தமிழாசியா சந்திப்பு 21: மறக்கப்பட்ட முன்னோடிகள்

நூற்றாண்டு கடந்த தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரிரு கதைகளின் வாயிலாகவே நினைவுக்கூரப்படும் எழுத்தாளர்கள் பலர் உள்ளனர்.  அத்தகைய எழுத்தாளர்கள் குறைவான சிறுகதைகளே எழுதியிருந்தாலும் பங்களிப்பால் முக்கியமானவர்களாக மதிப்பீடப்படுகின்றனர்.  நவீனத் தமிழ்ச் சிறுகதை மரபுக்கு உரம் சேர்த்தவர்களாகவும் நினைவுக்கூரப்படுகின்றனர். தமிழ்ச் சிறுகதைகளின் சாரமான பகுதியை அறிந்துகொள்ளும் முயற்சியில் தவறவிடக்கூடாத முன்னோடி எழுத்தாளர்கள் சிலரின் கதைகள் குறித்தே கடந்த தமிழாசியா சிறுகதைக் கலந்துரையாடல் நிகழ்ந்தது. தமிழாசியா சிறுகதைக் கலந்துரையாடலில் எழுத்தாளர் எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் ‘மீன் சாமியார்’, ‘பொன்மணல்’ சிறுகதைகளும் எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் ‘சரசாவின் பொம்மை’ சிறுகதையும் எழுத்தாளர் க.நா.சுப்ரமணியத்தின் ‘தெய்வ ஜனனம்’ சிறுகதையும் கலந்துரையாடப்பட்டது.

முதலில் எம்.எஸ் கல்யாணசுந்தரத்தின் ‘மீன் சாமியார்’ கதையைக் குறித்துப் பேசிய சாலினி, பாமர மக்களின் நம்பிக்கையையும் பற்றையும் பயன்படுத்தி உருவாகும் சாமியார்களைப் பற்றி கதை அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டார். சாமியார்கள் மீது பாமர மக்களுக்கு நம்பிக்கை உண்டாக்க சாமியார் தோற்றம்கொள்ளும் சாம்பசிவம் மக்களின் ஆன்மீக நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொள்கிறார். அத்துடன், சாதாரண ஊசியாக இருந்த சாம்பசிவத்தைக் காந்த ஊசியாக மாற்றியது மக்களின் மூடநம்பிக்கைதான் என அவர் குறிப்பிட்டார். காலங்காலமாக மக்களிடம் உறைந்திருக்கும் ஆன்மீக நம்பிக்கையைப் பயன்படுத்தி உருவாகும் சாமியாரையே கதை சித்திரிப்பதாக சாலினி தன் புரிதலைச் சொன்னார். தொடர்ந்து, விளையாட்டைப் போல தொடங்கிய சாம்பசிவத்தின் சவால் மக்களின் நம்பிக்கையால் உண்மையாக மாறுவதை ரேவின் சுட்டிக் காட்டினார். அத்துடன் சாம்பசிவம் அக அளவில் அடைந்த மாற்றங்களைச் சாலினி வாசிப்பில் கண்டடைந்தாரா எனக் கேள்வியெழுப்பினார். மக்களின் நம்பிக்கையால் சாம்பசிவம் மாற்றம் பெற்றிருந்தாலும் உள்ளூர ஊசலாட்டம் கொண்டவனாகவே இருப்பதாக சாலினி தெரிவித்தார். அடுத்து பேசிய அரவின் குமார், மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க சாமியார் தோற்றத்தைப் புனைந்துகொள்ளும் சாம்பசிவத்துக்கே தனக்குள் ஏற்படும் ரசமாற்றத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றே கதையில் காட்டப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். துணி தைக்கும் ஊசி காந்த ஊசியாக மாறுவதற்குப் பின்னணியில் இருக்கும் மனித நம்பிக்கையையே கதை முன்னிலைப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.

சாலினி

அடுத்து பேசிய சல்மாவும் புஷ்பாவும் புற மாற்றங்களால் மக்கள் மெல்ல சாமியாரை நம்பத் தொடங்குவதைப் போல சாமியாரும் தனக்குள் ஏற்படும் அக மாற்றங்களால் சாமியார் என்னும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதையே கதை காட்டுவதாகச் சொன்னார்கள். ஆனாலும், சாமியார் என்னும் தோற்றமோ புரிதலோ சாம்பசிவத்திடம் இருப்பதாகக் கதையில் காட்டப்படவில்லை என்றார் புஷ்பா. அதைத் தொட்டுப் பேசிய எழுத்தாளர் ம. நவீன், இந்து மரபின் முக்கிய மெய்ஞானியர்களான நாராயணகுரு, வள்ளலார் எனப் பலரும் எளிய மனிதர்களுக்குத் தொண்டாற்றும் பணியிலிருந்தே உருவாகினர். சாம்பசிவமும் எளியவர்களுடன் இருந்து தொண்டாற்றுவதைக் குறிப்பிட்டுக் காட்டினார்.

