பி. எம். மூர்த்திக்கு வல்லினம் விருது

2025க்கான வல்லினம் விருது பி. எம். மூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மலேசியக் கல்விச் சூழலில் தமிழிலக்கியப் பாடம் நிலைத்திருப்பதற்கும் அதில் மலேசிய நாவல் இடம்பெறுவதற்கும் வித்திட்டவர் பி. எம். மூர்த்தி. ஆரம்பப்பள்ளி அடைவுநிலை தேர்வுத்தாள் வடிவத்தை முழுமையாக மாற்றியமைத்து அதில் படைப்பிலக்கியம் எனும் புதிய பகுதியை உருவாக்கியவர். படைப்பிலக்கியப் பகுதியில் உள்நாட்டு அடையாளத்துடன் சிறுகதைகள் இடம்பெறுவதற்கும் மாணவர்கள் சுயமாக சிறுகதைகள் எழுதுவதற்கும் பெரும் மாற்றங்களை உருவாக்கியவர். அதைத் தொடர்ந்து இடைநிலைப்பள்ளியில் சிறுகதையைக் கட்டாய வினாவாகவும் மாற்றி, மலேசியக் கல்விச் சூழலை சிறுகதைகளின் மீது கவனம் கொள்ள வைத்தவர். கோ. சாரங்கபாணி, 1952இல் மாணவர் மணிமன்றம் எனும் பகுதியைத் தமிழ் முரசு நாளிதழில் உருவாக்கி அதன் வழியாக 70களில் ரெ. கார்த்திகேசு, சை. பீர்முகம்மது, அரு. சு. ஜீவானந்தன், மா. இளங்கண்ணன், ஐ. உலகநாதன், இராம. கண்ணபிரான், அமலதாசன், க. து. மு. இக்பால், சா. ஆ. அன்பானந்தன், சீனி நைனா முகம்மது, மு. அன்புச்செல்வன் என ஓர் இலக்கியத் தலைமுறை உருவாக வழியமைத்தார். அவருக்குப் பின் அப்படி ஓர் அரும்பணியைக் கல்வி அமைச்சின் வழியாக நிகழ்த்திக் காட்டியவர் பி. எம். மூர்த்தி.
வல்லினம் விருது

வல்லினம் விருது 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கலை, இலக்கியம், பண்பாடு ஆகிய துறைகளில் பங்களித்த ஆளுமைகளின் வாழ்நாள் சாதனைக்காக இவ்விருது வழங்கப்படுகிறது. ஐயாயிரம் ரிங்கிட் விருது தொகையுடன் விருது கேடயமும் வழங்கப்படுகிறது. மேலும் வல்லினம் விருது பெறுபவரின் புதிய ஆக்கங்களைப் பதிப்பித்து இவ்விருதளிப்பு விழாவில் வெளியீடும் செய்யப்படுகிறது. நூல்களுக்கான விருதுகளையும் பரிசுகளையும் மலேசியாவில் சில அமைப்புகள் வழங்கிக்கொண்டிருக்கும் சூழலில், வாழ்நாள் சாதனைக்காக வழங்கப்படும் விருது தொகையாலும் விருது விழா கொண்டாட்டத்தாலும் வல்லினம் விருது மலேசியத் தமிழ் இலக்கியச் சூழலில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது.
