
பள்ளியின் வாசல் திறந்தவுடன் மாணவர்கள் ஈசல் கூட்டம்போல ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டும் முந்திக்கொண்டும் அரக்கப் பரக்க வெளியே விரைந்தனர். கட்டொழுங்கோடு வரிசையாகப் புறப்படாமல், முடிச்சுக்களிலிருந்து அவிழ்த்துக்கொண்டது போன்று சிதறிக்கொண்டும் திட்டுத் திட்டாகவும், கூட்டமாய்ப் பேசிக்கொண்டும் கலைந்தும் மாணவர்கள் இரவு உணவுக்காக விரைந்துகொண்டிருந்தனர்.
மாலை வேளை.
லா பிளாஞ்ச்சோட் அந்த ஊருக்குப் புதிதாய்க் குடியேறி இருக்கிறாள் என்பதை அங்குள்ள மக்கள் அறிவர். பொதுமக்களுக்கு அவளின் வருகையைப் பற்றி தெரிந்திருந்தாலும் அவளைப் பற்றிய தரங்குறைவான பேச்சே அச்சமூகத்தில் அரசல் புரசலாக ஒலித்துக்கொண்டிருந்தது. சில மாணவர்கள் லா பிளாஞ்ச்சோட்டின் மகன் சைமனின் நிராதரவு மீது இரக்கம் கொண்டும், சிலர் இழிவான பார்வையிலும் அவனின் இருப்பை எதிர்கொண்டனர்.
சைமன், லா பிளாஞ்ச்சோட்டின் மகன் அன்று காலையில்தான் முதல்நாளாகப் அப்பள்ளியில் பதிவுசெய்துகொண்டு, பயின்று, மாணவர் திரளின் ஒருவனாக வெளியே வந்தான்.
சைமன் யாருக்கும் சரியாக அறிமுகமாகாதவன். ஏனெனில் அவன் பிற பிள்ளைகளோடு நட்புகொள்வதில்லை. அவர்களோடு சேர்ந்து தெருவில் விளையாடுவதில்லை. ஆற்றங்கரைக்குச் செல்வதில்லை. அதனால் சைமனை அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அப்படியே அவனோடு சேர்ந்து படிக்கவேண்டியிருந்தாலும் உடல் மொழியிலும் உரையாடலிலும் வெறுப்பையே கக்கினர். இன்று காலையில் அவன் பள்ளியில் படிக்கும் பதினான்கு பதினைந்து மூத்த மாணவர்கள் கூட்டமாய்க் குழுமி, ஒரே குரலில் அவனைக் கேலிச் செய்யத் தொடங்கினர். “உனக்குத் தெரியுமா…. சைமன் தந்தை இல்லாதவன்” என்று அவன் காதுபட சொல்லி இழிவு செய்தனர். அதே வாக்கியத்தை ஒருவன் கேட்க, பலர் ஒருசேர பதில் சொல்லி சைமனைச் சீண்டினர்.
லா பிளாஞ்ச்சோட்டின் மகன் பள்ளிக்கூட வாயிலை விட்டு வெளியேறி, வம்பர்கள் கூடி நின்ற இடத்தைக் கடந்துகொண்டிருந்தான். அவர்கள் கூடிநின்று பேசிய இழிசொற்களைக் காதில் வாங்காமல் அவன்பாட்டுக்கு நடந்துகொண்டிருந்தான். அவனை அச்சொற்கள் சீண்டவில்லை. எனவே, அவன் முதலில் பொருட்படுத்தவில்லை. அவனுக்கு ஏழு, எட்டு வயதுதான் இருக்கும். வெளிறிய முகத்தோடு தூய்மையான உடையில் இருந்தான். சாந்தமான தோற்றம் உள்ளவனும்கூட. ஆனால், அம்மாணவர் கூட்டத்தை நெருங்க நெருங்க அவனை நோக்கிக் கேலிச் செய்பவர்களின் சொற்காளால் சீண்டப்பட்டு அருவருப்பு கொண்டான். ஆனாலும், தன் பாட்டுக்கு நடந்துகொண்டிருந்தான். கேலிச் செய்ய ஒன்றுகூடியிருந்த மாணவர்களைச் சடுதியில் கடந்து வீடு நோக்கிப் போவதிலேயே கண்ணாய் இருந்தான் சைமன். அவன் கண்டுகொள்ளாமல் போவதைப் பார்த்த மாணவர்கள் கடுப்பில் உசுப்பேறி, கொஞ்சமும் இரக்கமில்லாமல் சைமனை எரிச்சலூட்ட மேலும் மோசமான சொற்களைக் கொண்டு தாக்கினர். சைமனைக் கடந்து போகவிடாமல் அவனைச் சுற்றிக் கூடிநின்று மேலும் கூர்மையான வார்த்தைகளைப் பிரயோகித்தனர். அவனின் நிராதரவை எள்ளி நகையாடினர். அவர்களுக்கிடையே சிக்கித் தப்பிக்க முடியாமல் அவமானப்பட்டுக் கிடந்தான் சைமன். அவர்கள் எதற்காக தன்னை வளைத்துச் சூழ்ந்துகொண்டு போகவிடாமல் செய்கிறார்கள் என்று புலப்படாதவனாய் விழித்தான். சைமனைப் பற்றிய தகவலைத் தெரிந்துகொண்டு வந்த மாணவன் ஒருவன் எதையோ கண்டுபிடித்துவிட்ட குதூகளிப்பில், “நீ உன்னை என்னவென்று கூப்பிடுவாய்?” என்றான்.
