1

2023ல் நித்யவனத்தில் நிகழ்ந்த குரு நித்யா காவிய முகாமில் நீலி இதழாசிரியரும், எழுத்தாளருமான ரம்யாவுக்குப் பெண்ணெழுத்து சார்ந்து ஓர் அமர்விருந்தது. அதில் ரம்யாவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி “நீங்கள் பெண்ணெழுத்தை முதன்மையாக வைத்து பத்திரிகை தொடங்கியிருக்கிறீர்கள், அதற்கு ‘நீலி’ என்ற ரத்தம் குடித்துக் கொல்லும் நாட்டார் தெய்வத்தின் பெயரை வைக்க காரணம் என்ன?” என்பதாக இருந்தது.
அதற்கு எழுத்தாளர் ஜெயமோகன் பதில் சொன்னார். அதாவது நீலி, யட்சி, இசக்கி என நாம் இன்று குறிப்பிடும் தெய்வம் இன்றிருக்கும் நிலையில் வரலாறு நெடுக இல்லை. இசக்கி அல்லது இயக்கி எனக் குறிப்பிடப்படும் இத்தெய்வம் சமண மதத்தில் தீர்த்தங்கரர் ஒவ்வொருவருக்கும் காவல் தெய்வமாக (சாசனா தெய்வங்கள் என சமண மதத்தில் யட்சன், யட்சியை குறிப்பிடுவார்கள்) உள்ளது. பௌத்தத்தில் இசக்கி வழிபாட்டிற்கு நிகரான பெண் தெய்வங்கள் உள்ளன (நாமறிந்த தாராதேவி அப்படியொரு உருவப் பண்பு அமைந்த தெய்வம் தான். தாரா – அழகிற்கான தெய்வமாகவும், அவலோகீதேஸ்வரரின் சக்தியாகவுமே கருதப்படுகிறாள்). அந்த சாசனா தெய்வமான நீலியையே ரம்யா தன் இதழின் பெயராக வைத்துள்ளார் என்றார். அது ஒரு வரலாற்றுப் பார்வை. வரலாற்று பரிணாமத்தை ஒரு கோடு மூலம் தொட்டுக்காட்டும் முயற்சி.
ஆய்வாளர் வெ. வேதாசலம் அவர்கள் தன் எம்.எட் பட்டப்படிப்பாக எழுதிய நூல் ‘இயக்கி வழிபாடு’. பக்க அளவில் மிகச்சிறிய நூல். ஆனால் அதனைப் படித்து முடித்த போது என்னுள் எழுந்த எண்ணம் என்பது மேலெழுந்த கேள்வி போல் நாம் ஒரு தெய்வத்தை இன்று நமக்குக் கண்ணெதிரே காணக்கிடைக்கும் நிலையிலேயே வைத்து மட்டுமே புரிந்துக் கொள்கிறோம் என்பதே.
உண்மையில் வரலாற்று ரீதியாக ஒன்றைப் புரிந்துகொள்ள 21 ஆம் நூற்றாண்டில் பல துறைகளின் அடிப்படை புரிதல் தேவையாகிறது. மேலே சொன்னவற்றில் கூட சமூகவியல் ரீதியான பரிணாமத்தை ஒருவர் புரிந்துகொள்ளாமல் பண்பாட்டு ரீதியான ஏற்றத்தாழ்வைப் புரிந்துகொள்ள முடியாது.
நம் தமிழ் சமூகம் வரலாற்றுக்கு முந்தைய காலக்கட்டத்திலும், சங்க காலமான வரலாறு தொடங்கும் காலத்திலும் எப்படி இருந்தது? தனித்தனி பழங்குடிகளின் கூட்டமைப்பே சமூகங்கள். தமிழ் இலக்கியத்தில காணக்கிடைக்கும் உதாரணங்களை வைத்துப் பார்த்தால் சங்க காலத்தில் நாடு எனக் குறிப்பிடப்படுவது மக்கள் வாழ்கின்ற இடங்களை மட்டுமே. அவ்வாறு வாழாத இடங்கள் மலை, காடு, பள்ளம், மேடு என்று கூறப்பட்டிருக்கின்றன. இதனை வெ. வேதாசலமே தன் ‘பாண்டியநாட்டு வரலாற்று முறை சமூக நிலவியல்’ நூலில் கல்வெட்டு, இலக்கிய ஆதாரங்கள் மூலம் குறிப்பிடுகிறார். அப்போது ஒரு நாடு என்பது ஒரு பழங்குடிக் குழு மட்டுமே.