2014ஆம் ஆண்டு மலேசியத் தமிழ் நாவல் இலக்கியத்திற்கு முக்கிய ஆக்கங்களைக் கொடுத்த அ. ரெங்கசாமிக்கு வல்லினம் விருது வழங்கப்பட்டது. கவிஞர் லீனா மணிமேகலை கலந்துகொண்ட இந்த விழாவில் அ. ரெங்கசாமியின் தன்வரலாற்று நூலான ‘சிவகங்கை தொடங்கி சிசங்காங் வரை’ எனும் நூல் வெளியீடு கண்டது. 2019ஆம் ஆண்டு, மலேசியத் தமிழ் இலக்கியம் தொய்வு கண்டிருந்த தொண்ணூறாம் ஆண்டுகளில் தனிநபராக இலக்கியத்தை இயக்கமாக முன்னெடுத்த சை.பீர் முகம்மதுக்கு வல்லினம் விருது வழங்கப்பட்டது. இவ்விருதை ஒட்டி அவரது ‘அக்கினி வளையங்கள்’ எனும் நாவல் வல்லினத்தால் பதிப்பிக்கப்பட்டு வெளியீடு கண்டது. 2022ஆம் ஆண்டு, மலேசிய இந்தியர்களின் வரலாற்றை மலேசிய இந்தியர்களின் இக்கட்டான நிலை நூலின் வாயிலாக ஆவணப்படுத்திய மா. ஜானகிராமனுக்கு வல்லினம் விருது வழங்கப்பட்டது. இந்த விருது விழாவில் அவர் புதிதாக எழுதிய ‘மலேசிய இந்தியர்களின் மறக்கப்பட்ட வரலாறு’ எனும் நூல் வெளியீடு செய்யப்பட்டது. அவ்வகையில் பி. எம் மூர்த்தி அவர்கள் வல்லினம் விருதைப் பெறும் நான்காவது ஆளுமை.
தேர்வு வாரியத்தின் பின்னணி

மலேசியத் தேர்வு வாரியம் என்பது மலேசியக் கல்வித்திட்டத்தின் விளைப்பயனைக் கண்டறிவதற்காக உருவாக்கப்பட்டது. தொடக்கப்பள்ளி கல்வி மதிப்பீடுகள் தொடங்கி ஐந்தாம் படிவம் வரையில் கற்பிக்கப்படும் பாடங்களின் இறுதி தேர்வுத்தாட்களை உருவாக்குவதும் அதனை மதிப்பிடுவதும் இதன் பணி. இது கல்வியமைச்சின் ஒரு பிரிவாகச் செயற்பட்டு வருகிறது.
1956ஆம் ஆண்டு காலனியக் காலக்கட்டத்திலிருந்து அடிப்படை செயற்முறையில் எவ்வித மாற்றங்களுமின்றி கல்வித்திட்ட மாறுபாடுகளுக்கேற்ப கேள்விகள், அதன் அமைப்பு ஆகியவற்றில் மட்டுமே மாற்றங்கள் செய்யும் அமைப்பாகத் தேர்வு வாரியம் செயற்பட்டு வருகிறது. உயர்நிலைக் கல்வித் தேர்வான எஸ்.பி.எம் தேர்வில் கற்பிக்கப்படும் பாடங்கள் (Teaching Subjects) மற்றும் தேர்வுக்குட்படுத்தப்படும் பாடங்கள் (Testing Subjects) என இரண்டு பிரிவு தேர்வுப்பாடங்களின் வினாத்தாட்களை உருவாக்கும் பணியைத் தேர்வு வாரியம் மேற்கொண்டு வருகிறது. இந்த இரண்டு பிரிவுப்பாடங்களில் எஸ். பி. எம் தேர்வில், முறையே கற்பிக்கப்படும் பாடப்பிரிவில் தமிழும் தேர்வுக்குட்படுத்தப்படும் பாடப்பிரிவில்தமிழிலக்கியமும் இடம்பெற்றிருக்கின்றன.
காலனியக் காலக்கட்டத்தில் மொழிபெயர்ப்பாளர் பணிக்குத் தேவைப்படும் மொழித்திறனைக் கண்டறிவதற்காகத் தமிழ் இலக்கியப் பாடமும் எஸ்.பி.எம் தேர்வில் இணைக்கப்பட்டது. தமிழ் மற்றும் தமிழிலக்கியம் ஆகிய இரண்டு பாடங்களுக்கான வினா உருவாக்கும் குழுவில் மலேசியாவின் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் தமிழ்ப்பேராசிரியர்கள், குறிப்பிட்ட பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்கள் இடம்பெற்றிருந்தனர். தமிழ் இலக்கியப் பாட கற்றல் உள்ளடக்கமென்பது ஒரு நாவல், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு நாடகம் என அமைந்திருப்பது வழக்கம். தேர்வுசெய்யப்படும் நூல்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பயன்பாட்டில் இருக்கும். குறிப்பிட்ட காலக்கட்டத்துக்குப் பிறகு நாவல், நாடகம், கவிதைகள் ஆகியவைப் புதுப்பிக்கப்படும். இவ்வாறு தேர்வு செய்யப்படும் இலக்கிய நூல்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டு எழுத்தாளர்களால் படைக்கப்பட்ட ஆக்கங்களாக இருந்தன. தமிழ் இலக்கியப் பாடத்துக்கான பாடநூல்களை இலவச பாடநூல் திட்டத்தில் வழங்குவது வழக்கத்தில் இல்லாமல் இருந்தது. அந்நூல்களை ஆசிரியர்கள், தனிநபர்கள், இயக்கங்கள் ஆகியோரின் முயற்சியினால் மாணவர்கள் பெற்றனர். தமிழ் இலக்கியப் பாடக் கற்றல் கற்பித்தலும் இலக்கிய ஆர்வலர்கள், ஆசிரியர்கள் ஆகியோரால் பாட அட்டவணைக்கு வெளியேத்தான் கற்பிக்கப்பட்டு வந்தது.
