காதர் இப்ராஹிம் குறித்த காணொளி இப்போது சமூக ஊடகங்களில் பரவலாகியுள்ளது. தன்முனைப்புப் பேச்சாளரான அவர், மற்றவர்களிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாகப் பரவலாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது. பலரும் முன்வந்து தாங்கள் ஏமாந்த கதையைப் பொதுவில் பகிர்ந்தபடி உள்ளனர். இதற்கிடையே யாரோ ஒரு பெண்மணி, காதர் இப்ராஹிம் அவர்களால் தான் ஏமாற்றப்பட்டதாகக் கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒருவரிடம் புகார் சொல்ல, அவர்முன் காதர் இப்ராஹிம் பதிலில்லாமல் கூனிக்குறுகி அமர்ந்துள்ள காணொளி ஒன்றும் வெளியானது. இதைத் தொடர்ந்து, தான் பலரிடம் பணம் வாங்கியதும் அதைக் கொடுக்க முடியாமல் தடுமாறுவதும் உண்மை என அவரும் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். தான் ‘ஸ்கேமர்’ இல்லை என்றும், நம்பி செய்த தொழிலில் ஏமாற்றப்பட்டதால் வீடு, வாகனங்களை விற்று அதிலிருந்து மீள முயல்வதாகவும் தன்னால் நட்டம் அடைந்தவர்களுக்குப் பணத்தைத் திரும்ப கொடுப்பேன் என்றும் அதில் உறுதி கூறியுள்ளார்.
இந்நிலையில் காதர் இப்ராஹிம் அவர்களுக்கும் எனக்குமான அனுபவம் ஒன்றை நான் முதலில் நினைவுக்கூற விரும்புகிறேன்.
2008இல் வல்லினம் அச்சு இதழாக வந்த நேரம். காதர் இப்ராஹிம் அப்போது உச்சத்தில் இருந்தார். அப்போது அவருக்கு ஏராளமான உதவியாளர்கள். அவர் பேசும் அரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிந்த காலமது. அந்தக் காலக்கட்டத்தில்தான் நான் லண்டன் மற்றும் ஃபிரான்ஸ் சென்று திரும்பியிருந்தேன். அந்நாடுகளின் சில புத்தகக் கடைகளில் இருந்த ஒரே மலேசிய புத்தகம் காதர் இப்ராஹிம் எழுதியவைகளாகவே இருந்தன. அவர் பிரபலம் அத்தகையது. அவை நன்றாகவும் விற்கின்றன என்றார்கள். மேலும் அவர் பேசிய காசட்டுகளும் பரவலாக வாங்கப்பட்டன. அதில் அவரை நவீனச் சித்தர் என்றே அறிமுகம் செய்தனர்.
அப்போது வல்லினம் அச்சு இதழுக்கு நிதி உதவி தேடிக்கொண்டிருந்தபோது ஒரு சகோதரியின் மூலம் நிதி உதவிக்கான கடிதத்தை அவருக்கு அனுப்பினேன். அப்படி இருபதுக்கும் குறையாத அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் கடிதம் அனுப்பியிருந்தேன். காதர் இப்ராஹிமிடமிருந்து நேரடியாகவே அழைப்பு வந்தது. நான் சென்றபோது முப்பது பேர் அடங்கிய குழுவுக்கு பயிற்சி வழங்கிக்கொண்டிருந்தார். நான் ஓர் மூலையில் அமர்ந்து அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ‘மனமே மாபெரும் சக்தி’ என்பதே ஆரம்பக்காலங்களில் அவர் உரைகளின் சாரமாக இருந்தது. எனக்கு அவர் பேச்சு உவக்கவில்லை. நான் தீவிரமான இலக்கிய வாசிப்பில் ஈடுபடத்தொடங்கிய ஆரம்பக் காலமது. அதற்கு முன்னரே ஓஷோவை அதிகமாக வாசித்திருந்தேன். எனவே நான் அறிந்த ஆன்மிகமோ இலக்கியமோ தொட்டுச்செல்லும் மன ஆழங்களை அவர் எழுத்தோ பேச்சோ அடையவில்லை என எனக்குப் புரிந்தது. அவர் மிக மேலோட்டமாகப் பேசினார். மேலோட்டமான தீர்வுகளைச் சொன்னார். மேலோட்டமாகவே சிந்தித்தார். ஆனால் அது பெரும் கூட்டத்தைக் கவர்ந்தது.
