லீகாட்: ஆண் அவஸ்தையும் தீராத அலைக்கழிப்பும் – பானுஷா அங்கப்பன்

லீகாட் நாவலை வாசித்தேன். விடலைப் பருவத்தில் நான் கண்ட பல்வேறு முகங்களை மீண்டும் ஒருமுறை கண்முன்னே இந்நாவல் நிழலாட வைத்துச் சென்றது என்றுதான் சொல்ல வேண்டும். நாவலின் கதைப்போக்கை ஒவ்வொரு கதைப்பாத்திரத்தின் வழி உற்றுநோக்கி அலசினேன். அதனை அனுபவத்தோடு ஒத்திசைத்துப் பார்க்கும் வேளையில் புரிதல்கள் ஆழப்பட்டன.

உணர்வின் அசைவுகளை அதன் இயக்கத்தால் மனிதன் தன்னைக் கட்டமைத்துக் கொள்ளும் விதங்களை அதன் எல்லையற்ற பெருவெளியைப் படம் பிடித்துக் காட்டும் விதமாக இந்நாவல் எழுதப்பட்டிருப்பதைக் கண்டறிய முடிந்தது. லீகாட் நாவல் குறிப்பாக விடலைப் பருவ மானிடரின் உணர்வு நிலையில்லாமையைத் திரையிடுகிறது. குறிப்பாக மனதின் ஆழத்தில் ஒடுங்கிக்கிடக்கும் காமம் எனும் பெருவுணர்வு தூண்டியெழுப்படும்போது அதன் வீரியம் எப்படியெல்லாம் ஒருவனை ஆட்டுவித்து வதைத்திடுகிறது; அவ்வுணர்வு தணிக்கப்பட்ட வேளையில் அவன் என்னவாகிறான் என்பதை விவரித்துக் காட்டும் கதைக்களத்தை மையமிட்டு இந்நாவல் எழுதப்பட்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

பானு

விடலைப் பருவம் என்று கூறும்போது உடல் அதோடு உள ரீதியிலான பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய சவாலான காலக்கட்டமாகும். அப்பருவத்தைக் கையாளுவது பொருட்டுச் சுயத்தை வெளிக்கொணர்தலுக்குக் காரணமாக அமைந்திடும் தன்னிலை புரிதலும் சுற்றத்தில் சூழ்ந்திருப்போரின் போக்கும் செயல்பாடும் வழிகாட்டுதலும் அவன் அல்லது அவளின் அச்சமயம், அதனைக் கடந்திட்ட காலக்கட்டத்தில் என்னவாக உருவாகிறான்/ உருவாகிறாள் என்பதைத் தீர்மானிப்பதாக அமைந்துவிடுகிறது. இது இந்நாவலில் இடம்பெறும் தீபனின் வாழ்க்கைக்கு நன்கு பொருந்துகிறது.

விடலைப் பருவத்தின் மாற்றங்களை மூன்று முக்கிய பகுப்புகளாக வகுத்துப் பார்க்கும்போது அவற்றுள் இரண்டு வகையினர் இக்கதைக்களத்தில் உட்புகுத்தப்பட்டிருக்கின்றனர் என்பதனை உணர்ந்துகொள்ள முடிந்தது. முதலாவதாக, சாது என்ற பெயரில் தங்களுக்குள் எழும் உணர்வுகளை வெளிக்காட்ட தயங்கியோ வெளிக்காட்டினால் தகாத விளைவுகளால் தகர்த்தெறிப்படுவோமோ என்கிற எண்ணத்தைத் தங்களுக்குள் நிறுவி வளர்பவர்கள். இதற்கு பல்வேறு காரணங்களைச் சுட்டலாம். இன்னொன்று தங்களுக்குள் எழும் உணர்வுகளை வெளிக்காட்டும் வேட்கை இருந்தும் சுயத்தை உயர்த்திக்காட்டவும் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் பிறிதொரு உயிரையோ கருவியையோ பயன்படுத்தி வளர்பவர்கள். மூன்றாவது, மிகவும் அவசியமானது. அடிப்படையில் தனது ஏதோ ஒருவித வலிமையோ பலமோ தூண்டிவிடப்படும் பொருட்டுத் தங்களின் உணர்வுகளைத் திமிறவிட்டும் அடையாளப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுப்பட்டும் வளர்பவர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பயிரை உற்பத்தி செய்கிறது.

