எழுத்தாளர், இதழாளர். மலேசிய அரசாங்கத் தமிழ் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். வல்லினம் இனைய இதழின் ஆசிரியராக உள்ளார். இதுவரை பதினைந்துக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ள இவரது நான்காவது நாவல் இது.
நவீனின் முந்தைய மூன்று நாவல்களிலிருந்து விலகி, முழுவதுமான யதார்த்த உலகில் நிகழும் நாவலிது. மலேசியா பள்ளி ஒன்றில் பதின்மவயது சிறுவனின் பிரச்சனைகளை, தடுமாற்றங்களை, பாதை விலகுதலை, காமம் அரும்புவதை மையமாகக் கொண்ட நாவலிது. மலேசியாவில் பள்ளி ஆசிரியராகப் பலவருடங்கள் பணிபுரிந்த நவீனுக்கு Firsthand informations ஏராளமாக இருந்திருக்கும்.
பேத்திக்கு தன்னுடைய விடலைப் பருவ வாழ்க்கையை ஒரு Confession ஆகச் சொல்லும் கதையிது. அந்த Confessionல் அதிர்ச்சியளிக்கும் மற்றொரு Confessionம் உள்ளது.
ஒற்றைப்பெற்றோர், குறிப்பாகப் பெண்கள், டீன்ஏஜ் மகனுடன் நடத்தும் போராட்ட வாழ்க்கை குறித்து அதிக படைப்புகள் தமிழில் வந்துள்ளதாகத் தெரியவில்லை. அந்த மகன் தன்மையில் சொல்லும் கதையிது. அப்பாவின் அருகாண்மை இல்லாத, அம்மாவை எளிதில் வாயடைக்க வைக்கும், மாறன் போன்றவர்களின் சேர்க்கையால் கெட்டுக் குட்டிச்சுவரான
தீபன் பக்கத்துவீட்டு அக்கா குளிப்பதை எட்டிப்பார்க்க முனைந்து மாட்டிக்கொண்டு அடிவாங்கி, ஊர்கூடி அவமானப்படுவதில் நாவல் ஆரம்பிக்கிறது.
மலேசியாவில் மட்டுமல்ல எங்கு வேண்டுமானாலும், நடக்கக்கூடிய கதையிது. பதின்மவயதில் பாதை திரும்புவதற்கு முன் குடும்பத்தின் அரவணைப்பு கிடைப்பவர் சிலர், தானே உணர்பவர் சிலர், மீளமுடியாத சேற்றில் சிக்குபவர் பலர். தன்னைப் பற்றி பெரிய அபிப்ராயம் இல்லாத தீபனை, விக்கியை அடிப்பதும், கனகாவின் நெருக்கமும் முற்றிலும் மாற்றுகிறது. மாறாதிருந்தால் மாறனுடன் அவன் பழகியிருக்க மாட்டான். கனகாவிடம் அவன் வெளிப்படுத்தும் அதே அறியாமை, பின்னர் ரத்னா ஆண்டியுடனும் வெளிப்படுகிறது. நிஷா அவனுக்கு வாழ்க்கையில் மறக்கமுடியாத பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறாள்.
பள்ளிப்பருவ வாழ்க்கையின் மறுபக்கத்தை நாவல் வெகு யதார்த்தமாகப் பதிவுசெய்துள்ளது. வழமைபோல் மலேசியாவின் கலவைக் கலாச்சாரமும் பதிவாகியுள்ளது. விச்சுவை Glorify செய்ய மேலும் மேலும் சொல்லிக் கொண்டு செல்வது மட்டும் செயற்கை. எழுத்தாளன் Slip ஆகும் இதுபோன்ற இடங்கள் மற்றவர்களால் சரிசெய்யப்பட வேண்டும். நவீனின் நாவல்கள் எப்போதும் வாசகரை Disappoint செய்வதில்லை என்பதை நான்காம்முறை நிரூபித்திருக்கிறார்.
சரவணன் மாணிக்கவாசகம்
***
வணக்கம் நவீன், நலமாக இருக்கிறீர்களா?
இப்போதுதான் தங்களுடைய லீகாட் நாவலைப் படித்து முடித்தேன். வழக்கம்போல, இந்த முறையும் தங்களுடைய படைப்பு என்னை மிகவும் கவர்ந்தது.
சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு KL-லில் நாம் சந்தித்தபோது, ஒரு நல்ல நாவல் என்பது வாசகர்களிடம் ஒரு தாக்கத்தை அல்லது மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறினீர்கள். பேய்ச்சி, சிகண்டி நாவல்களைப் படித்தபோது ஏற்பட்ட அதே தாக்கம் மீண்டும் இந்நாவலைப் படித்தபோது ஏற்பட்டது.
தீபனின் பயணம் உண்மையிலேயே சுவாரசியமானது. மாயட் டு புமா வரை! அவனுடைய முதல் காதல், முதல் சண்டை, முதல் திருட்டு, முதல் வேலை, தவறான நட்பு, ஜாலான் பாரு மாமா, இந்தியாவிலிருந்து வந்த விச்சு, ரத்னா ஆன்ட்டியின் எதிர்பாராத திருப்பம், நிஷாவின் நிராகரிப்பு, அவனுடைய கடைசி கடிதம் என்று தீபனின் பயணத்தைப் நான் படிக்கவில்லை; அவனுடன் சேர்ந்து அந்தப் பயணத்தை நானும் வாழ்ந்தது போன்ற உணர்வு!
தங்களுடைய அடுத்த நாவலுக்காக ஆவலுடன் காத்திருக்கும் உங்கள்
சிங்கப்பூர் ரசிகன்,
அருள்

