கடந்த சில வாரங்களாகவே எழுத்தாளர் மஹாத்மன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதை அறிவேன். சில ஆண்டுகளாகவே அவரை வெவ்வாறு நோய்கள் தாக்கியபடி இருந்தன. அப்படி ஈராண்டுகளுக்கு முன் அவரை சுங்கை பூலோ மருத்துவமனையில் ஶ்ரீதருடன் சென்று சந்தித்தேன். மூளையில் உருவாகியுள்ள கட்டியால் கண்பார்வை பாதிக்கப்பட்டிருந்தார். நேர்பார்வை மட்டுமே இருந்தது. பக்கத்துக் காட்சிகள் அனைத்துமே இருள். உடன் அவர் மனைவி இருந்தார். அவர் திருமணம் செய்திருப்பதை அப்போதுதான் அறிந்தேன். ஶ்ரீதரும் அப்போதுதான் அறிந்திருந்தார். கண்களை குறுக்கி வாசித்துக்கொண்டிருந்தார். தன்னால் இன்னமும் வாசிக்க முடிவதை எண்ணி உற்சாகமாகப் பேசினார்.
மஹாத்மன் எப்போதுமே மர்மமான மனிதர்தான். நான் எதிர்ப்பாராதத் தருணங்களில் திடீரென தோன்றுவார். எதிர்ப்பார்த்து காத்திருக்கும்போது தடம் இல்லாமல் மறைந்துவிடுவார். அவர் குறித்த தகவல்களும் எப்போதும் ரகசியமானவை அல்லது துணுக்குறும் திருப்பங்களைக் கொண்டவை. சில சமயம் திடீர் என அழைத்து ஏதாவது சிறுகதை குறித்து விவாதிப்பார். அக்கதையை எப்படிப் புரிந்துகொள்வதென கேட்பார். நான் அந்தக் கதையைக் கட்டாயம் வாசித்திருப்பேன் என அவருக்கு எப்படியோ தெரிந்திருக்கும். கண் பார்வை குறைந்திருந்த சூழலிலும் இப்பணியை விடாமல் செய்தார். ஓயாமல் எழுதிக்கொண்டிருந்தார். உடல் வதைகள் அவருக்கு ஒரு பொருட்டல்ல. வாசிப்பதும் எழுதுவதுமே அவரது ஆன்மாவை நிறைவில் வைத்திருந்தது.
2006இல்தான் மஹாத்மனை முதன்முறையாகச் சந்தித்தேன். அது பா.அ.சிவத்தின் நூல் வெளியீடு. அன்று முதல் பல்வேறு முரண்களுக்கிடையில் எங்கள் நட்பு தொடர்ந்தபடி உள்ளது. வல்லினம் பதிப்பகத்தை 2009இல் தொடங்கியபோது முதல் நூலாக அவரது ‘மஹாத்மன் சிறுகதைகளை’த்தான் வெளியிட்டேன். ஏறக்குறைய 17 வருட நட்பில் ஏற்பட்ட எந்த மனவருத்தங்களும் அவரிடம் நிலைப்பதில்லை. மறுமுறை சந்திக்கும்போது தான் கையால் எழுதிய காகித கட்டுகளுடன் வருவார். அவர் கையெழுத்துகள் முத்தானவை. கூடவே ஏதாவது ஒரு நூல் இருக்கும். அதில் கோடிட்ட பகுதிகளைக் காட்டி ஒரு விதாவத்தைத் தொடங்குவார். விவாதத்தின் இறுதியில் கண்களில் ஒளிமின்ன அவர் சிரிக்கும்போது அணைத்துக்கொள்ளவே தோன்றும்.
