லீகாட்: பாலியல் சிந்தனையும் சிக்கலான பதிலும் – லங்கேஷ்

லங்கேஷ்

பல சமயங்களில் நினைப்பதுண்டு தமிழில் எழுதப்பெற்ற பெரும்பான்மையான நாவல்கள் உறவுகள் மற்றும் அதன் தொடர்புடைய சிக்கல்களை பேசுவதாக உள்ளது என்று!

உறவுகளுக்கான தொடக்கம் எங்கிருந்து என்று சிந்திக்கும் பொழுது அது விரல் நீட்டும் இடம் ஆசை இல்லையென்றால் அன்பு,  அடிநாதத்தில் ஒரு காமம்.

காமம் என்ற இடம் வரும் இடத்தில எல்லாம் ஒன்று இலைமறை காய்மறையாக சென்றுவிடுவோம், அல்லது காமத்தை காதலாகி மெல்லிய ஜானகிராமனின் உணர்வுபோல இலகுவாக்கிவிடுவோம்.

அதிலும் குறிப்பாக பருவ வயதில் தோன்றும் பாலியல் சிந்தனைகளுக்கு பதில் சிக்கலானது. இந்த வகை சிக்கல்களை பிரதிபலிக்கும் கதைகளில் நான் வாசித்தது லீகாட் இரண்டாவது நாவல் , முதல் நாவல் ஓரளவு சிகண்டி!

எந்தவொரு நாவல் வாசிப்பின் இக்கட்டே அதன் முதல் முப்பது பக்கங்களை தாண்டுவது என்பது தான்! நாவல் காட்டும் உலகமே அந்த பக்கங்கள் தாண்டியபின்தான் உள்ளது என்பது என் எண்ணம்.

திரு நவீன் இந்த கதையை first person point of view  – தன்னிலை விவரிப்பு தன்மையில் எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் பிரபலமான J d  Salinger எழுதிய catcher in the rye  மற்றும் முரகாமியின்  ஓரளவு kaafka on the shore இந்த யுக்தியில் எழுதிய நான் வாசித்த படைப்புகள்.

நவீனின் இந்த தன்னிலை விவரிப்பு உத்தி முறையில் சொல்லப்படுகின்ற கதை முதல் பக்கத்திலேயே நம்மை உள்ளிழுத்து விடுகிறது. நண்பர்களே ஆசிரியர் நவீனின் நான்கு நாவலையும் வாசித்தித்ததால் சொல்கிறேன்,  அவருடைய எழுத்து நம்மை இலகுவாக உள்ளே இழுத்து சென்றுவிடும்.

நவீனின் இந்த கதையை இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொள்கிறேன், ஒன்று புற வய கதை; மற்றொன்று அக வய பார்வை.

புற வய கதை,

தீபன் என்னும் பதினாறு வயது இளைஞன் வாழ்வில் ஒரு மாத காலம் நடந்த செயல்கள் மற்றும் சிந்தனைகளால் நிரம்பிய கதை. தீபன் தன்னை பற்றி தாழ்வாக எண்ணக்கூடிய ஒரு மாணவனாக இருக்கிறான். நண்பர்கள் மத்தியில் அவனை ஒரு உணர்ச்சியற்றவன் “மாயாட் “ என்று அழைக்கப்படுகிறான். ஆனால் ஆசிரியர்களின் பார்வையில் அவனோ ஒரு காட்டு விலங்காக “பூமா” என்று வர்ணிக்கப்படுத்திகிறான்.

தான் ஒரு “பூமா” என்னும் உயர்ந்த காட்டு விலங்கா இல்லை,  பிணம் போன்ற உணர்ச்சியற்ற ஜடமா என்று அவுனுக்குள்ளயே ஒரு குழப்பம். பள்ளியில் யாருமே தன்னை சீண்டகூட இல்லாத தருணத்தில் அங்கு கனகா என்னும் புதிய மாணவளின் வருகை.

யாரிடமும் பழக விரும்பாத, எல்லாரும் பழக விரும்பிய கனகாவிற்கு தீபனுடன் மற்றுமே நட்பு.

இந்த நட்பு,  தீபனை ஓரளவிற்கு தாழ்வு சிந்தனையிலிருந்து உயர்வு சிந்தனைக்கு கொண்டுசெல்கிறது, அதற்கு கனகாவின் நட்பான பார்வையும் அறிவுரைகளும் ஒரு பெரிய காரணமாக இருக்கிறது.  