அவர் மீடியோகர் (Mediocre) என்பது அப்போதும் இப்போதும் என் எண்ணம். அப்படி இருப்பது குற்றமல்ல. மீடியோகர் சமுதாயத்திற்கு அவர் போன்றவர்கள் தேவை. எனவே சமுதாயத்தின் தேவைக்கேற்ப அவர்கள் உருவாகி வளர்கிறார்கள். எதையும் தேடி வாசிக்காத சிந்திக்காத அறிவுச் சோம்பேறிகளுக்கு நாலு சித்தர் பாடல்களை மனனமாகச் சொல்வோரைக் கண்டால் கொஞ்சம் வியப்பாகவே இருப்பர். இப்படி சந்த ஒழுங்குடன் பேசுபவர்கள், பேச்சினூடே நாலு கவிதைகளைச் சொல்பவர்கள், கண்ணதாசன் பாடல் வரிகளின் பொருளை விதந்தோதி சிலிர்ப்பவர்கள், நாப்பயிற்சியால் மந்திரம் சொல்பவர்கள் எல்லாம் மலேசிய நாட்டின் சிறந்த சிந்தனையாளர்களாகி விடுவது இயற்கை. காரணம் பெரும்பாலோருக்கு அந்த அளவுக்கான அறிவுப் பகிர்வு போதுமானதாக உள்ளது. எனவே இங்கு அசல் சிந்தனையாளர்களுக்கு மதிப்பு இல்லாமல் போகிறது.
சரி விஷயத்துக்கு வருவோம். கிட்டத்தட்ட ஒருமணி நேரம் நான் அவருடன் உரையாடினேன். சிற்றிதழ் உலகம் குறித்த சிறிய சித்திரத்தைக் கொடுத்தேன். அவர், நான் மேற்கொள்ளும் இம்முயற்சி முக்கியமானது எனப் புரிந்துகொண்டார். இனி ஒவ்வொரு இதழுக்கும் ஆயிரம் ரிங்கிட் தருவதாக உறுதி வழங்கினார்.
காதர் இப்ராஹிம் வாக்களித்தது போலவே மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வல்லினம் வங்கி எண்ணில் ஆயிரம் ரிங்கிட் செலுத்துவார். செலுத்தும் முன் ஏதோ ஒரு கைப்பேசியில் இருந்து எனக்கு அழைத்துப் பணம் போடப்போவதைச் சொல்வார். கடைசி இதழுக்கு அவர் அழைத்தபோது “இனி வல்லினம் அச்சு இதழாக வராது டாக்டர், எனவே இனி பணம் போட வேண்டாம்” என்றேன். அவர், “ஐயா, நீங்கள் உங்கள் குடும்பம், மனைவி, மக்கள் சுற்றத்தார் என அனைவரும் நலமாக இருக்க வேண்டும்” என வாழ்த்திவிட்டு கைப்பேசியை வைத்தார். அதுதான் அவருடன் பேசியது கடைசி.
இன்று யோசிக்கும்போது இது எனக்கு ஆச்சரியமான விசயம்.
அ. அவர் நிதி கொடுத்ததை நான் வெளியில் சொன்னால் அன்றி வேறு யாருக்கும் தெரியப்போவதில்லை. காரணம் அவர் இதழில் விளம்பரம் எதுவும் போட வேண்டாம் எனக்கூறிவிட்டார்.
ஆ. நான் அவருக்குப் பணம் போட வேண்டுமென நினைவுப் படுத்தியதும் இல்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை. அவராக ஞாபகம் வைத்திருந்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஏதோ ஒரு கைப்பேசியில் இருந்து அழைத்து தகவலைக் கூறிவிட்டு பணம் செலுத்தினார். (இப்படி மூன்று முறை வழங்கினார்)
இ. அவருக்கு வல்லினம் போன்ற இதழின் தேவை தெரிந்திருந்தது. இலக்கியம் குறித்து வாய்க்கிழிய பேசிய எழுத்தாளர்கள் அச்சூழலில் எனக்குத் தன்முனைப்பு மட்டும் ஊட்டிக்கொண்டிருக்க தன்முனைப்பு பேச்சாளர் ஒருவர் பணம் வழங்கி செயல்ப்பட தூண்டினார். அதனால் அவருக்கு தனிப்பட்ட நன்மை என எதுவும் இல்லை.
