“தோட்ட விசாவில்” மலேசியா மண்ணில் நான் கால் பதித்தது 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் மாத்தின் 3-ஆம் தேதி. மலேசிய வாழ்கை முடிவடைந்து ‘கிரீன் ப்ளாண்டேசன் சர்வீஷ்” விசாவில் தாயகம் திரும்பியது, 2018-ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி. இக்காலகட்டத்தில், மலேசிய இலக்கிய உலகுடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது அங்கிருந்த கடைசி ஆண்டுககளில்தான். அந்த நிகழ்வை நிகழ்த்தியவர் கோணங்கி அவர்கள். மலேசியாவின் சுண்ணாம்பு மலையை திருடிப்போக வந்திருந்தார் கோணங்கி. ம.நவீன் அப்படித்தான் எனக்கு அறிமுகம் ஆனார்.
2017-ல் “வல்லினம்” சிற்றிதழ் நண்பர்களுடன் எனக்கு ஏற்பட்ட நெருக்கம் மூலமாக, “சீ.முத்துச்சாமி” அவர்களை மலேசிய, கோலாலம்பூர் நகரின் மையத்தில் அமைந்திருந்த, ‘கிராண்ட் பசிபிக்’ ஹோட்டலில் ஒரு இலக்கிய விழாவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
1949-ஆம் ஆண்டில் மலேசியாவின் ‘கெடா’ மாநிலத்தில் பிறந்தவர் ‘சீ.முத்துச்சாமி’. மலேசிய தீபகற்பத்தின் வடக்கே அமைந்துள்ள பெரிய மாநிலம்தான் “கெடா” மாநிலமாகும். இதன் பூர்வீக தமிழ் பெயர் “கடாரம்” என்பது. “அமைதியின் வாழ்விடம்” என்ற அடை மொழியினைக் கொண்ட இது ஒரு பச்சைப் பயிர் மாநிலமாகும்.
கெடா மாநிலத்தின் பூர்வீக கித்தா (இரப்பர்) தோட்ட வாழ்வியலின் சாரத்தை தனக்குள் உள்வாங்கி வளர்ந்தவர் சீ.முத்துச்சாமி. கித்தா காட்டின் மண் வாசனைக்குள் தன்னை மண்புழுவாக புதைத்துக்கொண்டு அம்மண்ணின் அடித்தளமாக உழன்று கொண்டிருந்த அடித்தட்டு மக்களின் மன உணர்வை துல்லியமாக தன் எழுத்தில் வெளிப்படுத்தினார் இவர். தோட்டப்புற மக்களுக்கு இரு வேறு வாழ்வியல் முறை இருந்தது. மண்ணோடு கலந்த தனித்துவ மொழி, பண்பாட்டு விழுமியங்கள் என ஈர வாசம் கொண்ட வேர் மொழி ஒரு அக உலகம்; காட்டு வேலை, வேலையோடு ஏற்படும் உறவு முறைகள், மண்ணுக்கு வெளியேயான நெருக்கடி சூழ்ந்த வாழ்க்கை முறை என புற உலகம்.
“கித்தா காட்டின் மொழி அடர்த்தி கொண்ட எழுத்து” என்று தான் சீ.முத்துச்சாமி அவர்களின் படைப்பாக்கங்கள் குறித்துச் சொல்வார்கள் மலேசிய இலக்கிய விமர்சகர்கள். ‘ரப்பர்’ என்பதன் மலேயா வார்த்தை தான் ‘கித்தா’ என்பதாகும். 2004-ல் நான் மலேசியாவில் கால் வைத்த நாட்களிலும் தமிழர் கம்பம், மலாய் கம்பம் ஆகியவைகள் பார்க்கக் கூடியதாக இருந்தது. கம்பத்து வீடுகள், குடியிருப்புப் பகுதிகள் மறைந்து நகர்மயமாதல் முகம் காட்டத் தொடங்கிவிட்ட பிறகும் கம்பத்து கோழி, கம்பத்து மரக்கறி போன்ற மொழி அடையாளங்கள் காலவளர்ச்சியில் நீட்சி பெற்று நின்றன. மலேசிய மண்ணின் வேர் மொழி கித்தாதோட்டத்து மொழியாகும்.
