டாம் அண்ட் ஜெர்ரி

அந்த மொட்டை வால் பூனையைப் பிடித்து பொறித்து தின்ன வேண்டும். அதற்குச் சரியான திட்டமொன்றை வரைய வேண்டும். மஞ்சள் நிறமான அந்தப் பூனை எங்கள் தோட்டத்தில் ஒரு கோழிக்குஞ்சைக் கூட விட்டுவைத்ததில்லை. கலர் கோழிக்குஞ்சுகள், இறைச்சிக் கோழிக்குஞ்சுகளென பேதமின்றி தின்று விடுகிறது.  தோட்டம் முழுக்க எல்லா கோழிக்குஞ்சுப் பிரியர்களும் பயந்து நடுங்குவது அந்த மொட்டை வால் பூனைக்கு மட்டும். அதனால் அந்த மொட்டை வால் பூனையைக் கொல்லத் துடிக்கும் என் வெறி நாளடைவில் அதைப் பொறித்து தின்னவும் தூண்டியது.

பெரிய கம்பிகள், பலகைகள் கொண்டு கூண்டுகள் செய்தாலும் எதாவது வழியைத் தேடி நாளுக்கொரு கோழிக்குஞ்சு வீதம் ஒவ்வொரு வீடாக சென்று கடித்து தின்றுவிடும் அந்தப் பூனை. இயற்கையாகவே அமானுஷ்ய சக்தி அந்தப் பூனையிடம் இருக்கின்றதா எனத் தெரியவில்லை. ஆனால், கட்டையர் தாத்தாவின் ஆவி தான் பூனையின் அமானுஷ்ய சக்திக்குக் காரணம் என எலிமாமா நம்பிக் கொண்டிருந்தான்.

ஒரே வீட்டிலேயே தினமும் கோழிக்குஞ்சுகளைப் பிடித்து தின்றால் மாட்டிக் கொள்வோம் என்று மொட்டை வால் பூனைக்குத் தெரியும். எனவே தந்திரமாக நாளுக்கு ஒரு வீடு; ஒரு கோழிக்குஞ்சு என கால அட்டவணை போட்டு வேட்டையாடியது.  பூனையின் கைவரிசை அறியாத ஆரம்ப காலங்களில் அண்டை வீட்டார்கள் காணாமல் போன கோழிக்குஞ்சுகளுக்குக் காலையிலேயே மங்கல வார்த்தைகளினால் வாய்ச் சண்டை போட்டு கொண்டார்கள்.

கலர் கோழிக்குஞ்சுகள் வளர்ப்பது அப்போது மிகவும் பிரபலமாக இருந்தது. நானும் நண்பர்களால் ஈர்க்கப்பட்டு கலர் கோழிக்குஞ்சுகளை வாங்கினேன். கோழிக்குஞ்சுகள் நீலம், ஊதா, சிவப்பு, பச்சை என பல நிறங்களில் இருப்பது அதன் தனித்துவம்.  சந்தையில் பெட்டிகளில் அவற்றை வண்ண பஞ்சு பொதிகள் போல வைத்திருப்பார்கள்.  நமக்கு விருப்பமான நிறங்களில் வாங்கிக் கொள்ளலாம். ஆனாலும் வளர வளர அவை நிறம் மாறி வழக்கமான கோழிகளாக ஆகிவிடும் என்று நண்பர்கள் சொன்னார்கள். நான் அதை நம்பவில்லை.  நான் அந்தக் கோழிக்குஞ்சுகளை வளர்க்க பாதுகாப்பான கூண்டு ஒன்றையும் நானே செய்தேன். 

நான் உருவாக்கிய கோழிக் கூண்டைச் சுற்றியுள்ள சட்டம் தரைப் பகுதி மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கும். அதற்கு மேலாக வலை கம்பிகள் தொடங்கி மேல் கூரைவரை நீளும். இடையிடையே சிலுவைப் போல சிறிய கட்டைகள் கம்பிகளோடு ஆணி அடிக்கப்பட்டிருக்கும்.  பழையத் தகரத்தைக் கொண்டு கூரை அமைந்திருக்கும்.

இவ்வாறு முரட்டு கட்டைகளையும், விலை அதிகமுள்ள வலை கம்பிகளையும் கொண்டு அரண் போல பாதுகாப்பான கோழிக்கூண்டைக் கடினமான உழைப்பில் செய்து முடித்தேன். ஆனாலும் கோழிக்கூண்டின் கீழ் மண்தரை பகுதியைத் தன் கூர்மையான நகத்தாலேயே தோண்டி சுரங்கம் அமைத்து கூண்டுக்குள் நுழைந்து என் அபிமான பச்சை நிற கோழிக்குஞ்சை இறக்கமில்லாமல் வேட்டையாடியது மொட்டை வால் பூனை.

தனியாக நிகழ்ச்சி நிரல் மற்றும் முறையான திட்டம் போட்டுதான் அந்த மொட்டை வால் பூனை களமிறங்கும். அதே பாணியில் நானும் பதிலடி கொடுக்க திட்டம் ஒன்றைத் தீட்டினேன். அத்திட்டத்தின் பெயர் ‘ஆபரேசன் டாம் அண்ட் ஜெர்ரி’. அதனாலேயே இந்த மொட்டை வால் பூனைக்கு நான் வைத்த புனைப் பெயர் ‘டாம்’.

