மறதி

“வேசி… நான் மட்டும் இப்பொழுது ஊரில் இருந்திருந்தால், நிச்சயமாக அவளை ஏதாவது செய்திருப்பேன்… வேசி… காமப்பசி எடுத்து அலைகின்றாள்…” என உடைந்த ஆங்கிலத்தில் துண்டுதுண்டாக அக்கினோ சொல்லிக் கொண்டிருந்தான். அவனருகில் சுவரைப் பற்றியவாறு கிழவர் நின்று கொண்டிருந்தார்.

“அடுத்ததாக, அவள் மீது வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்யலாமென இருக்கிறேன்… எனக்குச் செய்த துரோகத்துக்கும் மகனைச் சரியாகப் பராமரிக்காததற்கும் சேர்த்து வழக்கு தொடுத்தால் நல்லது என என் தம்பி ஆலோசனை தந்தான்… நீதிமன்றம் வரை இழுத்து ஊரெல்லாம் அவளின் துரோகத்தைப் பகிரங்கப்படுத்தப் போகிறேன்… முன்னரே, முகநூலிலும் புலனத்திலும் அவள் அவனுடன் பேசிய உரையாடல்களை எல்லாம் பதிவிட்டு விட்டேன்… முதலாளியிடம் விடுப்பு கேட்டு காத்திருக்கிறேன். அதுவரை பொறுத்திருக்கிறேன்” எனச் சொல்லிக் கைப்பேசி திரையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். நடைபாதையில் சிறுவர்கள் கூச்சலிட்டுக் கொண்டு ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

அக்கினோவின் அருகில் நின்று கொண்டிருந்த கிழவர் நடைபயிற்சி முடிந்த களைப்பில் கண்களை மூடி மூச்சு இளைத்துக் கொண்டிருந்தார். கிழவரின் காதருகே குனிந்து அக்கினோ எதையோ உரத்துச் சொல்லிக் கத்தினான். அரை தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்ட குழந்தை வீரிட்டலறுவதைப் போல கிழவர் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு “வோ…வோ…” எனக் கத்தினார். 

“ப்பா… கண்ணை மூடாதீர்கள்… எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்… கண்களைத் திறங்கள்… உங்கள் நண்பர் வந்திருக்கிறார் பாருங்கள்… சலாம் அலைக்கும் சொல்லுங்கள்… சொல்லுங்கள்” எனக் கிழவரின் தளர்ந்து தொங்கிய மார்பில் லேசாக அடித்தான்.

நீண்ட உசுப்பலுக்குப் பின் என்னைப் பார்த்து வாயை அகலத் திறந்து காட்டினார்.  சொல்வதற்குப் பதில்கள் இல்லாதபோது வாயைத் திறந்து காட்டுவது கிழவரின் வழக்கம்.  நானே “சரி… சரி… வணக்கம்…” எனச் சிரித்துக்கொண்டே சொல்லி அவரின் கன்னங்களை வருடிப் பார்த்தேன். தாடி வளர்ந்த கன்னங்கள் சொரசொரப்பாக இருந்தன. சுவரிலிருந்து கைகளை விடுவித்துக் கொண்டு என் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டார்.

“எப்படி இருக்கீங்க?” எனக் கேட்டேன்.

வாயில் எச்சில் தெறிக்க “…ஹ்ஹ்ஹ்… நல்லா இருக்கேன்…” எனச் சொல்லிச் சற்றே தள்ளாடி நின்று கொண்டிருந்தார். அக்கினோ அவரைக் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று சக்கரநாற்காலியில் அமரச் செய்தான். கிழவருக்கு இன்னும் மூச்சு இளைத்துக் கொண்டிருந்தது. அக்கினோ அவனுடைய மகனுடன் காணொளி அழைப்புக்கு முயன்று கொண்டிருந்தான். அங்குச் சூழ்ந்து கொண்டிருந்த மெளனத்தை உடைப்பதற்காக கிழவரிடம் “ஐயா… ஐயா” என மொட்டைத் தலையை வருடிப் பேச முயன்று கொண்டிருந்தேன். கிழவர் அரைகண் விழிப்பில் தலையை மட்டுமே அசைத்துக் கொண்டு நடைபாதையே வெறித்துக் கொண்டிருந்தார்.