காதர் இப்ராஹிம் அவர்களின் இறங்கு முகத்தை அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘நல்ல நேரத்தை’ கொண்டு வரும் என சில பொருட்களை விற்கத் தொடங்கும்போதே அறிந்துகொண்டேன். ஏதோ தகடுகள், அவற்றால் செய்யப்பட்ட சிறிய ‘சக்தி’ பிரமிடுகள் வடிவில் இருந்த பொருள்கள் என ஏதேதோ விற்றார். அதை தயாரிக்கும் நிறுவனங்கள் அவருக்கு நல்ல தொகை கொடுத்திருக்கலாம். எனவே அவற்றின் விளம்பர மாடலாக அவர் செயல்பட்டார். மனம்தான் மாபெரும் சக்தி என்றவர் மனமும் முக்கியம்தான் அது சரியாக செயல்பட இந்தப் பொருட்களும் முக்கியம் எனும் நிலைக்கு இறங்கினார்.
அவர் தான் சம்பாதித்த புகழைப் பணமாக மாற்ற முயல்வது எனக்குப் புரிந்தது. அவர் நவீன உலகின் சித்தர் எனக் கொண்டாடிய கூட்டம் அந்தப் பொருட்களையும் வாங்கியது. இப்படி அடுத்தடுத்து சில பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கி முழு வியாபாரியாக மாறினார். இப்படி ஏதாவது ஒரு பொருளை வைத்திருந்தால் செல்வம் வந்து சேரும் என நினைத்தக் கூட்டம் அவருக்கு வாடிக்கையாளர் ஆகினர்.
காதர் இப்ராஹிம் மன்னிப்புக்கேட்டு பேசும் காணொளியில் சொல்லும் வாக்கியம் முக்கியமானது. ‘வியாபாரத்தில் பணத்தைப் போட்டு ஏமாந்தேன்’. இதுதான் நிதர்சனம். அவர் எந்த பாவனையும் செய்யவில்லை. சக மனிதனாக, தான் ஒரு வியாபாரத்தில் ஈடுபட்டதையும் அதில் நட்டமடைந்ததையும் ஒப்புக்கொள்கிறார். அப்படியானால் நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஆரம்பம் முதலே அவர் ஈடுபட்டிருந்தது வணிகத்தில்தான். அதில் அவர் தெளிவாகவே உள்ளார். அவரிடம் ஓர் அறிவு உள்ளது. தன் பேச்சாற்றல் மூலம் அதை எவ்வாறு பேக்கேஜாக (package) கொடுத்தால் விற்பனையாகும் எனத் தெரிந்துள்ளது. அதை அவர் செய்தார். அவரை தன் ஆசிரியராக, குருவாக ஏற்றுக்கொண்டது அவரவர் தேவை. அவரை நவீனச் சித்தர் எனச் சொன்னதெல்லாம் அவரவர் தெளிவு. இதற்கு அவர் பொறுப்பாக முடியாது. தான் செய்யும் வியாபாரத்தில் இப்படியான சீடர்கள் அமைவதெல்லாம் அவருக்கான வணிக தேவைதான். அவரது வணிக உலகில் இவை எல்லாவற்றுக்கும் பெயர் வியாபாரத் தந்திரம்.
இந்தத் தந்திரம் பெரும்பாலான வியாபாரங்களில் உண்டு. குறை சிந்தனை உள்ளவர்களும் பேராசைக்காரர்களும் இதில் சிக்கிக்கொள்கிறார்கள். இல்லையென்றால் மூன்று நான்கு பி.எச்.டி வைத்திருப்பதாக அவர் குறித்த அறிமுக உரைகளில் சொல்லும்போதெல்லாம் அந்தப் பி.எச்.டிக்களை எந்தப் பல்கலைக்கழத்தில் எந்தத் துறையில் வாங்கினார் எனக் கேள்வி எழுந்திருக்கும். அவர் ஒப்புவித்து பொருள் கூறும் சித்தர் பாடல்களை ஒட்டிய குறுக்குக் கேள்விகள் எழுந்திருக்கும். வாழ்க்கை குறித்த பொத்தாம் பொதுவான நீதிகளை அவர் சொல்லும்போதெல்லாம் எதிர்க்கருத்து விழுந்திருக்கும். அப்படியெல்லாம் பெரிதாக எதுவும் நிகழவில்லை. எனக்குத் தெரிந்து டாக்டர் மா. சண்முகசிவா, சுவாமி பிரம்மானந்தா போன்றவர்கள் தங்கள் மாற்றுக் கருத்துகளை முன் வைத்துள்ளனர்.