பகலில் என்றாவது ஒருமுறை டாம் எங்கள் கண்களில் சிக்கும்போது அதைப் பிடிக்க பலமுறை முயற்சி செய்தும் நானும் கணபதி என்ற எலிமாமாவும் தோற்று போயிருக்கிறோம். டாமின் மீது தடினமான கட்டைகள், பாதி உடைந்த செங்கலைக் கொண்டு விடாமல் தாக்குதல் நடத்தியுள்ளோம். தாறுமாறான எங்கள் குறி பல்வேறு திசைகளில் டாமை நோக்கி தாக்கும். ஆனால் டாமின் வேகம் எங்கள் தாக்குதலின் வேகத்தை மிஞ்சிவிடும். கையிருப்பிலுள்ள ஆயுதங்கள் தீர்ந்த பின்பு எலிமாமாவும் நானும் சேர்ந்து தொடர் தாக்குதலாக கையில் கிடைத்தவற்றையெல்லாம் எடுத்து கண்டப்படி விரட்டிக் கொண்டே தாக்குவோம்.  இந்த டாம் என்ற மொட்டை வால் பூனைக்குள், டாம் அண்ட் ஜெர்ரியில் தோன்றும் ஜெர்ரி என்ற எலியின் தந்திரமும், வேகமும் அதோடு எங்களுக்குக் கைக்கூடாத அதிர்ஷ்டமும் கைக்கூடியுள்ளது ஆச்சரியம். அதனால்தான் நொடிப்பொழுதில் பாய்ந்து குதித்து பறந்து மாயமாகிவிடும்.

ஆரம்பத்தில் டாம் தான் கோழிக்குஞ்சுகளை வேட்டையாடுகிறதா அல்லது வேறு எதாவது மாமிச உண்ணிகளின் வேலையா எனும் சந்தேகம் எல்லோருக்கும் இருந்தது. எலிமாமா இரவில் கழிவறைக்குச் சென்ற போது டாமின் வேட்டையைப் பார்த்ததாக சொன்னான்.  வளர்ச்சித் திட்டகளினால் பாதியாக துண்டாடப்பட்ட எங்கள் தோட்டத்தில் கழிவறை வீட்டின் பின் வாசலுக்குப் பக்கத்திலேயே ஒட்டியமைக்கப்பட்டிருக்கும். அப்படிக் கழிப்பறை சென்ற இரவில்தான் அவன் டாமுடைய வேட்டையைப் பார்த்தானாம்.

டாமை போலவே எலி மாமாவைப் பற்றி கொஞ்சம் சொல்லிதான் ஆக வேண்டும். சிறிய உடல் அமைப்பில் குச்சிப் போன்ற கைகளும் கால்களும் கொண்டவனின் முக அமைப்பின் கீழ் தாடை முதல் மூக்கு வரை மூஞ்சூறு எலியைப் போலவே நீண்டிருக்கும். அந்தத் தோற்றம் காரணமாக அவனின் கணபதி என்ற பெயரை எலி மாமா மிக எளிமையாக ஓரங்கட்டி விட்டார்.

எங்கள் வீட்டிற்கும் பக்கத்து வீட்டிற்கும் நடுவே சிறிய காளி கோவில் ஒன்றைக் கட்டினார் பக்கத்து வீட்டுக்காரர். எங்கள் வீட்டின் நிலத்தைப் பாதியாக சுரண்டியப்படி அமைக்கப்பட்டதால் நானே அந்தக் கோவிலில் அதிக உரிமை எடுத்து கொண்டேன். அதோடு  போட்டியின்றி நானே என்னைக் கோவில் தலைவராகவும் அறிவித்துக் கொண்டேன். 

என் மாமா தோட்டத்து பெரிய மாரியம்மன் கோவிலில் தலைவராக இருந்தார். நானும் அவரோடு கோவில் கூட்டத்தில் கலந்து கொள்வேன். மாமா உரையாற்றுவார். கோவில் வசூல் , திட்டங்களை விவரிப்பார். அவரைப் பார்த்த நானும்,  அவரைப் போன்று என் பக்கத்து வீட்டு காளி கோவில் தலைவர் பொறுப்பை ஏற்றதும் பல திட்டங்களை உருவாக்கினேன். கோவில் திருவிழாவும், அந்தத் திருவிழாவில் ஆடல் பாடலும், அதோடு சேர்த்து விளையாட்டு போட்டியையும் என் திட்டத்தில் சேர்த்தேன். எனக்குக் கீழே என்னை விட வயது குறைந்த பொடியன்களுக்குத் தொண்டர் பதவியைப் பிரித்துக் கொடுத்தேன்.

துணைத்தலைவராக எலி மாமாவைத் தேர்ந்தெடுத்தேன். அவன் நன்றாக பஜனை பாடுவான். தாளம் போடுவான். ஓரளவு நடனம் ஆடுவான். எங்கள் கோவிலில் வெள்ளிக்கிழமை மாலை எல்லோரும் சேர்ந்து பஜனை பாடுவோம். பள்ளி முடிந்து மதியம் நடனம் ஆடுவோம். ரப்பர் மரம் வெட்டிய என் தோட்டத்துவாசிகள் அனைவரும் அருகிலுள்ள தொழிற்சாலையில் வேலைக்குப் போய் விட்டனர். தோட்டத்தைச் சுற்றிய பகுதிகளில் மேலும் பல தொழிற்சாலைகள் கட்டப்போவதாக அறிந்தோம். நடுவே இருந்த ஐம்பது குடும்பங்களின் நிலை குறித்து மாமாவிடம் கோவில் கூட்டத்தில் கேள்வி நேரத்தில் கட்டையர் தாத்தா கேட்டார். பணம் அல்லது வேறு வீடுகள் தரப்படுவதாக கேள்விப்பட்டதாகக் கூறி மாமா சமாளித்தார். தாத்தா இன்னும் அதிக நாள்கள் வாழப் போவதில்லை என்பதை அவரின் உடல் தோற்றமே காட்டிவிடும். தோட்டத்து மக்களின் வருங்கால நிலை குறித்த அக்கறையுடன் தாத்தா கேட்டதாக நான் புரிந்து கொண்டேன்.

தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றவர்கள் ஐந்து மணிக்குப் பிறகே வீடு திரும்புவார்கள். அதுவரை தோட்டமே எங்களின் தற்காலிக ஆட்சியின் கீழ் வந்து விடும். பக்கத்து வீட்டுக் காளி கோவிலில் பள்ளி விடுமுறையில் போட்டி விளையாட்டும், நடனமும் வைக்கலாம் என வெள்ளிக்கிழமைப் பஜனைக்குபிறகு எல்லோரும் ஒன்று கூடிப் பேசினோம். என் மாமா என்னுள் இறங்கி எனக்குப் பதிலாக தலைவர் பெறுப்பை ஏற்றது போலவே என் பேச்சும் பாவனையும் இருந்ததாக எலி மாமா சொன்னான். தொண்டர்கள் அனைவரும் வழிமொழிந்தார்கள்.

கணபதியை எலிமாமா என்று அழைத்தால் புற்றிலிருந்து வெளிவந்த கருநாகம் சீறுவது போல சீறுவான். அதனால் அவனை ஜெர்ரி என்று அழைக்கத் தொடங்கினோம்.  ஆனால் அவனில்லாத போது எலி மாமாவே இயல்பாக அவனைக் குறிப்பிட வெளிப்பட்டுவிடுவார்.  “டேய் ஜெர்ரி வாடா” என்றழைத்தால் அவன் சீறுவதில்லை. “டேய் எலிமாமா வாடா…“ என்றழைத்த சுமனைக் கையில் கிடைத்த கட்டையை எடுத்துக் கொண்டு விரட்டினான். 

காளி கோவில் கட்டிய என் பக்கத்து வீட்டுக்காரர் அவரது நண்பர்களை அழைத்து வந்து காட்டிப் பெருமை கொள்வார். அந்த நண்பர்களிகளில் அல்லி முத்து என்ற ஒருவர் வரும்போதெல்லாம் எங்களுக்கு அறிவுரைகளை அள்ளிக் கொடுப்பதோடு சிறுவர் பக்தி சார்ந்த புத்தகங்களையும் கொடுப்பார். அவர் கொடுத்த புத்தகங்களில் மஞ்சள் நிற அட்டை கொண்ட A4 அளவு புத்தகம் என்னை மிகவும் கவர்ந்து விட்டது. அப்பா, அம்மா மற்றும் அவர்களின் ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் சேர்ந்து கோவில் ராஜ கோபுரத்தைப் பார்த்து வணங்கியப்படி ஓவியம் அட்டை படத்தில் மிக அழகாகயிருந்தது. உள்ளே படங்களும் அதற்குக் கீழே விளக்கங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தேங்காய் உடைப்பது முதல் பெண்கள் மண்டியிடுவதும், ஆண்கள் குப்புற விழுந்து வணங்குவதற்கான வழிமுறையும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் புத்தகத்தில் வரையப்பட்டிருந்த அனைத்து மனித ஓவியங்களும் நெற்றியில் திருநீறைப் பட்டையாகப் பூசியிருந்தனர்.

அனைத்து ஓவியங்களிலும் ஆண்கள் வேட்டி சட்டை அணிந்திருந்தனர். சிறுவயது பெண்கள் பாவாடை தாவணியும், பெரிய வயது பெண்கள் புடவையும் அணிந்திருந்தனர். ஒவ்வொரு பக்கமாக விரைவாகப் புரட்டி வாசித்து முடித்து கடைசிபக்கத்தை வந்தடைந்தேன். பத்து குறிப்புகளை விளக்கப்படமில்லாமல் ரோமன் எண்களில் வரிசைப்படுத்தியிருந்தனர். ஒவ்வொன்றாக கடந்து ‘எக்ஸ்’  குறியிடப்பட்ட பத்தாவது குறிப்பு சிவப்பு சமிக்ஞை விளக்கைக் காட்டிய  மாதிரி நிற்கச் செய்துவிட்டது. 

‘இந்துக்கள் உடலுறவின போது கட்டொழுங்கைக் கடைப்பிடிப்பார்கள்’

எலி மாமா பிடிவாதமாக அந்தப் புத்தகத்தை இரவல் வாங்கிச் சென்றான். ஒரு வாரம் கழித்து கேட்டு பார்த்தேன்.  நாளை நாளையென நாட்களை இழுத்தடித்தான். “டேய் எலிமாமா, எங்கடா புக்கு“ என அடிவயிற்றிலிருந்து வரும் வார்த்தைத் தொண்டையிலேயே சிக்கி அறுவை சிகிச்சைக்குப் பிறகு “டேய் ஜெர்ரி, எங்கடா அந்த புக்கு“ என மாறிவரும். “கொஞ்சம் பொருங்கண்ணே. இப்பதான் பாதி படிச்சி முடிச்சிருக்கேன்…” என்பான். எனக்கு இந்துக்கள் உடலுறவின்போது எவ்வகையான கட்டொழுங்கைக் கடைப்பிடிப்பார்கள் என்பதை அறிய ஏக்கமாக இருக்கும்.

கோழிக்குஞ்சுகளின் எண்ணிக்கை குறைந்து விட்டன. தோட்டத்து வாசிகள் கோழிக்குஞ்சுகளை வாங்குவதையும் படிப்படியாக நிறுத்திக் கொண்டனர். நானும் படிப்படியாக அந்த மஞ்சள் நிறப் புத்தகத்தை எலிமாமாவிடம் கேட்பதை நிறுத்தி விட்டேன். ஜெர்ரி என்ற எலிமாமாவை மஞ்சள் நிற புத்தகத்திற்காக விரட்டியதில் டாம் என்ற மஞ்சள் நிற மொட்டை வால் பூனையை மறந்து விட்டிருந்தேன். 

ஒரு பச்சையும் ஒரு மஞ்சளுமாக இரண்டே கோழிக்குஞ்சுகள் என் பெரிய கூண்டில் மிஞ்சின. வண்ணவண்ண கோழிக்குஞ்சுகளின் நிறம் வளரவளர மாறிவிடும் என்ற எலிமாமாவின் கூற்று பொய் என நிரூபித்துக் காட்டுவதற்காகவாவது கலர் கோழிக்குஞ்களைக் காக்க ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன்.

