உரை: யுவன் சந்திரசேகர் படைப்புலகம்

2006இல்

அனைவருக்கும் வணக்கம்.

இங்கு வந்திருக்கும் பலரும் யுவன் சந்திரசேகரின் புனைவுகளை அதிகம் வாசித்திருக்க வாய்ப்பிருந்திருக்காது. ஒரு சில கதைகளை வாசித்துவிட்டு கொஞ்சம் குழப்பத்துடன் பின்வாங்கவும் செய்திருக்கலாம். இந்த உரையை யுவனை அணுக ஓர் ஆரம்பக்கட்ட வாசகனுக்கு வேண்டிய மனத்தயாரிப்பு குறித்து பேசலாம் என வடிவமைத்துக்கொண்டேன். அதன் வழி மலேசியாவில் யுவனை வாசிக்கக்கூடிய புதிய வாசகர்கள் உருவாவார்கள் என்றால் அதுவே மகிழ்ச்சி.

2006 டிசம்பர் மாதம் சென்னையில் நான் யுவன் சந்திரசேகர் அவர்களை முதன்முறையாகச் சந்தித்தேன். கவிஞர் மனுஷ்யபுத்திரன் வீட்டில் அப்போது தங்கியிருந்தேன். ஒரு மாலையில் யுவன் அங்கு வந்தார். அப்போது நான் தீவிரமான கவிதை வாசகன். நான் யுவன் அவர்களை சில கவிதைகள் வழியாகவே அறிந்திருந்தேன். நான், பா.அ.சிவம், யுவராஜன் போன்ற நண்பர்கள் தொடர்ந்து சமகால கவிதைகள் குறித்தே பேசிக்கொண்டிருப்போம். கவிஞர்களைச் சந்திப்பதும் கவிதைகள் குறித்துப் பேசுவது மட்டுமே எங்களுக்கான இலக்கியப் பயிற்சி. எனவே சில கவிதைகள் இயல்பாக எங்கள் மனதில் பதிந்திருந்தன. இப்போதுவரை நினைவில் இருக்கும் கவிதைகள் சில அப்போது மறுபடி மறுபடி எங்களுக்குள் ஒப்பித்தவைதான்.  2006இன் தொடக்கத்திலேயே மனுஷ்யபுத்திரன் மலேசியா வந்திருந்ததால் யுவனுடைய ‘கைமறதியாய் வைத்தநாள்’ என்ற கவிதைப் புத்தகம் அறிமுகம் இருந்தது. அது தவிர அவர் ‘உயிர்மை’ இதழில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்தார். எனவே எங்கள் உரையாடலில் யுவன் மிக எளிதாக இணைந்துகொள்வார்.

யுவனை அங்குச் சந்தித்தேனே தவிர அதிகம் பேசவில்லை. மனம் அவரது கவிதைகளில் ஏதேனும் ஒன்றைச் சொல்லலாமா எனத் தேடிக்கொண்டிருந்தது. ஒரு கவிதையில் ஒரு வரி மட்டும் நினைவுக்கு வந்தது. ஒரு தொகுப்பில் சில வரிகள் அப்படி நினைவில் ஒட்டிக்கொள்ளும். மேலும் அந்த வயதில் அறிவு ஜீவியாகக் காட்டிக்கொள்ள தடாலடியாக சில கவிதை வரிகளை சபையின் முன் போட்டுடைப்பதுதான் ஒரே வழி.

‘இறக்கை முளைத்தால் தப்பிக்கலாம்தான்

ஆனால் கைகளை என்ன செய்ய?’ இந்த வரியை வாசித்தபோது நான் அடைந்த கிளர்ச்சி இப்போது இந்த அரங்கில் பேசும்போதுகூட எழுகிறது. இந்த வரியைச் சொல்ல எனக்கான இடைவெளி இல்லாமல் மனுஷ்யபுத்திரனும் யுவனும் பேசிக்கொண்டிருந்தனர். நான் வாய் பார்த்துக்கொண்டிருந்தேன்.