சங்ககாலத்தில் காணப்படும் தெய்வங்கள் என்பது அந்தந்த குழுக்களுள் எழுந்த வழிபடும் கடவுள் மட்டுமே. எனவே அக்காலகட்டத்தில் எண்ணற்ற தெய்வங்கள் தோன்றின.
வெ. வேதாசலம் தன் நூலை இந்தப் புள்ளியிலிருந்தே தொடங்குகிறார். அவரது மொத்த ஆய்வும் சமூகவியல் பார்வைக் கொண்டது. இந்நூலும் அப்பார்வையிலேயே அணுகுகிறார். நாம் முதலில் இயற்கையின் ஆற்றலையே தெய்வமாக வழிபடத் தொடங்கினோம். அதனாலே நமக்கு மலைகளை வலம் வருதல் வழிபாடாகவும், நாகங்கள் எல்லா மரபிலும் முக்கிய தெய்வமாகவும் இன்றும் உள்ளது.
அதே போலவே ஒரு சமூகம் அந்த ஊரின் மையமான பகுதியிலுள்ள முக்கியமான மரத்தைத் தெய்வமாக வழிபடும் வழக்கமும் உள்ளது. அக்காலத்தில் ஊர் பொது மரத்தில் குடிக்கொள்ளும் தெய்வம் வளம் பெருக்கும் என்றும், செல்வம், குழந்தைப்பேறு, உடல்நலம் காக்கும் என்றும் வழிபடப்பட்டது. இதுவே இயக்கன், இயக்கி வழிபாடாக நாட்டார் மரபில் தோன்றியிருக்க வேண்டும் என ஆசிரியர் முன்வைக்கிறார். இதில் தமிழ் நிலத்தில் இயக்கன் வழிபாடு அருகிய நிலையிலும், இயக்கி வழிபாடு பரவலாக இருந்ததற்குச் சான்றுகள் பல கிடைக்கின்றன.
இவ்வியக்கன், இயக்கி பற்றிய முதல் இலக்கிய ஆதாரம் அதர்வ வேதத்தில் காணக் கிடைக்கிறது. மனிதர்களைக் கவர்ந்திழுத்துத் தன்னை வணங்க வைக்கும் தன்மை கொண்டிருந்த தெய்வத்தைப் பற்றிய குறிப்பு அதர்வ வேதத்தில் உள்ளது.
தமிழில் சங்க இலக்கியத்தில் இயக்கி என நேரடி பெயர் கொண்டிருக்கும் தெய்வத்தின் குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சூலி, சூர்மகள், சூரரமகளிர், வரையரமகளிர், கடல்கெழுசெல்வி, கானமர்செல்வி, பாவை, அணங்கு என இன்று பெரிதும் வழிபாட்டிலில்லாத வேறு வேறு தெய்வங்கள் உள்ளன. இவற்றில் இயக்கி தன்மை வெளிப்படுவதை ஆசிரியர் தன் நூலில் ஆராய்கிறார்.
உதாரணமாக, பத்துப்பாட்டு தொகை நூலில் ஒன்றான மதுரை காஞ்சியில் வரும் ஒரு சித்திரத்தை விவரிக்கிறார். அதில் மதுரையிலுள்ள நெடிய கோட்டை சுவரில் புடைப்புச் சிற்பமாக உள்ள அணங்கு, நோயை வரவைக்கும், தீங்கு விளைவிக்கும் தெய்வமாக வருகிறாள். அவ்வழியே செல்பவர்களைக் கவர்ந்திழுக்கும் உருத்த நோக்குக் கொண்ட விழிகளைக் கொண்டிருக்கிறாள். அவளைக் குளிர்விப்பதற்காக அவள் மேல் நெய் எறியும் சடங்கு உள்ளது. அணங்கு நோயைத் தீர்க்க வேலன் வெறியாட்டு நிகழ்த்தப்படுகிறது.
