியில், அவர் எழுதியவை முற்றிலும் புதிய பாணியிலான எழுத்துகள். குறியீடுகள் மூலம் வாசகன் அந்தரங்கமாக வேறொரு கதையைப் பின்னி உருவாக்கும் சாத்தியங்களையும் நுண்மையான அகவய சித்திரங்களால்  வாழ்வின் அர்த்தமற்றுப் போகும் தருணங்களின் இருளையும் அதற்குரிய மொழியில் புனைவாக்கினார்.  1990களுக்குப் பின் அவரது மறுபிரவேசத்தில் எழுதிய ‘கல்லறை’, ‘வழித்துணை’, ‘வனத்தின் குரல்’ போன்ற சிறுகதைகள் சீ. முத்துசாமியை மலேசிய நவீன இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர் என்பதற்கான அழுத்தமான சான்றுகளாகின. 

சீ. முத்துசாமியின் அத்தனை படைப்புகளையும் வாசித்துள்ளவன் எனும் நிலையில் அவரது புனைவுலகத்தின் பேசுபொருளை இவ்வாறு தொகுத்தளிக்கலாம்.

அ. குடும்ப அமைப்பில் பெண்ணின் மேல் ஏற்றி வைக்கப்பட்டுள்ள புனிதங்களின் இறுக்கங்களை அவளாக முன் வந்து தளர்த்தும்போது ஏற்படப்போகும் சிதைவு குறித்த அச்சம்.  

ஆ. பெண்களின் உளவியல்மேல், ஆண்கள் கட்டிலிருந்து விடுபட்டு அவர்கள் விரிக்கும் சிறகின் மேல் உள்ள பதற்றம்.

இ. சக மனிதன் எப்போது வேண்டுமானாலும் ஒருவனுக்கு நரகமாகிவிடலாம். தனிமையே மனிதத் தன்மையை தக்க வைத்துக்கொள்ளும் ஆயுதம் எனும் நம்பிக்கை.

ஈ. ஒரு மனிதன் (குறிப்பாக ஆண் – பெண்) ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொண்டே வாழ்ந்து முடிக்க வேண்டும். வாழ்வின் தீராத இந்த இணைப்பின் முரணை வேறு வழியின்றி ஆனந்தம்போல ஆடி முடிக்க வேண்டும் என்ற வெறுமையில் வரண்ட புன்னகை.

தோட்டச்சூழலை பின்னணியாகக் கொண்டு, அந்த நிலத்தின் அசல் தன்மைக்கு நெருக்கமான மனிதர்களை அறிமுகம் செய்தாலும் அவர்கள் வழியாக முத்துசாமி ஆராய நினைத்தது இந்த நான்கு அம்சங்களைத்தான்.

***

முத்துசாமிக்கு ஜெயகாந்தன் ஆதர்சம். ஆனால் அவர் ஜெயகாந்தனிடம் எடுத்துக்கொண்டது எழுத்தாளனுக்கான நிமிர்வை. மொழியை எடுத்துக் கொண்டது லா.ச.ராமாமிர்தத்திடமிருந்து. ஒன்றைச் சொல்லவந்து அதன் நுனியைப் பற்றிக்கொண்டே மற்றுமொரு கையால் சுற்றியிருப்பதை விலாவாரியாகச் சிலந்திவலைபோல பிண்ணிக்காட்டும் சூட்சுமத்தை அவர் புனைவுகளில் கையாண்டார். மு.வாவின் எழுத்து நடையை வாசித்துக்கொண்டிருந்த மலேசிய இலக்கிய வாசகர்கள் மத்தியில் அவர் ‘இதுதான் என் எழுத்து, இப்படித்தான் இருக்கும்’ என சற்று திமிராகவே தன் படைப்பை முன் வைத்தார்.

தீவிர எழுத்தாளனின் திமிர் அது. அவன் வாசகனைத் தேடிச் செல்வதில்லை. வாசகன் தன்னை வந்தடைவான் என நம்புகிறான். அந்த நம்பிக்கை உள்ளவனே ஓர் இலக்கியச் சூழலில் புதுமைகளைச் செய்யக்கூடியவன். அவனே கலைஞன்.