சுதந்திரத்துக்குப் பின்னான மலேசிய வாழ்க்கை நகரத் தொடங்கிவிட்ட மாற்றத்தோடு, பாரம்பரிய தோட்டத்து வாழ்க்கையும் மாறுதல் காண ஆரம்பித்துவிட்டது. இந்த மாற்றப் பின்னணியுடன் உருவானதுதான் மலேசிய நிழல் உலகம்
19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தோட்ட வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட மக்கள் அனுபவித்த அல்லல் என்பது அளவிட்டுச் சொல்ல முடியாதது. ரப்பர் தோட்ட வேலையிலும், கரும்புக் காட்டு வேலையிலும், இரயில் பாதை போடும் வேலையிலும். இரத்தம் சுண்ட வேலை பார்த்தார்கள் அக்காலகட்டத்தில் ஆங்கிலேயர்களால் ‘சஞ்சிக் கூலிகளாக’ (ஒப்பந்தத் தொழிலாளர்களாக) அழைத்துச் செல்லப்பட்டவர்கள்.
கருக்களில், முகம் காண முடியாத இருட்டில் காட்டு வேலைக்கு ஓடி, தேள்களும், விஷப்பூச்சிகளும், நிறைந்த சேற்று மண்ணில் உழன்ற சஞ்சிக்கூலிகளின் உழைப்பில் உருவெடுத்து நிற்பதுதான் இன்றைய நவநாகரீக மலேசியா.
மலேரியா மற்றும் கொடிய நோய்களாலும், நச்சு உயிர்களாலும் உயிரிழந்த எண்ணற்ற சஞ்சிக்கூலிகளின் மீது எழுப்பப்ப்ட்டு நிற்பதுதான் நாம் இன்று பார்க்கும் சுற்றுலா நகரமான மலேசியா. 1957-க்குப் பிறகான வளமிக்க மலேசியாவின் உருவாக்கத்தில் சஞ்சிக்கூலிகளாகச் சென்ற தமிழர்களின் உழைப்பு முக்கியமானதும், பிரதானமானதும் ஆகும். ரப்பர், செம்பனை உற்பத்தி, கரும்பு, கொக்கோ தோட்ட வேலை என உழைத்த இவர்களின் அர்ப்பணிப்பு, காலம் கடந்தாலும் நினைவில் நிறுத்தப்பட வேண்டிய வரலாறாகும்.
மலேசிய இலக்கியம், நவீனம் நோக்கி நகரத் தொடங்கியதன் முதல் புள்ளியாக அமைந்தது “இலக்கிய வட்டம்” சிற்றிதழ் ஆகும். ‘ரெ.கார்த்திகேசு’ அவர்களால் முன்னின்று உருவாக்கப்பட்ட இவ்விதழ் மலேசிய மண்ணுக்கான தனித்தன்மை வாய்ந்த நவீன இலக்கிய உலகை உருவாக்கும் முனைப்போடு செயல்பட்டது. 1970-களின் இறுதியில் “நவீன இலக்கியச் சிந்தனை” அமைப்பின் மூலம் மலேசிய இலக்கிய உலகில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியவர்கள் எம்.ஏ.இளஞ்செல்வன், நீலவண்ணன், சீ.முத்துச்சாமி ஆகியோர்கள் ஆவர். இவர்களில் சீ.முத்துச்சாமிக்கு நவீன இலக்கியம் நோக்கிய பயணத்திற்கான திறவுகோலாக அமைந்தவர் ஜெயகாந்தன் அவர்களே. ஜெயகாந்தனுக்கு முன்பாக இயங்கிய புதுமைப்பித்தன் போன்ற இலக்கிய முன்னோடி சிற்பிகளின் அறிமுகம் இல்லாமலேயே மலேசிய நவீன இலக்கியம் வளர்ச்சி கண்டது. இந்தப் பின்னணியில் வைத்தே சீ.முத்துச்சாமியைப் பார்க்க வேண்டும்.
1977-ல் வெளிவந்த “இரைகள்” சிறுகதை மற்றும் “விதைகள் பாலைவனத்தில் முளைப்பதில்லை” எனும் குறுநாவல் ஆகிய படைப்புகளுக்குப் பின்னர் பதினெட்டு ஆண்டுகள் இலக்கியச் செயல்பாடுகளில் இருந்து விலகி இருந்தவர் சீ.முத்துச்சாமி. 2000-ஆம் ஆண்டுக்குப் பின்னர் உருவான இளம் தலைமுறை படைப்பாளிகளே பதினெட்டு ஆண்டுகள் இலக்கியச் செயல்பாடுகளில் இருந்து விலகி இருந்த இவரை மீட்டெடுத்து இலக்கிய உலகில் மறுபிரவேசம் செய்ய வைத்தவர்கள். இவ்வாறு இவரை அடையாளம் கண்டு உற்சாகப்படுத்தியவர்களில் ம.நவீன் மற்றும் அவரது ‘வல்லினம்’ இலக்கிய குழுவினருக்கும் முக்கியமான பங்குண்டு என்பது மறுக்க முடியாததாகும்.