அதே தன்மை கொண்ட தெய்வம் பாவை. பாவை என்னும் ஓவியமாக வரையப்பட்ட அழகிய பெண் தெய்வமாக வழிபடும் மரபைப் பற்றி அகப்பாடல் ஒன்று பகைவர் ஊரில் வெயில்பட்டு, மழையால் நனைந்து வழிபட முடியாத நிலையிலிருக்கும் நிலையைச் சித்தரிக்கிறது. பெண் பாவையை நீர்நிலை காவல் தெய்வமாக கருதும் வழக்கமும் இருந்துள்ளது. இந்தத் தெய்வத்தின் சித்திரமே பின்னாளில் திருப்பாவை, திருவெம்பாவை போன்ற சமய நூல்களிளும் வருவதை வேதாசலம் குறிப்பிடுகிறார். அதே நேரத்தில் சிலப்பதிகாரத்தில் பாவை எனக் குறிப்பிடப்படுவது உக்கிரமான தெய்வத்தையே. பாய்கலைப் பாவை, பைந்தொடிப் பாவை, ஆய்கலைப் பாவை என கொற்றவை குறிப்பிடப்படுகிறாள். கொல்லிப்பாவை எனச் சொல்வது கொல்லும் தன்மை கொண்ட பாவையையே. கடல்கெழுசெல்வி கடலை காக்கும் தெய்வமாகவும், கானமர்செல்வி வனத்தில் அமர்ந்த தெய்வமாகவும் குறிப்பிடப்படுகின்றனர்.
2
சங்க காலத்திற்கு அடுத்த காலமென்பது அரசுகளின் உருவாக்க காலம். சமூகத்தில் நிலையான ஊர்களும், நாடுகளும், வேளாண் தொழிலைப் பிரதானமாகக் கொண்ட பிரிவுகளும் உருவாகி வரத் தொடங்கிவிட்டன. இக்காலகட்டத்தில் நாடு என்பதற்குப் பல ஊர்களை உள்ளடக்கிய ஒரு பிரதேசம் என்ற தெளிவான வரையறை உருவாகத் தொடங்கிவிட்டது. முற்காலப் பாண்டியர், பல்லவர், களப்பிரர் என சிற்றரசர்களைத் தாண்டி நிலையான பெரிய அரசுகள் உருவாகத் தொடங்கிவிட்டன.
இந்நேரத்திலேயே பேரிலக்கியங்களும், பெருநெறி மதங்களும் உருவாகி வரத் தொடங்கின. ஒரு சமூகம் நாட்டார்/பழங்குடி மனநிலையிலிருந்து வெளிவரத் தொடங்கிய உடனேயே அதிலிருந்து தொகுக்கும் தன்மையொன்று உருவாகி செவ்வியல் மரபொன்று உருவாவதன் சித்திரம் எழுகிறது.
உதாரணமாக, இக்காலகட்டத்திலேயே ஐம்பெருங்காப்பியங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. சிலப்பதிகாரம் அதற்கு முன்னர் கண்ணகிப் பாடலாக வேறு வேறு வடிவில் நாட்டார் மரபிலுள்ளதை நாட்டாரியல் ஆய்வாளர் அ.கா. பெருமாள் தன் ‘கேரளத்தில் கண்ணகி வழிபாடும் கொடுங்கல்லூர் கோவிலும்’ நூலில் முன்வைக்கிறார்.
எனவே எழுதப்பட்ட செவ்வியல் நூலென்பது அதற்கு முன்னர் பல்வேறு வகையில் பலநூறு பழங்குடி மரபில் சிதறிக் கிடந்த நாட்டார் பாடல்களின் தொகுதியே என சிலப்பதிகாரம் மூலம் அறிய முடிகிறது.
இதே போலவே தெய்வங்களும், மதங்களும். தெய்வங்கள் எல்லாம் ஒன்றிணையும் சமூகங்களால் தொகுக்கப்படுகின்றன. அதனை மதங்கள் தங்களுக்குள் ஏற்று புதிய தெய்வங்களின் உருவாக்கத்திற்கு வழி செய்கின்றன.
இக்காலகட்டத்தில் பௌத்தம், சமணம், சைவம், வைணவம் என எல்லா மரபுகளும் ஒரே போல் வளர்ச்சி பெறும் சித்திரம் வரலாற்றில் காணமுடிகிறது.