தேர்வு வாரியத்தில் பி. எம். மூர்த்தி

- எஸ்.பி.எம் இலக்கியம்
1998ஆம் ஆண்டு மலேசியத் தேர்வு வாரியத்தின் தமிழ்ப் பிரிவில் பட்டதாரி அல்லாத அதிகாரிக்கான கோட்டாவில் பி. எம். மூர்த்தி பணியாற்றத் தொடங்கினார்.
1998இல் 320 மாணவர்களே தமிழ் இலக்கியப் பாடத்தைத் தேர்வுப் பாடமாக எடுத்திருந்தனர். இச்சூழலில் தமிழ் இலக்கியம் உட்பட குறைந்த மாணவர்கள் எடுக்கும் பாடங்களைத் தேர்விலிருந்து அகற்றிவிட தேர்வு வாரியம் திட்டமிட்டிருந்தது. அதை அறிந்த பி. எம். மூர்த்தி தமிழ் இலக்கியப் பாடத்தை அதிகமான மாணவர்கள் எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினார். முதலாவதாக, தமிழ் இலக்கியப் பாடத்தை மாணவர்கள் எடுக்கத் தயங்கியதற்கான காரணங்களைக் கண்டறிந்தார். உயர்நிலைத் தேர்வுப் பாடமாக இருந்தும் கூட முறையான பாடநூல்கள், கற்றல் கற்பித்தல் வழிகாட்டி நூல்கள், மாணவர்களுக்கான போதிய ஊக்குவிப்பு இல்லாமல் இருப்பதை உணர்ந்தார்.
2000ஆம் தொடங்கி தமிழ் இலக்கியப் பாடத்துக்கான தேர்வு வழிகாட்டி நூல்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 2000ஆம் ஆண்டில் மலேசிய இந்து இளைஞர் இயக்கத்தின் ஆதரவுடன் தேர்வுக்கான வழிகாட்டி நூலைப் பதிப்பித்துப் பள்ளிகளுக்கு அளித்தார். அதனைத் தொடர்ந்து, மலேசியா முழுவதும் தமிழ் இலக்கியப் பாடத்தைக் கற்பிக்கும் தேர்ந்த ஆசிரியர்களைக் கொண்டு தேர்வு வழிகாட்டி நூல்களைத் தயாரிக்கச் செய்தார். சுழல் முறையில் ஒவ்வொரு மாநில இலக்கிய ஆசிரியர்களைக் கொண்டும் தேர்வு வழிகாட்டி நூல்களை உருவாக்கி அதனை மாணவர்களுக்குக் கொண்டு சேர்த்தார். அந்த முயற்சியின் முத்தாய்ப்பாக, 2006ஆம் ஆண்டு மலேசியப் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பணியாற்றிய துன் சாமிவேலுவின் மூலம் கிடைக்கப் பெற்ற மூன்றரை லட்சம் வெள்ளி நிதியுதவியைக் கொண்டு எஸ். பி. எம் இலக்கியத் தேர்வுக்குரியப் பட்டியலில் இருந்த நாவல், நாடகம், கவிதைத் தொகுப்பு ஆகிய நூல்களை முறையே ஐந்தாயிரம் எனும் எண்ணிக்கையில் பதினைந்தாயிரம் நூல்களைத் தருவித்து மாணவர்களுக்கு இலவசப் பாடநூல்களாகக் கொடுக்கும் முயற்சியை மேற்கொண்டார். அதே காலக்கட்டத்தில், மாணவர்களின் ஆர்வத்தைத் தூண்ட நாடு முழுதும் இருக்கும் கோவில்களில் தைப்பூசத்தின்போது தமிழ் இலக்கியம் பயில்வதற்கான அவசியத்தை உள்ளடக்கிய 1 லட்சம் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்யும் முயற்சியை