அவன் சொன்னான், “சைமன் என்று.”
“சைமன் என்ன?” என்றான் அந்த உயர் வகுப்பு மாணவன்.
என்ன நடக்கிறது என்று குழம்பிய சிறுவன் மீண்டும், “சைமன்” என்றான்.
சைமனின் பதிலால் ஆத்திரமுற்ற அந்த மாணவன், “ உனக்கு வெறும் சைமன் என்று பெயரிட்டிருக்க வாய்ப்பில்லை. சைமன் என்ற உன் பெயரோடு இணைந்து இன்னொருவர் பெயரும் இட்டிருப்பார்கள்,” என்று கத்தினான்.
அந்த அதட்டலில் மிரண்டுபோன சைமன் கண்களின் விளிம்பில் நீர் தேங்கி நிற்க, “எனக்குச் சைமன் என்றுதான் பெயர்,” என்றான் வெள்ளந்தியாக.
சைமனைச் சுற்றி வளைத்துக்கொண்டு நின்றவர்கள் குபீர் என்று கெக்களித்தார்கள். எதையோ சாதித்துவிட்டவன் போல அம்மாணவன் உரக்க பிரகடனம் செய்தான், “பார்த்தீர்களா, இவன் அப்பா பேர் தெரியாதவன்!”
சட்டென்று அந்த இடம் ஓசையற்றுப் போனது. அந்தக் கெக்களிப்புக் கூட்டத்தினர் அவ்விளைஞனின் இழிசொற்களால் மௌனமானார்கள். தந்தையற்ற அந்தச் சிறுவனை ஒரு ஜந்துவைப்போல இழிந்து பார்த்தார்கள். இப்படிப்பட்ட பிராணி பூமியில் இருக்க வாய்ப்பே இல்லை என்பதுபோல கீழ்மையான சொற்களால் தாக்கினார்கள். அவன் அம்மா லா பிளாஞ்ச்சோட் எப்படிப்பட்டவளாக இருக்ககூடும் என்று அனுமானத்தைக் கிளர்த்தும் வண்ணம் அவர்களின் அடர்ந்த மௌனமும் குறுகுறுவென்ற பார்வையும் நிறுவிக்கொண்டிருந்தது.
சைமன் அவர்கள் கீழ்மையைத் தாங்க முடியாதவனாய்க் கீழே விழப்பார்த்தான். நல்ல வேளையாக அருகிலிருந்த மரத்தை ஆதரவாகப் பிடித்துச் சுதாரித்துக்கொண்டான். தாள முடியாத பேரிடரால் தாக்கப்பட்டவனைப்போல செயலிழந்து தடுமாறினான். அவர்களுக்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டும் என்று சிந்தித்தவனுக்கு அந்தக் கூட்டத்தின் அச்சுறுத்தல் கொடுத்த பதற்றத்தால் ஒரு உபாயமும் எழவில்லை. தனக்குத் தந்தை இல்லை என்ற குற்றச்சாட்டிலிருந்து விடுபடுவது சாத்தியமில்லை என்று தோன்றியது. கடைசியாக, ஏதோ அப்போது அந்த நெருக்கடியான சூழலிலிருந்து தன்னைத் தணித்துக்கொள்ள ஒரு வேகத்தில் கத்திச் சொன்னான் “எனக்கு அப்பா இருக்கிறார்,” என்று.
“அது உண்மையென்றால் அவர் எங்கே?” என்றான் அந்த அடாவடிக்காரன் அவனை மடக்க.
சைமன் அமைதியானான். அவனுக்கும் தெரியவில்லை. சுற்றி நின்ற பையன்கள் அதீதமான ஆர்வத்தால் தூண்டப்பட்டனர். சைமனின் பதில் என்னவாக இருக்கும் என்ற அனுமானத்தில் சலனமற்றுக் காத்திருந்தனர். அவர்களின் இச்செயல் மிருகத்தனமானது. தன் பசியைத் தீர்த்துக்கொள்ள தன் சொந்த இனத்தையே வேட்டையாடும் கொடூர மிருகத்துக்கு ஈடானது. தான் அடிக்கடி பார்க்கும் அண்டைவீட்டு விதவையின் மகனின் நிலை பற்றி சைமனுக்குச் சட்டென்று நினைவுக்கு வந்தது. சைமனைப்போலவே அவனும் தன் விதவை அம்மாவோடு தனியாகத்தான் இருப்பான்.
“உனக்கும் அப்பா இல்லை. இல்லைதானே!” என்று அந்தப் பையனைக் கேட்டான் சைமன்.
பதில் சொன்னான் அடுத்த வீட்டுச் சிறுவன். “எனக்கு அப்பா இருக்கிறார்.”
“அப்படியென்றால் அவர் எங்கே?” சைமன் ஆர்வமிகுதியில் வினவினான்.
“அவர் இறந்துவிட்டார்,” எனச் சொல்லிவிட்டு, “மிகுந்த பெருமையோடு இறந்துவிட்டார். அவர் அந்தக் கல்லறையில் படுத்திருக்கிறார். அவர்தான் என் அப்பா,” என்றான்.