யுவனுடைய குரல் திடீரென கரகரக்கத் தொடங்கியது. அப்போது தமிழகத்தில் ‘பாரதியார், புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி’ எனும் கருத்தரங்கு ஒன்று நடக்கவிருந்தது. அந்தக் கருத்தரங்கு குறித்து நினைவு கூர்ந்தவர் “இறந்து பல ஆண்டுகள் ஆன பிறகும் இந்தப் படைப்பாளிகளை நினைவு வைத்துக்கொண்டிருப்பதுபோல நம்மையெல்லாம் நினைவு வைத்திருப்பார்களா?” எனக்கேட்டபோது முற்றிலுமாகக் குரல் உடைந்திருந்தார். எனக்கு அந்தச் சூழல் விசித்திரமானது. நான் அப்போது என்ன செய்யவேண்டும்? நான் அங்கு இருக்கலாமா? என்றுகூட தெரியவில்லை. அடுத்த கொஞ்ச நேரத்தில் அதிலிருந்து மீண்டவர் அவர் சென்றுவந்த ஒரு இசை கச்சேரி குறித்து பேசினார். அங்கு வாசித்த ஒரு தோல் வாத்தியத்தின் ஒலி தனது அடிவயிற்றில் ‘தோம் தோம்’ இப்போதுவரை இசைத்துக்கொண்டிருப்பதாகக் கூறினார். அப்போது அவர் ஒரு சிறுவனைப் போல உற்சாகமாக இருந்தார்.

நண்பர்களே, நான் அப்போது இரண்டு யுவனை எதிர்கொண்டேன். ஒன்று ஒரு கலைஞன் வரலாற்றில் நினைவுக்கூரப்படுவதைப் பற்றிய ஏக்கத்தை சொல்லும் முதிர்ச்சியான யுவன். மற்றது அரூப வடிவமாக மாற்றப்பட்ட ஒரு கலைஞனின் கலை வடிவத்தை  தன் அடிவயிற்றில் பதுக்கி வைத்துள்ள சிறுவன் குணம் கொண்ட யுவன்.

இந்தச் சம்பவம் குறித்து அன்றைய எழுத்துலக நண்பர்களிடமெல்லாம் சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டேன். இரண்டு நிலைக்குத் தாவிச்செல்லும் யுவனை நான் மனதில் பதிய வைத்திருந்தேன். இரண்டு வெவ்வேறு உணர்ச்சித் திரலைக் கொண்ட அனுபவங்களை இப்படி இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இல்லைதான். ஆனால் யுவன் புனைவுகளின் உத்திகள் இயல்பாக அந்த மனநிலைக்கு நம்மை பழக்கப்படுத்துகின்றன.

யுவன் சந்திரசேகர் புனைவுகளை முதலில் வாசிப்பவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல் புறவயமான இந்தக் கூறுமுறையைத்தான். பல்வேறு குறுங்கதைகளின் கோர்வையாகச் சிதறிக் கிடக்கும் இந்தக் கதைகளின் பொதுவான சரடு என்ன என்ற கேள்வி ஒரு தொடக்ககால வாசகனைத் தொந்தரவு செய்யக்கூடும். ஒருவேளை அப்படி ஒரு சரடு கிடைத்தால் மகிழ்ச்சிதான். சற்று முன்னர் அரவின் குமார் பேசிய ‘குள்ளச்சித்தன் சரித்திரம்’ நாவலில் குள்ளச்சித்தன்தான் அத்தனை தனிக்கதைகளையும் ஒன்றாக இணைக்கும் சரடு. யுவனின் பல சிறுகதைகளையும் இந்த அம்சத்தைக் காணமுடிகிறது. நன்றாக யோசித்தால் அப்படிக் கதைகளை இணைக்கும் சங்கிலியை தேடிக்கண்டடைவது நாமாக எடுத்துக்கொள்ளும் முயற்சியோ என்றும் தோன்றுவதுண்டு.