கடந்த சில வருடங்களாக அவர் எழுத்தாளர் ஶ்ரீதர் ரங்கராஜுடன்தான் நெருக்கமாக இருந்தார். அவர்களுக்குள் தொடர் இலக்கிய உரையாடல்கள் நிகழ்ந்தன. அவரது நாவல் முயற்சிக்கு ஶ்ரீதரின் ஊக்கம் அவசியமாக இருந்தது. நாவல் மெல்ல மெல்ல முன்னேறி வருவதை அவ்வப்போது என்னிடமும் தொலைப்பேசியில் சொல்லிக்கொண்டிருந்தார். நானும் அதை வாசிக்கவும் பதிப்பிக்கவும் காத்திருந்தேன்.
கடந்த மாதம் வல்லினம் ஏற்பாட்டில் நடைபெற்ற கவிதை முகாமில் கலந்துகொள்ள ஆர்வமாக இருந்தவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக ஶ்ரீதர் கூறினார். ஶ்ரீதரைச் சந்திக்க வந்தவர் திடீரென நிலைதடுமாற மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் எனப் புரிந்தது. மூளையில் ஏற்பட்ட வாதத்தால் அவர் செயலிழந்ததை அறிந்தேன். அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் மூலம் அவருக்கு நடக்கும் மருத்துவமும் உடல் நிலையையும் கேட்டு அறிந்துகொண்டேன். அவர் மனைவியிடமும் பேசினேன். ஏதாவது உதவி தேவையா எனக்கேட்டபோது “இல்லை… நான் பார்த்துக்கொள்வேன்” என்றார். வெள்ளந்தியான பெண்மணி அவர்.
நேற்று அவருக்குப் பணத்தேவை ஏற்பட்டிருப்பதை ஶ்ரீதர் வழி அறிந்தேன். அவர் மனைவி அப்படிக் கேட்பவர் அல்ல. கேட்கிறார் என்றால் அவர் கடும் சிக்கலான சூழலில் இருக்கிறார் என அறிந்துகொண்டேன். அழைத்துப் பேசியபோது பணம் எனும் சொல் வாயில் வராமல் தயங்கியபடி பேசினார். உடனே இலக்கிய நண்பர்கள் சிலரிடம் அழைத்து பண உதவி பெற்றேன். இன்று அவர் மனைவியை நேரில் சென்று கண்டு அடுத்த ஒரு மாதத்திற்குத் தேவையான தொகையை வழங்கினேன். நான் உண்மையில் மஹாத்மனை மருத்துவ படுக்கையில் சந்திக்க விரும்பவில்லை. கீழ்த்தளத்திலேயே பணத்தைக் கொடுத்துவிட்டு புறப்பட்டுவிட மட்டுமே திட்டம் இருந்தது. அவர் மனைவி அண்மைய நிலையை மருத்துவர்களிடம் விசாரிக்க உதவி கேட்டதால் மேலே சென்றேன். மருத்துவ படுக்கையை நெருங்க நெருங்க கால்கள் தளர்ந்துவிட்டன. திரும்பி ஓடிவிட்டால் என்ன என்று தோன்றியது.
அது நான் பார்த்த மஹாத்மன் அல்ல. அவர் சுறுசுறுப்பானவர். திடகாத்திரமானவர். எந்த வலுவான வேலையையும் செய்யக்கூடியவர். வலியின் கொடு அவதி முகத்தில் தெரிய அசையாமல் படுத்திருந்தார். நான் அவர் கையைப் பற்றினேன். “நாவல முடிக்க வேண்டாமா?” என்றேன். கண்களில் மெல்ல அசைவு. என்னைத் தெரிகிறதா? நவீன் என்றேன்” அவருக்குத் தெரிந்தது. அவருக்குத் தெரியும் ஒன்றுக்கு முகம் எப்படி அசையுமோ அப்படி அசைந்தது. “நீங்க எழுத்தாளன். நீங்க எழுதப்போற நாவல் மலேசிய இலக்கியத்துக்கு முக்கியமானது. உங்கனால மட்டுமே எழுதப்படக்கூடியது.” என்றேன். மஹாத்மனுக்கு இளமையில் ஒருவித நோய் வந்து மூன்று மாதங்கள் கோமாவில் இருந்திருக்கிறார். அதை நினைவு கூர்ந்து சொன்னேன். “இதுவும் அப்படித்தான். மீண்டுவிடலாம்” என்றேன். “வேறு எதுகுறித்தும் கவலை வேண்டாம். பணம் குறித்து யோசிக்க வேண்டாம். இலக்கிய நண்பர்கள் இருக்கிறார்கள்” என்றேன். அவரிடம் எல்லாவற்றுக்கும் அசைவு இருந்தது. தொண்டையில் துளையிடப்பட்டிருந்ததால் சொற்கள் எழவில்லை. ஆனால் மூடிய கண்களில் அசையும் கருமணிகள் அனைத்தையும் பேசின. “நான் புறப்படுகிறேன்” என்றபோது தலையை சற்று வேகமாகவே அசைத்தார். அது அவர் பாணி. யாராவது புறப்படுகிறேன் என்றால் கொஞ்சம் அவசரமாகிவிடுவார். மொத்தமாக இவ்வுலகைத் திறந்து வழிவிடுவதுபோல துடித்தெழுவார்.