அடுக்ககத்தின் முதல் மாடியில்தான் உடற்பயிற்சிக் கூடம் இருந்தது. மாலை நேரங்களில் நடைபயிற்சி முடிந்ததும் உடற்பயிற்சிக் கூடத்தின் முன்னால் இருக்கும் நடைபாதையோர நாற்காலியில் கொஞ்ச நேரம் அமர்ந்து கைப்பேசியில் காணொளிகளைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வீட்டுக்குச் செல்வேன்.  வலப்பக்கம் நீச்சல் குளமும் இடப்பக்கம் நீண்ட நடைபாதையும் தெரிகின்ற இடத்தில் நீளிருக்கைகள் போடப்பட்டிருக்கும். நடைபாதைகளில் பெரும்பாலும் சிறுவர்கள்தான் சறுக்குப்பலகையில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அந்த நடைபாதையில் கிழவருக்கு நடை பழக்கிக் கொண்டிருந்தபோதுதான் பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரனான அக்கினோ அறிமுகமானான். சில மாதங்களுக்குத் தலையாட்டலும் புன்னகையுமாகத்தான் கடந்து சென்று கொண்டிருந்தேன்.

ஒரு நாள் அவனாகவே “தாமில்… தாமில்?” எனக் கேட்டான். ஆமாம் என தலையாட்டியதும் கிழவரைக் காட்டி அவரிடம் தமிழில் பேசச் சொன்னான். அரைகண் விழிப்பில் பற்றுவதற்குக் காற்றைத் துழாவிக் கொண்டிருந்தவரின் கைகள் பட்டென என் கைகளைப் பற்றிக் கொண்டன. பச்சை நிறக்கண்களும் வெளுத்த உருவமும் கொண்டிருந்த கிழவர் தமிழரைப் போலவே தெரியவில்லை. அவரின் காதருகே குனிந்து மெல்லிய குரலில் “சாப்டிங்களா… சாப்டிங்களா” எனக் கேட்டேன். திடுக்கிட்டவரைப் போல புருவம் அகல “ம்ம்ம்… சோ…று… சோறு கொடுத்தான்” எனக் குழறலாகப் பதில் சொன்னார்.  

“என்ன கறி”

“அடுப்புக்கரி…”

சிரிப்பு தாளாமல் “வேற என்ன சாப்டிங்க?” என்றதற்கும் “சோறுதான்…” என அழுத்தமாகவே சொன்னார். வேடிக்கையான பதில்களையும் அழுத்தமாகவே சொன்னார். அவரிடமிருந்து கைகளை விடுவித்துக் கொள்ளவே சிரமமாக இருந்தது. அப்படித்தான் கிழவருடன் பேசத் தொடங்கி அக்கினோவுடனும் நட்பு ஏற்பட்டது.

தமிழ் முஸ்லிமான நசீமை ஆறாண்டுகளாக அக்கினோ தான் பராமரித்து வருவதாகச் சொன்னான். “பிரதர், எனக்கு முன்னால் இவரை நான்கு பேர் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். முதலில் அவருடைய மனைவிதான் ஐம்பதாண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருந்தாராம்… மனைவி இறந்த பின் தான் கிழவருக்கு மறதி தொடங்கியிருக்கிறது… அவருடைய மனைவியை அடுத்து பார்க்க வந்த மூன்று பேர் ஆறு மாதம் கூட தாண்டவில்லை. அவருடைய மனைவிக்கடுத்து நான் தான் நீண்ட காலமாகப் பராமரித்து வருகிறேன்… உன்னுடைய ‘பாய் ஃபிரண்ட்’ எப்படி இருக்கிறார் என்றுதான் அவருடைய பேரக்குழந்தைகள் என்னிடம் வேடிக்கையாகக் கேட்பார்கள்… மாதத்தில் இரண்டு முறைதான் மகனும் குழந்தைகளும் அரை மணி நேரம் பார்த்துவிட்டுச் செல்வார்கள்… அந்தச் சடங்கில் கூட கிழவர் ஒன்றும் பேசாமல் தான் அமர்ந்திருப்பார். மற்றப்படி அவருக்கு எல்லா பணிவிடைகளையும் நான் தான் செய்து வருகிறேன்… வாயில் சுரக்கும் எச்சிலையும் சளியையும் விழுங்கக்கூட நான் தான் நினைவுப்படுத்த வேண்டியிருக்கிறது…” எனச் சொல்லியிருந்தான்.