அடுத்ததாக பேசிய எழுத்தாளர் விஜயலட்சுமி, எந்தப் பிரம்மாண்டமான அல்லது அறிவுப்பூர்வமான காரணங்களோ இல்லாமல் பொருளற்றுக் கூட மனித நம்பிக்கை முளைவிடக்கூடும். ஆனால், மெல்ல நம்பிக்கை வளர்ந்து மனதுக்குள் செலுத்தும் மாற்றங்களையே கதை பேசுவதாகக் குறிப்பிட்டார். அடுத்துபேசிய சண்முகா, இயல்பாகவே மீனவர்களுக்குத் தேவையாக இருந்த வழிகாட்டியின் இடத்தைத் தன் அற்புதச் செயல்களால் சாம்பசிவம் நிகழ்த்திக் காட்டுகிறார், அந்த மாற்றத்தை நிகழ்த்திக் காட்டும் கருவியாகவே கதையில் நம்பிக்கை பயன்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

விஜயலட்சுமி, அபிராமி, ஆதித்தன்

மக்களிடையே இருக்கும் பாமர நம்பிக்கையைத் தன் சாமியார் தோற்றத்தால் சாம்பசிவம் வளர்ப்பதாகத்தான் தன்னால் கதையை அணுக முடிந்ததாக சிவரஞ்சனி சொன்னார். பக்தர்கள் வைத்த நம்பிக்கை சாம்பசிவத்துக்கு ஞானத்தை வழங்கியதாக தயாஜி குறிப்பிட்டார். தன்னுடைய இடத்தை இன்னொருவர் நிரப்பினால் மக்களின் நம்பிக்கையை முறைகேடாகப் பயன்படுத்தக்கூடும் என்ற அச்சத்தாலே சாம்பசிவம் தன் சாமியார் தோற்றத்தைத் துறக்க தயங்குவதாக அபிராமியும் தயாஜியும் குறிப்பிட்டனர்.

கதையைப் பற்றிய எண்ணங்களைத் தொகுத்துக் கூற தொடங்கிய எழுத்தாளர் ம. நவீன், கதைகள் குறித்து தனிப்பட்ட பார்வையும் புரிதலையும் முன்வைப்பதென்பது எல்லாவித கதைகளுக்கும் பொருந்துவதில்லை என்றார். கதையில் இல்லாத ஊகங்களைக் கொண்டு வாசகன் ஒரு கதையைத் தன் தேவைக்கு ஏற்ப வளைப்பது கதைக்குச் செல்லும் நியாயமில்லை என மீன் சாமியார் கதையில் இருந்து உதாரணம் காட்டிப் பேசினார். கதையின் தொடக்கத்தில் சாதாரண துணி தைக்கும் ஊசியாக இருந்த தான் மக்களின் நம்பிக்கையால் திசைக்காட்டும் காந்த ஊசியாக சுமையேற்றப்பட்ட வாழ்வை ஏற்றுக்கொண்டதைச் சாம்பசிவம் புகாராகக் குறிப்பிடுகிறார்.  இனிமேல் உலகியல் கடமைகள் விடுத்து திசைகாட்டும் பொறுப்பு தமக்கு வந்து சேர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். ஆனால், கதையின் முடிவில் அவர் புகாராக முன்வைத்த இடத்தை அவர் அடைந்திருக்கும் ஞானக் கண்டடைவாகச் சொல்லப்படுகிறது. இம்மாதிரியாகக் கதையில் குறிப்பிடப்படும் முக்கியமான வரிகளை வாசிப்பில் தவறவிடாமல் இருக்கின்ற போதே கதையின் ஆன்மாவை நெருங்க முடியும். அதோடு, தனிப்பட்ட புரிதலில் எழும் பிழைப்புரிதல்களையும் களைய முடியும்.