நினைவில் எதிரொலித்த அந்தப் பையனின் வாக்குமூலம் சைமனுக்கு நம்பிக்கையை வரவழைத்தது. அப்பா கல்லறையில் படுத்திருக்கிறார் என்ற அண்டைவீட்டுப் பையனின் சொற்கள் அப்பா இல்லை என்ற சொற்களைவிட வலிமையானது என்று சைமன் நினைத்தான். இந்த முரட்டுப் போக்கிரிகளின் மோசமான அப்பாக்களைவிட, குடிகார அப்பாக்களைவிட, திருட்டு அப்பாக்களைவிட, மனைவிமார்களை அடித்து துவம்சம் செய்யும் அப்பாக்களைவிட, அப்பா என்ற ஒருவர் இல்லாமல் இருப்பது எவ்வளவோ மேல் என்று எண்ணினான் சைமன். இவர்கள் போன்று நன்னடத்தையற்ற அப்பாக்களை உடையவர்களுக்குத் தனக்குக் கொடுக்கின்ற இதே போன்று அழுத்தங்களைக் கொடுத்தால் இவர்கள் மூச்சுத் திணறிவிடுவார்கள் என்றும் மனதில் நினைத்துக்கொண்டான் சைமன்.
சைமனை நேரெதிரில் நின்று மிரட்டிக்கொண்டிருந்த அந்த மூத்த மாணவன், தன் நாக்கை வெளியே நீட்டி, காற்றில் ஆட்டி உரத்துச் சொன்னான் ஏளனமாக, “தந்தை அற்றவன்! தந்தை அற்றவன்!”
கோபம் பொங்க சைமன் சட்டென்று தன் இரு கைகளாலும் அவன் தலைமுடியைப் பற்றி, தன் கால்களால் அவன் இரு கால்களையும் இழுத்து வீழ்த்த முயன்றான். அவன் கன்னங்களையும் பற்களால் இழுத்துக் கடித்தான். அவர்களிடையே பலத்த இழுபறி நடந்தது. சுற்றி இருந்த மாணவர்கள் உற்சாகம் மிகுந்து கூச்சலிட்டனர். சண்டையில் சைமனுக்குத்தான் பலத்த அடி விழுந்தது. புரண்டு புரண்டு பொருதியதில் உடலில் சிராய்ப்புக்களும் உடையில் கிழிசல்களும் உண்டாயின. ஆங்காங்கே குருதி சிவப்புப் பொட்டுக்களாய் சிதறி எட்டிப்பார்த்தன. தடுமாறி மீண்டு எழுந்து புழுதி கோர்த்த சட்டையைத் தட்டினான். கூட்டத்தில் யாரோ ஒருவன், “இப்போ போய் உன் அப்பாவிடம் சொல்,” என்று அவனைத் தாக்கிய களிப்பில் கத்தினான்.

மனம் வெகுவாய் உடைந்திருந்தான் சைமன். அவர்கள் தன்னைவிட பலசாலிகள். அவர்களின் தாக்குதளுக்கு மறு தாக்குதல் செய்ய இயலவில்லை. தனக்கு அப்பா இல்லை என்பது உண்மையே. ஆனாலும் அந்தச் சண்டித்தனம் செய்யும் பையனோடு சரிநிகராக முடிந்தமட்டும் சண்டை போட்டான். விழிகளில் ஈரம் கோர்த்துச் சிந்தும் விளிம்பில் தேங்கியது. அவனுக்கு மூச்சு தடுமாறி, சட்டென்று நின்றுவிடும் போலிருந்தது. அழுகை வெடித்து வெளியே வந்துவிடத் துடித்தது. அது வெளிப்படாமல் நிறுத்த முயன்றான். ஆனாலும் வெடித்துச் சிதறியது. அந்தக் கூட்டத்திலிருந்து விடுபட்டு விலகினான். காட்டுமிராண்டித்தனமான அத்துமீறல்களால் அவர்கள் சைமனின் வீழ்ச்சியைக் கைகளைக் கோர்த்துக்கொண்டு நடனமாடிக் கொண்டாடினர். “தந்தையற்றவன்… தந்ததியற்றவன்… ஹா ஹா ஹா…”
சைமன் விழிநீரைத் துடைத்துக்கொண்டு தேம்பி அழுவதை நிறுத்தினான். வெறித்தனம் கொண்டு வெகுண்டான். அவன் கால்களுக்குக் கீழ் கற்கள் தென்பட்டன. அவற்றை பொறுக்கி எடுத்தான். பலங்கொண்டமட்டும் அவர்களை நோக்கி வீசினான். இரண்டொரு கற்கள் அவர்கள்மீது பட்டன. கற்கள் மேலும் பறக்கும் என்று அஞ்சியவர்கள் அங்கிருந்து ஓட்டம்பிடிக்கத் தொடங்கினர். பக்கத்தில் கூட்டம் இருக்கும் துணிவில் கூட்டத்தோடு கூச்சலிடும் கோழைகள். ஒருவன் மிரண்டு ஓட மற்றவர்களும் விழுந்தடித்து ஓடுகிறார்கள். அப்பா இல்லாதவன் என்ற சொல் பிரதிபலிக்க அவன் தனித்து நின்று வருந்தினான். தந்தையற்றவன் என் சொல் அவனுக்குள் இழிசொல்லாக நுழைந்து பாதித்தது. அவமானம் மண்டையைக் கனக்கச் செய்தது. அப்பழிச்சொற்கள் அவன் நாடி நரம்புகளுக்குள் ஊடுறுவிக்கொண்டிருந்தன. அவன் ஒரு முடிவுக்கு வந்தான். ஓடும் ஆழமான ஆற்றில் விழுந்து, திரண்டு ஓடும் நீரால் இழுத்துக்கொண்டுபோய் அவன் மறைந்துவிட வேண்டும் என்று நினைத்தான்.
