தமிழாசியா சந்திப்பு 22: எதிர்மறை உலகத்தின் ஒளி

தமிழாசியாவின் 22-வது சந்திப்பில் அ. மாதவன் அவரின் புனைவுலகத்தைப் புரிந்துகொள்ளும் வகையில் நான்கு சிறுகதைகளைக் கலந்துரையாடினோம். அ.மாதவன் 1970-களில் தொடங்கி கட்டுரை, சிறுகதை, நாவல் எனப் பல இலக்கிய வடிவங்களில் தனது படைப்புகளை வழங்கியுள்ளார். இவருடைய சிறுகதைகள் இயல்புவாதத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டிருப்பதால் இலட்சியங்களுக்கு அப்பாற்பட்டு மனித இயல்புகளான பசி, காமம், வன்மம் ஆகியவற்றில் வாழ்க்கை எப்படியெல்லாம் பிணைக்கப்பட்டிருக்கின்றது என்ற அறிமுகத்தோடு ம. நவீன் கலந்துரையாடலை ஆரம்பித்தார் .

மரபிலக்கியத்திலிருந்து உரைநடை இலக்கியம் பரிணமிக்கின்ற காலக்கட்டத்தில் கற்பனாவாத இலக்கியங்கள் ஆரம்பமாகிறது. கற்பனாவாதத்தின் இரண்டு முகங்களாக முற்போக்கு இலக்கியத்தையும் வணிக இலக்கியத்தையும் குறிப்பிடலாம். இந்த இரு இலக்கியங்களும் வளர்ந்து வந்த காலக்கட்டங்களில் இயல்புவாத அல்லது யதார்த்த இலக்கியங்கள் முட்டி மோதி பெரிய சக்தியாக உருவாகி வந்தது. அப்படி ஓர் இயல்புவாத இலக்கியத்தின் முக்கிய முகமாக அ. மாதவன் இருப்பதாக ம. நவீன் தெரிவித்தார்.

பொதுவாக மூன்று மணிக்குத் தொடங்கும் சந்திப்பு இம்முறை 30 நிமிடங்கள் முன்னமே தொடங்கப்பட்டது. அ.மாதவன் அவருடைய குறிப்பிட்ட நான்கு கதைக்குள் மட்டுமல்லாமல் இன்னும் சில முக்கியமான சிறுகதைகளைச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வதன்வழி அவருடைய புனைவுலகை இன்னும் ஆழமாக அறிய வாய்ப்பாக அமையுமென்பதால் ம. நவீன் சில சிறுகதைகளைச் சுருக்கமாகக் கூறினார். அதில் ‘தூக்கம் வரவில்லை’, ‘சினிமா’, ‘அன்னக்கிளி’ போன்ற முக்கியமான சிறுகதைகள் பீடிகையாக ம. நவீனாலும் ‘பாச்சி’ சிறுகதை அரவின் குமாராலும் அறிமுகப்படுத்தப்பட்டன. இலட்சியவாதத்தைச் சொல்கின்ற குரலும் வணிக இலக்கியத்தில் இருக்கக்கூடிய அதீதமான கற்பனையும் இல்லாமல் ஒரு மனிதனுடைய வாழ்வில் எந்தவொரு முன்முடிவுமில்லாமல் யதார்த்தமாக இருக்கும் வெளியைக் காட்டும் தன்மையை அ.மாதவனின் சிறுகதைகளில் பார்க்க முடிந்தது. ஒரு படைப்பிலக்கியவாதியை அவரின் படைப்பில் வருகின்ற மனிதர்களின் சிக்கலான உளவியலை நம்முடைய நியாயங்களைக் கொண்டு விவாதிக்கின்ற தன்மையிலிருந்து விலகி முதலில் அவருடைய புனைவுலகைத் தெரிந்துகொள்வதின்வழிதான் எதை அந்தக் குறிப்பிட்ட எழுத்தாளர் சொல்ல வருகின்றார் என்பதை நாம் விளங்கிக்கொள்ள முடியும் என்றார் ம. நவீன். சரி, தப்பிற்கு நடுவில் சாம்பல் பூத்த ஒரு நேர்கோடில்லாத பயணத்தில் ஒரு மனிதன் நல்லதைத் தக்கவைத்துக்கொள்ளும் முக்கியத்துவத்தையும் ஒரு படைப்பாளியின் முக்கியத்துவத்தையும் அ.மாதவன் புனைவுலகம் தெளிவுப்படுத்துவதாக ம. நவீன் விளக்கினார்.

