
ஜனவரி 13 ஆம் திகதி அ. ரெங்கசாமியின் மூத்த மகன் சுந்தரத்திடமிருந்து அழைப்பு வந்தபோதே அது ஏதோ துக்கமான செய்தியைத் தாங்கி வருவதாக உள்ளுணர்வு சொன்னது. பெரும்பாலும் துக்கச் செய்திகளைத் தாங்கி வரும் அழைப்புகளுக்கு அத்தகைய தன்மை இருப்பதுண்டு. அவ்வழைப்புகளின் சத்தம் அழுகைபோல ஒலிக்கக்கூடியது.
“அப்பா இறந்துட்டாருய்யா,” சுந்தரம் அண்ணனிடமிருந்து சுரத்தில்லாதச் சொற்கள்.
“எப்போது?” என்றேன். என் சொற்கள் உலர்ந்துவிட்டன.
“மதியம் இரண்டு மணிக்கு,” என்றார். நான் மணியைப் பார்த்தேன். மாலை 5. நான் அப்போது வெளியில் இருந்தேன். செய்துக்கொண்டிருந்த வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு பந்திங்கில் இருக்கும் அவர் வீட்டுக்குப் புறப்பட்டேன்.
மாலை ஐந்து மணி என்பதால் கடும் சாலை நெரிசல். மறுநாள் பொங்கல் விழா கொண்டாட்டத்திற்காகச் சாலை ஓரங்களில் கரும்பு, பானை, பால் என பல்வேறு பொருட்கள் விற்பனையாகிக்கொண்டிருந்தன. ஆங்காங்கு திடீர் கடைகள் உருவாகியிருந்தன. எனவே வழக்கத்தைவிட கூடுதல் நெரிசல்.
நான் சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு, பூமாலை வாங்கச் சென்றேன். கடைக்காரர்கள் நான் பொங்கலுக்கு மாலை வாங்க வருவதாக எண்ணி இன்முகத்துடன் வரவேற்றனர். “சாவுக்கு மாலை வாங்கணும்,” என்றபோது ஒரு கடைக்காரர் கொஞ்சம் ஏற இறங்க பார்த்து “வெத்தல உள்ள மாலை வாங்காதீங்க,” என்றவர் ரோஜா மாலையைப் பரிந்துரைத்தார். வண்ணமிக்க மாலை கைகளுக்கு வந்தவுடன் துக்கத்தின் கசகசப்பு அதிகரித்தது நகைமுரண். வாகன நெரிசல்களுக்கு மத்தியில் காரை எடுத்துக்கொண்டுப் புறப்பட்டேன். பல்வேறு எண்ணங்கள் மனதினில் மோதி நெரித்தன.
சில மாதங்களுக்கு முன்னர்தான் எழுத்தாளர் ரெங்கசாமி அவர்களின் துணைவியார் காத்தாயி அவர்களின் இறுதி சடங்கில் கலந்துகொண்டேன். என்னை அடையாளம் கண்டுக்கொண்ட ரெங்கசாமி அவர்கள் என்னைச் சந்திக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். என்னிடம் ஏதோ ஒன்று முக்கியமாகப் பகிர இருப்பதாகக் கூறினார். சில வாரங்களுக்குப் பின் நான் அரவின் குமாரை அழைத்துக்கொண்டு சென்றேன். ஏன் திடீரென என்னைக் காண விரும்புகிறார் என்பது கொஞ்சம் பதற்றத்தை உண்டாக்கியது. என்னிடம் என்ன பகிர உள்ளார் என்பதை அறிய ஆர்வமும் இருந்தது.
ரெங்கசாமி அப்போது தன் மகள் வீட்டில் இருந்தார். நான் ரெங்கசாமி அவர்களை முதன்முறையாகச் சந்தித்தது அவர் எண்பதாவது வயதை நெருங்கும்போதுதான். அப்போது முதுமை அவருக்கு ஒருவித கம்பீரத்தைத் தந்திருந்தது. அதுவே ஒரு கோர மிருகமாக உருமாறி அவர் உடலை கௌவித்தின்னத் தொடங்கியிருந்ததைக் கண்டேன். தளர்ந்திருந்தார். என்னைக் கண்டவுடன் உற்சாகத்தைத் திரட்டிக்கொண்டுப் பேசத் தொடங்கினார்.

