எழுத்தாளர் மஹாத்மன் நிதி RM 10598.56 சேர்ந்தது

ஜூன் 25, மஹாத்மனுக்கு நிதி உதவி தேவை என குறிப்பு ஒன்றை எழுதியிருந்தேன். இந்த நிதி சேகரிப்புத் திட்டத்தை வல்லினம் மூலம் ஒரு மாதம் தொடர திட்டமிட்டோம். எழுத்தாளர் மஹாத்மனுக்காக இந்நிதி திட்டத்தை முன்னெடுக்க சில காரணங்கள் இருந்தன.

அ. மூளை வாதம் காரணமாக அவர் சுயநினைவை இழந்திருந்ததால் அவரால் தனக்கான உதவியை யாரிடமும் சுயமாகக் கேட்டுப் பெற இயலாது.


ஆ. அவரது குடும்பத்தில் யாரும் அவருக்கு உதவும் நிலையில் இல்லை. அம்மா முதியவர். அண்ணன் கண் பார்வை குறைந்தவர்.


இ. அவரை பராமரிக்கும் அவரது மனைவியும் வேலையை இழந்திருந்தார். அவரும் உடல் நலம் காரணமாகச் சில சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்.


எழுத்தாளர் மஹாத்மனுக்கு எப்போதுமே நிரந்தர வேலையோ வருமானமோ இருந்ததில்லை. எனவே சேமிப்புகளும் இல்லை. அவர் அன்றன்றைக்கான தினத்தில் வாழ்பவர். வாசிப்பும் எழுத்தும் மட்டுமே அவரிடம் எப்போதும் ஒட்டிக்கொண்ட பழக்கம். நூல்கள் மட்டுமே அவர் வீட்டில் உள்ளன. மஹாத்மன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மூன்று வாரங்களுக்கு மேல் அவர் மனைவி யாரிடமும் உதவிக்காக நாடவில்லை. ஒரு கட்டத்தில் கையில் இருந்த பணம் தீர்ந்தபிறகு மஹாத்மனுக்கான ‘பெம்பர்ஸ்’ வாங்க பணமில்லாத சூழலில்தான் நண்பர் ஶ்ரீதரிடம் உதவிக்கு அணுகினார். ஶ்ரீதர் ரங்கராஜ் வழியாகவே எனக்குத் தகவல் கிடைத்தது.

முன்னூறு ரிங்கிட் கட்டணம் கொண்ட வாடகை வீடு, தினசரி உணவுக்கான பணம், போக்குவரத்து செலவுகள் என அவருக்கு மாதம் ஒன்றுக்கு 1200.00 ரிங்கிட் தேவைப்படுகிறது என அறிந்தேன். நெருக்கமான நண்பர்களின் உதவியால் ஜூன் மாதம் அவரது சிக்கலைத் தீர்த்து வைத்தோம். மேலும் குறைந்தது மூன்று மாதங்களாவது அவரது சுமையை குறைக்க முடிவு செய்து இந்தத் திட்டத்தை அமுல்படுத்தினோம்.

இன்று (25.6.2022- 25.7. 2022) மஹாத்மனுக்கான நிதி தொகை RM 10598.56 சேர்ந்துள்ளது. இன்று நாடுள்ள பொருளியல் சிக்கலில் இது எங்களுக்குப் பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கிறது. மேலும் நாடு கடந்தும் உதவிக்கரம் நீட்டிய சிங்கை எழுத்தாளர்களின் அருகாமை நெகிழச்செய்கிறது. ஜூன் 25 முதல் ஜூலை 25 வரை உள்ள வங்கி கணக்கை இங்கே இணைத்துள்ளோம். வல்லினம் ஒரு பதிவு செய்யப்பட்ட இயக்கம் அல்ல. இருந்தும், எங்கள் மீது நம்பிக்கையும் மஹாத்மன் மீது அன்பும் வைத்து பணம் செலுத்திய ஒவ்வொருவரின் கரம் பற்றி இவ்வேளையில் நன்றி கூறிக்கொள்கிறோம்.

