தூரன் ; பத்மபாரதி; சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

1954ஆம் ஆண்டு தொடங்கி 1963 வரை சென்னைத் தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட ஒன்பது கலைக்களஞ்சியத் தொகுதிகள் என்னிடம் உள்ளன. அதில், முதல் தொகுதியில் இடம்பெற்றுள்ள தி.சு.அவினாசிலிங்கத்தின் முகவுரை முக்கியமானது. சில வரலாற்றுக் குறிப்புகளை வழங்குவது. 1947இல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது பெரிய செயல்களில் ஈடுபட வேண்டும்; ஈடுபட்டால் அவற்றைச் செய்து முடிக்க முடியும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது. சுதந்திர தினத்துக்கு முந்திய நாள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் வழி தி.சு.அவினாசிலிங்கம் தமிழ்க் கலைக்களஞ்சியம் வெளியிடும் திட்டத்தைக் குறித்து அறிக்கை வெளியிட்டார். இரண்டே நாட்களில் இலட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை திரண்டது. அவ்வாதரவு கொடுத்த நம்பிக்கையுடன் அக்டோபர் 1947இல் கலைக்களஞ்சியப் பணியை சென்னைப் பல்கலைக்கழகக் கட்டடத்தில் தொடங்கினார். இந்தக் கலைக்களஞ்சியத்தின் தலைமை ஆசிரியர் பொறுப்பை ஏற்றவர் ம.ப. பெரியசாமித்தூரன்.

காண்க: பெரியசாமி தூரன்

1954 தொடங்கி 1968 வரை பத்து தொகுதிகளாக இந்தக் களஞ்சியம் வெளிவந்து நிறைவு கண்டது. பத்தாவது தொகுதி, இணைப்புத் தொகுதியாக வெளியானது. முதல் ஒன்பது தொகுதிகளில் விடுபட்ட சொற்கள், பொருட்குறிப்பு அகராதி ஆகியவற்றைக் கொண்டது பத்தாம் தொகுதி. ஒன்பதாவது தொகுதியில் தூரனின் நன்றியுரை இடம்பெற்றுள்ளது. பெரும்பணிக்குப் பின்பான மிகச்சிறிய உரை அது. இந்தக் கட்டுரையை எழுதும் முன் அந்த உரையை எடுத்து வாசித்துப் பார்த்தேன். களஞ்சியத்தின் ஒரு பக்கத்தில் அடங்கிவிடும் உரை. இம்முயற்சிக்குத் தன்னுடன் யாரெல்லாம் துணை நின்றார்கள் எனக் குறிப்பிடுகிறார் தூரன். ஏறமுடியாத பெரும் சிகரத்தை அடைந்தபிறகு மலையின் முன் தான் ஒன்றுமே இல்லை என விலகி நிற்கும் மனமது.

1968ல் கலைக்களஞ்சியம் முழுமை பெற்றபிறகு தூரன் மீண்டுமொரு சாகசத்திற்குள் தன்னைப் புகுத்திக்கொண்டார். அது குழந்தைகளுக்கான கலைக்களஞ்சியத்தின் தலைமை பதிப்பாசிரியர் பொறுப்பு. பத்து தொகுதிகள் வெளிவந்தபின் 1976இல் குழந்தைகளுக்கான கலைக்களஞ்சியமும் நிறைவடைந்தது. இப்படி ஏறக்குறைய 30 ஆண்டுகள் தன்னை முழுமையாக ஒரு பெரும் பணிக்கு ஒப்புக்கொடுத்தவர் தூரன். எடுத்துக்கொண்ட கருமமன்றி வேறொன்றில் கலவாத தவத்தில் இயங்கியவர்.

தூரன்

தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் சார்பில் வழங்கப்போகும் தூரன் விருது குறித்து அறிவிப்பு வந்தபோதுதான் மேலும் அவர் குறித்து வாசித்துத் தெரிந்துகொண்டேன். தமிழின் முதல் நவீன கலைக்களஞ்சியத்தைத் தொகுத்தவர் என மட்டுமே அதுவரை அவரை அறிந்து வைத்திருந்தேன். அந்நூல் தொகுதி எனக்களிக்கும் பிரமாண்டத்தைக்கொண்டு ஒருவர் தன் வாழ்நாளில் அதை மட்டுமே செய்ய முடியும் என நானாக முடிவெடுத்திருக்கலாம். தமிழ் விக்கி மூலமே தூரன் முன்னோடியான பாரதி ஆய்வாளர், மரபுவழிக் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், தமிழிசைப் பாடல்களின் ஆசிரியர், குழந்தைகளுக்கான பாடல்களை இயற்றியவர் என அவரது பல ஆளுமைகளை அறிந்துகொள்ள முடிந்தது.

