கொயோட்டி கதை அருமை. நாங்கள் வசித்த குடியிருப்புப் பகுதியில் ஸ்கங்க் மற்றும் ரக்கூன் நடமாட்டம் எப்போதும் உண்டு. வீட்டின் அருகே இருந்த மலையின் பெயரே கொயோட்டே ஹில்ஸ் தான். அடுத்தவர் பசிக்கு உணவிட்ட பழகிய தாய் மனதிற்கு அமெரிக்க வாழ்க்கை ஒரு பெரும் தடைச்சுவரென எழுந்து நிற்பதும், அதை மீறி கொயோடேவிற்கும் உணவிட்டு அன்னையென எழுந்து நிற்பதும் நெகிழ வைக்கிறது.
சாரதா
அமெரிக்கப் பழங்குடியினரால் புத்திசாலியாகவும் தந்திரசாலியாகவும் வலிமையின் அடையாளமாகவும் போற்றப்படும் கய்யோடியை ஐரோப்பிய காலனிய மரபு கோழையாகவும் நம்பிக்கைத் துரோகியாகவும் கட்டமைத்து வந்தது. நவீன் இந்தக் கதையில் ஸான் ஹோஸே நகரம் அம்மாவை அதே இரு விழிகளால் பார்க்கிறது.
கதை சொல்லியின் அம்மா வயதின் மறதியாலும் அறியாமையாலும் மனைவிக்கும் அக்கம்பக்கத்தினருக்கும் தொல்லை தருபவளாக தெரிகிறாள். ஆனால் அதே நேரம் ஸ்கங்கிடம் பயந்து நடுங்கும் நாயை அரவணைப்பவளாகவும், அனைவரின் பசியை அறியும் அன்னையாகவும் இருக்கிறாள். மாலதியின் கண்கள் சான் ஸான் ஹோஸேவின் கண்கள், அம்மாவோ அந்த வனப்பிராணியில் தன்னையே காண்கிறாள்.
பாசத்திற்கும் நவீன வாழ்க்கையின் அல்லல்களுக்கும் இடையில் உழலும் கதை சொல்லி அம்மாவை ஊருக்கு அனுப்பி வைக்க யத்தனிக்கிறான். கூகுளின் ஐந்து நட்சத்திர உணவகமும் அவளுக்கு ஒரு பொருட்டில்லை. ஆனால் பசியில் மெலிந்து திரியும் கய்யோடியை தேடிச்சென்று கையால் பிசைந்த சோறூட்டும் பேரன்னையை அவன் கண்டுகொள்வதில் கதை நிறைவுறுகிறது.
ஸ்ரீனி சங்கரன்
உங்கள் கதையை படித்தவுடன் எப்படி எழுத வேண்டும் என்றும் புரிந்துகொண்டேன். இந்த நிலத்தின் உயிரிணங்கள், நிலகாட்சி, வாழ்வியல் சிக்கல்கள் என சட்டென எல்லாவற்றையும் தொட்டுவிட்டீர்கள்.
விஸ்வநாதன், கலிபோர்னியா
மிக அருமை நவீன். ரொம்பவே ரசித்தேன். கதையில் வரும் சம்பவங்களையெல்லாம் பேசிக்கொண்டிருந்தது மீண்டும் நினைவுகளில் வந்து மோதுகிறது. ஆனால் இதற்குள் இப்படி ஒரு கதையின் சாத்தியம் ஒளிந்திருப்பது தெரியாமல் போய்விட்டதே!! இதெல்லாம் தேர்ந்த எழுத்தாளருக்கு மட்டுமே வாய்க்கும் வரம் போல.
பாலாஜி
பசியைத் தீர்த்து அன்பைப் பொழியும் உயிர்களிள் முதன்மையானவள் தாய். அந்தத் தாயின் அன்பு மனிதரையும் தாண்டி ஆபத்தான விலங்கின் பசியையும் உணரச் செய்து அதன் பசியைத் தீர்க்கின்றது. எல்லா விலங்குகளும் புதியதாகவே இருந்தது. கதையின் ஓட்டட்டோடு அவற்றை பற்றி அறிந்திட இயன்றது. அமெரிக்க வாழ்க்கையை கதையில் அழகாக காட்டப்பட்டுள்ளது. நெகிழ்ச்சியடைய வைக்கும் முடிவு.
சாலினி