முன்னெடுத்தார். நாடு முழுமையிலும் இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்களைச் சந்தித்து தமிழ் இலக்கியம் பயில்வதற்கான அவசியத்தை விளக்கி ஊக்குவித்தார். பாடநூல்களுக்கு அப்பால், வகுப்பறையில் பயன்படுத்த ஏதுவான தேர்வு வழிகாட்டி நூல்களையும் தயாரிக்க முயற்சி மேற்கொண்டார். அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளின் பலனாக 2007 ஆம் ஆண்டு 4700 மாணவர்கள் தமிழ் இலக்கியப் பாடத்தை எஸ். பி. எம் தேர்வில் தேர்வுப்பாடமாக எடுத்தனர். பி. எம். மூர்த்தி மேற்கொண்ட முயற்சிகளின் பலனாக, தமிழ் இலக்கியப் பாடத்துக்கான பாடநூல்களை அரசே அச்சிட்டுத் தரும் நடைமுறை 2018ஆம் ஆண்டு தொடங்கியது.
பி. எம். மூர்த்தி அவர்கள் ஓர் அதிகாரியாக மட்டும் செயல்பட்டவர் அல்ல. அவருள் எப்போதுமே செயல்பட்டது தமிழ் உணர்வுதான். இடைநிலைப்பள்ளிகளில் இலக்கியத்தைக் கைவிடுவது ஒட்டுமொத்த இலக்கியச் சூழலில் பெரும் பாதிப்பை உருவாக்கும் என அவர் தீர்க்கமாக நம்பிச் செயல்பட்டார். அவர் முயற்சிக்கு இடையூறுகள் வரும்போது அதை தகர்த்துச் செல்லும் ஆற்றலையும் பெற்றிருந்தார்.
- இலக்கியப் பாடத்திற்கு இடையூறு
2010ஆம் ஆண்டு கல்வியமைச்சு எஸ். பி. எம் தேர்வில் அதிகபட்ச பாட வரம்பாக பத்துப் பாடங்களை நிர்ணயித்தது. இந்த நடைமுறையால் அறிவியல் பிரிவில் பயிலும் தமிழ் மாணவர்களால் தமிழிலக்கியப் பாடத்தைக் கூடுதல் பாடமாக எடுக்க முடியாத சூழல் உருவானது. நாட்டில் பல அமைப்புகள் கொதித்தெழுந்த காலம் அது. அந்த முடிவை மாற்றும்படி பல்வேறு தமிழ் இயக்கங்கள் அரசுக்கு அழுத்தம் கொடுத்தன. பி. எம். மூர்த்தியும் அதன் பின்னணியில் இருந்து செயல்பட்டார். அப்போது அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த இந்தியர் பிரநிதியான டத்தோ ஸ்ரீ எஸ். சுப்பிரமணியத்திற்குப் பல்வேறு அழுத்தங்கள் வந்தன. அப்போதுதான் அமைச்சர் பதவி ஏற்றிருந்த அவருக்கு நிபுணத்துவமான விளக்கம் தேவைப்பட்டபோது பி. எம். மூர்த்தி அழைக்கப்பட்டார். தன் சகப் பணித்தோழரான சேகருடன் இணைந்து அமைச்சரிடம் விரிவான விளக்கங்களை வழங்கி, அரசின் இந்த முடிவால் விளையக் கூடிய பாதகங்களை எடுத்துரைத்தார். பி. எம். மூர்த்தி அவர்கள் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, 10 தேர்வுப்பாடங்களுடன் கூடுதலாக 2 பாடங்களை அனுமதிக்கும் ‘10+2’ எனும் நடைமுறையைக் கல்வியமைச்சு அறிமுகப்படுத்தியது.
