
‘முக்கோண கதைகள்’ நிகழ்ச்சிக்கு முதல் நாளே (31.5.2025) அ. பாண்டியன், தேவகுமார் ஆகியோர் கோலாலம்பூர் வந்து சேர்ந்திருந்தனர். YMCA கட்டடத்தில் தங்கும் வசதியும் இருப்பதால் அவர்களுக்கான அறையை அங்கேயே பதிவு செய்திருந்தேன். முதல் நாள் இரவே மண்டபத்தைத் தயார் செய்யத் திட்டமிட்டிருந்தோம். பதாகை பொருத்துவது, நாற்காலிகளை அடுக்குவது எனச் சில பணிகளை முன்னமே செய்து வைப்பது நலமெனத் தோன்றியது. எனவே, அரவின் குமார், சண்முகா ஆகியோரையும் இரவில் இணையும்படி கேட்டிருந்தேன்.
எங்களுக்கு வழக்கமாக நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்து கொடுக்கும் நண்பர் செல்வன், கீழே விழுந்து கையை உடைத்துக் கொண்டிருந்தார். எனவே, புதிய காமிராமேன் கணேஷுடன் வேதியல் தொடர்பை உருவாக்க வெள்ளிக்கிழமையே முயன்றுக் கொண்டிருந்தேன். மண்டபத்தில் சந்தித்து ஒலி, ஒளி, காமிராவை கையாளும் முறை போன்ற முன்தயாரிப்புகளைச் செய்து கொண்டோம். நிகழ்ச்சி ஒளிப்பதிவுக்காக விளக்கு அவசியம் என ஒளிப்பதிவாளர் கணேஷ் கூறி விளக்குகளை வாடகைக்குவிடும் ஒருவரின் தொடர்பையும் கொடுத்திருந்தார். அவர் பரிந்துரைத்த இடத்தில் விளக்குகளை எடுக்கும் பொறுப்பை அரவினிடம் விட்டிருந்தேன். ஆனால் அந்த விளக்கு நீண்ட நேர ஒளிப்பதிவுக்கு உகந்ததல்ல என்பது தாமதமாகவே தெரிந்தது. முதல் நாள் சனிக்கிழமை அரவின் விளக்கை வாடகைக்கு எடுக்கச் சென்ற இடத்தில் சூழலை அறிந்து அழைத்தார். எனக்குப் பதற்றம் தொற்றிக் கொண்டது.
மறுநாள் நிகழ்ச்சி. ஒளிப்பதிவு முக்கியம். அதுவே இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததை உலகம் முழுக்க எடுத்துச் செல்லும் மாயவாகனம். எனவே செல்வத்துக்கே அழைத்து விளக்கை ஏற்பாடு செய்யும்படி கேட்டேன். செல்வன் யார் யாருக்கோ அழைத்து யாரும் அழைப்பை எடுக்கவில்லை என்றார். எனக்கு அழுத்தம் ஏறிக் கொண்டே சென்றது. கடைசியில் நண்பர் ஒருவரைப் பிடித்து அவர் எண்களை எனக்கு அனுப்பி வைத்தார். அவரிடம் விளக்கு உள்ளது என்றார். நான் அந்த எண்களை அரவினுக்கு அனுப்பினேன். சுபாங் ஜெயா வரை விளக்கு எடுக்கச் சென்று, அத்திட்டம் நிறைவேறாத ஏமாற்றத்தில் இருந்தார் அரவின். நான் அனுப்பிய புதிய எண்ணுக்கு அரவின் அனுப்பிய எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை எனத் தெரிய வந்தது. தாமதமாகிக் கொண்டிருந்தது. பின்னர் நானே அழைத்தபோது, அவர் கைப்பேசி திரை பழுதென்றும் செய்திகளைப் பார்க்கவோ படிக்கவோ முடியாது எனவும் கூறினார். ஒருவழியாக அவர் தம்பி எண்ணின் வழியாக விளக்கை எடுத்துக்கொள்ளும் முகவரி கிடைத்தது. பூச்சோங் வட்டாரத்தில் விளக்கு இருந்தது. அரவின் மீண்டும் சுபாங் ஜெயாவிலிருந்து பூச்சோங் நோக்கிப் பயணமானார். ‘