“என்னிடம் மூன்று கதைகள் இருக்கு. அதை நான் என்றாவது எழுத வேண்டுமென நினைத்திருந்தேன். ஆனால் இனி என்னால் எழுத முடியாது. என் காலம் முடிந்துவிட்டது. எனவே அக்கதைகளை நம்பிக்கையான ஒருவரிடம் கடத்த நினைத்தேன். அதான் உங்களை அழைத்தேன்.” என்றார். எனக்கு நெகிழ்ச்சியும் பதற்றமும் ஒருங்கே பற்றிக்கொண்டன. அவர் நம்பிக்கையை என்னால் எப்படி நிறைவு செய்ய முடியும் எனத் தயங்கினேன். ஆனால் அவர் சொல்லும் கதைகளைச் செவிமடுப்பதன்றி வேறு வழி என்னிடம் இல்லை.
அவர் தன் வாழ்க்கையில் சந்தித்த மூன்று பேருடைய மூன்று வெவ்வேறு கதைகளைக் கூறினார். மூன்றுமே மானிட அழிவுகள் குறித்தக் கதை. சிலவற்றைக் குறிப்பெடுத்துக்கொண்டேன். அக்கதைகள் மனதிலிருந்து அகலாது எனும் நம்பிக்கை இருந்தது. மூன்று கதைகளையும் கூறிவிட்ட நிறைவில், “சொல்லிட்டேன் யா. இனி இந்தக் கதைகளை என்ன செய்வதென்பது உங்கள் விருப்பம். இனி இவை உங்கள் கதைகள்,” என்றார்.
நாங்கள் புறப்பட்டோம். நெடுநாட்களுக்குப் பின்னர் அவர் உற்சாகமாகப் பேசி பார்ப்பதாக அவர் பிள்ளைகள் கூறினர். மகிழ்ச்சியாக இருந்தது. ரெங்கசாமி எப்போதும் கதைகளுடன் வாழ்பவர். கதைகளைச் சொல்லும்போதே அவர் முழுமையடைகிறார். ஆனால் உண்மை மனிதர்களின் கதைகள் மீதே அவருக்கு விருப்பம் அதிகம். அம்மனிதர்கள் மீது கற்பனையை மெல்லிய ஒப்பனையாக படர விடுவதே அவரது புனைவுலகம்.
நான் ரெங்கசாமியின் புனைவுலகை அறிந்துகொண்டது மிக தாமதமாகத்தான்.
***
ஆஸ்ட்ரோ நாவல் பரிசளிப்புப் போட்டியில்தான் அ.ரெங்கசாமியை முதன் முதலாய் பார்த்தேன். அவரது ‘லங்காட் நதிக்கரை’ நாவலுக்கு 10,000 ரிங்கிட் சிறப்பு பரிசு கிடைத்திருந்தது. அதுநாள்வரை அப்படி ஓர் எழுத்தாளர் இருப்பதுகூட எனக்குத் தெரியாது. அல்லது மலேசிய இலக்கியத்தை நான் அறிந்துகொள்ள எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனலாம்.

நான் அப்போது நவீன இலக்கியவாதிகளாக தமிழ் இலக்கியச் சூழலில் அறியப்பட்டவர்களை மட்டுமே வாசித்து வந்தேன். அவ்வரிசையில் சீ. முத்துசாமியையும் வாசித்தேன். சீ. முத்துசாமியின் சிறுகதைகளை வாசித்திருந்ததாலும் நவீன இலக்கியத்தில் அவர் பார்வை விசாலமானது என்பதாலும் ‘மண்புழுக்கள்’ என்ற அவரது நாவலுக்கு முதல் பரிசு (5000.00) கிடைத்ததும் எனக்கு அறிமுகம் இல்லாத அ.ரெங்கசாமிக்கு சிறப்பு பரிசாக (10000.00) கிடைத்ததும் உவப்பில்லாமல் இருந்தது.