இரவில்  விழித்திருந்து வேட்டையாடும் டாம் பகலில் பதுங்கி தூங்கும் இடத்தைத் தற்செயலாகக் கண்டு பிடித்தான் எலிமாமா. நம்ப மறுத்ததால் நேரில் காட்டுவதாக கூறி கட்டையர் தாத்தா வீட்டிற்கு என்னையும் அழைத்து சென்றான்.

கட்டையர்  தாத்தா இறந்து இரண்டாண்டுகள் கடந்து விட்டன. தாத்தாவின் இறுதிச் சடங்குக் கூட அவர் வாழ்ந்த வீட்டில் நடக்கவில்லை. வேறு மாநிலத்தில் வேலையும் குடும்பமுமாக தங்கி விட்ட மகன்கள் அவர்களின் சொந்த வீட்டிற்கே பிரேதத்தைக் கொண்டு சென்றனர். அதனால் எங்கள் தோட்டதில் ஆண்கள் கோபத்தையும் பெண்கள் சாபத்தையும் கக்கியவாறுச் சுற்றி அலைந்தனர். தாத்தாவின் ஆவி தன் மகன்கள் மீதுள்ள கோபத்தால் அந்த வீட்டிலேயே தங்கி விட்டதாக தோட்டத்தில் ஒரு பேச்சு அடிப்பட்டது. 

கட்டையர் தாத்தா வீட்டுக்குப் பின்புறம் வெற்றிலைத் தோட்டம் வைத்திருந்தார். பெண் பார்க்கும் சடங்கில் மாற்றப்படுவதில் தொடங்கி,  கல்யாணம் வரை தொடர்ந்து, முதலிரவு முடிவு வரை கட்டையர் தாத்தாவின் வீட்டுக் கொடி வெற்றிலையே இலவசமாக இடம்பெறும் என்பது எழுதப்படாத விதி. யாரவது  அவரிடம் வெற்றிலையைப் பெற்றதும் காசு கொடுத்தால் மறுப்பதோடில்லாமல் உட்கார வைத்து கருத்து சொல்லத் தொடங்கி விடுவார். சாவுச் சடங்குகள் கூட அவர் வீட்டு வெற்றிலையில்லாமல் நடக்காது. ஆனால், தாத்தாவின் இறுதிச் சடங்கில் தலையில் எண்ணெய் வைக்க அவர்  நட்ட வெற்றிலை இடம் பெறாமல் போனது.

 ”தாத்தா வீட்டிலா டாம் ஒளிந்துள்ளது?” என எலிமாமாவிடம் குரலை உயர்த்திக் கேட்டேன். 

‘நீ வாயை மூடுடா….! அதான் காட்டறேன்னு சொன்னெயில்ல…’, என்று சொல்லும் தொனியில் செய்கையில் பதிலளித்தான். பின் வாசல் வழியாக அவனைப் பின் தொடர்ந்தேன். பின் வாசலை நெருங்கியதும் எதோ சலசலப்பு சத்தம் கேட்டது. ‘தாத்தா ஆவியின் குரலாக இருக்குமோ…’  நெஞ்சுக்குள் படபடத்தது.

சத்தம் மெதுமெதுவாக குறைந்தது. தாத்தா வீட்டின் பக்கவாட்டில்  ஜன்னல் கம்பிகளின் வழியாக எட்டிப் பார்த்தோம். தரையில் சுருட்டப்படாத பாய் ஒன்று கிடந்தது. சாக்லேட் நிற அட்டை பெட்டி அதோடு ஒட்டிக் கிடந்தது. எங்கள் வருகை அங்கே இருந்த யாரையோ தொந்தரவு செய்திருக்கும் போல… அவசரமாக அவர்கள் வெளியேறினார்கள்.  அரக்கப் பறக்க வெளியேறியவர்களை எங்கோ பார்த்த மாதிரி இருந்தது. மெதுவாக மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டது.

“யாருண்ணெ அவுங்க…” எலிமாமா ஆர்வம் பொங்கி வடிய இளித்துக் கொண்டே கேட்டான்.

“அது இப்ப எதுக்குடா ஒனக்கு.  டாம் எங்கடா இருக்கு” என்றேன்.

“சத்தம் போடாம மெதுவா வாங்கண்ணே…”

தாத்தா வீட்டின் பின் வாசலில் பிடுங்கி எடுக்கப்பட்டிருந்த கதவின் வழியாக அவன் செல்ல, நான் பின் தொடர்ந்தேன். சமையல் அறையில் பழைய காலத்து அலமாரி ஒன்றிருந்தது. கதவுகள் இல்லாத திறந்த வெளியாகியிருந்த மூன்றடுக்கு அலமாரியில் முதல் அடுக்கில் டாம் இரவு உண்ட களைப்பில் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் என்னுள் ஒரு வெறி கிளம்பியது.  வெறியின் தூண்டுதலால் கீழே கிடந்த கூர்மையான குச்சியை எடுத்து ஓங்கி எறிந்தேன். குறி தவறியதன் சத்தத்தில் கண்விழித்த டாம்,  ஒரே பாய்ச்சலில் என் மேல் பாய்ந்தபோது நான் கீழே குனிந்தேன். அதன் பாய்ச்சலின் குறி தவறி எலி மாமாவின் கழுத்துப் பகுதியைப் பற்றிக் கீறிவிட்டு கீழே குதித்து கொஞ்ச தூரம் சறுக்கியது.  “ஆ… ஐயோ காளியம்மா…“ எலிமாமா அலறியதில் தாத்தா வீட்டில் இடி விழுந்த மாதிரி சத்தம் எதிரொலித்தது. நான் தப்பித்தேன் என நெஞ்சில் கைவைத்து பெருமூச்சு விட்டபோது, டாம் என்னைத் திரும்பிப் பார்த்து சிரித்தது. அதன் நீல நிறக் கண்களில் என் உருவம் சுருங்கிய வடிவத்தில் தெரிந்தது. பாம்பு போல படம் பிடித்து பட்டியலில் பதிந்து கொள்ளுமோ எனப் பயந்தேன். ‘அடுத்தது நீதாண்டா…’ அவ்வாறுதான் டாமின் நீல நிறக் கண்களில் தெரிந்த வெறியின் மொழியை உணர்ந்துகொண்டேன். அது கோபத்தில் பார்த்திருந்தால் என் மேல் பயமுள்ளதாகப் பெருமைப்படுவேன். ஆனால் அது அலட்சியமாக என்னைப் பார்த்து சிரித்து சென்றது. என்னைப் பழிதீர்க்கத் தேடி வருமோ…! நாங்கள் இருவரும் தாத்தா வீட்டிலிருந்து மெதுவாக ஓட்டம் எடுத்தோம்.