எனக்கு மறுநாள் வெளியீடு செய்யப்போகும் புத்தகப் பெட்டிகளை ஏற்றிச் செல்லும் பொறுப்பு இருந்தது. இப்படிப் புத்தகப் பெட்டிகளை எடுத்து அடுக்கும்போதெல்லாம் 2009இல் நடந்த முதல் கலை இலக்கிய விழா நினைவுக்கு வரும். அப்போது அச்சான நூல்கள் அனைத்தையும் மூன்றாவது மாடியில் இருந்த ‘காதல்’ அலுவலகத்தில் அடுக்கி வைத்திருந்தேன். ‘காதல்’ இதழ் அப்போது நிறுத்தப்பட்டிருந்தாலும் அலுவலகம் பயன்பாட்டிலேயே இருந்தது. எனவே அங்கு நூல்களை வைக்க அனுமதி இருந்தது.
நிகழ்ச்சிக்கு முதல் நாள், நானும் மஹாத்மனும் அத்தனை ஆர்வத்துடன் மூன்று தலைப்பிலான நூல்களையும் மூன்று மாடிகள் ஏறி இறங்கி காரில் அடுக்கினோம். அப்போது இருந்த மனநிலையில் இப்போதும் சிறிதும் மாற்றமில்லை. மஹாத்மன் உடன் இல்லை… அவ்வளவுதான். ஆர்வமும் புத்துணர்ச்சியும் மட்டுமே களைப்பைத் துடைத்தெடுத்தன. நோக்கமும் லட்சியமும் கூடுதல் பலத்தைக் கொடுத்தன.
நண்பர்களிடம் எட்டு மணிக்கு மண்டபத்தில் சந்திப்பதாகச் சொல்லியிருந்தேன். ஆனால் சனிக்கிழமை சாலையை நம்ப முடியாது என்பதால் சற்று முன்னரே புறப்பட்டுவிட்டேன். அன்று கோலாலம்பூர் அமைதி கொண்ட நகராக மாறியிருந்தது ஆச்சரியம். இரவு ஏழுக்கெல்லாம் மண்டபத்தை வந்தடைந்திருந்தேன்.

தேவகுமார் ஜொகூரில் இருந்து வந்த அவர் நண்பருடன் YMCA கட்டடத்தில் உள்ள அறையில்தான் தங்கியிருந்தார். எனவே சிலமுறை அவரை அழைத்தேன். பதில் இல்லை. அரவினும் சண்முகாவும் எனக்கு முன்னமே வந்து, பாண்டியனுடன் உணவகத்தில் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் காமிரா விளக்கைத் தேடி அலைந்து எடுத்து வருவதிலேயே கடும் அலுப்பு ஏற்பட்டிருக்கும். பூச்சோங் சாலை மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நெரிசலைக் கொண்டது. ஒருமுறை அழைத்து அவர்களுக்கு என் வருகையைக் கூறிவிட்டு, பெட்டிகளைக் காரில் இருந்து எடுத்து அடுக்கத் தொடங்கினேன்.
YMCA மண்டபத்தில் காரை நிறுத்தி பொருட்களை இறக்குவதில் உள்ள சவால், அதை மிக வேகமாக நிகழ்த்த வேண்டும். இல்லையெனில் பின்னால் வந்து நிற்கும் கார், ஹாரன் அடித்து நகரச் சொல்லி விரட்டுவார்கள். அந்தத் தொல்லையைத் தவிர்க்க காரை தூரமாக நிறுத்த வேண்டும். ஆனால் தூரமாக நிறுத்தி கனமான பெட்டியைத் தூக்கிச் செல்ல நாம் தற்காலிக பாகுபலியாக வேண்டியிருக்கும். வேறுவழியில்லாமல் அப்படித்தான் எண்ணிக் கொண்டேன். கடைசி பெட்டியைத் தூக்கிச் சென்றபோது YMCA வாசலுக்கு அருகில் இருந்த கார் நிறுத்தம் காலியானது. இதுதான் விதி. பெட்டிகளை லிப்ட் வழியாக மண்டபம் இருந்த முதல் மாடிக்கு ஏற்றிச் செல்ல அங்கிருந்த நேபாள் பாதுகாவலர் உதவினார். அடிக்கடி வந்துபோவதில் எனக்கும் அவருக்கும் நல்ல தொடர்பு இருந்தது. நான் நேபாள் பயணம் சென்ற அனுபவங்களை அவரிடம் கூறியுள்ளேன்.