சல்மா

முதல் சிறுகதையாக ‘நாயனம்’ கதையைக் குறித்து புஸ்பவள்ளி கலந்துரையாடத் தொடங்கினார். இறப்புச் சடங்கு ஒரு பிரிவைச் சுற்றி இருப்பவர்கள் ஏற்றுப் பழகிக் கொள்வதற்காக நடத்தப்படுகிறது. ஆனால் அந்தச் சடங்கே பொருளற்றுக் காத்திருக்கின்றபோது ஓர் அபத்தமாவதை இக்கதைக் காட்டுகிறது. கதை ஆரம்பமாகும்போதே இறந்து கிடக்கின்ற இவருக்குத் தெரியாது எனும்போதே அபத்தத்தொனி தொடங்குகிறது. இறந்தவர் கடைசி ஆசையாக வாத்தியம் வாசிப்பதற்கான காத்திருப்பு, சங்கடம், பசி, எரிச்சல், சலிப்பு, சோர்வு என்று கடக்க நேரம் அதிகமாகிக் கொண்டே போகிறது.  முதலில் அழுகை, சோகம் என்று ஆரம்பமாகி அதன்பின் சோகமே சாதரணமாகிறது; சாதரணமான சோகம் வம்பு பேச்சுக்குப் போகிறது. இப்படி ஒன்றொன்றாக மாறிக் கொண்டே வருவது அபத்தத்தின் மொத்த வடிவமாக நாயனத்தின் அபசுவரமாக வெளிப்படுகிறது என புஸ்பள்ளி கருத்துரைத்தார்.   

துயரத்திலிருந்து வெளிப்பட முடியாத மற்றவர்களால் ஆழ்ந்தும்போக முடியாமல் இருக்கின்ற நேரத்தில், தலையாறி மட்டும் அந்த நாயனத்தைக் கால் மூட்டில் உடைத்து ஆற்றில் போட்டு அபத்தத்தைப் போக்கி மற்றவர்களுக்கு நிம்மதியைக் கொடுக்கிறார் எனவும் அடிப்படையில் மனிதன் ஓர் உணர்ச்சிக்குள் சுழன்று கொண்டிருக்க முடியாமல் உணர்வு முரண்களுக்குள் இருப்பவன் என்றும் ஒரு துயரத்தை நிறுத்தி வைக்க செய்யப்படும் அபத்தமான முயற்சி சூழலிலிருந்து அவர்கள் வெளிப்படுவதாக அரவின் குமார் கருத்துரைத்தார். அதனைத் தொடர்ந்து, இந்தக் கதையின் மையமே இறப்பு. அந்த இறப்போடு சேர்ந்து வருகின்ற சடங்கினால் அந்த இறப்பு ஓரங்கட்டி வைக்கப்படுவதாக ரேவின் சொன்னார். அதோடு நாயனம் தேடி அலைவதென்பது இறந்தவருக்காக என்பதைவிட பிரக்ஞை நிலையுடன் இருக்கும் சுற்றி உள்ளவர்களுக்கு எந்தக் குற்ற உணர்வும் வந்து விடக்கூடாது என்பதைக் காட்டுவதாக ரேவின் மேலும் கூறினார். மனிதன் இறந்தப் பிறகும் நாயன வாத்தியம் வாசிக்கப்பட வேண்டும் என்று வருகின்ற சூழல் அவனுடைய ஆசை முடிவிலாது  தொடர்வதாக சாலினி பேசினார்.