- மலேசியத் தன்மை
பி. எம். மூர்த்தியின் தனித்தன்மைகளில் ஒன்று மலேசிய இலக்கியம் மலேசிய வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்ற தெளிவுதான். இள வயது தொடங்கி எனிட் பிளைட்டன் எழுதிய சிறுவர்களுக்கான சாகச நூல்களை விரும்பி வாசித்த பி. எம். மூர்த்தி தமிழ்த் தேர்வுத்தாளில் படைப்பிலக்கியப் பகுதியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்தார். அதில் முக்கியமானது ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் கருத்துணர்தல் கேள்வியில் இருந்த படைப்பிலக்கியப் பகுதியில் உள்நாட்டு அடையாளத்துடன் சிறுகதைகளை இடம்பெறச் செய்தார். அதற்கு முன்னர் இருந்த சிறுவர் நன்னெறிக்கதைகளுக்கு விடைகொடுத்தார். தன் முயற்சியை முன்னெடுக்க எழுத்தாளர் விஸ்வநாதன் மற்றும் தேர்ந்த எழுத்தாளர்களைக் கொண்டு சிறுவர்களுக்கான சிறுகதைகளை எழுதச் செய்து அதனைத் தேர்வுத்தாள்களில் இணைத்தார். ஆரம்பப் பள்ளி மாணவன் ஒருவன் தன் வாழ்வைச் சொல்லும் சிறுகதைகளை வாசிக்கச் செய்தார். அதேபோல 2011 ஆம் ஆண்டு புதிய கல்வித் தவணையின் இலக்கியப் பாடத்துக்கான நாவலாக ‘இலட்சியப் பயணம்’ எனும் மலேசிய நாவலை இணைத்தார். மலேசியப் பொதுத் தேர்வுப் பகுதியில் இடம்பெற்ற முதல் மலேசிய நாவலான ‘இலட்சியப் பயணத்தை’ மாணவர்களின் வாசிப்புக்கு ஏற்றதாகவும் கல்விச்சூழலுக்கு ஏற்புடையதாகவும் பி. எம். மூர்த்தி சீரமைத்தது முக்கியப் பணி.
- பண்பாட்டுப் பங்களிப்பு
பி. எம். மூர்த்தி, மலேசிய அடையாளங்கள் இலக்கியப் பிரதிகளில் வெளிபட வேண்டும் என விரும்பி செயலாற்றியது போலவே தமிழ் பண்பாடும் பனுவல்களில் இடம்பெற வேண்டும் என முனைப்புக் காட்டினார். மலேசியாவில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் மாநில கல்வி இலக்காவின் கட்டுப்பாட்டில் இயங்குபவை. மாநில கல்வி இலாக்கா தேர்வு வாரியம் நிர்ணயிக்கும் முடிவுகளின்படிச் செயல்படுபவை. எனவே, தான் எடுக்கக்கூடிய ஓர் எளிய முடிவு ஒட்டுமொத்த நாட்டின் கல்விச் சூழலையும் மாற்றியமைக்கும் என மூர்த்தி உணர்ந்திருந்தார். அதன் வழியாக மாணவர்களின் சிந்தனையில் மாற்றம் கொண்டுவர விரும்பினார்.
அக்காலக்கட்டத்தில் தேர்வுக்குத் தயார் செய்யப்பட்ட பனுவல்கள் பெரும்பாலும் மலேசியா எனும் அடையாளத்துடன் இருந்தன. பி. எம். மூர்த்தி அதை 70 – 30 எனப் பிரித்தார். அதன் அடிப்படையில் 30 சதவிகிதம் மலேசியா எனும் அடிப்படையிலும் 70 சதவிகிதம் தமிழர் பண்பாடு தொடர்பாகவும் இடம்பெறச் செய்தார். தமிழர் உணவு, மூலிகைகள், மன்னர்கள், மலேசியத் தமிழ் சான்றோர்கள், உடை, வரலாறு என பனுவல்களை உருவாக்கினார்.