அவர் பெயரில் வழங்கப்படும் முதல் விருது என்பது ஒரு வரலாற்று நிகழ்வு என கொஞ்சம் நுண்ணுணர்வு இருந்தாலே அறிந்துகொள்ள முடியும். இவ்விருது இன்னும் வளர்ந்து பண்பாடு, இலக்கியம் சார்ந்த களங்களில் பங்களிப்பாற்றியவர்களை கௌரவிக்கப் போவதையும் அவ்வாளுமைகளை பரந்த தளத்தில் அறிமுகப்படுத்தப்போவதையும் தமிழ் அறிவியக்கத்தில் மகத்தான செயல்பாடாகவே கொள்ளலாம்.

கரசூர் பத்மபாரதி

அதன் தொடக்கமாக கரசூர் பத்மபாரதி அவர்களுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டபோது 2015ல் ஜெயமோகன் அறிமுகம் செய்த ‘திருநங்கையர் சமூக வரைவியல்’ நூல் வழியாக அவரை நினைவுப்படுத்த முடிந்தது. தமிழ் பண்பாட்டு ஆய்வுக்களத்தில் ஒரு சாதனை என அந்நூலை ஜெயமோகன் குறிப்பிட்டிருப்பார். மேலும் தேடி வாசித்தபோது எஸ். ராமகிருஷ்ணன் பத்மபாரதி அவர்கள் எழுதிய ’நரிக்குறவர் இனவரைவியல்’ நூல் குறித்து எழுதியுள்ள கட்டுரையும் சுவாரசியமான அறிமுகத்தைக் கொடுத்தது. இவ்விரு ஆய்வு நூல்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இரண்டுமே அதிகம் அறியப்படாத சமூகத்தினர் குறித்தது. இரண்டுமே பத்மபாரதி அவர்களின் நேரடியான கள ஆய்வின் வழி திரட்டித் தொகுக்கப்பட்ட ஆவணங்களை கொண்ட நூல். நம்பிக்கையைப் பெறாமல் அவ்வளவு எளிதில் தகவலைச் சேகரிக்க முடியாத சமூகத்தினரையே நுழைந்து பத்மபாரதி இதை நிகழ்த்தியுள்ளார். இவ்விருது அவருக்கு வழங்கப்படுவது ஆய்வுலகில் உண்மையான அக்கறையுடன் இயங்கும் பலருக்கும் நம்பிக்கையை விதைக்கக்கூடும்.

காண்க: கரசூர் பத்மபாரதி

சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

இவ்விருது விழாவில் முதன்மையான சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்கள் கலந்துகொள்வதை அறிந்தபோது இவ்விழா மேலும் மனதுக்கு நெருக்கமாக மாறியது.

சுவாமியை எனது பதினோரு வயதிலிருந்து அறிவேன். அவர் ஆசிரமத்தில் அமர்ந்து தேவாரம் பழகியுள்ளேன். அவர் வினவிய சமயக் கேள்விகளுக்கு சமத்தாக பதில் சொல்லி சிறுவனாகப் பரிசுகளெல்லாம் வாங்கியுள்ளேன். என் மாமா அவரை முனியாண்டி வாத்தியார் என்றே குறிப்பிடுவார். முப்பத்து மூன்று வயதுவரை பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியதால் லுனாஸ் வட்டாரத்தில் நன்கு அறிமுகமானவர் சுவாமி. சுவாமியின் பெயரைப் பார்த்தவுடன் அவர் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்வதன் பொருத்தப்பாடு நெகிழ்ச்சியுற வைத்தது. அதற்குச் சில காரணங்கள் உண்டு.