கொஞ்ச நாட்களுக்கு முன்னால், சரியாகச் சொன்னால் எட்டு நாள்கள் இருக்கும். ஒர் ஏழை பராரி தன் பசியைப் போக்க பணமில்லாமல், வேறு வழியற்று தன்னை அந்த ஆற்றுக்குப் பலிகொடுத்துக்கொண்டான். பிணத்தை ஆற்றிலிருந்து மீட்கும்போது அவன் அங்குதான் இருந்தான். பிணத்தைப் பார்ப்பதற்குப் பாவமாக இருந்தது. அடையாளமற்று அசிங்கமான தோற்றம் கொண்டிருந்தது. உள்வாங்கிய சோகையான கன்னங்கள், சேறு மண்டிய நீண்ட தாடி, விழித்துக்கொண்டிருந்த அமைதி நிறைந்த கண்கள் என அவன் உருவத் தோற்றம் இருந்தது. அங்கே வேடிக்கை பார்த்தவர்கள், “அவன் செத்துவிட்டான்” என்றனர்.
“அவன் இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறான்!” என்றனர் சிலர்.
சைமனுக்குத் தானும் தற்கொலை செய்துகொண்டால் என்ன எனத் தோன்றியது. ஏனெனில் அவனுக்கு அப்பா என்ற ஒரு ஆதரவு துணை இல்லை. ‘கையில் காசு இல்லாத காரணத்தால் அவன் தற்கொலை செய்துகொண்டான். எனக்கும் தந்தையில்லை நானும் இறந்து போகலாம்தானே.’ அவன் ஆற்றை நெருங்கி திரண்டு ஓடும் நீரைப் பார்த்தான். மீன்கள் நீரில் மேல் மட்டம் வரை நீந்தி வந்து பாய்ந்து நீரின் மேல் ஊறும் பூச்சிகளைத் தாவிப் பிடித்து இரையாக்கிக்கொண்டிருந்தன. அதனைப் பார்த்துக்கொண்டிருந்தவன் அழுவதை நிறுத்தினான். மீன்களின் இரைக்கான தாவல்கள் அவனை வெகுவாக ஈர்த்தது. திடீரென பெரிய புயல் வீசி மரங்களை வீழ்த்திச் சாய்த்த பின்னர் ஒரு பேரமைதி நிலவுவதுபோல, இந்த மீன்களின் நடனத்தின் மீதான கவனம் வற்றிய பின்னர், அவனை அவமானப்படுத்திய அந்த நிகழ்வு மீண்டும் துளிர்த்தது. ‘ஆமாம் நானும் ஆற்றின் சுழிப்பில் சிக்கி இறந்து போகலாம்தானே? ஏனெனில் எனக்கு அப்பா இல்லையே!’
வானிலை இதமாக இருந்தது. கதிரவனின் மிதமான வெப்பத்தில் புற்பரப்பு பார்க்க மேலும் பச்சையம் ஏறி அவனுக்குச் சுகானுபவத்தைக் கொடுதத்து. ஆற்று நீர்ப்படலம் கண்ணாடியை நிகர்த்திருந்தது. சைமனுக்கு அது சில நிமிடங்கள் ஆறுதலைத் தந்தது. தன்னில் நிலைகொண்ட சோகத்தை அது சற்றே நீக்கியது. அந்தப் புற்பரப்பு அவனுக்குத் உறக்கத்தை வரவழைப்பதாய் உணர்ந்தான்.
ஒரு குட்டி பச்சை நிறத் தவளை அவன் காலுக்குக் கீழ் தாவிச் சென்றது. அதனைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசை எழ குனிந்து முயன்றான். அது தப்பித்துவிட்டது. மீண்டும் முயன்றான். மூன்று முறையும் தோல்விதான். கடைசியில் அதன் பின்னங்கால்களைக் கைப்பற்றினான். பிடிபட்ட பின்னரும் அது தப்பிக்க முயற்சியில் ஈடுபட்டதை உணர்ந்தபோது அவன் மகிழ்ச்சியில் திளைத்தான். அது தன் பலத்தைத் திரட்டி கால்களை ரப்பர்போல் நீட்டித்து எவ்வாறாயினும் தப்பித்துப் பாய்ந்து ஓட முயன்றது. அதன் கண்கள் அகலத் திறந்து முழிகள் வெளிக்கிளம்பி நின்றன. அதன் முன்னங்கால்கள் காற்றில் தாவின. அவை கைகளைப்போல நீண்டு தாவ முயன்றன. அதன் கால்கள் அப்போது ஆணிகளால் இறுக்கப்பட்ட ஓர் விளையாட்டு பொருள்போல காட்சியளித்தது. பயிற்சியை மேற்கொண்டிருக்கும் ராணுவ வீரனின் கால்கள்போலவும் இருந்தது அதன் அப்போதைய தோற்றம்.
