அஞ்சலி: மஹாத்மனின் இரகசியப் பயணம்

மஹாத்மன் இறந்துவிட்டார்.

அவர் இறந்து மூன்று வாரங்கள் ஆகின்றன என சற்று முன்னர்தான் தெரிய வந்தது. அவர் இறந்ததை அவர் மனைவியும் அண்ணனுமே இன்றுதான் தெரிந்துகொண்டனர் என்பது மேலும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு முதியோர் பராமரிப்பு இல்லத்தில் இருந்த மஹாத்மனை மூன்று வாரங்களாக அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் பார்க்க வரவில்லை எனும் உண்மை சங்கடத்தை அளித்தது. நெஞ்சு வலியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் வழியிலேயே இறந்துள்ளார். இறுதி காரியங்கள் மருத்துவமனையிலேயே செய்துமுடிக்கப்பட்டு இஸ்லாமிய முறைபடி அடக்கம் செய்யப்பட்டார் எனக்கூறப்பட்டது.

மஹாத்மனை 2006 ஆம் ஆண்டு பா. அ. சிவத்தின் ‘உனது பெயர் நான்’ கவிதை வெளியீட்டு விழாவில்தான் சந்தித்தேன். அப்போது மஹாத்மனின் கவிதைகள் நாள், வார இதழ்களில் வெளிவந்துகொண்டிருந்தன. ‘மஹாத்மன் மற்றும் நண்பர்கள்’ எனும் பெயரில்தான் அவரது படைப்புகள் பிரசுரமாயின. வழக்கமாக நாளேடுகளில் வரும் கவிதைகளைவிட சற்று தரமானவை என்பதாலும் வித்தியாசமான பெயர் என்பதாலும் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. நிகழ்ச்சிக்கு அவர் வந்திருக்கிறார் எனத் தெரிந்தவுடன் உடனடியாகச் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர் உண்மையான பெயர் மகேந்திரா. குட்டையான ஆனால் திடகாத்திரமான தோற்றம். மின்னும் கண்களுடன் கூடிய சிரிப்பு. அன்று முழுவதும் சமகால இலக்கியங்கள் குறித்துப் பேசினோம். மஹாத்மன் மெல்ல மெல்லத் தன்னை ‘காதல்’ இதழுடன் பிணைத்துக்கொண்டார். அது உடனடியாகவும் நிகழ்ந்துவிடவில்லை.

விமர்சனக் கட்டுரைகளும் எதிர்வினைகளும்தான் முதலில் அவரிடம் இருந்து காதலுக்குப் படைப்புகளாக வந்தன. ‘காதல்’ இதழில் வரும் படைப்புகளையும் அவ்விதழின் போதாமைகளையும் விமர்சித்துக் கட்டுரைகள் எழுதினார். அவற்றை அப்படியே இதழில் பிரசுரித்தபோது மகிழ்ந்தார். இதழைக் கடுமையாக விமர்சித்ததன் வழி மஹாத்மன் என்னைச் சீண்டிப்பார்க்க நினைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. அந்த விமர்சனத்தை ஏற்றுக்கொண்டு, அவரிடம் நான் நட்பு பாராட்டியபோது நெருக்கமாகப் பழகத் தொடங்கினார். அப்படித்தான் காதலின் இறுதி இதழில் அவரது முதல் சிறுகதையான ‘மதம் பிடித்தது’ பிரசுரமானது.

மஹாத்மன் அதற்கு முன் சிறுகதை எழுதியதில்லை. ஆனால் தீவிரமான வாசகர் அவர். ஒவ்வொரு மாதமும் கணையாழி, காலச்சுவடு, உயிர்மை, தீராநதி என நான்கு இதழ்களையும் வாங்கி வைத்துக்கொள்வார். பக்கம் பக்கமாகப் படித்து ஒவ்வொன்றிலும் பல கோடுகளையும் குறிப்புகளையும் எழுதி வைத்துக்கொள்வார். ஏதாவது ஓர் உணவகத்தில் அமர்ந்து, அவர் வாசித்துச் சிலாகித்த படைப்புகளை என்னிடம் பகிர்வதும் உடன்படாத படைப்புகளை ஒட்டி விமர்சனத்தை முன்வைப்பதுமாக நேரம் கழியும். அப்படி நான் மஹாத்மனுடன் கழித்த நாட்கள் அதிகம். அதன் வழியாகத்தான் அவரிடம் கதைகள் உள்ளதை அறிந்தேன். அதை எழுதச்சொல்லி நச்சரித்ததைத் தொடர்ந்தே ‘மதம் பிடித்தது’ சிறுகதையை எழுதினார்.