ஈழத்தமிழைக் காட்டிலும் சிங்கை, மலேயா தமிழ் என்பது தமிழகத் தமிழுக்கு மிகவும் நெருக்கமானதாகும். ஆனால் ஈழத் தமிழருடன் இருந்த இலக்கியப் பரிவர்த்தனை அளவிற்கு சிங்கை மலேயத் தமிழர்களுடன் தமிழகத் தமிழர்களுக்கு நெருக்கம் இருந்ததில்லை.
இரண்டாயிரமாம் ஆண்டுகளுக்குப் பின்னர் தனித்துவ அடையாளத்துடன் மலேசிய நவீன இலக்கியச் சூழலில் முக்கிய இடத்தைப் பெற்றது ‘வல்லினம்’ இலக்கிய இதழ். ‘வல்லினம் கலை இலக்கிய விழா’ 2009-ஆம் ஆண்டில் தொடக்கம் கண்டது. தமிழகத்தில் இருந்து கோணங்கி, ஜெயமோகன், பவா.செல்லத்துரை, சு.வேணுகோபால் மற்றும் பல இலக்கிய ஆளூமைகள் மலேசியாவில் நடைபெற்ற இக்கலை இலக்கிய முயற்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். சிறுகதைப் பட்டறை, இலக்கிய உரையாடல்கள், ஆவணப் படங்கள் தயாரிப்பு என பல்வேறு திசைகளில் சிறகுகளை விரித்துச் செயல்பட்டனர் ‘வல்லினம்’ குழுவினர். மருத்துவர் மா.சண்முகசிவா, தொழிற்சங்கவாதி ஜி.வி.காத்தையா, கூலிம் நவீன இலக்கிய களம் ஆலோசகர் சுவாமி பிரேமானந்தா சரஸ்வதி ஆகியோர்கள் ‘வல்லினம்’ குழுவினரின் இலக்கியச் செயல்பாட்டிற்குத் தொடர்ந்து தோள் கொடுத்து துணை நின்றார்கள்.
2017-ஆம் ஆண்டு சீ.முத்துச்சாமிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. இதன் நீட்சியாக மலேசியா, கோலாலம்பூரில் அமைந்துள்ள ‘கிராண்ட் பசிபிக்’ ஹோட்டலில் அவருக்கு பாராட்டு விழாவொன்று ‘வல்லினம்’ குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவில்தான் முதன்முறையாக சீ.முத்துச்சாமி அவர்களை நான் நேரில் சந்தித்தது. இளம் தலைமுறை இலக்கிய படைப்பாளிகளின் மீது அவர் கொண்டிருந்த அளப்பெரிய மதிப்பையும், நம்பிக்கையையும் அந்த விழாவில் அறிந்து கொள்ள முடிந்தது. மலேசியாவின் வணிகம் சார்ந்த இலக்கியவாதிகளின் மீதான சீ.முத்துச்சாமியின் கசப்பையும், தீவீர இலக்கியத்தின் மீதான அவரின் அக்கறையையும் அவ்விழாவில் அவர் பேசிய பேச்சு உரக்க வெளிப்படுத்தியது. பொருளாதார பின்புலமோ, அரசியல் சார்போ இல்லாமல் தன்னெழுச்சியையும், செயலூக்கத்தையும் மட்டுமே நம்பிக்கையாகக் கொண்டு இயங்கிய ‘வல்லினம்’ குழுவினர் மீதான நெருக்க உணர்வையும் அவ்விழாவில் வெளிப்படுத்தினார் சீ.முத்துச்சாமி அவர்கள்.
கித்தாக்காட்டு மண்ணையும், மனிதர்களையும் பேசிய சீமுத்துச்சாமியின் நீட்சியாக நவீன இலக்கிய உலகில் முகம் காட்டியவர் ம.நவீன் அவர்கள். தமிழக நவீன எழுத்தாளர்களின் தொடர்பு இவரை வேறு எல்லை நோக்கி, வீச்சுடன் நகர்த்தியிருப்பதை நிரூபிக்கிறது சமீபத்திய இவரது “சிகண்டி” நாவல் புனைவு.