அவனுக்குத் திடீரென தன் வீடும் அம்மாவும் நினைவில் எழுந்தது. அந்த நினைவு அவனுக்குள் பெரும் சோகத்தைத் திரட்டி அழ வைத்தது. அவன் உதடுகள் நடுங்கின. அவன் வழக்கமாக உறங்கப் போகும் முன் முழங்காலிட்டு அமர்ந்து சில மந்திரங்களை ஜெபிப்பதுபோல செய்ய முற்பட்டான். ஆனால், பிரார்த்தனையை முடிக்க இயலவில்லை காரணம் சொல்லொணா சோகம் அலையலையாய் மோதி அவனை விம்மி விம்மி அழ வைத்தது. அவன் முற்றாகவே உடைந்து நொறுங்கினான். சுற்றி நடப்பவை எதுவுமே அவன் கவனத்தைக் கோராமல் அவன்கொண்ட கவலை மட்டுமே அவனை முழுமையாகச் சூல்கொண்டது!
அச்சமயம் அவன் எதிர்ப்பாரா தருணத்தில், இரு கனமான கரங்கள் அவன் தோளைத் தொட்டு கரகரத்த குரலில், “நீ மிகக் கவலையாக இருக்கிறாய் போலிருக்கிறதே, அதற்கான காரணம் என்னவென்று நான் அறிந்துகொள்ளலாமா என் இனிய நண்பனே?” என்றது.
சைமன் திரும்பிப் பார்த்தான். சுருள் சுருளான முடியோடும், கருமையான தாடியோடும், உயரமான உருவத்தோடு ஒருவர் அவனைக் கண்மாறாமல் கனிவாகப் பார்த்தபடி நின்றிருந்தார். “எனக்கு… எனக்கு… அப்பா இல்லை என்பதற்காக அவர்கள் என்னை அடித்துத் காயப்படுத்தினார்கள்,” என்றான் கண்களில் கண்ணீர் வடிய.
“என்ன?” என்ற வியப்போடு வினவியவர், “ஏன், எல்லாருக்கும் அப்பா இருப்பார்களே!” என்றார்.
கவலையில் தோய்ந்துபோன பையன் மன வலியோடு சொன்னான், “எனக்கு அப்பா இல்லை!” என்று.
அம்மனிதர் இப்போது பையனின் நிலையைச் சற்றுக் கூர்மையாகக் கவனிக்கலானார். லா பிளாஞ்ச்சோட் அவ்வூருக்கு வந்ததலிருந்து சைமனை அவனுக்கு அரைகுறையாகத் தெரிந்திருந்தது.
“நல்லது,” என்று சொல்லி, “நீ கவலையைவிட வேண்டும். நான் உன்னை உன் அம்மாவிடம் அழைத்துச் செல்கிறேன். உனக்கு அவர் அப்பாவைப் பெற்றுத் தருவார்.”
அம்மனிதர் பையனின் கையை அன்போடு பிடித்துக்கொள்ள அவர்கள் வீடு நோக்கி நடந்தார்கள். அவர் முகத்தில் மாறாத புன்னகை நிலைத்திருந்தது. அவருக்கு லா பிளாஞ்ச்சோட்டை சந்திக்க இது ஒரு நல் வாய்ப்பு என்று எண்ணினார். இந்த ஊரிலுள்ள பெண்களிலேயே அவள் மிகுந்த அழகானவள் என்று ஊரார் பேசுவதைக் கேட்டிருக்கிறார். ‘ஒரு முறை வாழ்க்கையைத் தவறவிட்ட பெண் மீண்டும் ஒரு முறை தவறவிடுவதற்குச் சாத்தியமே இல்லை,’ என்று மனதில் எண்ணிக்கொண்டார்.
அவர்கள் ஒரு அழகிய வெள்ளை நிறமடிக்கப்பட்ட வீட்டின் முன் வந்து சேர்ந்தனர்.
“இதுதான் என் வீடு,” என்று சொல்லிவிட்டு அழும் குரலோடு, “அம்மா…”என்று கூவி அழைத்தான்.
ஓர் அழகிய உயரமான பெண் வெளியே வந்தாள். அம்மனிதரின் புன்னகை மறைந்தது. வாசலில் எந்த முகப்பூச்சுமின்றியும் பாவனையற்றும் நிற்கும் பெண்ணிடம் குறும்புத்தனமெல்லாம் வைத்துக்கொள்ளக் கூடாது. கவனமாக இருக்க வேண்டும், அவள் இன்னொரு ஆணோடு வாழ்ந்தவள், ஆண்களைப் பற்றி அவள் அறிவாள், ஆண்களிடம் ஏமாறக் கூடாது என்றும் படிப்பினையைக் கற்றவள் எனவே, அவளிடம் கூடுதல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் கவனமிகுந்தார்.
அவள் இருப்பால் சற்று பதற்றமுற்றவர், தன் தொப்பியை உடனே கழற்றி கையில் வைத்துக்கொண்டார். “ஆற்றங்கரையோரம் தன்னிலை மறந்த உங்கள் மகனைப் பத்திரமாக கொண்டுவந்து உங்களிடம் சேர்ப்பிக்கிறேன் மேடம்.” என்றார்.
அவளைக் கண்டவுடன் ஓடிப்போய் பாய்ந்து கழுத்தைக் கட்டிக்கொண்டவன் அழத் தொடங்கினான். “அம்மா நான் ஆற்றில் குதித்துச் செத்துப்போக நினைத்தேன். எனக்கு அப்பா இல்லாததால், அதனைச் சுட்டிக்காட்டியே கேலிச் செய்து, அடித்துக் காயப்படுத்தினார்கள் சில மாணவர்கள்,” என்றான் சைமன்.
அந்த இளம் தாயின் முகம் சினத்தில் சிவந்துகொண்டிருந்தது. அவள் அவனை இறுக அணைத்துக்கொள்வதன் மூலம் தன் கோபத்தையும் தணித்துக்கொண்டிருந்தாள். ஆனால், அவள் கண்களும் நனைந்தன.