முதல் நடை லிப்டில் ஏறவும் பாண்டியன், அரவின், சண்முகா வரவும் சரியாக இருந்தது. பெட்டிகளை அடுக்கிவிட்டு பதாகை கட்டலாம் எனத் திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது தேவகுமாரும் அவர் நண்பரோடு வந்திருந்தார். “நீங்க 8 மணிக்குன்னு சொன்னீங்க…” என்றார். சீக்கிரம் வந்த காரணத்தை விளக்கி பணியைத் தொடங்கினோம். ஒருமாதிரியாக பேனர் மண்டபத்தில் பொருத்தப்பட்டதும் மண்டபம் கலைக்கட்டியது. கிட்டத்தட்ட பணிகள் முடியும் தருவாயில் மனோ வந்திருந்தார். தமிழாசியா சந்திப்பில் தொடர்ந்து கலந்துகொள்கிறார். வாசிப்பில் ஆர்வம் கொண்டவர். திட்டமிட்டதைவிட வேலையைச் சீக்கிரமே தொடங்கிவிட்டதைத் தெரிவித்தேன்.
எல்லாம் முடிந்து புறப்படும்போது மறுநாள் மண்டபத்தைச் சுத்தம் செய்ய வருபவர்கள் அது முதல்நாள் நிகழ்ச்சியின் பேனர் என நினைத்து அகற்றிவிடுவார்களோ என்ற பயம் வந்து அதை பணியாளர்களிடம் சொல்ல, “வாய்ப்பிருக்கு…” என அவரும் பயமுறுத்தினார். நான் மட்டுமே பயந்தால் போதாது என்பதால் பாண்டியனுக்கு அழைத்து நிலையைச் சொன்னேன். “நாளைக்குக் காலையிலேயே துப்புரவு பணியாளர்கள் வரும்முன்ன நான் மண்டபத்துக்குப் போயிடுறேன்,” என்றார். ‘அப்பாடி… பயந்துட்டார்’ என நிம்மதியாக இருந்தது.
***
மறுநாள் காலை 10.30க்கு மண்டபத்துக்கு வந்துவிட்டேன். எனக்கு முன்பே பாண்டியன், தேவகுமார் மண்டபத்தில் இருந்தனர். ஏதோ சூடான உரையாடல் போய்க் கொண்டிருந்தது. அதை ரகசிய உரையாடல் போல விளக்கு எதையும் தட்டாமல் இருட்டில் நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். காலை 11.30க்கு வந்து சேர்ந்தார் நிகழ்ச்சி அறிவிப்பாளர் சல்மா தினேசுவரி. உடன் மேடை பொறுப்பாளர் புஷ்பவள்ளியும் இருந்தார். இருவருக்குமான பணிகளை விளக்கிக் கொண்டிருந்தேன். நிகழ்ச்சிக்கு முன்பாகவே சல்மாவை இரண்டு முறை நேரில் சந்தித்து அறிவிப்பு தொடர்பான விளக்கங்களை வழங்கியிருந்தேன். முழு அறிவிப்பையும் ஒருமுறை இருவருமாகச் சரிபார்த்து மெருகேற்றினோம். எனவே, அவர் தன் பணியில் தெளிவாக இருந்தார். புஷ்பவள்ளிக்கு எப்போது எந்த நூல்களை எடுத்துவர வேண்டும் என்பதை மட்டும் கவனப்படுத்தினேன். புஷ்பவள்ளிக்குத் துணையாக இளம் எழுத்தாளர் சர்வின் செல்வா இணைந்து கொண்டார்.

