ஐந்தடியில் ஓர் உலகம்: மலாயில் மொழியாக்கம் கண்ட தமிழ்ச் சிறுகதைகள் குறித்த உரையாடல்

இன்னொரு பண்பாட்டின், சமூகத்தின், தனி மனிதனின் ஆழ்மன வெளிப்பாடுகளை மொழிபெயர்ப்பு இலக்கியமே நம்மிடம் கொண்டு சேர்க்கிறது. மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கு உலகம் முழுவதும் தீவிரமான வாசகர்கள் உள்ளனர். முக்கியமான உலக இலக்கியங்கள் தமிழில் காலந்தோறும் மொழியாக்கம் கண்டு வந்திருக்கின்றன. மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் தொடக்கக் காலத்தில் சில மொழிபெயர்ப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் பரவலான வாசகப் பரப்பைச் சென்றடையவில்லை. மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு முயற்சியைத் தாண்டி நூல்களைப் பெறுமொழியின் வாசகச்சூழலுக்குக் கொண்டு சேர்க்காததே தமிழ் இலக்கியம் மாற்று மொழிச் சூழலில் அதிகம் அறியப்படாததற்கான காரணமாக விளங்குகிறது.

அதன் அடிப்படையில் கடந்த ஜூன் 1 ஆம் திகதி வல்லினம் ஏற்பாட்டில் ‘பென் மலேசியா’ அமைப்பின் ஆதரவுடன் ‘முக்கோண கதைகள்’ எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் தமிழிலிருந்து மலாய் மொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் சிறுகதைத் தொகுப்பான ‘Dunia di Kaki Lima’, சீனத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ‘செல்சி நீலம்’, மலாயிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் ‘விண்ணிலிருந்து வீழ்ந்த பெண்’ ஆகிய மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளியீடு கண்டன. அதன் பிறகு தமிழ், மலாய், சீனம் என மூன்று மொழியில் இயங்கும் சமகால எழுத்தாளர்கள் இந்த மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் குறித்து கலந்துரையாடினர்.

நூலாசிரியர் ச. சரவணன்

அந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக, ஜூன் 21, ‘Dunia di Kaki Lima’ மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பு குறித்த கலந்துரையாடல் இல்ஹாம் கெலரியில் மதியம் 3 முதல் மதியம் 5 வரை ‘பென் மலேசியா’ மற்றும் வல்லினம் ஏற்பாட்டில் நடைபெற்றது. ‘Dunia di Kaki Lima’ தொகுப்பு மலேசிய இந்தியச் சமூகத்தின் வாழ்வியலைக் காட்டும் பத்து மொழிபெயர்ப்புச் சிறுகதைகளை உள்ளடக்கியிருந்தது. சிறுகதைகளிலிருந்த வாழ்வியலையும் ஆழ்மன வெளிப்பாட்டையும் உள்ளுணர்ந்து பேசும் தளமாக இக்கலந்துரையாடல் உருவாகியிருந்தது. ‘Dunia di Kaki Lima: Book Talk’ எனும் தலைப்பில் நிகழ்ந்த இக்கலந்துரையாடலில் எழுத்தாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான மரினா மஹாதீர் சிறப்பு வருகையாளராக இணைந்திருந்தார்.