நிதி விபரங்கள்:


(ஜூலை மாத வங்கி அறிக்கை இன்னும் தயார் ஆகாததால் ஜூன் மாத வங்கி அறிக்கையும் ஜூலை மாத பட்டியலையும் இணைத்துள்ளோம்)

மஹாத்மன் மனைவியிடம் இப்பணத்தைக் கொடுக்க அணுகியபோது அவர் முன் வைத்த வேண்டுகோள் ஒன்றுதான். முழுமையாகப் பணத்தை ஒப்படைக்காமல் மாதம் RM 1200 ரிங்கிட் என தன் வங்கிக்கணக்கில் செலுத்தும் படி கேட்டுக்கொண்டார். மொத்தத் தொகையும் அவர் வங்கி கணக்கிற்கு மாற்றுவதில் உள்ள தனிப்பட்ட சிக்கல்களைக் கூறினார். எனவே அவருக்கான வங்கி கணக்கு உருவாக்கப்பட்டது. அடுத்த ஒன்பது மாதங்கள் (ஜூலை 2022 – மார்ச் 2023) சரியாக 25ஆம் திகதி RM 1200.00 ரிங்கிட் அவர் வங்கி கணக்கில் சேர்க்கப்படும். (கூடுதலாகத் தேவைப்படும் தொகையான RM 261.44 வல்லினம் மூலம் செலுத்தப்படும்.) அவ்வகையில் இம்மாதத்திற்கான தொகை இன்று செலுத்தப்பட்டது.

பணத்தைக் கையாள்வது எப்போதுமே சிக்கலானதுதான். எனவே வல்லினம் குழுவில் பேசி நன்கொடை வழங்கியவர்களின் நம்பகத்தன்மைக்காக சில விதிமுறைகளைப் பின்பற்ற உள்ளோம்.


அ. பணம் நிதி வழங்கப்பட்ட வங்கியில் இருந்து மட்டுமே அவர் மனைவியின் வங்கி எண்ணுக்கு மட்டுமே மாதம் தோறும் மாற்றப்படும். வங்கி பட்டுவாடா மட்டுமே செய்யப்படும். பணம் ‘கேஷாக’ கொடுக்கப்படாது.


ஆ. மார்ச் 2023 வரை இந்த வங்கிக் கணக்கு வேறு எதற்காகவும் பயன்படுத்தப்படாது. எனவே இதில் உள்ள பணம் வேறு எதன் பொருட்டும் எடுக்கப்படாது.


இ. மார்ச் 2023ல் மீண்டும் வங்கி கணக்கறிக்கை பொதுவில் சமர்பிக்கப்படும்.


ஈ. மஹாத்மனின் பெயரில் நிதி திரட்டும் முயற்சியை வல்லினம் 25 ஜூலை 2022-ன் நிறுத்தில் கொள்கிறது. இனி பொது அறிவிப்பு எதுவும் இன்றி இதன் பொருட்டு நிதி வாங்குவதில்லை.


உ. தொடர்ந்து மஹாத்மனுக்கு உதவி செய்ய விரும்புகிறவர்கள் நேரடியாக அவர் மனைவியின் வங்கி எண்ணில் பணம் செலுத்தலாம். அவரது வங்கி எண்

விபரம் :
– வங்கி எண்: 33150163856 (Hong Leong Islamic Bank)
– காசோலைக்கான பெயர்: Vijaya letchumy a/p Krichnan

மஹாத்மனின் உடல்நிலை சில சமயம் தேறியும் சில சமயம் மோசமான நிலைக்கும் சென்றும் மீள்கிறது. இந்த இக்கட்டான நிலையில் மருத்துவர்களை முழுமையாக நம்ப வேண்டியுள்ளது. அவரால் சுயமாக சுவாசிக்க முடியும்போது வீட்டுக்கு அனுப்பப்படுவார். இந்த ஒன்பது மாதங்களுக்குள் அவர் மீண்டு வருவார் எனில் இம்முயற்சி தன் முழுமையான பலனை எட்டியிருக்கும்.

மஹாத்மன் புனைவுகளில் பலருக்கு முரண்பட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால் அவர் இலக்கியம் பொருட்டே தன் வாழ்வை வடிவமைத்துக்கொண்டவர் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. வாசிப்பதும் அது குறித்து விமர்சிப்பதுமே அவரை உயிர்ப்பாக வைத்திருந்தது. அந்த உயிர்ப்பை தேடி அவர் மீள்வார் என்றே நம்புவோம்.

முந்தைய பதிவுகள்

நிதி உதவி தேவை

மஹாத்மனுக்கான நன்கொடை

(Visited 166 times, 1 visits today)