பௌத்தத்தின் முதற் பிரிவான ஹீனயானத்தில் பெண் துறவிகளுக்கு இடமே கொடுக்கப்படவில்லை. பெண் தெய்வங்களை உருவாக்கி வழிபடும் வழக்கம் கொண்டிருக்கவில்லை. ஆனால் பௌத்த மதம் மகாயானத்தின் கீழ் வெகு மக்களிடம் பரவலாகத் தொடங்கிய போது அவை முதலில் பெண் தெய்வ வழிபாட்டைத் தன்னுள் இணைத்துக் கொண்டன. மகாயானத்தில் வஜ்ராயன பௌத்தத்தில் இச்செல்வாக்கு மிகுதி என வேதாசலம் குறிப்பிடுகிறார்.
நாட்டார் மரபிலிருந்த நிறைய பெண் தெய்வங்களைப் பௌத்தம் தன்னுள் இணைத்துக் கொண்டன. நாட்டார் வழிபாட்டிலிருந்த நாக வழிபாட்டிற்கு இணையாக ஜாங்குலி என்னும் நாக கன்னி வழிபாட்டை உருவாக்கியது. சரஸ்வதியைப் போல் ப்ருகுதி என்னும் தெய்வம் பௌத்தத்தில் கையில் அக்கமாலையுடன் வித்யாதேவியாக வழிபடப்படுகிறாள். முன்னர் சொன்னது போல் தாராதேவி அழகின் தெய்வமாகவும், அவலோகீதேஸ்வரரின் சக்தியாகவும் கருதப்படுகிறாள். தற்போது பௌத்த மதத்தில் பிரதானமாக தாராதேவிக்கு மட்டுமே வழிபாடு உள்ளது. மற்ற தெய்வங்கள் கோஷ்ட சிற்பமாக மட்டும் உள்ளனர்.
பௌத்த சமய நூலாக தமிழில் எழுதப்பட்ட காப்பியம் மணிமேகலை. இதில் மாதவியின் மகளான மணிமேகலை பௌத்த சமயத்தை ஏற்று பௌத்த துறவியாகிறாள். வடமொழியில் எழுதப்பட்ட புத்த ஜாதக கதைகளில் மகாஜனகஜாதகத்தில் ஜனகனாக பிறக்கும் போதிசத்வர் தன் தந்தையிடமிருந்து நாட்டை வெல்ல கடலில் செல்லும் போது புயல் வந்து பாய்மரத்தைச் சாய்கிறது. அப்போது மணிமேகலா என்னும் கடல் தெய்வம் வந்து அவரைக் காப்பாற்றுகிறது. மணிமேகலையிலும் கோவலன் கடல் பயணம் சென்ற போது இதே மணிமேகலா தெய்வமே அவனைக் காக்கிறது. அதன் நினைவாகவே தன் மகளுக்கு மணிமேகலை என்னும் பெயரை அவனிடுகிறான். இத்தெய்வத்தைச் சங்க காலத்திலுள்ள கடல்கெழுசெல்வியோடு நிகர் வைத்துப் பார்க்கலாம். மேலும் மணிமேகலை நூலில் சம்பாபதி, தீவதிலகை, சிந்தாதேவி, சித்திரதெய்வம், கந்திற்பாவை என பூம்புகார், சோழ நாடு, மதுரையிலுள்ள பௌத்த சிறுதெய்வங்களின் பட்டியல் உள்ளது.
இதில் சித்திரதெய்வம், கந்திற்பாவை – பாவை என்னும் சங்க தெய்வத்தோடு ஒப்பிடத்தக்கது. சித்திரதெய்வம் மணிமேகலை அபகரிக்கத் துரத்திவரும் உதயகுமாரனை இடித்துரைக்கிறது. அவனது பூர்வ ஜென்மத்தைப்பற்றியும், மணிமேகலையின் ஆற்றல் பற்றியும் கூறி அவனை நல்வழிப்படுத்துகிறது. ஆனால் கந்திற்பாவை உயிர்கொல்லி தெய்வமாகச் சித்தரிக்கப்படுகிறது.
பௌத்தத்தைப் போலவே சமண சமயத்திலும் பெண் தெய்வ வழிபாடு முக்கியத்துவம் பெற்ற போது ஒவ்வொரு தீர்த்தங்கரர்களுக்கும் ஒரு யட்சன், யட்சி காவல் தெய்வமாக இந்திரன் நியமித்தான் என்னும் கதை வருகிறது.