இப்படியான பனுவல்களே தேர்வுத்தாளில் இடம்பெறும் என்பதை அறிந்த மாநில கல்வி இலாக்கா அதை பள்ளிகளில் அமல்படுத்த வலியுறுத்தியது. விளைவாக தமிழ்ப்பள்ளிகளில் தமிழ் பண்பாடு குறித்த பாடப் பனுவல்கள் ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்டன. உ. வே. சாமிநாதையர், ஜி. யு. போப், பெருஞ்சித்திரனார், பாவாணர், கி. ஆ. பெ. விசுவநாதம் என பல அறிஞர்களும் மாணவர்களுக்கு அறிமுகமாயினர். மரபின் ஆழமும் அகலமும் எளிமையான பனுவல்களாக மாணவர்கள் வாசித்தனர்; பண்பாட்டின் வேர்கள் அறிமுகமாயின.
- ஆரம்பப்பள்ளியில் சிறுகதை

பி. எம். மூர்த்தியின் பெயர் சர்ச்சைக்குரியதாக மாறிய ஆண்டு 2005. அந்த ஆண்டில்தான் படக்கட்டுரை என ஆரம்பப்பள்ளியில் இருந்த கட்டுரை பகுதியை சிறுகதை பகுதியாக மாற்றியமைத்தார் பி. எம். மூர்த்தி. இரண்டு நிலைகளில் இதனால் சர்ச்சை உருவானது.
முதலாவது, மலேசியாவில் உள்ள நூறு தலைமையாசிரியர்கள் ஆறாம் ஆண்டு தமிழ்மொழி தேர்வுதாளில் புதிதாக அறிமுகம் கண்ட சிறுகதை வடிவத்தையே நீக்க வேண்டுமென குறிப்பாணை ஒன்றைத் தயார் செய்து அதை அரசிடம் சமர்ப்பிக்க முடிவு செய்திருந்தனர். தலைமையாசிரியர்களின் இந்த எதிர்ப்புக்கு முக்கியக் காரணம் பி. எம். மூர்த்தி அறிமுகம் செய்த சிறுகதை வடிவத்தில் பேச்சு மொழி இருக்கலாம் எனும் தளர்வுதான். இதனால் மாணவர்களின் மொழித்தூய்மை பாதிக்கப்படும் என அவர்கள் சார்பான எதிர்வினைகளும் நாளிதழ்களில் வெளிவந்துகொண்டிருந்தன.
இரண்டாவது, அதுவரை நன்னெறிக்கதைகளை போதித்துக்கொண்டிருந்த ஆசிரியர்களுக்குச் சிறுகதை எழுதும் நுட்பம் கைவரவில்லை. அதன் தனித்தக் கலை வடிவம் கைவராமல் படத்தைப் பார்த்து நன்னெறிக்கதை எழுதும் பாணியையே பின்பற்றினர். சிறுகதையில் நுட்பங்கள் குறித்து தேர்வு வாரியம் வழங்கிய விளக்கங்கள் அவர்களை அவ்வளவு எளிதாக நெருங்கவில்லை.
பி. எம். மூர்த்தி மீது தனித்தமிழ் ஆர்வளர்களும் மொழித்தூய்மைவாதிகளும் கொண்டிருந்த எதிர்நிலை சிந்தனை அவர் வழங்கிய விளக்கத்தின் வழியாகவே மெல்ல அகன்றது. ஒரு புனைவில் பேச்சு மொழியின் பங்கு குறித்தும், சிறுகதை எனும் கலை வடிவில் அதன் இயல்பான பங்களிப்பு குறித்தும் அவர் பேசிப் புரியவைத்தார். மேலும், மாணவர்களிடையே பிடிவாதமான மொழித்தூய்மை மொழியின் வளர்ச்சியைத் தடுக்கும் என்றும் தமிழ் இத்தனை காலம் வளர்ந்து உயர பேச்சுமொழியின் பங்களிப்பு இன்றியமையாதது எனவும் விளக்கி அனைவரின் சம்மதத்தையும் பெற்றார்.