திரு. டெரன்ஸ் டோ

நிகழ்ச்சியின் முதல் அங்கமாக ‘பென் மலேசியா’ அமைப்பின் துணைத் தலைவர் திரு. டெரன்ஸ் டோ வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். ‘பென் மலேசியா’ அமைப்பு மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்படுவதை அவர் உரை வெளிப்படுத்தியது. பல்லினத்தவர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலை வெளிப்படுத்தும் கருவியாகவும் மொழிபெயர்ப்பு செயல்படுகிறது என்றார். அதோடு, “140க்கும் மேற்பட்ட மொழிகள் வழக்கு மொழிகளாகப் பேசப்படும் மலேசியச் சூழலில் சில மொழி இலக்கியங்களே அதிகமும் அறியப்படுகின்றன. ஆனால், ‘பென் மலேசியா’ அமைப்பு ஒவ்வொரு மொழி இலக்கியத்திற்கும் சமமான முக்கியத்துவத்தை அளிக்கின்றது. ஒரு மொழியின் இலக்கியம் அந்தச் சமூகத்தின் சிந்தனையை, பண்பாட்டை, வெவ்வேறு அனுபவங்களை பிரதிபலிப்பதாக ‘பென் மலேசியா’ அமைப்பு நம்புகின்றது,” எனக் குறிப்பிட்டார். வாசகர்களையும் எழுத்தாளர்களையும் இணைக்கும் பாலமாக மட்டுமின்றி ஓர் இனத்தின் பண்பாட்டைத் தொடர்புறுத்தும் கருவியாகவும் மொழிபெயர்ப்பு செயற்படுவதாகக் கூறினார். ‘Dunia di Kaki Lima’ தொகுப்பு வாசகர்களை வேறொரு சமூகத்தின் உலகிற்கு அழைத்துச் சென்று, மனதில் ஆழமான தாக்கத்தை உண்டாக்கும் என தான் நம்புவதாகக் கூறினார். இன்றைய சூழலில் அரசியல், சமூக வேறுபாடுகளால் பிளவுப்பட்டிருக்கும் மக்களை ஒருங்கிணைக்கும் ஆற்றல் மொழிபெயர்ப்புக்கு இருப்பதாகக் கூறி உரையை டெரன்ஸ் டோ நிறைவு செய்தார்.

மரினா மஹாதிர்

தொடர்ந்து, ‘பென் மலேசியா’ அமைப்பின் உறுப்பினரும் எழுத்தாளருமான மரினா மகாதீர் சிறப்புரையாற்றினார். இத்தொகுப்புக்கான கதைகளைத் தெரிவு செய்த எழுத்தாளர் ம. நவீனையும் மொழிபெயர்ப்பாளர் சரவணனையும் மரினா தன்னுடைய உரையில் பாராட்டினார். பல்லின மக்கள் வாழும் மலேசியாவில் மொழிபெயர்ப்பின் வாயிலாகவே இன்னொருவரின் சூழலுக்குள் நம்மைப் பொருத்திப்பார்க்க இயலுமென்றார். ‘Dunia di Kaki Lima’ நூலில் இடம்பெற்றிருக்கும் சிறுகதைகள் எளிமையான கதைக்கருக்களையும் சரளமான மொழிபெயர்ப்பைக் கொண்டிருந்தாலும் அவற்றின் தாக்கம் ஆழமானதாக் இருந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், தொகுப்பில் இடம்பெற்றிருந்த பத்து சிறுகதைகளில் பெண் எழுத்தாளரின் கதை ஒன்று மட்டுமே இடம்பெற்றிருந்ததைச் சுட்டிக்காட்டி எதிர்காலத்தில் இன்னும் அதிகமான பெண் எழுத்தாளர்களின் கதை மொழிபெயர்க்கப்பட வேண்டுமென்ற வேண்டுகோளை முன்வைத்தார். அதன் வாயிலாக மலேசியத் தமிழ்ச்சூழலில் பெண்களின் நிலை இன்னுமே வெளிப்படும் என்றார்.

சிறப்புரையைத் தொடர்ந்து, ‘Dunia di Kaki Lima’ சிறுகதைத் தொகுப்பை ஒட்டி கலந்துரையாடல் அரங்கு நடைபெற்றது. எழுத்தாளர் அரவின் குமார் வழிநடத்திய அவ்வரங்கில் எழுத்தாளர்கள் நாஸ் கஸாலி, குர்ராத்துல் அயின், பட்லி அல் அக்கித்தி, லியோங் ஜிங் யு, கனகா மாணிக்கம் ஆகியோர் பங்கேற்றனர். இவர்களுடன்  மொழிபெயர்ப்பாளர் சரவணன் சத்தியானந்தன் அவர்களும்  இணைந்து கொண்டார். நூல் கலந்துரையாடல் அரங்கை மலாய் மொழியில் மிகச் சிறப்பாகவும் நேர்த்தியாகவும் வழிநடத்தினார் அரவின் குமார். ஒவ்வொரு பேச்சாளரும் தலா இரண்டு சிறுகதைகளை வாசித்து தம் கருத்துகளைப் பத்து நிமிடம் பேசினர்.  அவர்களின் கருத்துப் பகிர்வை ஒட்டி ஐந்து நிமிடம் கேள்வி பதில் அங்கமும் இடம்பெற்றது.