அம்மனிதரையும் அவர்களின் துயரம் தீண்டியது. அந்தத் துன்பத்திலிருந்து எப்படித் தன்னை விடுவித்துக் கொள்வது என்பது அவருக்குத் தெரியவில்லை. ஆனால், சைமன் திடீரென அவரிடம் ஓடி வந்து, “நீங்க எனக்கு அப்பாவாக முடியுமா?” என்றான்.
அத்தருணத்தில் ஒரு நெடு மௌனம் நிலைகொண்டது. லா பிளாஞ்ச்சோட் வாயடைத்துப் போனாள். தன்மான உணர்வால் சீண்டப்பட்டு வெட்கி வேதனையடைந்தாள். அவரிடமிருந்து ஒரு பதிலும் வராததால் சைமன் சொன்னான், “எனக்கு அப்பாவாக நீங்கள் சம்மதிக்கவில்லையென்றால், நான் ஆற்றில் விழுந்து செத்துப் போய்விடுவேன்,” என்று சொன்னபோது அவன் கை ஆற்றின் பக்கம் சுட்டியிருந்தது.
அந்தப் பொடியனின் சொற்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அச்சந்தர்ப்பத்துக்கான பதிலாக, அவனுக்குச் சாதகமாகச் சொல்வதாக எண்ணி, “சரி… கண்டிப்பாய்… நீ சொன்னபடியே,” என்றார் கோர்வையற்ற வார்த்தைகளால்.
“அப்படியென்றால் உங்க பேர் என்ன?” என்று கேட்டுவிட்டு, “நான் அப்பா இல்லாதவன் என்று கேலிச் செய்பவர்களுக்கு உங்கள் பெயரை நான் சொல்ல வேண்டும்,” என்றான்.
என்னடா இது வம்பாய்ப்போய்விட்டது என்றெண்ணியவர், “பிலிப்” என்றார் அவன் வினாவுக்கான பதிலாக.
அவர் பெயரை உள்வாங்கி நினைவில் வைத்துக்கொள்ள, சைமன் சற்று நேரம் அமைதியானான். “நல்லது… பிலிப்… நீங்கள்தான் என் அப்பா…”
அவர் அவனைத் தூக்தி உச்சி முகர்ந்து, கன்னத்தில் முத்தமிட்டு, பின்னர் கீழே இறக்கிவிட்டு, அங்கிருந்து மெல்ல நகர்ந்துவிட்டார்.
மறுநாள் சைமனை பள்ளியில் கண்டபோது மாணவர்கள் கள்ளச்சிரிப்பால் அவனை வரவேற்றனர். அவனைப் புரட்டி எடுத்த அந்த அடாவடி மாணவன் தன் வம்பைத் தொடங்கக் காத்திருந்தான். ஆனால், சைமன் முந்திக்கொண்டு நேற்றைய தினம் கற்களை வீசியதுபோல இன்றைக்குச் சொற்களை வீசினான். “அவர் பெயர் பிலிப். என் அப்பா!”
“பிலிப் யார்? என்ன பிலிப்? பிலிப் எங்கிருந்து திடீரென்று முளைத்தார்? இந்த பிலிப்பை எங்குக் கண்டடுபிடித்தாய்?”
சைமன் பதில் சொல்லவில்லை. அவனுக்குள் பதிவாகியிருந்த அந்த அசைக்க முடியாத நம்பிக்கையே அவனுக்கு ஆதாரமாக இருந்தது. அவர்களுக்குப் பதில் சொல்வது தேவையற்றது என்று நினைத்தான். அவர்களுக்கு முன் தைரியமாக நின்றான். இம்முறை அவர்களிடமிருந்து அஞ்சி ஓடக்கூடாது என்று முடிவெடுத்தான்.
அதற்குள் அவன் ஆசிரியர் அங்கு வந்து அவனை அவன் தாயிடம் சேர்ப்பித்தார்.
பிலிப் லா பிளாஞ்ச்சோட் வீட்டைக் கடந்து செல்லும் போதெல்லாம்  அவள் சன்னலருகே துணி தைத்துக்கொண்டிருப்பதைப் பார்ப்பார். அவளிடம் இரண்டொரு வார்த்தைகள் தைரியமாகப் பேசவும் செய்வார். லா பிளாஞ்ச்சோட் நாகரிகமாகவும் சுருக்கமாகவும்,  அவருக்குப் பதிலளிப்பார். அவரிடம் நகைச்சுவையாகப் பேசுவதைத் தவிர்த்தாள். அவரை வீட்டுக்குள் விடுவது சரியில்லை என்றும் நினைத்தார்.  அவர் சற்று நேரம் நின்று அளவளாவ அனுமதிக்காத சுருக்கமாகவே உரையாடலை வைத்துக் கொள்வாள். பிலிப்சுபும் அவளைப் பார்த்துப் பேசும்போதெல்லாம் சுய அலட்டல் இல்லாமலும், நல்ல நாகரிகம் மிகுந்த ஆண் மகனைப்போலவே நடந்துகொள்வார். ஆனாலும், ஒவ்வொரு முறையும் அவளைப் பார்த்துப் பேசும்போது அவள் அழகு கூடிக்கொண்டு போவதை உணர்ந்தார்.