சண்முகா

இதையொட்டி ம. நவீன் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது உண்மையாகவே அன்பு காட்டுகிறானா என்ற அடிநாதம் இந்தக் கதையில் இருப்பதாகச் சொன்னார். நாம் நம்பிக் கொண்டிருக்கின்ற விழுமியங்கள் மீது ஒரு கேள்வி எழுப்புகின்ற கதைகள் காலம் கடந்து நிற்கின்ற நிலையை அடைந்து விடுகிறது. இந்தப் படைப்பு திலிப் குமாரின் ‘எலி’ என்ற சிறுகதையோடும் குல்சரின் ‘ராவி நதி’ என்ற கதையோடும் ஒப்பிட முடிவதாக ம.நவின் குறிப்பிட்டார். பிறர் மீதான அன்பு, கருணையின் அளவீடென்பது நம்முடைய சொகுசு பாதிக்கப்படாத வரைதான் நிலைக்கிறது. மனிதன் உருவாக்கி வைத்த சடங்கு ஓர் அசாதரண அல்லது ஓர் எல்லையைத் தாண்டி போகின்ற தருவாயில் அந்தச் சடங்கையே தூக்கிப் போடக்கூடியவனாக ஆகிறான். அதோடு ஒரு தரித்திரம் பிடித்த போலியற்ற நாயன வாத்தியனின் கலை அழிந்து வருவதும் தனக்கு வாய்ப்பும் வசதியும் இல்லாது, பாழடைந்த நாயனத்தைக் கொண்டு வாசிப்பதும் ஒரு பலவீனமான தோற்றத்தைக் கொண்டவன் என்பதனாலேயே தலையாறியால் அடிக்கப்படுவது, நம்மிடம் உள்ள வன்மத்தை ஆக பலவீனமான, திரும்பவும் தாக்க முடியாத ஒருவனிடம் காட்டப்படும் கீழ்மையைக் காட்டுகின்றது என ஒரு மாற்றுப் பார்வையை ம. நவீன் முன்வைத்தார்.

இரண்டாவதாக ‘பூனை’ சிறுகதை குறித்து அபிராமி பேசினார். ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் சொல்லப்படாமல் இருக்கின்ற ஆதிக்கத்திலிருந்து விடுபட நினைப்பதும், திரும்ப குறைந்தப்பட்ச ஒழுக்கத்தோடு இருக்க மனைவியின் இருப்பு தேவைப்படுவதும் என இரு ஊசலுக்குள் இக்கதை நகர்வதைப் பார்க்க முடிகிறது. ஒரு கணவனுடைய வாழ்வில் எல்லா முடிவையும் மனைவியே எடுப்பதும், அந்த  எல்லாவற்றுக்கும் பின்னால் கணவன் அடங்கி இருப்பதும் அவனுடைய அன்றாட உணவிலிருந்து தொடங்குகிறதென அபிராமி சொன்னார். செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததும் என ஒரு நிர்ணயிக்கப்பட்ட பாதையில் கணவன் பின் தொடர்வதிலிருந்து விடுதலையைப் போல மனைவி ஒரு வாரம் ஊருக்குச் செல்கிறாள். மனைவி இல்லாத நேரத்தில் பக்கத்து வீட்டில் இருக்கும் லெட்சுமி நடத்தும் ஒரு பேச்சு விளையாட்டுக்குள் விழுவதும் மீண்டும் அதிலிருந்து விடுபட்டு குறைந்தப்பட்ச ஒழுக்கத்தோடு இருக்க தன் மனைவியின் ஆசையான பூனையின் கண்கள்வழி மனைவியை நினைவுக்கூர்வதெனத் தாவித் தாவி செல்கின்ற கணவனின் தடுமாறுகிற மனதைக் கதை காட்டுவதாக அபிராமி கூறினார். ஒரு மனிதனுடைய ஒழுக்கம், வாய்ப்பு கிடைக்காத அல்லது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குள் போகாதவரை அளவிட முடியாது என அபிராமி சொல்லி முடித்தார்.