நான் காசிக்குச் சென்றிருந்தபோது அதிகாலை கங்கையில் பயணம் செய்தபடி இருந்தேன்.  அங்கு ஏராளமான படித்துறைகள் உள்ளன. ஒவ்வொரு படித்துரையையும் வேடிக்கை பார்த்தபடி சலனமற்ற நதியில் மிதந்துகொண்டிருந்தேன். ஹனுமன், அரிசந்திரா படித்துரை ஓரங்களில் பிணங்கள் எரிந்து முடிந்து புகை மிதந்துகொண்டிருந்தது. அங்கு சில நாய்கள் மேய்ந்துகொண்டிருந்தன. அடுத்து கொஞ்சம் கடந்தால் சில மாணவர்கள் குருவின் துணையுடன் யோகா செய்துகொண்டிருந்தனர். இன்னொரு இடத்தில் இசை வாத்தியங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டுக்கொண்டிருந்தன. அடுத்த பகுதியில் சில முதிய பெண்கள் அரை நிர்வாணமாக குளித்துக்கொண்டிருந்தனர். ஒரு படித்துறையின் நிகழ்விற்கும் மற்றதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவை தனித்தனியான உலகங்கள். ஆனால் அத்தனையுமே அந்த கங்கையின் ஓரம்தான் நிகழ்கின்றன. இவை அனைத்தையும் ஒன்றென இணைப்பது காலகாலமாக நகரும் அந்த நதிதான். கொஞ்சம் முயன்றால் எரிந்து முடிந்து அர்த்தமற்று புகை சிந்தும் பகுதிக்கும் ஆழ்ந்த தியானத்தில் மூழ்கியுள்ள துறவி அமர்ந்துள்ள பகுதிக்கும் ஒரு கோட்டை இழுக்க முடியும். அது நம் கற்பனையின் சாத்தியம்தான். இத்தகைய சாத்தியங்களை கொண்டவையாகத்தான் யுவன் சந்திரசேகரின் சிறுகதைகள் உள்ளன. உதாரணத்திற்கு ‘அந்நியம்’ என்ற சிறுகதை குறித்து கூறலாம்.

சிறுகதையில் கதைசொல்லி சிறுவனாகவும் சற்று மூப்பேறியவராகவும் இரு காலகட்டங்களில் கதையைச் சொல்கிறார். சிறுவனாக இருக்கும்போது மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவனைக் காண்கிறான் கதைசொல்லி சிறுவன். அவனுக்கு பாவா எனப்பெயரிட்டு சீனியம்மா எனும் கைம்பெண் தன்னுடன் வைத்துக்கொள்கிறாள். ஊரார் சந்தேகத்தைப் போக்க அவனைத் தன் தம்பி போன்றவன் எனச் சொல்கிறாள். ஆனாலும் அச்சொல்லின் மீது பெரும்பாலோருக்கு நம்பிக்கை எழவில்லை. உண்மையில் சீனியம்மா தேங்கிக்கிடந்த தன் காமத்தைத் தீர்த்துக்கொள்ள அவனைப் பயன்படுத்துபதை கதைச்சொல்லி மட்டுமே அறிவான். ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு மோட்டார் ரூமில் ஒளிந்திருந்து அவன் அதைப் பார்க்கிறான். சீனியம்மாவின் காமத்தைப் புரிந்துகொள்ளாமல் ஒடுங்கிக்கொள்ளும் பாவாவை எண்ணி வியப்படைகிறான். சீனியம்மா கொலை செய்யப்பட்டு இறக்கிறாள். சிறுவனாக கதைச்சொல்லி பார்த்த இந்தச் சம்பவங்கள் முப்பத்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு வேறொரு சம்பவத்தின் வழி அவருக்குள்ளிருந்து வெளிப்படுகிறது. மலாவி தேசத்தில் வசிக்கும் நாகநாதன் எனும் நண்பர் சொன்ன கதை அது. திருட்டு மலிந்துபோன அந்த தேசத்தில் திருட வந்தவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தால் உயிருக்கு ஆபத்து இல்லை. கிட்டத்தட்ட எல்லோருமே ஒரு திருட்டு சம்வத்தை எதிர்பார்த்தே வாழ்கிறார்கள். அதற்கான காப்புறுதியும் உண்டு. அப்படி நாகநாதன் வீட்டுக்கு வரும் திருடர் கூட்டத்தில் ஒருவன் கட்டிலுக்கு அடியில் மறைவாக இருந்த பெட்டி ஒன்றை எடுக்கிறான். நாகநாதன் அதில் பாஸ்போர்ட், வாகன ஓட்டும் உரிமம் உள்ளது எனக்கூறி அதை வைத்துவிடக் கேட்கிறான். திருடனும் அவன் சொல்லை நம்பி விட்டுச் செல்கிறான். உண்மையில் அதில் அவன் வேலை செய்யும் நிறுவனத்தின் பெரும் தொகை இருக்கிறது.