முதலாவது, சுவாமி தான் எடுத்துக்கொண்ட பணிகளை இடைவிடாது செய்பவர். இந்திய தத்துவத்தை மலேசியாவில் பரவச்செய்வதில் பங்களித்தவர். தியான ஆசிரமம் மலேசியாவில் முதன்மையான ஆன்மிக மையமாக நிலைநிறுத்தியவர். ஆன்மிக சிந்தனைகள் அவருக்கு உதித்த இளமை பருவத்திலேயே தன் வீட்டை சமய போதனைகள் நடக்கும் ஆசிரமமாக மாற்றியமைத்து தனக்கும் தன் தாய்க்கும் சிறிய அறையை மட்டும் ஒதுக்கிக்கொண்டு வாழ்ந்தார். வளமான பொருளாதார பின்புலம் கொண்ட குடும்ப பின்னணியில் இருந்து விலகி மெய்மையை நோக்கிய தேடல்களோடு திரிந்தார். அரசு வேலையை விட்டார். பல்வேறு அகமோதல்களுக்கிடையே தான் ஏற்றுக்கொண்ட பணியைத் துவங்கியவர் இன்று மெய்யியல், இலக்கியம், கலை போன்றவை மலேசியாவில் வளர்வதற்கான மையமாக சுங்கை கோப் மலைச்சாரலில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் பிரஹ்ம வித்யாரண்யம் எனும் ஆசிரமத்தை உருவாக்கியுள்ளார்.

இரண்டாவது, இலக்கியம் குறித்த அவரது தேடல் மிக விரிவானது. ‘கூலிம் நவீன இலக்கியக் களம்‘ எனும் அமைப்பில் மைய விசையாக இயங்கி இலக்கியக் கலந்துரையாடல்களையும் முகாம்களையும் நடத்திவருகிறார். 2003 தொடங்கி கட்டுரைகள் எழுதி வரும் சுவாமி, இதுவரை நான்கு நூல்களை வெளியிட்டுள்ளார். அவரது சில கட்டுரைகள் கடுமையான எதிர்வினைகளை எதிர்க்கொண்டன. போலி ஆன்மிகத்துக்கு எதிரான தன் அழுத்தமான குரலை எப்போதும் பதிவு செய்து வந்துள்ளார். ஓர் ஆன்மிகவாதிக்கு இருக்க வேண்டிய நிமிர்வு சுவாமியிடம் குறைவற்றது.

மூன்றாவது, அருளாளர் எனும் விருதினை வழங்குவதன் வழி தொடர்ச்சியாக குறிப்பிடத்தக்க ஆளுமைகளை கவனப்படுத்துபவர் சுவாமி. இசை, ஆய்வு, இலக்கியம், ஆன்மிகம் என பல்வேறு துறைகளில் இடைவிடாது பங்களிப்பவர்களை இவ்விருதின் மூலம் கவனப்படுத்தியுள்ளார். அப்படி விருது பெரும் ஆளுமைகளை அவர் உள்ளுணர்வு சார்ந்தே தேர்வு செய்கிறார் எனப் புரிந்துகொள்கிறேன். தனிப்பட்ட முறையில் நான் அதுவே சரியான தேர்வு முறை என்பேன். மங்கலாக வெளிபடும் அந்த உள்ளுணர்வுக்கு தர்க்க ரீதியாக வடிவம் கொடுப்பதெல்லாம் இரண்டாவது கட்டத்தில் நடப்பவைதான்.

நான்காவது, சுவாமி தன்னை சமூகத்துடன் எப்போதும் பிணைந்தே வைத்துள்ளார். வசதியற்ற மாணவர்கள் தங்கி கல்வி பயில்வதற்கான வாய்ப்புகளை தன் ஆசிரமத்தில் உருவாக்கிக்கொடுத்து ஆயிரக்கணக்கானவர்களை பட்டதாரிகளாகவும் தொழில்நிபுணர்களாகவும் உருவாக்கியுள்ளார். அண்மையில் முதியோர்களைப் பராமரிக்கும் மையமாகவும் பிரஹ்ம வித்யாரண்யம் செயல்படும் வகையில் அமைத்துக்கொடுத்துள்ளார். கூலிம் வட்டாரத்தில் பொருளியல் வசதி குறைந்த பல குடும்பங்களின் மாத தேவைகளையும் தன் தியான மன்றம் வழி தீர்த்து வைத்துக்கொண்டுள்ளார்.