சிவரஞ்சனி

கணவன் பூனையின் கண்கள்வழி மனைவியைப் பார்ப்பது, மனைவியின் உருவகமாக இருப்பதனால் பூனையின் மீதும் தன்னிச்சையாக ஒரு வெறுப்பு வருவதும் கிணற்றில் விழுந்துவிட்ட பூனையைக் காப்பாற்ற முயல்வதும் என மாறிமாறி வந்து கொண்டே இருப்பதாக அரவின் குமார் தெரிவித்தார். ஆனால் விஜயலட்சுமி, இந்தக் கதையைக் குறித்துப் பேசும்போது கணவனுக்குத் தன் மனைவியை எப்போதும் நினைவூட்டுகின்ற பூனையைக் கொல்கின்ற எல்லா வாய்ப்புகள் இருந்தும் அதைப் பிழைக்கவிட்டிருப்பது தன்னுடைய பெருந்தன்மையால்தான் என்ற  குரூர மனதைக் கணவன் கொண்டிருப்பதாகச் சொன்னார்.

இதையொட்டி ம. நவீன் இந்தக் கதையில் லெட்சுமியின் கதாப்பாத்திரம், மனைவி பூனையை வளர்ப்பது போல கணவனுக்கு எல்லா சந்தர்ப்பங்களுக்கான வாய்ப்புகளை வழங்குவது போலவும் பின் ஒன்றுமே நடக்காதது போலவும் ஒரு பாவ்லா செய்து விளையாடுகிறாள் எனச் சொன்னார். பக்கத்து வீட்டில் இருப்பவனுக்கு லெட்சுமி உணவு பரிமாறி இந்தச் சுவையைச் சுவைக்கக்கூடிய நாக்கு தன் கணவனுக்கு இல்லை என்றும் அதனால் உனக்குக் கொடுக்கிறேன் என்ற ஒரு அங்கீகாரத்தைக் கொடுப்பதும் அதே சமயத்தில் அவன் அருகில் வரும்போது நாசுக்காக நழுவிக் கொண்டு போவதும் என இரு தன்மையில் லெட்சுமி விளையாடிக் காட்டுகிறாள். உள்ளுணர்வில் தன்னைக் கண்காணிக்கின்ற கண்கள் இருந்தால் மட்டுமே தன்னைத் தான் பாதுகாத்துக்கொள்ள முடியுமென்பதும் அதற்காக கண்கள் தேவைப்படுகின்றது என்பதற்காக அவன் உருவாக்கிக் கொள்கின்ற பூனையின் இருப்பு அவசியமாக இருப்பதாக ம. நவீன் சொன்னார்.

ரேவின்

மூன்றாவதாக ‘புறா முட்டை’ சிறுகதையை ஆதித்தன் கலந்துரையாடினார். கன்னியப்பனின் முதன்மை தேவை பசியாகத்தான் இருக்கிறது. பசியைத் தாண்டி அவனுக்குள் இருக்கின்ற வன்மத்தைப் பேசுவதாகக் கதை இருக்கிறது. எப்பொழுதுமே கஷ்டப்பட்டு வேலை செய்து சாப்பிடுகின்றவனுக்கு அன்று காலையிலிருந்து அவனுடைய தேவைக்கு மேலே உணவு கிடைத்துக் கொண்டே இருகின்றது. வயிற்று விலா வலிக்கின்ற அளவுக்கு உணவு சாப்பிட்டவன் உறங்கும்போதும், கனவில் உணவு வந்து கொண்டே இருக்கிறது. வேலை ஆள் வந்து கூப்பிடும்போதுகூடப் போக வேண்டாம் என ஓய்வெடுக்கிறான் என்று கதையோட்டத்தின் நகர்ச்சியை ஆதித்தன் விவரித்தார்.