நிகழ்ச்சியில்

நான் இந்தக் கதையைப் பற்றி பலவாராகச் சிந்தித்துக்கொண்டிருந்தேன்.

ஏன் மலாவியில் நடக்கும் இந்நிகழ்வு கதைசொல்லிக்கு பாவாவை நினைவுறுத்துகிறது? ஏன் நாகநாதன் சொல்லும் ஆப்பிரிக்க திருடனின் முகம் கதைசொல்லியின் முப்பத்து ஐந்து ஆண்டுகளைக் கரைக்கிறது? பாவாவின் கையில் காமம் திரண்ட கவர்ச்சியான பெண் ஒருத்தி இருக்கிறாள். திருடனின் கையில் பணம் தாங்கிய பெட்டி இருக்கிறது. பெட்டியில் ஒன்றும் இல்லையென திருடன் நம்ப வைக்கப்படுவதுபோல காமத்தில் ஒன்றும் இல்லை பாவா நம்ம காரணம் என்ன? அல்லது பாவா புரிந்துவைத்துள்ள பெண்ணின் உடல்போலத்தால் மலாவியில் திருட வந்த அந்த ஆப்பிரிக்கனுக்கு அளவில்லாத பணத்தின் மீதான மதிப்பீடு இருந்திருக்குமா? என்ற கேள்விகள் வாசகன் மனதில் தோன்றும்போது மறுபடியும் கதை ஆழம் கொள்கிறது.  

இந்தக் கதையை இப்படிச் சில கோடுகள் போட்டு இணைக்கலாம்தான். இல்லாவிட்டாலும் யுவன் வருந்தப்போவதில்லை. உண்மையில் எண்ணற்ற வாசிப்புகளுக்கு வாய்ப்புக் கொடுக்கக் கூடியவை யுவனின் புனைவுகள். இந்த அனுபவத்தை எதிர்கொண்டு வாசிக்கும்போது நேர்கோடற்ற யுவனின் எழுத்துகள் உற்சாகம் கொடுப்பதாய் அமையக்கூடும்.

யுவன் சிறுகதைகளில் காணக்கூடிய இன்னொரு அம்சம் தற்செயல்கள் கொடுக்கும் அனுபவம். சில சமயம் வரலாற்றைக் கூட ஒரு தற்செயலாகத்தான் அவர் அணுகுகிறார். இது ஒரு பின் நவீனத்துவ மனநிலை எனலாம். நான் வாசித்தவரை யுவனுடைய சிறுகதைகளில் பின்நவீனத்துவ அழகியலே அதிகம் இருக்கிறது. பின் நவீனத்துவம் வரலாற்றை தர்க்கபூர்வமாக அலசுவதில்லை. மாறாக, வரலாறு என்பதே தற்செயல்களின் தொகுப்புகளாகத்தான் கணிக்கப்படுகிறது.

நான் ஆசிரியர் வேலைக்கு வந்த புதிதில் எனக்கு ஓர் அனுபவம் நிகழ்ந்தது. அது வரலாற்றுப் பாடம். மலாக்கா எனும் மாநிலம் உருவான விதத்தை நான் போதித்துக்கொண்டிருந்தேன்.

மலாக்கா எனும் மாநிலம் உருவான வரலாற்றை நாம் அறிவோம். அதற்கு மலாக்கா எனும் பெயர் வந்த விதம் ஒரு சுவாரசியமான கதையாகச் சொல்லப்படுகிறது. பரமேஸ்வரா சிங்கையில் இருந்து தப்பி பல கிலோமீட்டர்கள் காடுகளைக் கடந்துவந்து ஒரு மரத்தில் ஓய்வெடுக்கிறார். திடீரென அவரது வேட்டை நாய்கள் ஒரு சருகுமானைத் துரத்துகின்றன. அந்தச் சருகு மான் அந்த வேட்டை நாயை கால்களால் எட்டித்தள்ள நாய்கள் ஆற்றில் விழுகின்றன. அது வலிமையின் அறிகுறி என்பதால் பரமேஸ்வரா அங்கேயே தன் அரசை உருவாக்க விரும்புகிறார். அவர் சாய்ந்து அமர்ந்திருந்த மரத்தின் பெயர் மலாக்கா. எனவே அவர் அந்த இடத்துக்கு மலாக்கா எனும் பெயரை வைக்கிறார்.