பவானி அக்கா வருகையாளர்களைப் பதிவு செய்வதில் மும்முறமாக ஈடுபட்டிருந்தார். ப்ரியா நூல் விற்பனையைப் பார்த்துக் கொண்டார். நிமலன் உணவு பகுதியைக் கவனித்துக் கொண்டார். சண்முகா, சுதாகர் நிழற்படங்களை எடுத்தார்கள். எல்லாரும் அவரவர் பணியில் முழுமையாக ஈடுபட்டிருந்தனர்.
இடையிடையே எனக்கு அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. “நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் கார் நிறுத்தம் உள்ளதா?”, “பதிவு செய்யாதவர்களை அழைத்து வரலாமா?”, “கட்டணம் ஏதும் செலுத்த வேண்டுமா?”, “இன்று தன்னால் வர முடியாது”, “எத்தனை மணிக்கு நிகழ்ச்சி நிறைவடையும்?” என பல்வேறு விதமான அழைப்புகள். எல்லாவற்றுக்கும் பதில் கூறிக் கொண்டிருந்தேன்.
ஒளிப்பதிவாளர் கணேஷ் சீக்கிரமே வந்திருந்தார். எந்தச் சிக்கலும் இல்லாமல் ஒளிப்பதிவு பணி நடக்க வேண்டும் என்ற அவரின் அக்கறை நம்பிக்கையைக் கொடுத்தது.

ஒவ்வொருவராக அரங்கில் நுழைந்து கொண்டிருந்தனர். ‘பென்’ அமைப்பின் முன்னாள் தலைவர் முனைவர் அன், எழுத்தாளர் அஸ்ரின் ஆகியோரின் வருகை உற்சாகம் கொடுத்தது. தொடர்ந்து சில சீன எழுத்தாளர்கள், ‘பென்’ அமைப்பின் தலைவர் மஹி என அரங்கில் நுழைந்து வல்லினம் குழுவினருடன் அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டனர். இடையில் நான் காருக்குச் சென்று சட்டையை மாற்றிக் கொண்டு மீண்டும் கட்டடத்தில் நுழைந்தபோது சுப்புலட்சுமி டீச்சர் நின்றுக் கொண்டிருந்தார். வல்லினம் திட்டங்களுக்கு அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழ்விக்கியின் பொறுப்பாளராக இருந்து செயல்படுகிறார். தாய்மையின் அரவணைப்பு கொண்டவர். உற்சாகமான அவர் புன்னகை அந்தப் பதற்றமான சூழலை ஆசுவாசப்படுத்தியது.
மண்டபத்தின் உள்ளே நுழைந்தபோது மொழிபெயர்ப்பில் பங்களித்த நண்பர்கள், நிகழ்ச்சியில் உரையாற்றுபவர்கள் என ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். மூத்த எழுத்தாளர்கள் ப. கு. சண்முகம், மா. சண்முகசிவா, அரு. சு. ஜீவானந்தன் ஆகியோரின் வருகை மகிழ்ச்சியைக் கொடுத்தது. சுதந்திரன், தயாஜி, சுதாகர், ரேவின், நலவேந்தன், சிவா பெரியண்ணன், ஆதித்தன் மகாமுனி, வி. பி. ஜான்சன் என ஒவ்வொருவரையும் வரவேற்கும் வாய்ப்பு அமைந்தது. எம். பிரபு மலாய் மொழியாக்க நூலுக்கு முக்கியப் பங்காற்றியவர். மலாய் மொழியாக்கத்தைச் சரிபார்க்கத் துணை நின்றவர். அமைதியாக ஓர் இடத்தில் நூல்களை வாங்கிக் கொண்டு அமர்ந்து கொண்டார்.