ஷோபா சக்தியுடன் மஹாத்மன்

அந்தச் சிறுகதையின் வழியாகவே நான் அவரை மேலும் நெருக்கமாக அறிந்தேன். அக்கதை அவர் கிருத்துவ மதத்தைத் தழுவி தீவிரமான மதபோதகராகச் செயல்பட்ட காலத்தை எனக்குத் திறந்து காட்டியது. ‘காதல்’ இதழைத் தொடர்ந்து ‘வல்லினம்’ வந்தபோது ‘பரதேசி நடையும் அந்த அலறலும்’ எனும் சிறுகதையைக் கொடுத்தார். தலைநகரில் அப்படி ஒரு வாழ்க்கை முறை குறித்து நான் அறிந்ததில்லை. வீடற்றவர்கள், விளிம்புநிலை மனிதர்கள், மனம் பிறழ்ந்தவர்களின் வாழ்வை அப்புனைவு நெருக்கமாக அறிமுகப்படுத்தியிருந்தது. மஹாத்மனின் இருள் உலக வாழ்க்கை அறிய வந்தது அப்படித்தான்.

இயல்பாகவே எனக்கு இருக்கும் துடிப்பும் எதையும் நெருங்கிப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும் அவர் பின்னால் என்னைச் சுற்ற வைத்தது. கோலாலம்பூர் பெருநகரில் அவர் பரதேசியாகச் சுற்றிய இடங்களை எனக்கும் அறிமுகம் செய்து வைத்தார். இலவச உணவுகளைப் பழகிக்கொடுத்தார். இலக்கில்லாமல் நடந்து நடந்து காலத்தைக் கடக்கும் கலையைச் சொல்லிக்கொடுத்தார். பரதேசி என்பதே தன் அடையாளம் என அவர் நம்பினார். எனவே எங்கும் நிலைக்காமல் நகர்ந்துகொண்டிருப்பதே அவர் இயல்பாக இருந்தது. எனவே அவர் காணாமல் போவதும் இயல்பாக நடந்தது.

சொல்லிக்கொள்ளாமல் தன்னைக் காணாமல் ஆக்கிக்கொள்வதில் மஹாத்மன் திறன் பெற்றிருந்தார். காணாமல் போகும் ரகசிய பாதைகளை அவர் அறிந்து வைத்திருந்தார். அதற்கு முதல்நாள் வரை அப்படி ஒரு முடிவை எடுக்கப் போகிறார் என யாருக்கும் தெரியாது. திடீரென கைப்பேசியை அடைத்துப் போட்டுவிடுவார். அதுதான் அவர் தன்னைத் தொலைத்துக்கொண்டார் என்பதற்கான அறிகுறி. அவர் எங்கு தங்குகிறார், யாருடன் இருக்கிறார் என எந்தத் தகவலும் தெரியாததால் அவரே திரும்பி வராமல் தொடர்புகொள்வது முடியாத காரியமாக இருந்தது.