சமண சமய யட்சியரில் நேமிநாதரின் யட்சியான அம்பிகா தேவிக்கு வழிபாடு வடஇந்தியாவில் குப்தர்களுக்கு முன்பான குஷானர் காலத்திலேயே காணக் கிடைக்கின்றன. பொ.யு.2 ஆம் நூற்றாண்டு குடைவரைகளாக ஒடிசா மாநிலத்திலுள்ள உதயகிரி, கண்டகிரியில் அம்பிகாவின் சிற்பங்கள் உள்ளன. இதன் மூலம் நேமிநாதரின் யட்சியே முதல் பெண் தெய்வமாக சமண சமயத்தில் இருந்திருக்க வேண்டுமென வேதாசலம் குறிப்பிடுகிறார்.
அதன்பின் பார்சுவநாதரின் பத்மாவதியையும், மகாவீரரின் சித்தாக்கியாவையும் வழிபடும் வழக்கம் தொடங்கியுள்ளது. மற்ற மூல நாயக்கர்களுக்கான யட்சியர் பொ.யு.6 ஆம் நூற்றாண்டில் தொடங்கி 9 ஆம் நூற்றாண்டு வரை என பிற்காலத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
ஆனால் சமண சமயத்தின் காப்பியங்களான சீவக சிந்தாமணியிலும், சிலப்பதிகாரத்திலும் இயக்கியர் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இதில் சிலப்பதிகாரத்திலேயே இயக்கி பற்றி தென்னிந்தியாவில் கிடைக்கும் பழைய இலக்கிய குறிப்பு.
இந்நூலிலேயே பௌத்த சமயத்தைப் போல் சமண சமயத்திற்குப் பல சிறு தெய்வங்கள் உள்ளதன் சித்திரம் வருகிறது. பாவை, வழியிடைகாணும் கானுறை தெய்வம், வரோத்தமை, பூங்கண் இயக்கி என கோவலன், கண்ணகி மதுரை செல்லும் வழியில் கவுந்தியடிகள் இத்தெய்வங்களைப் பற்றியும் அவற்றின் தன்மை பற்றியும் இருவருக்கும் சொல்கிறார்.
இதில் கவனிக்கத்தக்க ஒன்று இத்தெய்வங்கள் அனைத்தும் சோழ நாட்டிலிருந்து மதுரைக்குச் செல்லும் பெருவழிகளிலேயே உள்ளனர். வேதாசலத்தின் ‘பாண்டிய நாட்டில் சமண சமயம்’ நூல் மூலம் சமணப் படுகைகள் திருப்பரங்குன்றம் போன்ற மதுரையின் நகரடுத்த முக்கிய பெருவழிகளில் மட்டுமே அமைக்கப்பட்டது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
மேலும் இயக்கன், இயக்கியைக் கொண்டிருக்கும் தீர்த்தங்கரர் உருவங்களில் இயக்கிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வண்ணம் அவளைத் தீர்த்தங்கரரின் வலப்புறம் வடிக்கும் பழக்கமும் தமிழ்நாட்டில் பிரதானமாக காணப்படுவதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
கர்நாடகத்தில் பொ.யு.7 ஆம் நூற்றாண்டிலிருந்தே சமண இயக்கி பற்றி குறிப்புகள் கிடைக்கின்றன. திகம்பர சமணம் அதிகம் வேரூன்றிய கர்நாடகம், மகாராஷ்டிரம் பகுதியில் தமிழ் நிலத்திற்குப் பின்னே இயக்கி வழிபாடு தொடங்கியிருக்க வேண்டும் என வேதாசலம் இலக்கிய, கல்வெட்டு சான்றுகள் மூலம் குறிப்பிடுகிறார்.
மேலே சொன்ன பௌத்த, சமண இயக்கி வழிபாடு மூலம் இரண்டு விஷயங்கள் அறிய முடிகிறது.
ஒன்று, தமிழ் நிலத்தில் வலுவாக வேரூன்றியிருந்த பெண் தெய்வ வழிபாடு மிக எளிதாக பௌத்த, சமண மதத்திற்குள் செல்ல வழிவகுத்தது. இதனாலே மற்ற நிலங்களை விட மிக ஆரம்ப காலத்திலேயே நமக்கு அதற்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன.