இரண்டாவது சிக்கலைப் பி.எம்.மூர்த்தி இலக்கியவாதிகளாக இருந்த ஆசிரியர்களைக் கொண்டு நேர் செய்தார். இலக்கியத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை அழைத்து, தேர்வு வாரியம் எதிர்ப்பார்க்கும் சிறுகதை நுணுக்கங்களை முன்வைத்தார். ஜெயமோகன் எழுதிய, ‘சிறுகதை ஒரு சமையல் குறிப்பு’ எனும் கட்டுரையே அவரது கையேடாக இருந்தது. அந்த ஆசிரியர்களின் வழியாக நாடு முழுவதும் பட்டறைகள் ஒழுங்கு செய்யப்பட்டன. தேர்வு வாரியத்தின் தேவை எழுத்தாளர்களாக இருந்த ஆசிரியர்கள் வழியாகவே விளக்கப்பட்டன. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் சிறுகதைகள் குறித்த பல்வேறு நுட்பங்கள் புரியத் தொடங்கின. மாணவர்களுக்கான சிறுகதை நூல்கள் வெளிவந்தன. அதன் உச்சமாக 2010இல் மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் மூர்த்தி அமல்படுத்திய சிறுகதை இலக்கியம் பெரும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. இளம் எழுத்தாளர்களும் எழுத்தார்வளர்களும் வெளிப்பட்டனர்.
பி. எம் மூர்த்தியின் திட்டம் நேரடியாக பள்ளி மாணவர்களுக்கு இலக்கிய அறிமுகத்தை வழங்கிய அதே வேளை, ஆசிரியர்கள் பலரிடமும் சிறுகதை இலக்கியம் பற்றியும் ஆர்வத்தை விதைத்தது. குறிப்பாக, ஆசிரியர் பயிற்சி கல்லூரியின் பாடதிட்டத்தில் சிறுகதைகள் பற்றிய பயிற்சியும் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஆகவே, ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் பயிலும் இளம் ஆசிரியர்கள் சிறுகதை பட்டறைகளில் கலந்துகொண்டு சிறுகதை இலக்கியம் பற்றிய தெளிவைப் பெற்றனர்.
பி. எம். மூர்த்தியின் திட்டமிட்ட நேர்த்தியான அணுகுமுறையால் பள்ளிகளில் சிறுகதை எழுதும் ஆற்றல் வளர்ந்ததோடு ஆசிரியர்கள் பலரும் நவீன இலக்கியத்தில் ஆர்வம் காட்டத் தொடங்கினர்.
இலக்கியகம் அமைப்பு
இவ்வாறு மலேசியா முழுவதும் உள்ள தமிழ் இலக்கியம் கற்பிக்கும் ஆசிரியர்களை ஒன்றிணைக்கும் வகையில் 2008ஆம் ஆண்டில் ‘இலக்கியகம்’ எனும் அமைப்பை உருவாக்கினார் பி. எம். மூர்த்தி. ‘இலக்கியகம்’ மலேசியாவில் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட இயக்கமாக உருவெடுத்தது. தமிழ்மொழியும் தமிழ் இலக்கியமும் கற்பிக்கும் ஆசிரியர்களின் வளர்ச்சிக்காக ‘இலக்கியகம்’ வழி பயிற்சிகள், கருத்தரங்குகள், சிறுவர் மற்றும் இளையோர் சிறுகதை எழுதும் போட்டிகள் என பல நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டன. எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற தமிழின் முதன்மையான படைப்பாளிகளை அழைத்து வந்து பட்டறைகள் ஒருங்கிணைக்கப்பட்டன.
பதிப்பகம்

மலேசிய கல்விச் சூழலில் இயங்குபவர்களால் 2014 ஆம் ஆண்டை அவ்வளவு எளிதில் மறந்துவிட இயலாது. தேர்வு வாரியம் தயாரித்து வைத்திருந்த அரசாங்க சோதனைத் தாள்கள் தேர்வுக்கு முன்பாகவே இரகசியமாக வெளியில் கசிந்ததைத் தொடர்ந்து சில ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தத் தவறுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளச் சொல்லி சில அதிகாரிகளை வேலையிட மாற்றம் செய்தனர். அப்படி மாற்றப்பட்டவர்களில் பி. எம். மூர்த்தியும் ஒருவர். தேசிய அளவில் தமிழ்க்கல்விச் சூழலில் மாற்றங்களை ஏற்படுத்திய ஒருவர் மாவட்ட கல்வி அமைச்சில் 2015 ஆண்டு அதிகாரியாக அமர்த்தப்பட்டார். பி. எம். மூர்த்தி இது தனக்கு நிகழ்த்தப்பட்ட அநீதியாகவே கருதினார். எந்தத் தவறும் செய்யாத தான் எதற்காக இந்த தண்டனையை ஏற்க வேண்டும் என்பதே அவர் கேள்வியாக இருந்தது. 2017 வரை அங்கு பணியாற்றியவர் ஆகஸ்டு மாதம் விருப்பத்தின் பேரின் பணி ஓய்வு பெற்றார்.