சிறப்பு பரிசு பெற்ற அ.ரெங்கசாமியின் ‘லங்காட் நதிக்கரை’ எனும் நாவலும் முதல் பரிசு பெற்ற சீ.முத்துசாமியின் ‘மண்புழுக்கள்’ எனும் நாவலும் எழுத்தாளர் சங்கம் மூலம் நூலாக்கப்பட்டு வெளியீடு கண்டன. அந்த நிகழ்ச்சியில் நான் ரெங்கசாமியை இரண்டாவது முறையாகச் சந்தித்தேன். வாடிய பயிரின் படிமம் ஒன்று மனதில் தோன்றியது. நிகழ்ச்சியில் ரெங்கசாமி பேசத்தொடங்கினார். ‘புதியதோர் உலகம்’, ‘நினைவுச்சின்னம்’ என தனது நாவல்களைப் பற்றி பேச நான் வியப்பாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். பேச்சின் ஊடே தன் அனுபவத்தில் பெற்ற நுட்பமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். எந்த இடத்திலும் மிகை இல்லை. இலக்கியத்தை ஒட்டிய பெரிய உபதேசங்கள் இல்லை. சமூக அக்கறை மட்டுமே மிகுந்திருந்தது. முற்றிய பயிர் தன்னிறைவுடன் தலைகுனிந்து நிற்கும் காட்சி அப்போது படிமமாக மறுஉருவெடுத்தது.
‘வல்லினம்’ தொடங்கியப்பின்தான் நான் ரெங்கசாமி அவர்களை முதன்முறையாகத் தொலைப்பேசியில் அழைத்தேன். வல்லினத்தில் அவரது பத்திகள் வர வேண்டும் என்றும் அது அவரது வாழ்வின் அனுபவங்களைச் சொல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். உடனே சம்மதித்தார். ‘வல்லினம்’ அச்சு இதழாக வந்த நாட்களில் அவரது பத்திகள் இடம்பெற்றன.
ரெங்கசாமி ஒரு லட்சியவாதியாக இருந்தார்.
அவரது படைப்புகள் லட்சியவாததையே பேசின. தமிழர் வாழ்வு குறித்தும், அவர்கள் நலன் குறித்தும் ஓயாத கவலை அவர் பேச்சிலும் எழுத்திலும் இருந்தன.
இதற்கிடையில் ரெங்கசாமியின் ஆளுமையை நண்பர்களிடம் விரிவாக அறிமுகப்படுத்த வேண்டும் என விரும்பினேன். வல்லினம் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் கூலிமில் சுவாமி பிரம்மானந்தாவை மையமாக வைத்து இயங்கும் ‘நவீன இலக்கியக் கள’ நண்பர்களும் தைப்பிங்கில் சந்திக்கலாம் என 2010 நவம்பரில் முடிவானது. நான் அந்த நிகழ்வில் ரெங்கசாமி அவர்களையும் பேச வைக்கலாம் என விரும்பினேன். அவர் வருவாரா என சந்தேகமாகவே இருந்தது. ஒருநாள் யோசனைக்குப் பிறகு எங்களுடன் வருவதாகச் சம்மதம் கொடுத்தார். இரண்டாவது நாள் காலையில் தைப்பிங்கில் இருந்த முருகன் ஆலயத்தில் ரெங்கசாமியைப் பேச வைத்தோம். பேசினார். விரிவாகப் பேசினார். அவரது ஒவ்வொரு நாவல் உருவான பின்னணியை விளக்கிக் கூறினார். புதிதாக ரெங்கசாமியை அறிந்தவர்கள் அவர் ஆளுமையைக் கண்டு வியந்தனர்.

அப்போது அவருக்கு 79 வயது இருக்கும். எல்லா அமர்வுகளிலும் ஆர்வமாகக் கலந்துகொண்டார். எங்கள் குதூகலங்களை இரசித்தார். உணவில் அதிகக் கட்டுப்பாடு. அவர் துணைவியாரும் அடிக்கடி தொலைப்பேசியில் அழைத்து அவர் நலம் விசாரித்தபடியே இருந்தார்.
ரெங்கசாமி போன்ற எழுத்தாளர்கள் வாழ்வின் அனுபவம் மட்டும் அல்லாமல் சமூக வரலாற்றையும் நுணுக்கமாகப் பேசக்கூடியவர்கள். சமூகத்தை நுட்பமாக கவனிக்கக்கூடியவர்கள். அதன் மாற்றத்துக்குச் செயல்படக்கூடியவர்கள். அக்காலக்கட்டத்தில் எஸ்.பி.எம் பாடத்தில் தமிழ் இலக்கியம் எடுப்பதில் சிக்கல் உருவாகியிருந்தது. சில நெருக்குதல்களால் மாணவர்கள் பலர் தமிழ் இலக்கியம் எடுப்பதில் சுணக்கம் காட்டினர். ரெங்கசாமி எல்லோரும் போல புலம்பிக்கொண்டிருக்கவில்லை. தனது 79ஆவது வயதிலும் அவ்வட்டாரத்தில் உள்ள தமிழர்களின் வீடு வீடாகச் சென்று தமிழ்ப்பிள்ளைகளை தமிழ் இலக்கியம் எடுத்து கற்க ஊக்குவித்தார். தனி மனிதனாகத் தன் கடமையைச் செய்தார். ‘தமிழ், இனம்’ என பேசும் போலிகளுக்கு மத்தியில் ரெங்கசாமி உண்மையான சமூகப்பணியாளராகவே என் முன் நின்றார்.