நாஸ் கஸாலி

தொடக்கமாக, நாஸ் கஸாலி கலந்துரையாடலைத் தொடக்கி வைத்தார். நாஸ் கஸாலி வார்விக் பல்கலைகழகத்தில் சட்டத் துறையில் பட்டம் பெற்றவர். ‘Classic Challengers’ எனும் வாசிப்புக் குழுமத்தைத் தொடங்கி வாசிப்புக் கலந்துரையாடலை ஒருங்கிணைத்து வருகிறார். எழுத்தாளர் மா. சண்முகசிவாவின் ‘Dosa Tuhan (சாமி குத்தம்)’ கதையைக் குறித்தும் கோ. புண்ணியவானின் ‘Lalat (ஈ)’ கதையைக் குறித்தும் நாஸ் கஸாலி தமது பார்வையை முன்வைத்தார். ‘சாமி குத்தம்’ கதையில் பல அடுக்குகள் இருந்ததாகவும் அண்மையில் நாட்டில் அதிகம் பேசப்பட்ட கோவில் உடைபடும் அபாயம் பற்றிய செய்திகளுடன் அவற்றைத் தொடர்புப்படுத்த முடிந்ததாகக் குறிப்பிட்டார்.

கோயில் விவகாரம் மட்டுமின்றி சமூகத்தில் நிலவும் மற்ற சமூக அரசியல் சிக்கல்களையும் எழுத்தாளர் முன்வைத்துள்ளார் என்றார். கதையில் முன்வைக்கப்பட்டுள்ள அடுக்குகளில் அவரைக் கவர்ந்த கூறு கதையில் சித்தரிக்கப்பட்டுள்ள அரசியல் கூறுகள்தான் என்றார். அரசியல் சுயலாபத்துக்காக கோவில் உடைபடும் சிக்கலைப் பயன்படுத்தும் அரசியல்வாதிகளுக்கும் அதனைப் பாதுகாத்து வரும் எளிய மனிதர் கடைசியில் வாயில் காவலனைப் போல மாறிவிடுகின்ற முரணையே கதை பேசுவதாகக் குறிப்பிட்டார். அந்த முரணையே கடவுளின் குற்றமா அல்லது அரசியல்வாதியின் குற்றமா என கேள்வியாக எழுகிறது என தன் பார்வையை முன்வைத்தார்.

தொடர்ந்து, கோ. புண்ணியவானின் ‘Lalat (ஈ)’ கதை பற்றிய பார்வை முன்வைக்கப்பட்டது. ‘ஈ’ கதை தனக்குத் தொழிலாளர்கள் படும் வேதனையைக் கடத்தியதாகக் கூறினார். தோட்டத் தொழிலாளி ஒருவர் குடியுரிமை சிக்கலால் வேலை பெர்மிட்(அனுமதி) நீட்டிக்கப் போராடுவதன் வேதனயை இக்கதையின் வாயிலாக உணர்ந்து கொள்ள முடிந்ததாகக் குறிப்பிட்டார். வேலை பெர்மிட்டுக்காகத் திண்டாடுகின்ற தொழிலாளியின் வாழ்க்கை நிலை அவன் காண்கின்ற ஈக்களைப் போலவே அலைக்கழிவதாக அமைந்திருக்கின்றது.  இக்கதையில் காட்டப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளியின் வலியை தன்னால் வாசிப்பில் உய்த்துணர முடிந்தது எனக் கூறினார்.

“இரு எழுத்தாளர்களும் கதையின் மையத்தை மிகச் சரியாகக் காட்டியுள்ளனர். கதையில் வருபவர்களின் வலியை உணர்ந்ததால் அவர்களின் மீது இரக்கமே எனக்கு உண்டானது. நாம் அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய கதைகள் இவை. மலேசியாவில் வாழும் மற்றொரு சமூகம் எதிர்நோக்கும் வாழ்வியல் சிக்கலை நிகர் அனுபவமாக இவ்விரண்டு கதைகளும் வழங்கின,” எனக் கூறி நாஸ் கஸாலி தன் வாசிப்பனுபவத்தை நிறைவு செய்தார்.

