மஹாத்மனின் உடல் நலம் முன்னிலும் மெல்ல தேறி வருகிறது. பேசுவது புரிகிறது. கண்களைத் திறக்கிறார். ஆனால் முகங்களை அடையாளம் காணமுடிகிறதா என்பது தெரியவில்லை. சுவாசிக்க அவ்வப்போது இயந்திர உதவி தேவைப்படுகிறது.
மஹாத்மனுக்காக வல்லினம் வழி நன்கொடை பெறத்தொடங்கி ஏறக்குறைய 20 நாட்கள் நகர்கின்றன. இந்த இருபது நாட்களில் முதல் நாள் மட்டுமே கட்டுரை எழுதி நண்பர்களிடம் பகிர்ந்தோம். தனிப்பட்ட முறையில் யாரிடமும் அழைத்து பணம் கேட்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான நெருக்கடிகள் இருக்கும். இன்று நாம் கடக்கும் சூழல் அப்படி. இதில் எங்கள் நெருக்குதல் யாருக்கும் சங்கடத்தைக் கொடுத்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம்.
ஆனால், இந்த இருபது நாட்களிலும் வாழ்க்கை அத்தனை நம்பிக்கையானதாக மாறியுள்ளது. சக மனிதர்கள் அவ்வளவு சீக்கிரம் கைவிடப்படுவதில்லை என உதவி கரம் நீட்டிய ஒவ்வொருவர் வழியாகவும் உணர்த்தப்பட்டுக்கொண்டே இருந்தது. அதில் பலரும் மஹாத்மனை ஓர் எழுத்தாளர் என்று மட்டுமே அறிந்து வைத்திருந்தனர். இந்நாட்டில் இலக்கியம் எழுத்து என இயங்கும் ஒருவன் பொதுச்சமூகம் செல்லாத ஒரு பாதையைத் தேர்வு செய்கிறான். குறிப்பாகத் தமிழில் எழுதும் எழுத்தாளனுக்கு தேசிய ரீதியான எவ்வித அங்கீகாரமும் கிடைக்காது. மஹாத்மன் போன்று தீவிர இலக்கிய வாசகராகவும் எழுத்தாளராகவும் தன்னை கட்டமைத்துக்கொண்ட ஒருவர் இன்னும் குறுகிய வட்டத்தில் பயணிக்க தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்கிறார். அமைப்புகளின் ஆதரவை அரவணைப்பை அவர்கள் திட்டமிட்டே தவிர்க்கின்றார். அது அவர்கள் இயல்பு. தீவிர இலக்கியத்தைக் கையில் எடுக்கும் ஒவ்வொருவரின் இயல்பும் அதுதான். அதை அறிந்துகொண்டே நமது அருகாமையை உணர்த்தவேண்டியுள்ளது.
இந்த இருபது நாட்களில் மஹாத்மன் குறித்து விசாரிக்க என்னை அழைத்தப்பலரும் அவரது ஒளிரும் கண் குறித்து மறவாமல் பேசினர். பெரும்பாலோர் அதை கவனித்திருப்பது ஆச்சரியமாக இருந்தது. எந்நேரமும் கண்ணீர் படிந்த கண்களால் அந்த ஒளி மின்னுகிறதா? அதை மறைக்கத்தான் அவர் அவ்வளவு பலமாகச் சிரிக்கிறாரா? என யோசித்துக்கொண்டேன்.
குடும்பத்தில் இருந்து பிரிந்து, இலவச உணவுக்காக நாளெல்லாம் பெருநகரங்களில் அலைந்து, இருளுலகில் புகுந்து, தன்னை எங்காவது மறைத்துக்கொண்டு, ரகசியங்களால் இட்டு நிரப்பிக்கொண்டு வாழ்ந்த ஒரு மனிதர் எவ்வித மறைப்பும் இன்றி கண்முன் படுத்துக்கிடக்கிறார் என்பதே ஆச்சரியமாக இருந்தது.
“நாவல் எழுதி முடிக்க வேண்டும்” எனச் சொல்லும்போது கண்களின் ஓரம் கண்ணீர் வடிகிறது. அவர் மீண்டு வருவார். அவர் நாவலை அவர்தானே எழுதி முடிக்க வேண்டும்.
குறிப்பு:
நான் ஏற்கனவே சொன்னதுபோல ஜூலை 26 வங்கி கணக்கு பொதுவில் பகிரப்படும். அதேசமயம் மஹாத்மனின் மனைவிக்கு வங்கிக் கணக்கு உருவாக்கிக் கொடுக்கப்பட்டுள்ளதால் அதற்கு பின்பான உதவிகளை நேரடியாக அவருக்கே வழங்கலாம். நன்கொடை நிதி அனைத்தும் மஹாத்மன் மனைவியின் வங்கி கணக்குக்கே மாற்றப்படும். அதன் ஆதாரங்களும் பகிரப்படும்.
எஞ்சி இருக்கும் 10 நாட்களில் நன்கொடை தர விரும்புபவர்கள் 512400202204 – maybank, Kaanal publication என்ற வங்கி எண்ணில் செலுத்தலாம்.