இதுபோன்ற சமயங்களில் அரங்கம் முழுவதும் அலைய வேண்டியிருப்பதால் சிலரிடம் வணக்கம் கூட சொல்ல முடிவதில்லை. ஃபிக்ஸி பதிப்பகத்தைச் சேர்ந்த அமிர், தலைமை ஆசிரியர் புஸ்பநாதன், எழுத்தாளர் ஜானகிராமன், ஜெயபாலன், சுந்தரி, காமராசன் ஆகியோரை அப்படி அலைந்து திரிந்தபோது கவனித்துப் பேசினேன். நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க அழைக்கப்பட்ட வழக்கறிஞர் பசுபதி வந்து சேர்ந்தபோது கொஞ்சம் நிதானமடைந்தேன். உடன் தேவா வந்திருந்தார். இருவரும் இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் சயாம் – பர்மா ரயில் பாதையை நோக்கிப் பயணம் செல்ல ஆயத்தமாக வந்திருந்தனர். பசுபதி பயணம் செல்லப்போகும் உற்சாகத்தில் இருந்தார்.
என் நிதானம் கொஞ்ச நேரம்தான் நீடித்தது. முதல் அரங்கில் பேச வேண்டிய எஸ். எம். ஷாகீர் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை. அழைத்தேன். வந்து கொண்டிருப்பதாகக் கூறினார். நிலைக்கொள்ளாமையில் கீழே சென்றேன். முனைவர் ஃபுளோரன்ஸ் வந்தார். உடனே மீண்டும் மேலே ஏறி ஒருவேளை ஷாகீர் வர தாமதமானால் சீன சிறுகதை மொழிபெயர்ப்பு அரங்கை நடத்திவிடும்படி ஆசிர் லாவண்யாவிடம் கூறினேன். அவரே அவ்வரங்கை வழிநடத்துபவர். சாலினி, ஃபுளோரன்ஸ் அதில் பேச்சாளர்கள். அவர்களுக்கும் கொஞ்சம் பதற்றமானது; வேறு வழியில்லை.

நிகழ்ச்சி சரியாக இரண்டு மணிக்குத் தொடங்கியது. ஷாகீர் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை. அது மலேசியாவில் மிக முக்கியமான புத்தகக் கண்காட்சியின் இறுதி நாள். எனவே, நூல் பதிப்பாளராகவும் இருக்கும் ஷாகீர் நிகழ்ச்சிக்கு வருவதென்பது சவாலானது என்பதை அறிவேன். எனவே ‘பிளேன் பி’, ‘பிளேன் சி’ எல்லாம் போட்டுக் கொண்டிருந்தபோது ஷாகீர் வந்து சேர்ந்தார். அவரை ஆசுவாசப்படுத்தி தேநீர் கொடுத்தோம். நானும் அமைதியடைந்தேன். ‘இனி எல்லாம் சுகமே’ என மனதில் சொல்லிக் கொண்டேன்.
நிகழ்ச்சி தொடங்கிய பின்னரே கவனித்தேன். ‘Borak Buku’ அமைப்பைச் சேர்ந்த ஃபஸ்லீனா, வாசகர் நிர்மலா, கற்பகவள்ளி, ஃபட்லி ஆகியோர் அமர்ந்திருந்தனர். அறிமுகமில்லாத பலரும் இருந்தனர். நிகழ்ச்சி தொடங்கியபோது போடப்பட்ட நூறு இருக்கைகள் பெரும்பாலும் நிறைந்திருந்தன.
***
இந்த நிகழ்ச்சிக்கு முக்கோண கதைகள் எனும் பெயரை பாண்டியன்தான் வைத்தார். ஒருவகையில் இந்த நிகழ்ச்சியின் சரிபாதி உழைப்பு அவருடையதுதான். மலாய், சீனம், தமிழ் ஆகிய மும்மொழி இலக்கியங்களுக்கிடையிலான உரையாடலாகவும் மும்மொழி எழுத்தாளர்களின் ஒன்றுகூடல் அரங்காகவும் திட்டமிட்ட நிகழ்ச்சி கண்முன்னே முழுமை கண்டிருந்தது.

சல்மாவின் அறிவிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் வல்லினம் நிகழ்ச்சிகளில் சிறந்த அறிவிப்பு என தாராளமாகச் சொல்லலாம். இயல்பான கம்பீரமும் நம்பிக்கையான கருத்துகளும் பார்வையாளர்களை அவருடன் பயணிக்க வைத்தது. சல்மா என்னுடைய கல்லூரி தோழி. கல்லூரி முதலே இலக்கியத்தில் ஆர்வம் கொண்டவர். வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு காரணங்களால் இலக்கியத்தில் இடைவெளி விட்டாலும் இலக்கியம் அவரை விட்டபாடில்லை. இம்முறை நான் மலாயில் வரவேற்புரை ஆற்றினேன். எழுதி வாசித்தேன். வல்லினம் இதற்கு முன் முன்னெடுத்த மொழிபெயர்ப்பு முயற்சிகள் தொடங்கி, இம்முயற்சி முழுமையடைய உழைத்த நண்பர்கள் குறித்தும் கூறி அமர்ந்தேன்.