அடுத்ததாக, சாமியார் நிலையை வந்தடைய சாம்பசிவம் அளித்தவற்றையும் இழந்தவற்றையும் கருத்திற்கொள்ள வேண்டுமென்றார். அரசுத்துறையின் வரி வசூல் பணியிலிருந்து விலகி குடும்பத்துக்குத் தேவையான சுமாரான ஏற்பாடுகளைச் செய்தே சாமியார் என்னும் நிலையில் சாம்பசிவம் நிற்கிறான். தனக்கு வரும் காணிக்கைளையும் மக்களுக்கே திரும்பத் தரும் ஏற்பாடுகளைச் செய்கின்றான். ஆக, இதனைக் கருத்தில்கொள்ளும் போதுதான் சாமியாராகச் சாம்பசிவம் அடைந்திருக்கும் அக மாற்றங்களை அறிந்துகொள்ள முடியுமென்றார். மக்களின் நம்பிக்கைகளைக் கேலிக்குள்ளாக்கிச் சாமியார் தோற்றத்தைத் தரித்த சாம்பசிவம் கதையின் முடிவில் அந்தத் தோற்றத்திலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கிறான். பாமர மக்களின் சூழலும் அவர்களின் நம்பிக்கையும் அவனுள் இரக்கத்தைத் துளிர்க்கச் செய்து அவனில் ஆன்மீக உச்சநிலையை அடையச் செய்கிறது. மக்களின் பக்தியைக் கொண்டு சலுகைகளை அனுபவிக்காமல் அவர்களின் அன்புக்குப் பாத்திரமாகி வெளியேற முடியாமல் தவிப்பவனின் தவிப்பு ஆன்மீக நிலையின் உச்சமென்றே தான் கருதுவதாக ம. நவீன் குறிப்பிட்டார். அத்துடன், கதையின் ஒட்டுமொத்தத்தை அணுகாமல் தனிப்பட்ட நியாயங்களையும் காரண விளக்கங்களையும்  முன்வைக்கும்போது கதை தன் தரிசனத்தைக் காட்டத் தவறிவிடுவதையும் சுட்டிக் காட்டினார்.

புஷ்பவள்ளி

இரண்டாவது கதையான சி. சு. செல்லப்பாவின் ‘சரசாவின் பொம்மை’ சிறுகதை குறித்து ரேவின் பேசினார். ஐந்து வயதே நிரம்பிய சரசா அந்த வயதுக்குரிய கள்ளமின்மையுடன் கதைசொல்லியை உச்சமாக உரிமை கொள்ள திருமணம் புரிந்து கொள்வதாகச் சொல்கிறாள். ஆனால், காலமாற்றத்தில் சரசாவின் உரிமை கொண்டாடல் மறைந்து அசட்டுத்தனமும் எரிச்சலும் அவளுக்குள் ஏற்படுகின்றன. அந்த உணர்வு மாற்றத்தை உணர்ந்து கொள்கின்றபோது கதைசொல்லி அடையும் ஏமாற்றத்தையே கதை பேசுவதாக ரேவின் குறிப்பிட்டார். ஒருவகையில் அதைச் சரசாவின் மனதுக்குள் இருந்த தன்னுடைய தோற்றம் விளையாட்டுப் பொம்மையைப் போல எங்கோ மறக்கப்பட்டிருப்பதன் ஆணவச்சீண்டலாகவும் காண முடிவதாகக் குறிப்பிட்டார்.  எவ்வித மிகையுமின்றி நிதானமான நடையில் காலமாற்றமும் அதனூடே சரசாவுக்கும் கதைசொல்லிக்கும் நிகழ்ந்திருக்கும் மாற்றமும் கதையில் காட்டப்பட்டிருக்கிறது. அடுத்ததாக சிறுவர்களின் உளவியல் கோணத்திலிருந்து அணுகும்போது சிறுவர்களின் அகவுலகில் பெரியவர்கள் என்னவாக உருமாறுகிறார்கள் என்பதையும் கதை காட்டியிருப்பதாகக் குறிப்பிட்டார். பெரியவர்களைப் போலவே சிறுவர்களின் அகவுலகிலும் பெரியவர்களுக்கென்று தனித்த பாத்திரங்கள் இருக்கின்றன. அடுத்த நொடியே விருப்பத்திற்குரிய ஒன்று வெகு அந்நியமாவது சிறுவர்களின் அகவுலகில் எளிதில் நிகழ்ந்துவிடுகிறது. அந்த மாற்றத்தைப் பெரியவர்களின் கண் கொண்டு பார்க்கும்படி கதை காட்டியிருக்கிறதென ரேவின் கதை குறித்த தன் புரிதலைச் சொன்னார். குழந்தைகளுடன் பழகும்போது பெரியவர்களுக்குள்ளும் இருக்கும் குழந்தைமைத் தூண்டப்படுவதைக் கதை காட்டியதாக தயாஜி குறிப்பிட்டார். அந்தக் குழந்தைமையை மனதுக்குள் தேக்கி வைத்துக் கதைசொல்லி ஏமாறுவதாகவும் சொன்னார். சரசாவுக்கு விளையாட்டுப் பொம்மையைப் போல கதைசொல்லியை மாற்றிவைக்கப்படுகிறார். ஆனால், உள்ளூர அந்தச் சூழலினால் கதைசொல்லியே தாக்கம் அடைவதாக சிவரஞ்சனி குறிப்பிட்டார்.