இந்தக் கதையை நான் சொன்னதும் ஒரு மாணவன் கேட்டான், “சார் ஒருவேளை பரமேஸ்வரா பாக்கு மரத்தில் அமர்ந்திருந்தால் அந்த ஊரின் பெயர் பினாங்கு என இருந்திருக்குமா?”

நான் சற்று தயக்கத்துடன் “இருக்கலாம்,” என்றேன்.

“அப்படியானால் நாம் மலாக்காவைதான் பினாங்கு என அழைத்துக்கொண்டிருப்போம் அல்லவா?” என்றான்.

நான் தயக்கத்துடன் “ஆம்!” என்றேன்.

“அப்போது பினாங்கை என்னவென்று அழைப்போம்?” என்றான்.

“மலாக்கான்னு வச்சிக்கலாம்,” என்றேன் கொஞ்சம் எரிச்சலுடன்.

“ஆனா பரமேஸ்வரா இப்ப பினாங்கு மரத்துலதானே சாஞ்சிருக்கார்?” என்றான்.

நான் கொஞ்சம் குழம்பிப் போனேன். இன்னொரு மாணவன் பாடநூலை எடுத்துக்கொண்டு ஓடிவந்தான். அதில் சருகுமான் உதைத்து நாய் குப்புற விழுவதுபோன்று படம் வரையப்பட்டிருந்தது.

“சார்… நாய் மல்லாக்கா விழுந்ததால மலாக்கானு பேரு வந்திருக்குமா?” என்றான்.

“இருக்கலாம்தான்… யார் கண்டது,” என்றேன்.

நாம் கட்டமைக்கும் வரலாற்றை சிறுவர்களிடம் கொடுத்தால் அவர்களிடம் உருவாகும் கேள்விகளுக்கு நம்மிடம் பல சமயங்களில் பதில்கள் இருப்பதில்லை. யுவனுடைய சிறுகதைகளையும் நாவல்களையும் வாசிக்கும்போது அவர் வரலாற்றை ஆழ்ந்து வாசிக்கிறார் எனப் புரிகிறது. வரலாற்று மனிதர்களின் நுணுக்கமான தரவுகளைப் போகிற போக்கில் கொடுக்கிறார். தனக்கு அதிக ஈடுபாடு உள்ள ஒன்றை  அவர் கையில் வைத்து விளையாடுகிறார். ஆனால் அது கவனமான விளையாட்டு. சர்க்கஸில் தன் காதலியை தூக்கிப்போட்டு பிடிப்பவனின் விளையாட்டுத்தனம் அவர் பார்வையில் இருந்தாலும் கவனமும் கூர்மையும் அவர் கைகளில் உள்ளன. பல சமயங்கள் அவரது முந்தைய கதைகளில் வரும் தீவிர சம்பவங்களைக்கூட இன்னொரு கதையில் கிண்டலடித்துச் செல்வதைக் காண முடியும். யுவனின் இந்தக் கூர்மையான விளையாட்டை அறிந்துகொண்டால் அவர் கதைகளை நாம் மேலும் கவனமாக வாசிப்போம். அவர் வாசகன் முன் ஆடுவது முழுக் கவனமும் கோரும் ஒரு விளையாட்டைதான்.

யுவன் படைப்புலகில் இருக்கும் மற்றுமொரு அம்சம் ‘மாற்று மெய்மை’. மாற்று மெய்மை என்பது என்ன? ஒரு வாசகனாக என்னை இந்த அம்சமே யுவனை மீண்டும் மீண்டும் வாசிக்க வைக்கிறது. மாற்று மெய்மை என்பதும் ஒரு மெய்மைதான். ஆனால் நாம் அறியாத அல்லது அறிமுகப்படுத்திக்கொள்ளாத மெய்மை எனலாம். அது கொடுக்கும் ஆச்சரியத்தால் அதனை நாம் அமானுஷ்யம் எனச் சொல்லவும் செய்யலாம். இந்த அமானுஷ்ய தருணத்தை எளிய மனிதர்கள் மிக சாதாரண ஒரு தருணத்தில் இன்னும் மிகச் சாதாரணமாகத் தொட்டுச்செல்லும் அனுபவங்களாகவே யுவனுடைய கதையில் வந்துபோகின்றன.