திடீர் என்று தீபனின் வாழ்வில் வந்த கனகா,  ஒரு வருட இறுதியில் யாரிடமும் சொல்லாமல் பள்ளியை விட்டு செல்கிறாள். கனகாவுடன் இருந்த நாட்களில் பொலிவுடன் இருந்த தீபன், அவளின் இல்லாமையால் பொலிவை இழக்கிறான்.

இயல்பாகவே இது தீபனை பிற மாணவர்களின் கேலிக்கு உள்ளாக்கப்படுகிறது. அவமதிப்பின் உச்சபட்சமாக ரௌடியின் தம்பியும் சக பள்ளி மாணவன் விக்கி செய்யும் கிண்டலில் துணுக்குற்று,  தீபன் அவனை தாக்கி பள்ளியில் தவறான காரணத்திற்கு பிரபலமாகிறான்.

தவறான பிரபலம் மாறன் என்பவனுடன் தவறான நட்பில் இணைகிறது. மாறன், தீபனை உன்னைப்போல வருமா, நீ ஒரு லீகாட்  “செம்ம வேகம்” மச்சான் என்று தூபம் போடுகிறான். மாறன் தீபனை சிறிய திருட்டில் தொடங்க வைத்து விலைமாது நிஷாவின் அறிமுகத்தில் நிறுத்துகிறான்.

நிஷாவோ இன்பமாய் இருக்க தீபனுக்கு 600 வெள்ளி பணமிருந்தால் வா இல்லை இடத்தை காலிசெய் என ஒருநாள்  துரத்துகிறாள். அந்த பணத்தை சம்பாதிக்க மாறனும் தீபனும் ஒரு குழந்தையின் சங்கிலி பறிப்புவரை செல்கிறார்கள்.

திருடிய சங்கிலியின் பணத்தை பங்குபோட மறுத்த மாறன், தீபனை புறக்கணித்தது மட்டுமின்றி பழைய பகையாளி விக்கியை வைத்து தீபனுக்கு காயத்தையும் ஏற்படுத்துகிறான்.

தீபனுக்கு  ஒரு பக்கம் மாறனால் ஏமாற்றப்பட்டோம் என்ற மனஉளைச்சல், மறுபுறம் விலைமாது நிஷாவின் அலட்சியப்பேச்சு ஏற்படுத்திய பாதிப்பு. மாறனின் நட்பு இல்லாமல் பெண் என்பவளை நான் அறிந்தே கொள்ளமுடியாது என்னும் ஏக்கம் அதையும் தாண்டி அந்த வயதில் ஏற்படும் பாலியல் எண்ணங்களால் தூண்டப்பட்டு அடுத்தவீட்டு சாரதா அக்கா குளிப்பதை முதல் முறையாக பார்க்க முயற்சிக்கிறான்.

முதல் முயற்சியிலேயே அம்மா மற்றும் அண்டைவீட்டாரால் பார்க்கப்பட்டு அடிபட்டு மாமாவின் புகலிடமாக ஜாலன்பார் உணவகத்திற்கு நோக்கி செல்கிறான். சென்ற இடத்தில அவன் பெற்றது என்ன என்பதுதான் கதை.

இந்த இடத்தில நான் வணங்கும் ஆசிரியர் ஜெயமோகன் கட்டுரையை வாசித்ததில் இருந்து நினைவுக்கு வருகிறது. நாவல் என்பது கதை மட்டும் அல்ல, அது காட்ட கூடியது ஒரு மொழியின்சூழல், ஒரு காலவெளி, ஒரு மாற்று வரலாறு அல்லது ஒரு ஒருவாழ்வுக்களம்.

ஆசிரியர் நவீன் இதை நியாயப்படுத்தி இருக்கிறாரா,  என்றால் நிச்சயமாக செய்து இருக்கிறார். அந்த அடிப்படையில் சிந்திக்கும்பொழுது இந்த கதையில் ஒரு மாற்று வரலாறு இருக்கிறதா என்றால் இல்லை ஆனால் ஒரு “உருமாற்றம்” கொண்ட வாழ்வுக்காலம் உள்ளது.          

நான் இப்படி எடுத்து கொள்கிறேன் , ஒரு இலக்கை அடைய திட்டமிடுகிறோம். இலக்கை அடையும் இன்பத்தைவிட அந்த இலக்கு நோக்கிய பிரயாணமே இன்பம். அது போல இந்த கதை தீபனின் இலக்கை அடைவது ஒரு முறையாவது நிஷாவிடம் இன்பம் துய்க்க!  வாசகனுக்கு அது முக்கியமே இல்லை , முக்கியம் என்னவென்றால் தீபனை எது அங்கு நோக்கி தள்ளியது என்ற உருமாற்ற பிரயாணம் தான்!