1955 – 65 ஆம் காலகட்டத்தில், அப்பொழுது ரப்பர் தோட்டத்தை நிர்வகித்து வந்த மேலைநாட்டு நிறுவனங்கள், அவற்றை உள்நாட்டு முதலாளிகளுக்கு விற்றுவிட்டு தாயகம் திரும்பினர். உள்நாட்டு முதலாளிகள் ரப்பர் தோட்டத்தைத் துண்டாக்கினர். வம்சாவளி தோட்டத் தொழிலாளர் வாழ்வு சிதைவு கண்டது. மண்ணை நம்பி, மண்புழுவாக வாழ்ந்த மக்கள் நகரம் நோக்கி தொழில் தேடி நகரத் தொடங்கினர்.
இக்காலகட்டத்தில் சிலாங்கூர் பகுதியில் ‘ஈயம்’ கண்டெடுக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் மலேஷியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட நிழல் குழுக்கள் உரு கொண்டன. தோட்டத் தொழிலாளர்களின் வம்சாவளியினர் கொடூர குற்றவாளிகளாக உருவாகினர்.
நிழல் குழுக்களில் சீனர்கள் மட்டுமல்லாமல் தமிழர்களும் இடம் பெற்றிருந்தார்கள்.
எலுமிச்சை புற்கள் விளைந்த நிலத்தில் காப்பிப்பயிர்கள் பயிரிடப்பட்டன. பின்னர் கரும்பும் அதன் தொடர்ச்சியாக ரப்பர் தோட்டமும் மலேசிய மண்ணில் விளைவிக்கப்பட்டன. ஆங்கிலேயர்களின் வெளியேற்றத்துக்குபின் இந்திய வம்சாவளியினர் நகரம் நோக்கி நகரத் தொடங்கிய வரலாற்றுப் பின்னணியோடு சிகண்டி கதை விரிவாக்கம் கொள்கிறது. இந்த நாவலில் இடம் பெரும் கதா பாத்திரங்களின் பெயர்களை தனித்து அடையாளப்படுத்திப் பார்க்காமல் பொது சாராம்ச குறியீடுகளாகவே பார்க்கத் தோன்றுகிறது. இத்தகைய மாற்றம் கொண்ட எதிர்மறை பண்பாடு பேசும் இலக்கிய வடிவமாக உருக் கொண்டுள்ள நாவல்தான் “சிகண்டி”.
நேர்மறை மற்றும் எதிர்மறை உச்சங்களைப் பேசும் நவீன இலக்கிய வடிவங்களுக்கு இந்திய மண்ணில் உதாரணங்கள் காட்ட முடியும். ஜி.நாகராஜனின் ‘ நாளை மற்றுமொரு நாளே’, ‘குறத்தி முடுக்கு’ மற்றும் பஷீரின் ‘சப்தங்கள்’ போன்ற நாவல்களை சில உதாரணங்களாகச் சொல்லலாம். இஸ்லாம் நாடான மலேசிய மண்ணில் இந்த நிகழ்வை, மலேஷிய இலக்கிய வரலற்றில் ஒரு புதிய பாய்ச்சலை இந்த நாவலின் மூலம் நவீன் ஏற்படுத்தியுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
பரங்கிப்புண், மலைக்காய்ச்சல், அட்டைகடி, மலேரியா என மலேசியாவின் இருள் உலகுக்கு நீண்ட வரலாறு உள்ளது. இரட்டை கோபுரத்தையும், புகழ்பெற்ற மலேசிய கட்டிடங்களையும் தோண்டினால் அங்கு நாம் காணக் கூடியது மனித கபாலங்களாகத்தான் இருக்கும்.
பாலியல், போதை வஸ்துக்கள், மூன்றாம் பாலினத்தார் என பல்வேறு விதமான எதிர்மறை ரேகைகளால் பின்னப்பட்டு காட்சி அடுக்குகளாக கட்டமைக்கப் பட்டுள்ளது சிகண்டி நாவல். இது வரை மலாய் இலக்கியத்தில் தோற்றம் பெற்றுள்ள மொழிப்பாங்கு மற்றும் வடிவவியலில், சிகண்டி தன்னளவில் விரியும் இந்த எதிர்மறை கூறுகளின் காட்சிப் படுத்தலால் தனி அடையாளம் பெறுகிறது.