டாமை கொன்ற தாத்தாவின் ஆவி அதன் உடலில் புகுந்து விட்டதாக எலிமாமா நம்பினான். தாத்தாவின் மரணத்திற்கு முன்பிருந்தே கோழிக்குஞ்சுகள் காணாமால் போவது எனக்குத் தெரியும் என்றேன். என் ஞாபகசக்தியை எலிமாமா நம்பவில்லை. அவனுக்கு என்னைப் போல ஞாபக சக்தியில்லையென மனதிற்குள் சொல்லிக் கொண்டேன்.

“நீங்கெல்லாம் டீவி பொட்டிக்குள்ள தாண்டா டாம் அண்ட் ஜெர்ரிய பாப்பிங்க. ஆனா நா லைஃபா பாத்துட்டேன். டாம் ஜெர்ரி மேல பாய்ஞ்சத…” மற்ற நண்பர்களிடம் கோவில் கூட்டத்திற்குப் பிறகு கதையைப் பரவவிட்டேன்.

தாத்தாவின் ஆவி டாமின் இறந்த உடலில்  புகுந்திருந்தாலும் பாதகமில்லை. ஆவி புகுந்தாலும் பூனைக்குள் இயற்கையானப் பலம் தானே இருக்கும். தைரியத்தைத் திரட்டிக் கொள்ள பிரிடேட்டர் படத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என முடிவெடுத்தேன்.  பிறகு பூனை வேட்டையைத் தொடர வேண்டும். கட்டையர் தாத்தாவுக்கு  உச்சந்தலையில் சொட்டை. டாம்  பூனைக்கு வால் மொட்டை. “தாத்தாக்குச் சொட்டை, டாமுக்கு மொட்டை…“ பலமுறைச் சொல்லிப் பார்த்தேன். அந்த மொட்டை வால் பூனையைப் பிடித்து பொறித்து தின்ன வேண்டும்….

***

“வேணாம்னே. பூனை பாவம் பொல்லாது…” எலி மாமா எச்சரித்தான்.

 “போடா டுபுக்கு எலி மாமா.  வாயிலே நல்லா வந்துரும்….” அவன் கண்களைக் கசக்கினான். கொஞ்ச நேரம் கழித்துதான் அவனை எலி மாமா என்று அழைத்துவிட்டேன் எனப் புரிந்து கொண்டேன்.

பள்ளியில் வாரி வாரி கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்கள், அள்ளி அள்ளி கொடுக்கப்படும் வீட்டு வேலைகள், கோவில் தலைவர் பணி, மற்றும் கோழிக்குஞ்சுகளுக்குத் தாயாக இருப்பது என எனக்குத் தலைக்கு மேலே வேலைகள். அதனோடு தற்காலிகமாக வேட்டைக்காரன் பதவியும் சேர்ந்து கொண்டது.

பூனை படுத்திருக்கும் அலமாரி அறையின் மேலே ஓட்டை போட வேண்டும். அதன் வழியாக கயிற்றை நுழைத்து, பாதியாக உடைக்கப்பட்ட செங்கலைக் கட்டித் தொங்கவிட வேண்டும். கயிற்றின் இன்னொரு நுனிப் பகுதியை இழுத்து வந்து அருகிலிருக்கும் சன்னல் கம்பியில் கட்டிவிட வேண்டும். டாம் தூங்கும்போது கயிற்றை வெட்டி விட வேண்டும். இதையெல்லாம் காலையிலேயே செய்து விட வேண்டும்.

எலி மாமா டாமுக்கு பயந்து விலகிக் கொண்டான்.  பாப் ஐஸ்ஸும் துணைத் தலைவர் பதவியும் கொடுப்பதாக சொல்லி நான் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் கோவிலில் தொண்டராக இருந்த ஒருவனைச் சம்மதிக்க வைத்தேன். அவன் பெயர் புல்டாக். திட்டம் சரியாக நிறைவேற்றப்பட்டால் இன்னொரு பாப் ஐஸ் வாங்கிக் கொடுப்பதாகவும் ஆசை காட்டினேன். உடனே சம்மதம் சொல்லி விட்டான். நல்ல பருமனானவன் அவன். முகத்தில் சதை தொங்கும். அவனின் உருவம் டாம் அண்ட் ஜெர்ரியில், டாமே கண்டு ஓடும் முட்கள் கொண்ட கழுத்து பட்டையணிந்திருக்கும் ஸ்பைக் புல்டாக் நாயின் உருவத்தை ஒத்திருப்பதால் அவனுக்கு அந்தப் பெயரைச் சூட்டிருந்தேன்.

திரையில் டாமை பயந்தோட வைக்கும் ஸ்பைக் புல்டாக் தோற்றமுடைய இந்த சுமன் என்னோடு கைக்கோர்த்து கொண்டது கூடுதல் பலமானது.