ரெங்கசாமியின் உரைக்குப் பின்னர், சுவாமி பிரம்மானந்தா மெதுவாக என்னிடம் ஒன்றைக் கூறினார். அது மிகுந்த மகிழ்ச்சியை எனக்குக் கொடுத்தது. ரெங்கசாமியை இவ்வளவு தூரம் அழைத்து வந்தது வீண் போகவில்லை என நிம்மதியடைந்தேன்.
சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி தன் முடிவை பின்னர் பொதுவில் நண்பர்கள் முன் அறிவித்தார். ஒவ்வொரு வருடமும் சுவாமியின் தியான ஆசிரமம் மூலம் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதான ‘அருளாளர் விருதை’ இம்முறை இலக்கியத்துக்காக அ. ரெங்கசாமிக்கு வழங்கப்படும் என்பதுதான் அது. ரெங்கசாமியின் முகத்தில் பெரிதாக சலனம் இல்லை. அவர் முகத்தை அனுபத்தின் கோடுகளும் மடிப்புகளும் மறைத்து கிடந்தது.
குறிப்பிட்ட நாளில் நானும் விருது வழங்கும் நிகழ்வுக்கு நண்பர்களுடன் சென்றேன். ரெங்கசாமியின் ‘நினைவுச்சின்னம்’ எனும் நாவல் அந்த நிகழ்வில் வெளியீடு கண்டது. அந்த நாவல் குறித்து பேசும் வாய்ப்பு சுவாமியால் எனக்கு வழங்கப்பட்டிருந்தது. விரிவாகவே பேசினேன். நான் ரெங்கசாமியின் புனைவுகளை விமர்சனத்துடனே அணுகக்கூடியவனாக இருந்ததால் அவ்வுரையும் அவ்வாறே அமைந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் அவருக்கு விருதும் வழங்கப்பட்டது.

உண்மையில் அதுதான் அ.ரெங்கசாமி அவர்களுக்குக் கிடைத்த முதல் விருது. தன் வாழ்நாளெல்லாம் எழுத்து, சமூகம், இலக்கியம் என இயங்கியவருக்கு 79ஆவது வயதில் முதல் விருது கிடைத்தது. தங்கச் சங்கிலியுடன் ரொக்கமும் விருதாக வழங்கப்பட்டன.
அ. ரெங்கசாமி, மலேசியத் தமிழர்களின் வாழ்வை வரலாற்று புனைவின் வழியாக ஆவணப்படுத்துபவர், தமிழ்க்கல்வி வளர்ச்சிக்காகச் செயல்படுபவர், கல்விக்குழு மூலம் மொழிப்பற்றை இளம் தலைமுறையினரிடம் உருவாக்குபவர் என்பன போன்ற அபிப்பிராயங்களே பொதுவாக அவர் குறித்து என் மனதில் இருந்தன. அவரது உச்சமான கலை வெளிபாட்டை நான் அறிந்துகொண்டது 2011இல்.
***
2011ஆம் ஆண்டு நான் தமிழகம் சென்றிருந்தபோது தமிழினி வசந்தகுமாரைச் சந்தித்திக்கும் வாய்ப்பு அமைந்தது. சமகால இலக்கியங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தவர் ரெங்கசாமியை விசாரித்தார். அவரது லங்காட் நதிக்கரைக்குப் பின் ‘இமையத்தியாகம்’ என்ற நாவலை தமிழினி பதிப்பித்துள்ள விசயத்தைச் சொன்னார். தமிழினி பதிப்பகத்தில் ஒரு நூல் வரும்போது இயல்பாகவே அதற்கு இலக்கியத்தகுதி கிடைத்துவிடும் என கேள்விப்பட்டுள்ளேன். ஒருவகையில் அவர்கள் வெளியீட்டில் வந்த நூல்கள் அதை உறுதி செய்யும் படியே இருந்தன. தமிழகத்தில் பல முன்னணி எழுத்தாளர்களின் நூல்களைப் பதிப்பிக்க மறுக்கும் வசந்தகுமார், ரெங்கசாமியின் நாவலைப் பதிப்பித்து அதை இலவசமாக அவருக்கு அனுப்பியும் வைத்தது நாவல் மேல் வசந்தகுமாருக்கு இருந்த பிடிப்புதான் என புரிந்தது.