அடர்த்தியான படிமங்களும், உடல் மொழி குறித்த விவரிப்புகலும், காட்சி கட்டமைப்பும் நாவலுக்கு பலம் சேர்க்கின்றன. பாலின அடையாளத்தை துண்டித்துக் கொண்டு உடல் சார்ந்த உலகில் இருந்து ஒரு உயிர் விலகும் அதிர்வான கணத்தை இந்த நாவலில் எதிர் கொள்ள நேர்கிறது. இதுவே இந்த நாவலின் சாரமாகப்படுகிறது.
கித்தாத் தோட்டத்தின் இருட்டான ஈர மண்ணில் இருந்து கோலாலம்பூரின் உலர்ந்த, ஒளி நிலம் நோக்கிய ஒரு குழந்தைமையின் பரிமாண பயணம் 526 பக்கங்களில் விரிந்து புனைவு வடிவம் கொண்டுள்ளது. இந்திய தொன்ம நாட்டார் கடவுள்களை மலேசிய நிலப்பரபில் சர்வசாதாரணமாக பார்க்க முடியும். சீன தொன்ம தெய்வங்களில் இந்திய தெய்வங்களின் சாயலை காணமுடியும். மலாய், சீன, தமிழ் கம்பங்கள் தனித் தனியாக இருந்தாலும் சீன, தமிழ் தெய்வங்கள் ஒரே கோவிலில் அமைந்திருப்பதை மலாய் மண்ணில் பார்க்க முடியும். இந்தத் தொன்ம அடையாளங்கள் நாவலில் விரவிக்கிடக்கின்றன.
குறிப்பிட்ட நில எல்லை தாண்டி, இன்று அடித்தள, எதிர்மறை பண்பாட்டு நிறம் சுமந்த மனிதர்கள் மலாய் மண் எங்கும் பரவிக் கிடக்கிறார்கள். நாவல் ஆசிரியர் ஒரு பறவையின் பார்வையில் இருந்து கதைக் காட்சிகளைப் பதிவாக்கி உள்ளார். ஒரு பாம்பாக, மலாய் மண்ணின் சகல பகுதிகளிலும் ஊர்ந்து திரிபவர் ம.நவீன். சமூகத்தில் புறவயமாக நடைபெறும் நிகழ்வுகள் மனித மனங்களின் அகவயத்தை எப்படி பாதிக்கும் என்பதை சதா சிந்தித்தபடி பயணிப்பவர். தான் உள்வாங்கிய விஷயங்களை வாசகர்களுக்கு கடத்தும் மொழிவளமை இவரிடம் உள்ளது.
கித்தாக்காட்டு மண்ணின் சகல துணுக்குகளுக்கும் மத்தியில் முகம் மறைத்து வளர்ந்த நஞ்சுச்செடியின் கோரம் கதையாக மாறியுள்ளது. நாவலின் பாத்திரப் பெயர்களையும், அவர்களின் குணாதிசயங்களையும் தனித்தனியாக இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். “சிலுவை” எனும் படிமம் கொடுக்கும் அடர்த்தியான அர்த்த விரிவுக்கு இணையான ஒரு படிமம் என்றே “சிகண்டி” தோன்றுகிறது.
கசப்பும் நஞ்சுமான மலேசியாவின் திருநங்கையர் நிலத்தைத்தன் களமாகக் கொண்ட நாவல் ‘சிகண்டி’. இந்த நாவலில் வளமையான அற விழுமியங்கள் எதுவும் பேசப்படவில்லை. வாசகனை நிலைகுழைய வைக்கும் அகவெளி படர்ந்த கதைக்களம். வாசிப்பு இன்பத்தை அளிக்கும் நாவல் தன்மையில் இருந்து விலகி நிற்கிறது ‘சிகண்டி’. அந்த வகையில் ஒரு புதிய பாய்ச்சலாகவே, மலேஷிய நாவல் வரலாறில் ‘சிகண்டி’யை சொல்ல வேண்டும்.
‘செளவாட்’ எனப்படும் இருள் நகரத்தின் வாழ்வியல் ரேகைகளால் நெய்யப்பட்ட நாவல் ‘சிகண்டி’. கெடா மாநிலத்தின், லுனாஸ் எனும் சிறிய ஊரில் பிறந்து, அதே ஊரில் தன் பால்யத்தைக் கழிக்கும் தீபன் கதாபாத்திரத்தின் பார்வையில் விரியும் உலகம் இந்த நாவலில் கட்டமைக்கப்பட்டுள்ளது. செளவாட் பகுதியின் இருள் உலகம் கொடுக்கும் பரவசத்தில் தோய்ந்தவன் இந்த தீபன்.
