நிஜத்தில் ஒரு பாப்பாத்தி என் மீது சில கனங்கள் வந்து அமர்ந்துவிட்டுச் சென்றது போல இந்தக் கதையை வாசித்த நிமிடங்கள் முழுக்க தோன்றியது. ஒரு பாப்பத்தியோடு கதைப் பேசிய உணர்வுதான் அது. ஒரு குழந்தையின் வெண்மையான மனப்போக்கிற்கும், கரை படியாத சிந்தனைக்கும் நீங்கள் தெரிவு செய்த அந்தப் பாப்பத்தியின் வெள்ளை நிறம் எத்தனைப் பொருத்தம். பொதுவாக வண்ணம் நிறைந்த பாப்பத்திகளையே விரும்பும் என்னைப் போல பல வாசகர்களிடம் ஒரு வெள்ளைப் பாப்பாத்தியின் அழகைப் பேசிய இந்தக் கதை ஒரு தேவதைக்கான கதை.
ஒரு குழந்தை தனது ஏமாற்றத்தை மறக்க எடுத்துக்கொண்ட கால அவகாசம் எவ்வளவு குறுகியது. அதற்கு தேவைப்பட்டது ஒரு பாப்பாத்தியின் சிறகசைப்புதான் எனும்போது அந்த வாழ்க்கை எத்தனைக் கவித்துவமானது. . அவளது துயரங்கள் சந்தோஷங்கள் எப்போதும் அதைச் சார்ந்தே இருக்கின்றன. “அதிக உயரம் பறக்காமல் தரையோடு சுற்றிக் கொண்டிருக்கும் வெள்ளை வண்ணத்திகளை முன்பு தோட்டத்தில் கண்டிருக்கிறாள்” ஒரு பாப்பாத்தி பறப்பதற்கு உயரந்த, அகன்ற வெளி அவசியப்படாததுபோல விலை உயர்ந்த பொம்மைகள் இவளுக்கு அவசியப்படாததாகவே. அவளது சந்தோஷமெல்லாம் வறுமைக்குள் தொலையக்கூடியதல்ல. அது ஒரு வண்ணதியிடம் தொடங்கி அதிலேயே முடிந்து பின் மீண்டும் தொங்குகிறது. ஒரு வண்ணத்தியின் வாழ்க்கை சுழற்சியைப் போலவே. இவை உங்கள் கதை எனக்குள் பேசிய வரிகள்.
பால் வாளிகளுடன் அப்பா நடந்து செல்லும்போது காலை வெயிலில் அவைகளின் வெண்மை ஒளிரும். அவை மத்தியில் போய் நின்றால் சிண்ரல்லா கார்டூனில் வரும் தேவதையைச் சுற்றி வெளிபடும் ஒளிக்கீற்றுப் போல தன்னிலிருந்து ஒளிப்புள்ளிகள் வெளியேறிப் பறப்பதாக உணர்வாள். அவள் தேவைதையாகும்போதெல்லாம் கையில் மந்திரக்கோள் ஒன்று கிடைத்துவிடும்” வெள்ளை வண்ணத்திகள் பறந்து வேறு திசைக்குப் போகும் வரை அவள் தேவைதையாகவே ரப்பர் பாத்திகளில் சுற்றிக்கொண்டிருப்பாள்.
கொடி மலர் மட்டுமல்ல எல்லா குழந்தைகளும் இப்படித்தான் யோசிப்பார்கள். அவர்களை குழந்தையாகவே வாழவும், வளரவும், சிந்திக்கவும் விடும்வரையில்.இந்த உலகில் பிறந்த நாம் எல்லோருமே கொடிமலரைப் போல குழந்தையாகவே இருந்துவிட்டால் என்ன என தோன்றுகிறது? …. தோல் சுறுங்கி, முடி நரைத்த வயது முதிர்ந்த குழந்தைகள் தன்னோடு விளையாடுவதை வண்ணத்திகள் விரும்பாது என்பதால் அனுமதி இல்லை போலும்.இந்தக் கதையை வாசிக்கும் எல்லா குழந்தைகளுடனும் வண்ணத்திகள்வந்து பேசும். அதற்கான அனுமதிதான் உங்களிம் இந்தக் கதை.
கொடிமலரைப் போல துக்கம் மறக்க நினைக்கும்போது எனக்கான வண்ணத்திகளாக பல நேரங்களில் வானத்து வின் மீன்கள் இருந்திருப்பதை இப்போது உணர்கிறேன். அவை இருண்ட வானில் மட்டும் தோன்றக் கூடியவை. எனவே அவை என் துக்கத்துக்கு மட்டுமே செவிசாய்க்கும் . கொடிமலரின் வெள்ளைப் பாப்பாத்தியைப் போல அவை நான் நினைக்கும்போதெல்லாம்…எல்லா இடத்துக்கும் வரக்கூடியதல்ல.
நான் என்னைக் குழந்தையாய் மீட்டுக் கொள்ள விரும்பும் போதெல்லா உங்களின் இந்த கொடி மலரின் வெள்ளை வண்ணத்தி போதுமானது. நன்றி… அழகான வண்ணதிகளுக்கும் அது தந்த பாரமற்ற நிமிடங்களுக்கும்.
பவித்திரா