மலேசியா வந்ததும் அந்த நாவலை வாசித்தேன். மலேசியாவில் வெளிவந்துள்ள முதன்மையான நாவல் என வாசித்தவுடன் புரிந்தது. நாவல் குறித்து உரையாட அடுத்த வாரமே அவரைக் காணச் சென்றேன். ஒரு அசாதாரண நாவலை வாசித்து முடித்த படபடப்புடன் அவரிடம் பேசினேன். அவர் எப்போதும்போல அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.
புறப்படும்போதுதான் அவர் புதிதாக நூல் ஒன்றை எழுதி வைத்திருப்பது தெரிந்தது. அப்போது உச்சத்தில் இருந்த ஈழபோர் குறித்த நிகழ்கால சம்பவங்கள் மலேசிய இளைஞர்களுக்குத் தெரிந்திருந்ததே தவிர, அதன் தொடக்கக் கட்ட வரலாற்றை அறியாமல் இருந்தனர். இளைஞர்கள் படித்து ஓரளவு புரிந்துகொள்ளும் வகையில் சின்னஞ்சிறிய நூல் ஒன்றை கையெழுத்துப்பிரதியாக தானே எழுதி வைத்திருந்தார். நான் அதை நூலாக்கித் தருவதென முடிவெடுத்தேன்.
நூலின் அடிப்படை வேலைகள் முடிந்தபின்பு வழக்கறிஞர் பசுபதி அவர்களைச் சந்தித்தேன். நூலைக் கொடுத்தேன். சில நாள்களில் என்னை அழைத்தவர் செம்பருத்தி பதிப்பகத்திலேயே அந்த நூலை இலவச பதிப்பாகப் போடலாம் என்றார். ‘விடிந்தது ஈழம்’ எனும் தலைப்பில் அந்த 64 பக்க நூல் அச்சானது. ரெங்கசாமி அவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சி. தன் நூலை வழக்கறிஞர் பசுபதியே வெளியீடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். என் திட்டம் இன்னும் விரிவடையத்தொடங்கியது.
அவ்வருடத்துக்கான கலை இலக்கிய விழாவை வரலாற்றை முன்வைத்தே நடத்தலாம் என தோன்றியது. ‘விடிந்தது ஈழம்’ புத்தகம் மட்டுமல்லாமல் தமிழினி பதிப்பில் வந்து வெளியீடு காணாமல் இருந்த ‘இமையத்தியாகம்’ நாவலையும் வெளியிட திட்டமிட்டேன். ‘கலை இலக்கிய விழா 3′ 2011ல் வரலாற்றை மீட்டுணர்தல் எனும் தலைப்பின் கீழ் நடந்தது. அதில் ‘இமையத்தியாகம்’ மற்றும் ‘விடிந்தது ஈழம்’ ஆகிய இரு நூல்களும் வெளியீடு கண்டன.
இமையத்தியாகத்தை வாசித்தது முதல் ரெங்கசாமியின் புனைவுலகின் மேல் எனக்கு தனித்த மரியாதைப் பிறந்திருந்தது. மலேசியத் தமிழிலக்கியத்தில் அந்நாவல் முதன்மையானது என்பதை அழுத்தமாகச் சொல்ல வேண்டுமென விரும்பினேன். அவ்வகையில் அ. ரெங்கசாமி முதன்மையான இலக்கிய ஆளுமை என்பதையும் பதிவு செய்ய வேண்டுமெனத் தோன்றியது. அ. ரெங்கசாமியின் ஆளுமை மலேசியா மட்டுமல்லாமல் தமிழ் இலக்கிய வாசகர்கள் மத்தியிலும் பரவலாக வேண்டும் என்ற விருப்பம் வல்லினம் நண்பர்களுக்கும் இருந்தது. அவரை கௌரவிக்கும் பொருட்டே ‘வல்லினம் விருது’ உருவானது. அந்த விருதை ஒட்டி அவரது வாழ்க்கை வரலாற்றை நூலாக்கத் திட்டமிட்டோம். மேலும் ஆவணப்படம் எடுக்கும் திட்டம் அ. ரெங்கசாமியுடனான உரையாடலில் இருந்தே தொடங்கியது. செம்பருத்தியில் பணியாற்றிய பிரசன்னா அந்த ஆவணப்படத்தை ஒளிப்பதிவு செய்தார். இதற்காகவே சண்முகசிவாவிடம் 1500 ரிங்கிட் கேட்டு காமிரா ஒன்றை வாங்கினேன்.