உதாரணமாக ‘முன்னுணர்தல்’ எனும் சிறுகதை.

நான்கு நாய்கள் காவலுக்கு உள்ள ஒரு குடியிருப்பில் கதைசொல்லி வசிக்கிறார். அந்த குடியிருப்பின் உரிமையாளர் மாதவ ராவ். ஏதாவது ஒரு சமயம் எல்லா நாய்களும் அமைதியாக ஒரு குறிப்பிட்ட திசையை வெறிக்கின்றன. இது கதைசொல்லிக்கு அச்சத்தை மூட்டுகிறது. வீட்டை மாற்ற நினைத்தால் அதைவிட வசதியான இடம்கிடைப்பது சிரமம். மேலும் நிரூபனங்கள் ஏதும் இல்லாமல் வீட்டை மாற்ற மனைவியை சம்மதிக்க வைக்கமுடியாது. மாதவ ராவ் குறித்து விசித்திரமான அனுபவங்கள் கதைசொல்லியால் சொல்லப்படுகிறது. அவர் பழங்கால நூலில் உள்ள சுலோகங்களை அடிக்கடி வாசிப்பதை கதைசொல்லி பார்க்கிறார். ராவிடம் இருக்கும் விசித்திரங்கள் எல்லாம் கதைசொல்லிக்கும் அவர் நாய்க்கு மட்டுமே தெரிகின்றன. இதற்கிடையில் ராவுக்கு வலிப்புபோல ஒன்று வருகிறது. அப்படி வரும்போதெல்லாம் அவர் மனைவி அருகில் அமர்ந்து அழ அவர் வேறு யாரோ ஒரு குரலில் பேசுகிறார். அது பிரபல நடிகர்களின் குரலாக உள்ளது. அந்த குரலின் வழியாக ஒரு நாடகத்தையே நடத்திக்காட்டுகிறார். வரலாற்றில் விடை இல்லாத மர்மப் பகுதிகளையும் எதிர்கால பெரும் நிகழ்வுகளையும் அவரால் அந்த வலிப்பின் விளைவால் சொல்ல முடிகிறது. ராஜீவ் காந்தி கொலை, ஹிட்லர் கால மர்மங்கள் என அவருக்கு முன்னமே தெரிகிறது.

ஆனால் இதெல்லாம் உண்மையா? பலகுரல் கலைஞரான அவர் தன்னை வைத்து விளையாட்டும் ஆட்டமா இது? அல்லது முதுமையின் வெறுமையால் செய்யும் சேஷ்டையா எனக் குழம்புகிறார். இந்த குழப்பத்துக்கும் தெளிவுக்கும் இடையில் கதை சென்று முடிகிறது.

யுவனின் பல கதைகள் இப்படி மீ எதார்த்தம் அல்லது மாற்று எதார்த்தத்தைக் கொண்டவை. நான்காவது கனவு, விருந்தாளி, கிறக்கம் என ஒரு பட்டியலைச் சொல்லலாம்.

ஏன் இதுபோன்ற கதைகள் எழுதப்படுகின்றன என்பதுதான் முக்கியமான கேள்வி. முதலில் அது எழுதுபவரை சுவாரசியப்படுத்துகிறது. எழுத்து முதலில் எழுத்தாளனைச் சுவாரசியப்படுத்த வேண்டும். அவ்வகையில் இந்த வகை எழுத்துகள் யுவனை இன்னும் உற்சாகமானவராக மாற்றக்கூடியவை. வாழ்வின் தீராத புதிர் தருணங்களை உருவாக்கி அதன் ரகசிய இடைவெளிகளுக்குள் நுழைந்து செல்லும் சுவாரசியத்தைக் கொடுக்கக் கூடியவை. ஆனால், சுவாரசியமாக எழுதுவதால்தான் யுவன் தமிழின் முக்கியமான எழுத்தாளராக திகழ்கிறாரா?