இங்கு மாறன் இரண்டாம் பகுப்பில் இடம்பெறுபவனாகவும் தீபன் மூன்றாம் வகையைச் சேர்ந்தவனாகவும் இருக்கின்றனர். மாறன் தனக்கான தேவை இருக்கும் பொருட்டு தீபனை ஆயுதமாக்குகிறான். சாதாரண கத்தியைத் தீட்டிக் கூர்மைப்படுத்துகிறான். அந்த கூர்மையின் பொருட்டுக் கிடைக்கப்பெறும் பலன்களில் மறைமுகமாகக் குளிர் காய்கிறான். தான் தீட்டிய கத்தி ஒரு நேரத்திற்குப் பின் உடன் வைத்திருப்பதனை அநாவசியம் என்று உணர்ந்தவன் நேரம் பார்த்துத் தூக்கியெறிகிறான். இங்கு கத்தி எனப்படும் தீபன் சாமர்த்தியமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறான்.

அடுத்து தீபன். தந்தையைச் சிறுவயதிலே இழக்கிறான். தன் தந்தை பணி நிமித்தமாக வெளியிடம் சென்றிருக்கும்போது பிறிதொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை அறிகிறான். தனது தாயாருக்குத் துணையாகத் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டும் பள்ளிக்கும் சென்றுகொண்டு இருந்திட பள்ளியில் தனது தோற்றம் குறித்துக் கேலி கிண்டல்களுக்கு ஆளாகிறான். யாரும் அருகில் நெருங்காதிருந்தபோது கனகாவின் நிரந்தரமற்ற அன்பிலும் அரவணைப்பிலும் ஆழ்ந்திருந்து அதனைத் தொலைத்து மனம் நொந்து போகிறான். பள்ளியில் நடந்த சண்டையின்போது விக்கியின் முகத்தில் குத்தி அதுவரையில் அவனைப் பற்றி பிறர் மனத்தில் ஈடேறியிருந்த பிம்பத்தை உடைக்கிறான். தன் வலிமையையும் வேகத்தையும் மாறனின் ஓதலுக்கேற்ப இசைந்துகொடுக்கும்படி மாற்றியமைத்து ஆட்டம் போடுகிறான். தனது அடையாளப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் தனக்குள் அண்டிக்கிடந்த காமத்தை உணர்ந்துகொண்டு பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபடுகிறான்.

தீபன் காமத்தின் ஏக்கத்தையும் வலியையும் போக்கிக்கொள்ள அல்லாடுகிறான். அக்கா குளிக்கும்போது எட்டிப் பார்ப்பது, நிஷாவை நாடிச் சென்று அவளை அடைய பணம் தேடி அலைந்தது, கலைவாணியிடம் பேச துடித்தது, இடையிடையே ரத்னா ஆண்டியின் அழகை வருணிப்பது இப்படியாக அவனின் காமவுணர்வின் பிரதிபலிப்பாக இயங்கி வருகிறான். நிஷாவின் நிராகரிப்புக்குப் பிறகு ரத்னாவுடன் புணர்ந்து தனது வலிக்கு விடுப்பைக் கொடுத்து பெற்ற அன்னையின் மடியில் அடைக்களம் புகுகிறான்.

இந்த நாவலில் இடம்பெறும் தீபனைப் போலவே எத்தனையோ தீபன் பள்ளிகளிலும் பள்ளியின் வேலிக்கு முன்பாகவும் திரிந்து கொண்டிருக்கின்றனர் என்பதனை அனுபவத்தோடு பொருத்திப் பார்க்கும்போது அறிந்துகொள்ள முடியும். அதன் எல்லை சூழலுக்கேற்பவும் ஒவ்வொரு தனிநபர் உள ஆழத்திற்கேற்பவும் மாறும். அவற்றுள் ஒருவழி விடலை பருவத்து மாணவனின் பிரதிபலிப்பாக இந்த லீகாட் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.

ஒரு விடலைப் பருவத்து மானிடரின் காமத்தின் சித்தரிப்பை வெளிப்படையாகப் புனைவுகளில் இடம்பெறச் செய்வது அரிது. இந்நாவல் அந்த தேவையைப் புறக்கணிக்காமலிருப்பதே பெரும் பலமாக இருக்கிறது. கதையில் இடம்பெறும் வழக்குகள், கதைமாந்தர், இடம் எல்லாமும் பின்வரும் காலங்களில் வாசிக்கும் வாசகர்களுக்கு எழுதப்பட்ட காலக்கட்டத்தின் பின்னணியை உணர்ந்துகொள்ள செய்வதற்கு ஏதுவாக அமைந்திருக்கிறது.