வழக்குரைஞர் சி. பசுபதி தலைமை உரை ஆற்றினார். ஆங்கிலம், தமிழ், மலாய் என மூன்று மொழிகளிலும் அவரது உரை அமைந்திருந்தது. நிகழ்ச்சியின் நோக்கத்தையும் அதன் இன்றைய தேவையையும் தெளிவுபட எடுத்துரைத்தார்.

அவர் உரையைத் தொடர்ந்து முக்கோணக்கதைகள் நிகழ்ச்சியில் மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியீடும் அதையொட்டிய கலந்துரையாடல் அமர்வுகளும் நடைபெற்றன. முதல் நிகழ்வாக மலாய் எழுத்தாளரான எஸ். எம். ஷாகீரின் சிறுகதைகள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டு ‘விண்ணிலிருந்து வீழ்ந்த பெண்’ எனும் தலைப்பில் வெளியீடு கண்டது. மலாய் எழுத்தாளர் ஒருவரின் சிறுகதைகள் தமிழுக்குப் பெயர்க்கப்பட்ட முதல் முழு சிறுகதைத் தொகுப்பு இது. அ. பாண்டியனுடன் சாலினி, அரவின் குமார் ஆகியோர் தலா ஒரு கதைகளை இத்தொகுப்புக்காக மொழியாக்கம் செய்திருந்தனர். எட்டு சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளர் பாண்டியனும் மூலமொழி எழுத்தாளரான எஸ். எம். ஷாகீரும் பங்கு பெற்ற கலந்துரையாடலை எழுத்தாளர் மோகனா வழிநடத்தினார். மோகனாவிடம் இயல்பாகவே தன்னம்பிக்கை மிகுந்த குரல் உண்டு. அக்குரல் செறிவாக அவ்வரங்கை வழிநடத்தியது.

அ. பாண்டியனின் கருத்துகள் மலேசியத் தமிழ்ச்சூழலில் நடந்த மொழியாக்க முயற்சிகள் குறித்து வரலாற்று ரீதியாக வெளிப்படுத்தின. ஷாகீர் தனது சிறுகதைகள் குறித்தும் விஷ்ணுபுரம் விழா தொடங்கி தமிழ் வாசகர்களிடம் தனக்குக் கிடைத்த கவனம் குறித்தும் பேசினார். மிக முக்கியமாக, அவர் பதிப்பகம் வழியாக வெளிவந்த தமிழ்ச்சிறுகதைகளின் மலாய் மொழிபெயர்ப்பு கதைகள் குறித்து பேசும்போது, “அத்தொகுப்பில் நவீன் சிறுகதை என்னைப் பெரிதும் பாதித்தது. புத்ரா ஜெயா எனும் நகரம் உருவானபோது நான் அதன் சுற்றுவட்டாரத்தில்தான் இருந்தேன். அங்கு தமிழர்கள் விரட்டப்பட்டது எனக்குத் தெரியாது. அவர்கள் விரட்டப்படவில்லை. ஆனால், ஒருவகையில் விரட்டப்பட்டுள்ளனர். அதே இடத்தில் வாழ்ந்தாலும் நான் அவர்களின் வலியை அறியவில்லை. இலக்கியம் அதை கடத்துகிறது,” எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. எடுத்த முயற்சிகள் பலன் கொடுத்துள்ளதாகவே உணர்ந்தேன்.

இவ்வரங்கு முடிந்த பின்னர் அ. பாண்டியன் 2025க்கான வல்லினம் விருதை அறிவிப்பு செய்தார். பி. எம். மூர்த்தி அவர்களுக்கு இம்முறை விருது வழங்கப்படுவதை அறிவார்ந்தோர் பலர் இருக்கும்போது அறிவித்தது பொருத்தமாக அமைந்தது. ஆனால், அந்த முக்கியமான தருணத்தில் மூர்த்தி அவர்களால் எங்களுடன் இணைந்திருக்க முடியவில்லை. மரணமடைந்த அவரது தங்கையின் இறுதி காரியங்களில் அவர் கரைந்திருந்தார்.