வல்லினம் இதழைத் தொடங்கியபோது அதை கோலாலம்பூரில் இருக்கும் புத்தகக் கடைகளில் சேர்ப்பிக்கும் பணியை அவரிடம் ஒப்படைத்தேன். இரண்டாவது  இதழை அச்சுக்கு அனுப்பிவிட்டு ஒரு விபத்தில் காயம்பட்ட என் வலது காலில் மூட்டு அறுவை சிகிச்சை செய்துக்கொண்டேன். இதழ் அச்சகத்தில் இருந்து வெளிவந்ததும் மஹாத்மன் பார்த்துக்கொள்வார் என நம்பியிருந்தேன். அப்போது அவர் காணாமல் போயிருந்தார். அப்படிக் காணாமல் போனால் எனக்கு ஒரு கடிதம் எழுதுவார். அம்முறை எழுதிய கடிதத்தில் ‘உங்கள் காலில் ஆபரேஷன் செய்யப்பட்டிருந்தாலும் எப்போதும் துடிப்புடன் இருக்கும் உங்கள் மனம் என் உதவியின்றியே இவ்விதழை  நடத்த வைக்கும்’ எனும் வாக்கியம் இருந்தது.

அவ்வரி என்னை இயங்க வைத்தது. அப்போதெல்லாம் ‘மெனுவல்’ ரக கார். கால் 90 டிகிரிக்கு மேல் மடங்கக் கூடாது என பாதுகாப்பு இரும்பு கவசத்தைப் பொறுத்திருந்தனர். அந்தக் காலை இழுத்துக்கொண்டு கோலாலம்பூர் தபால் நிலையத்திற்கு இதழ்களை அனுப்பச் சென்றுவிட்டேன். எப்படிக் காரை ஓட்டினேன் என இப்போதுவரை புரிந்துகொள்ள முடியவில்லை. யார் இல்லாதபோதும் நான் இயங்குவேன் என நினைத்தேனா? அல்லது அவர் கடிதம் என் தன்னிரக்கத்தைத் துடைத்தெரிந்ததா? எனக்கு நினைவில் இல்லை. வீட்டிற்கு வந்த பா.அ. சிவம் விசயம் அறிந்து அங்கு வரவும் ஒருவழியாக இதழ்களை சந்தாதாரர்களுக்கு அனுப்பி முடித்தோம்.

இரண்டு மாதங்களில் மஹாத்மன் எப்போதும்போல இயல்பான சிரிப்புடன் தேடி வந்தார். கண்களில் ஒளி மின்னச் சிரிக்கும் அவரை கடிந்துகொள்ள மனம் வந்ததில்லை. ”கொஞ்சம் பணப்பிரச்சினை… அதான் காணாம போயிட்டேன்,” எனக்கூறிச் சிரித்தார்.

மஹாத்மனுக்கு எப்போதும் பணப்பிரச்சினை இருந்தது. எனவே, எப்போதும் யாரிடமும் பணம் கேட்க அவர் தயங்கியதில்லை. அவர் பணம் கேட்க காரணம் ஒன்றுதான். ”நம்பர் எடுக்கணும்… ஒரு அம்பது வெள்ளி கிடைக்குமா?” என்பார். நம்பர் அடித்தால் லட்சாதிபதியாகிவிடலாம் எனும் எண்ணம் அவர் ஆழ்மனதில் பதிந்திருந்தது.

அவர் வாழ்நாளில் ஒருமுறை நம்பர் அடித்துள்ளது. லட்சத்தில் என நினைவு. அந்தப் பணத்தைக் கொண்டு ஒரு வியாபாரம் தொடங்கினார். அந்த வியாபாரம் பல லட்சம் நட்டத்தில் இழுத்துவிட கடன் தொல்லைகளுக்கு உள்ளானார். ஆனால், லட்சங்கள் கைகளில் புரண்ட அக்காலம் அவர் மனதில் எப்போதும் பசுமையாகவே இருந்தன. அக்காலத்தில் கேளிக்கைகளிலும் கொண்டாட்டங்களிலும் திளைத்திருந்த அனுபவங்களைச் சொல்லிச் சொல்லி மகிழ்வார். மீண்டும் ஒருமுறை நம்பர் அடிக்கும்போது நிச்சயம் தான் இழந்ததையெல்லாம் மீட்டுவிடுவேன் என அழுத்தமாகச் சொல்வார். நம்பர் எடுப்பதில் அவர் கஷ்டப்பட்டு சேர்க்கும் பணம் கரைந்தது என்றால் நம்பர் அடிக்கும் கற்பனையில் வளமான காலம் கரைந்தது.