தாதிகளிடம் விசாரித்தேன். “மூச்சு சீராக இல்லை; ஆனால் அசைவுகள் உள்ளன” என்றனர். மூளையில் ஏற்பட்ட வாதம் அவர் சுவாசத்தை பாதித்துள்ளது. கருவியின் துணையில்லாமல் அவரை இயல்பாக சுவாசிக்க வைக்க முயல்வதாகக் கூறினர். “அவர் குணமாகிவிடுவார்” என அவர் மனைவியிடம் சுருக்கமாகக் கூறினேன்.
இந்நிலையில் அவரது இலக்கிய நண்பர்களாக அவர் வாசகர்களாக நாம் செய்ய ஒன்று மட்டுமே உள்ளது. அவர் மனைவி தங்கிருப்பது வாடகை வீட்டில். மஹாத்மனை முழுமையாக பராமரிக்கும் பணியில் இருப்பதால் வேலைக்குச் செல்லாமல் இருக்கிறார். அதனால் சம்பளம் இல்லை. இந்நிலை இன்னும் சில மாதங்கள் தொடரலாம்.
இந்நிலையில் வல்லினம் சார்பாக மஹாத்மனுக்காக நிதி திரட்டலாம் என முடிவு செய்துள்ளோம். நம்பிக்கையின் அடிப்படையில் நிதி வழங்கப்பட்டாலும் அதற்கு முறையான கணக்கு இருப்பது முக்கியம் என்பதால் சில முன்னேற்பாடுகளைச் செய்துள்ளோம். (மஹாத்மன் மனைவியிடம் வங்கி கணக்கு இல்லை.)
- நாங்கள் வழங்கியுள்ள வங்கி எண்ணில் இன்று தொடங்கி அடுத்த ஒருமாதம் மட்டும் நிதி சேகரிக்கப்படும். (25.6.2022 – 25.7.2022)
- அந்த ஒரு மாதத்திற்கான வங்கியில் நுழையும் பணத்தொகையின் பதிவு 26.7.2022இல் பொதுவில் பகிரப்படும்.
- கிடைக்கப்பெற்ற முழுத்தொகை மஹாத்மன் மனைவியிடம் ஒப்படைக்கப்படுவதும் வெளிப்படையாக நடக்கும்.
மஹாத்மன் தன்னை எழுத்தாளனாக மட்டுமே முன்வைப்பவர். வாழ்நாளில் நூல்களைத் தவிர எந்தச் சேகரிப்பும் இல்லாதவர். அவர் கைவிடப்படக்கூடாது. எந்த எழுத்தாளனும் இம்மண்ணில் அப்படிக் கைவிடப்படுவதை அனுமதிக்கக்கூடாது. நண்பர்களின் நிதி உதவியை நாடுகிறோம். விரும்புபவர்கள் 512400202204 (Kaanal Publication – Maybank) என்ற வங்கி எண்ணில் பணம் செலுத்தி உதவலாம்.
மஹாத்மனின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று – ஓ லாவே