ஒவ்வொரு நாள் நடை முடிந்தப் பின்னும் கிழவரை வைத்து வேடிக்கையொன்றை அக்கினோ நிகழ்த்துவான். நீச்சல் குளம் தெரியும் படி நடைபாதையில் போடப்பட்டிருக்கும் ஊஞ்சலில் கிழவரை அமர வைப்பான். ஊஞ்சலை ஆட்டி விட்டுக் கொண்டே “உங்கள் அப்பா பெயர் என்ன… அம்மா பெயர் என்ன?” எனக் கேள்விகளைக் கேட்கத் தொடங்குவான்.

ஊஞ்சலின் அசைவுக்குப் பயந்து குழறிக் “ஷேக் முஸ்தாபாஆஅ… ஆயிஷா பிபீ…” என எல்லா பெயர்களையும் ஒலி நீட்டித்துச் சொல்வார். கடைசியாக, “ப்பா, என்னுடைய பெயர் என்ன?” என்று கேட்பான். சிறிது நேர மெளனத்துக்குப் பிறகு “அக்கி…” என அடியெடுத்துத் தர “அக்கினோ…” எனச் சொல்லிவிட்டுக் கண்களை மூடிக்கொள்வார். பெயரை உச்சரித்தவுடன் தோளைத் தட்டி “வெரி குட்” எனச் சொல்லிக் கிழவரைப் பாரட்டுவான்.  அவனுடைய பெயரை உச்சரிக்கும் வரையில் ஊஞ்சலாட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும். அந்த வேடிக்கையில் நானும் சில நிமிடங்கள் பங்கெடுத்துவிட்டுப் போவேன்.

நீண்ட நேரம் முயன்றும் அக்கினோவின் மகன் அழைப்பை எடுக்கவில்லை. கிழவர் எச்சிலையும் சளியையும் வாயோரம் ஒதுக்கி வழிய விட்டுக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து “எச்சிலை விழுங்குங்கள்! விழுங்குங்கள்!” என அக்கினோ அதட்டினான். அவரின் காதருகே குனிந்து மடலை மெலிதாகக் கடிக்கவும் “ஏய்…ஏய்” எனக் கத்தியவாறே எச்சிலை விழுங்கினார்.

“பிரதர், உன் நேரத்தை எடுத்துக் கொள்கிறேனா… கொஞ்ச நேரம் காத்திருக்கிறாயா… என் தம்பியிடம் சொல்லி மகனை அழைக்க முயல்கிறேன்… நண்பர்களுடன் திடலுக்குப் பந்து விளையாடச் சென்றிருப்பான்… புதியவர்களிடம் பேசினால் அவனுடைய மனம் மாற்றமடையலாம்… என்னை மன்னித்துவிடு…” எனப் பலமுறை கெஞ்சி கேட்டுக் கொண்டான்.

“சரி… சரி ஒன்றும் சிக்கல் இல்லை” என்று சொன்னேன். அவனுடைய தம்பிக்கு அழைக்க முயன்று கொண்டிருந்தான். நான் பெரியவரின் விரல்களை இழுத்துச் சொடுக்கெடுக்க முயன்று கொண்டிருந்தேன்.

அக்கினோவின் மகனுக்கு எட்டு வயதாகிறது. கடந்த மாதம் ஊருக்குச் சென்று திரும்பியபோது எடுத்திருந்த குடும்பப் படங்களை என்னிடம் காட்டியிருக்கிறான். அந்தப் படத்தில் கடற்கரை மணலில் பதித்த காலடித்தடங்களுக்கு முன்னால் மனைவி, மகன் ஆகியோருடன் அலைக்குக் கால்களைக் காட்டியவாறு அக்கினோ நின்று கொண்டிருந்தான்.