ஆனால் பி. எம். மூர்த்தி அவர் ஏற்றிருந்த பணியால் இயங்கியவரல்ல; அவர் இயங்க பணிச்சூழல் கொடுத்த சாத்தியங்களைப் பயன்படுத்திக்கொண்டவர். எனவே பணி ஓய்வுக்குப் பிறகு இன்னும் சுதந்திரமாக தன் பணிகளை மேற்கொண்டார். அப்படி அவர் முன்னெடுத்த முயற்சிதான் பி எம் எம் பதிப்பகம்.
எனிட் பிளைத்தனின் நூல்களைச் சிறுவயதில் வாசித்திருந்த பி. எம். மூர்த்திக்கு, ஆங்கிலத்தில் இருப்பது போல் மலேசிய பின்புலத்தைக் கொண்ட சிறுவர் தொடர் நாவல்கள் இங்கு இல்லாதது ஒரு குறைபாடாகவே இருந்தது. எனவே, ‘தீரச்சிறுவர்கள்’ எனும் தலைப்பில் சிறுவர்களுக்கான தொடர் நாவலை வெளியிட திட்டமிட்டு தனது நண்பர் விஸ்வாநாதன் வழி நாவல் எழுதும் பணியை முடுக்கினார். மலேசியாவின் பன்னாட்டுச் சூழலையும் தமிழர்களின் வரலாற்றையும் காட்டும் தொடர் நாவலாக அது அமைய வேண்டும் என்ற கனவில் 2018 ஆம் ஆண்டு பி எம் எம் பதிப்பகம் (PMM Publications) பதிப்பகம் தொடங்கப்பட்டது. முதல் தொடரை 2019ஆம் ஆண்டு ‘முதல் பயணம்’ எனும் பெயரில் நூல் வெளியீடு கண்டது. ஆனால், தொடர்ந்து வந்த கோவிட் காலக்கட்டத்தினால் நூல்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டது.
பி. எம். மூர்த்தி கொண்டாடப்பட வேண்டியவர்

1998 முதல் 2004 வரை தேர்வு வாரியம் பி. எம். மூர்த்தியின் கோட்டையாகவே இருந்தது. ஆற்றல் உள்ள பலரையும் அவர் தேர்வு வாரியத்தில் இணைத்தார். பலரது சிந்தனையைப் பயன்படுத்திக் கொண்டார். எல்லாவற்றுக்கும் பின்னால் அவருக்குத் தெளிவான நோக்கமும் சிந்தனையும் இருந்தது. நேரடியாகவும் மறைமுகமாகவும் தனது திட்டங்களுக்கு வந்த எதிர்ப்புகளை நேர்நிலை மனநிலையில் எதிர்கொண்டு முன் சென்றார்.
நிர்ணயிக்கப்பட்ட நடைமுறை, வேலை கட்டுப்பாடுகள் என அரசுப்பணியின் நெருக்கடிக்குள் பணியாற்றியிருந்தாலும் பி. எம். மூர்த்தி செய்திருக்கும் பல பணிகளும் முன்மாதிரியானவை. அவர் மேற்கொண்டிருக்கும் பல பணிகளுக்கான பின்னணியில் தமிழ்க்கல்வி நிலைத்திருப்பதற்கும் அதனை நீடிக்கச் செய்யவுமான தொலைநோக்குப் பார்வையும் தளரா ஊக்கமுமே ஆதார விசையாக இருந்திருக்கிறது.
2025-ஆம் ஆண்டுக்கான வல்லினம் விருதை பி.எம். மூர்த்தி பெருவதில் வல்லினம் விருது மேலும் மேன்மையடைகின்றது.