தொடர்ந்து, சீனத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ‘செல்சி நீலம்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு கண்டது. மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் இயங்கும் கி. இளம்பூரணன், அரவின் குமார், விஸ்வநாதன், சாலினி, ஆசிர் லாவண்யா, சல்மா தினேசுவரி ஆகியோருடன் நானும் ஒரு கதையை மொழியாக்கம் செய்திருந்தேன். இந்த முன்னோடி முயற்சியில் மொழியாக்கம் கண்ட சிறுகதைகளை அ. பாண்டியன் செறிவாக்கினார். நூல் வெளியீட்டுக்குப் பின் மலாயாப் பல்கலைக்கழக சீன மொழி விரிவிரையாளர் ஃபுளோரன்ஸ் குவேக்கும் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் சாலினியும் பங்கு பெற்ற கலந்துரையாடல் அமர்வை ஆசிர் லாவண்யா வழிநடத்தினார். இவ்வரங்கு முழுமையாக ஆங்கிலத்தில் இடம்பெற்றது. லாவண்யா தகுந்த கேள்விகள் வழியாக பதில்களைப் பெற முனைப்புடன் இருந்தார்.

இறுதி அங்கமாக, மலேசியத் தமிழர்களின் வாழ்வியலைச் சித்திரிக்கும் பத்து சிறுகதைகள் மலாய் மொழிக்குப் பெயர்க்கப்பட்டு Dunia di kaki lima (ஐந்தடியில் ஓர் உலகம்) எனும் தலைப்பில் வெளியீடு கண்டது. அந்த வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் பிறகு, டேவான் சாஸ்த்திரா இதழின் ஆசிரியர் ஃபட்லியும் மொழிபெயர்ப்பாளர் ச. சரவணனும் பங்கு பெற்ற கலந்துரையாடலை எழுத்தாளர் அரவின் குமார் வழிநடத்தினார். விஷ்ணுபுரம் விழாவில் பார்த்ததைவிட அதிகம் மேம்பட்டிருந்தார். நம்பிக்கையுடன் பேசினார். குரலில் இருந்த சமநிலை முகத்திலும் இருந்தது. இந்த நிகழ்ச்சியில் பலரையும் கவர்ந்த அரங்கு இதுதான். குறிப்பாக ஃபட்லி மிகுந்த சிரத்தை எடுத்து கதைகளை ஆழமான புரிதல்களுடன் நிபுணத்துவமான முறையில் பதில்களை முன்வைத்தார் என்பது அரங்கில் உள்ளோர் பலரின் கருத்தாக இருந்தது.

கிட்டத்தட்ட நிகழ்ச்சி நிறைவை நெருங்கியபோது நானும் மனநிறைவுடன் இருந்தேன். வல்லினம் 2007இல் தொடங்கப்பட்டபோது அது யாரோ சில பையன்கள் ஆர்வக்கோளாறில் செய்யும் முயற்சி என்றனர், 2014இல் ஒரு நாளிதழ் வல்லினத்தை ஒழித்தே ஆகவேண்டுமென கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது. வல்லினம் அச்சு இதழ் நிறுத்தப்பட்டு இணைய இதழாக வந்து கொண்டிருந்த சூழலில் அச்சு இதழுக்கான உரிமம் அவர்களின் கடும் முயற்சியில் அரசால் பறிக்கப்பட்டது. வல்லினம் ஆபாச இதழ் என பலரால் ஒதுக்கப்பட்டது. கிட்டத்தட்ட மலேசியாவில் அத்தனை ஊடகங்களும் வல்லினத்தின் நிகழ்ச்சிகள் குறித்து அறிவிப்புகளைப் புறக்கணித்த சூழலில்தான் 2014இல் ஜெயமோகனை அழைத்து கவிதை குறித்த நிகழ்ச்சி ஒன்றை செய்தோம். முகநூலில் மட்டுமே அறிவிப்புகளைச் செய்தோம். 80 பேர் வரை வந்திருந்தனர்.

