
நூலை ஷோப்பியில் வாங்க: https://my.shp.ee/1vFtmrs
நேற்று (பிப்ரவரி 1) எனது முதல் மலாய் சிறுகதை தொகுப்பான ‘Pita Suara Mona Fandey’ மாற்று புத்தகக் கண்காட்சியில் வெளியீடு கண்டது. இந்தக் கண்காட்சி ஜனவரி 29 முதல் பிப்ரவரி 2 வரை சென்ட்ரல் மார்க்கெட்டில் (Central Market) நடைபெறுகிறது.
மாற்று புத்தகக் கண்காட்சி (Kuala Lumpur Alternative Bookfest – KLAB) என்பது மலேசியாவில் தனி நபர்கள் முயற்சியில் இயங்கும் பதிப்பகங்களும் மாற்று குரல்களை வெளிப்படுத்தும் எழுத்தாளர்களும் இணைந்து நடத்தும் தனித்துவமான புத்தகத் திருவிழா.
இவ்விழா 2008 முதல் நடைபெற்று வருகிறது. எளிமையாகத் தொடங்கப்பட்ட இம்முயற்சி இன்று கோலாலம்பூரில் முக்கிய கலாச்சார நிகழ்வாக மாறியுள்ளது. புனைவுலகில் பல்வேறு சோதனை முயற்சிகளையும் விமர்சனப் பார்வைகளையும் உருவாக்க இக்களம் தொடர்ந்து பங்காற்றி வருகிறது. இவ்விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில்தான் என்னுடைய சிறுகதை தொகுப்பும் வெளியீடு கண்டது.


The Biblio Press பதிப்பகம் என்னுடைய இந்நூலை பதிப்பித்திருந்தது. உண்மையில் 2022இல் இந்நூலைப் பதிப்பிக்கும் முயற்சி நண்பர் கிரிதரனால் தொடங்கப்பட்டாலும் அதை விற்பனைக்குக் கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டது. என்னுடைய தேவைக்காக மட்டுமே சில பிரதிகளைப் பெற்றுக்கொண்டேன். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாண்டு இந்நூல் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டது.

நிகழ்ச்சி சரியாக மாலை 5 மணிக்குத் தொடங்கியது. நூல் குறித்து எழுத்தாளர், பதிப்பாளர் அமீர் முஹமட் (Amir Muhammad), அஸ்ரின் ஃபௌஸி (Azrin Fauzi), ஆகியோர் உரையாற்ற அமிர் எனும் இளைஞர் வழிநடத்தினார். சிறுகதை தொகுப்புக்கு ஏன் இத்தலைப்பு வைக்கப்பட்டது? சிறுகதைகள் எவ்வாறு தொகுக்கப்பட்டன? பேய்ச்சி நாவல் ஏன் தடை செய்யப்பட்டது? மொழிபெயர்ப்பு ஏன் முக்கியமானது? மலேசியாவில் வேறு முக்கியமான தமிழ் எழுத்தாளர்கள் யார்? என்பன போன்ற கேள்விகள் என்னை நோக்கி கேட்கப்பட்டன.

அனைத்திற்கும் ஓரளவு தெளிவான பதில்களை மலாய்மொழியில் கூற முடிந்தது.
உரையாடலில் அஸ்ரின் ஃபௌஸியின் நூல் குறித்த பார்வை என்னை பெரிதும் கவர்ந்தது. ஒவ்வொரு சிறுகதை குறித்தும் நுட்பமாக ஆராய்ந்து பேசினார். என் சிறுகதைகளில் வரும் விலங்குகளின் தனித்துவம், வரலாற்று நிகழ்வுகளின் தாக்கம், கற்பனையின் உச்சத்தருணம் என விரிவாகவே பேசினார்.



அமீர் முஹமட் மொழிபெயர்ப்பாளர் சரவணனின் மலாய் மொழி ஆளுமையைச் சிலாகித்தார். சிகண்டி நாவலின் பதிப்பாளரான அவர், சரவணனுடன் சிகண்டி நாவல் மொழிப்பெயர்ப்பில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அதை ஆமோதித்த அஸ்ரின், தானும் இத்தொகுப்பை வாசித்தபோது மொழிப்பெயர்ப்பாக உணர முடியாத அளவுக்கு அதன் மொழியாளுமை இருந்ததாகக் கூறினார்.

நான் கடைசியான என் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டேன். ”நான் இங்கு எவ்வளவு மகிழ்ச்சியில் இங்கு அமர்ந்துள்ளேன் என பலருக்கும் தெரியாது. என் மூத்த எழுத்தாளர்கள் பலரும் ஏங்கிய தருணம் இது. இதற்காக பல ஆயிரம் செலவு செய்தும் அவர்கள் புனைவுகளுக்கு கவனம் கிடைக்கவில்லை. எனக்கு அவ்வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் இதனால் பெருமை அடைகிறேன். இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் வாசிக்கப்பட்டு வாசகர்களால் கருத்து பகிரப்பட்டால் மேலும் மகிழ்வேன்,” என்றேன்.



நிகழ்ச்சி சரியாக 6 மணிக்கு நிறைவடைந்தது. பல மலாய் வாசகர்களும் நூல்களைப் பெற்றுக்கொண்டு கையொப்பம் பெற்றுக்கொண்டனர். நிறைவான நாள் அது.