”ஒரே ஒரு நம்பர் மிஸ்ங்கய்யா” என நூறு முறையாவது சொல்லிப் புலம்பியிருப்பார். நம்பர் எடுக்கும் உலகைப் பற்றி என்னிடம் எவ்வளவு சுவாரசியமான கதைகள் சொல்லியும் நான் அதை முயன்று பார்க்காதது அவருக்கு ஆச்சரியமாக இருக்கும். இப்போதுபோல அப்போதும் என் மனதில் இருந்த பேராசையெல்லாம் மலேசியத் தமிழ் இலக்கியத்தை சில அடிகளாவது முன்னோக்கி நகர்த்துவதுதான். எனவே என் உலகியல் சார்ந்த தேவைகள் மிகக் குறைவாகவே இருந்தன. நான் அப்படி இருப்பதைதான் மஹாத்மனும் விரும்பினார். ”ரொம்ப நல்லதுங்கய்யா” என்பார்.       

வல்லினம் வேகமாக நகர்ந்துகொண்டிருந்த காலத்தில் மீண்டும் மஹாத்மன் காணாமல் போக அவரைத் தேடத் தொடங்கினேன். கோலாலம்பூர் பெருநகரம் ஓரளவு பரிச்சயமாகியிருந்தது. எங்குத் தேடியும் கிடைக்காததால் அவரது அடையாள அட்டை எண்ணை வைத்து காவல் துறை உதவியை நாடினேன். எனக்கு இரண்டு அதிர்ச்சி காத்திருந்தது. முதலாவது, மஹாத்மன் சில ஆண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் மதத்தைத் தழுவியிருந்தார். இரண்டாவது, அவர்மேல் கொலை வழக்கு ஒன்று இருந்தது. அதன் பொருட்டு கைது செய்யப்பட்டு சாட்சியங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டிருந்தார்.

நான் அடுத்து என்ன செய்வதென தெரியாமல் இருந்தபோது அவரிடமிருந்து கடிதம் ஒன்று வந்தது. கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தான் பாதுகாவலராகப் பணி செய்வதாகவும் தினமும் அங்கு கர்ஜிக்கும் இரண்டு சிங்கங்களைத் தான் பார்ப்பதாகவும் அதைப் பார்க்கும்போது என் நினைவு வருவதாகவும் எனவே அக்கடிதத்தை எழுதுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். எனக்கு அந்தச் சிங்கச் சிற்பங்களை கோலாலம்பூர் மகாமாரியம்மன் ஆலயம் முன் அமைந்துள்ள ஒரு சீனக்கோயிலில் மஹாத்மனுடன் பார்த்த நினைவு இருந்தது. உடனே புறப்பட்டு அந்தக் கோயிலுக்குப் போனேன். எதிர்புறம் இருந்த கட்டடத்தின் மூலையில் பாதுகாவலரின் வெண்ணிற உடையுடன் ஒருவர் எதையோ வாசித்துக்கொண்டிருந்தார்; அவர்தான்.

மெல்ல நெருங்கினேன், ”வாங்கய்யா” என்றார். ”நீங்க கண்டுப்பிடிச்சி வருவிங்கன்னு தெரியும்” எனக்கூறி சிரித்தார். அன்று முழுவதும் பேசிக்கொண்டிருந்தோம். ”நீங்க கிறிஸ்த்துவ மதத்துல தீவிரமான மத போதகர்னு சொன்னீங்க… எப்படி இஸ்லாத்துக்கு மாறுனீங்க?” என்றேன். ”தேடல்தான் காரணம்” என்றவர் தான் மாறிய சூழலை விரிவாக விளக்கினார். ”ஏன் உங்க மேல கொலகேசு இருக்கு?” என்றேன். அந்தக் கேள்வியை அவர் எதிர்ப்பார்க்கவில்லை. எனக்கு அப்படித்தான் நேரடியாகக் கேட்கவும் வரும்.  