ஆனால், முத்துசாமி தன்னிடம் வைத்திருந்த நிமிர்வு சக்தி அறவாரியத்தின் மூலம் நூல் வெளியிட்டபோது கேள்விக்குறியானது. ஏற்கனவே என்னிடம் கோபத்தில் இருக்கும் முத்துசாமியுடன் மேலும் இடைவெளி உண்டாகும் என அறிந்தே அத்திட்டத்தில் அவர் பங்கு பெற்றது குறித்து கட்டுரை எழுதினேன். ஆளும் கட்சிக்கு ஓட்டு வாங்கி தரும் நோக்கில் திட்டமிடப்பட்டு, எழுத்தாளர்களை அரசுக்கு நன்றியுள்ளவர்களாக மாற்ற வடிவமைக்கப்பட்ட அந்தத் திட்டத்தில் முத்துசாமியின் நூல் வெளிவருவது எனக்கு கடும் ஒவ்வாமையை உண்டாக்கியது. முத்துசாமியின் இலக்கிய அறம் குறித்தும் அவரது அரசியல் நிலைபாடு குறித்தும் கேள்வி எழுப்பினேன். எங்களின் இடைவெளியை நானே விசாலமாக்கிக்கொண்டேன்.

***

சீ. முத்துசாமியுடன் மீண்டும் பேசும் சந்தர்ப்பம் அமைந்தது விஷ்ணுபுரம் விருது அறிவிப்பின்போதுதான். ஜெயமோகன் அந்த விருதை மலேசியாவில் அறிவித்தபோது அவரும் அங்கு இருந்தார். நெருங்கிச்சென்று கைக்குலுக்கி என் வாழ்த்துகளைச் சொன்னேன். கட்டியணைத்துக்கொண்டார். அப்போதே ”நீ கட்டாயம் வரணும்,” என்றார்.

விழாவுக்கான அவரது ஆவணப்படத்தை இயக்கும் பொறுப்பை நானே முன்வந்து எடுத்துக்கொண்டேன். கோலாலம்பூருக்கும் கெடாவுக்கும் ஐந்து மணி நேரப் பயணம். கிட்டத்தட்ட மூன்று முறை பயணம் செய்து மிகச்சிறந்த ஆவணப்படம் ஒன்றை நான், அ.பாண்டியன், செல்வன் ஆகியோர் இணைந்து உருவாக்கினோம். அவரது அந்தரங்கமான மனநிலையுடன் உரையாடி அவரை அந்நேர்காணல் வழியாக உடையச் செய்தோம். சமரசம் இல்லாமல் வாழும் வாழ்வில் தன் குடும்பத்தை பனையம் வைத்ததைச் சொல்லி அழுதார். ‘சக்தி அறவாரியம்’ குறித்தும் விமர்சன பூர்வமான கேள்விகளை முன்வைத்தேன். அனைத்திற்கும் பதிலளித்தார். அத்தனை இறுக்கங்களும் அகன்ற முத்துசாமி வெளிபட்டபோது ஆவணப்படம் முழுமையானது. விழாவில் கலந்துகொண்டு சீ. முத்துசாமியின் படைப்புலகம் குறித்து பேசவும் செய்தேன்.

சீ. முத்துசாமி ஆவணப்படம்

எல்லாமே நல்லபடியாகப் போய்க்கொண்டிருந்தது.

தொடக்கத்தில் சீ. முத்துசாமி கோலாலம்பூருக்குச் சொந்த வேலையாக வந்தாலும் எங்கள் வீட்டில்தான் தங்குவார். கடைசி பேருந்து பிடித்து அவரை அனுப்பி வைப்பேன். அப்போது அவர் மெல்லிய போதையில் இருப்பார். சக பயணிகளிடம் என்னை தன் மகன் எனச் சொல்வார். அப்படியான நெருக்கம் மீண்டும் எங்களுக்குள் உருவாகியிருந்தது.

விஷ்ணுபுரம் விருது பெற்ற அவருக்கான பாராட்டு விழா ஒன்றை கோலாலம்பூரில் ஏற்பாடு செய்து அவர் படைப்புகள் குறித்த உரையாடல் ஒன்றை வல்லினம் வழியாக ஏற்படுத்தினோம். முத்துசாமி மலேசிய இலக்கியத்திற்கு வழங்கிய கொடையை மீண்டும் வாசகர்களின் நினைவுகளில் ஏற்றினோம். முத்துசாமி மீண்டும் உற்சாகமாகச் செயல்படத் தொடங்கினார். கௌஜின் ஜியாங்கின் சிறுகதைகளை அவர் தமிழுக்கு மொழியாக்கம் செய்து தொடர்ந்து அனுப்பினார். ஒவ்வொரு கதையையும் கவனமாக வாசித்து அவற்றைச் செறிவாக்கி அனுப்பும் போதெல்லாம் உற்சாகம் அடைவார். ”நீ நல்ல எடிட்டருப்பா,” என்பார்.