இரண்டு, பௌத்தமும், சமணம் துறவையும், நோன்பையும் தீவிரமாக வலியுறுத்தும் மதங்கள். குறிப்பாக சமணம் கடும் நோன்பை அனுஷ்டிப்பது. மேலும் உயிர் கொல்லாமை, புலால் உண்ணாமை போன்றவற்றை தீவிரமாக கடைபிடிக்கும் மதங்கள் கூட. இவற்றில் உலகியலுக்கான தெய்வங்களாகவே இவ்வியக்கியர் வருகின்றனர். துறவு கொண்டிருக்கும் தீர்த்தங்கரரிடம் வாழ்வியல் துன்பங்களைச் சொல்ல முடியாது என்பதற்காகவே அவர்களுக்கு அருகே இயக்கியரை அமர்த்தி உலகியல் வேண்டுதல்களை அவர்களிடம் நிகழ்த்தினர்.
சிற்பமாக வடிக்கப்பட்டுள்ள இயக்கியரின் வாழ்க்கை வரலாறு இதனையே காட்டுகின்றன. அம்பிகா யட்சி தன் பக்தியால் தெய்வநிலையை அடைகிறாள். அதனை அறிந்த அவளது கணவன் சோமசர்மன் அவள் மேல் பயம் கொள்கிறான். அவள் அவனைத் துறந்து காட்டில் சேடிப்பெண்ணுடனும் பிள்ளைகளுடனும் சென்று அபயம் தரும் மரத்தடியில் வாழ்கிறாள். அங்கிருந்து உயிர் துறந்து அருகர்கள் உலகம் சேர்கிறாள். ஆனால் தன் கணவனையும், குழந்தைகளையும் பிரிந்த அவள் மீண்டும் அவர்களுடன் வாழும் வரம் தரும்படி கேட்டு வீட்டிற்குத் திரும்புகிறாள். அங்கே சோமசர்மன் அம்பிகாவின் தெய்வ உருவான பொன்னிறத்தைக் கண்டு தற்கொலை செய்துகொள்கிறான். மீண்டும் அம்பிகா யட்சியாக அமைகிறாள்.
சமணத்தில் யட்சியர்கள் இல்லறத்தில் பற்றுள்ளவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். அதே போல் மகாவீரரின் யட்சியான சித்தாக்கியாவின் சிற்பம் மகிஷாசுரமர்த்தினியின் சிற்பத்தோடு ஒத்த பண்பு கொண்டதாக அமைகிறது. ஆவுணனுடன் போர் செய்து அவனை அழிக்கும் சித்திரம் கதையாக்கப்பட்டுள்ளது.
பௌத்தத்திலும் கந்திற்பாவை என்னும் உயிர்கொல்லி தெய்வங்களைப் பார்த்தோம். புத்த ஜாதக கதையொன்றில் யட்சியர்கள் நரமாமிசம் தின்று வாழும் நாடொன்று உள்ளது கூறப்பட்டுள்ளது. ஆரிதி என்னும் தெய்வம் பிள்ளை தின்னியான இவள் புத்தரால் மனமாற்றம் செய்யப்படுகிறாள்.
தீவிர உலகியல் பற்றும், போர் குணம் கொண்ட தெய்வங்களும் பௌத்த, சமண சமயத்தில் எங்கனம் நுழைந்தது என்பது வரலாற்று ஆச்சரியம் தான்.
ஆனால் இங்கே கவனிக்கத்தக்க ஒன்று இயக்கி என்று சொல்லப்படும் படித்திற்கான அத்தனை உருவேற்றமும் மதங்களில் காணக்கிடைக்கிறது என்பது தான். காவல் தெய்வமாக, வளம் தருபவளாக, உலகியல் தேவைகளை ஈடு செய்பவளாக, பகைவர்களைக் கொல்லும் தெய்வமாக, தன்னை நோக்கி கவர்ந்திழுப்பளாக என இயக்கியின் அத்தனை சொரூபங்களும் தெய்வங்களாக்கப்பட்டுள்ளன.
3

வெவ்வேறு பெயர்களில் வேறுபட்ட தெய்வங்கள் மதங்களுக்குள்ளே காணப்பட்டாலும் அவற்றிலுள்ள ஒற்றுமையையும் வேதாசலம் குறிப்பிடுகிறார். அதற்கு ஆரம்பகால சிவனின் சிற்பமும் போதிசத்வரின் சிற்பங்களும் ஒத்திசைவைக் கொண்டிருப்பது போல் அம்பிகா யட்சிக்கும் பார்வதிக்கும் உள்ள உருவ ஒருமையைச் சுட்டிக்காட்டுகிறார்.