அ. ரெங்கசாமியின் வாழ்க்கை வரலாற்றைச் சுமந்த நூல் எப்படி வரவேண்டும் என சில முன் திட்டங்கள் இருந்தன. அவரிடம் கூறினேன். நாவல் வடிவில் செல்லக்கூடிய சுயவரலாறு ஒரு காலகட்டத்தின் சமூக வரலாறையும் விளக்கவேண்டும் என்றேன். ரெங்கசாமிக்கு எல்லாம் புரிந்தது. தான் எழுதுவதாகக் கூறினார். அச்சு செலவுகள் பற்றி விசாரித்தார். வல்லினம் பதிப்பிக்கும் என்றேன்.
அவருக்கு அதில் குழப்பம் இருந்திருக்க வேண்டும். அவர் சுயவரலாறு உருபெற நான் காட்டிய தீவிரத்தில் ஒருநாள் அமரவைத்து, “முன்னமே எல்லாத்தையும் பேசி முடிவு செஞ்சிக்குவோம்” என்றார். நான் “என்ன?” என்பதுபோல பார்த்தேன். “இந்த நூலுக்கு நான் எவ்வளவு பணம் தரணும்?” என்றார். நீங்கள் பணம் தர வேண்டாம். “நாங்கள் உங்களுக்குப் பணம் கொடுப்போம்,” என்றேன். அவருக்கு மேலும் குழம்பியிருக்க வேண்டும். “எல்லா செலவுகளையும் நீங்களே ஏத்துக்குவீங்களா?” என்றார். “ஒரு பதிப்பகத்தின் வேலை செலவை ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல… விற்ற நூலுக்கு ராயல்டி தருவதும்தான்,” என்றேன். அவருக்கு மகிழ்ச்சி. தன்வாழ்நாளில் நிச்சயம் எழுத்துக்காக ராயல்டி வாங்கியிருக்கவே மாட்டார்.

கடகடவென உருவாகியது ரெங்கசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு. அவரது உழைப்பு அபாரமானது. அதில் ஒரு நேர்த்தி இருந்தது. இன்றைய இளம் தலைமுறையினர் கற்க வேண்டிய பல ஒழுங்குகளை ரெங்கசாமி கொண்டிருக்கிறார்.
முதலாவது, காலம் தவறாமை. சொன்ன நேரத்தில் ஒரு படைப்பை முடித்து அனுப்பினார். இரண்டாவது செய்யும் பணியில் நேர்த்தி. ரெங்கசாமி நூலின் கடைசி சில அத்தியாயங்களை தட்டச்சு செய்ய உதவிய நூலகவியலாளர் விஜயலட்சுமி உண்மையில் ஆச்சரியப்பட்டு போனார். “என்ன அவர் வேலை இவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது. முறையாக கெட்டி அட்டை போடப்பட்டு, பக்க எண்கள் இடப்பட்டு, முறையாக பைண்டிங் செய்யப்பட்டு…” என அடுக்கினார். “இதுபோன்ற கையெழுத்துப்பிரதிகளை நூலகத்தில் சேமிக்க வேண்டும்,” என்றார். பதிப்புக்கு எவ்வித சிக்கலும் தராததாக இருந்தது ரெங்கசாமியில் எழுத்து.

நேர நிர்வாகிப்பு ரெங்கசாமியிடம் இவ்வயதிலும் நான் பார்த்து வியக்கும் விசயம். தட்டச்சு முடிந்தபின்னர் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை அவர் வீட்டுக்குப் போய்விடுவேன். வாரம் சில பாகங்கள் என இருவருமாக வாசித்து அவற்றை செரிவாக்கும் பணியில் இறங்கினோம். பொதுவாகவே காலையிலேயே விழித்துவிடுவார். நடந்துசென்றுதான் நாளிதழ் வாங்குவார். மதிய உணவுக்குப் பின் ஒரு குட்டித்தூக்கம். அப்போது நானும் வரவேற்பறையில் படுத்துக்கொள்வேன். பின்னர் மீண்டும் பணி. எல்லாமே முறையாக நடந்தது.