கடந்த பத்து ஆண்டில் எல்லாமே மாறியிருந்தது. மூத்த எழுத்தாளர்கள் பலரும் வல்லினத்தின் நோக்கத்தை அறிந்து கொண்டுள்ளனர். வல்லினத்தின் முன்னெடுப்புகளுக்கு ஊடகங்கள் மதிப்பளிக்கின்றன. மலாய், சீன எழுத்தாளர்கள் இன்று தமிழ்ச் சூழலில் அறிந்துள்ள ஆக்ககரமான தமிழ் இலக்கியக் குழுவான வல்லினம் உள்ளது. பிறமொழி எழுத்தாளர்களின் உரையில் ‘வல்லினம்’ எனும் சொல்லை மீண்டும் மீண்டும் கேட்டபோது ஒட்டுமொத்த மலேசிய இலக்கியச் சூழலில் அது உருவாக்கியுள்ள வழுவான தடம் தெரிந்தது. இதற்காக நாங்கள் செய்தது எங்கள் பணிகளை மட்டும்தான். செயலூக்கமும் நேர்நிலை சிந்தனையும் மட்டுமே எதிர்வந்த அத்தனை சில்லரை எதிர்ப்புகளையும் துடைத்தொழித்தன. பெருஞ்செயல்கள் மட்டுமே லட்சியவாதிகளின் ஆன்மிக மார்க்கம். அதுவே அவர்களைக் காத்து நிற்கும் கவசம்.

நிகழ்ச்சியின் இறுதியில் ‘பென்’ மலேசியாவைச் சேர்ந்த முனைவர் அன் மற்றும் அதன் தலைவர் மஹி ராமகிருஷ்ணன் ஆகியோர் உரையாற்றினர். இந்தத் திட்டம் உருவானபோது நான் முனைவர் அன் அவர்களைச் சந்தித்து சில விண்ணப்பங்களை முன்வைத்தது குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

நன்றியுரையாற்றிய பென் மலேசியா அமைப்பின் தலைவர் மஹி ராமகிருஷ்ணன், தமதுரையில் 140க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படும் மலேசியா போன்ற பல மொழிச்சூழல் கொண்ட நாட்டில் இலக்கியங்களுக்கிடையிலான முயற்சி அவசியமானது என்றார். இலக்கியம் வழியே இனங்களுக்கிடையிலான பண்பாட்டுப் பரிமாற்றத்தைச் சாத்தியப்படுத்தும் முன்னோடி முயற்சியாக முக்கோணக்கதைகள் நிகழ்ச்சி திகழ்வதாகக் கூறினார்.

***
நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னரே மேலும் சிலரிடம் உரையாடும் வாய்ப்பு அமைந்தது. ப.கு.சண்முகம் அவர்கள் பெருமகிழ்ச்சியில் இருந்தார். மொழியாக்கம் கண்ட மலாய் சிறுகதை நூலுக்கு அவரது கதையின் தலைப்பு இடப்பட்டதைப் பெருமையாக உணர்ந்தார். கனகா மாணிக்கம் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. மேடை நாடக கலைஞர் அவர். இந்நிகழ்ச்சியின் அவசியம் அறிந்து இணைந்திருந்தார். கெடாவில் இருந்து வரும்போது இரயில் தாமதத்தினால் சற்று தாமதமாக வந்தாலும் ஐயா பாஸ்கரன் அவர்களின் இருப்பும் வெளிபடுத்திய கருத்துகளும் நிகழ்ச்சிக்குக் கூடுதல் வலு சேர்த்திருந்தன. சிங்கப்பூரில் இருந்து லதா அன்று மதியம்தான் வந்து சேர்ந்து நிகழ்ச்சியில் நேரடியாக இணைந்திருந்தார். எனது மாணவர்கள் இருவர் பெற்றோருடன் வந்திருந்தனர். பலவகையான நிழற்படங்கள், பலவகையான சிரிப்புகள், பலவகையான மலர்ச்சிகள்.

எல்லோரிடமும் எல்லாவற்றுக்காகவும் நன்றி சொல்லிக் கொண்டிருந்தேன்… முதலில் சொற்களால் பின்னர் புன்னகையால் இறுதியின் நினைவுகளால்.