பல சிரமங்களுக்கு ஈடு கொடுத்து, செங்கல், நீளமான கயிறு, குச்சிகளைத் தயார் செய்து பொருத்தி விட்டோம். முதல் நாள் டாம் வந்தபோது நாங்கள் ஒளிந்து மட்டுமே பார்த்தோம். இரண்டாம் நாளும் அவ்வாறே செய்தோம். பகலில் ஒரே நேரத்தில் டாம் தூங்குவதைக் கண்டுக் கொண்டோம். மூன்றாம் நாள் டாம் கொல்லப்பட்டாக வேண்டும். ‘ஆபரேஷன் டாம் அண்ட் ஜெர்ரி’ என இந்தத் திட்டத்திற்கு முன்பே பெயர் வைத்துதான் எல்லாவற்றையும் குறித்து வைத்தேன். ஒதுங்கிய ஜெர்ரி என்ற எலி மாமாவின் பெயரை வெட்டி கீழே ஸ்பைக் புல்டாக் என்ற பெயரை இணைத்த தகவல் முழுவதையும் கோவில் நிகழ்ச்சி நிரல் போலவே வரிசையாகப் பதிந்து வைத்திருந்தேன்.

தாக்குதல் நடத்த மூன்றாம் நாள் சென்ற போது குறுக்கே வந்த எலி மாமா எங்களோடு இணைவதாகக் கெஞ்சினான். நானும் பெருந்தன்மையோடு சேர்த்து கொண்டேன். அதுதான் ஒரு நல்ல தலைவனுக்கு அழகு.

வீட்டை நெருங்கியபோது ஆள் நடமாட்டம் இருப்பது போல தெரிந்தது. அதனால் டாம் இன்னும் தூங்க வரவில்லை என்பதை அறிந்து கொண்டேன். சன்னல் வழியாக ஒளிந்து கொண்டு தலையை ஆர்னால்ட் பாணியில் மெதுமெதுவாக உயர்த்தினோம். எனக்கு நன்கு அறிமுகமான அக்காவும், அல்லி முத்து சாரும் உடைகளைச் சரி செய்து கொண்டு கிளம்பினார்கள். எல்லாம் முடிந்து ஓடும் பரப்பரப்பிலிருந்த அவர்கள் எங்களைக் கண்டு கொள்ளவில்லை.

“டேய் அல்லிமுத்து சாருடா” என்று பல் இளித்தான் எலி மாமா. “கொஞ்சம் முன்னாடியே வந்திருக்கலாம்…” ஸ்பைக் புல்டாக்கும் ஏமாற்றம் அடைந்தான்.  இருவரும் சற்று முன் அவர்கள் எப்படி சில்க் டான்ஸ் ஆடியிருப்பார்கள் என்பதில் ஆர்வம் காட்டினர். எனது ஒரே குறி நான் வளர்த்த கோழிக்குஞ்சுகளைக் தின்ற அந்த டாமை பழிவாங்க வேண்டும். மற்றவையெல்லாம் பிறகுதான்.

மூன்றாம் நாள், நான்காம் நாள், ஐந்தாம் நாள் ஓடிவிட்டன. டாம் வரவேயில்லை.  கோழிக்குஞ்சுகளும் மூன்றாம் நாள் ஆபரேஷனக்கு பிறகு காணாமல் போகவில்லை. அவ்வாறே என் குறிப்பை மீள்பார்வை செய்தபோது அறிந்து கொண்டேன். டாம் காணாமல் போனப் பிறகு எலி மாமாவும், ஸ்பைக் புல்டாக்கும் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.

கோவிலில் பஜனைப் பாடும்போது, “நீ வாயை மூடுடா எலி மாமா” என்பான் புல்டாக்.  “நீ தொறந்து போட்டு ஆடுடா புல்டாக்…” பதில் கொடுப்பான் எலி மாமா.  முன்பெல்லாம் இப்படிதான் அடிக்கடி சட்டையைப் பிடித்து சண்டைப் போட்டு கொள்பவர்களை நான் தடுத்து நிறுத்துவேன். கைக்குலுக்கச் சொல்லி சமாதானம் செய்து வைப்பேன். ஆனால் இப்போதெல்லாம் நான் தலைமைபொறுப்பேற்றிருக்கும் கோவிலுக்கும் முன்பு போல இருவரும் வருவதில்லை. நானும் எதுவும் கண்டுகொள்ளவில்லை.

டாம் இனி வராது என்ற நம்பிக்கையில் இருபது கலர் கோழிக்குஞ்சுகளை அடம்பிடித்து என் அப்பாவை வாங்க வைத்தேன். புதிய வடிவில் பெரியதாக கோழிக்கூண்டு ஒன்றைச் செய்ய வேண்டும். பழையதை உடைத்தெறிய வேண்டும். அதனால் எனக்கு நிறைய கட்டைகளும் பலகைகளும் தேவைப்பட்டன.  வருங்காலத்தில் கோழிப் பண்ணை வைக்கும் திறமை எனக்கிருப்பதாக பக்கத்து வீட்டு மாலதி அக்கா சொன்னார். மாலதி அக்கா வீட்டிற்குக் குச்சிப் போல எலும்பாக அக்கா ஒருவர் தினமும் கதையடிக்க வருவார். மாலாதி அக்காவை ‘குண்டு’ என அழைப்பார். பதிலுக்கு ‘எலும்பி’ என மாலதி அக்கா அழைப்பார். வீட்டு வேலைகளை முடித்த பிறகு இருவரும் சினிமா கதையில் தொடங்கி யாருடைய மனைவி, யாருடன் ஓடி விட்டாள் என நிஜக் கதைக்குள் சென்று விடுவார்கள். அந்த எலும்பு அக்காவைதான் அல்லி முத்துசாருடன் நாங்கள் பார்த்தோம்.

தாத்தா வீட்டில் டாம் தூங்கும் கதவில்லாத அலமாரி நல்ல உறுதியான மரப்பலகையினாலது. டாமை கொல்லப் பொறி வைத்தபோது தட்டிப் பார்த்திருக்கிறேன். அதிலிருந்து பலகைகளைப் பெயர்த்து எடுத்து வலை கம்பிகள் கொண்டு அழகாகவும் அதே சமயம் உறுதியாகவும் கோழிக்கூண்டு செய்யலாம் எனத் தோன்றியது. எனக்குள் இயற்கையாகவே அந்தத் திறமை உள்ளது. என் திறமையைப் பார்த்த பக்கத்து விட்டு குண்டு அக்காவும், எலும்பு அக்காவும் “நீ பெரிய இஞ்சினியவர் ஆவடா…“ என்று புகழ்மாலைச் சூட்டுவார்கள்.