“ஊரிலிருந்து கிளம்புவதற்கு ஒரு நாளுக்கு முன்னால்தான் மகனைக் கடற்கரைக்கு அழைத்துச் சென்றேன். எங்கள் ஊரிலிருந்து ஐந்து மணி நேர தொலைவில் கடற்கரை இருந்தது. நான் இங்கிருக்கும்போதே கைப்பேசியில் பலமுறை கடற்கரையைப் பார்க்க வேண்டுமெனக் கேட்டு நச்சரித்திருந்தான். அதனாலே கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னதாகக் கடலைப் பார்க்க அழைத்துச் சென்றேன். அலையைப் பிடிக்கத் துரத்துவதும் பின்வாங்கி ஓடுவதுமாக நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தான். அங்கிருந்து பதினேழு மணி நேரம் பயணம் செய்துதான் விமான நிலையத்துக்குச் செல்ல முடியும்… பேருந்தில் என் நெஞ்சின் மீதுதான் தலைசாய்த்துப் படுத்திருந்தான். பயணக்களைப்பில் அவர்களைப் பிரியப்போகிறோமென்ற எண்ணமே தோன்றவில்லை. விமானத்திலிருந்து இறங்கி மலேசியா வந்தடைந்ததை அவளிடம் அழைத்துச் சொன்னேன். அப்பொழுதும் வேலைக்குச் செல்ல வேண்டிய பரபரப்பு மட்டும்தான் இருந்தது. நான் விட்டு வந்த நாட்களில் தற்காலிகமாக என்னுடைய நண்பன் தான் நசீம் கிழவரைப் பராமரித்து வந்தான். நான் வந்ததும் முதலில் கிழவரின் கையைப் பற்றி ப்பா… என் பெயர் என்ன? என்பதைத்தான் அவரிடம் கேட்டேன். என்னுடைய பெயர் அவருடைய நினைவில் எங்குமே இல்லை. ஒரு மாதத்தில் எல்லாமே மாறியிருந்தது. அந்த நொடித்தான் என்னைக் கலங்கடித்து விட்டது. அவருடைய நினைவில் என்னுடைய பெயரை மீண்டும் பதியச் செய்ய ஒரு மாதமாகியது… அதனால் என்ன… இன்னொரு விடுமுறைக்குச் செல்லும்போது அவருடைய நினைவில் நான் மறுபடியும் அழிந்திருப்பேன்” எனச் சிரித்துக் கொண்டே சொல்லியிருந்தான்.

அவனுடைய தம்பியிடம் கைப்பேசியில் பேசிவிட்டு “பிரதர், நான் அழைப்பதை அறிந்ததும் நண்பர்களுடன் விளையாட சோள வயலுக்குச் சென்றுவிட்டானாம்… இன்னும் கொஞ்ச நேரத்தில் அவன் வீட்டுக்கு வந்ததும் மறுபடியும் அழைப்பதாக தம்பி சொல்லியிருக்கிறான்…” என்றான்.

கிழவரின் வாயில் மறுபடியும் எச்சில் கோழை வழியக் காத்திருந்தது. இம்முறை தன்மையுடன் “அப்பா… எச்சிலைத் துடைத்துக் கொள்ளுங்கள்…” எனச் சொன்னான். கிழவர் தன்னுடைய நீல நிறப் பாத்தேக் சட்டை பையிலிருந்த திசு தாளை எடுத்து வாயில் ஒற்றிக் கொண்டார். கிழவரின் தோளைத் தட்டிக் கொடுத்து “வெரி குட்” என்றான். கழுத்து வரை நீண்டிருந்த முடியைக் கோதிவிட்டுக் கொண்டே “அவனுடன் பேசியே இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன… முன்பு எல்லாம் காணொளி அழைப்புகளில் பேசும்போது… ‘மிஸ் யூ… மீஸ் யூ டாடி’ என்று பலமுறை சொல்வான்…’’

“இரவில் படுக்கப் போகும் முன் அவன் அம்மாவுடைய கைப்பேசியிலிருந்து அழைத்து ‘குட் நைட்’ சொல்லித் திரையில் முத்தம் கொடுத்து விட்டுத்தான் படுக்கவே செல்வான்… இந்த இரண்டு வாரங்களாகக் கைப்பேசியை அருகில் எடுத்துச் சென்றாலே தட்டி விடுகிறான்… நான் அனுப்புகிற குரல் பதிவுகளை ஒலிக்க விட்டாலும் கேட்பதில்லை என என் தம்பி சொல்கிறான்…”

“முதல் இரண்டு வாரத்துக்குச் சில சமாதானங்களைச் சொல்லி நாளைக்கு அம்மாவைப் பார்க்க அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தேன்… இப்பொழுது எதையும் சொல்ல முடிவதில்லை… பள்ளி முடிந்து வந்ததிலிருந்து தெருப் பையன்களுடன் விளையாடி விட்டு இரவுத்தான் வீட்டுக்கு வருகிறானாம்… இடையிலே வீட்டுக்கு அழைத்து வந்தால் சாப்பிடாமல் அழுது கொண்டே படுக்கைக்குச் செல்கிறான்… அதனால் தான் அவனைச் சமாதானப்படுத்த உன்னை அழைத்தேன்… மன்னித்து விடு பிரதர்… என்னால்தான் உனக்கு மிகச் சிரமம் … “என்றான்.