அரவின் குமார்

தொடர்ந்து அரங்கை வழிநடத்திய அரவின் அரங்கில் உள்ளவர்களின் புரிதலை மேலும் மேலோங்கச் செய்ய ‘சாமி குத்தம்’ கதையைக் குறித்து விளக்கமளித்தார். மலேசியாவில் இந்து சமய வழிபாட்டு முறைகளில் இருக்கும் பெருந்தெய்வ வழிபாடு, நாட்டார் தெய்வ வழிப்பாடுக்குமான வேறுப்பாட்டை விவரித்தார். ‘சாமி குத்தம்’ கதை நாட்டார் தெய்வக் கோயில் ஒன்று தன்னைச் சுற்றி நடக்கும் அரசியல் சமூக நிகழ்வுகளால் மெல்ல மெல்ல ஆகம முறையிலான கோவிலாக மாறுவதன் பின்னணியைக் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.

நாஸ் கஸாலியிடம் “அண்மையில் நடந்த கோயில் உடைபடும் அபாயம் குறித்த செய்தி பற்றிய உங்களது பார்வை இச்சிறுகதை வாசிப்பின் வாயிலாக மாற்றம் அடைந்ததா?” என அரவின் கேள்வியெழுப்பினார். அதற்கு நாஸ் கஸாலி அடிப்படையில் தமக்கு எந்தச் சமய வழிப்பாட்டு தலங்களையும் உடைப்பதில் உடன்பாடில்லை என்றார். அந்தச் சூழலை நோக்கித் தள்ளும் அரசியல் சந்தர்ப்பவாதமே மனிதர்களின் குணமாக இருப்பதையே அண்மைய சம்பவங்கள் காட்டியதாகக் குறிப்பிட்டார்.

 அவரைத் தொடர்ந்து, ‘Dunia di Kaki Lima’ நூலின் மொழிபெயர்ப்பாளரான சரவணன் சத்தியானந்தனிடம் கதைகளை மொழிபெயர்க்கும்போது வாசகனாக அவர் அடையும் உணர்ச்சி நிலையைப் பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. இத்தொகுப்பில் அமைந்திருக்கும் கதைகள் 1950,60களில் இந்தியச் சமூகத்தினர் எதிர்நோக்கிய சிக்கல்களை முன்வைக்கும் கதைகளாக அமைந்திருந்தன. இந்தச் சிறுகதைகளை மொழிபெயர்க்கும்போது அவற்றின் வாயிலாக எழுத்தாளர் முன்வைக்க எண்ணிய உணர்வுத்தளத்தைக் கடத்திவிடவேண்டுமென்ற உறுதியே தன்னை வழிநடத்தியதாகக் குறிப்பிட்டார்.

கனகா மாணிக்கம்

தொடர்ந்து, அரு. சு. ஜீவானந்தனின் ‘Oh, Anak Kegelapan (அட இருளின் பிள்ளைகளே)’, சை. பீர்முகமதுவின்  ‘Sepatu (பாதுகை)’ ஆகிய சிறுகதைகள் குறித்து எழுத்தாளர் கனகா மாணிக்கம் பேசினார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் கவிதைகளையும் மேடை நாடகக் கதைகளையும் கனகா மாணிக்கம் எழுதியிருக்கிறார். “ அட இருளின் பிள்ளைகளே கதை தலைப்பில் குறிப்பிடப்படும் இருளைச் சமூகத்தின் அறியாமையுடன் ஆசிரியர் தொடர்புபடுத்தியிருக்கிறார். நவீனத் தொழிற்நுட்ப வளர்ச்சியை அறிய எண்ணுகின்ற துலுக்கானத்தின் அச்சமே அவனைத் தடுத்துவிடுகிறது. அதனால், அவன் அடையும் இன்னலையே கதை மையப்படுத்துகின்றது” எனக் குறிப்பிட்டார். துலுக்கானம் நவீன வளர்ச்சிகளை வெறுப்பவன் அல்லன். ஆனால், அவனுடைய அச்சமும் அறியாமையுமே அவனை அறிதலிலிருந்து விலக்கிவிடுகிறது. அறியாமையில் வாழும் சமூகத்தின் மீதான கரிசனத்தை வாசிப்பில் தான் அடைந்ததாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, சை. பீர்முகமதுவின் ‘பாதுகை’ சிறுகதை தனலட்சுமி எனும் பள்ளிக்குச் செல்லும் சிறுமியின் துயரைப் பேசுவதாகச் சொன்னார். கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் தரும் சமூகம் கல்விக்கு முக்கியத்துவமளிப்பதில்லை என்ற கருவை எள்ளல் தொனியில் கதையில் குறிப்பிடப்படுகிறது. கதையில் இடம்பெற்ற பள்ளி காலணி தனலட்சுமியின் தன்மானம், அடையாளம் ஆகியவற்றின் குறியீடாக வெளிப்பட்டதெனச் சொல்லித் தன் வாசிப்பனுபவப் பகிர்வைக் கனகா நிறைவு செய்தார்.