வாசித்ததில், மூன்று முக்கிய உருமாற்றங்களை நான் பார்க்கிறேன்

முதலாவது,

தீபனின் தந்தை உயிரோடு உள்ளவரை அந்த குடும்பத்தில் மகிழ்ச்சியும், இயற்கையுடனான பிணைப்பும் இருந்தது. எந்த தருணத்தில் தந்தையுடைய மரணமும் மற்றும் அவருக்கு மற்றொரு மாதுவின் தொடர்பும் இருந்தது என்று தெரிய வரும்பொழுது அந்த குடும்பத்தின் சிதைவு தொடங்கியது,

கணவனின் இறப்பை விட வேறொரு பெண்ணின் தொடர்பு அவருக்கு இருந்தது என்பதில் தாய் நொறுங்கி போகிறாள்.

ஒரு கட்டத்தில் அவளுக்கும் அவள் நேசித்த தோட்டமும் அவள் வளர்த்த ஆடும் சேவலுமே பாரமாக போகிறது. அவை அனைத்தையும் உதறிவிட்டு குடும்பத்தை நடத்த ஒரு மர தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்கிறாள். இது குடும்பத்தில் ஏற்படும் முதல் உருமாற்றம்.

அதே காலகட்டங்களில் தீபன் சிறுவனின் இருந்து குமரப்பருவதில் காலடி எடுத்து வைக்கிறான். தீபனின் மனதில் ஏற்படும் எண்ணங்களும்,  பள்ளி வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும் அவனை வேறொரு ஆளுமையாக மாற்றுகிறது.

இந்த நேரத்தில் ஒருவேளை, தன்னுடைய அப்பா இறக்காமல் இருந்திருந்தாலோ? இல்லை அம்மா,  நிலைகுலையாமல் தீபனை பாதை விலக விடாமல் பார்த்திருந்தாலோ தீபன் எப்படிபட்டவனாக இருந்திருப்பானோ எனபது வாசகனுக்கு தோன்றும் இயல்பான கேள்விகள்.

இரண்டாவதாக,

ஊருக்கு ஒத்தாசையாக ஓடி சென்று உதவி செய்பவராக இருக்கும் மாமா,  ஒரு கட்டத்தில் தன் அக்கா கணவனின் வசைச்சொல்லால் தனியே சென்று ஜாலன்பார் உணவகத்தை தொடங்குகிறார்.

அவரின் அந்த பயணம், அவரை வேறொரு இறுக்கமான , உணர்வுகளற்ற மனிதனாக மாற்றுகிறது. அவருக்குள் இருந்த தன்னலமற்ற எண்ணம் விலகி,  சுயநல மனிதனாக மாறுவதை உணர்கிறார்.

வருமானமே இல்லாத தருணத்தில் கொடுத்து மகிழ்ந்த மனிதனுக்கு பணம் வரும் காலங்களில் ஏற்படும் இந்த மற்றுமொரு உருமாற்றம் ஏன் என்பது மற்றும் ஒரு கேள்வி இயல்பாகவே வாசகனுக்கு எழுந்து வருகிறது.

மூன்றாவதாக,

இந்த கதையின் முக்கியமான மனிதனாக நான் எண்ணுவது விச்சு.

விச்சுவை ஒரு சிரமமான தருணங்களில் இருந்து ஜாலன்பார் மாமா மீட்டு தன்னுடைய உணவகத்திற்கு வேலைக்காக கொண்டு வருகிறார். நன்றி விசுவாசத்திற்காக,  காலநேரம் பார்க்காமல் வேலை செய்கிறான் விச்சு.

ஒரு நாள் அவன் செய்த சிறிய தவறுக்காக மாமாவிடமிருந்து பெரும் வசவுகள் வாங்குகிறான். நமக்கு உள்ளே இருக்கக்கூடிய நஞ்சு சற்றே வெளிவரும் காட்சி அது அந்த நொடியில் இருந்து நன்றி விசுவாச உறவில் ஒரு விரிசல் ஏற்படுகிறது. அங்கே தோழமை உணர்வு காணாமலாகி ஒரு உத்யோக  உறவு என்னும் உருமாற்றம் ஏற்படுகிறது.

இந்த விச்சு இந்த கதையில் ஒரு நேர்மறை பாத்திரம். தீபனுடன் முதல் நாளே நட்பு பாராட்டும் அவன், அந்த உணவகத்தில் வேலை செய்யும் அம்மையாருக்கும் அணுக்கமாக இருக்கிறான்.