இல்லையெனத் தலையாட்டினேன்.

“அந்த வேசியினால் இவ்வளவும் நடந்திருக்கிறது… என் குடும்பத்தையே சிதைத்து விட்டாள்…” எனத் தனக்குத்தானே பேசிக் கொள்வதைப் போல சொன்னான்.

அவன் மனைவிக்கு இன்னொருவனுடன் தொடர்பு இருப்பதை அவன் கூறிய நாள் இன்னும் நினைவில் உள்ளது. மெல்லிய குரலில்தான் என்னிடம் அதைச் சொன்னான். அப்போது அவன் உடல் புழு போல சுருங்குவதைப் பார்த்தேன். “எனக்கு ஒரு சிக்கல்…” என்றுதான் பேச்சைத் தொடங்கினான். நான் குழப்பத்துடன் கிழவரைப் பார்த்தபோது, “அவரால் இல்லை… என்… என் மனைவி இன்னொருவனுடன் தொடர்பு வைத்திருக்கிறாள்…” என முணுமுணுக்கும் குரலில் சொன்னான்.  அவன் சொன்னதன் பொருள் விளங்கவே எனக்குக் கொஞ்சம் நேரமாகியது. அதன் பொருள் புரிபட்டதும் இயல்பாகவே என் முகத்திலிருந்த புன்னகையும் மறைந்தது. அவன் நின்று கொண்டிருந்த லிப்டருகே இருந்த சன்னல் சுவருக்கு வெளியே மழைநீர் தேங்கியிருந்த தடுப்புச்சுவரில் சிகரெட் துண்டுகள் அணைந்து கிடந்தன. சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த கிழவர் என்னைப் பார்த்து கைகளை நீட்டினார். அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு ஒன்றும் பேசாமல் அவனருகில் நின்று கொண்டேன். பரபரப்புடன் திரையில் ஓங்கி குத்துவதைப் போல அழுத்தத்துடன் தட்டச்சிட்டுக் கொண்டிருந்தான்.

“ஊருக்குச் சென்றிருந்தபோதுதான் அவளுடைய கைப்பேசியில் மின்னூட்டம் சீக்கிரம் தீர்வதைக் கண்டேன்… புதிய கைப்பேசி வாங்கி தருவதாகப் பலமுறை சொன்னபோதும் வேண்டாமென மறுத்துவிட்டாள்… ஒரு வழியாக கைப்பேசியை வாங்கி தந்துவிட்டுப் பழைய கைப்பேசியை நான் எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னேன்… அப்படியென்றால், பழைய கைப்பேசியையே பயன்படுத்திக் கொள்கிறேன் என எரிச்சலுடன் சொன்னாள்… அதனாலே, அங்கிருந்தவரையில் கைப்பேசியைப் பற்றியே பேச்செடுக்காமல் தவிர்த்து வந்தேன். அவள் பழைய கைப்பேசியையே பயன்படுத்தி வந்தாள். புதிய கைப்பேசி தனக்குப் பிடிக்கவில்லை என்றாள். எனக்கு இதெல்லாம் சந்தேகத்தை உண்டாக்கியது. மலேசியாவுக்குத் திரும்பும்போது அவளுக்குத் தெரியாமல் கைப்பேசியைக் கொண்டு வந்திருந்தேன்… நான் விமானம் ஏறும் முன் அவள் அதைக் கண்டுப்பிடித்துவிட்டாள். கைப்பேசியைத் தன்னிடம் கொடுத்துவிடும்படி அவள் கெஞ்சிய கெஞ்சல் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.”

நான் அவ்வப்போது என் பார்வையை அவனிடம் இருந்து விலக்கி இயல்பாக இருக்க முயன்றேன்.

“நான் கைப்பேசி என் கைக்கு வந்தது தற்செயல் என்றும் மலேசியா திரும்பியதும் முதல் வேலையாக அதை அனுப்புவதாகவும் சமாதானம் சொல்லி அடுத்த நிமிடமே அதை ஆராய முற்பட்டேன்.”

அவன் தான் ஏதோ குற்றம் செய்தவனைப் போல தலையைக் குனிந்து கொண்டான்.