லியோங் ஜீ யூயே

அடுத்ததாக, எம். எ.  இளஞ்செல்வனின் ‘Baki (பாக்கி)’ மற்றும் ப. கு. சண்முகத்தின் ‘Dunia di Kaki Lima (ஐந்தடியில் ஓர் உலகம்)’ கதைகளைப் பற்றிய பார்வை ஆங்கில-சீன மொழிபெயர்ப்பாளரும் ‘பென் மலேசியா’ அமைப்பின் உதவி செயலாளரான லியோங் ஜீ யூயேவால் பகிரப்பட்டது. ‘பாக்கி’ சிறுகதை 70களில் தோட்டப்புறச் சூழலில் வாழ்ந்த ஒரு பெண்ணின் தினசரி வாழ்க்கையை மையமிட்ட கதையாக இருந்ததாகக் குறிப்பிட்டார். ரப்பர் தோட்டத்தில் வேலை செய்யும் தெய்வானையின் அன்றாடம் மற்றவர்களைப் போலவே தினக்கடமைகளுடன் தொடங்குகிறது. ஆனால், அதன் பின்னால் தன் குடும்பத்தின் தேவைக்காக காலை முதல் செய்யத் தொடங்கும் பணிகளால் அவள் வாழ்வு எவ்வளவு பரிதாபமிகுந்ததாக மாறுகிறதென்பதையே கதை குறிப்பிடுவதாகச் சொன்னார்.

தெய்வானை தோட்டத்தில் தினசரி வாழ்க்கையின் வட்டத்துக்குள் சுழலும் சாதாரண, அமைதியான பெண்ணாக இருந்தாலும், அவளை அதி வீரப் பெண்மணியாகத்தான் தான் கருதியதாகக் கூறினார். குடும்பத் தேவைகள் எல்லாவற்றையும் நிறைவேற்ற காலையிலிருந்து ஓயாமல் வேலை செய்யும் தெய்வானைக்கு இரவில் காத்திருக்கும் பாக்கி கடமையென்பது பெண்களின் அவல வாழ்வைச் சொல்வதாக இருந்ததாகக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, ‘ஐந்தடியில் ஓர் உலகம்’ கதை பெட்டாலிங் வீதியில் சுற்றித் திரியும் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்தியதாகக் கூறி, இக்கதை எளிமையான முறையில் எழுதப்பட்டிருந்தாலும் அதன் தாக்கம் ஆழமானது என்றார். “கதையில் சித்திரிக்கப்பட்டிருப்பதைப் போல வீடிலிகளைப் பல முறை கண்டிருந்த போதிலும் அவர்களின் வாழ்வை அறிய முயன்றதில்லை. ஆனால், இக்கதை அவர்களின் வாழ்க்கையின் பின்னணியைக் காட்டியுள்ளது” எனக் கூறினார்.

குர்ராத்துல்

‘Dunia di Kaki Lima’ கதையை எழுதிய ப. கு. சண்முகம் அரங்கில் இணைந்திருந்ததால், அவரிடம் “70களில் அனைவரும் தோட்டத்தை மையப்படுத்தி கதை எழுதிய காலக்கட்டத்தில், ஏன் நீங்கள் நகர்புறத்தை மையமிட்டு எழுதினீர்கள்?” என்ற வினாவை அரவின் குமார் முன்வைத்தார்.  ப. கு. சண்முகம் தனது வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இக்கதையை எழுதியதாகக் கூறினார். தோட்டத் துண்டாடல் நிகழ்ந்து கொண்டிருந்தச் சூழலில் எழுத்தாளர்களின் பார்வை முழுதும் தோட்டங்களிலே குவிந்திருந்தது என்றார். அதே காலக்கட்டத்தில் நகர்புறங்களில் தமிழர்கள் வறுமையால் பல சமூகச்சீர்கேடுகளுக்கு ஆளாகியதைக் காண நேரிட்டதால் இக்கதையை எழுதியதாகச் சொன்னார். பின்னாளில், இச்சிறுகதை மேடை நாடகமாக மாற்றப்பட்டு ‘டேவான் பஹாசா’ மற்றும் கோலாலம்பூர் நகர அரங்கத்தில் நடிகர் எம். ஆர். ராதா தலைமையில் அரங்கேறியதாகச் சொன்னார்.