”நடந்தது என்னன்னா” எனத் தொடங்கி சட்டவிரோதமாக நம்பர் எழுதும் நபரால் ஏமாற்றப்பட்டு அதனால் நிகழ்ந்த கைகலப்பு என சுவாரசியமான ஒரு கதையைச் சொல்லி முடித்தார். பின்னர் அதையே எனக்கு ‘நடந்தது என்னவென்றால்…’ எனும் தலைப்பில் சிறுகதையாக எழுதியும் கொடுத்தார்.

மஹாத்மனுக்கு சிறை அனுபவங்கள் இருந்தன. பொது உடமைகளைத் திருடி விற்ற குற்றங்களுக்காகவும் முக்கியப் பிரமுகர்கள் கோலாலம்பூர் வரும்போது வங்கியோரங்களில் படுத்திருந்ததற்காக என சில முறை சிறை சென்று வந்த அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். ஆனால் அவரால் யாரையும் காயப்படுத்த முடியாது என்பதை நான் ஆழமான உணர்ந்திருந்தேன். இன்னொருவரின் அழுகையின் அவர் தன் வாழ்வை நகர்த்த ஒருபோதும் துணிந்ததில்லை. அதேபோல இலக்கியத்தில் தான் கொண்டிருந்த தீவிரத்தின் மேல் உறுதியாக இருந்தார். பண நெருக்கடியாக இருந்த காலத்தில் எழுத்தாளர் சங்கம் அவருக்கு விருது கொடுக்க விருப்பம் தெரிவித்தபோது அதை வேண்டாம் என மறுத்திருந்தார். “அவங்க இலக்கிய போக்குல நமக்கு உடன்பாடில்ல… காசு மட்டும் எதுக்குய்யா” என்றார் சாதாரணமாக. அதுதான் மஹாத்மன். அவருக்குப் பணத்தேவை இருந்தது. அதைக்காட்டி விரும்பாத காரியங்களுக்கு அவரை அழுத்துவது நடவாத காரியம்.

வழமையான ஒரு வாழ்க்கை முறைக்கு மஹாத்மன் தயாராக இருந்ததில்லை. கொந்தளிப்பும் நிலைகொள்ளாமையும் அவரை அலைக்கழித்தபடியே இருந்தன. வாழ்வு அவருக்கு இருண்ட புதைக்குழியாகவே எப்போதும் தோற்றம் தந்தது. எப்போதும் அதிலிருந்து தப்பிக்க முயன்றார். அப்படி ஒருமுறை வாழ்க்கையை வெறுத்துப்போய் காட்டுக்குள் நுழைந்து கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டு பூர்வக்குடிகளால் காப்பற்றப்பட்ட கதையை ‘கடவுள் கொல்லப் பார்த்தார்’ எனும் தலைப்பில் எழுதினார். வாழ்வின் நிதர்சனங்களில் இருந்து இன்னொரு தப்பிக்கும் முறையாக அவர் தேர்ந்தெடுத்த பாதைதான் மது.

மஹாத்மனுக்கு மது வாங்கி கொடுக்கும் நண்பர்கள் ஒவ்வொரு தருணமும் அவருக்கு கிடைத்தபடியே இருந்தனர். அவர்கள் வெவ்வேறு ஆட்களாக மாறிக்கொண்டே இருந்தனர். அதில் யாரையும் எனக்குத் தெரியாது. ஆனால் நான் ஒவ்வொரு முறையும் சொல்வேன், ”உங்களுக்கு மது வாங்கி கொடுக்கும் ஒவ்வொருவரும் நீங்கள் விரும்பும் எழுத்துலகில் உங்களைச் சிறக்க வைக்க விரும்பவில்லை. அவர்களுக்குச் சுவாரசியமாகப் பேச ஒரு துணை தேவை. ஊறுகாய் போல” என்பேன். அவர் அதை பொருட்படுத்த மாட்டார்.