“மெசெஞ்சரில் ஆர்கைப் செய்யப்பட்டிருக்கும் உரையாடல்களைப் பார்த்தப்போதுதான் தெரிந்தது… என்னுடைய பழைய நண்பனொருவனுடன் தான் ஒரு வருடமாகப் பேசிக் கொண்டிருக்கிறாள்… சீ வேசி! அவனுடன் காரில் நிறைய இடங்களுக்குச் சென்று வந்திருக்கிறாள்… ஒரு பெண் எப்படி இப்படிச் செய்ய முடியும்… ஒரு நாள் தவறாமல் கைப்பேசியில் என்னுடன் பேசுவாள்… சில சமயம் உருகி காதலைச் சொல்வாள். ஒருவேளை அவள் விலகலை நான் கணிக்காமல் இருக்க அவ்வாறு செய்திருக்கலாம். மனசாட்சி உறுத்தவில்லையா… விமானம் ஏறும் முன்னமே அவளிடம் கேட்டு விட்டேன்… முதலில் ஏதேதோ காரணங்களைச் சொல்லி மழுப்பினாள்… நான் செல்லும் விமானம் தாமதமாக வேண்டும் என கடவுளைப் பலமுறை வேண்டிக் கொண்டேன். அவளை எனக்குத் தெரிந்த வசை சொற்களில் திட்டினேன். இறுதியாக மகன் மேல் ஆணையாகக் கேட்கவும் மன்னிப்பு கேட்டாள்…” என்றான். கண்கள் சிவந்திருந்தனர். அது அழுகையாலா கோபத்தாலா எனத் தெரியவில்லை.

“இங்கு நான் இந்தக் கிழவரைப் பார்த்துக் கொண்டு விரதம் இருப்பவனைப் போல காசு சேர்த்து வைத்து ஊருக்கு அனுப்புகிறேன்… இந்த வேசி காமப்பசி எடுத்து கண்டவனுடன் நான் வாங்கி கொடுத்த காரில் சுற்றித் திரிகின்றாள்…” எனச் சொல்லி எச்சிலைத் துப்பினான்.

“எனக்குத் தொண்டையில் எதோ ஊர்வதைப் போல அருவருப்பாக இருக்கிறது… எதையுமே சாப்பிட முடியவில்லை… தூங்க முயன்றால் கூட முகத்தில் யாரோ பலமாக அமிழ்த்துவதைப் போலிருக்கிறது… விஷயம் தெரிந்ததுமே என் தம்பியிடம் சொல்லிப் பையனை எங்கள் வீட்டுக்கே அழைத்து வரச் சொல்லிவிட்டேன்… என் தம்பித்தான் காவல் துறையில் புகாரளிக்கச் சொல்கிறான். பின்னாளில் பையன் மீது அவள் உரிமை கொண்டாடாமல் இருக்க அது அவசியமாம்…” என்றான்.

“நான் மீண்டும் ஊர் திரும்பினால் அவளை எதாவது செய்துவிடுவேன் எனப் பயமாக இருக்கிறது” எனச் சொல்லிச் சுவரை நான்கு முறை பலமாகக் குத்தி விட்டு மூச்சை ஆழமாக இழுத்து விட்டுக் கொண்டான்.

 “என்னை மன்னித்துவிடு பிரதர்… நான் இப்படிப்பட்டவன் இல்லை. சூழ்நிலை என்னை இப்படி மாற்றிவிட்டது…” என நெஞ்சில் கைவைத்து அழுத்தினான். அவனுடைய தோள்களை மட்டும் தட்டிக் கொடுத்துவிட்டுப் “பார்த்துக்கொள்” எனச் சொல்லிவிட்டுச் சென்றேன்.

அதன் பிறகு, பார்க்கும்போதெல்லாம் அவனுடைய சிக்கலைப் பற்றி எதாவது சொல்லிக் கொண்டிருப்பான். அவனது மகனை முழுக்க தன்னுடைய தம்பி குடும்பத்தின் கண்காணிப்பில் விட்டுவிட்டதாகச் சொல்லியிருந்தான். மனைவி வந்து பார்ப்பதைக் கூட தடுப்பதற்காக வீட்டிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் வேறொரு பள்ளிக்கு மகனை மாற்றிவிட்டதாகச் சொல்லியிருந்தான்.