அடுத்து, எழுத்தாளர் குர்ராத்துல் அயினின் நூல் பார்வையோடு அரங்கு தொடர்ந்தது. எழுத்தாளரும் தொகுப்பாளருமான குர்ராத்துல் அயின் 2020ஆம் ஆண்டுக்கான பெர்டானா இலக்கிய விருதை (Anugerah Sastera Perdana) வென்றவர். ரெ. கார்த்திக்கேசுவின் ‘Seorang Suami Biasa (ஒரு சுமாரான கணவன்)’ கதையும் ம. நவீனின் ‘Bola (இழப்பு)’ கதையைப் பற்றியும் அவர் பேசினார். இரண்டு கதைகளும் புறநகர் பகுதியிலிருந்து நகரத்திற்குப் புலம்பெயர்பவர்களின் உளவியலைக் காட்டிய கதையாக அமைந்திருந்தது.  ‘ஒரு சுமாரான கணவன்’ என்ற கதையில் மனைவி கதாப்பாத்திரத்தின் இயல்பை மிக சுவாரசியமாக முன்வைத்தார். மிகைச்சிந்தனை பழக்கத்தை கொண்ட ஒரு பெண்ணின் இயல்போடு கதையில் வரும் மனைவியை ஒப்பிட்டுப் பேசினார். நகரப் பகுதியிலிருந்து திருமணமாகி கணவனுடன் அடுக்ககத்தில் வாழத் தொடங்குகிற மனைவி அப்பகுதியின் அசெளகரியங்களுக்கு மெல்ல பழகிப் பொருந்திப் போவதைக் கதை மிகச் சிறப்பாகக் காட்டியதாகச் சொன்னார்.

ம. நவீன், மரினா மஹாதிர்

தொடர்ந்து, ‘இழப்பு’ சிறுகதையில் நகரமயமாதலின் காரணமாகத் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்படுதலினால் ஏற்படும் அந்நியத்தன்மையை ஒரு சிறுவனின் உளவியலுடன் காட்டியிருப்பாதாகச் சொன்னார். புதிய வாழிடத்தில் தனக்குப் பிடித்த காற்பந்து விளையாட முடியாமலும் சுற்றியும் இருப்பவர்களின் மனநிலை மாறியிருப்பதன் காரணத்தையும் உணர முடியாத சிறுவனின் மனநிலையுடன் தன்னைப் பொருத்திப் பார்க்க முடிவதாகச் சொன்னார்.

குர்ராத்துலின் வாசகப் பகிர்வுக்குப் பின் பேசிய அரவின், சிறப்பு வருகையாளரான மரினா மகாதீர் தம்முடைய உரையில் குறிப்பிட்டதைப் போல தொகுப்பில் பெண் எழுத்தாளர்களின் கதைகள் அதிகம் இடம்பெறவில்லை என்றாலும் கதைகளில் பெண் பாத்திர வார்ப்பு மிக வலுவானதாக அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டார். தொடர்ந்து மொழிபெயர்ப்பாளர் சரவணனிடம் “மலேசியாவில் மொழிபெயர்ப்புகள் தொடக்கத்தில் தீவிரமாக இயங்கியிருந்தாலும் தொடர் முயற்சிகள் மலேசியத் தமிழ்ச் சூழலில் நடைபெறவில்லை. இப்படி முன்மாதிரிகள் இல்லாத சூழலில் எதனை வழிகாட்டியாகக் கொண்டு நீங்கள் கதைகளை மொழிபெயர்த்தீர்கள்?” என்ற கேள்வி அரவினால் கேட்கப்பட்டது. அதற்கு, மொழிபெயர்ப்புகளுக்கு முன்மாதிரியோ அல்லது வழிகாட்டுதலை விட மூலமொழியில் குறிப்பிடப்பட்டிருக்கும் சாரத்தை உணர்ந்து உள்வாங்கும் மொழியாளுமையே அவசியம் என்றார். மொழியாளுமை மட்டுமின்றி தற்காலத்தில் நிகழ்கின்ற விஷயங்களை அறிந்திருப்பதன் வழியும் கதையில் எழுத்தாளர் முன்வைக்கக்கூடிய சிக்கல்களைக் குறித்த விவரங்களை அறிந்திருப்பதும் தமக்கு மொழிபெயர்ப்பில் வழிகாட்டியாக அமைந்தது என்றார்.