இலக்கியங்களில் உள்ள சான்றுகளையும் ஒன்றை மற்றொன்றுடன் இணைத்துக் காட்டுகிறார். மேலே சொன்ன அம்பிகா யட்சியின் கதைக்கு நிகரான கதை காரைக்கால் அம்மையாருடையது. இல்லறம் துறந்து பேயுருக் கொண்டு காட்டில் வாழும் தெய்வம்.
அரசுகளின் காலம் முடிந்து பேரரசு உருவாகத் தொடங்கிய காலத்தில் வேளாண் முறை சமூகம் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டு அந்தணர், வணிகர்கள், போர் வீரர் முதன்மை இடம் பெறத் தொடங்கினர். இக்காலகட்டத்திலேயே குடைவரையிலிருந்து பெரிய கோவில்கள் அமைக்கும் பழக்கமும் நம்மிடம் தோன்றியது.
பொ.யு. 7 – 13 ஆம் நூற்றாண்டு வரை பெரும் வளர்ச்சியின் காலக்கட்டம் பக்தி இயக்கம் முன்னிலை பெற்ற போது தெய்வங்களும் மேலும் வலுவாக ஒருங்கிணைக்கப்பட்டு முக்கிய நிலை அடைந்தன. இதன் காரணமாக பெண் தெய்வங்களும் முக்கிய நிலை அடைந்ததை ஆசிரியர் சுட்டுகிறார். உதாரணமாக, அம்பிகா யட்சியின் சிற்பம் இக்காலக்கட்டத்தில் பிரதான சிற்பமாக தீர்த்தங்கரருக்கு நிகராக தனிக்கோயில் கொண்டு அமைக்கும் வழக்கம் தொடங்கிவிட்டது. இக்காலத்தில் அம்பிகாவுக்கு நிகராகவே அவளது சேடிப்பெண்ணுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வழக்கமும் பேணப்பட்டது. அம்பிகா யட்சி தன் கணவன் இல்லாமலோ, குழந்தைகள் இல்லாமலோ சிற்பமாக்கும் வழக்கம் இருந்துள்ளது, ஆனால் சேடிப்பெண் இல்லாமல் தமிழகத்தில் ஒரு சிற்பம் கூட காணக்கிடைக்கவில்லை.
பொ.யு.13 ஆம் நூற்றாண்டிற்குப் பின் ஒரு வீழ்ச்சியின் சித்திரத்தை நம்மால் காண முடிகிறது. பௌத்த, சமண மதங்கள் இக்காலக்கட்டத்தில் செல்வாக்கு இழந்தன. சைவ, வைணவத்திலிருந்த பெண் தெய்வங்கள் தன் அன்றைய முக்கியத்துவத்தை இழந்து மீண்டும் நாட்டார் தெய்வங்களாகும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இன்று, நாம் காணும் இயக்கியின் சித்திரமென்பது மேலே சொன்ன இத்தனை பன்முகப் பண்புகளையும் இழந்து சிறு நாட்டார் தெய்வமாக மாறிய சித்திரம் கடந்த எழுநூறு ஆண்டுகளில் தொடர்ந்து நிகழ்ந்தது. பொன்னியம்மன், அவ்வையாரம்மன், பகவதி, பேச்சி, ராக்காயி, இசக்கியம்மன் போன்ற சிறு தெய்வங்கள் இக்காலக்கட்டத்தில் தோன்றியவர்கள். இதே போலவே இக்காலகட்ட இலக்கியங்களிலும் சிற்றிலக்கியங்களே நமக்குக் கிடைக்கின்றன.
எனவே, இயக்கி வழிபாட்டின் அருகிய நிலையென்பது கடந்த எழுநூறு ஆண்டுகளில் படிப்படியாக இறங்கி வந்தது என ஆசிரியரின் வரலாற்று தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.
மேலும் இக்காலக்கட்டம் தீவிர போர்களும், பேரரசுகளின் வீழ்ச்சிகளிலுமான ஒன்று. அனைத்து வகையிலும் நம் பண்பாடு தேங்கிய சித்திரம் இந்த எழுநூறு ஆண்டுகளிலேயே நிகழ்ந்துள்ளது.