ஆய்வு மனமும் ரெங்கசாமியிடன் நான் பார்த்த மிகப்பெரிய ஆற்றல். எந்த ஒன்றையும் மிக விரிவாக ஆராய்ந்து, கள ஆய்வு செய்தப்பிறகே எழுத்தாக்குகிறார். அவரது கருத்தோடு நமக்கு மாற்றுக்கருத்து இருக்குமே தவிர, அவர் சொன்ன கருத்தில் அடிப்படை பிழை இருக்காது. அவரது அனைத்து நாவல்களுமே அவ்வாறு எழுதப்படுபவைதான்.
சமூக, அரசியல் விழிப்புணர்வு ரெங்கசாமியிடம் தொடக்கம் முதலே உள்ள குணம் இது. அவர் தான் சார்ந்த சமூகத்தை எப்போதும் உற்று கவனித்தபடி இருக்கிறார். அரசியல் சூழலைக் கணிக்கிறார். அரசு திட்டங்கள் சிறுபான்மையினருக்கு எவ்வகை விளைவுகளை ஏற்படுத்தும் என யோசிக்கிறார். யோசிப்பது மட்டுமல்லாமல் அதற்காக தன் இளமை காலம் தொட்டே உழைக்கவும் செய்திருக்கிறார்.
சில மாத உழைப்புக்குப் பின்னர் அ. ரெங்கசாமியின் வாழ்க்கை வரலாற்று நூல், ‘சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை’ எனும் தலைப்பில் உருவானது. ஆவணப்படமும் விரிவான அவர் வாழ்வை பதிவு செய்து தயாரானது. இரண்டுமே வல்லினம் விருது விழாவில் வெளியீடு கண்டன.

வல்லினம் விருது விழாவுக்குப் பின்னர் நான் ரெங்கசாமி குடும்பத்துடன் மேலும் அணுக்கமானவன் ஆனேன். அவரது உடல் நிலை குறித்து அவ்வப்போதைய தகவல்கள் எனக்கு வந்தபடியே இருந்தன. இறுதியாக வந்த அழைப்பு அவர் மரணச்செய்தியாக இருந்தது.
***
ரெங்கசாமி வீட்டுக்கு நான் சென்றபோது அரவின் குமாரும் சண்முகாவும் வந்திருந்தனர். ரெங்கசாமியின் உடல் இன்னும் எடுத்துவரப்படவில்லை என சுந்தரம் அண்ணன் கூறினார். வீட்டினுள் சென்றேன். அவரது கடைசி காலங்களில் படுத்திருந்த படுக்கையறையைக் கண்டேன். நான் அடிக்கடி சென்ற வீடு அது. அவர் சுவடுகள் எல்லா இடங்களிலும் இருந்தன.
அவர் மகனிடம் அவர் கடைசியாக என்ன பேசினார் என்றேன்.
“நீங்க பாத்துட்டு போன பிறகு பெரும்பாலும் படுத்தப் படுகையா ஆயிட்டாரு. கடைசி ஒருவாரம் வீட்டுலயே ஆக்ஸிஜன் வச்சி பார்த்தோம். அவருக்கு எதுவும் நினைவில் இல்லை. ஆனா…” என்றவர் எதையோ நினைவு கூற முயன்றார்.
”‘தேனும் திணையும் கலந்த செந்நீர் எங்கள் திருநாடு’ என மேலே பார்த்து சொன்னார். அதுதான் அவர் கடைசியா பேசிய வாசகம். ஆனா அதை எங்ககிட்ட சொல்லல… மேல யாரையோ பார்த்து அழுத்தமா சொன்னார்” என்றார்.
எனக்கு ஏனோ அந்நிமிடம் சிலிர்த்தது. அவர் உடல் அப்போதும் வந்திருக்கவில்லை. அவர் உடலாக மட்டுமே அங்கு இருக்க வேண்டும் எனும் கட்டாயமும் இல்லை எனத் தோன்றியது. கண்களை மூடி பெருவாழ்வு வாழ்ந்த அந்த மாமனிதரை அந்நிமிடம் நினைத்துக்கொண்டேன்.
அவருக்கு அஞ்சலி.
தமிழ் விக்கியில் : அ. ரெங்கசாமி