வணிகத்துக்காக எழுதப்படும் பேய்க்கதைளிலிருந்தும், அமானுஷ்யக் கதைகளிலிருந்தும் யுவனின் கதைகள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதைக் கவனப்படுத்த வேண்டியுள்ளது. இந்த மாற்று மெய்மை மூலமாக யுவன் முன்வைக்கும் தத்துவம்தான் அவரைக் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக மாற்றுகிறது.

நாம் இந்த உலகை ஐம்புலன்கள் மூலமாக அறிகிறோம். ஐம்புலனால் அறியும் ஒன்றை மட்டுமே நமது அனுபவமாகச் சொல்கிறோம். ஆனால் நாம் ஐம்புலன்கள் மூலம் அறியும் அடைதல் மட்டுமே அறிவா? அப்படி நமது புலன்கள் மூலம் அறியமுடியாத ஒன்றை ஒருவர் அறிவாரானால் அவர்களையே நாம் யோகிகள், ரிஷிகள் என்கிறோம். அவர்களே நுணுக்கறிய நுண்ணியன் என்று பாடிவைக்கின்றனர். யுவன் கதைகளில் வரும் எளிய மனிதர்கள்கூட இந்த தர்க்கத்துக்கு அடங்காத வேறொரு உண்மையை எதிர்கொள்கின்றனர். புலன்களால் அறிய முடியாத உண்மையை புலன்களால் அறிய முயன்று தோற்கின்றனர். இந்தியத் தத்துவம் அப்படி அறியமுடியாத உண்மையை ஊகங்களால் நிறைவு செய்ய முயல்கிறது. யுவனுடைய புனைவுகளும் அதையே செய்கின்றன.

நண்பர்களே, நேர்கோடற்ற தன்மை, தற்செயல்களின் தரிசனம், மாற்று மெய்மை இவை மூன்றும் யுவன் புனைவுகளில் நாம் கவனிக்கவேண்டிய அம்சங்கள் என என் வாசிப்பின் வழி புரிந்துகொள்கிறேன். எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன், யுவன் புனைவுகளை நவீனத்துவத்தின் முறி மருந்து என்கிறார். நவீனத்துவ கதை அம்சம், அதன் அழகியல் ஆகியவற்றிலிருந்து விலகி தனித்த பாதையைக்கொண்ட கதைகள் யுவனுடையவை. பல்வேறு நவீன இலக்கியங்களை வாசித்து வரும் ஒரு வாசகனுக்கு யுவனின் படைப்புகள் புதிய வாசிப்பு அனுபவத்தையும் புதிதாய் வாசிக்கத் தொடங்குபவர்களுக்கு அதிர்ச்சியையும் கொடுக்கக்கூடும். எப்படியாயினும் தமிழில் தன்னைச் சிறந்த வாசகனாக நிறுவிக்கொள்ள நினைப்பவன் யுவனை கடந்துதான் தீரவேண்டியுள்ளது.

நான் அப்படித்தான் யுவனைக் கடந்தேன். அப்போதுதான் 2006இல் நான் பார்த்தது இரண்டு யுவன்கள் இல்லை எனப் புரிந்தது. நன்கு கவனித்தால் இரண்டுக்குமே மெல்லியதாக இன்னொரு தளத்தில் தொடர்பு உள்ளதைக் காணமுடியும். கலைஞன் நினைவுக்கூரப்படுவதைவிடச் சிறந்தது அவன் உருவாக்கிய கலை ஓர் அரூப படிமமாகி என்றென்றைக்குமாக நம் அடிவயிற்றில் ஒலியெழுப்பும் உபரி உருப்பாவதுதான் என அந்த இரண்டு சம்பவங்களுக்குள்ளும் உள்ள கோர்வையை இணைத்துப் பார்க்க முடிந்தது.

அப்படி ஒரு கோடு கிழிக்க வேண்டியது இல்லைதான்; ஆனால் யுவனிடம் அப்படிச் செய்யத்தான் வேண்டியுள்ளது.

(இவ்வுரை 11.6.2022இல் நடந்த யுவன் சந்திரசேகர் படைப்புலகம் நிகழ்ச்சியில் ஆற்றியது. சில பகுதிகள் கூடுதல் விளக்கங்களோடு மேம்படுத்தப்பட்டுள்ளது.)

(Visited 150 times, 1 visits today)