ஒருமுறை மதிப்பிழந்துவிட்டால் அதனை மீட்டு நிறுவுவது முடியாத செயல், இழந்தது இழந்ததுதான். ஆனால், லா பிளாச்சோட்டின் நாணும் இயல்பால் அவள் தன் பெயரில் கலங்கம் வராமல் பார்த்துக்கொண்டாள். தன்னைச் சுற்றியுள்ளவர்கள் தன்னைப் பற்றி மோசமாகப் பேசிவிடக்கூடாது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருந்தாள்.
சைமனுக்குத் தன் புதிய தந்தையின் மீது அளவில்லாத பாசம் மலர்ந்தது. அவரின் வேலை முடிந்த ஒவ்வொரு மாலையிலும் அவரோடு உரையாடி விளையாடிவிட்டுத்தான் வருவான். பள்ளியிலும் யாருடனும் எந்த வம்பும் வளர்த்துக்கொள்ளாமலும் அவர்களின் கேலிப்பேச்சைப் பொருட்படுத்தாமலும் இருந்தான்.
ஒருநாள் அந்த அடாவடி மாணவன் இவனை நெருங்கி, “நீ பொய் சொல்லிவிட்டாய். உனக்கு பிலிப் என்பவர் அப்பா இல்லை,” என்று கூறி புதிய வம்பைத் தொடங்கினான்.
“ஏன் அப்படிச் சொல்கிறாய்?” சைமன் தைரியத்தோடு கேட்டான்.
அவன் தன் உள்ளங்கைகளைத் தேய்த்துக்கொண்டு, “உன் அப்பா பிலிப்பாக இருந்தால், அவர் கண்டிப்பாக உன் அம்மாவின் கணவராய் இருக்க வேண்டும்!”
சைமனுக்கு உண்டான புதிய குழப்பத்தால் தலை சுற்றியது. அந்த மாணவன் சொல்வதில் பொருள் இருப்பதாக உணர்ந்து அவனுக்குப் பதில் சொன்னான், “எப்படி இருந்தாலும் அவர் என் அப்பாதான்.”
அவன் ஏளனத் தொனியோடு, “உன் அம்மாவுக்குக் கணவராக இல்லையென்றால், பிலிப் கண்டிப்பாய் உன் அப்பாவாக முடியாது!”
சைமன் தலை கவிழ்ந்து குழப்பத்தோடு, அங்கிருந்து கிளம்பி, நேராக பிலிப் வேலை செய்யும் இரும்புப் பட்டறை இருக்கும் இடமான லோய்சோனுக்கு நடந்தான்.
அப்பட்டறை அடர்ந்த மரங்கள் நிறைந்த இடம். ஒளி குறைந்த சூழலே நிலவும். அப்பட்டறையில் ஐந்து வேலையாட்கள் சம்மட்டி அடித்துத் தெறித்துச் சிதறும் தீப்பொறிகள்தான் சற்றே வெளிச்சத்தை உண்டாக்கும். நெருப்பு அடுப்புக்கள் கக்கும் வெளிச்சத்தால் பிரதிபலித்த அவர்கள் தீப்பேய்கள்போல காட்சியளித்தார்கள். அவர்கள் பார்வை இரும்பு விளிம்பில் தீக்கங்கு கனன்று பிழம்பும் முனையின் மீதே குவிந்திருக்கும். சம்மட்டிகளின் தீராத தாக்குதல் ஓசையைக் எழுப்பிக்கொண்டே இருக்கும். சைமனின் நுழைவை யாரும் கவனிக்கவில்லை. அவர்களில் அவன் பிலிப்பைத் தேடினான். அவன் இருப்பை உணர்ந்தவர்கள் சட்டென்று ஒருசேர வேலை செய்வதை நிறுத்தினார்கள். அவர்கள் பார்வை சைமனின் மேல் பதிந்தது. அவர்களில் பிலிப்பை அடையாளங் கண்டுகொண்ட சைமன் அவரை நெருங்கி, “பிலிப் எனக்கு விளக்கம் சொல்லுங்கள். லா மிச்சாண்ட் சற்று முன்னர் சொன்னான், நீங்கள் எனக்கு அப்பாவாக இருக்க முடியாதென்று!”
“ஏன் அவ்வாறு சொன்னான்?” என்று கேட்டார் பிலிப்.
அவன் வெள்ளந்தியாகச் சொன்னான், “நீங்கள் என் அம்மாவின் கணவர் இல்லையாம், அதானால்.”
யாரும் சிரித்துவிடக்கூடாது என்று திட்டவட்டமாக இருந்தார்கள். பிலிப் தலையில் கைவைத்துக்கொண்டு அவரின் சுத்தியலைத் தரையில் ஊன்றியவாறு, தூணைப்போல அசையாமல் நின்றுவிட்டார். என்ன சொல்வதென்று புரியாமல் திணறினார். பூதங்கள்போல நிற்கும் அந்த ஐந்து வேலையாட்களுக்கிடையே சைமன் சிறு எறும்பைப்போல காட்சியளித்தான். சைமன் பிடிவாதாமாய் பிலிப்பின் பதிலுக்குக் காத்திருந்தான்.
அந்த வேலையாட்களிள் ஒருவன் மௌனத்தைக் கலைத்து வாய் திறந்து சொன்னான். “லா பிளாஞ்ச்சோட் நல்ல நேர்மையான பெண். கலங்கமற்றவள். அவளின் வாழ்க்கையில் துரதிர்ஷ்டம் நேர்ந்தாலும் தன்னை அவள் பாதுகாத்துக்கொண்டே வந்திருக்கிறாள். எனவே, ஒரு நல்ல பண்புள்ளவனுக்கு அவள் நல்ல மனைவியாகத் திகழ முடியும்.”