தாத்தா வீட்டு முன் பக்கமாக சற்று தூரத்தில் ஒரு கையில் சுத்தியலும் மறு கையில் உளியையும் பிடித்து கொண்டு உற்சாகமாக முன் வாசல் வழியாகச் சென்றேன். இம்முறை தனிப்பயணம். எலும்பு அக்கா அல்லி முத்து சாருடன் வெளியே வந்தார். புதரில் மறைத்து வைத்திருந்த மினி சைக்கிளை வெளியே இழுத்தார். அதன் அருகில் மோட்டார் சைக்கிளை அல்லி முத்து சார் வெளியே தள்ளினார்.  நான் பின் பக்கம் நகர்ந்து கால்வாய் புதரில் மறைந்து கொண்டேன். வெளியே வந்த இருவரும் சுற்றும் முற்றும் பார்த்தப் பிறகு கட்டியணைத்தப்படி பிரிந்தனர். அவர் மோட்டார் சைக்கிளைக் சற்று தூரம் வரை உட்கார்ந்தப்படியே தள்ளிக் கொண்டே சென்றார். அவர்கள் மறைந்ததும் முன் வாசல் வழியாக நுழைந்தேன்.

தாத்தாவின் இருபுற அண்டை வீடும் காலிதான். வசதியுள்ள தோட்டத்து வாசிகள் மாடுகள், ஆடுகளை விற்ற பணத்தில் தாமான் வீடு வாங்கிச் சென்று விட்டனர். அவ்வப்போது வீட்டைச் சுத்தம் செய்ய வருவதோடு தோட்டத்தைச் சுத்தமாக காலிச் செய்யும்போது எவ்வளவு பணம் கொடுப்பார்கள் என்பதையும் அக்கம் பக்கத்தில் விசாரித்து செல்வர்.

அலமாரியின் பலகை நல்ல தரமாக இருந்தது. யாரோ எகிறிக் குதிக்கும் சத்தம் கேட்டது. நான் அவசரமாக என் வேலையைத் தொடங்கினேன். இரண்டு அடுக்குப் பலகையைப் பிடுங்கி எடுத்து கொண்டு கோழிக்கூண்டு கட்ட வீட்டுக்குக் கொண்டு சென்றேன்.  புறப்படும் முன் அங்கு விரிக்கப்பட்டிருந்த அட்டை பெட்டியைப் பார்த்தபோது மனதில் ஏதோ கோபம் உறுத்தியது. அதில் மலம் கழித்தேன். இன்னும் போதவில்லை என்று சிறுநீர் கழித்து அவ்விடத்தை ஈரமாக்கினேன்.

பூனையில் சாபமோ என்னவோ கோழிக்கூண்டு கட்டும் என் கனவு இரண்டு நாட்களில் பாழானது. என் பெற்றோர்கள் அத்தை வீட்டிற்கு என்னைப் பொட்டலமாக கட்டி அனுப்ப தயார் செய்திருந்தனர்.

கோவில் தலைமை பொறுப்பிலிருந்து வெளியேற நேரம் வந்து விட்டிருந்தது. சக நண்பர்கள் அழுதார்கள். கடைசியாக ஒரு விருந்து ஏற்பாடு செய்யலாம் என்றேன். எல்லோரும் ஆளுக்கு ஒரு வெள்ளி வசூல் செய்து ரொட்டி, கேக் போன்றவற்றை வாங்கினோம். பக்கத்து வீட்டு குண்டு அக்கா தேநீர் கலக்கிக் கொடுத்தார். என்னைப் பிரிவதில் அவர்களுக்கு மனம் வரவில்லை. எலும்பு அக்காவும் எங்கள் பிரியாவிடை விருந்தில் கலந்து கொண்டார்.

“இந்தக் காளியம்மாவை மறந்துடாதடா. இது உன்னோட கோயிலு… இந்தப் பக்கமா வந்தா ஒரு வாட்டி பாத்துட்டு போடா…” என்றார் குண்டு அக்கா. சரி என்று ஆண் பெண்கள் பேதம் பாராமல் அனைத்து நண்பர்களையும் கண்ணீருடன் கட்டி அணைத்துக் கொண்டேன். எலி மாமாவும், ஸ்பைக் புல்டாக்கும் “அண்ணே… அண்ணே…“ என அதிக நேரம் ஒப்பாரி வைப்பது போலவே என்னைக் கட்டிக் கொண்டு அழுதார்கள்.

வயது ஏறயேற டாமை மறந்தேன். அதனால் கலர் கோழிக்குஞ்சுகளையும் மறந்தேன். எலி மாமாவை மறந்தேன். அதனால் அவன் உயிர் நண்பன் ஸ்பைக் புல்டாக்கையும் மறந்தேன். பிறந்த தோட்டத்தையும் மறந்தேன். ஆரம்பப்பள்ளி நண்பர்கள் அனைவரையும் இடைநிலைப் பள்ளி நண்பர்கள் மறக்கடித்தனர். இதுவரை வீடு வாங்காதவர்களுக்குத் தாமான் வீடுகள் கட்டிக் கொடுத்ததாகவும் ஏற்கனவே வீடு வாங்கியவர்களுக்குப் பத்தாயிரம் ரொக்கப் பணமும் அரசியல்வாதியின் முன்னணியில் ஒப்படைக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். என் அப்பாவுக்கும் கிடைத்திருக்கும் என எண்ணிக் கொண்டேன். தீபாவளிக்குக் கூட புதிய நண்பர்கள் உறவினர்கள் என பழைய நண்பர்களைச் சென்று பார்க்க நேரமும் மனமும் வரவில்லை. என் அப்பாவும் அம்மாவும் மாதம் ஒருமுறை என்னை வந்து பார்த்தனர். காலப் போக்கில் என்னைவிட வயது குறைவான தம்பி தங்கைகளைப் பார்த்து கொள்வதைக் காரணமாககச் சொல்லி என்னை மறந்தார்கள். என்னைக் குழந்தை பாக்கியமில்லாத அத்தைக்குத் தத்து கொடுத்து விட்டது போல உணர்ந்தேன்.