மலேசியாவில் இப்படி ஓர் இயக்கமாகச் செயல்படும் ஆளுமைகள் மிகச்சிலரே. ஊடக கவனத்திற்காக பயண திசைகளை மாற்றிக்கொள்ளுதல், கவனம் பெற்ற பணிகளை பொருளியல் சேகரிப்புக்கு ஏற்ப வடிவமைத்தல், புற அழுத்தங்களால் எடுத்துக்கொண்ட பணிகளில் இருந்து பின்வாங்குதல், சமரசங்கள் மூலம் பின்தொடரும் கூட்டத்தைத் தக்க வைத்தல், சமூக மரியாதையின் பொருட்டு கருத்துகளை மடக்கி வைத்தல் எனச் சலிப்படைய வைக்கும் சூழலில் சுவாமியின் இருப்பு இளைஞர்களுக்கு நம்பிக்கைக் கொடுக்கக் கூடியது.

என் அனுபவத்தில் ஒரு சம்பவத்தை திரும்பத் திரும்ப சொல்லி வருகிறேன். 2014ல் வல்லினத்தை ஒட்டுமொத்தமாக தொலைத்துக்கட்டும் பணிகள் நடந்துகொண்டிருந்தன. வல்லினம் சார்ந்த எவரையும் ஆபாசமாக வசைபாட அவதூறு செய்ய நாளிதழ்கள் தயாராக இருந்தன. சுற்றிலும் இருந்த நண்பர்கள் பலர் தங்களை மூடி மறைத்துக்கொண்ட காலம் அது. கடவுளுக்கும் மதத்துக்கும் எதிர்ப்பாக வல்லினம் உள்ளதாக பொதுக்குற்றச்சாட்டுகள் பரவியச் சூழல். ஆச்சரியமாக சுவாமி பிரம்மானந்தா அப்போதுதான் தன்னை வல்லினத்தில் நெருக்கமாக்கிக்கொண்டார். நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேசினார். வழக்குத் தொடுக்க இருந்தவர்களிடம் வாதாடினார். இலக்கியம் என்பது வேறு; அதன் நியாயங்கள் வேறு என தன்னந்தனியனாக மத அமைப்புகளுக்குப் புரியவைத்தார். ‘பேய்ச்சி’ சர்ச்சையின் போதும் அதையே செய்தார். இதனால் தன்னைப் பின்தொடர்பவர்களிடையே சலசலப்பு எழும் என அவர் அறிவார். பலர் விட்டுப்பிரியக்கூடும் என்றும் அவருக்குத் தெரியும். ஆனால் அவர் தான் நம்பும் ஓர் உண்மையை அவர் எதன் பொருட்டும் சொல்லத் தயங்குவதில்லை. இலக்கியம் எனும் கலை வடிவம் கொண்டுள்ள தனித்த அம்சங்களை மூத்த இலக்கியவாதிகள் பேசாத சூழலில் சுவாமி மட்டும் அதைச் சொல்லிக்கொண்டே இருந்தார்.

காண்க: சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி

சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி இவ்விருது விழாவில் கலந்துகொள்வதுடன் அவருடனான உரையாடல் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியத் தத்துவம், மேற்கத்திய தத்துவம் குறித்த உரையாடல்கள் அவருடன் நிகழுமாயின் அது ஆழ ஆழ செல்லக்கூடியது. இலக்கியங்களை தன் வாசிப்பின் வழி அவர் அணுகி மெய்யியல் ரீதியாக வெளிப்படுத்தும் முறை தனித்துவமானது. அது அங்கு நிகழுமாயின் மகிழ்ச்சி.

பெரும் பணிகளைச் செய்த ஒரு பேராளுமையின் பெயரால் வழங்கப்படும் இந்த விருது முனைவர் பத்மபாரதி அவர்களைத் தொடுவதன் மூலம் அர்த்தம் அடைகிறது. அற்பணிப்பும் உண்மையும் இடையறாத செயல்துடிப்பும் கொண்ட சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி போன்றவர்களின் இருப்பு அவ்வரங்கை மேலும் மகத்துவமாக்கும்.

தூரன் விருது

(Visited 390 times, 1 visits today)