“ஆமாம், அது சத்தியமான வார்த்தை” என்றார்கள் பிற மூவரும்.
“அவளுக்குத் துரதிர்ஷ்டம் நேர்ந்தால் அதற்கு அவள் பொறுப்பாக முடியாதல்லவா? அவளுக்கு மண வாழ்க்கை கொடுப்பனை இல்லை! ஆனாலும் அவளின் தூய்மை கிஞ்சிற்றும் சந்தேகத்துக்குரியதல்ல. கடவுளுக்கும் அது தெரியும்!”
மற்ற மூவரும் ஆமோதித்தனர்.
கனத்து எரிந்துகொண்டிருந்த தீப்பிழம்புகளின் மெல்லிய இரைச்சல் மட்டுமே அப்போது கேட்டது.
சைமனுக்காக சற்றே குனிந்த பிலிப் அவன் தோளைத் தொட்டு, “போய் அம்மாவிடம் சொல், விரைவில் நான் அவளை வந்து சந்திப்பேன் என்று.” என்றார் ஆதரவான சொற்களால்.
வாசல் வரை சென்று அவனை அனுப்பிவிட்டு மீண்டும் வேலையைத் துவங்கினார் பிலிப். ஐந்து சுத்தியல்களால் தீக்கங்கை நொறுக்கும் வேலை தொடர்ந்தது. இரவு சாயும் வரை சுத்தியல்களின் சத்தம் ஒலித்துக்கொண்டே இருந்தது. சம்மட்டியின் தாக்குதல்கள் இம்முறை மத்தாப்புப் பொறிகளைச் தூவிக் கொண்டிருந்தன. பிலிப்ஸின் சுத்தியல் அறையும் ஓசை, கிறித்துமஸ் திருநாளன்று திருக்கோவிலிலிருந்து எழும் மணியோசைபோல தெய்வீகமாய் ஒலித்தது.
வானம் எண்ணற்ற நட்சத்திர தீபங்களை ஏற்றி ஜொலித்துக்கொண்டிருந்த வேளையில் லா பிளாஞ்ச்சோட் வீட்டுக் கதவைத் தட்டினார் பிலிப். அவர் ஞாயிற்றுக்கிழமை அணியும் புதுச்சட்டையை அணிந்திருந்தார். சுத்தமாயச் சவரம் செய்து முகத்தை வசீகரமாக்கியிருந்தார். அந்த இளம் மனைவி கதவைத் திறந்து வெளியே வந்து, “இந்த இரவு வேளையில் வருவது துர் நோக்கம்கொண்டது என்று கருதுவர் பார்ப்பவர்கள்!” என்றாள்.
அவர் பேச வாயெடுத்தபோது வார்த்தைகள் சறுக்கின. அவள் முன்னால் குழப்பத்தோடு தடுமாறினார். அவள் மீண்டும் சொன்னாள், “நான் சொன்னதையே மீண்டும் சொல்லவேண்டியதில்லை என நினைக்கிறேன்.” என்றாள் திட்டவட்டமாக.
அவரையும் மீறி வார்த்தைகள் வெளியேறின, “நீங்கள் என் மனைவியாகிவிட்டால் அந்த வார்த்தைகள் ஒரு பொருட்படுத்தத் தக்கதல்ல!”
ஏதும் பதில் வரவில்லை. ஆனால் அந்த ஒளி கம்மிய அறையில் ஓர் உடல் சரிந்து கீழே விழுவது கேட்டது. அவர் உடனடியாக உள்ளே விரைந்தார். உறங்கப் போயிருந்த சைமனுக்கு முத்தங்களின் ஓசை கேட்டது. அம்மா பேச முயலும் சில வார்த்தைகளும் விட்டு விட்டு மென்மையாகக் கேட்டன. அவனை யாரோ ஒரு நண்பர் மகிழ்ச்சியில் தன் ஹெர்குலிஸ் கைகளால் உயரத் தூக்கி, “இரும்புப் பட்டறையில் வேலை செய்யும் பிலிப் ரெமிதான் உன் தந்தை என்று நீ உன் பள்ளி மாணவர்களிடம் இனி துணிந்து சொல்லலாம், அது அவர்களின் காதுகளை இறுகத் திருகுவதுபோல இருக்கும்,” என்றார்.
மறு தினம், பாடவேளை துவங்குவதற்கு முன் இருக்கையை விட்டு எழுந்து நின்று. உரக்கச் சொல்லத் துவங்கினான் சைமன், “என் அப்பா…” என்று தெளிவான குரலில் தொடங்கிவிட்டு, “இரும்புப் பட்டறையில் வேலை செய்யும் பிலிப் ரெமி. இனி யாராவது என்னைத் தந்தை அற்றவன் என்று வம்பிழுத்தால் அவர் உங்களை உண்டு இல்லை என்று செய்துவிடுவார், கவனம்!” என்றான் பெருமையும் உவப்பும் மிகுந்து.
வகுப்பில் இந்த முறை நக்கல் சிரிப்பு எழத் தயங்கியது. பிலிப் ரெமிதான் சைமனின் அப்பா என்ற உண்மையை உலகம் பெருமையோடு சொல்லிக்கொள்ளும்.
தமிழில்: கோ. புண்ணியவான்
ஆங்கில தலைப்பு: Simon’s papa