நாவலின் பிற பாத்திரங்களான ரத்னா ஆண்ட்டி, விச்சு ஆகியோருடன் பயணிக்கும்போது அவர்கள் ஏற்படுத்திச் செல்லும் திருப்பம் நேரடிக்கு அப்பாற்பட்ட பார்வையொன்றுக்கு இட்டுச் செல்கிறது. மனிதமனம் ஒரு புதிர். அந்த புதிருக்கான விடையையும் அதனையொட்டிய குறிப்புகளையும் அதுவாகத் திறந்து காட்ட அனுமதிக்காத நிலையில் திரைக்குப் பின்னால் அடங்கியிருக்கும் காட்சிகளையும் அதனை வழிநடத்தும் உணர்வுகளையும் எளிதாகக் கண்டறிந்துவிட இயலாது. இதனை விச்சு தீபனிடம் கொண்டிருந்த தொடக்கக்கட்ட முரண்போக்கு சிந்தனையும் ரத்னாவின் முதற்கட்ட அன்பின் வெளிப்பாடும் இறுதியில் அதன் பின் மறைக்கப்பட்டிருந்த எல்லையைக் கடந்த உணர்வினைப் பறைசாற்றும் ஆழங்களை ஒவ்வொன்றாக தீபன் கண்டறிந்தும் அனுபவப்பூர்வமாக உணர்ந்துகொள்ளும் தருணங்களில் காணலாம்.

கடிதவழி தொடக்கம் கண்டு கடிதவழியிலே முற்றுப்பெறும் நாவலைப் படித்து முடித்தபோது மனம் வருந்தியது. கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல “ஆண் அவஸ்தை, தீராத அலைக்கழிப்பு” எனும் சொற்களுக்குள் பொதிந்துள்ள வலியைத் தான் இந்நாவல் மையப்பொருளாகச் சுட்டுகிறது. ஏங்கோ எதன் பொருட்டோ தன்னைக் காயத்துக்குட்படுத்திக்கொள்ளும் அல்லது காயப்படுத்தப்படும் மானிடன் அதன் மீதாக உருவாகும் வலியை வன்மமாகவோ, குரூரமாகவோ உருவெடுக்கச் செய்கிறான். சமயம் அமைந்திடவே அதனை வெளிபடுத்தித் தன் வலியைப் போக்கவும் முனைகிறான்.

இங்கு தாத்தாவாக மாறியிருக்கும் தீபனும் அப்படித்தான். நிஷா என்கிற விலைமாதுவால் நிராகரிக்கப்பட்டு அந்த அலைக்கழிப்பின் வலியை ஏதோ ஒரு ரூபத்தில் தீர்த்துக்கொள்ள எண்ணுகிறான். அப்படியாகத் தன் பெயர்த்திக்கு அதே பெயரைச் சூட்டி அத்துணை வன்மத்தையும் கக்குவது மட்டுமின்றி காம நோக்கத்தோடும் அணுகுகிறான். நிராகரிப்பின் வலி அவனூடே வெறியாக மாறிப் பயணித்திருக்கிறது. இறுதியாகத் தன் தவற்றை உணர்ந்த தீபன் உளவியல் அடிப்படையிலான கல்வியறிவைப் பெற்றுள்ள நிஷாவிடம் தன் விடலைப் பருவத்தில் கதையை விளக்கித் தன் சார்பு நியாயத்தை முன்வைக்கிறான்.

மனித மனத்து ஆழங்களில் பல்வேறு உணர்வுகள் பேயாக உலலுகின்றன. அவை சரியான முறையில் கையாளப்படாத நிலையில் பல கோணங்களில் வெகுண்டெழுகின்றன. அப்படி வெளிபடும் உணர்வுகள் சில வேளைகளில் நன்மையையும் பல வேளைகளில் அபத்தமாகவும் முடிவு பெறுகின்றன. அப்படியாகத் தன் காமவுணர்வால் திண்டாடி பல சமயங்களில் அதன் தேவையை நிறைவேற்றிக் கொள்ள முடியாத ஒருவன் இறுதியில் எப்படியாகிறான் என்பதனை எடுத்தியம்பும் சிறந்ததொரு அகநாவலாக இந்நாவல் புனையப்பட்டிருக்கிறது.

(Visited 26 times, 26 visits today)