தீபனுக்கு மனம் முழுதும் வ்யாபித்தித்து இருக்கும் பாலியல் உறவு பற்றிய சிந்தனை விச்சுவிற்கு எளிமையாகவே பக்கத்துக்கு வீட்டு பெண்மூலம் கிடைக்கிறது.

அவன் ஊருக்கு திரும்பும் நாளிலும் மகிழ்ச்சியுடன் தன்னுடைய சேமிப்பின் ஒரு பகுதியை மற்றவர்களுடன் பங்கிட்டு செல்கிறான். அவன் விட்டு சென்ற இனிமை ஜாலன்பார் மாமாவிற்கும் தீபனுக்குமே ஒரு மனமாற்ற பாதை என்றே நான் எண்ணுகிறேன்.

இந்த உருமாற்ற தரிசனங்களை தவிர்த்து ஆசிரியர் நவீனின் கதைகள் எனக்கு மிகவும் பிடித்தது அவரின் புற வர்ணனைகள்.

தொழில்முறை ஆசிரியர் என்பதால் அவருக்கு பள்ளிக்கூடத்தில் நடக்கும் உரையாடல், நிகழ்வுகளும் அத்துப்படி. அதனால் நான் அதை குறிப்பிடப்போவதில்லை. நான் குறிப்பிட போவது கதை நடக்கும் இடம்.

இந்த கதை நடைபெறும் இடம் ஒரு உணவக கட்டிடம். அந்த உணவகம் ஒவ்வொரு பொழுதுகளில் வெவ்வேறு முகத்தை காட்டுவதாகட்டும், மங்குகளை கழுவும்பொழுது வரும் அவதானிப்பாகட்டும், உணவகத்தில் உணவு தயாரிக்கும் உத்திகள் மற்றும் அங்கு நடக்கும் உரையாடல்கள் ஆகட்டும் வாசிப்பை ஆர்வமூட்டும் இடங்கள். நவீனின் மிகப்பெரிய பலமே அவரின் புற வர்ணணைப்பும் அதில் இருந்து எழும் அவதானிப்புகளும்.

சரி, இந்த கதையில் வாசகனுக்கு ஏன் இப்படி என்று கேள்வி எழும் பகுதிகளே இல்லையா என்றால், நிச்சயமாக இரண்டு மூன்று இடங்கள் என்னளவில் இருக்கிறது.

முதலாவது,

கதையில் தொடக்கத்தில் வரும் கடிதம், நிஷா என்கிற பேத்திக்கு தாத்தா தீபன் எழுதுவதாக இருக்கும் கடிதம். அந்த கடிதம் அந்த ஒட்டுமொத்த கதையை திசைதிருப்பும் செயலோ என்று ஒரு கேள்வி.

நாவல் வடிவம் என்னளவில் ஒரு விரிவான ஒரு உலகத்தை காட்டும் வடிவம், அந்த வடிவத்தில் இந்த திருப்பத்தின் அவசியமென்ன, அப்படியே அதற்கு ஒரு காரணம் இருக்கும் என்றாலும் அந்த காரணிகளை காட்டாமல் வாசகனின் அனுமானத்திர்ற்கு விடுவது சரியா என்பது!

இரண்டாவது அந்த பேத்திக்கு பெயர் ஏன் நிஷா? அவன் இன்பமாய் இருந்த நட்பின் பெயர் கனகா என்று தானே வைத்து இருக்க முடியும், நிஷா விலைமாதுவின் பெயரல்லவா, அதை பேத்திக்கு சூட்டுவதில் என்ன காரணம்? என்னால் அதை அந்த காரணத்தை முடியவில்லை.

இறுதியாக, இந்த கதையில் வரும் கதைமாந்தர்களின் பெயர்கள் தீபன், நிஷா, கனகா என்னும் பெயர்கள் ஒரு கட்டத்தில் எனக்கு சிகண்டியை ஞாபகப்படுத்த தொடங்கியது.

ஒரு வாசகனாக இந்த லீக்காட்டுக்கும் சிகண்டி புத்தகத்திற்குமே ஏதேனும் தொடர்பு இருக்குமா என்று சிந்திக்கவும் வைத்தது.

என்னுடைய இந்த கேள்விகளின் பதில்கள் இன்னும் பல வாசகர்களின் புத்தக வாசிப்பின் மூலம் கண்டடைய முடியும் என்று ஸ்திரமாக நம்புகிறேன்.

(Visited 1 times, 1 visits today)