மதுபோதையில் இருக்கும் மஹாத்மனிடம் வெளிபடும் கதைகள் பெரும்பாலும் புனைவாக இருக்கும். தனக்குத் தெரிந்த மனிதர்கள் குறித்து தனக்குத் தெரியாத கதைகளை உருவாக்குவார். முதலில் அவற்றை உண்மை என்றே நான் நம்பினேன். பின்னர் மெல்ல மெல்ல அவர் எவ்வாறு கதைகளை உருவாக்குகிறார் என்பதை அறிந்துகொண்டேன்.

ஒருமுறை ஒரு வார இதழில் அவரை வேலைக்குச் சேர்த்துவிட்டேன். அந்த அலுவலகத்திலேயே அவர் தங்கிக்கொள்ள ஏற்பாடும் செய்துக்கொடுத்தேன். ஆனால் நள்ளிரவில் ஆடம்பர கார்களில் வெளியேறும் அவர் அதிகாலையில்தான் அலுவலகம் திரும்பினார். எப்போதும் ரகசியமான ஒரு வாழ்க்கை முறை வைத்திருக்கும் அவரை நான் கண்டிக்க வேண்டியதாய் போனது. பத்திரிகை உரிமையாளர் என் மீது உள்ள நம்பிக்கையில் அவரைப் பத்திரிகை அலுவலகத்தில் தங்க வைத்துள்ளதையும் இப்படி வெளியேறுவதோ அந்நியர்கள் வருவதோ என்மீதான நம்பிக்கையை இழக்க வைக்கும் என்றேன். அவருக்கு அது கடுமையான கோபத்தை மூட்டியது. அலுவலகத்தின் உள்ளேயே கோபமாக அங்கும் இங்கும் நடந்து தன்னை ஆற்றுப்படுத்திக்கொண்டார். பத்திரிகை நிர்வாகம் முறையான சம்பளம் கொடுக்காமல் தன்னை ஏமாற்றுகிறது என்றும் இதனால் இரவில் தான் பணம் சம்பாதிக்க வேறு வேலை செய்வது எப்படிக் குற்றமாகும் எனக்கேட்டார். அப்போதும் அவர் போதையில்தான் இருந்தார். நான் அதை அப்படியே நம்பி பத்திரிகை நிர்வாகியிடம் நியாயம் கேட்கப்போக, அவர் ஒரு நோட்டு புத்தகத்தை என் முன் போட்டார். அதில் மஹாத்மன் அவ்வப்போது வாங்கிய தொகையின் பட்டியல் இருந்தது. அது சம்பளத்தின் தொகையைத் தாண்டிச் சென்றுக்கொண்டிருந்தது. நான் அவர் முன் அவமானத்தில் தலைகுனிந்து நின்றேன். இது எனக்கும் மஹாத்மனுக்கும் இடையில் கூடுதல் கசப்பை உருவாக்கியது.

அது ஓர் அரசியல் பத்திரிகை. அந்தப் பத்திரிகையில் மஹாத்மன் பிழைத்திருத்துநராகப் பணியாற்றினார். அப்பத்திரிகையில் வரும் அரசியல் கட்டுரைகளால் தனக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாக மீண்டும் புகார்களுடன் வந்தார் மஹாத்மன். அவர் அடைந்திருந்த அச்சமும் பதற்றமும் சொற்களும் அப்படியே உண்மையாக இருந்தன. பொறுமையாக ஆராய்ந்தபோது அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது தெரியவந்தது. மஹாத்மனுக்கு இரண்டு உலகங்கள் இருந்தன. ஒன்று அவர் கற்பனையில் உருவாக்கி வைத்திருந்த உலகம்; மற்றது நிஜத்தை எதிர்க்கொள்ளாமல் அவர் ஓடி மறையும் உலகம். நிஜ உலகில் உள்ள கதாபாத்திரங்கள் அவர் கற்பனை உலகில் புதிய புதிய பாத்திரங்களை எடுத்தனர். அதனால் தேவையற்ற சிக்கல்கள் அலுவலகத்தில் உருவானது. அது மெல்ல மெல்ல வெவ்வேறு வகையில் வளர்ந்தபோது, ஒருநாள் அவர் வேலையை விட்டுப் போவதாகச் சொல்லிவிட்டு அகன்றார்.