பிறகொரு முறை “பிரதர், எல்லாம் அவள் செய்த பாவத்துக்ககான சம்பளம்… கர்மா! உனக்குத்தான் என்னைவிட நன்றாகத் தெரியுமே… உங்கள் மதத்தில்தான் சொல்லியிருக்கிறார்கள்… கடவுள் அவளுக்குத் தகுந்த தண்டனை கொடுத்துவிட்டார்… எங்கள் ஊரில் இருக்கும் கத்தோலிக்கச் சபை நடத்தும் மருத்துவமனையில் தான்… சீ… என் முன்னாள் மனைவி வேலை செய்கிறாள்… அவள் அவனுடன் பேசியிருந்த எல்லா உரையாடலையும் மருத்துவமனை நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் செய்திருந்தேன்… அவள் செய்த துரோகத்துக்காக வேலையை விட்டே அவளை நிறுத்திவிட்டார்கள்… எட்டாண்டுகள் வேலை செய்த மருத்துவமனையில் இன்னும் சில ஆண்டுகள் வேலை செய்தால் அனுபவச் சான்றிதழ் கிடைக்கும்… அதனைக் கொண்டு வெளிநாட்டுக்குத் தாதியாகச் செல்ல வேண்டுமெனச் சொல்லியிருந்தாள்… அவள் செய்த துரோகமே எல்லாவற்றையும் தடுத்து நிறுத்திவிட்டது…  இப்பொழுது கூட இதைக் காரணம் காட்டி… என்னைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்கி மறுபடியும் பேச ஆசைப்படுவாள்… வேசி… எல்லாம் நாடகம்… அவளுக்கு இன்னும் நிறைய தண்டனைகள் காத்திருக்கின்றன…’’ என்றும் சொல்லியிருந்தான்.

நடைபாதையில் அந்தியிருள் சூழத் தொடங்கியதும் விளக்குகள் திறக்கப்பட்டன. மகிரிப் தொழுகைக்கான பாங்கொலி கேட்டது. விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் ஒவ்வொருவராக ஒழிந்து நடைபாதையில் நேபாளக் காவலாளி மட்டுமே அமர்ந்திருந்தான். நீண்ட காத்திருப்புக்குப் பின் அக்கினோவின் தம்பி அழைத்திருந்தான். காணொளி அழைப்பில் அக்கினோவின் மகன் முட்டியில் முகம் புதைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தான். அவனுடைய பெயரைச் சொல்லி அக்கினோ அழைத்துப் பார்த்தான். தலையை மட்டும் வேண்டாமென்பதைப் போல அசைத்து அழுகையொலியினூடே எதையோ சொல்லிக் கொண்டிருந்தான். அக்கினோவின் தம்பி பக்கத்தில் அமர்ந்து எதையோ சொல்லி வற்புறுத்த தலையைத் தூக்கித் திரையைப் பார்த்தவன் பட்டென தலை குனிந்து கொண்டான். அக்கினோ, என்னிடமும் கைப்பேசியைத் தந்து பேசச் சொன்னான்.

“ஹேலோ…ஹேலோ” என சில முறை அழைத்துப் பார்த்தேன். தலை நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் குனிந்து கொண்டான். அவனுடைய அழுகையொலி இன்னும் கோரமாக மாறியிருந்தது. அதற்கு மேல் அவனைக் கட்டாயப்படுத்த வேண்டாமெனச் சொல்லிக் கைப்பேசியை எடுத்துக் கொண்டான். அவன் தம்பியிடம் ஆவேசத்துடன் எதையோ சொல்லிக் கத்திக் கொண்டிருந்தவனிடம் சொல்லிக்கொள்ளாமலே கிழவரின் தோளைத் தட்டிக்கொடுத்துவிட்டுக் கிளம்பினேன்.

அதற்கடுத்துச் சில நாட்களாக அக்கினோவை நடைபாதையில் சந்திக்க முடியவில்லை. ஒரு வாரத்துக்குப் பின்னர்தான் அக்கினோவை மறுபடியும் சந்தித்தேன். நடைபயிற்சி முடிந்து கிழவரைச் சக்கரநாற்காலியில் அமர வைத்திருந்தான்.

“அன்றைக்கு எனக்காக என் மகனிடம் பேசியதற்கு மிக்க நன்றி…” எனச் சொல்லி என் கைகளைப் பற்றி நன்றி சொன்னான். கிழவர் சக்கரநாற்காலியில் அமர்ந்து தூங்கி கொண்டிருந்தார்.