ஃபட்லி

தொடர்ந்து, அரங்கில் இறுதி பேச்சாளராக ‘டேவான் சாஸ்திரா’ இதழின் ஆசிரியரான ஃபட்லி அல் அக்கித்தி, எஸ்.பி. பாமாவின் ‘Sepasang Coli Baharu (புதிதாக ஒன்று)’ கதை குறித்தும் மஹாத்மனின் ‘Walao-Eh (ஓ லாவே)’ கதையைக் குறித்தும் பேசினார். எஸ். பி. பாமாவின் ‘புதிதாக ஒன்று’ கதை வாசிப்பு உணர்வுப்பூர்வமான அனுபவத்தைத் தந்ததாகச் சொன்னார். கலந்துரையாடல் அரங்குக்காக வாசித்த இரு தருணமும் அழாமல் தன்னால் கதையை வாசிக்க முடியவில்லை என்றார். மார்பகம் ஒரு பெண்ணின் குறியீட்டு அடையாளமாக மாறும் இக்கதை மலேசிய சூழலுக்கு மட்டுமின்றி உலகலாவிய ரீதியில் அனைத்து பெண்களுக்கும் பொருந்துவதாகச் சொன்னார். ஃபட்லி. இத்தொகுப்பிலே அவரை அதிகம் ஈர்த்த, பிடித்த கதையாக அமைந்தது ‘புதிதாக ஒன்று’ கதை என்றார்.

எஸ்.பி.பாமா

அரங்கில் இணைந்திருந்த எழுத்தாளர் எஸ். பி. பாமாவிடம் கதை எழுதிய அனுபவத்தைக் குறித்து வினவிய பொழுது, இக்கதை அவர் தாய்க்கு நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகக் கூறினார்.

தொடர்ந்து, ‘ஓ லாவே’ கதையில் ஒரு தமிழரின் பார்வையிலிருந்து ஒரு சீன இளைஞனைப் பற்றிய புரிதல் காட்டப்பட்டுள்ளதாகக் கூறினார். நகர வாழ்வில் அவர்கள் இருவருக்கும் இடையில் உருவாகும் உறவையும் கதை காட்டியுள்ளதாகக் கூறினார் ஃபட்லி. இக்கதை வாசிப்பதற்குச் சுவாரஸ்யமாகவும் அங்கதத் தன்மையுடனும் இருந்ததாகச் சொல்லித் தன் வாசிப்பனுபவப் பகிர்வை நிறைவு செய்தார்.

தினேசுவரி சல்மா

இறுதியாக, அரங்கில் கலந்துகொண்ட பார்வையாளர்களின் கேள்வி-பதில் அங்கம் தொடங்கியது. இத்தொகுப்பில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள கதைகள் எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதனை அறிந்துகொள்ள டாக்டர் ஃபோளரன்சால் மொழிபெயர்ப்பாளரிடம் வினா கேட்கப்பட்டது. அதற்கு மொழிபெயர்ப்பாளர் சரவணன் “இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் இந்தியச் சமூகம் எதிர்நோக்கிய வாழ்வியல் சிக்கல்களைக் காட்டும் கதைகளாகவும் உணர்வுப்பூர்வமானதாகவும் இருக்கும்படி தேர்ந்தெடுக்கப்பட்டதாகச் சொன்னார். அவரைத் தொடர்ந்து அரங்கில் ‘பினாஸ்’ குழுவைச் சார்ந்த ஒருவர் இத்தொகுப்பில் உள்ள கதைகள் குறும்படங்களாக்கப்படலாம் என்ற பரிந்துரையையும் முன்வைத்தார்.

கட்டுரையாளர் சாலினி

கலந்துரையாடல் நிகழ்ச்சி 5 மணியளவில் நிறைவுற்றது. மலேசியத் தமிழ் இலக்கியத்தின் சாரமான பகுதியை இன்னொரு மொழிச்சூழலுக்குள் கொண்டு சேர்க்கும் ‘பென் மலேசியா’ மற்றும் வல்லினத்தின் முயற்சி சிறப்பாக நடந்தேறியதை நிகழ்ச்சி பங்கேற்பாளர்களின் வாசக அனுபவத்திலிருந்து அறிய முடிந்தது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...