அக்காலக்கட்டத்தில் மஹாத்மன் காணாமல் போனார் எனச் சொல்ல முடியாது. பேசுவதைப் பெரும்பாலும் குறைத்துக்கொண்டார். ‘ரமேஷ் டே’ எனும் பெயரில் கவிதைகள் எழுதினார். “ஏன் அந்தப் பெயர்?” எனக்கேட்டபோது “என்னை டேய் ரமேஷ் என்றுதான் அழைப்பார்கள். வீட்டில் கூப்பிடும் பெயர் அது. அதனால் ரமேஷ் டே” என்றார். அவர் கவிதைகள் குறித்த என் அபிப்பிராயங்களை அறிவதில் ஆர்வமாக இருந்தார். அது அவருக்கு வரவில்லை என்பதே என் கருத்தாக இருந்தது. விமர்சனங்களை “ஓ” எனச் சொல்லிக் கேட்டுக்கொண்டு சிரித்துக்கொள்வதோடு சரி. மலேசியாவில் அவருக்குப் பிடித்தக் கவிஞர் மனஹரன். அவரைப் பார்த்தே கவிதை எழுத வந்ததாகக் கூறுவார். நான், “நீங்கள் ஒரு நாவலாசிரியன்” என்பேன். மேலும் சிரிப்பார்.

இலக்கியம்தான் எங்களை சேர்க்கும் முடிகயிறாக இருந்தது. எப்படியும் ஏதோ ஒருவகையில் இலக்கியம் வழியாகவே உரையாடி வந்தோம்.

மீண்டும் அவர் என்னிடம் நெருக்கமாக வந்தபோது, நான் கலை இலக்கிய விழாவின் பணிகளைத் தொடக்கியிருந்தேன். அதில் மஹாத்மனின் சிறுகதைகள் தொகுக்கப்பட்டு நூலாக வர வேண்டும் எனும் விருப்பம் இருந்தது. குறைந்தது பத்து சிறுகதைகளாவது இருக்க வேண்டுமென சில கதைகளை எழுத வைத்து நூலாக்கினேன். வல்லினம் பதிப்பில் வந்த முதல் நூல் மஹாத்மன் சிறுகதைகள்தான். அதற்கு அட்டைப்படம் தேடியபோது சிதைந்த முகம் கொண்ட மனிதனின் ஓவியம் ஒன்றை அவரே தேர்ந்தெடுத்து அதுவே வர வேண்டும் எனப் பிடிவாதமாக இருந்தார். நூல் வெளிவந்ததில் பெருமகிழ்ச்சி அவருக்கு. அதி உற்சாகமான மஹாத்மனை அப்போதுதான் பார்த்தேன். நூல் வெளிவந்த வேகத்தோடு வல்லினம் இணையத் தளத்துக்கு பரதேசியின் நாட்குறிப்புகள் எனும் தொடரைத் தொடங்கினார். நான்காவது பாகம் எழுதிக்கொடுத்துவிட்டு காணாமல் போயிருந்தார்.

எனக்கு அதன் காரணம் புரியவில்லை. ஆனால் ‘கலை இலக்கிய விழாவை’ நடத்த நான் பணம் இல்லாமல் திண்டாடுகிறேன் என்றும், பணம் கேட்க தயங்குவதாகவும் கூறி எங்களுக்குப் பொதுவாக நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தார் என்பது எனக்குச் சில மாதங்கள் கழித்தே தெரிந்தது. அந்த நண்பர் என்னை அழைத்து, தயங்கியபடி பணத்தைக் கேட்டபோதுதான் மஹாத்மன் நீண்டகாலமாக திரும்ப வராத காரணம் புரிந்தது. அவரது கடனைக் கட்டி முடித்து மஹாத்மனுடனான தொடர்பை அதோடு நிறுத்திக்கொள்வதென முடிவெடுத்தேன். எனக்கு அவர்மீது வருத்தம் இல்லை. அவர் இயல்பை நான் அறிந்திருந்தேன். உண்மையில் அந்தப் பணத்தை மீண்டும் செலுத்த அவர் முயன்று தோற்றப்பின்பே காணாமல் போயிருந்தார். ஆனால் அப்போதுதான் ஆசிரியர் தொழிலில் குறைந்த வருமானத்தில் சேர்ந்திருந்த என்னால் இதுபோன்ற நெருக்கடிகளைத் தாங்கிக்கொள்ள முடியாது எனத் தோன்றியது.