“மறுபடியும் அவளைப் பார்க்க வேண்டுமெனச் சொல்லித்தான் அழுகிறான்… அவள் வந்து பார்க்கும் வரையில் என்னிடம் பேசமாட்டேன் என பிடிவாதமாகச் சொல்லிவிட்டான்… என்னையும் ஊருக்கும் வரவேண்டாமெனச் சொல்லி அழுகிறான்… இனி நான் என்ன செய்ய முடியும்… அவள் செய்த துரோகத்துக்கு நிச்சயமாக தண்டனைகள் இருக்கும்… அவளுக்கு நிகழவிருப்பதைக் கடவுளே கவனித்துக் கொள்ளட்டும்… அவன் முன்னால் நாமெல்லாம் எளிய மனிதர்கள்தானே…  நியாயத் தீர்ப்பு நாளின்போது செய்த பாவத்துக்கான தண்டனையிலிருந்து தப்ப முடியுமா…  என்னுடைய மகனுக்காக எல்லாவற்றையும் நான் கடந்துதான் ஆக வேண்டும்…” என்றான்.

கிழவரை எழுப்பி வலது ஆட்காட்டி விரலை எடுத்து மெல்லியதாகக் கடித்து “ப்பா…ப்பா!” எனக் கத்தினான். “ஏய்…ஏய்…”  எனக் கிழவர் கண்களைச் சுருக்கிக் கத்தினார். கிழவர் கத்துவதைப் பார்த்து “இன்னும் இரண்டு மாதத்தில் நானும் கிழவரைப் போல எல்லாவற்றையும் மறந்துவிடுவேன்… எந்தச் சிக்கலும் இருக்காது’’ எனச் சொல்லிச் சிரித்தான்.

சக்கரநாற்காலியை லிப்ட்க்கு தள்ளிக் கொண்டே “ப்பா… ப்பா என் பெயர் என்ன… என் பெயர் என்ன?” எனக் கிழவரிடம் கேட்டுக் கொண்டே லிப்ட் நோக்கித் தள்ளிக் கொண்டு சென்றான்.  லிப்டில் ஏறி மறைகின்ற வரையில் கிழவர் வாயை அகலத் திறந்து அக்கினோவின் கேள்விக்குப் பதிலை யோசித்துக் கொண்டிருந்தார்.

அரவின் குமார்

1 comment for “மறதி

  1. சர்வின் செல்வா
    September 8, 2025 at 12:27 pm

    அன்பு அரவினுக்கு,
    நல்ல கதை. காமத்தின் முழுமுதற் படைப்பாய் மனிதன் இங்கே நிகழ்ந்துக் கொண்டே இருக்கிறான். அதற்கு தன்னை ஒப்புக் கொடுத்துக் கொண்டே இருக்கிறான். ஒரு கணமும் குன்றாமலும், ஒரு துளிகூட தலும்பாமலும் அதில் தன்னை நிறைத்துக் கொள்கிறான். அள்ளிப் பூசிக் கொள்கிறான். அக்கினோ சென்று சேர்ந்த இடம் அது தான். பின்பு அவன் முழுதாய் வெறுக்கும் இடமும் அதுவே. மகனுக்காக அவளை அவன் மன்னிக்கலாம், அல்லது தனக்காக தன்னையே இழக்கலாம். என்னளவில், இரண்டும் ஒன்று தான். மறதியென வந்தமரும் தாத்தா. வேடிக்கை மட்டுமே பார்க்கும் கதை சொல்லி. மறப்பது இங்கே விடுதலை போல சொல்லப்படுகிறது. மறப்பது போல் ஒரு வரம் உண்டோ? அக்கினோ கடைசியாய் சொல்லும் வரி, தாத்தாவை போல், அவனும் இன்னும் சில நாட்களில், அனைத்தையும் மறந்து விடுவதாக சொல்கிறான். அதை மட்டும் சில முறை வாசித்தேன். அவனுக்கு மறதியை விட மரணம் ஒரு அக விடுதலையை அளித்து விடுமோ? நீங்கள் தொடும் இடம் இதுவா என்று தெரியவில்லை. கதை சொல்லி எனக்கு நெருக்கமாகிறான். வேடிக்கை பார்க்க தெரிந்தவனுக்கு இவ்வுலகம் ஒரு இன்பப் பெருவெளி அல்லவா?

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யலாம்...