டீன்ஏஜ் எனக்கு ‘குட் பாய்’ சொன்னது. இருபத்தொரு வயதின் அடையாளமாக தங்கச் சாவிக் கொத்து வாங்கி அம்மா கொடுத்தார். எதற்குச் சாவி என்று கேட்டபோது சுதந்திரம் என்றார். சுயக்காலில் இனி நிற்க நினைவுப்படுத்தும் சாவி என்றார் அத்தை. 

பிறகு நான் மீண்டும் அம்மா வீட்டிற்குச் செல்ல நேர்ந்தது. வேலையையும் இங்கேயே பார்த்து கொள்ளவும் அப்பாவால் அம்மா வழியாக ஏவி விடப்பட்டேன்.

ஒரு நாள் சாலையின் ஓரமாக செயற்கையானப் பொன் நிறக் கூந்தலை விரித்து காற்றின் ராகத்திற்கு ஏற்ப ஆடவிட்டப்படி, வீட்டுக்குள் போடும் கவுனை அணிந்திருந்தப்படி ரோட்டில் நடந்து சென்ற ஒருத்தியைப் பார்த்தவாரே மோட்டார் சைக்கிளின் வேகத்தைக் குறைத்தேன். என்னை அவள் கவனித்ததை அறிந்து வேகமெடுத்தேன். திடீரென பூனை ஒன்று வேகமாக என் பாதையில் பாய்ந்தது. அதைக் காப்பாற்ற மோட்டார் ஹேண்டலை வலது புறமாகத் திருப்பினேன். சாலையோர கால்வாயை மறைத்துக் கொண்டிருந்த புதரில் மோட்டார் சைக்கிளோடு கவிழ்ந்தேன்.

சற்று முன் நான் பார்த்த பொன் நிறக் கூந்தல் பெண் ஓடி வந்து தூக்கிவிட்டாள். அவள் விழிப்பார்வையின் முன் விழுந்தது மிகப் பெரிய அவமானமாகத் தோன்றியது. மோட்டார் சைக்கிள் எனக்கான எல்லா அடியையும் வாங்கிக் கொண்டு விட்டது. என் இடது கால் முட்டித் தேய்ந்து ரத்தம் கக்கியது. நல்ல வேளையாக காலும் கையும் உடையவில்லை. மோட்டார் சைக்கிளின் கியர் இரண்டாக உடைந்து விட்டது. கால் உடையாதது அதிர்ஷ்டம்.

அம்மா வற்புறுத்தி பக்கத்தில் இருந்த கிளினிக்கு அழைத்துச் சென்றார். மருத்துவர் பரிசோதனை என்ற பேரில் மேலும் கீழும் பார்த்து விட்டு மருந்து எழுதினார். அதில் ஊசி மருந்து ஒன்றும் இருந்ததை என்னை மெத்தையில் படுக்க வைத்து கால்சட்டையைத் தளர்த்த சொன்னபோதுதான் தெரிந்து கொண்டேன். அடி பட்ட அதே காலின் பிட்டத்தில் ஒர் ஊசியைச் செறுகி விட்டு “இல்லன்னா இன்ஃபெச்ஷன் ஆயிடும்“ என்று சொன்னார்.

ஒரு வலியோடு இன்னொரு வலியையும் சுமந்து கொண்டு வீட்டிற்கு வந்து மெத்தையில் விழுந்தேன். ஊசி மருந்து வேலை செய்ததோ அல்லது அயற்சியோ தெரியவில்லை. படுத்த வேகத்தில் ஆழ்ந்த தூக்கத்திற்குள் சென்று விட்டேன்.  அதில் ஒரு கனவும் வந்தது. கனவில் நான் மாலையில் மோட்டார் ஓட்டிச் சென்ற அதே போன்ற சாலை ஒன்றில் நின்று கொண்டிருந்தேன். என் தலைமுடி பொன் நிறத்தில் காற்றில் அசைந்து கொண்டிருந்தது.  சட்டென எங்கிருந்தோ ஒரு பூனை என் மேல் பாய்ந்து முகத்தில் அடித்தது. நான் அலறிக் கொண்டு கீழே சாய்ந்தேன். அந்தப் பூனை என் மார்பில் அமர்ந்து என் முகத்தை உற்றுப் பார்த்தது. அதன் கண்கள் நான் எப்போதோ பார்த்த நீலக் கண்கள். ஆம் அது மொட்டை வால் டாம் தான்… அதே அலட்சியத்தோடு அது என்னைப் பார்த்து சிரித்தது.

நான் திடுக்கிட்டு விழித்துக் கொண்டேன். கால் வலி கூடி இருந்தது. மாலையில் நடந்த விபத்தை மீண்டும் நினைத்துக் கொண்டேன். சட்டென, சாலையில் குறுக்கே ஓடிய அந்தப் பூனையின் ஞாபகம் வந்தது. அந்தப் பூனையின் தோற்றம் இப்போது பிரகாசமாக ஞாபகத்தில் எழுந்தது. அதற்கு வால் இல்லை என்பதைவிட, அது மஞ்சள் நிறப் பூனை என்பது நினைவில் அழுத்தமாக விழுந்தது. அப்போது நான் படிக்காமல் விட்ட மஞ்சள் நிற அட்டை புத்தகத்தின் நினைவும் அதை கொடுத்த அல்லி முத்து சாரின் உருவமும் நினைவில் மங்கித் தெரிந்தன.

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...