
புத்தகங்கள் எதையோ மறைக்கின்றன
நூலக நகரம் என்றொரு பெயரும் இந்நாட்டுக்கு உண்டு
வட்டாரத்துக்கு ஒரு வசதியான நூலகம்
வண்ணப் படங்களும் காட்சிகளும் விளையாட்டுமாக
புத்தகங்களோடு பிள்ளைகள்
“இங்கு யாரும் இலக்கியம் வாசிப்பதில்லை” என்றார் எழுத்தாளர்
கினோக்குனியா புத்தகக்கடை மூன்றாவது கிளையைத் திறந்தது.
“இந்நாட்டு மக்கள் புதிதாக வரும் எதையும் வாங்குவார்கள்” என்றார் அவர்.
அவருக்கும்
நூல்களை மக்கள் பரிசளித்தார்கள்
***
போர்நிகர் உலகம்
சிவந்த கண்களோடும் திரிகிறார்கள் பிள்ளைகள்
பேசுவதில்லை கேட்பதில்லை
சாப்பிடுவதுமில்லை
சொல் அவர்களை வதைக்கிறது
உருண்டு வந்த பந்தைக் கண்டதும்
வென்று, தோற்று திளைத்திருக்கும் அவர்களின்
கால்கள் நடுங்குகின்றன
***
இப்படித்தான் ஆகிவிடுகிறது எல்லாமே
நீலப் பெரும் நிலவு அன்றைக்கு
முழுதாய் பார்க்க
விளக்கில்லாத இடம் தேடி
நடந்து நடந்து இருள் கரைந்தே போனது
வானமெங்கும் பரவி நீலம் வெளிறி விட்டது.
***
கடல் தூக்கம்
கடல் தூங்குதா என்றாள் சிறுமி
இல்லையே என்றேன்
இல்ல தூங்குது, அசையாம இருக்கு பார் என்றாள்
அங்கே பார் அலை என்றேன்
அலையின்னா பெரிசா இருக்கும், அது கடலோட மூச்சு என்றாள்
அப்போ கடல் உயிரோடு இருக்கு என்றேன்
இல்ல அது தூங்குது என்றாள்
“கடல் தூக்கம்” நல்ல கவிதை. குளிர்கால காலை நேர கடலை கண்முன் காட்டியது.