உறவினர்களும் ஊராராலும் பொறாமைப்படும்படியாகக் கதைசொல்லி சிறுமி சரசாவுடன் விளையாடுவதாகக் கதையில் சொல்லப்படுகிறது. ஆனால், பின்னாளில் தான் சிறுமி சரசாவுக்கு அசையக்கூடிய விளையாட்டுப் பொம்மையாக மாற்றப்பட்டிருக்கிறோம் எனக் கதைசொல்லி உணரக்கூடிய அந்தரங்கமான வலியைக் கடத்தும் இடமே கதையில் முக்கியமானது என ம. நவீன் கதை குறித்து தன் பார்வையை முன்வைத்தார்.

அடுத்து, எழுத்தாளர் கல்யாணசுந்தரத்தின் ‘பொன்மணல்’ சிறுகதை குறித்து அரவின் குமார் பேசினார். கதையின் தொடக்கத்தில் மணலிலிருந்து பொன்னைப் பிரித்தறிய முற்படும் பேராசிரியர் வேணுகோபால் முடிவில் அதை அப்படியே இருக்க விடுகிறார். அதற்குக் காரணமாக அமைவது, உள்ளூர பொன்மணலை அறிவதைக் காட்டிலும் மகத்தானது ஒன்றைத் தனக்குள் அறிந்து கொண்டமையாலே என அரவின் குறிப்பிட்டார். லட்சியவாதியாகக் காட்டப்படும் வேணுகோபால் பொருளியல் பலன்கள் மீது அதிக விருப்பமில்லாதவராகவே காட்டப்படுகிறார். அவரை இயக்கும் விசையாக அவரின் அறிவே விளங்குகிறது. அந்த அறிவைக் கொண்டு மற்றவர்களுக்குப் பயன் தர முயல்கிறார். அந்தப் பயணத்தில்தான் பொன்னைக் கண்டடைகிறார். அந்தப் பொன் அகலப்பட்டால் உருவாகும் அழிவையும் மக்களின் அவலவாழ்வையும் கருத்தில்கொண்டு அம்முயற்சியைக் கைவிடுகிறார். அறிவும் அதன் வழியாக மற்றவர்களுக்குப் பயன் தரும் முயற்சியில் கண்டடையும் உன்னதமொன்றையே கதை காட்டுவதாகக் குறிப்பிட்டார். அதே சமயத்தில் கதை எழுதப்பட்ட காலக்கட்டத்தையும் கருத்தில்கொண்டு பார்க்கும்போது அதன் முக்கியத்துவம் புலப்படுகிறது. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காலனிய ஆட்சியாளர்களால் ஆசிய நாடுகளுக்குப் பரவும் அறிவியல் தொழிற்நுட்பம் சேர்க்கும் நேர்நிலை மாற்றங்கள் குறித்த நம்பிக்கைகள் எங்கும் இருக்கின்றன. அந்தச் சூழலில் கதைக்குள் தொழிற்நுட்ப மாற்றங்கள் கொண்டு வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வையும் சூழியல் அழிவையும் கதை பேசியிருப்பதை அரவின் சுட்டிக் காட்டினார்.