நான் முன்னமே சொன்னதுபோல மீடியோகர் சமுதாயத்திற்கு இப்படியான ‘சித்தர்கள்’ தேவைப்படுகிறார்கள். அவர்களுக்குத் தாங்கள் விரைவாகச் சென்று எட்டக்கூடிய ‘உன்னத்தங்கள்’ அவசியமாக உள்ளது. அதன் வழியாக அடையக்கூடிய போலி நிறைவு தேவையாக உள்ளது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சமீபத்தில் ‘திவாகர்’ என்பவர் சமூக ஊடகங்களில் புகழ் அடைந்தார். நடிப்பு அரக்கன் என தன்னைத் தானே கூறிக்கொள்வதும் திரைப்படத்தின் சில காட்சிகளை அருவருப்பாக நடித்துக் காட்டுவதும் அவர் இயல்பு. ஆனால் அவருக்கும் ரசிகர் வட்டம் உண்டு. ஏன் அவர்கள் உருவாகிறார்கள். இந்த ரசிகர்களுக்கு என்ன வேண்டும்?
அ. அவர்களுக்கு தாங்கள் எளிதாக நெருங்கிச்செல்ல ஒரு போலி சூப்பர் ஸ்டார் தேவையாக இருக்கிறார்.
ஆ. அவர்களால் நிஜமாக பிரபலங்கள் யாரையும் அணுகிச்செல்ல முடியாது. எனவே தாங்கள் நெருங்க முடிந்த ஒருவரை தங்களின் நட்சத்திரமாக மாற்றுகின்றனர்.
இ. அவர் செய்வது கோமாளித்தனம் என உணர்ந்து விஜய் டிவி போன்ற சானல்கள் அவருக்கு பிக்பாஸில் வாய்ப்பு வழங்குகிறது. இன்னொரு சேனல் அவரை நகைச்சுவை நிகழ்ச்சிக்கு அறிவிப்பாளர் ஆக்குகிறது. மூடர்களை மையமிட்ட ஒரு சந்தை உண்டு என்பதை வணிகர்கள் அறிகிறார்கள். எனவே அந்த மூடத்தனம் ஒருபோதும் குறையக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.
ஈ. மிகையான தன்முனைப்பில் மடத்தனமாக வெளிபடும் அவர் செயல்களை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பகிர இணைய சேனல்கள் முண்டியடிக்கின்றன. எல்லாவற்றுக்கும் பின்னால் இருப்பது வணிகத் தேவை,
டிவாகர் முரட்டுத்தனமான முட்டாளாக இருப்பது இங்கு சிக்கல் இல்லை. அது அவர் இயல்பு. இவ்வுலகில் ஒருவர் தன்னம்பிக்கையுடன் முட்டாளாக வாழ்ந்து சாவது அவன் விருப்பம். ஆனால் ஊடகங்கள் அதையும் பயன்படுத்தி பொறுக்கித் தின்ன நினைப்பதுதான் கேவலம்.
காதர் இப்ராஹிம் போன்றவர்கள் அறிவாளிகள்தான் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்களுக்கு சில துறைகளில் கூடுதலாக அறிவு உண்டு. ஆனால் அவர்கள் அதை வணிகமாக்க நினைக்கின்றனர். எனவே தன்னிடம் உள்ளவற்றில் எதை எப்படி தொகுத்து பேக்கேஜாக கொடுக்கலாம் எனத் திட்டமிட்டு அதை வெற்றிகரமாகச் செய்து முடிக்கின்றனர். அவர்களின் தேவை சிந்திக்கவும் வாசிக்கவும் தேடவும் தயங்கும் ஒரு பெரும் கூட்டத்துக்கு அவசியமாக உள்ளது. அவர்கள் உலகில் இதுபோன்றவர்கள் நாயகர்கள் ஆகிறார்கள்.