ஹிஜ்ரா சமூகத்தின் காவல் தெய்வமும், ஸ்ரீசக்ராவில் உள்ள தெய்வங்களில் ஒருவருமான ‘பகுச்சரா மாதா’, தாயின் அம்சமாக கன்னி வடிவத்தில் தோன்றியவர். இவரே இந்த நாவல் நிலத்தில் திருநங்கையரின் அன்னையாக காட்சி பெறுகிறார்.
மலேஷிய சீனர்களின் வழிபாட்டு நம்பிக்கையில் பௌத்த, தாவோ, நாட்டார் தெய்வங்கள் இடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடியும். பகுச்சரா மாதாவோடு இணைந்து ஒரே கோவிலில் சீன பௌத்த தெய்வமான ‘குவான் – பின்’ தேவியை மலேசிய மண்ணில் பார்க்க முடியும். பெண் வடிவில் வணங்கப்படும் போதிசத்துவர் தான் குவான்-பின் மாதா. மஹாயான பௌத்தத்தில் ‘அவலோகிதர்’ என அழைக்கப்படுபவர் தான் குவான் – பின் மாதா.
பகுச்சரா மாதாவும், குவான் – பின் மாதாவும் இணைந்த நிலத்தின் சாரத்தில் சிகண்டி கதை நிகழ்வு கட்டமைக்கப்பட்டுள்ளது.
மலேசிய தமிழ் படைப்பிலக்கியத்தில் இதுவரை பார்த்தறியப்படாத ஈபு, சரா, தீபன் போன்ற கதை மாந்தர்கள் சிகண்டி நாவலில் முகம் காட்டுகிறார்கள்.
இருள் உலகத்தின் நிலத்தை தன் அடையாளமாகவும், உரிமையாகவும் பார்க்கும் திருநங்கை ஈபு. திருநங்கையர்களுக்கு பால்மாற்று அறுவை சிகிச்சை செய்யும் தாய் திருநங்கையாக நாவலில் இவள் இடம் பெறுகிறார். ஆண் எனும் பாலின அடையாளத்தில் இருந்து துண்டித்துக் கொண்ட திருநங்கையர் அன்னை இவர்.
அப்கோர்வாட் கோவிலின் அப்ஸரஸ் சிலைகளுக்குள் தன்னை கரைத்துக் கொண்டு தானே ஒரு தேவதை என நாவலில் தோற்றம் கொள்பவள் சரா. பகுச்சரா மாதாவின் சன்னதியில் இவள் ஆடும் நடனத்தில் இவளுள் இருந்து அப்ஸ்சரஸ் வெளிப்படும் இடம் நாவலில் ஒரு அற்புதம். தீபனின் முன்பாக, அவனுக்காக அந்தரங்கத்துடன் ஆடத் தொடங்குபவள் அவன் இருப்பு அகன்ற பின்னும் ஆட்டத்தைத் தொடர்கிறாள். சராவும் ஒரு திருநங்கையர். ஆனாலும், தாய்மையின் கனிவும், பெண்மையின் பூரணத்துவமும் கொண்ட தேவதையாகவே இவள் நாவலில் காட்சி பெறுகிறாள். திருநங்கை என்பதை உணர முடியாமலேயே இவளைக் காதலிக்கிறான் தீபன். தீபனுக்குள் இருக்கும் குழந்தைமையை அடையாளம் காண்பவளும் சரா பாத்திரம்தான்.
திருநங்கையர் உலகை தரவுகளின் தொகுப்பாக இல்லாமல், வாழ்வியல் ரேகைகளாகக் காட்டுவதில்தான் நாவலின் வெற்றி அடங்கியுள்ளது.
பகுச்சரா மாதாவும், குவான் – பின் மாதாவும் கரைந்து கலந்த நிலவியலில், பாலின அடையாளத்தைத் தொலைக்கும் போது மாற்றம் காணும் உளவியலைப் பேசுகிறது ‘சிகண்டி’.
“ஒரு பெண் கன்னியாகவும், தாயாகவும் இருக்க வேண்டுமானால் அற்புதம் நிகழ வேண்டும். கன்னியாகவோ, தாயாகவோ இல்லாத போது யாரும் அற்புதங்கள் பற்றிப் பேசுவதில்லை”
என்று ஆங்கில நாவல் ஆசிரியர் ‘ஏஞ்சலா கார்ட்டர்’ தனது பதிவு ஒன்றில் குறிப்பிடுவார்.
சிகண்டி நாவலிலும் ஒரு அற்புதம் நிகழ்ந்துள்ளது.
நன்றி : கல்குதிரை