சுரங்கப் பணிகள் ஏழை விவசாயிகளுக்குக் கொண்டு வரும் இழப்புகளைக் கதைசொல்லி முன்னிலைப்படுத்துவதாக சண்முகா குறிப்பிட்டார். மண்ணில் இருக்கும் பொன்னைக் கண்டடைந்தால் தான் பணக்காரனாகலாம் எனப் பேராசிரியர் வேணுகோபால் எண்ணுகிறார். ஆனால், அப்படியான முயற்சியால் ஏழை விவசாயிகள் பாதிப்புறக்கூடும் என்பதால் கனிமப்படிவக் கற்களை ஆற்றில் எறியும் காட்சி உச்சமாக இருந்ததாக ஆதித்தன் குறிப்பிட்டார். அந்தக் கடைசித்தருணமே விஞ்ஞானியிலிருந்து மெய்ஞானியாக மாறும் அவரின் பரிணாமத்தைக் காட்டியதாக லாவண்யா குறிப்பிட்டார். சுரங்கத்திலிருந்து அகலப்படும் கனிமவளங்கள் பெருமுதலாளிகளுக்கே செல்வத்தைச் சேர்க்கும் சூழலை எழுத்தாளர் கதையில் முன் உணர்ந்து சொல்லியிருப்பதாக மோகனா குறிப்பிட்டார். புதுமைகளை நோக்கிப் பயணப்படும் விஞ்ஞானி மக்களை நோக்கிச் சிந்திக்கும்போது அடையும் அக மாற்றங்களையே கதை காட்டியிருப்பதாக ம. நவீன் சொன்னார்.

ம. நவீன்

மேலும், எழுத்தாளர் கல்யாணசுந்தரத்தின் கதைகள் குறித்து மலேசியத் தமிழ்ச்சூழலில் நிகழும் முதல் கலந்துரையாடலாக தமிழாசியா கலந்துரையாடலே இருக்கக்கூடுமென்றார். தமிழ் விக்கி தளத்தில் எழுத்தாளர் கல்யாணசுந்தரத்தின் வாழ்வையும் இலக்கியப் பங்களிப்பையும் எழுதும்போதுதான் அவரின் படமே தேடிக் கண்டடையப்பட்டது. அவருடைய கதைகளும் கூட நெருங்கிய நண்பரின் சேமிப்பில் இருந்த கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டே தமிழினியால் பதிப்பிக்கப்பட்டது. அவருடைய முழுத் தொகுப்பையும் நாவல்களையும் நண்பர்கள் தேடிக் கண்டடைந்து வாசிக்க வேண்டுமெனவும் ம.நவீன் கேட்டுக்கொண்டார்.

அடுத்ததாக, க.நா.சுப்ரமணியத்தின் ‘தெய்வ ஜனனம்’ சிறுகதை குறித்து லாவண்யா பேசினார். கலைஞர்களின் கண்களுக்குக் கலையின் வாயிலாகவே தெய்வ ஜனனம் எவ்வாறு நிகழ்கிறதென்பதையே தெய்வ ஜனனம் சிறுகதை காட்டியிருப்பதாக லாவண்யா குறிப்பிடுகிறார். கலை குறித்து அகத்தேடல் கொண்ட காமரூபத்துச் சிற்பியான வசுதேவனின் கண்களுக்கே இருளில் மறைந்திருக்கும் மகத்தான சிலையின் தரிசனம் கிடைக்கிறது. தன்னுடைய தியானத்தின் வழி ஞானி அடையும் தரிசனத்தை வசுதேவனால் சிலையின் நுட்பங்களைக் கண்டறிவதன் வழி அடைய முடிகிறது என இறையனுபவத்தைக் கலையின் வழியும் அடைவதையும் காட்டுவதாகக் குறிப்பிட்டார். மகத்தான கலைகளின் முன் தன்னகங்காரம் அழிந்து நிற்கும் கலைஞனையும் கதை சித்திரித்திருக்கிறது. அதே வேளையில் கதையின் புறச்சித்திரிப்புகள் அழுத்தமற்று இருந்ததாகவும் லாவண்யா சொன்னார். அடுத்துபேசிய அரவின், மொழி, பண்பாட்டு வேறுபாடுகளைத் தாண்டி கலைஞர்களால் நல்ல கலையை அடையாளம் காண முடிகிறதென்றார். அதோடு, எழுத்தாளர் க.நா.சு தமிழின் முக்கியமான விமர்சன மரபான அழகியல் விமர்சனத்தின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். ஆகவே, வெவ்வேறு கலைப்பார்வைகள் கொண்டவர்கள் ஒரு கலையைப் புரிந்துகொள்வதையே க.நா.சு கதையில் காட்டியிருக்கக்கூடும் என்றார். அதன் வாயிலாகவே, மேன்மையான இடத்துக்கு அச்சிலை செல்கிறது என்றார்.