ஆம்! அனைத்தும் நலமே சென்றது.

2019இல் அவரது மலைக்காடு நாவல் வந்தபோது அதை மிகவும் ஆர்வத்துடன் வாசித்தேன். பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டது. அந்நாவல் குறித்து விமர்சனக் கட்டுரை ஒன்றை எழுதினேன். எனக்குத் தெரியும் அது அவரைச் சீண்டுமென. அதற்குப் பின்னர் அவர் என் அழைப்புகள் எதற்கும் பதிலளிக்கவில்லை. எந்த புலன கேள்விகளுக்கும் பதில் இல்லை. யார் வழியாக அணுகினாலும் மௌனத்தை வழங்கி அனுப்பி வைத்தார். அதன் பின்னர் 2022 இல் வந்த ‘ஆழம்’ கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அது முத்துசாமியின் எழுத்தல்ல. அந்த எழுத்தாளனை அவர் எங்கோ தொலைத்திருந்தார். அதையும் கடுமையாக விமர்சனம் செய்து எழுதினேன்.

இங்கு சிலர் வன்மத்தினால் நான் இலக்கிய விமர்சனம் செய்கிறேன் எனச் சொல்வதுண்டு. அந்த அரைவேக்காடுகள் அறிந்தது அது மட்டுமே. நான் என்னை நேசித்த, என்னை தன் மகனாக பாவித்த சீ. முத்துசாமியையும் விமர்சனம் செய்யக்கூடியவன்தான். முதல் வல்லினத்தை வெளியீடு செய்த, படைப்புகளால் இதழை அலங்கரித்த, மொழிபெயர்ப்புகளால் வளம் சேர்த்த, ஒரு பெரும் படைப்பாளி என்னை விட்டு விலகுவார் என அறிந்தே அதை செய்தேன். அத்தனை வலியுடன்தான் அதை நான் செய்கிறேன். அதைச் செய்வதுதான் இலக்கிய அறம். அப்படி எழுதாமல் போனால் உறவுகளை சம்பாதித்து எனக்குள் முடங்கிப்போனவனாவேன். அந்த தலைமுறை உருவாவதை முத்துசாமியும் விரும்ப மாட்டார். இலக்கியம் அறிந்த எவரும் விரும்பமாட்டார்கள்.

***

என்னைப் பொறுத்தவரை சீ. முத்துசாமி இலக்கியச் சூழலில் நிறைவான வாழ்வை வாழ்ந்தவர். மண்புழுக்கள் அவர் மலேசிய இலக்கியத்திற்கு வழங்கிய கொடை. கௌஜின் ஜியாங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை நூல் மொழிபெயர்ப்புக்கு அவர் வழங்கிய பங்களிப்பு. அவரது சிறுகதைகள் மலேசியாவில் என்றுமே கவனத்தில் கொள்ளப்படக்கூடியவை.

எழுத்தாளர்கள் எழுதுவதை நிறுத்தியப்பின்னர் கிட்டத்தட்ட அவர்கள் அளவிலேயே இறந்தவர்கள் ஆகிறார்கள். ஒரு தேவதை தன் கையில் இருக்கும் மந்திரக்கோள் வெற்றுக்கழியாக உணரும் தருணம் மிஞ்சி இருக்கும் இறக்கைகளைக் கொண்டு தயக்கத்துடன் உலகைச் சுற்றி வருவதுபோல சுற்றி வருகிறார்கள்.

முத்துசாமி அதை செய்யவில்லை. ஆழம் நாவல் வந்தபோதே தன் மந்திரக்கோளில் ஒளி இல்லை என்பதை அவர் உள்ளூர உணர்ந்திருக்க வேண்டும். அந்த நிமிடமே அவர் தன் இறக்கைகளையும் உதிர்த்துவிட்டு தனது தனிமைக்குள்  சென்று அடங்கிக்கொண்டார். அவருக்கு அது போதுமானதாக இல்லை. அவர் கதைகளை மலாயில் மொழியாக்கம் செய்ய எத்தனை முயற்சிகளை யார் யார் மூலம் எடுத்தும் பலனில்லை. அவர் எஞ்சி இருந்த காலங்களில் மேலும் மேலும் தனிமைக்காகக் காத்திருந்தார். அது மார்ச் 11 அவரை வந்தடைந்தது. அவர் தான் வாழ்நாளில் தேடியதை மௌனமாக ஏற்றுக்கொண்டார்.

(Visited 496 times, 1 visits today)