இன்று காதர் இப்ராஹிம் நிலை என்பது ஒரு வணிகரின் தோல்வி. ஆன்மிகவாதியோ அறிவுத்துறையில் ஈடுபடுபவனுக்கோ இந்த தோல்விகள் நெருங்காது. காரணம் அவர்கள் நிறைவான தீர்வை ஒருபோதும் கொடுப்பவர்கள் அல்ல. அவர்களிடம் இருப்பது சிந்தனை தொகுப்பு. அது ஒவ்வொரு நாளும் அவர்களுக்குள் வளர்கிறது. தங்களின் நுண்ணுணர்வின் வழியாகவே சிக்கல்களையும் ஒட்டுமொத்த வாழ்வையும் அணுகுகிறார்கள். எனவே அவர்கள் தங்களுக்குள் உரையாடி உரையாடி ஆழங்கள் சென்று தனித்த பதில்களைக் கண்டடைகின்றனர். அப்பதில் பெரும் கூட்டத்துக்கு உடனடி தீர்வாகாது. எனவே அந்தப் பதிலை ஒரு படிமமாக மாற்றி அருகில் இருப்பவரைச் சிந்திக்கத் தூண்டுகிறார்கள். அந்தப் படிமத்தில் இருந்து தங்களுக்கான பதிலைக் கண்டடைய துணை நிற்கிறார்கள். எனவே, அவர்கள் கையில் முழுமையான தீர்வுக்குறிய எந்த ‘லேகியத்தையும்’ ஏந்தி வருவதில்லை. அதனால் அவர்கள் மீது ‘லேகிய’ விரும்பிகளுக்கும் ஈர்ப்பும் எழுவதில்லை.
காதர் இப்ராமை நம்பி பணம் போட்டவர்கள் போல இன்று சமூகத்தில் ஏராளமானவர்கள் உண்டு. எல்லாருக்கும் சம்பாதித்த பணம் விரைவிலேயே குட்டி போட வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்கள். பேராசைக்கு மேல் கண்ணீர், அழுத்தம், நம்பிக்கை என எதைக்கொண்டு பூசினாலும் அதன் பெயர் பேராசைதான். அதுபோல எனக்கும் என்னைப் போன்ற சிலருக்கும் நிதி உதவி வழங்கியிருந்தாலும் காதர் இப்ராஹிம் செய்ததும் செய்து வந்ததும் வணிகமே தவிர அறிவுச் செயல்பாடோ சேவையோ அல்ல.
காதர் இப்ராஹிம் குறித்து என் மனதில் இப்படி வகுத்துக்கொள்கிறேன்.
அ. அவர் திறமையானவர். சமுதாய நன்மைக்கு எது தேவை எனும் சிந்தனை உள்ளவர். அது வளர வேண்டும் என உளமாற விரும்புபவர்.
ஆ. தன் திறனை சிந்தனைகளால் செயல்களால் வளர்த்தெடுக்க தொடர் சாதகம் அவசியம். அதைச் செய்ய தனிமையும் மனோபலமும் தேவை. ஆன்மிகவாதியும் இலக்கியவாதியும் விஞ்ஞானிகளும் அதைச் செய்கிறார்கள். சிலர் அந்தச் சாத்தியங்களை உதறிவிட்டு தன் திறனை கவர்ச்சியான பொட்டலமாக வணிகமாக்குகிறார்கள். அதை காதர் இப்ராஹிம் செய்தார். வணிக எழுத்தாளர்களும் இயக்குனர்களும் செய்வது அதைத்தான்.
இ. இன்று காதர் இப்ராஹிம் அடைந்துள்ளது அந்த வணிகத்தின் வீழ்ச்சி. ஒரு வணிக இயக்குனருக்கு ஏற்படும் பலகோடி நட்டம் போன்றது அது.
இந்தச் சிக்கலை ஏந்திக்கொண்டு நீதிக்காக போராடுவதாகக் காட்டிக்கொள்பவர்களும் காதர் இப்ராஹிமுக்காக நிதி கேட்டு நிற்பவர்களும் இந்த வணிக உலகின் அசட்டுத்தனங்களை அறியாதவர்கள். அல்லது அறிந்தே மாற்று வணிகம் செய்பவர்கள்.