இறுதியாக, இன்று இயக்கியாகவோ, பெருநெறி மதத்தில் துர்க்கை, மகிஷாசுரமர்த்தினியாகவோ வழிபாட்டிலுள்ள இத்தெய்வங்கள் உயிர்கொல்லும் தெய்வங்கள் மட்டும் தானா?
இதற்கு நீலி மின்னிதழில் வெளிவந்த நித்ய சைதன்ய யதியின் கட்டுரை ஒன்றில் பதில் வருகிறது. அவர் நம் மனம் இயல்பிலேயே போர் அம்சம் நிறைந்த ஒன்று என்கிறார். அதன் காரணமாகவே போர் தன்மை பொருந்திய உக்கிர தெய்வங்களைச் சிற்பமாக்கும் மரபு நம்மிடம் உள்ளது என்கிறார். மேலே சொன்ன போர் சூழலிலும் அதன் பின்னணியில் இயக்கியின் பிரணாமமும் இதனுடன் ஒத்துப் போகிறது. ஆனால் நித்யா அந்தக் கட்டுரையிலேயே தத்துவார்த்தமான பதில் ஒன்றை அளிக்கிறார்.
அதாவது துர்க்கை என்ற சொல்லுக்குப் பொருள் துர்க்கம், அரண் என்பதே. அனைத்திற்கும் அரணாக அமைந்து ஒரு சமநிலையை உருவாக்குபவள் என்றே அவளைக் குறிப்பிடுகிறார். இது தெய்வங்களின் உச்சநிலை. ஒரு தத்துவ ஞானி அத்தெய்வத்தைத் தத்துவார்த்தப்படுத்திக் கூறும் நிலை. விஷ்ணுவிற்கு சர்வசம்ரக்ஷகன் என்ற பெயர் உள்ளது. அனைத்திற்கும் அரணானவன். காக்கும் கடவுளுக்கும், அழிக்கும் கடவுளுக்கும் எப்படி ஒரே நிலையை வழங்க முடிகிறது. அது தெய்வத்தின் உயரிய நிலை, தத்துவ ஞானி மட்டுமே சென்று தொடும் புள்ளி அது.
வேதாசலம் இங்கே பொது நம்பிக்கையிலுள்ள கொல்லும் கொற்றவை என்ற உருவகத்தை மட்டும் இயக்கிக்கு அளிக்கவில்லை. இயக்கியின் அனைத்து வடிவங்களையும் சொல்லி அதன் பண்புகளையும் விளக்குகிறார். அதன் வழியே ஒரு சமநிலையை உருவாக்குகிறார். மேலே நித்யா சொன்ன அரண் என்னும் அம்சமே அவளைப் பௌத்தமும், சமணமும் எளிதில் தங்கள் தெய்வமாக வணங்கச் செய்தது என வேதாசலம் கொடுக்கும் இந்த ஒட்டுமொத்த சித்திரம் மூலம் அறிய முடிகிறது. கொல்லாமை நோண்பு கொண்டவர்கள் சித்தாயிகாவையும், கந்திற்பாவையும் தங்கள் பிரதான காவல் தெய்வமாக மாற்றியதும் அதன் பொருளிலேயே.
அது வரலாற்றாசிரியரான வேதாசலம் ஒட்டுமொத்த வரலாற்றில் இயக்கியைத் தொகுக்கும் வழியில் நித்யா அடைந்த தரிசனத்தை/மெய்மையை தன் ஆய்வின் வழியே சென்று தொடும் புள்ளி.
***
குறிப்புகள்:
பொ.யு – பொது யுகம்
பொ.மு – பொது யுகம் முன்
தொடர்புடைய படைப்புகள்: விஜயதசமி – மகத்தான அறிவுத்திருவிழா: நித்ய சைதன்ய யதி

சங்க காலத்திலிருந்து, இயக்கன், இயக்கி தோற்றமும், வழிபாடு முன்னிறுத்தலும், சமூகத்தில் எப்படி ஒரு படிமங்களாக மாற்றம் அடைந்ததை வரலாற்று பின்புலத்தில் பார்க்கும் கோணத்தில், அலசப் பட்ட கட்டுரை. இயக்கன், இயக்கி அதுவே சிவ, சக்தி, அதுவே அப்பன் அம்மை அல்லது அம்மையப்பன், அதுவே கரு உரு… பதிவிற்கு நன்றி.