அடுத்து, அரவின் குமார் கதைச்சொல்லிக்கு ஏதோ ஒன்றைக் கொடுப்பவனாக இருக்கும் செல்லப்பா கதாப்பாத்திரத்தைக் குறித்து பேசினார். அவன்தான் அணில் இறைச்சி, சாகசமாக சிமிண்டு மூட்டையில் ஏறி புறா முட்டை எடுத்துக் கொடுக்கிறான். தன்னாலும் அவனைப் போல புறா முட்டை எடுக்க முடியும் என்ற ஒரு வன்மத்தைச் சவால் வடிவில் தனக்குள் ஏற்படுத்திக் கொள்கிறான் என்று அரவின் குமார் சொன்னார். பசி மட்டுமே பெரிய விசயமாக இருக்கிற ஒருவனுக்கு, அதை அடைகிறபோது அதைத்தாண்டிய ஒரு நிறைவின்மை வருகின்றது. அந்த நிறைவின்மையைப் போக்கும் முயற்சியில் புறா முட்டை எடுக்கும்போது புறா தாக்கி விழுகிறான் என அரவின் குமார் சொல்லி முடித்தார். விஜயலட்சுமி இந்தக் கதையைக் குறித்து பேசும்போது சொல்லப்பட்ட பசியை ஒரு கவனிக்கப்பட வேண்டிய உணர்வு நிலையாகப் பார்ப்பதாகச் சொன்னார். அவசியப்படுகின்றவர்கள் மட்டுமே அதாவது யாருக்கு காலணியைச் சரி செய்ய வேண்டுமோ அவர்களாகவே தன்னைத் தேடி வருகின்ற சூழல்; சுற்றியுள்ளவர்கள் தன்னைக் கவனப்படுத்துகிறார்கள் என்ற பிரக்ஞையை அவனுக்குக் கொடுக்கிறது. கவனப்படுத்தப்பட வேண்டியவனாக இருக்கின்ற மனநிலை, அவனை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதே புறா முட்டையை எடுக்க வைப்பதாக விஜயலட்சுமி கூறினார். அதையடுத்து ரேவின் பேசும்போது, அவன் இறந்து அவனுடைய இரத்தத்தோடு கூட உடைந்த முட்டை ஒட்டாமல் விலகித் தனியாக வழிகின்ற காட்சி மனிதனின் வன்மம் இறுதியில் எந்தப் பலனுமற்று இரண்டுமே பாழாகிப் போகின்ற அபத்தத்தைக் காட்டுவதாகச் சொன்னார்.

ம. நவீன்

ம. நவீனும் மனிதன் எதிர்மறைகளால் நிறைந்தவன் என்றும் வாய்ப்புகளால் நல்லவனாக இருக்கிறான் என்றும் பசி, காமம், வன்மம் இவை மூன்றும்தான் மனிதனைத் தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருப்பதாகச் சொன்னார். மனிதனுடைய உளவியல் இந்த மூன்றுக்கும் இடம்பெயர்ந்து கொண்டே இருப்பதால் ஒட்டுமொத்தக் குரலில் வலியுறுத்தப்படுகிற கூட்டுமன இலட்சியவாத கூக்குரல்கள் அமல்படுத்துவது அவ்வளவு சாத்தியமல்ல; ஒவ்வொரு மனிதனையும் அவனுலகத்திலிருந்து அவனைப் புரிந்து கொள்வது மூலமாக சக மனிதனை இன்னும் கொஞ்சம் மன்னிக்கப் பழகலாம். ஏனென்றால் மனித வாழ்க்கை ஒற்றைப்படைத்தன்மையில் இல்லாமல் பன்முகத்தன்மை கொண்டது. அதனைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை இந்தக் கதை வழங்குவதாக ம. நவீன் சொன்னார்.  அதோடு இந்தக் கலந்துரையாடலில் ஒரு நவீன வாசகனாக எப்படித் தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையையும் ம. நவீன் கூறினார். ஒரு நவீன வாசகன் விமர்சன மனதோடு இலக்கியத்தை வாசிக்க வரும்போது ஒன்றை வாசித்து அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் அதைக் குறித்துக் கேள்விகள் கேட்க வேண்டும். இப்படிக் கேட்கப்படும்போதுதான் கதை தன்னிச்சையாக திறந்து கொண்டு தன்னிலிருந்து நமக்கு வெளிப்படும் என்று தெளிவுப்படுத்தினார்.