மஹாத்மனை நான் மீண்டும் சந்தித்தது ஶ்ரீதர் ரங்கராஜ் வழியாகத்தான். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் சந்தித்தோம். இலக்கியம் அன்றி வேறொன்றும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் இந்த இடைபட்ட காலத்தில் அவர் என் குறித்து வெவ்வேறு நண்பர்களிடம் தன் கற்பனையின் ஆழத்தில் இருந்து சொல்லி வைத்த கதைகள் சில காதுக்கு வந்திருந்ததால் நெருக்கம் காட்ட முடியவில்லை. ‘புனைவு நிலை உரைத்தல்’ எனும் நூலில் சை.பீர்முகம்மது சிறுகதைகள் குறித்து விமர்சனம் எழுதிக்கொடுக்கச் சொல்லி அக்கட்டுரையை நூலில் பதிப்பித்தேன். மஹாத்மன் முன்பைவிட நிதானமாகத் தெரிந்தாலும் அவரது மொழியில் பிறழ்வு இருந்தது. சிந்தனையும் சீராக இல்லை. நாவல் ஒன்றை எழுதும் முயற்சியில் உள்ளார் எனத் தெரிந்தது. அது வந்தால் மலேசிய இலக்கித்திற்கு வளம் எனச் சொல்லி வைத்தேன்.

தொடர்ந்து வல்லினத்தில் சில நிகழ்ச்சிகளுக்கு வந்தார் மஹாத்மன். கண்பார்வையில் பழுது இருந்தது. பார்வையின் வெளி குறைந்திருந்தது. வாசிக்கச் சிரமப்பட்டார். தொடர்ந்து உடல் நலத்தில் சீர்கேடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதுதான் அவர் திருமணம் செய்துக்கொண்டுள்ளார் என்பதே தெரிந்தது. அத்திருமணம் எப்போது எங்கே நிகழ்ந்தது என்பது குறித்த என்ற தகவலும் இக்கட்டுரையை எழுதும் இந்த நொடி வரை எனக்குத் தெரியாது. மஹாத்மன் ரகசியங்களால் ஆனாவர். வாழ்வைப் புனைவாகவே திரித்துக்கொண்டவர்.

2022 ஆம் ஆண்டு, நோய் உச்சமாகி மருத்துவமனையில் நினைவிழந்த நிலையில் அவரைப் பார்த்தபோது வல்லினம் வழியாக நன்கொடை திரட்டி அவரை மீட்க முயன்றோம். அவரும் மீண்டார். ஆனால் நினைவுகள் மீளவில்லை. ”நான்தான் நவீன்” என்றால் ”ஆ… நவீன்” எனச் சிரிப்பார். அவர் சொல்லும் நவீன் யாரென அவர் மட்டுமே அறிந்திருந்தார்.

இன்று அவர் இறந்துவிட்டார் எனும் செய்தியைக் கேட்டவுடன் முதலில் நம்ப முடியவில்லைதான். இறுதிவரை அவரது உடலை அவரை அறிந்தவர்கள் யாருமே பார்க்கவில்லை. எனவே அது முழு உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை எப்போதும்போல அவர் கோலாலம்பூரில் உள்ள ரகசிய பாதைகளின் வழியாகத் தன்னைத் தொலைத்துக்கொண்டிருக்கலாம்.

அப்படி நினைத்துக்கொள்வது மட்டும்தான் அவருக்கு செலுத்தக் கூடிய அஞ்சலியாக இருக்கும்.  

(Visited 225 times, 12 visits today)