அடுத்துப் பேசிய சல்மா, உலகியல் வாழ்வின் பற்றுகளைத் துறந்த பதஞ்சலி யோகிக்கே நுட்பமான சிலையைக் காணும்போது ஆழ்ந்த கலையுணர்வு ஏற்படுகிறது எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய விஜயலட்சுமி கலையுணர்வு கொண்டவர்களுக்கு மட்டுமே தன்னைத் திறந்து காட்டுவதாகக் கலை அமைந்திருப்பதாகக் கதையில் காட்டப்பட்டிருப்பதைச் சொன்னார். ஒவ்வொரு பண்பாட்டின் முகமாகவே வெவ்வேறு பண்பாட்டைச் சேர்ந்த சிற்பிகளைக் கதையில் காண முடிவதாகச் சொன்னார். அதைப் போல எதிர்மறையாகச் சொல்லப்படும் அசுரக்குலத்தைச் சேர்ந்த மயன் என்னும் சிற்பியால் கூட தெய்வாம்சம் பொருந்திய சிலையை வடிக்க முடிவதென்பதால் கலைஞன் குறித்த பின்னணியைத் தாண்டியதாகக் கலை அமைகிறதென்றார். தொடர்ந்து கதை குறித்து பேசிய ம. நவீன் இக்கதையைக் கொண்டு படைப்பிலக்கியத்தைக் கூட மதிப்பீட முடிவதாகக் குறிப்பிட்டார். தன் மரபில் இருக்கும் தெய்வத் தோற்றத்தையே யவன நாட்டுச் சிற்பி எவ்வித வேறுபாடுமின்றி வடிக்கின்றான். அடுத்து, நேபாள நாட்டுச் சிற்பி புனைவாக ஒன்றைச் சிலையில் வடிக்கின்றான். நடராஜர் சிலையைக் கண்டடைந்த வசுதேவனோ அரூபமான கருத்துவமொன்றைச் சிலையில் வடிக்க முயன்றிருக்கிறான்.  அவனுடைய சிலையின் வாயிலாக சொல்ல முடியாத உணர்வொன்றைக் கடத்த முயல்கிறான்.  அவனே கலைஞனுக்கான இடத்தைக் கண்டடைபவனாகவும் இருக்கின்றான். அத்தகையவனாலே உன்னதமான கலையைக் கண்டடையவும் முடிகிறது. இந்தச் சூழலைக் கொண்டு படைப்பிலக்கியத்தையும் அணுக முடிகிறது. மரபின் பிரதியாக மட்டுமே நின்றுவிடக்கூடிய படைப்புகள், சிறிய தேடுதலை முன்வைக்கும் படைப்புகள், அரூபமான கலைத்தன்மை கொண்ட படைப்புகள் ஆகிய வெவ்வேறு தன்மையிலான கலையைப் படைத்தவர்கள் கதைக்குள் வருகின்றனர். அபாரமான நடராஜர் சிலையை வியப்பவனாக மட்டுமே மரபைப் பிரதியெடுக்கும் கலைஞன் அமைகிறான். சிலையின் கட்டுமான நுட்பத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் மட்டுமே இன்னொருவனிடம் இருக்கிறது. ஆனால், கலையுணர்வு கொண்ட ஒருவனுக்கு மட்டுமே சிலையின் நுட்பங்கள் புரியப்படுகின்றன.

அரவின் குமார்

மூடுபனிக்கு மத்தியில் தீப்பிழம்பைப் போல சிலை இருந்தது என்றும் எந்நேரமும் நடனமாடச் சித்தமான நிலையில் சிலை இருப்பது போன்ற வர்ணிப்புகள் கதையில் அபாரமாக இருந்தது. படைப்பாளன் கைவிட்ட பிறகும் ஒரு மகத்தான கலை தனக்கான இடத்தைத் தானே அடைவதைத்தான் ‘தெய்வ ஜனனம்’ சிறுகதையில் க.நா.சு காட்ட முயல்வதாக ம. நவீன் சொன்னார். அடுத்ததாக, ஒரு மகத்தான வாசகன் அல்லது பார்வையாளனால் கலை தனக்கான இடத்தை அடைவதையும் பதஞ்சலி முனிவர் பாத்திரம் வாயிலாக அறிய முடிகிறது. ஒரு கலையை அணுகும் பார்வையைக் கதையின் வாயிலாக மிக எளிமையாகக் க.நா.சு கடத்தியிருக்கிறார் எனச் சொல்லித் தன் பார்வையை நிறைவு செய்தார்.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...