இறுதியாக ‘பதினாலு முறி’ சிறுகதையைப் பற்றி சிவரஞ்சனி கலந்துரையாடினார். கதையில் வருகின்ற வீரய்யன், பார்வதி, அவளுடைய அப்பா என மூவரின் வாழ்க்கையிலும் மானம் என்ற உணர்வு அவர்களைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. இதில் மையப்பாத்திரமாக இருக்கின்ற வீரய்யன் தன்னுடைய சொந்த இயல்பை வெளிப்படுத்த முடியாத அளவிற்கு மானம் ஒரு சிறை போல அவனை வளைத்திருப்பதாக சிவரஞ்சனி விவரித்தார். முதலில் சித்திக்குப் பணிவிடை செய்வது, அப்பாவின் எல்லா சொல்லுக்கும் கட்டுப்படுவது, போலிஸ்காரர்களிடம் அடி வாங்குவது என இவற்றிலிருந்து விடுப்பட்டுத் தனியாக வாழ்வதும் பின் பார்வதியைத் திருமணம் செய்துகொள்வதும், பார்வதியை ஒருவன் வன்புணர்வுக்குட்படுத்துவதும் அதனால் அவள் தூக்கில் தொங்குவதும் எனக் கதை பல அடுக்குகளில் நகர்ந்தாலும் இவை எல்லாம் மானம் என்ற ஒன்றுக்குள் சுற்றி வருகிறது என மேலும் சிவரஞ்சனி பேசினார்.

அதைத் தொடர்ந்து அரவின் குமார், தன் மனைவியே இறந்த பிறகும் அந்தச் சோகத்தை விட, அடுத்து தான் சந்திக்கவிருக்கும் சங்கடங்களும் அவமானங்களும்தான் வீரய்யனுக்குப் பெரிய தொந்தரவாக இருப்பதாகவும் மானம் சுமையாகி, பின் தனக்கே சிறையாகின்ற ஒரு சூழலைப் பார்க்க முடிவதாக கூறினார். அதோடு பதினாலு முறி என்ற குடியிருப்பு இருட்டும் இல்லாத, பகலும் இல்லாத ஒரு மாட்டுத் தொழுவத்திற்குச் சமமான ஒரு குடிசையில் வாழ்கின்றவர்கள் எப்போதோ ஒரு பால்காரி யாருடனோ போனதைத் திரும்ப திரும்பப் பேசி மகிழ்கிறார்கள். பார்வதியின் அம்மா யாருடனோ ஓடிப் போனதை அப்பா சொல்லாமல் வளர்த்திருந்தாலும் ஒருவன் இவளைக் கைப்பிடித்து இழுக்கும்போதும் அந்தக் குடியிருப்பில் இருக்கின்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் அவளையே பரிகசிப்பது அந்தச் சமூகத்தின் குரூரத்தைக் காட்டுவதாக அரவின் குமார் குறிப்பிட்டார். நாம் எப்படியெல்லாம் விலகி மேல் வர நினைத்தாலும், திரும்பவும் நம்மைச் சகதியில் தள்ளி அதை  இன்பமாக்கித் திளைக்கிற சமூகக் குரூரத்தை இக்கதை வெளிப்படுகிறது என அரவின்  குமார் சொல்லி முடித்தார்.

 கதையின் முடிவு எதிர்மறையாக இருப்பதால், வாசகனை எதிர்மறையை நோக்கி செலுத்துவது இயல்புவாத கதையின் நோக்கமல்ல என்றும் அதன் வழியாக வாழ்க்கையைக் குறித்த வேரொரு பார்வையை முன்வைக்க எழுத்தாளர் இந்தச் சிறுகதைவழி கடத்துவதாக ம. நவீன் சொல்லி நிறைவு செய்தார். நம்மை நாம் அறிந்துகொள்வதற்கும் சுற்றி உள்ளவர்களைப் புரிந்துகொள்வதற்கும்  அ.மாதவன் சிறுகதைகள் உதவும் என்ற சிந்தனையோடு கலந்துரையாடல் மாலை ஐந்து மணிக்கு நிறைவுற்றது.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...